வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்ஈழத்துத்தமிழ்ப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். தனித்துவம் மிக்கவை. நில அமைப்புகளும் வித்தியாசமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் அவற்றை முறையாகப்பயன்படுத்துகிறோமா? உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொள்வோம்.

வான் பார்க்கும் வட மாகாணத்தின் பிரதான நகர்தான் யாழ்ப்பாணம். அந்நகர அமைப்பினை நினைக்கும் தோறும் எனக்கு 'டொராண்டோ' நகரின் நகர அமைப்பு ஞாபகத்து வருவதுண்டு. 'டொராண்டோ' நகரின் உள்நகரின் (downtown) பிரதான அம்சங்களிலொன்று: பிரதான விளையாட்டு அரங்குகள், சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மற்றும் வாவிக்கரை போன்றவையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தைப் பார்ப்பீர்களென்றால் இது போன்ற ஓர் ஒழுங்கமைப்பினை அவதானிக்கலாம். பிரதான விளையாட்டரங்கு, முற்றவெளி, திறந்த பிரதான திரையரங்கு, சுப்பிரமணியன் பூங்கா, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, அழகான பண்ணைக்கடலும், பாலம், மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் (உதாரணத்துக்குப் போர்த்துக்கேயர் காலத்துக் கிறிஸ்தவ ஆலயங்கள், ஆங்கிலேயர் காலத்து வீடுகள் போன்றவை), மணிக்கூட்டுக்கோபுரம், முறையாகப்பாவித்திருக்க வேண்டிய புல்லுக்குளம், யாழ் பொதுசன நூலகம், தந்தை செல்வா சமாதி எனப் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும் ஒழுங்கமைப்பினையே கூறுகின்றேன்.

'டொராண்டோ' நகரினை மக்கள் பாவிப்பதுபோல் யாழ்நகரை மக்கள் பாவிப்பதில்லை. இதற்குக்காரணம் நகரினைப் பரிபாலிக்கும் ஆட்சியிலிருக்கும் அமைப்புகளெல்லாம் தொலைநோக்கில் சிந்தித்து நகரினை மக்கள் அதிகமாகப்பாவிக்கும் வகையில் பிரதானப்படுத்திச் செயற்பாடுகளை எடுக்கவில்லை என்பதால்தான் என்பதென் கருத்து.

என் பால்ய காலத்துப்பருவம் வனங்களும், குளங்களும்  மலிந்த வன்னி மண்ணில் கழிந்தாலும், என் பிறப்பும், என் பதின்மப்பருவத்தின் அதிகளவான காலமும் யாழ்நகரிலேயே கழிந்தது. யாழ் நகரின் ஒவ்வொரு மூலையிலும் அப்பருவம் கழிந்தது.அப்பொழுதெல்லாம் வன்னியிலிருந்து விடுமுறைக்காக யாழ்நகர் வரும் சமயங்களில் கோட்டையை அண்மித்த முற்றவெளிக்குச் செல்வது, சுப்ரமணிய பூங்காவுக்குச் செல்வது எனப்பொழுதுகள் களிப்புடன் கழிவதுன்டு.  அப்பகுதிகளை மக்களும் அதிக அளவில் பாவித்துக்கொண்டிருந்தார்கள். திறந்தவெளி அரங்கினில் அடிக்கடி கலை விழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இப்பொழுதும் அவ்விதம்தான் மக்கள் பாவிக்கின்றார்களா? ஆனால் அவ்விதம் பாவிப்பதுமாதிரி வரும் செய்திகள் தெரிவிக்கவில்லையே. ஆனால் அப்பொழுதுகூட நகர் மக்களின் முக்கியமான பொழுதுபோக்குகளை மையமாக வைத்து முறையாக அபிவிருத்தி செய்திருக்கப்படவில்லை.

இப்பகுதியினை மக்கள் விரும்பிப் பாவிக்கும் வகையில் யாழ் மாநகரசபையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகளைக்கவரும் வகையில் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டு அவை பற்றி விளம்பரப்படுத்தப்பட வேண்டும். மேற்கு நாடுகளிலுள்ளதைப்போல் மக்களைக்கவரும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விதம் செய்தால், மக்களின் பொழுதுபோக்குகளை மையமாக வைத்துச் செழிக்கும் பொருளாதாரம் பலருக்கு வேலை வாய்ப்புகளைத்தருவதோடு, நகரின் அபிவிருத்திக்கும் உறுதுணையாக அமையும்.


சாகித்திய விருதும் , திருப்பிக்கொடுத்தலும்..

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்சாகித்திய அமைப்பினரின் பரிசினைப்பெற்ற கன்னடத்து எழுத்தாளர் எம்.எம்.கல்பார்கி  இந்து மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து, நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற நிலைமையினால் (மதரீதியாக, சாதிரீதியாக) மக்கள் படுகொலை செய்யப்படுவதைக்கண்டு, சாகித்திய அமைப்பின் பரிசினைப்பெற்ற எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத சாகித்திய அமைப்பினரின் செயலினைக்கண்டித்து (இப்பொழுது கண்டித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன) இந்தியாவின் ஏனைய மாநிலத்து எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் எனப்பலர் தமக்கு வழங்கிய சாகித்திய அமைப்பின் விருதுகளைத் தமது எதிர்ப்பினைக்காட்டுவதற்காகத்திருப்பிக்கொடுத்து வருகின்றார்கள். இதுவரையில் யாராவது தமிழ் எழுத்தாளர்கள் அவ்விருதினைத்திருப்பிக்கொடுத்திருக்கின்றார்களா?

ஒன்று பட்டாலுண்டு வாழ்வே- நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே.
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்.

என்றான் பாரதி. அவன் பாடியது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில். நாமிருப்பதோ இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில். இன்னும் மக்களுக்கு நன்றிது தேர்ந்திடும் ஞானம் வந்ததாகத்தெரியவில்லை. குறிப்பாக நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்த ஞானத்தின் தேவை மிகவும் முக்கியம். பார்ப்போம் யாராவது தமிழ் எழுத்தாளர்கள் தமக்குக்கிடைத்த விருதினைத்திருப்பிக்கொடுத்து தமிழர்தம் மானத்தைக்காப்பாற்றுகிறார்களா என்று.

பாரதி இன்றிருந்தால் மீண்டுமொடுமுறை பாடியிருப்பான்:

'நெஞ்சு பொறுக்குதில்லையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்.

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ?'

இத்தருணத்தில் ஈழத்தில் போர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 'ஷெல்' தாக்குதலொன்றில் குடும்பத்தினருடன் பலியான எழுத்தாளர் நெல்லை க.பேரனின் நினைவுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையிலும் எழுத்தாளர்கள் பலர் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அக்காலகட்டத்தில் கூட இலங்கை அரசினால் வழங்கிய சாகித்திய விருதுகளைத் தமிழ் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர்கள் வாங்கிக்கொண்டுத்தானிருந்தார்கள். யாருக்குமே விருதுகளைத்திருப்பிக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே வந்ததில்லையே என்ற எண்ணமும் கூடவே எழுகிறது.

விருதினைத்திருப்பிக் கொடுப்பது என்பதை ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாகத்தான் அவ்விதம் செய்த எழுத்தாளர்கள் கருதுகின்றார்கள். அதன் காரணமாகத்தான் இதுவரை எழுத்தாளர் கல்பார்க்கியின் மரணம் பற்றி எதுவும் கூறாத சாகித்திய அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கன்னட எழுத்தாளர்களுக்காக ஏனைய மாநிலத்து எழுத்தாளர்களெல்லாரும் இவ்விதம் விருதினைத்திருப்பிக்கொடுப்பதை எதிர்ப்பு நடவடிக்கையாகக்கருதிச்செயற்படும்போது, 'எனக்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த விருது. எதற்கு இதனைத்திருப்பிக்கொடுக்க வேண்டும்' என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவில்லையே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு இலக்கிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் பங்குபற்றாத வரலாற்றுத்தவறினைச்செய்கின்றார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.


எழுத்தாளர் டிசெதமிழன் 'காந்தியம் அமைப்பைப்பற்றி....

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் டிசெதமிழன் 'காந்தியம் அமைப்பைப்பற்றி முகநூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறி கூறியிருந்தார்:

//டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சந்ததியார் போன்றவர்களுடன் 'காந்தீயத்தை' 1979ல் தொடங்குகின்றார். 1982 டேவிட் ஐயா கைது செய்யப்பட்டதும், 1983ல் வெலிக்கடைப் படுகொலைகளின்போது அருந்தப்பில் தப்பியதும், பின்னர் அதே ஆண்டு செப்ரெம்பரில் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பி வந்ததும் கடந்த கால வரலாறு. காந்தீயத்தை தொடங்கும்போது டேவிட் ஐயாவிற்கு 55 வயது. காந்தீயம் தீவிரமாகச் செயற்பட்டது குறைந்தது 4 ஆண்டுகளே ஆகும். ஆனால் டேவிட் ஜயாவின் பங்கு நம் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பங்களிப்பாக இருந்திருக்கின்றது. அவரைப் போன்ற முன்னோடிகளே நமக்கு இன்றைய காலத்தில் இன்னும் தேவையாகவும் இருக்கின்றனர்.//

வரலாறு பற்றிய எந்தவித ஆய்வுமில்லாமல் , வரலாற்றினைத்திரிப்பதென்பது இதனைத்தான். மேலும் காந்தியம் அமைப்பின் பங்களிப்பினை மிகவும் எளிமையாக்கி, யாரும் இதுபோல் அமைப்பொன்றினை தொடங்கி , மிகவும் குறுகிய காலத்தில் இலகுவாக சேவை செய்யலாம் என்னும் தொனியில் தன் வாதத்தினை முன் வைத்திருக்கின்றார்.

யாரும் எந்த வயதிலும், குறுகிய காலத்தில் மானுட சேவைகள் ஆற்ற முடியும் என்பதற்கு வலுச்சேர்ப்பதற்காகத்தான் அவர் காந்தியம் அமைப்பையும், டேவிட் ஐயாவையும் உதாரணமாக்கியிருக்கின்றார். ஆனால் அவ்விதம் அவரையும், அவர் வளர்த்த அமைப்பினையும் உதாரணமாக்கியிருப்பது தவறானதென்பதென் கருத்து.

முதலில் காந்தியம் அமைப்பினை டேவிட் ஐயா 79இல் தொடங்கவில்லை (நானறிந்தவரையில்).

'காந்தளகம்' பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் கட்டுரையொன்று 'வல்லமை' இணையத்தளத்தில் (ஏப்ரில் 7, 2012) அன்று வெளியாகியிருந்தது. அதில் அவர் 'காந்தியம்' அமைப்பின் உருவாக்கம் பற்றிப்பின்வருமாறு கூறியிருப்பார்:

"தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார்."

உண்மையில் 1970களில் என்று சச்சிதானந்தன் அவர்கள் பொதுவாகக்குறிப்பிட்டிருந்தாலும், 1972 காலகட்டத்தில் காந்தியம் அமைப்பு இயங்கத்தொடங்கி விட்டதென்று நினைக்கின்றேன். அப்பொழுது டேவிட் ஐயா அவர்கள் நாடு திரும்பியிருந்தார். மேலும் 1972 இலங்கை அரசியலமைப்பு உருவான காலத்தைத்தொடர்ந்தே காந்தியம் அமைப்பு தனது பண்ணைகளில் மலைநாட்டுத்தமிழரை வன்னியில் குடியேற்றும் திட்டங்கள் ஆரம்பித்து விட்டதெனலாம். 77 கலவரத்தைத்தொடர்ந்து அதிகளவில் மலையகத்தமிழர்களைக்குடியேற்றத்தொடங்கியதெனலாம்.

சச்சிதானந்தனின் கீழ்வரும் கூற்றும் இதனையே வெளிப்படுத்தும்:

// 1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம்.மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு.//

மேலும் மேற்படி கட்டுரை பற்றிய வாசகர்களின் கருத்துகளுக்கான பகுதியில் சச்சிதானந்தன் அவர்கள் தெரிவித்திருக்கும் கீழுள்ள கருத்தும் முக்கியமானது:

//74, 75 களில் அவருடன் இணைந்து பணிகள் ஆற்றும் வாய்ப்புப் பெற்றவன். முதன் முதலில் காலஞ்சென்ற வி.எஸ்.ரி. அவர்களது உவாட் பிளேஸ் பணிமனையில் சந்தித்தேன். அப்போது நாம் ‘இன்டிப்பென்டன்ற்’ என்ற பெயரில் தமிழர்களின் குரலை ஆங்கிலத்தில் வெளிக்கொணரவேண்டும் என்ற அவாவினால் வாராந்திர செய்தித் தாள் ஒன்றைப் பிரசுரிக்கும் பணியை முன்னெடுப்பதற்காகக் கூடியிருந்தோம். ஆபிரிக்க நாடொன்றில் கடமை புரிந்துவிட்டு இப்போது, ‘டொலர்’, கென்ற் பண்ணைகளை தமிழர் நல மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நடத்தி வருகின்றார் என அறிமுகம் செய்யப்பட்டோம். //

இதன்படி 74, 75களில் டொலர், கென்ற் பண்ணைகள் தமிழர் நல மேம்பாட்டுக்காக இயங்கிக்கொண்டிருந்தன என்பதை அறியலாம். மேலும் டேவிட் ஐயாவுக்கு காந்தியம் பற்றிய சிந்தனைகள் 70களில்தான் முதன் முதலில் ஏற்பட்டதாகக் கூற முடியாது. அது அவரது நீண்ட நாட் கனவு. 1980இல் நாவலர் பண்ணையில் தன்னார்வப்பணிகளில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் அப்பண்ணைக்குப் பொறுப்பாக முதியவரொருவர் இருந்தார். அவர் தன்னை 'ஈழத்துக்கபிலர்' என்னும் பெயரில் சுதந்திரன் பத்திரிகையில் கவிதைகள் எழுதியிருப்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். வடமராட்சியைச் சேர்ந்தவரென்றும், அவரது புத்திரர்களிருவர் இங்கிலாந்தில் இருப்பதாகவும் கூறினார். அவருடனான உரையாடலின்போது டேவிட் ஐயா அவர்கள் 56ற்குப்பிற்பட்ட காலகட்டத்திலேயே நாவலர் பண்ணையை வாங்கியிருந்ததாகக் கூறியதாக ஞாபகம்.

மேலும் டேவிட் ஐயா அவர்கள் 56இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத்தெரிவித்துத் தனது பதவியைத்துறந்து வெளிநாடு சென்றவர்.

டேவிட் ஐயா அவர்கள் காந்தியம் அமைப்பினை அமைத்தது பற்றிய விக்கிபீடியாக்குறிப்பு பின்வருமாறு குறிப்பிடும்:

//1972 ஆம் ஆண்டில் சேவை நோக்கோடு இலங்கை திரும்பினார். இலண்டனில் இருந்து திரும்பிய மருத்துவர் ராஜசுந்தரம் என்பவருடன் இணைந்து 'காந்தியம்’ என்ற அமைப்பை வவுனியாவில் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தமிழர் வாழ் மாவட்டங்கள் அனைத்திலும் மாவட்ட மையங்களை அமைத்தனர். கிராமங்கள் தோறும் கிட்டத்தட்ட 450 ஆரம்பப் பள்ளிகளை அமைத்தனர். அத்துடன் பண்ணைகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், மா விநியோகம், ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பன்னிரண்டு ஒரு-ஏக்கர் மாதிரிப் பண்ணைகளை அமைத்தார். அத்துடன் மலையகத்தில் இருந்து ஏதிலிகளாக வந்த 5,000 குடும்பங்களை குடியமர்த்தினார்.//

1924 ஆம் ஆண்டு பிறந்த டேவிட் ஐயா அவர்கள் 1956இல் , தனது 32வது வயதில், தனிச்சிங்களச்சட்டத்திற்கான எதிர்ப்பாகத்தனது அரச பதவியினைத்துறந்து வெளிநாடு செல்கின்றார். அதன் பின்னர் அவர் நாவலர் பண்ணையை வாங்குகின்றார். பின்னர் எழுபதிகளின் ஆரம்பத்தில் நாடு திரும்பியபொழுது, தன் வாழ்வினை தமிழர் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக்கொள்கின்றார். தொடர்ந்தும் அவர் கட்டடக்கலை வேலையினைச் சொந்தமாகச் செய்து வருகின்றார்.

டேவிட் ஐயாவின் காந்தியம் அமைப்பு பற்றிய கனவு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியிலேயே தொடங்கியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் நாவலர் பண்ணையை வாங்கியிருக்க வேண்டும். [நாவலர் பண்ணையை எக்காலகட்டத்தில் வாங்கினார் என்பது ஆய்வுக்குரிய விடயம்.]

டேவிட் ஐயாவின் நீண்டநாட் கனவே அவரது 'காந்திய அமைப்பும்' அதற்கான அவரது அர்ப்பணிப்பும். டிசெதமிழன் கூறுவது போல் நான்கு வருட விடயமல்ல அது. அவ்விதமாகக் காந்தியப்பண்ணைகளை ஆரம்பிப்பதற்காகத் தனது சொந்தப்பணத்தைச்செலவழித்தவர் டேவிட் ஐயா அவர்கள். பின்னர் 77 இனக்கலவரமும், அக்காலகட்டத்தில் ஆயுத மயமாகியிருந்த ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டமும் காந்தியம் அமைப்பினையும் அப்போராட்டத்துடன் இணைத்து விட்டதெனலாம். அதற்கு முக்கிய காரணங்களில் சில காந்தியப்பண்ணைகளில் வேலை செய்வதன் மூலம் ,போராட்டத்தை மக்கள் மயப்படுத்தலாம், மற்றும் போராளிகள் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடியலாம் என்பதும்தாம்.

டிசெதமிழனின் நோக்கம் நல்லதாகவிருந்தாலும், அதற்கான அவரது உதாரணம் காந்தியம் அமைப்பினையும், அதன் ஸ்தாபகர் டேவிட் ஐயாவினது பங்களிப்பினையும் கொச்சைப்படுத்துவதாகவும், வரலாற்றினைத்திரிபு படுத்துவதாகவும் அமைந்து விட்டது துரதிருஷ்ட்டமானது.