வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் .....

இன்று கவிதைகளை எழுதித் தள்ளுகின்றார்கள் பலர். நூற்றுக்கணக்கில் கவிஞர்களும், அவர்கள்தம் நூல்களும் வெளிவருகின்றன. கவிதைகளைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்களெல்லாரும் கவிதைகளைத் தொகுத்து தொகுப்புகளை வெளியிடுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் இவ்விதம் கவிதைகளை எழுதித் தள்ளுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குக் கவிதை பரிணாமமடைந்து விட்டது. இனி ஒன்றைபற்றியும் கவலைப்படத்தேவையில்லை.' இவ்விதம் எண்ணிக்கொண்டு எழுதித்தள்ளூகின்றார்கள். இவர்களது கவிதைகளை முறிக்காமல் எழுதி விட்டு வாசித்துப் பாருங்கள்.  அவை கவிதைகளல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்களெல்லாரும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதையிலிருந்து கவிதையானது புதுக்கவிதைக்கு மாறிவிட்டது உண்மைதான். ஆனால் கவிதையானது தனது அடிப்படைத் தன்மைகளிலிருந்து மாறிவிடவில்லை என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். கவிதை மரபுக் கவிதையோ அல்லது மரபு மீறிய நவீன கவிதையோ கவிதையாக இருக்க வேண்டும். அது கவிதையாக இருப்பதற்கு கவிதையில் பாவிக்கப்படும் மொழி முக்கியம். மரபுக் கவிதையில் மட்டுமல்ல மரபினை மீறிய நவீன கவிதையிலும் ஓசை நயமுண்டு. உதாரணமாகச் சேரனின் ஒரு கவிதையினை எடுத்துப் பார்ப்போம்:

 இரண்டாவது சூரிய உதயம்

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே -

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.

இந்தக் கவிதையின் ஓசை நயத்தை அதிகரிப்பவை எவையென்று பார்ப்பதற்குக் கவிதையில் கையாளப்பட்டுள்ள மொழியினைப் பார்க்க வேண்டும். அப்படிப பார்த்தால் பின்வரும் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

கவிதையின்

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

என்னும் வரிகளைப் பார்ப்போம்.

1. காற்றே - ஈரசைச் சீர் தேமா
2. இல்லை - ஈரசைச் சீர் தேமா
3. மணலில் - ஈரசைச் சீர் புளிமா
4. எழாது - ஈரசைச் சீர் புளிமா
5. செத்துப் - ஈரசைச் சீர் தேமா

அன்றைக்கு - மூவசைச்சீர் தேமாங்காய்
போயிற்று - மூவசைச் சீர் தேமாங்காய்

கடல் - நிரை அசைச்சீர் (ஓரசை)

இங்கு அதிகமான ஆசிரிய உரிச்சீர்கள் தேமா, புளிமா ஆகியன பாவிக்கப்பட்டுள்ளன.  இது போல் முழுக் கவிதையினையும் பார்த்தால் இக்கவிதையில் அதிகமாகப் பாவிக்கப்பட்டிருப்பவை ஆசிரிய உரிச் சீர்களே. மூவசை, நாலசை மற்றும் ஓரசைச் சீர்களும் ஆங்காங்கே பாவிக்கப்பட்டிருந்தாலும் அதிகமாகப் பாவிக்கப்பட்டிருப்பவை அகவற் சீர்களே. அதிகமாக அகவற் சீர்கள் பாவிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையில் அகவலோசையின் ஆதிக்கம் அதிகமென்று கூறலாமென்று நினைக்கின்றேன்.

அடுத்தது கவிதையின் வரிகளை இன்னுமொரு கோணத்தில் பார்ப்போம்:

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று

இங்கு முதலிரு வரிகளும் அ என்னும் எழுத்தில் தொடங்குகின்றன. அதனால் மோனையில் ஒத்திருக்கின்றன.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

என்னும் வரிகளைப் பார்த்தால் முதல் வரியான மணலில் மூன்றாவது வரியான மறுபடியும் உடன் மோனையில் ஒத்துப் போகின்றன.

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

என்னும் வரிகளைப் பாருங்கள். இங்கும் முதல் ஐந்து வரிகளும் எ என்னும் எழுத்தில் தொடங்குவதால் மோனையில் ஒத்துப் போகின்றன. இரண்டாவது வரியில் எனது நகரம் எரிக்கப்பட்டது என்று வருவதால், அங்கும் எனது, எரிக்கப்பட்டது ஆகிய சொற்கள் மோனையில் ஒத்திருக்கின்றன. மூன்றாவது வரியில் எனது நிலம், எனது காற்று என்று வருவதால் அங்கும் மோனையில் ஒத்திருக்கின்றன. எனது காற்று என்பதை அடுத்த வரியாக எழுதியிருக்கலாம். அடுத்து இன்னுமொன்றினையும் கவனிக்கலாம். அது என்ன, எனது எல்லாம் ஈரசைச் சீர்கள். இது போல் எனைய வரிகளையும் ஆராய்ந்து பார்க்கலாம்.

இக்கவிதை சிறப்புற்றிருப்பதற்குக் காரணம் இக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், அவற்றின் சீரளவு, மற்றும் மோனையில் ஒன்றியுள்ள சொற்கள் எனலாம்.

இந்தக் கவிதை வரிகளை எப்படித்தான் நீங்கள் பிரித்தோ அல்லது சேர்த்தோ எழுதினாலும், இதனை வாசிக்கும்போது ஏற்படும் ஓசை நயமோ அல்லது ஏற்படுத்தும் உணர்வோ குறைந்து போய்விடுவதில்லை. இக்கவிதை ஒரு மரபுக் கவிதையல்ல. ஆனால் மரபுக் கவிதை பற்றி  நன்கு புரிந்துள்ள ஒருவர் எழுதும் கவிதையில் இவ்விதம் சொற்கள் அவரை அறியாமலேயே வந்து விழலாம். நல்லதொரு கவிதையாக அவை உருவெடுக்கலாம்.

ஒரு கவிதை நல்ல கவிதையா அல்லது இல்லையா என்பதற்கு அதன் வரிகளை உடைத்துச் சேர்த்து எழுதிவிட்டு வாசித்துப் பார்த்தால் புரியும். நல்ல கவிதையானது எப்படி வரிகளைச் சேர்த்தோ, பிரித்தோ எழுதினாலும் அதன் கவித்துவச் சிறப்பினை இழந்துவிடுவதில்லை.

கவிஞர்கள் ஏன் மரபுக் கவிதையிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென்பதற்கு இக்கவிதையோர் உதாரணம். அவ்விதமான பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களால்தான் இதுபோன்ற மரபு மீறிய கவிதைகளை எழுத முடியும். மற்றவர்களால் வெறும் வெற்று வரிகளைத்தாம் எழுத முடியும்; கவிதைகளை அல்ல.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.