magazine_nutpam1981ab.jpg - 34.65 Kbமொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 1980/1981 ஆண்டுக்கான செயற்குழுவில் , சங்கம் வருடா வருடம் வெளியிடும் 'நுட்பம்' சஞ்சிகைக்கான இதழாசிரியர் குழுத் தலைவராக நானிருந்தேன்.  இதழாசிரியர் குழுவில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சு.வித்தியானந்தன், கட்டடக்கலைப் பீடத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் ஆகியோரிருந்தனர்.

"ஒரு நாள் வரும்.
எழுதுகோல் நிற்கும்.
பின் கைகள் ஆயுதங்களைத் தாங்கும்.
இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு
இட்டுச் செல்லும்" - Jean Paul Satre

என்னும் சார்த்தரின் கூற்று முதல் பக்கத்தில் தமிழ்ச்சங்க இலச்சினையுடனிருக்கும். மேற்படி சஞ்சிகை நல்ல முறையில் வெளிவரப் பெரிதும் உதவியவர்கள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரே. மேற்படி சஞ்சிகையின் அட்டைப்படத்தினை வரைந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் குணசிங்கம். ஓவியத்திலிருக்கும் ஆண்டினை உற்றுக் கவனித்தீர்களென்றால் அது ஒருவிதத்தில் 1980 ஆகவும், இன்னொரு விதத்தில் 1981 ஆகவுமிருக்கும். 1980 / 1981 நடப்பாண்டுச் செயற்குழுவின் வெளியீடு என்பதால் 'நுட்பம்' இதழின் அட்டைப்பட ஓவியத்தில் ஓவியர் காட்டிய நுட்பம் அது. சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் வருமாறு:

1. ஆசிரியத் தலையங்கம்: இதழாசிரியர் எண்ணத்திலிருந்து...
2. கட்டுரை: பாரம்பரிய, நவீன தொழில் நுட்பங்களுக்கிடையிலான சில முரண்பாடுகள். - அ.சந்திரஹாசன் 3. கவிதை: கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்.
4. கட்டுரை (மீள்பிரசுரம்): நான் ஏன் எழுதுகிறேன்? - அமரர் அ.ந.கந்தசாமி
5. கட்டுரை: பேராசிரியர் சரத்சந்திராவும், தேசிய நாடகமும் - எம்.எஸ்.எம்.அனஸ்
6. சிறுகதை: இரா. ரவி ஆனந்தன்
7. கட்டுரை: அபிவிருத்திக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம் - பேராசிரியர் க.கைலாசபதி.
8. கட்டுரை: தமிழ்ப் பகுதிகளுள் பழமையின் சின்னங்களும் அவை பேணப்படுதலின் அவசியமும் - வ.ந.கிரிதரன்
9. கட்டுரை: தமிழ் நாவலும், புனை கதை மொழியும் - எம்.ஏ.நுஃமான்
10. கட்டுரை: இலங்கையின் புகையிரத சேவையை மின்மயமாக்கல் - ஆ.ஶ்ரீகணேஸ்குமார்
11. கவிதை: உலகம் எனக்காக விடிந்து கிடந்தது - காலைக்கவிஞன்
12. கட்டுரை: ஈழத்துக் கிறிஸ்தவ கிராமிய நாடகங்கள் - கலாநிதி இ.பாலசுந்தரம்
13. கவிதை" வன்னி மண்ணில் வசந்தம் - மூர்த்தி
14. தேடி எடுத்த கதை: பொன்னகரம் - புதுமைப்பித்தன்
15. கட்டுரை: இலங்கையில் கனிப்பொருள் வளங்கள் - இ. இராஜாராம்
16. கட்டுரை: மட்டுநகரின் 'ராஜா ராணி மந்திரி வீடும்' மக்களின் நுகர்வும் - அரண் மைந்தன்
17. கட்டுரை: கதகளி - 'இயலிசை வாரிதி' பிரம்மஶ்ரீ ந.வீரமணி ஐயர்
18. கட்டுரை: யுகராகங்கள் மீட்டப்பட்டால்... மலைநாட்டு இந்திய சமூகம் பற்றியதோர் வரலாற்று நோக்கு - இரா.சடகோபன்
19. சிறுகதை: 'எதிர்பார்ப்புகள்' - தாமரைச்செல்வி
20. கட்டுரை: ஆக்கத்திற்கு ஓர் அணுசக்தி - இ.அறிவழகன்
21. கட்டுரை: ஆனந்தக் குமாரசுவாமியின் நோக்கில் இந்துக்கலை மரபு - ஒரு வரலாற்று நோக்கு - மல்லிகா கனகரத்தினம்
22. சிறுகதை: தந்தை ஒரு ... அ.க.விசாகமூர்த்தி
23. அநுபந்தம் : இந்த அநுபந்தத்தில் நாங்கள் விவசாயிகள், வாகனம் திருத்துபவர்கள், போன்ற உழைப்பாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரிடம் அன்றைய காலகட்ட சமூக, அரசியல் நிகழ்வுகள் பற்றிய கருத்துகளைக் கேட்டு வெளியிட்டிருந்தோம்.

இடையிடையே கவிஞன் வால்ட் விட்மன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மார்க்சிம் கார்க்கி, வெங்கட்சாமிநாதன், நா.பார்த்தசாரதி போன்றோரின் கலை, இலக்கியம் பற்றிய கூற்றுகளும், இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகத்திலிருந்து சில வரிகளும் வெளியாகியிருந்தன.

மேற்படி இதழில் 'இலங்கையில் கனிப்பொருள் வளங்கள்' கட்டுரையினை எழுதிய இ. இராஜாராம் மலையகத்தைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகக் காலகட்டத்தில் நாங்கள் தங்கியிருந்த சிங்களவர் ஒருவரின் வீட்டில் எங்களுடன் தங்கியிருந்தவர். நீண்ட காலமாகக் காதலித்தவரையே , பொறியியல் துறையில் பட்டத்தினைப் பெற்றபின்னர் திருமணம் செய்தவர். இவர் 1983 இனக்கலவரத்தில் களுபோவிலையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர்தான், காலி வீதியில் , பஸ்ஸொன்றில் நீண்ட நாட்களின் பின் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு இழைக்காத சுபாவம் மிக்கவர்.

இந்த நுட்பம் இதழ் எனக்குப் பலரை அறிமுகம் செய்திருந்தது. கலாநிதி க.கைலாசபதி, விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், ராஜினி திரணகம போன்றோரின் அறிமுகம் கிடைத்தது இந்தச் சஞ்சிகை மூலம்தான்.

இந்த நுட்பம் இதழில் மீள்பிரசுரமாகியிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' கட்டுரை அ.ந.க. பற்றிய ஆய்வுகள் பலவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி க.கைலாசபதி அவர்கள் 'நுட்பம்' சஞ்சிகை கிடைத்ததும் சிறு கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.