'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கத்தின் மாதாந்தக் கலைந்துரையாடல்: கணினித்தமிழ் 'வரலாறும் வளர்ச்சியும்'.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இவ்விதமானதொரு நிகழ்வை நடாத்தியதற்காக எழுத்தாளர் அகில், வைத்திய கலாநிதி லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் மற்றும் இவர்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுபவர்கள் அனைவரும பாராட்டுக்குரியவர்கள்.  இச்சங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதிச்சனிக்கிழமை அன்று இது போன்று கலை, இலக்கிய மற்றும் அறிவியல் நிகழ்வொன்றினை நடத்துவது வழக்கம்.

இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருவதாகவிருந்த ஐந்து பேச்சாளர்களில் மூவரே வந்திருந்தனர். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளையில் ஆரம்ப உரையினைத்தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம பேச்சாளரான திரு.குயின்றஸ் துரைசிங்கம் 'கணினித்த்மிழின் வளர்ச்சி,  குறிமுறை, தகுதரம், ஒருங்குறி இன்னும் இன்னோரன்ன' என்னும் தலைப்பில் நீண்டதொரு உரையினை ஆற்றினார். கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துகள் பற்றிய சிக்கல்கள் பற்றியதாகவே அவரது உரை பெரும்பாலுமிருந்தது. ஒருங்குறி எழுத்துரு வந்துவிட்ட இந்நிலையிலும் கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துருக்கான முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. ஒருங்குறி ஓர் ஆரம்பமே என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. 'தமிங்கிலிஸ்' பாவித்துக் கணினியில் தட்டச்சு செய்வதைப்பற்றியும் அவரது உரை விமர்சனப்பார்வையுடன் அமைந்திருந்தது. அவர் transliteration என்பதைத்தான் 'தமிங்கிலிஸ்' என்று கூறிவிட்டாரென்று நினைக்கின்றேன்.   'ட்ரான்ஸ்லிடெரேஷன்' என்பது ஆங்கில எழுத்துகளைப்பாவித்துத் தமிழை அல்லது ஒரு மொழி எழுத்துக்களைப்பாவித்து இன்னுமொரு மொழியினை எழுதுவதாகும். ஆனால் 'தமிழிங்கிலிஸ்' ஆங்கிலத்தைத்தமிழில் பேசுவதைக்குறிக்கும். இவரது பயனுள்ள நீண்ட உரையானது கணினியில் பாவிக்கப்படும் எழுத்துருகள், அவை ஏற்படுத்தும் சிரமங்கள், அவை பற்றிய ஆய்வுகள் பற்றியதாகவே அமைந்திருந்தது.

மேலும் இளையவர்களை எவ்விதம் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு உள்வாங்குவது என்பது பற்றியும் கலந்துரையாடலில் உரையாடியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் குழந்தைகள் தமிழ் கற்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் முக்கியமானவர்கள் , அவர்களது செயற்பாடுகளும் முக்கியமானவை என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்பட்டது.

அடுத்துப்பேசிய எழுத்தாளரும், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் உரை 'இணையத்தமிழ் : இணைய இதழ், இணையத்தளம், மின்னூல், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளம் பற்றியதொரு சுருக்கமானதொரு பார்வையாக அமைந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து சிற்றுண்டிகள் வழங்கப்படச் சிறியதொரு இடைவேளை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் 'கலை, இசை மற்றும் உலகமயமாக்கலில் கணினித் தமிழின் தாக்கம்' என்னும் தலைப்பில் திரு.மதிவாசன் சீனிவாசன் உரையாற்றினார். திரு. பொன். பாலராஜன், திரு. ராஜா சொக்கலிங்கம் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களினால் வர முடியாதுபோய் விட்டதால் ஐயந்தெளிதல் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஐயந்தெளிதல் அரங்கு கடந்த நிகழ்வு பற்றியதாகவே அமைவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்குமாறாக இன்று நடைபெற்ற நிகழ்வுகளைப்பற்றியதாகவே ஐயந்தெளிதல் அமைந்திருந்தது நல்ல விடயம்.

இக்கலந்துரையாடலில் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றிக் கேள்விகள் கேட்டார்கள். எதிர்காலத்தமிழரின் பிள்ளைகள் தமிழ் படிப்பார்களா? என்றொரு கேள்வியினை அடிக்கடி பலர் கேட்டனர், இது பற்றிப் பல்வேறு தரப்பினரும் தத்தமது கருத்துகளைக்கூறினர்.

இக்கலந்துரையாடலில் ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவம் மிக்க கனகேஸ்வரி நடராஜா, ஆசிரியை சித்ரா, எழுத்தாளர் சகாறா, எழுத்தாளர் த.சிவபாலு, எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை, முனைவர்களான  நா.சுப்பிரமணியன், மற்றும் அவர் மனைவி கெளசல்யா சுப்பிரமணியன் , எழுத்தாளர் திரு.சின்னையா சிவனேசன் (துறையூரான்) எனப்பலர் தமது கருத்துகளை முன் வைத்தனர். நிகழ்வில் 'நம்நாடு' ஆசிரியரும் எழுத்தாளருமான தீவகம்.வே இராசலிங்கம், கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோருட்படப் பலரைக்காணமுடிந்தது.

கரம்பொன் இணையத்தளத்தினை நடாத்தும் நண்பரினை நிகழ்வினில் சந்தித்தேன். இவரது பெயர் உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. என்னை முதன்முதலில் மான்ரியாலில் 'கோண்டாவில் சுந்தரி' (சதாசிவம் சுந்தரலிங்கம்) இல்லத்தில் சந்தித்த விடயத்தை நினைவு கூர்ந்தார். எனது படைப்புகளை அக்காலகட்டத்திலிருந்தே தொடர்ந்து வாசித்து வருவதாகவும் , பதிவுகள் இணைய இதழைத் தொடர்ந்து வாசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இது எதிர்பாராத மகிழ்ச்சி.

எழுபதுகளில் யாழ் இந்துக்கல்லுரியில் ஆங்கில ஆசிரியராகக்கடமை புரிந்த சிவனேசன் வாத்தியார்தான் 'துறையூரான்' என்ற, தற்போது இங்கு வாழுந்துகொண்டிருக்கும் எழுத்தாளர் சின்னையா சிவனேசன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவருடனான சிறு கலந்துரையாடலில் அவர் இவர் அல்லர் என்பது புரிந்தது.

நல்லதொரு ;கணினித்தமிழ்' பற்றியதொரு நிகழ்வு 'கணித்தமிழ் பற்றிய ரொறன்ரோ' தமிழ்ச்சங்கத்தின் மாதாந்தக் கலைந்துரையாடல் . இது போன்ற கணினி சம்பந்தமான நிகழ்வுகள் அடிக்கடி என்றில்லாவிட்டாலும் 'அவ்வப்போதாவது நடைபெறுவது பயன் மிக்கது.

தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்தும் 'ரொறாண்டோ' தமிழ்ச்சங்கத்தினர் பாராட்டுக்குரியவகள்.


'டொராண்டோ'வில்  'தேடகம்' ஆதரவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

நேற்று மாலை (19.07.2015) டொராண்டோவில் தேடகம் அமைப்பினரால் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டில் புஸ்பராணியின் 'அகாலம்' (நினைவுக்குறிப்புகளும்), ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும் வெளியிடப்பட்டன. என்.கே.மகாலிங்கம், கற்சுறா, எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி, சுதன் (அருண்மொழிவர்மன்), ஞானம் இலம்பேட், காலம் செல்வம், விஜி, நிருபா, இளங்கோ (டிசெதமிழன்) , குமரன் (தேடகம்), மயில் (தேடகம்), ராதா (தேடகம்), பா.அ.ஜயகரன் (தேடகம்), சேனா (தேடகம்), ரதன், 'தாய்வீடு' திலீப்குமார், முருகதாஸ்,  'வைகறை ரவி' நடராஜா முரளிதரன் எனக்கனடாக் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறிமுகமான பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.

நான் நிகழ்வுக்குச் சென்றபோது சிறிது தாமதமாகி விட்டது. நான் சென்றபோது கற்சுறா உரையாற்றிக்கொண்டிருந்தார். இங்குள்ள நிகழ்வுக்குறிப்பானது நான் சென்றபின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்டதொன்று.  நான் செல்வதற்கு முன்னர் இந்நிகழ்வில் கலந்து உரையாற்றியவர்களின் விபரங்கள் , அவ்விதம் யாராவது உரையாற்றியிருந்தால் , விடுபட்டிருக்கலாம்.

ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நூலினைப்பற்றிய கருத்துகளை கற்சுறா, விஜி , குமரன் (தேடகம்) ஆகியோர் வழங்கினர். புஸ்பராணியின் 'அகாலம்' நூல் பற்றிய கருத்துகளை நிருபா, அருண்மொழிவர்மன் , ஈழப்புரட்சிகரமுன்னணியின் மாணவர் அமைப்பு மூலம் அன்று அறியப்பட்ட டேவிட்சன் ஆகியோர் வழங்கினர். காலம் செல்வம் நிகழ்வுக்குத்தலைமை தாங்கி நெறிப்படுத்தினார்.

கற்சுறா தனதுரையில் ஜீவமுரளியின் நாவல் பற்றிக்குறிப்பிடுகையில் எவ்விதம் உணவகத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நூல் வெளிப்படுத்துதால் முக்கியத்துவம் வாய்ந்தது என்னும் நோக்கில் தனது உரையினை ஆற்றினார். அத்துடன் கனடாவில் தமிழ் முதலாளிகளின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் அனுபவங்களைத்தனது சொந்த அடிப்படையில் எடுத்துக்கூறினார். 'பிஎம்டபிள்யு' காரில் வந்திறங்கும் தமிழ் முதலாளிகள் பலர் எவ்விதம் தம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குரிய ஊதியத்தினைக் கொடுக்காமல் தட்டிக்கழிக்கின்றார்கள் என்பதை எடுத்துரைத்தார். பெண் தொழிலாளர்கள் அடையும் சிரமங்களையும் குறிப்பிட்டார். புலம்பெயர் தமிழர்கள் (ஆண்கள், பெண்கள்) தமிழ் முதலாளிகளின் கீழ் வேலை பார்த்த அனுபவங்களை யாராவது பதிவு செய்திருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இவ்விதமான அனுபவமுடையவர்களால் புனைவுகளிலோ அல்லது அபுனைவுகளிலோ நிச்சயம் பதிவு செய்யப்படவேண்டிய விடயமிது.

விஜி தனதுரையினைக் கனடாவில் பூர்விகக்குடிப்பெண்களின் உரிமைக்காகப்போராடும் அமைப்பினருக்குச்சமர்ப்பணம் செய்து ஆற்றினார். தொழிற்சங்க அமைப்புகளுடனான தனது அனுபவத்தினை நினைவுகூர்ந்து , தொழிலாளர்களின் அனுபவங்களை எடுத்துரைத்து நூல் பற்றிய தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

குமரன் (தேடகம்) தான் ஆரம்பத்தில் வேலை பார்த்த நிறுவனம் திவாலாகியது எவ்விதம் என்பது பற்றிய தனது அனுபவத்தினை நினைவு கூர்ந்து நூல் பற்றிய தனது கருத்துகளை எடுத்துரைத்தார். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்களுக்குரிய அர்த்தம் தனக்குப் புரியவில்லையென்றும் குறிப்பிட்டார். அதே சமயம் நூலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இடையில் அவ்வப்போது தனது கருத்துகளைக்கூறும் காலம் செல்வம் கூறிய ஒரு விடயம் என்னைக்கவர்ந்தது. அது ஓர் உவமை. கோப்பைகளைக்கழுவும் தொழிலாளர்களின் நிலைபற்றிக் குறிப்பிடுகையில் தொடர்ச்சியாகக் கோப்பைகளைக் கழுவுவதற்காக எதிர்நோக்கும் அவர்கள் நிலையினைத் துச்சாதனால் துயிலுரியப்பட்ட பாஞ்சாலியின் நிலையுடன் ஒப்பிட்டு அவர் வழங்கிய கருத்தது. கண்ணபிரான் அருளால் தொடர்ச்சியாக நீண்டுகொண்டிருந்த பாஞ்சாலியின் சேலையுடன் , தொழிலாளர்கள் முன்பு  நீண்டுகொண்டிருந்த கோப்பைகளின் வரிசையையும் ஒப்பிட்டுக் கூறினார். பாஞ்சாலிக்கு அவ்விதம் நீண்டுகொண்டிருந்த சேலையானது அபயமளித்ததென்றால், இங்கோ நீண்டுகொண்டிருந்த கோப்பைகளின் வரிசை உணவகத்தொழிலாளர்களு அபயத்தை அல்ல அவதியினை அள்ளி வழங்கியதென்பதைத்தான் 'காலம்' செல்வம் இவ்விதம்
குறிப்பிட்டார்.

அருண்மொழிவர்மன் புஸ்பராணியின் 'அகாலம்' பற்றிய தனதுரையில் புஸ்பராணியின் நூலின் நேர்மறையான, எதிர்மறையான அம்சங்களைப்பற்றி விமர்சித்தார்.  ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் சில நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கி நியாயப்படுத்திய அவர் அவற்றின் பாதக அம்சங்களைப்பற்றிக் கேள்வி எழுப்பாதது ஏன் எனக்கருத்துப்பட அமைந்திருந்தது அவரது விமர்சனம். உதாரணத்துக்கு வரதராஜ்பெருமாளுக்கு ஆதரவாக நூலில் கருத்துகளைத்தெரிவித்துள்ள நூலாசிரியர் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராகவிருந்த காலத்தில் அவரது கட்சியினர் புரிந்ததாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்களையிட்டு மெளனம் சாதிப்பது ஏமாற்றமளிக்கிறது என்ற விமர்சனத்தை சுதன் முன்வைத்தார். நூலில் குறிப்பிட்ட நிகழ்வுகளின் காலகட்டம் பற்றிய சந்தேகங்கள் சிலவற்றையும் எழுப்பினார். உதாரணமாக இன்பம், செல்வம் ஆகியோர் கொல்லப்பட்டது 79இல் நடைபெற்றதாக நூல் குறிப்பிடுவது பற்றி அவரது கேள்விக்கு மயில் (தேடகம்) 78 என்று குறிப்பிட்டார். ஆனால் என் ஞாபகத்தின்படி 79 என்றுதான் நினைக்கின்றேன். 79 டிசம்பருக்குள் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கும்படி ஜே.ஆர் தனது மருமகன் விஜயதுங்காவுக்குக் கட்டளையிட்டதுடன் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்றுதான் இன்பம். செல்வம் கொலையும். மேலும் புலோலி வங்கியின் மனேஜருக்கு வயது 25 என்று குறிப்பிடுவது பற்றிய சந்தேகத்தில் 25 வயதில் யாராவது வங்கி மனேஜராக இருக்க முடியுமா?  என்று கேள்வி எழுப்பினார். அதற்குச் சபையிலிருந்த சிலர் நூலின் தகவல் சரியே என்று எடுத்துரைத்ததையும் அவதானிக்க முடிந்தது.

நிருபா நன்கு திட்டமிட்டு எழுதப்பட்ட தனது 'அகாலம்' நூல் பற்றிய உரையினை வாசித்தார்.  நூலின் ஆவணச்சிறப்பினையும் தனதுரையின் முடிவில் குறிப்பிட்டார்.

டேவிட்சன் தனதுரையில் நூல் மீதான தனதுரையினை ஈழப்போராட்டத்தில் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பு நோக்கி, புஸ்பராணியின் அனுபவங்களை விபரிக்கும் நூலுடன் தன்னால் உணர்ந்து ஒன்றுபட முடிகிறது என்னும் கருத்துப்பட எடுத்துரைத்தார். நூலிலிலிருந்து மேற்கோள்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி தனது உரையினை அவராற்றினார். இந்நிகழ்வினை நடாத்திய தேடகம் அமைப்புக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

நூல் பற்றிய தனது நெறிப்படுத்தலில் 'காலம்' செல்வம் புஸ்பராணி போன்றவர்களுடன் தனக்கிருந்த நீண்ட கால அனுபவத்தின அடிப்படையில் கருத்துகளை முன் வைத்தார். ஒரு கட்டத்தில் புஸ்பராணியை எஸ்.பொ.வுடன் ஒப்பிட்டும் தனது கருத்தினை வெளியிட்டார். புஸ்பராணி தனது கருத்துகளில் நிகழ்வுகளின் இரு பக்கங்களையும் சீர்தூக்கி விமர்சித்திருக்கும் பண்பினை அவர் மெச்சினார். உதாரணத்துக்கு இன்ஸ்பெக்டர் பத்மநாதனால் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட புஸ்பராணி அவரது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுவதையும், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களால் அரசியலில் முன் நிறுத்தப்பட்ட புஸ்பராணி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தை விமர்சிப்பதிலிருந்து பின்வாங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புஸ்பராணியின் நூல் பற்றிப் பேசிய அனைவருமே நூலில் விபரிக்கப்பட்ட சாதி எவ்விதம் போராட்டத்தில், பொலிஸ் அடக்குமுறையில் எல்லாம் இடம் வகித்திருக்கிறது என்னும் விடயத்தையும் குறிப்பிட்டே உரையாற்றினார்கள். உதாரணமாகப் புஸ்பராணி மேல் பிரயோகிக்கப்பட்ட காவற்துறையின் அடக்குமுறைகளையும், பத்மநாபா போன்றோர் சமுதாயத்தில் அவர்களது இருப்பிடம் காரணமாக விடுவிக்கப்பட்டதையும் நூலிலிருந்து எடுத்து மேற்கோள் காட்டினார்கள்.

நிகழ்வின் முடிவில் சிவானந்தன் (சிவா), கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமது கருத்துகளைக் குறிப்பிட்டனர்.

மொத்தத்தில் நல்லதொரு நூல் வெளியீட்டு நிகழ்வு. இதனைத்திறம்பட நடத்தியதற்காக தேடகம் அமைப்பினரைப்பாராட்டலாம்.


கலாநிதி கைலாசபதியின் பார்வையில் அ.ந.கந்தசாமி!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கலாநிதி கைலாசபதியின் 'ஒப்பியல் இலக்கியம்' நூலினைக் கீழுள்ள இணைய இணைப்பினில் வாசிக்க முடியும். மேற்படி நூலினைப் பேராசிரியர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களுக்குச் சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அ.ந.கவுக்கான சமர்ப்பணத்தில் பேராசிரியர் கைலாசபதி பின்வருமாறு கூறியிருப்பார்:

"பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளில் ஒருவரும் பிறர்மொழியிலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்"

மிகவும் அழகாக, சுருக்கமாக அ.ந.கவின் இலக்கியப்பங்களிப்பினை இச்சமர்ப்பணத்தில் கைலாசபதி அவர்கள் கூறியிருக்கின்றார். அ.ந.க.வின் விமர்சனத்திறமையினை, ஈழத்து எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவர் என்ற விபரத்தினை, பிறர்மொழியிலக்கியங்களைக் கற்று தமிழுக்கு வழங்கியவர் என்ற தகவலினை, பல் துறைகளிலும் வல்லவரான அவரது புலமையினை மேற்படி சமர்ப்பணம் வெளிப்படுத்துகின்றது.

அ.ந.க ஆங்கிலத்திலும் நன்கு புலமை வாய்ந்தவர். அதனால்தான் அவரை இலங்கைத் தகவல் கூட்டுத்தாபனம் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தியது. அக்காலகட்டத்தில் அவர் பல ஆங்கில நூல்களை மொழிபெயர்த்திருக்கின்றார். பின்னரும் பல தனியார் நிறுவனங்களுக்காக அவர் பல ஆங்கில நூல்களை மொழிபெயர்த்திருப்பதாக அறிகின்றோம்.

தனது குறுகிய வாழ்வினுள் (அ.ந.க தனது 44 வயதில் மறைந்தார்) ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் (கதை, கட்டுரை, நாடகம், கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், விமர்சனம், பத்திரிகை ஆசிரியர் என) தன் ஆற்றலை வெளிப்படுத்தியவர் அ.ந.க. அதனால்தான் அவர் அறிஞர் அ.ந.க என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

கலாநிதி கைலாசபதியின் 'ஒப்பியல் இலக்கியம்': http://tamilnation.co/literature/eelam/unicode/mp0102.htm


புது நூல்கள் சில!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

'டொராண்டோ' பொதுநூலகத்துக்குப் புதிய தமிழ் நூல்கள் வந்திருந்ததைத் தற்செயலாக நேற்று ஃபிளமிங்டன் பார்க்' நூலகக் கிளைக்குச் சென்றிருந்தபோது அவதானித்தேன். அ.இரவியின் 1958, சரண்குமார் லிம்பாலேயின் சுயசரிதையான அனார்யா (நாதியற்றவன்) , தமிழில் எஸ்.பாலச்சந்திரனால் மொழிபெயர்க்கப்பட்ட நூல், மகாசுவேதாதேவியின் நாவலான 'கவி வந்தயக்கட்டி காயியின் வாழ்வும் சாவும்' (காலச்சுவடு வெளியீடு; தமிழில் எஸ்.கிருஸ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்) , வைதேகி ஹேர்பட்டின் புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து மற்றும் டொமினிக் ஜீவாவின் சாலையின் திருப்பம் (சிறுகதைத்தொகுதி) ஆகியவற்றை எடுத்து வந்தேன்.

சரண்குமார் லிம்பாலேயின் சுயசரிதையானது மராத்திய தலித்துகளில் ஒரு பிரிவான மஹர் பிரிவைச் சேர்ந்த நூலாசிரியரின் சுயசரிதை. 'நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ்' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல். டொமினிக் ஜீவாவின் 'சாலையின் திருப்பம்' நூலும் மேற்படி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலே.

டொமினிக் ஜீவாவின் 'சாலையின் திருப்பம்' தொகுப்பில் சில சிறுகதைகளின் பக்கங்கள் வெறுமையாக இருக்கின்றன. புத்தகமொன்றினை உலகத்தின் பல பாகங்களுக்கும் அனுப்பும்போது இவ்விதமான தவறு ஏற்படுவது பாரதூரமானது.

சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் திலீப்குமார் மற்றும் காந்தளகம் பதிப்பகம் மூலம் நூல்கள் பலவற்றை வாங்கினேன். அவ்விதம் வாங்கிய நூல்களில் லியோ டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), தி.ஜானகிராமனின் 'மலர் மஞ்சம்' (ஐந்திணைப்பதிப்பகம்), மற்றும் தி.ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி' (காலச்சுவடு) நூல்களிலும் இதுபோன்று பக்கங்கள் காணாமல் போயிருந்தன. ஒரு நூலில் பல பக்கங்கள் இஸ்லாம் மத நூலொன்றின் பக்கங்களால் ஈடு செய்யப்பட்டிருந்தன.

இத்தவறினைச் சுட்டிக்காட்டியதும் திலீப்குமாரும், காந்தளகம் பதிப்பகமும் குறையுள்ள நூல்களுக்குப் பதிலாகச் சரியான நூல்களை மீண்டும் அனுப்பியிருந்தார்கள். பதிப்பகங்கள் நூல்களை விற்கும்போது சரி பிழை பார்த்து விற்பனை செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மேற்படி தவறினால் நூல்களை வாங்கி அனுப்பியவர்களுக்குத்தான் தேவையற்ற மேலதிகச்செலவு. அண்மையில்கூட எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) நாவலின் முதல் பாகத்தின் 193 - 222 வரையிலான பக்கங்கள் தலை, கீழாகக்கட்டப்பட்டு வெளியாகியிருக்கின்றன (நான் வாங்கிய பிரதியில்).

காலச்சுவடு, ஐந்திணை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகங்கள் சிறிய பதிப்பகங்கள் அல்ல. நீண்ட காலமாக இயங்கி வருபவை. தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்து வரும் பதிப்பகங்கள். இவர்களிடமிருந்து இவ்விதமான தவறுகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தேவையற்ற செலவுகளைத்தவிர்க்க மட்டுமல்ல , பதிப்பகங்களின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்காமலிருக்கவும் இவ்விடயத்தில் தமிழ்ப்பதிப்பகங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதவசியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.