தவளைக் கவிதை

- பிரமிள் -

பிரமிள்தனக்கு புத்தி
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

மேற்படி பிரமிளின் 'தவளைக்கவிதை' பற்றி எழுத்தாளர் கற்சுறா அண்மையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வொன்றில் கவிதை பற்றி ஆற்றிய உரையினை உள்ளடக்கிய காணொளியொன்றினை முகநூற் பக்கத்தில் பார்க்க, கேட்க முடிந்தது. மேற்படி தனது உரையில் கற்சுறா மேற்படி கவிதை பற்றிக் குறிப்பிடும்போது ஆரம்பத்தில் தனக்கு, தனக்கு என்று கூறியவர் பின்னர் எனக்கு என்று கூறுவதை முக்கியதொரு விடயமாகக் கருதுகின்றார். அதற்கேதாவது முக்கிய காரணமிருக்கக் கூடுமோ என்று ஆராய்கின்றார்.  முதலிரு தடவைகள் தனக்கு, தனக்கு என்பதைப் படர்க்கையில் கூறியிருக்கின்றார். எனக்கு என்று கூறும்போது தவளையில் கூற்றாக 'எனக்கு..' என்று கூறியிருக்கின்றார். இதுவும் தனக்கு புத்தி ஒன்றே என்றது  தவளை என்பதும் ஒன்றே. இதற்கு மறைமுக அர்த்தம் ஏதாவதிருக்கக் கூடுமோ என்று கருதத்தேவையில்லை என்பதென் புரிதல்.

பிரமிள்நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால்,  அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா?  ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது),  மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்.

நூறு புத்தரே!
கோர்த்தரே!

நூறு புத்தியுள்ளதால் நூறு புத்தரே என்றார்.

ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!

ஆயிரம் புத்தியுள்ளதால், ஆயிரம் புத்தரே என்றார். இவ்விதம் ஆயிரம் புத்தி என்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி, கல்லை ஏற்றியதும் அதன் ஆட்டம் சரி. அதனால்

ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே
!

என்றார்.

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

எழுத்தாளரின் கட்டுப்பாட்டுக்குள் அகப்படாமல், தத்தித் தத்திச் செல்வதால், ஒரு புத்தியுள்ள தவளைக் கவிதையினை

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

என்றார்.

பிரமிள்கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள்  புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி 'தவளைக்கவிதை' என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, 'நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.' என்று சாடுகின்றார் பிரமிள். இவ்விதமாக பொழியப்படும் கவிதைகளை மேற்படி காணொளியில் எழுத்தாளர் கற்சுறாவும் சாடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்

எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

என்று கவிதையின் ஆரம்பத்தில் கூறிய பிரமிள் இறுதியில்

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

என்கின்றார். 'ஒரு புத்தி என்றது தவளை. அதாவது கவிதை. அதனைக் கையாளத் தெரியாத தத்துக்குட்டிகள் இவர்கள். யார்? ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் 'தவளைக் கவிதை' என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?

மேற்படி தனது உரையில் கற்சுறா புத்தரே என்பது புதுமைப்பித்தனையும், தத்தரே என்பது தத்துவமேதை கிருஷ்ணமூர்த்தியினைப் பற்றியதாகவுமிருக்குமோ என்று சந்தேகமொன்றினை எழுப்பியிருப்பார். அது அவரது புரிதலென்றால், அதில் நான் தலையிட  முடியாது. ஏனெனில் ஒரு படைப்பானது படைக்கப்பட்டதுமே அதன் ஆசிரியர் இறந்துவிட்டாரென்றும் கருத்தொன்று நவீன இலக்கியத்தில் நிலவுகின்றதல்லவா? அதன்படி ஒரு படைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருவரும் ஒரே மாதிரிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடோ, தேவையோ இல்லையல்லவா? ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கேற்ப ஒவ்வொருவகையில் விளங்கிக்கொள்ளலாம். ஒரு படைப்புக்கு இவ்விதமாகப் பல புரிதல்கள் இருக்கலாம். ஆனால் என் புரிதல் இது. அவ்வளவே. இந்தப் புரிதல்கூட இன்னுமொரு சமயம் இன்னுமொரு புரிதலாகப் பரிணாமம் அடையலாம். அதற்கான சாத்தியமும் உண்டு.

கனடா இலக்கியவானில் அண்மைக்காலமாகத்தான் கற்சுறாவின் உரைகளைப் போல், படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இது ஆரோக்கியமான அறிகுறி. இதுபோன்ற கருத்தரங்குகளும், திறனாய்வுகளும் தொடரட்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.