
இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் 'நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் 'நூலகங்களே எனது ஆலயங்கள்' என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கட்டுரையை அவர் முகநூலிலும் பதிவு செய்துள்ளார். அதனை வாசித்த சிங்கள மக்கள் பலர் அதனைப் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் , நூலக எரிப்புக்கான அவர்கள்தம் வருத்தத்தையும் எதிர்வினைகளில் பதிவு செய்துள்ளார்கள்.


இது போன்ற கட்டுரைகள், முகநூற் பதிவுகள் பல்லின மக்கள் மத்தியில் புரிந்துணர்வினை வளர்ப்பதால் பாராட்டுக்குரியவை. இதனை எழுதிய எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவுக்கு நன்றி. நூலக எரிப்பின் வேதனையை எம்முடன் பகிர்ந்துகொண்ட சிங்கள மக்களுக்கும் நன்றி.