"நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -


வ.ந.கிரிதரன் பால்ய  பருவத்தில்...என் பால்ய காலம் வவுனியாவில் கழிந்தது. என் வாசிப்புக்கும், எழுத்துக்கும் முக்கிய காரணம் அப்பா. வீட்டைத் தமிழகச் சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்தார். கல்கி, விகடன், கலைமகள், மஞ்சரி, தினமணிக்கதிர், ராணி, ஈழநாடு, சுதந்திரன், தினமணி் , இந்தியன் எக்ஸ்பிரஸ், ராணிமுத்து, குமுதம், அம்புலிமாமா, பொன்மலர் (காமிக்ஸ்) , பால்கன் (காமிக்ஸ்). என வாங்கிக்குவித்திருந்தார். இவைதவிர அவர் தனியாக ஆங்கில நூல்களடங்கிய புத்தக அலுமாரி வைத்திருந்தார். அதில் கிறகாம் கிறீன், ஆர்.கே.நாராயணன், டால்ஸ்டாய் , இர்விங் ஸ்டான் , டி.இ.லாரன்ஸ்௶, பி.ஜி.வூட் ஹவுஸ் என்று பலரின் நூல்கள் அவரிடமிருந்தன. இவை தவிர ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து, பாரதியார் கவிதைகள், புலியூர்க் கேசிகனின் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற பண்டைத்தமிழரின் காப்பியங்கள், கவிதைகள் வாங்கியிருந்தார். தமிழகத்தில் திமுக பதவியேற்றதும் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டையொட்டிச் சிறப்பானதொரு மலரை வெளியிட்டிருந்தார்கள். அம்மலரும் வீட்டிலிருந்தது. இதன் காரணமாக என் பால்ய பருவத்திலேயே நான் தீவிர வாசகனாக உருவெடுத்தேன். அப்பாவுக்கு வீட்டில் எப்பொழுதும் ராமாயணம், மகாபாரதம் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கள் ஐவரின் பெயர்களையும் அவ்விரு காப்பியங்களிலிருந்துதாம் தெரிவு செய்திருந்தார்.

அப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவன். தீபாவளியையொட்டி 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) அதன் மாணவர் மலர்ப்பகுதியில் ஒரு கட்டுரைப்போட்டியை நடாத்தியது. பெரும்பாலும் உயரதர வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டிருக்கக்கூடிய போட்டியது..அப்பொழுதே எழுதுவதில் ஆர்வம் மிகுந்து பாடசாலை அப்பியாசப்புத்தகங்களில் கதைகள், ஒரு நாவல் கூட (மறக்க முடியுமா என்னும் பெயரில்) அவ்வயதுக்குரிய எழுத்து நடையில் எழுதிக்குவித்திருந்தேன். அப்பா அவ்வப்போது வாசித்து உற்சாகமூட்டுவார். கருத்துகள் கூறுவார். இத்தகைய சூழலில்தான் ஈழநாடு அறிவித்திருந்த அந்தப்போட்டி என் கண்களில் பட்டது. அப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமென்று எண்ணினேன். நானும் என் வயதுக்கேற்ற எழுத்து நடையில் 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பிலொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன்.

வ.ந.கிரிதரனின் முதற் படைப்பு...

அக்காலகட்டத்தில் நாம் வருடா வருடம் ஒவ்வொரு திருநாட்களையும் (பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி & கார்த்திகைத்திருநாள் போன்ற) குடும்பத்தாருடன் கொண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம். எனவே தீபாவளியும் அப்பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையென்பேன். காரணம் பலவகை வெடிகளையும் கொளுத்தி மகிழலாம். புத்தாடைகள் அணிந்து திரியலாம். பல்வேறு வகையான உணவுவகைகளையும் உண்டு சுவைக்கலாம். இவற்றுடன் வெளியாகும் பல்வேறு சஞ்சிகைகளின் தீபாவளி மலர்களையும் படித்துச் சுவைக்கலாம். கல்கி, விகடன் தீபாவளி மலர்களைப்படிப்பதற்கு குழந்தைகள் எங்களுக்கிடையில் போட்டியே நிகழும்.

போட்டிக்கு அனுப்பிய என் கட்டுரை போட்டியில் முதலிரு இடங்களையும் பிடித்திருக்கவில்லை. ஆனால் பாராட்டுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டு என்னையும் ,என் வகுப்பையும் , படிக்கும் பாடசாலையையும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். அது என்னை மிகவும் ஊக்குவித்தது. முதன் முதலாகப் பத்திரிகையில் என் பெயரைக்கண்டதுமே உற்சாகமும் , உவகையும் பொங்க மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வமுமும், உறுதியும் நெஞ்சிலெழுந்தது.

அண்மையில் நூலகம் தளத்தில் பழைய ஈழநாடுகளைத் தேடியபோது என்ன ஆச்சரியம் ஈழநாடு மாணவர் மலரின் அப்பக்கமும் கிடைத்தது. நினைவுக்குருவி சிறகடித்து அக்காலகட்டத்துக்கே சென்று விட்டது. அம்மாணவர் மலரில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

" மாணவ மணிகளே! உங்கள் அனைவருக்கும் மலரின் தீபாவளி வாழ்த்துகள், 'தித்திக்கும் தீபாவளி' என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன். வந்து சேர்ந்த கட்டுரைகளில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவரான மகாலிங்கம் இளங்கோவன், கரணவாய் தெற்கு கரவெட்டி கண.மகேஸ்வரன் ஆகிய இருவரது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மகேஸ்வரனின் கட்டுரையைக் கடந்தவாரம் பிரசுரித்திருந்தோம். இவ்வாரம் மறு கட்டுரை பிரசுரமாகிறது. வவனியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான என்.கிரிதரனின் கட்டுரையும் பாராட்டுக்குரியது. கட்டுரைகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிய மற்றைய மாணவிகளுக்கும் எமது உளம் கனிந்த பாராட்டுக்கள். மலருக்குத் தொடர்ந்து விஷயதாங்களை அனுப்பி வையுங்கள். அடுத்த வாரம் சந்திபோம். - காசி " (ஈழநாடு 16.11.69)

அக்குறிப்பையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். அன்றிலிருந்து என் பால்ய & பதின்ம இளமைப்பருவங்களில் ஈழநாடு என் படைப்புகள் பலவற்றைப்பிரசுரித்து ஊக்குவித்தது. மேற்படி ஈழநாட்டின் பாராட்டுச்செய்தி தந்த ஊக்கத்தில் தொடர்ந்து ஈழநாடு மாணவர் மலரில் கட்டுரைகள், கவிதைகள் பல எழுதியிருக்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.