வ.ந.கிரிதரனின் நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை!காலம் கைகூடின் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள இந்த நாவலின் இரு பகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 1983இல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத்தொடர்ந்து , இலங்கையில் அரச திணைக்களமொன்றில் உயர் பதவியிலிருந்த இளங்கோ அகதியாகக் கனடா நோக்கி புலம்பெயர்கின்றார். இடையில் அவரது பயணம் அமெரிக்காவின் பாஸ்டனில் தடைப்படுகின்றது. அங்கிருந்து அவரை கனடாவுக்கு ஏற்றிச்செல்லவேண்டிய டெல்டா நிறுவனம் மறுத்து விடவே அங்கு அரசியல் அடைக்கலம் கோருகின்றார். இவ்விதம் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அவர் நியூயார்க் நகரிலுள்ள புரூக்லீன் தடுப்புமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றார்.

அவரது புரூக்லீன் நகரத்துத்தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் முதல் பகுதியான 'அமெரிக்கா' 'டொராண்டோ'விலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியாகிப் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட இளங்கோ மேலும் ஒருவருட காலம் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிமகனாக, எந்தவிதக்குடிவரவு ஆவணங்களுமின்றி தன் இருப்புக்காகப் போராடுவதை விபரிக்கும் பகுதியே 'குடிவரவாளன்'. இருபத்தேழு அத்தியாயங்களை உள்ளடக்கிய இப்பகுதி திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இப்பகுதி எதிர்காலத்தில் நூலுருப்பெறவுள்ளது.

ஒரு வருட காலம் நியூயார்க் நகரில் தங்கியிருந்த இளங்கோ எந்தவித முன்னேற்றமுமில்லாத நிலையில் கனடாவுக்கு அகதியாகச் செல்கின்றார்.

கனடாவில் அவரது அனுபவங்கள் 'குடிமகன்' என்னும் பெயரில் 'குடிவரவாளன்' போல் விரிவானதொரு தொடராகப் பதிவுகள் இணைய இதழில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப்பகுதி அகதியாக அடைக்கலம் நாடிக்கனடாவுக்குச் சென்ற இளங்கோ கனடாக் குடியுரிமை பெறும் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கி இருக்கும்.

எதிர்காலத்தில் குடிமகனைத்தொடர்ந்து அடுத்த பகுதிகளும் தொடராக பதிவுகள் இணைய இதழில் வெளிவருவதற்குத் திட்டமுண்டு.

பின்னர் வெளியான சகல பகுதிகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு 'ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை' என்னும் பெயரில் விரிவானதொரு நாவலாக வெளிவரவேண்டுமென்பதுதான் அவா.

என் எண்ணத்தினை எதிர்காலம் நிறைவேற்றி வைக்குமென்ற நம்பிக்கை நிறையவே உண்டு.