வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது.

அதற்குக் கனடாவிலிருந்து நானும் ஒரு கதையினை 'போரே நீ போய் விடு!' என்னும் தலைப்பில் எழுதி அனுப்பியிருந்தேன். வன்னியிலுள்ள அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தம் வாழ்வினை அர்ப்பணித்த மூவரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை அது. வாத்தியார் ஒருவர். அவரது மணவாழ்க்கை முறிவுற்று தனிமையில் வாழ்பவர். இளம் பெண் ஆசிரியை ஒருவர். நிலவிய போர்ச்சூழலினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நிராதரவான நிலையிலிருந்த அவரை அவரது மறைந்த தந்தையாரின் நண்பரான மேற்படி வாத்தியாரே ஆதரித்து, அகதிகளுக்குச் சேவையாற்றும்படியான சூழலை ஏற்படுத்தியிருந்தார். இளைஞரொருவன். அவனும் அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச்செயற்படுபவன். ஆசிரியையான அந்தப்பெண்ணோ தன்னை ஆதரித்த ஆசிரியரைத் தன் தந்தையைப்போலெண்ணி வாழ்பவள். அந்த இளைஞன் அவள் மேல் காதலுறுகின்றான். ஆனால் அவளோ தன் மணவாழ்வு அகதிகளுக்குச் சேவை செய்வதிலிருந்து. தந்தையைப்போன்ற ஆசிரியருக்குப் பணிவிடை செய்வதிலிருந்து தன்னைத்தடுத்துவிடுமென்பதைப்பிரதான காரணங்களிலொன்றாகக்கூறி மறுத்து விடுகின்றாள். தொடர்ந்தும் நண்பர்களாக அதே சமயம் தன்னார்வத்தொண்டர்களாக இருப்பதையே அவள் விரும்புகின்றாள். அவனும் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் அப்படைப்பின் கதைச்சுருக்கம்.

இப்போட்டியின் முடிவுகளை வெளியிட்ட வீரகேசரி நிறுவனம் முதலில் போட்டி பற்றியும், நடுவர்கள் பற்றியும், போட்டிக்கு வந்த படைப்புகள் பற்றியும் தன் முடிவுகளை வெளியிட்டது. அதன் பின்னர் பரிசு பெற்ற குறுநாவல்களின் விபரங்களை அடுத்த வார வெளியீட்டில் அறிவித்திருந்தது.

மேற்படி போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள் மூவர். அவர்கள் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு வீரகேசரி அறிவித்திருந்தது:

"இப்போட்டிக்கு இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் 28 இலக்கிய ஆக்கங்கள் வந்தன. அவற்றினைப் பரிசீலனை செய்து பரிசுக்குரியவற்றினைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை ஈழத்தின் பிரபலமான மூன்று எழுத்தாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். வீரகேசரியின் சார்பில் சிற்பி சரவணபவன் அவர்களும், இலக்கிய வட்டத்தின் சார்பில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகிய இருவருமாக மூவரும் நடுவர்களாக அமைந்தனர்.  சிற்பி சரவணபவன் ஈழத்தின் கலைச்செல்வி யுகத்தின் பிதாமகர்.  கலைச்செல்வி என்ற சஞ்சிகை மூலம் ஈழத்திலக்கியத்திற்குப்பெரும் பங்கினை அளித்தவர். இன்றைய பிரபலமான எழுத்தாளர்கள் உருவாவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தவர். ஈழத்தின் முன்னணி நாவலாசிரியராக விளங்குபவர் செங்கை ஆழியான்.  சிறுகதை ஆசிரியராகவும், விமர்சகராகவும் செம்பியன் செல்வன் திகழ்கிறார். இம்மூவரும் பரிசுக்குரிய குறுநாவல்களைத்தேர்ந்தெடுத்தனர்.

போட்டிக்கு வந்திருந்த 28 இலக்கிய ஆக்கங்களில்  குறுநாவல் என்ற வரையறைக்குள்  15 ஆக்கங்கள் அமைந்தன.  ஓராக்கம் நாவல் என்ற வரையறைக்குள் அடங்கியது.  12 ஆக்கங்கள் சிறுகதைகளாகக் காணப்பட்டன. பொறுமையாக அவற்றினை நடுவர்கள் ஊன்றிப்படித்தனர்.

குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த 12 சிறுகதைகளும் சுவையானவை.  கனடாவில் இருந்து என்.கிரிதரன் (போரே நீ போய்விடு), கரவெட்டியில் இருந்து செல்வி நீலாம்பிகை கந்தப்பு (சுமைதாங்கி), குடத்தனையிலிருந்து செல்வி தயாளினி தர்மலிங்கம் (அமாவாசை இருட்டிலே...), கோப்பாயிலிருந்து மதிவண்ணன் (உயிரின் பெறுமதி), யாழ்ப்பாணத்திலிருந்து தி.ஞானேஸ்வரன் (பெண்மையே என்னைக்கொல்லாதே...), கொழும்பிலிருந்து ஆர்.கே.கெளரி (மீண்டும் அவன் அனாதையாகின்றான்), திருகோணமலையிலிருந்து யசோதரா ஏகாம்பரம் (கறை படிந்த உறவுகள்), பொத்துவிலிருந்து  செல்வி சுமதி கனகரத்தினம் (அறியாமையின் தண்டனை), கொழும்பிலிருந்து ந.பாலமுரளி (வயல் காணி), பனாகொடையிலிருந்து பி.நிர்மலாதேவி (அதிஷ்ட்டப்பெண்), வரணியிலிருந்து வி.நவரத்தினம் (குமுதாவின் குடும்பம்), கரவெட்டியிலிருந்து ந.பார்த்திபன் (வைராக்கியம்) ஆகியோர் சிறுகதைகளை அனுப்பியிருந்தனர். இவற்றில் பின்வரும் சிறுகதைகளை வீரகேசரியில் பிரசுரமாகத் தகுதியானவையென நடுவர்கள் விதந்துரைத்துள்ளனர்.

1. போரே நீ போய்விடு - என்.கிரிதரன்
2. சுமைதாங்கி - நீலாம்பிகை கந்தப்பு.
3. உயிரின் பெறுமதி - து.மதிவண்ணன்
4. மீண்டும் அவன் அனாதையாகின்றான் - ஆர்.கே.கெளரி

எமக்குக் கிடைத்த 28 இலக்கிய ஆக்கங்களில் ஒன்று நாவல் வரையறைக்குள் அடங்கியது என்றோமா? கொழும்பைச்சேர்ந்த சோ.ராமேஸ்வரன் எழுதி அனுப்பிய 'நிழல் கீற்று' அதுவாகும்."

இவ்விதம் வீரகேசரி வெளியிட்டிருந்த போட்டி முடிவுகள் பற்றிய அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தது.

குறுநாவல்களின் பட்டியல் வருமாறு:

1. நிதர்சனங்களும், முரண்பாடுகளும் - கொடிகாமம் வளவை வளவன்
2. விழுதுகள் - ஜனமகள் சிவரஞ்சனி (சுன்னாகம்)
3. விழுதிழந்த ஆலமரம் - சி.துளசி (கல்முனை)
4. வீதியெல்லாம் தோரணங்கள் - தாமரைச்செல்வி (பரந்தன்)
5. படிப்பும், பயணங்களும் - இ.ரிஷிப்ரபஞ்சன்
6.  நிம்மதியைத்தேடொ - செ.குணரத்டினம் (மட்டக்களப்பு)
7. வேலிகளைத்தாண்டும் கதியால்கள் - பரந்தன் இராஜ தர்மராஜா
8. ஆசைய்ன் மறுபக்கம் - திமிலை மகாலிங்கம் (மட்டக்களப்பு)
9. ஒரு சமூகத்தொண்டன் விடைபெறுகின்றான் - சாமி மலையைச்சேர்ந்த எம்.மகேந்திரன்
10. இலட்சியத்தாய் - திருமதி கு.கமலாம்பிகை (மன்னார்)
11. அணை கடந்த பின் - பா.கலா (திக்கம்)
12. ஏழை பாமரருக்கு இவ்வுலகில் ஏதுமில்லை - யதார்த்தன் (பருத்தித்துறை)
13. அஞ்ஞாத வாசம் - முகில்வாணன் (கல்முனை)

இவை தவிர மேலுமிருவரின் பெயர்கள் 'காத்தான்குடியைச் (.. சுவடு) கோப்பாயைச்சேர்ந்த ஆர்.ராஜமனோகரன் , ஆர்.ராஜமகேந்திரன் (விடியும் பொழுது வரும்)' என்று குழப்பகரமாகப்பிரசுரமாகியுள்ளன.

இவற்றிலிருந்து பரிசுக்குரிய குறுநாவல்களின் விபரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென்று அறிவித்திருக்கின்றார்கள். அந்த விபரங்கள் என்னிடமில்லை. ஆனால் தாமரைச்செல்வியின் குறுநாவலான வீதியெல்லாம் தோரணங்கள் முதற் பரிசினைப்பெற்றிருக்க வேண்டுமென்று ஞாபகம்.

எனக்கு வீரகேசரி நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது அக்காலகட்டத்தில் மிகுந்த வியப்பினையும், மகிழ்ச்சியினையும் தந்தது. குறுநாவல் போட்டிக்கு வந்த படைப்புகளில் குறுநாவல்களை மட்டுமே கவனத்திலெடுத்துக்கொண்டு, ஏனையவற்றைத் தட்டிக்கழித்திருக்கலாம். ஆனால் வீரகேசரி நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மூன்று நடுவர்களும் வந்திருந்த அனைத்துப் படைப்புகளையும் பொறுமையாக வாசித்தார்கள். வாசித்ததுடன் வந்திருந்த சிறுகதைகளுள் , பிரசுரிப்பதற்குகந்ததாக நான்கு சிறுகதைகளையும் விதந்துரைத்திருந்தார்கள்.

மேற்படி நான்கு சிறுகதைகளும் வீரகேசரியில் பின்னர் பிரசுரமாயினவோ , இல்லையோ எனக்குத்தெரியாது. ஆனால் இவ்விதம் குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளையும் படித்து, பிரசுரிப்பதற்காக விதந்துரைத்த நடுவர்களும், அதனைப்பிரசுரித்த வீரகேசரி நிறுவனமும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. உலகிலேயே இவ்விதமாக நடந்திருப்பது இதுவே முதல் தடவையாகக்கூட இருக்கலாம்.

மேற்படி போட்டிக்கு நடுவர்களாக இருந்த செங்கை ஆழியான் பல வருடங்களுக்குப்ப்பின்னர் 'போரே நீ போய்விடு' என்றொரு நாவலை எழுதினார்.அதுபற்றித் தனது 'நானும் எனது நாவல்களும்' என்னும் நூலில் பின்வருமாறு கூறுவார்: 'சமகால வாழ்வியல் துயரங்களை வைத்து நான் எழுதிய இன்னொரு நாவல் "போரே நீ போய்விடு".  ஏற்கனவே ஹெமிங்வேயின் Farewel to Arms என்ற நாவல் இத்தலைப்பில் வெளிவந்துள்ள போதிலும், இத்தலைப்பே எனது நாவலிற்கும் பொருத்தமாகப்பட்டது.'

Farewel to Arms  என்னும் சொற்தொடரின் அர்த்தத்தை ஓரளவுக்குக்கொண்டதாக 'போரே நீ போய்விடு' என்னும் சொற்தொடர் இருந்த போதிலும், நேரடி மொழிபெயர்ப்பாகக்கொள்ள முடியாது. மேற்படி 'போரே நீ போய்விடு' பெயரில் எனது சிறுகதையொன்று இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டிக்கு அனுப்பப்பட்டதும், அதனைப்பிரசுரிப்பதற்காகத் தெரிவு செய்த நடுவர்களில்  ஒருவராக எழுத்தாளர் செங்கை ஆழியான் இருந்ததும் ஹெமிங்வேயின் நாவலின் தலைப்பு அவரது நாவலுக்குக் காரணமாக இருந்ததைவிடக்  கூடுதலான காரணமாக இருந்திருக்கக்கூடுமோ என்றெனக்குப்படுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.