ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்'  படித்தேன். இன்னும் முடிக்கவில்லை. ஆனால் தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன். தொகுப்பினை முழுமையாகப்படித்த பின்னர் என் முழுமையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். நான் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் என் கருத்துகளைப் பற்றிப்பின்வருமாறு கூறுவேன்:

நான் வாசித்த கதைகளில்  மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்'  ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.

இந்தக்கதையினை வாசித்ததும் பரியாரியார் மயில்வாகனத்தாரின் இன்றைய நிலையும், அவரது தொழில் பக்தியும், மன உறுதியும் வாசிப்பவர் நெஞ்சில் தொடர்ந்தும் இருந்து விடுகின்றன. ஒரு சிறுகதை இவ்விதம்தான் இருக்க வேண்டும். அந்தக் கதை வெளிப்படுத்துவது ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது உணர்வாகவிருக்கலாம் , அவற்றை அக்கதை வாசித்து முடித்ததும் வாசிப்பவர் உள்ளங்களைப்பாதிக்கும் வகையில் அந்த வெளிப்படுத்தலிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் 'பத்தியம்' சிறக்கிறது. வைத்தியரின் முடிவு காலத்துக்கொவ்வாத 'பைத்தியக்காரத்'தனமாக இருந்தாலும், அந்தப் 'பைத்தியக்'காரத்தனமே 'பத்திய'த்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்து விடுகின்றது.

எனக்குப்பிடித்த அடுத்த சிறுகதை 'கடவுளும் கோபாலபிள்ளையும்'. சிறுகதையின் தலைப்பு புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' கதையினை ஞாபகப்படுத்தும். கதையின் நாயகன் மாலை வேலை முடிந்து மாலைப்பொழுது அவருக்கு வழங்கிய சுதந்திரத்தை இரசித்தபடி வீடு திரும்புகின்றார். திரும்பியவருக்கு மனைவி தேநீர் கொண்டுவந்து தருகின்றாள். வேலைப்பளு தந்த சுமையிலிருந்து மீண்டிருந்த கணவரின் மகிழ்ச்சிக்குரிய காரணத்தை அறியாத மனைவி 'என்ன சிரிப்பு வந்ததும் வராததுமாய்'  என்று கேட்கின்றாள். 'அட கடவுளே! இதையெல்லாம் கருத்திலெடுக்கலாமா?' என்கின்றார். அவர் அவ்விதம் கடவுளே என்ற சொல்லினைக்கூறியதால், எதற்காக அவர் கடவுளைக்கூப்பிட்டார் என்று அறிந்து வர கடவுளின் முகவர் (Agent) வந்து விடுகின்றார். புவியில் சனப்பெருக்கம் அதிகமாகிவிட்டதால் எல்லா அழைப்புகளுக்கும் உடனுக்குடன் வந்து அருள்பாலிக்கக் கடவுளுக்குச் சிரமம் என்பதால் , கடவுளும் தனக்காக இவ்விதம் அழைப்பவர்களிடம் சென்று தன் சார்பில் அருள்பாலிக்க முகவர்களை வேலைக்கு வைத்திருக்கின்றார். இவ்விதம் கதை சுவையாக, நகைச்சுவைத் தொனியில் செல்கிறது.

கடவுளின் முகவருக்கும், கதையின் நாயகனுக்குமிடையில் நடைபெறும் உரையாடல் சுவையாகச் செல்கிறது. கடவுளின் முகவரிடத்தில் கதாநாயகன் தான் கடவுளைச்சந்தித்தால் கேட்கவிருந்த கேள்விகளையெல்லாம் கேட்கின்றார். அவர் எவ்விதமிருப்பார்? அவர் ஆணா? அல்லது பெண்ணா?  என்ற கேள்விக்குக் கடவுளின் முகவர் அவர் மாபெரும் சக்தியின் வடிவம் என்கின்றார். மேலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாத கடவுள் எதற்காக தனது படைப்பில் ஆணுக்கு மட்டும் பெண்ணை விட அதிக உரிமைகளை வழங்கினார் என்று கதாநாயகன் கேட்கின்றார்.  அதற்குக் கடவுளின் தூதுவர் " ஆண் பெண்ணிடமிருந்து அவர்களது உரிமைகளைப்பறித்துக்கொண்டான்" என்கின்றார். அது ஒருவகையில் உண்மைதான். மானுடரின் வளர்ச்சிப்போக்கில் ஆரம்பத்தில் தாய்வழிச்சமுதாயங்கள் நிலவியபோது ஆண் பெண்ணுக்கு அடங்கியல்லவா இருந்தான். பின்னர் குடும்பம், சொத்துரிமை போன்றன உருவாகியபொழுதுதானே ஆண் பெண்ணையும் படிப்படியாகத் தன் அடிமையாக மாற்றிக்கொண்டான். இவ்விதம் ஆரம்பத்தில் நியாயமான பதிலினை வழங்கிய கடவுளின் முகவரை, கதாநாயகன் மேலும் பல கேள்விகளால் திக்குமுக்காட வைத்து விடவே, அவர் ஆளை விடு என்று பறந்தோடி விடுகின்றார். ஆனால் உண்மையில் கடவுளின் முகவர் அவ்விதம் பறந்தோடியிருக்கத்தேவையில்லை. அவரிடம் கதாநாயகன் கேட்ட கேள்விகள் எதற்காக மானுடர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடுகள், தீண்டாமை போன்ற பிரச்சினைகளைக் கடவுள் உருவாக்கினார் என்னும் அர்த்தத்தில் அமைந்திருந்தன. அதற்குக் கடவுளின் தூதுவர் 'இந்த வேறுபாடுகளை மக்களல்லவா ஏற்படுத்திக்கொண்டார்கள்.  கடவுளை எதற்காகக் குறை கூற முடியும்?' என்று பதிலிறுக்கின்றார். சரியாகவே கடவுளின் தூதுவர் பதிலளித்திருக்கின்றார். ஆனால் கதாநாயகனோ 'இந்த யுகத்து இன்னல்களைத்தீர்க்கப்படைத்தவனுக்கு வழி தெரியவில்லை என்று நழுவுபவர்தான் கடவுள் என்கின்றீர்களா?' என்று பதில் கேள்வி கேட்கவே, கடவுளின் தூதுவர் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று தோன்றிய வேகத்திலேயே மறைந்து விடுகின்றார்.

'வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் வற்றி விட்டது. மனிதர்கள் இனிக் கடவுளைத்தமக்குள் தேட வேண்டும்.' என்று கதையினை முடிக்கின்றார். கதாசிரியர். இந்தக்கதையில் கடவுளின் தூதரின் பதில்கள் சரியாக இருந்தாலும், அவருடனான தர்க்கம் சிறப்பாகப்படைக்கப்பட்டிராதபோதிலும், இக்கதை எனக்குப் பிடித்துப்போனதுக்குக் காரணம் கடவுளின் முகவர்தான். பொதுவாகக் கடவுள்தான் கண் முன்னால் தோன்றி அருள் பாலிப்பார். ஆனால் இங்கு படைக்கப்பட்டுள்ள கடவுளின் முகவர் பாத்திரம் கதாசிரியரின் கற்பனைச்சிறப்பினைக்காட்டுகிறது. கதையினை வாசித்து முடிந்தும் கூட சிந்தனையில் கடவுளின் தூதுவர் நிலைத்து நின்று விடுகின்றார். அதுதான் கதையின் வெற்றி.

வாசித்த கதைகள் சிலவற்றின் எதிர்மறையான அம்சங்களாக நான் பின் வருவனவற்றைக் கூறுவேன்:

1. சில சிறுகதைகள் கூறும் பொருளுக்கும் , அவற்றின் தலைப்புகளுக்கும் தர்க்கரீதியிலான பொருத்தங்கள் ஏதுமிருப்பதாகத்தெரியவில்லை.
2. சில சிறுகதைகளின் முடிவுகள் சப்பென்று, எந்தவித வீச்சினையும் தராத நிலையில், தொய்வாக முடிந்திருக்கின்றன.சிறுகதையொன்றினை வாசித்து முடிக்கும்போது ,அக்கதை கூறும் அடிப்படையான பொருள் அல்லது உணர்ச்சி , நெற்றியில் வந்து அறைய வேண்டும். அவ்விதமற்று ஏனோ தானோவென்று முடிந்திருக்கின்றன.

உதாரணமாகத் தொகுப்பின் அட்டைப்படக் கதையினைப் பார்ப்போம்.'குதிரை இல்லாத ராஜகுமாரன்' கதையின் தலைப்பு. கதையின் நாயகி கொழும்பில் வேலை பார்ப்பவள் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றாள். முப்பது வயதினைத்தாண்டியவள். நூறாவது தடவையாக அவளைப்பெண் பார்க்க ஒருவர் வரவிருப்பதால் அவள் ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றாள். இம்முறை பெண் பார்க்க வரவிருப்பவருக்கு வயது நாற்பதைத்தாண்டி விட்டது. புகை வண்டியில் அவள் தன்னிலும் ஓரிரு வயதுகள் குறைந்த இளைஞனொருவனைச்சந்திக்கின்றாள். அவனது குணவியல்புகளில் தன்னை மறந்த அவள் அவன் தனக்குக் கணவனாக வந்தால் என்று கனவுகளில் மூழ்குகின்றாள். புகை வண்டியிலிருந்து இருவரும் ஒரே பஸ்ஸில் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவனை அவள் வீட்டுக்கு அழைக்கின்றாள். அவன் மறுத்து விடுகின்றான். பின்னர் அவள் மணமாகிக் கொழும்பு திரும்பும்போது சந்திக்கலாம்தானே என்கின்றான். அவள் கவலையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி செல்லும் பஸ்ஸையே பார்க்கின்றாள். அவனுக்குத் தன் மனதை இன்னும் சிறிது திறந்து காட்டியிருக்கலாம் என்று நினைக்கின்றாள். அவ்விதம் திறந்து காட்டியிருந்தால் அவன் தன்னுடன் வீடு வந்திருக்கக்கூடுமென்று எண்ணுகின்றாள். இவ்விதம் சிறிது சலிப்பும், துயருமுற்றவளாக வீட்டினுள் நுழைய முன்னர் மீண்டும் பஸ் சென்ற திக்கை நோக்குகின்றாள். 'தூரத்து முடக்கில் அவன் திரும்பி வருவது தெரிந்தது' என்று கதை முடிகின்றது.

இந்தக்கதையின் தலைப்பு 'குதிரை இல்லாத ராஜகுமாரன்'. இந்தச்சிறுகதையில் குதிரை இல்லாத ராஜகுமாரன் யார் என்ற கேள்வி வாசிப்பவர்களுக்கு எழக்கூடுமல்லவா? அதற்கு ஆசிரியர் கதையின் இடையில் ஒரு பதிலும் வைத்திருக்கின்றார். கதையின் நடுவில், அவளைப்பெண் பார்க்க வந்து செல்லும் வரன்களைப்பற்றிக் கதாசிரியர் கீழுள்ளவாறு கூறுவார்:

"..என்னை இதுவரை பார்க்க வந்தவர்கள் வாசலைக்கடந்து வீட்டினுள்ளே நுழையும்போது மட்டும் தாம் ஏறிவந்த வெண் குதிரையைத்தெருவில் நிறுத்திவிட்டு வந்த ராஜகுமாரன்போல் அட்டகாசத்துடன் நடந்துகொள்வார்கள்..."

இதன்படி அவர்கள் எல்லாரும் குதிரைகளுள்ள ராஜகுமாரர்கள்தாம். ஆனால் குதிரைகளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு நுழையும் ராஜகுமாரர்கள். 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' என்று தலைப்பு இருக்கிறதே என்று வாசகர்கள் சிறிது குழம்பலாம். ஒருவேளை கதையின் முடிவில் பஸ்ஸிலிருந்து இறங்கித் திரும்பும் வாலிபன் தான் அந்தக் குதிரை இல்லாத ராஜகுமாரனோ? என்றும் சிந்தனையினை ஓட விடலாம். ஏற்கனவே வந்து அவளை நிராகரித்தவர்கள் யாவரும் குதிரைகளுள்ள ராஜகுமாரர்கள்தாம். ஆம்! வாசலில் தம் குதிரைகளை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழையும் ராஜகுமாரர்கள்தாம். ஆனால் இந்த இளைஞனே குதிரையில்லாத ராஜகுமாரன். குதிரையில்லாத ராஜகுமாரன் எவ்விதம் வருவானோ அவ்விதமே , அடுத்த தெருவில் பஸ்ஸுலிருந்தும் இறங்கி அவளை நாடி வருகின்றான். இவ்விதமாகக்கதாசிரியர் தர்க்கித்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இவ்விதம் இன்னுமொரு கதையான 'ஆதலினால் காமம் செய்வீர்' சிறுகதையினையும் குறிப்பிடலாம். இதில் வரும் நாயகனுக்கு ஆண்மைக்குறைபாடு. இதனை உணர்ந்த அவனது காதலி அவனை விட்டுச் செல்கின்றாள். ஏன் முதலிலேயே அவன் தனது குறைபாட்டினைக் கூறவில்லை என்று கேள்வி எழுப்புகின்றாள். இந்நிலையில் மனமுடைந்த நாயகன் தற்கொலை செய்ய முடிவு செய்து தூக்கில் தொங்குகின்றான். தூக்கில் தொங்கும் அவனை அவனது நண்பனொருவன் காப்பாற்ற முனைகின்றான். அச்சமயத்தில் அவனுக்கு உதவியாக மேலுமிரு கைகள் நீளுகின்றன. அவை நாயகனின் காதலியின் கைகள் என்று கதை முடிகின்றது. சிறுகதை கூற வருவது என்ன? தலைப்புக்கும், கதையின் முடிவுக்கும் சம்பந்தமேயில்லையே.

இவ்விதம் நான் வாசித்த தொகுப்பின் கதைகளில் சில வாசித்து முடிந்ததும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றின் முடிவுகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளவை போன்ற உணர்வினை வாசிப்பின் முடிவில் நான் அடைந்தேன். ஆனால் நான் ஆசிரியரின் பலமாகக்கருதுவது அவரது எழுத்து நடையினைத்தான். சுவையாகக் கூறும் ஆற்றல் மிக்க நடை. இதழ்களுக்கிடையில் மெல்லிய புன்னகையினை ஏற்படுத்தும் இனிய நடை. இந்த நடை கை வரப்பெற்ற ஆசிரியர், கதையின் கூறு பொருளிலும் மிகுந்த கவனத்தைச்செலுத்தினால் 'பத்தியம்', 'கடவுளும் கோபாலபிள்ளையும்' போன்ற கதைகள் பலவற்றைத்தர முடியும்.

தொகுப்பின் ஏனைய கதைகளையும் வாசித்த பின்னர் அவை பற்றிய என் கருத்துகளையும் கூறுவேன்.