1. விமர்சகர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்!

-V.N.Giritharan -நாம் அன்றாடம் வாசிக்கும் சஞ்சிகைகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், மேலும் ஏனைய வெகுசன ஊடகங்கள் பலவற்றில் பல்வேறு வகையினரான விமர்சகர்களின் எழுத்துகளை வாசித்திருப்போம் அல்லது அவர்தம் உரைகளைக்கேட்டிருப்போம். அப்பொழுதெல்லாம் பலருக்கும் ஆச்சரியமாகத் தென்படும் விடயம் படைப்பொன்றினைப்பற்றி எவ்விதம் இவ்விதம் பல்வகை விமர்சனங்கள் வெளியாகின்றன என்பதுதான். அதற்கு முக்கிய காரணங்களில் சில:

விமர்சகர்கர்களின் இலக்கியப்புலமைக்கேற்ப அவர்களது விமர்சனங்களும் வேறுபட்டிருக்கும்.  சிலரது விமர்சனங்கள் தாம் சார்ந்த சமூக, அரசியல் , கலை, இலக்கியக்கொள்கைகளுக்கேற்ப மாறுபட்டிருக்கும். கலை மக்களுக்காக, கலை கலைக்காக என்று வாதிடுபவர்களின் விமர்சனங்களும் அக்கொள்கைகளுக்கேற்ப வேறுபட்டிருக்கும். விமர்சனங்கள் எவ்வகைப்பட்டதாகவுமிருந்தாலும், அவ்விமர்சனங்களின் தரம், முக்கியத்துவம் , அவை எவ்விதம் தாம் விமர்சிக்கும் படைப்புகளை உள்வாங்கி, தர்க்கச்சிறப்புடன் ஆராய்கின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. உதாரணமாக மார்க்சிய அடிப்படையில் விமர்சிக்கும் ஒருவர் , மார்க்சியத்தின் கலை, இலக்கியச்சிந்தனைகளுக்கேற்ப, குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சிக்கும் படைப்பினை விமர்சித்திருந்தால் அவ்விமர்சனம் நல்லதொரு விமர்சனமே.

அதுபோல் கலை கலைக்காக என்னும் அடிப்படையில் அவ்விமர்சனத்தை குதர்க்கமற்று, தர்க்கச்சிறப்புடன் விமர்சித்திருந்தால் அதுவும் தரமான விமர்சனமே. இப்பொழுது பலருக்கு ஒரு கேள்வி எழலாம். அதெப்படி இருவகையான போக்குள்ளவர்களின் இருவேறு வகைப்பட்ட விமர்சனங்களும் தரமானவை என்று கூறுகின்றீர்களே என்ற கேள்விதானது. என்னைப்பொறுத்தவரையில் விமர்சனமானது எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்க வேண்டிய தேவையில்லை. ஒரு படைப்பினை அணுகும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள். அவர்களது அறிவு, வாசிப்பு அனுபவம், கல்வி என்று பல்வேறு காரணங்களினால் அவர்களது விமர்சனங்களும் வேறுபடும். ஆனால் விமர்சனங்கள் வேறு பட்டாலும், அவ்விமர்சனங்கள் விமர்சிக்கப்படுபவர்களால் படைப்புகள் முழுமையாக உள்வாங்கப்பட்டு, அவர்களது சிந்தனைகளுக்கேற்ப புரிந்துகொள்ளப்படுவதன் விளைவான வெளிப்பாடுகளாக இருப்பின், அவை தரமான விமர்சனங்களே என்பதென் கருத்து.

மேலும் படைப்பொன்றின் கூறு பொருளினை அல்லது அப்படைப்பின் வடிவத்தினைபற்றி ஆராயும் ஒருவர், தன் சிந்தனையின் அடிப்படையில் தர்க்கரீதியாக, வாசிப்பு அனுபவத்தினடிப்படையில், இலக்கிய அறிவினடிப்படையில்.. இவ்விதம் பல்வேறு காரணகளினாலொரு ஒரு முடிவுக்கு வரலாம். அதே மாதிரி இன்னுமொருவர் இன்னுமொரு முடிவுக்கு வரலாம். ஆனால் அவ்விதம் இன்னொரு முடிவுக்கு இன்னொருவர் வந்தாலும், தான் அவ்விதம் வந்ததற்கான காரணங்களை ஆராய்ச்சிக்கண்ணோடத்துடன் விபரிக்க வேண்டும்.

நாம் அன்றாடம் அவதானிக்கும் விமர்சகர்களில் பலர் இவ்விதமான திறமையான விமர்சகர்களல்லர். நுனிப்புல் மேய்பவர்கள், முகத்துக்கஞ்சி ஆராதிப்பவர்கள், பிரபல்ய விருப்பு கொண்டவர்கள், விருதுகளில் அவாவுடையர்வர்கள் ... என இவ்விதமான பலர் விமர்சகர்கள் என்ற போர்வையில் உலாவரும் போலிகளே.

இன்னும் சிலர் பிரபல எழுத்தாளர்களின், பிரபல வெகுசன ஊடகங்களின் கடைக்கண் பார்வைகளுக்காக ஏங்குபவர்கள். அக்கடைக்கண் பார்வைகளுக்காக எதுவும் செய்யத்தயங்காதவர்கள். இவ்விதமானவர்களால், இவ்விதமான ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படும் கலை, இலக்கியவாதிகளின் படைப்புகள் உண்மையிலேயே தரமற்றிருப்பின், உடனடிப்புகழ் பெற்றாலும், நீண்ட கால நோக்கில் நிலைத்து நிற்கும் தகுதியற்றவையாக மறைந்து போய்விடுகின்றன.


2.ஒரு படைப்பும் அது கூறும் பொருளும் பற்றி..!

ஒரு படைப்பின் சிறப்பினை எவ்விதம் எடை போடுவது? அப்படைப்பு கூறும் பொருள், அதன் வடிவம், அது கட்டமைக்கப்பட்டுள்ள கதைப்பின்னல், பாத்திரங்கள், உரையாடல்கள் மற்றும் கூறப்படும் மொழி என்று பல காரணிகளின் அடிப்படையில்தான் அப்படைப்பின் திறன் ஆராயப்படுகின்றது.

ஒரு படைப்பு கூறும் பொருள் எப்பொழுதுமே ஒன்றாகத்தானிருக்க வேண்டுமா? ஒரு படைப்பின் பொருள் பலவாக இருக்கலாமா? அல்லது இருக்கக்கூடாதா? ஒரு புனைகதையினை எடுத்துக்கொள்வோம். அதனை வாசிக்கும் ஒரு வாசகர் அப்படைப்பு கூறும் பொருள், வடிவச்சிறப்பு, பாத்திரப்படைப்பு, மொழிச்சிறப்பு, மற்றும் உரையாடல் போன்றவற்றையெல்லாம் திறனாய்வாளரின் கண்ணோட்டத்தில் பார்த்து அனுபவிப்பதில்லை. அவர் தன் வாசிப்பினூடு அப்புனைகதையினைச் சுவைக்கின்றார். அங்கு விபரிக்கப்பட்டிருக்கும் கதையினுடு தன்னை மறக்கின்றார். ஆனால் வாசகர்களும் பல்வகையினர். வாசகர்கள் ஒவ்வொருவரும் தமது வாசிப்பனுபவம், அறிவு போன்றவைகளுக்கேற்ப ஒரு படைப்பினை அணுகி, உணர்ந்து, இன்பமுறுகின்றார்கள். எல்லோருமே ஒரே மாதிரியான வாசிப்பனுவத்தைப்பெறுவதில்லை. சிலர் மேலோட்டமாக வாசிப்பதுடன் முடித்து விடுகின்றார்கள். இன்னும் சிலரோ, ஆழ்ந்த இலக்கியப்பரிச்சயம் உள்ளவர்களோ அப்படைப்பினைத்தம் இலக்கியப்புலமை நிலையிலிருந்து அப்படைப்பு மீதான தம் வாசிப்பை நிகழ்த்துகின்றார்கள்.

எனவே வாசிக்கும் வாசகர்களும் பல் வகையினர். திறனாய்வாளர்களும் பல் வகையினர். எனவே ஒரு படைப்பு பற்றீய அவர்களது புரிந்துணர்வுகளும் பல் வகையின.

உதாரணமாக தத்யயேவ்ஸ்கியின் குற்றமும், தண்டனையும் நாவலை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மானுடரின் சகல பிரச்சினைகளுக்கு மதமே தீர்வு என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட நாவல் அது என்பார். இன்னுமொருவரோ மானுட இருப்பின் நன்மை/தீமை ஆகியவற்றுகிடையிலான மோதலை விபரிப்பதுதான் அந்நாவலின் மையக்கரு என்பார்.

சில வேளைகளில் அப்படைப்பினை வழங்கிய எழுத்தாளர் இன்னுமொரு பொருளை ,மையக்கருவாகக்கருதி அப்படைப்பினைப்படைத்திருக்கலாம். அதனை வாசிக்கும் வாசகர் ஒருவர் அப்படைப்பின் மையக்கருவாக இன்னுமொரு பொருளைக்கண்டறியலாம். இதுபோல் திறனாய்வாளர்களின் திறனாய்வுகளூம் வேறுபட்டிருக்கலாம்.


3. மீண்டும் வெளிவரவிருக்கும் 'ழ'கரம்!

'டொராண்டோ', கனடாவில் சில இதழ்களே வெளியாகி நின்று போன சிறு சஞ்சிகைகளிலொன்று 'ழகரம்'. சில இதழ்களே வெளிவந்திருந்தாலும், கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த சஞ்சிகைகளிலொன்று 'ழகரம்'.

'ழ'கரம் சஞ்சிகை மீண்டும் வெளிவரவிருக்கிறது. அண்மையில் அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலி நிகழ்வில் சந்தித்தபோது எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்கள் இதனைத்தெரிவித்தார்.

எழுத்தாளர் அ.கந்தசாமி சிறுகதை, நாவல், கவிதை மற்றும் சஞ்சிகை வெளியீடு எனக்கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ழ'கரம் சஞ்சிகை மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவந்து, கனடியத்தமிழ் இலக்கியத்தில் ஆழமாகத்தடம் பதித்திட வாழ்த்துகள்.

ஏற்கனவே வெளிவந்த 'ழ'கரம் சஞ்சிகை இதழ்களைப் 'படிப்பகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.padippakam.com/index.php


4 முகநூல் பற்றி....

என்னைப்பொறுத்தவரையில் என் முகநூல் நண்பர்கள் பலருடன் நான் தொடர்பு கொள்வதில்லை. ஆனால் அவர்கள் பதிவிடும்போது பார்ப்பதுண்டு. படிப்பதுண்டு. பிடித்திருந்தால் பகிர்வதுண்டு. முகநூல் நண்பர்களை முகநூல் நண்பர்களாகப்பாருங்கள். ஒரு சஞ்சிகையின் வாசகர்களைப்போன்றுதான் நான் முகநூல் நண்பர்களைப்பார்க்கின்றேன். சஞ்சிகை ஒன்றின் வாசகர்கள் எல்லோரும் தாம் வாசிக்கும் சஞ்சிகைக்குத் தம் கருத்துகளைத்தெரிவிப்பதில்லை. ஆனால் அவர்கள் அச்சஞ்சிகையில் வரும் விடயங்களை விரும்பி வாசிப்பார்கள். அவ்விதம்தான் முகநூல் நண்பர்களையும் கருதவேண்டுமென்று நான் நினைக்கின்றேன். ஆனால் நான் முகநூல் நண்பர்கள் விடயத்தில் மிகவும் முக்கியமாகக்கவனிப்பது:

1. தொடர்ந்து குதர்க்கம் செய்வதோ அல்லது பதிவுகள் சம்பந்தப்படாமல் வேறு விடயங்களைப் பதிவுகளுக்கு இடையில் அடிக்கடி அடிக்கடி எதிர்வினைகளாகப்பதிவு செய்வதோ என்னைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.

2. பதிவுகளைப்பற்றிய எம் எதிர்வினைகளைத் தர்க்கரீதியாகத்தெரிவிக்கும்போது, அவற்றுக்கு உரிய பதில்களைத்தராமல், எம் எதிர்வினைகளை நீக்கினால், அவ்விதமானவர்கள் முகநூல் நண்பர்களாக இருப்பதற்கு உரித்துடையவர்களல்லர்.

3. ஒரு பதிவொன்றினை இடும் முகநூல் நண்பரிடம் அப்பதிவு சம்பந்தமாக உள்பெட்டியில் வினாத்தொடுக்கும்போது , அதற்கு அவர் பதிலளிக்காவிட்டால் அதனை நான் பொறுத்துக்கொள்ளமாட்டேன். உதாரணமாக ஒருவர் நண்பர் ஒருவரின் உடல் நிலை பற்றிய பதிவினையிட்டிருந்தார். அவரது உள்பெட்டிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நண்பர் பற்றிய மேலதிகத்தகவல்களைக்கேட்டிருந்தேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் முகநூலில் பதிவுகளுக்கு விருப்பு போட்டுக்கொண்டிருந்ததை அவதானித்தேன். உடனடியாகவே அவரை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி விட்டேன்.

இவை போன்ற காரணங்களுக்காக வேண்டுமானால் முகநூல் நண்பர்களை நீக்கலாம். ஆனால் நாமிடும் பதிவுகளுக்கு விருப்பினையோ, கருத்தினையோ தெரிவிக்கவில்லை என்பதற்காக முகநூல் நட்பினை நீக்குவதை நான் ஆதரிக்கவில்லை.

முகநூலினை ஓருடகமாகத்தான் நான் பாவிக்கின்றேன். முகநூல் நண்பர்களை நான் அவ்வூடகத்தைப்பாவிக்கும் ஏனையவர்களாகத்தான் பார்க்கின்றேன். ஆனால் அதே சமயம் சிலர் முகநூல் நண்பர்களை உண்மையான நண்பர்களாக எண்ணித்தம் அந்தரங்க உணர்வுகளையெல்லாம் பகிர்வதைப்பார்க்கின்றேன். அவர்கள் அவ்விதம் தம் உணர்வுகளைப்பகிர்வது அவர்களது உரிமை. ஆனால் நான் அவ்விதம் பகிர மாட்டேன். ஊடகமென்ற அளவில் அதற்குரிய எல்லையுடன் தான் நான் முகநூலினைக் கையாள்வேன். முகநூலை, முகநூல் நண்பர்களை ஆக்கபூர்வமாகக் கையாள்வதே என் நோக்கம்.


5. அஜித், எம்ஜிஆர் மற்றும் 'ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா'!

ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகில் காதுக்கினிமையான, பொருள் பொதிந்த , மொழிச்சிறப்பு மிக்க பாடல்கள் இடம் பெற்றன. இன்று வெளியாகும் திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறப்பான பாடல்கள் இடம் பெறுகின்றன. அதே சமயம் அண்மைக்காலமாக திரைப்படங்களில் வெளியாகும் பாடல்களைக்கேட்டால் இப்படிக்கூட கவிஞர்கள் பாடல்களை எழுதுவார்களா என்றிருக்கிறது? தற்போதுள்ள உச்சநட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், அவரது திரைப்படமொன்றின் ஆரம்பப்பாடல் ஆரோக்கியமான கருத்துகளை உள்ளடக்கியதாக இருப்பின் எவ்வளவு நன்றாகவிருக்கும் என்ற எண்ணம் வேதாளம் திரைப்படத்திலுள்ள 'ஆளுமா டோலுமா' பாடலைக்கேட்டதும் தோன்றியது. இணையத்திலிருந்து பெறப்பட்ட இப்பாடல் வரிகளைக்கீழே தருகின்றேன்.வாசித்துப்பாருங்கள். உங்களுக்கு அர்த்தமேதாவது புரிகிறதா என்று பாருங்கள். புரிந்தால் எனக்கும் கொஞ்சம் அறியத்தாருங்கள்!

தற்போதுள்ள உச்சநட்சத்திரங்களான இரட்டையர்கள் 'தளபதி' விஜய் / 'தல' அஜித்.  எம்.கே.தியாகராஜ பாகவதர் / பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் / சிவாஜி, ரஜனி / கமல் வரிசையில் இன்று விஜய் / அஜித்.

இந்த வரிசையில் பாகவதர், எம்ஜிஆர், ரஜினி வரிசையில் நடிகர் விஜய்யை எளிதாக வைக்கலாம்.  நடிப்புத்திறமையின் அடிப்படையில் சின்னப்பா, சிவாஜி, கமல் வரிசையில் அஜித்தை வைக்கலாம் . அஜித்தின் குரல் கூட நடிக்கும். இந்த விதத்தில் அவர் சிவாஜி, கமல் வரிசையிலேயே வருவார். சிவாஜி, கமல் போன்றவர்கள் தம் நடிப்புத்திறமையினை வெளிப்படுத்தும் வகையில், தம் image பற்றிக்கவலைப்படாமல் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இந்த வகையிலும் அவர்களது வரிசையிலேயே அஜித்தும் வருவார்.

எம்ஜிஆர் அழும் காட்சிகளில் தாயின் சேலைக்குப்பின்னால் ஒளிந்து சமாளித்துக்கொள்வார். அந்த வகையில் விஜய் பாகவதர், எம்ஜிஆர், ரஜினி வரிசையில் வருவார். நடிகர் விஜய்யாலும் சிவாஜி, கமல், அஜித் போல் நடிப்புத்திறமையினை அதிகம் காட்டும் வகையிலமைந்த பாத்திரங்களில் சோபிக்க முடியாது. எம்ஜிஆருக்குத் தாய்க்குலத்தின் ஆதரவு அதிகம். நடிகர் விஜய் மீதும் தாய்க்குலத்துக்கு ஆதரவு அதிகமென்று கருதுகின்றேன்.

அதே சமயம் எம்ஜிஆருக்கும் நடிகர் அஜித்துக்கும் இடையில் சில பொதுவான ஒற்றுமைகளுமுள்ளன. இருவருமே கேரளாவை அடியாகக்கொண்டவர்கள். இருவருமே கேரளாவைச்சேர்ந்த நடிகைகளை மணந்து கொண்டவர்கள். இருவருக்கும் திரைப்படங்களின் ஆரம்ப நாள் காட்சிகள் பிரமாண்டமாகவிருக்கும். எழுபதுகளில் யாழ் மனோஹராவில் 'உலகம் சுற்றும் வாலிபன்' ஒரு நாள் முன்னதாக, நள்ளிரவுக் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. இருவருமே பல் வேறு சவால்களை எதிர்கொண்டவர்கள். எம்ஜிஆருக்கு நாடக மேடையில் கால் முறிந்தது. சக நடிகரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப்படுகாயங்களுக்குள்ளாகி மீண்டவர். நடிகர் அஜித்தும் பல்வேறு விபத்துகளுக்குள்ளாகி மீண்டு வந்து நடிப்பவர். இவ்விதம்  கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் எம்ஜிஆரின் திரைப்படமொன்றில் 'ஆளுமா டோலுமா' போன்றதொரு பாடலுக்கு என்றுமே இடமிருந்ததில்லை (நானறிந்த வரையில்). இருவருக்குமே தம் உயிரினையும் கொடுக்கக்கூடிய வெறி பிடித்த இரசிகர்கள் உள்ளார்கள்


6. நாடியில் நாலு மயிர் வளர்ப்பதற்கும்
நாடற்ற இனம்: தமிழினம்,


தாடி வளர்த்ததற்காகத் தமிழ் இளைஞர்கள் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத்தாக்கப்பட்ட செய்தியினை வாசித்தேன். நாடியில் நாலு மயிர் வளர்ப்பதற்குக் கூட உரிமையற்ற இனமா தமிழினம்? தாடி வளர்ப்பதென்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. இதனைத்தடுப்பதென்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். யுத்தம் முடிந்து ஆண்டுகள் ஆறினைத்தாண்டியும் இன்னும் பூரணமான இயல்பு நிலை திரும்பவில்லை என்பதற்கு நல்லதோர் உதாரணம்.

பொலிசாரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் மறைமுகமானதொரு தமிழ் மக்களுக்கான அறிவுறுத்தல் இருப்பதாக நான் கருதுகின்றேன். 'ஆட்சி மாறினாலும், உங்களது சுதந்திரத்துக்கு ஓர் எல்லையுண்டு. அதனை மீறக்கூடாது' என்று தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே இதனை அவதானிக்க முடிகிறது.

தமிழ் அரசியல் கட்சிகள் இதனை முக்கியமான விடயமாகக் கருதி, சட்டரீதியாக இவ்விடயத்தை அணுகி, தமிழ் மக்களுக்கான உரிமைகள் விடயத்தில் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் உண்மையான இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு இவ்விதமான மனித உரிமை மீறல்களிருப்பது இல்லாமல் ஒழிய வேண்டும்.

எழுபதுகளில் ஆரம்பித்த இவ்விதமான பொலிசாரின் அத்து மீறல்கள்தாம் , தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை உருவாக்கும் காரணிகளில் முக்கியமானதாகும். இன்று மீண்டும் பொலிசாரின் அத்துமீறல்கள் ஆரம்பிக்கத்தொடங்கியிருப்பதாகத்தோன்றுகின்றது. இது இவ்விதமே தொடர்ந்தால், புதிய தலைமுறை இளைஞர்கள் மீண்டும் எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் அடைந்த உணர்வுகளை அடைவார்கள்.


7. கோபிநாத்தின் 'மன்னாதி மன்னன்!'

விஜய் தொலைக்காட்சியில் வெளியான எம்ஜிஆர் பற்றிய 'மன்னாதி மன்னன்' என்னும் ஆவணப்படத்தின் காணொளியினை அண்மையில் 'யு டியூப்'பில் பார்த்தேன். இது. எம்ஜிஆர் பற்றிய வாழ்வின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களின் பன்முக அவதானிப்பு.

எவ்வளவுதூரம் எம்ஜிஆர் தன் இரசிகர்களை , ஆதரவாளர்களைப்பாதித்திருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் ஆவணம். இந்த ஆவணப்படத்தில் எம்ஜிஆர் பற்றிய , அவரது மானுட நேயத்தை வெளிப்படுத்தும் சம்பவங்களை, அவரது பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்களை எல்லாம் பலர் விபரிக்கின்றார்கள்.

என் முகநூல் நண்பர்களிலிருவரையும் இந்த ஆவணப்படத்தில் காண முடிகின்றது. ஆழி பப்ளிஷர்ஸ் செந்தில்நாதன், மற்றும் கவிஞர் மகுடேஸ்வரன் ஆகியவர்களே அவர்கள்.

எம்ஜிஆர் நிறைவேற்றிய தமிழ் மொழிச்சீர்திருத்தம், மாணவர்களுக்கான இலவசச் செருப்பு, பெண்களுக்கான இலவசச்சேலை போன்ற திட்டங்கள், கல்வியில் சாதனை படைத்த இளைஞர்களுக்கு அவரது பாடல்கள் ஏற்படுத்திய ஆரோக்கியமான ஊக்கம், கடன் சுமையால் நொடிந்திருந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர்.பந்துலுவுக்கு எம்ஜிஆர் செய்த உதவி, 64இல் ஏற்பட்ட புயலுக்கு எம்ஜிஆர் நேரில் சென்று உதவியது என்று பல விடயங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.