வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழினியின் கவிதையொன்று அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. குறுங்கவிதை. கவிதை இதுதான்:

துளி -01

காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
"சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்."
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.

இதுதான் அந்தக்குறுங்கவிதை. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது.  போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்துத்தமிழ் இலக்கியத்திலிருந்து வெளியான முக்கியமான கவிதைகளிலொன்றாகத் தமிழினியின் இந்தக் குறுங்கவிதையானது இடம் பெறப்போகின்றது. அதற்குக்காரணம் அது கூறும் பொருள். ஒரு முன்னாள் போராளியின், சமூகத்தால் அவமதிப்புக்குள்ளாகியிருக்கும் இன்றைய மனநிலையினை, அதனாலேற்படும் வேதனையினைப் பதிவு செய்திருப்பதால் இக்கவிதையின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.

கவிதையில் சொற்களும் அழகாக வந்து விழுந்திருக்கின்றன. கொட்டும் நினைவுகளை விசத்தேள்களுக்கு உவமையாக்கியிருப்பது நன்கு பொருந்துகிறது. விசத்தேள் நினைவுகளென்று உருவகித்திருந்தாலும் சொற் சிக்கனம் மிகுந்து படிமத்தில் இன்னும் சிறப்புற்றிருக்கும். இந்தக் கவிதைக்குத் தமிழினி தலைப்பினை வைக்கவில்லை. துளி -01 என்று மட்டுமே வைத்திருக்கின்றார். கவிதையின் தலைப்பாகப் போராடப்போன மனது என்று வைக்கலாமென்று படுகின்றது. அண்மையில் நான் வாசித்த கவிதைகளில் என் மனதினைப்பாதித்த சிறந்ததொரு கவிதை இதுவென்பேன்.