வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ' ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி.....  இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.

தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக 'அம்மா மெத்தப் பசிக்கிறதே', 'ஓ தமிழகமே', 'தசாவதாரம்', யாரடியம்மா ராசாவே', போன்றவற்றைக்குறிப்பிடலாம். .'அரசடி வைரவர்' தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.

'தமிழனின் துயரமும்
உன் தரித்திரமும்
ஒருபோதும்
தீரப்போவதில்லை.'

போன்ற வரிகளைக்குறிப்பிடலாம்.

இது போன்ற இன்னுமொரு கவிதை 'தோசைக்கடை'. 'பருத்தித்துறைத் தோசை' பற்றியும், அதனைச்சுட்டு விற்கும் தோசைக்காரி பற்றியும் நனவிடை தோயும் கவிஞரின் உணர்வுகள் ஒரு கவிதையாகப்பரிணமித்துள்ளது.

'தோசையின்
சுவையும் மாறாது.
சுட்டவளின்
வசையும் மாறாது'

என்று முடியும் கவிதை தோசைக்காரியைக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இது போன்ற கவிதைகளாகத் தொகுப்பிலுள்ள 'பருத்தித்துறை வடை', 'தட்டி வான்' போன்றவற்றைக்குறிப்பிடலாம். 'பருத்தித்துறை வடை' கவிதையினூடு கவிஞர் பருத்தித்துறை வடை பற்றிக்கூறுவதோடு அதன் பல் வகைப்பாவனை பற்றியும் நகைச்சுவையுடன் விபரிக்கின்றார். பனங்கள்ளுக்குச் சுதி சேர்க்கும் பருத்தித்துறை வடை பற்றிய ஏக்கம் கவிதை முழுவதும் தொனிப்பதை

'பருத்தித்துறை வடையே - வடலிப்
பனங்கள்ளுத் துணையே'

' .. கோப்பறேசன் வாசலில் பழைய வடை'

..கள்ளுக்குச் சுதி சேர்க்கும் வடை ருசிக்கு இணையுமுண்டோ'

போன்ற கூற்றுகள் வெளிப்படுத்தி நிற்பன.

பருத்தித்துறை தோசை, பருத்தித்துறை வடை போன்ற தமிழர்களின் உணவு வகைகளை ஆவணப்படுத்தும் கவிஞரின் கவிதைகள் வரிசையில் சேரும் இன்னுமொரு கவிதை 'தட்டி வான்' கவிதையாகும். கவிதையினைத் தட்டி வான் புகைப்படத்துடன் வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. சுன்னாகத்து மாம்பழம், செம்பியன்பற்றுச் சுறா மீன், கொடிகாமத் தேங்காய், நீர்வேலி வாழைக்குலை, கரணவாய்ப்புகையிலை  சுமந்து வரும் தட்டி வானைப்பற்றி நினைவு கூரும் கவிஞர் ஒரு காலத்தில் யாழ் மாவட்டத்தமிழர்களின் மத்தியில் அது ஆற்றிய சேவையினை எண்ணியெண்ணி இன்புறுகின்றார். இவ்விதமாகப்போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிய தட்டிவானின் இன்றைய நிலை கவிஞருக்குத்துயரினைதருகின்றது. அத்துயர் வெளிப்படும்

'மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்
தட்டில் ஏறியதில்லை.
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை.
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை.

குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைப்பிடித்த
ஐய்வரியராய்கள்.

துயரப்படாதே தட்டி வானே.
தமிழனின்
மூச்சிருக்கும் வரை
உன்னைப்பற்றிய
பேச்சிருக்கும்'

என்னும் வரிகளுடன் முடிவுறும். கூடவே இன்றைய தலைமுறைக்கும் தட்டிவானையும் அறிமுகப்படுத்தும். தமிழன் என்பதற்குப் பதில் தமிழர் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருக்கும். பெண் உரிமை பற்றிய சிந்தனை விரிவடைந்திருக்கும் இன்று தமிழன் என்பதற்குப் பதில் இரு பாலாரையுமுள்ளடக்கும் தமிழர் என்பதே பொருத்தமானது. ஒரு காலத்தில் இதுபோன்ற பிழைகளை நானும் விட்டதுண்டு. ஆனால் அறிவு விருத்திக்கேற்ப அவற்றைத்திருத்திக்கொள்ளத் தொடங்கி விட்டேன். எனவேதான் இதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்பினேன்.

'காதலாகிக் கசிந்து' காதலின் சிறப்பினைக்கூறும் கவிதை. காதலியின் பார்வையினை மின்னலைகளாக வர்ணிக்கும் கவிஞர் அவற்றைக்கண்கள் வெளிப்படுத்தும் சொல்லலைகள் என்பார்.

'விரிகிற முல்லை விழிகளின் வழியாய்
வீசிடும் மின்னலைகள்.
வார்த்தைகள் இன்றிக்கண்களின் ஊடே
வழங்கிடும் சொல்லலைகள்'.

'காதலாகிக் கசிந்து' காதலைப்பாடினால், 'எழுதிக் கிழித்த கடிதம்' வர்க்க வேறுபாட்டால் காதலியின் குடும்பத்தவரால்  சிதைக்கப்பட்ட காதலினைக் கூறும்.

'காசில்லாதவனென்று
கணக்கிலெடுக்க மறுத்தாரே'
என்று காதலியைப்பிரித்து அவளை வெளிநாடொன்றுக்கு அனுப்பிய அவளது குடும்பத்தவரைப்பற்றி விபரிக்கும் கவிதை அதன் பின் காதலனின் பொருளியல் நிலை சிறப்புற்றதையும் எடுத்துக்கூறும். ஆனாலும் காதலியின் குடும்பத்தவர் மீதான ஆத்திரம்மட்டும் குறையவேயில்லை என்பதை

'இரணை மடுக்குளத்தில்
சுழிகள் மட்டுந்தான்.
உன் வீட்டிலோ
சுழிகளோடு முதலைகளும்.'

என்னும் வரிகள் வெளிப்படுத்தும். சுழிகள் மட்டுந்தான் என்பது சுழிகள் மட்டும்தாம் என்று வந்திருந்தால் இலக்கணச்சிறப்புடையதாக அமைந்திருக்கும். ஏனென்றால் சுழிகள் என்னும் பன்மைக்குத் தான் என்னும் ஒருமைக்குப்பதில் தாம் என்னும் பன்மையே வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய வழக்கில் தான் என்பதுவே பலராலும் பாவிக்கப்படுகின்றது. இருந்தாலும் காதலன் இறுதிவரை அவளது குடும்பத்தவரை எதிர்க்கும் ஆற்றலற்ற கோழையாகவே இருக்கிறானென்பதைக் கவிதையின் இறுதி வரிகளான

'சந்திரனில் இருப்பாயானால்
சத்தியமாய் வந்து சேர்வேன்.
சொந்தங்களின் காவலென்றால்
சோர்ந்து நடைப் பிணமாவேன்'

என்னும் வரிகள் கூறி நிற்கும்.

இழந்த காதலைப்பற்றிக்கூறும் இன்னுமொரு கவிதை 'பிரிந்தும் பிரியாமல்..'.  இதுவும் காதலின் பிரிவுக்குக் காரணமாக வர்க்க வேறுபாட்டினைக்கூறும்.

'ஏழை மனமென எண்ணிச்சென்றாயோ?
இதய மலரை வாடச்சொன்னாயோ
எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். - உன்
இனிய முத்தத்துக்காய் ஏங்கி நின்றேன்'
என்று காதலனின் நிலையினை விபரிக்கும் கவிதையிது.

'வாழ விடுங்கள் எங்களை' என்னும் கவிதை தொழிற்சாலைகளால் களங்கமடையும் சூழற் சீரழிவைச் சுட்டிக்காட்டி நீதி கேட்கும்.

'போதும்!
பேக்டரிப் பிட்டுக் குழல்களே
புகை எழுப்பியது
போதும்!

என்று தொடங்கும் கவிதை,

'இரசாயன் வாயுக்களை
இரகசியமாய்ப் புதைப்பதற்கு
வானத்து வெளிகளையா
வாடகைக்கு எடுத்தீர்கள்?

அமில மழை பொழிந்து
பயிரெல்லாம் அழிகிறதே
ஒரு கணமாவது இந்த
உழவர்களின் உழைப்பை
எண்ணிப்பார்த்தீர்களா?

நன்னீர் வாவிகளில்
நஞ்சைக்கலக்கிறீர்களே
ஏற்கனவே
செத்துப்போன மீன்களை நம்பியா
இந்த மீனவர்கள் வாழ்வது?

மாரிக் காடுகளை
மாளச் செய்கிறீர்களே
அருகிவரும் உயிரினங்கள் உங்கள்
அறிவுக்கு எட்டவில்லையா?

இவ்விதமாகச் சூழலின் அழிவினைப்பட்டியலிடும் கவிதை,

தொழில் வளர்ச்சியின் அவசியத்தை, அவை வழங்கும் வேலை வாய்ப்புகளை வரவேற்கும் அதே சமயம் கவிதை, சூழல் பாதிப்புறாவண்ணம் தொழில் வளர்ச்சியானது முன்னெடுக்கப்படுவது அவசியமென்பதை வலியுறுத்தி முடிவுறுகிறது.

தொகுப்பின் முக்கிய கவிதைகளாக 'இறைவனைக் கண்டால்..', 'ஒரு வழிப்போக்கனின் கவிதை' ஆகியவற்றைக்குறிப்பிடுவேன். 'இறைவனைக்கண்டால்...' கவிதை நீண்டதொரு கவிதை. இறைவன் கண் எதிரில் எதிர்ப்பட்டால் கவிஞர் எவற்றையெல்லாம் கேட்பாரோ அவற்றையெல்லாம் பட்டிலிடுகிறது கவிதை.

இனியொரு புதிய உலகினைக் கேட்பேன்.
உலகம் முழுவதும் ஒரே மொழி கேட்பேன்.
எல்லைகள் அற்ற நாடுகள் கேட்பேன்.
எதிரிகள் இல்லா இனங்களைக் கேட்பேன்.

சமத்துவ நெறியில் அரசொன்று கேட்பேன்.
சட்டங்களில்லா நீதியைக் கேட்பேன்.
போர்க்குணமற்ற தலைவர்கள் கேட்பேன்.
பாராளுவதிலும் பெருந்தன்மை கேட்பேன்.

இவ்விதமாகத் தொடரும் கவிதையில் மேற்படி கவிதைத்தொகுப்பில் வெளிப்படும் பல அம்சங்களும் வெளிப்பட்டிருப்பது இக்கவிதையின் சிறப்பென்பேன். முக்கியமாக சூழல் பாதுகாப்பின் அவசியம், உழைக்கும் மக்களின் உரிமை, தமிழர்களின் உரிமைப்போர் எனப்பல்வேறு விடயங்களையும் எடுத்துரைத்து அவற்றுக்காகக் குரல் கொடுக்கும். உதாரணத்துக்குக் கீழுள்ள வரிகளைக் குறிப்பிடலாம்:

ஓசோன் உலகைக்காத்திடக் கேட்பேன்.
அழுக்கு வாய்வுகள் அழிந்திடக் கேட்பேன்.
சூழலின் தூய்மை போற்றிடக் கேட்பேன்.
சேற்றினைக் கழிப்போர் கற்றிடக் கேட்பேன்.

உழைக்கும் மக்கள் உரிமைகள் கேட்பேன்.
உண்டு களிப்போர் உணர்ந்திடக் கேட்பேன்.
பாட்டாளிவர்க்கம் இணைந்திடக் கேட்பேன்.
பாரினில் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.

தமிழருக்கென்றோரு நிலமொன்று கேட்பேன்.
நிலத்தினில் ஒற்றுமை நிலவிடக் கேட்பேன்.
போரினில் நாட்டம் போய்விடக் கேட்பேன்.
புரிந்துணர் நெஞ்சுடன் பேசிடக் கேட்பேன்.

இவ்விதமாகத்தொடரும் கவிதை மானுடம் மதிக்கும் மனிதர்கள் கேட்பேன்' என்று முடிவுறுகிறது. தொகுப்பின் நல்லதொரு கவிதையிது. இக்கவிதை எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச்சித்தன்' கவிதையினை ஞாபகமூட்டியது.  அக்கவிதையில் இங்கு கவிஞர் வேண்டும் உலகினையொத்த எதிர்கால உலகொன்றிலிருந்து காலம் தாண்டி இவ்வுலகுக்கு வந்திருந்த எதிர்காலச்சித்தன் தன்து உலகு பற்றி விபரிப்பான். தேன்மொழி சஞ்சிகையில் வெளியான அ.ந.க.வின் நீண்ட் கவிதைகளிலொன்று; ஈழத்துத் தமிழ்க்கவிதைகளில் முக்கியமான கவிதைகளிலொன்று அது.

'ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' தொகுப்பின் அட்டைப்படக்கவிதை. பெளத்தர்கள் நிறைந்த நாடான இலங்கையில் தமிழர்கள் அடையும் இன்னல்களை விபரித்து, புத்தரிடமே நீதி கேட்கும் கவிதை.

'உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
சொல்லையும் புதைத்து விட்டார்கள்'

உன்மீது
அரசியல் சாயம் பூசப்பட்டதால்
உனது
உபதேசங்களும்
அரசியலாகி விட்டன.

நீ அரச பதவியைத்துறந்து
துறவறம் பூண்டாய்.
ஆனால் இங்கே
துறவறம் பூண்டவர்கள்தான்
அரசியலை நடத்துகின்றார்கள்.

போன்ற கவிதை வரிகள் ஆணித்தரமாக நெஞ்சில் அறைகின்றன.

கவிதைகளில் எழுபதுகளில் ஆதிக்கம் செலுத்திய வானம்பாடிக்கவிஞர்களின் தாக்கம் இருப்பதும் தெரிகிறது. உதாரணத்துக்கு

உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
சொல்லையும் புதைத்து விட்டார்கள்

என்னும் வரிகளை எடுத்துக்காட்டலாம். மொத்தத்தில் சிந்திக்கவும், சுவைக்கவும் ஏற்றதொரு தொகுப்பாக மிளிர்ந்திருக்கிறது வளரி பதிப்பக வெளியீடான ராஜாஜி ராஜகோபாலனின் 'ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்'.