மீராபாரதிநண்பர் மீராபாரதியின் 'பிரக்ஞை' அண்மையில் வாசித்தேன். தமிழில் இதுபோன்ற நூல்களை எழுதுபவர்கள் ஆன்மிக அடிப்படையில் எழுதுவார்கள். அறிவியலை மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள். மீராபாரதி இந்தத் தவறினைச் செய்யவில்லை. மேற்படி நூலில் பிரக்ஞை பற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மீராபாரதி பிரக்ஞையினை அணுகியிருக்கின்றார். அவ்வப்போது பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களையும் குறிப்பிட்டிருப்பார். எதிர்காலத்தில் பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களின் அடிப்படையிலான நூலொன்றினை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி நூலில் ஒரு விடயம்தான் எனக்குச் சிறிது நெருடலாக இருக்கிறது. சிந்திக்கும் மனதை, உணர்வுள்ள மனதை பிரக்ஞை என்போம். அதனை நனவு மனமென்றும் கூறுவர். உளவியல் அறிஞர்களின் ஆய்வுகளின்படி மனித மனமானது இரு தளங்களை உள்ளடக்கியுள்ளது. சிந்திக்கும் மனம் (Conscious Mind), சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் (Unconscious Mind). இவ்விதமான மனதின் பிரிவுகளை மீராபாரதி முறையே பிரக்ஞை என்றும், பிரக்ஞையின்மை என்றும் குறிப்பிடுகின்றார். பிரக்ஞை என்பது சிந்திக்கும், உணரும் மனம் என்றால் (Conscious Mind), பிரக்ஞையின்மை என்பது சிந்திக்கும் மனம் அற்ற என்றுதான் பொருள்படும். அவ்விதம்தான் ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்வார். இதனை மீராபாரதியும் புரிந்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் அதுபற்றிய விளக்கமொன்றினையும் மேற்படி நூலின் பக்கம் 61இல் கீழ்வருமாறு தருகின்றார்:

" பிரக்ஞையின்மை தொடர்பாக எதிர்மறையான அல்லது தவறான கருத்தும் நிலவுகின்றது. அதாவது பிரக்ஞையின்மை என்பது பிரக்ஞை-அற்ற (Non - Consciousness) நிலை என்கின்ற நிலைப்பாடே அது. இது ஒரு தவறான புரிதலே. ஏனெனில் பிரக்ஞை அற்ற தன்மை என்பது பிரக்ஞை என்ற ஒன்று இல்லை என்பதைக் குறிப்பதாகும்."

இவ்விதம் மீராபாரதி விளக்கம் தருவதற்கு நிர்ப்பந்தம் எதனால் ஏற்பட்டது? பிரக்ஞையின்மை என்று Uncosciousness என்னும் ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்த்திருப்பதால்தான். இதற்குப் பதில் மிகவும் இலகுவாக இன்னுமொரு அழகான தமிழ்ச் சொல்லை அவர் பாவித்திருக்கலாம். [இவ்விதமாகப் பிரக்ஞையின்மை என்னும் சொல்லினை Unconsciousness என்னும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாகப் பாவிப்பதால் 'மனிதர்கள் பிரக்ஞையின்மையாகவே பெரும்பாலான நேரங்களில் வாழ்கின்றனர்.(பக்கம் 2) போன்ற வசனங்கள் வாசிக்கும் ஒருவருக்குப் பொருள்மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதற்குப் பதில் 'மனிதர்கள் நனவிலிமனதின் ஆதிக்கத்தின் கீழேயே பெரும்பாலான நேரங்களில் வாழ்கின்றனர்' என்றிருந்தால் வாசிப்பவர் மிகவும் இலகுவாக விளங்கிக்கொள்வாரல்லவா?]

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி மேற்படி இருவிதமான மனதின் பிரிவுகளையும் தனது 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் உளவியல் நூலில் (தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல்) நனவு மனம் (Concious Mind) , நனவிலி மனம் (Unconscious Mind) என்று அழைத்திருப்பார். மேற்படி நனவு மனம், நனவிலி மனம் என்னும் சொற்களை வேறு யாராவது 1966ற்கு முன்னர் பாவித்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை. அது ஆய்வுக்குரிய விடயம். நூலாசிரியர் பிரக்ஞை மற்றும் பிரக்ஞையின்மை என்னும் சொற்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படும் பொருட் குழப்பங்கள் நனவு மனம், நனவிலி மனம் போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலம் தவிர்த்திருக்கலாம்.

நண்பர் பாரதிமோகனை சமூக, அரசியற் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள, தீவிரமாக ஈடுபட்ட ஒருவராகவே முதலில் அறிந்துகொண்டேன். தந்தையார் கரவை கந்தசாமியைப் போல் மிகுந்த தேடுதலும், வாசிப்பனுபவும் மிக்க அவர் தனது அனுபவங்களினூடு மீராபாரதியாக மலர்ந்துள்ளார். மேற்படி 'பிரக்ஞை' நூலின் முன்னுரையில் "..ஆனால் பிரக்ஞை தொடர்பான புதிய புரிதலானது , அரசியலில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்வதற்கான ஒரு காரணமாகியது." என்று குறிப்பிடுகின்றார். அதனை என்னால் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரக்ஞை பற்றிய புரிதலானது ஒருவரை எந்தத் தொழிலினைச் செய்தாலும், அதனை நன்கு செய்வதற்கு உதவுமொன்றாகவே நான் பார்க்கின்றேன். பிரக்ஞை பற்றிய அறிதலும், புரிதலும் ஒருவருக்கு அவர் செய்யும் தொழிலினைச் சிறப்பாகச் செய்வதற்கு நிச்சயமாக உதவுமொன்றாகவே நான் பார்க்கின்றேன். மீராபாரதியே பக்கம் 176இல் கூறுவதுபோல் 'ஆழமான அறிதல் அழகான ஆனந்தமான வாழ்க்கைக்கு அடித்தள'மல்லவா?