வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய வேண்டுமானால் இதுவரையில் கனடாவில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், இணைய இதழ்கள், கையெழுத்துச்சஞ்சிகைகள் போன்றவற்றைப்பற்றிய முழு விபரங்களும் அறியப்பட்டு அவை பற்றி மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யாமல் பொதுவாக அறிந்த விடயங்களை மையமாக வைத்துக் கட்டுரைகள் எழுதுவது உண்மை நிலையினை எடுத்துக்காட்டுவதாக அமையாது. கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய விரும்புபவர்களுக்குப் 'படிப்பகம்' மற்றும் 'நூலகம்' இணையத்தளங்கள் நல்லதோர் ஆரம்பமாக அமையுமென்பதென் எண்ணம். ஏனெனில் மேற்படி இணையத்தளங்களில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், ஈழத்தில் வெளியான சஞ்சிகைகள் போன்ற பலவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; வருகின்றார்கள். இவை பற்றிய முழுமையான ஆவணக்காப்பகங்களாக மேற்படி தளங்களைக்கூற முடியாவிட்டாலும், இயலுமானவரையில் கிடைத்தவற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். உதாரணமாகக் கனடாவிலிருந்து வெளியான பின்வரும் ஊடகங்களைப்பற்றிய பதிவுகளை 'படிப்பகம்' இணையத்தளத்தில் காணலாம்:

1. தாயகம் (கனடா) - 50 இதழ்கள்
2. நான்காவது பரிமாணம் (கனடா) - 10 இதழ்கள்
3. தேடல் (கனடா) - 14 இதழ்கள்
3. ழகரம் (கனடா) - 4 இதழ்கள்
4. காலம் (கனடா) - 31 இதழ்கள்
5. நுட்பம் (கனடா) - 1 இதழ்

6. தமிழர் தகவல் (கனடா) - 14 இதழ்கள்
7. வியூகம் (கனடா) - 2 இதழ்கள்
8. புன்னகை மலர் (கனடா) - 1 இதழ்
10. வானவில் (கனடா) - 26 இதழ்கள்
11. உரைமொழிவு (கனடா) - 3 இதழ்கள்
12. பார்வை (கனடா) - 7 இதழ்கள்

.வைகறை (கனடா)  பத்திரிகையின் 169 பிரதிகளை தாய்வீடு பத்திரிகையின் 31 பிரதிகளை 'நூலகம்' தளத்தில் சென்று பார்க்கலாம். இவை இணையத்தில் பதிவு செய்யப்பட்டவை. கனடாத்தமிழ் இலக்கியம் பற்றி அறிய விழைவோருக்கு நல்லதொரு வரப்பிரசாதம்.

மேற்படி 'நூலகம்', 'படிப்பகம்' இணையத்தளங்களில் கனடாவில் வெளிவந்த அத்தனை பத்திரிகைகள், சஞ்சிகைகளும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ப்பட்டவற்றிலும் இதுவரை காலமும் வெளிவந்த அத்தனை பத்திரிகைகள், சஞ்சிகைகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதைக்கவனிக்க. உதாரணமாக தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாகவும், பின்னர் சஞ்சிகையாகவும் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்'வை ஆசிரியராகக்கொண்டு சுமார் ஐந்து வருடங்கள் வரையில் வெளிவந்தது. ஆனால் படிப்பகத்தில் 50 பிரதிகள் மட்டுமேயுள்ளன. எழுத்தாளர் தேவகாந்தன் ஆண்டதோறும் வெளியிடும் 'கூர்' இலக்கிய மலரை மேற்படி இணையத்தளங்களில் காணவில்லை.

இவற்றை வெளியிட்டவர்கள் வெளியான அனைத்து இதழ்களையும்பற்றிய விபரங்களை, அல்லது அனைத்தையும் இணையத்தில் ஆவணப்படுத்த வேண்டும். இவ்விதமான ஊடகங்கள் பற்றிய விபரங்களை அவற்றில் எழுதியவர்களும் மறைக்காமல் அதாவது இருட்டடிப்பு செய்யாமல் தாம் எழுதும் கட்டுரைகளில் பதிவு செய்யவேண்டும்.

இதே சமயம் கனடாவில் வாழும் எழுத்தாளர்களினால் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு எனப்பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில நூலகம் இணையத்தளத்திலுள்ளன. அவை பற்றிய விபரங்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இதே சமயம் கனடாவில் பல்வேறு இலவச /விளம்பரப்பத்திரிகைகள் (உதயன், செந்தாமரை, ஈழநாடு போன்ற) வெளிவந்திருக்கின்றன;  வெளிவருகின்றன. அவற்றிலும் பல சிறுகதைகள், தொடர்கதைகள் வெளிவந்திருக்கின்றன; வெளிவருகின்றன. அவை பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

கனடிய எழுத்தாளர்கள் பலருக்கு ஒரு வியாதி. அது ஞாபக மறதி வியாதி :-). இவ்விதமான ஊடகங்களில் எழுதிய பலர் அவ்வப்போது ஊடகங்கள் பற்றி கட்டுரைகள் எழுதுவார்கள். ஆனால் அச்சமயங்களில் மட்டும் அவர்களில் பலருக்குத் தாம் எழுதிய ஊடகங்களின் பெயர்கள் மறந்து போய் விடுவது வழக்கம். மூத்த எழுத்தாளர்களிலிருந்து இளையவர்கள் வரை இந்த வியாதிக்கு ஆட்பட்டவர்கள் பலரிருக்கின்றார்கள். கனடாவில் வசிக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரொருவர் 'பதிவுகள்' இணைய இதழில் தமது ஆக்கங்களைப் பங்களிப்பு செய்திருக்கின்றார். ஒரு முறை காலச்சுவடு இதழ் கணித்தமிழ் சிறப்பிதழினை வெளியிட்டபோது இணைய இதழ்கள் பற்றிக்குறிப்பிட்டு அவர் எழுதிய கட்டுரையில் 'பதிவுகள்' இதழினை மட்டும் மறந்து விட்டார். அக்கட்டுரையினை எழுதிய சமயம் பார்த்து அவரை இந்த ஞாபகமறதி வியாதி பிடித்துக்கொண்டு விட்டது போலும். ஆனால் பதிவுகள் இணைய இதழில் எழுதாத எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது கட்டுரையில் மறக்காமல் 'பதிவுகள்' இணைய இதழினையும் குறிப்பிட்டிருந்தார். வேறு சிலர் 'பதிவுகள்' இணைய இதழின் நிகழ்வுகள் பகுதிக்குத் தமது நூல் வெளியீடுகள் பற்றிய குறிப்புகளை அனுப்புவார்கள். ஆனால் மேற்படி நிகழ்வுகளில் எல்லாருக்கும் நன்றி கூறுவார்கள் 'பதிவுகள்' இதழைத்தவிர. அச்சமயம் பார்த்து  அவர்களில் பலரை இந்தப் பாழாய்ப்போன ஞாபகமறதி வியாதி வந்து பீடித்துவிடும் :-)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.