நித்தி கனகரத்தினம் இளமையில்நித்தி கனகரத்தினம்இலங்கைத்தமிழ்ப்பொப் இசையென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நித்தி கனகரத்தினம்தான். அமரர் கமலநாதன் எழுதிய 'சின்ன மாமியே!' பாடல் மூலம், அதனைப் பாடி, அதனை பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்து, அதன் காரணமாகவே  இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நித்தி கனகரத்தினம். நான் முதலில் கேட்ட ஈழத்துப்பாடல் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடல்தான்.

நித்தி கனகரத்தினம் பாடிய மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பேன். 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப்பிடித்துக்கெஞ்சுகிறேன்.' மற்றும் 'லண்டனிலை மாப்பிள்ளையாம் பெண்ணு கேட்கிறாங்க' ஆகிய பாடல்கள்தாம் அவை.

தனித்துவம் மிக்க இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் வளர்ச்சிக்கு, இலங்கைத்தமிழரின் யாழ்ப்பாணத் தமிழ்ச்சொற்கள் அடங்கிய இவர் பாடிய பொப் இசைப்பாடல்கள்  முக்கிய பங்காற்றியுள்ளன. 'ஊர் சுழலும்   பொடியளெல்லாம்', ' ஏனணை மாமி', 'இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்' போன்ற சொற்பிரயோகங்கள் மேற்படிப்பாடல்களுக்குச் சுவை சேர்ப்பவை.

இலங்கைத்தமிழ்ப்பொப் இசைக்குப் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் முன்னணியில் நிற்பவர் நித்தி கனகரத்தினம் என்பேன். அதற்குக் காரணமாகப் பொப் இசைப்பாடல்களுக்கேற்ற அவரது குரல், துடிப்பான இசை, பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஆகியவற்றையே  குறிப்பிடுவேன்.

'லண்டனிலை மாப்பிள்ளையாம்' பாடலில் வரும் கீழுள்ள வரிகள் ஒரு காலகட்டத் தமிழரின் அனுபவங்களின் வெளிப்பாடு என்பேன்.

'இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்
லண்டனிலை கெண்டக்கியில் கோழி பொரிக்கிறாராம்.
கொண்டு போன காசிலைதான் காரும் வாங்கினாராம்.
என்று அந்தப்பொண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்.
ஐயய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்'

அக்காலகட்டத்தில் லண்டன் மாப்பிள்ளைமார் பலரிடம் யாழ்ப்பாணத்துப்பெண்கள் பலர் ஏமாந்த கதைகளைக்கேட்டுள்ளேன். இச்சமூகப்பிரச்சினையை மையமாக வைத்து  எழுதப்பட்ட 'லண்டனிலை மாப்பிள்ளையாம்' பாடலைப்போல் 'கள்ளுக்கடைப்பக்கம் போகாதே!' பாடலும் சமூக நீதி போதிக்குமொரு பாடல்தான். 'விட்டமின் B என்று வைத்தியரும் சொன்னதாலே, விட்டேனா கள்ளுக்குடியை நான்' என்ற வரிகள் அக்காலகட்டத்து இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமான வரிகள்.

மேற்படி மூன்று பாடல்களில் 'சின்ன மாமியே' தவிர்ந்த ஏனைய பாடல்களிரண்டும் நித்தி கனகரத்தினால் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டுப் பாடப்பட்ட பாடல்கள்.

அப்பாடல்களுக்கான இணைப்புகளைக்கீழே தருகின்றேன். ஆர்வமுள்ளவர்கள் கேட்டு மகிழவும். இப்பதிவிலுள்ள புகைப்படங்கள் அவரது முகநூற் பதிவிலிருந்து பெறப்பட்டவை. இவற்றிலொன்று அவரது இளமைப்பருவத்தைப்பிரதிபலிப்பது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.