வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' மாத இதழின் 22வது ஆண்டு மலரை அண்மையில் வாசிக்க முடிந்தது. அந்த மலரைப் பற்றிய விமர்சனமல்ல இது. அதில் வெளிவந்திருந்த இரு கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளே இநத என் எண்ணப்பதிவு. பொன்னையா விவேகானந்தன் 'கனடியத் தமிழர் வாழ்வும் வளமும்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரையின் தலைப்பு இதே தலைப்பில் தமிழகத்திலிருந்து ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் நான் எழுதிய கட்டுரையான 'கனடாத் தமிழர் வாழ்வும் வளமும்' என்னும் கட்டுரையின் தலைப்பினையே எனக்கு ஞாபகப்படுத்தியது  மேற்படி எனது கட்டுரையினைக் கனடாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேடும் சில வருடங்களுக்கு முன் தனது கையேட்டில் மீள் பிரசுரம் செய்திருந்தது. இது போன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் ஏற்கனவே அத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்திருந்தால் இயலுமானவரையிலும் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. மேற்படி மலரில் கலாநிதி இ.பாலசுந்தரம் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை பற்றிய சில கருத்துகளே எனது இந்தப் பதிவு.

'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்பதற்குப் பதில் 'கனடிய மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்றிருந்தால் இன்னும் பொருத்தமானதாகவிருக்கும். அக்கட்டுரையில் கனடாவிலிருந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், வெளியான நூல்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருக்கின்றார். இதுபோனற கட்டுரைகள் பலவற்றை எழுதுபவர்கள் மறப்பதுபோல் இவரும் பலவற்றை மறந்திருக்கின்றார். இருந்தாலும் அவர் அவ்வாறு மறந்தவற்றில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவது பயனுள்ளதென்பதால் அவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.

கனடாவில் ஆரம்பத்தில் வெளியான கையெழுத்துச் சஞ்சிகைகளில் மான்ரியாலிலிருந்து 1984,1985 கால கட்டப் பகுதியில் வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையினையும் குறிப்பிடவேண்டும். அதுவொரு அரசியல் அமைப்பொன்றின் சஞ்சிகையானாலும் இதில் பலரது ஆக்கங்கள் வெளியாகியிருந்தன. எனது 'மண்ணின் குரல்' நாவல், கட்டுரைகள், கவிதைகள் சிலவும் இதில் அன்றைய காலகட்டத்தில் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'மண்ணின் குரல்' என்னும் நூலாக 'மங்கை பதிப்பகம்' சார்பாகக் கனடாவில் நூலுருப்பெற்றுள்ளது. இந்த நாவலே கனடாவின் முதல் வெளியான முதல் நாவல் என்று நினைக்கின்றேன். 4.1.1987இல் வெளியான நூலுருப்பெற்ற நாவலிது. இதன் பின்னர் 1994இல் 'மங்கை பதிப்பகம்' வெளியீடாக எனது 'எழுக அதிமானுடா' என்றொரு கவிதைத் தொகுதி வெளியானது. பின்னர் 1996இல் மங்கை பதிப்பகமும் , ஸ்நேகா (தமிழகமும்) இணைந்து 'அமெரிக்கா' (நாவலும் சிறுகதைகளும்), 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு நூல்) ஆகியவை 1996இலும், மங்கை பதிப்பகமும், குமரன் பப்ளிஷர்ஸ் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட 'மண்ணின் குரல்' (நான்கு நாவல்களின் தொகுப்பு) 1998இலும நூலுருப்பெற்றன. மேற்படி கலாநிதி இ.பாலசுந்தரம் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்னும் கட்டுரையினில் குறிப்பிடப்பட்டுள்ள கனடாவில் வெளியான நூல்கள் பற்றிய பட்டியலில் மேற்படி நூல்களைப் பற்றிய விபரங்கள் காணப்படாததால் அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

இதுபோல் ஈழத்துப் பூராடனாரின் (க. தா. செல்வராசகோபால்) றிப்ளக்ஸ் (கனடா) பதிப்பகம் அவரது பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது. அவை பற்றி எந்த விபரங்களையும் மேற்படி கலாநிதி இ.பாலசுந்தரத்தின் கட்டுரையில் காண முடியவில்லை. ஈழத்துப் பூராடனார் பற்றிய விபரங்களை விக்கிபீடியாவில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நீரரர் நிகண்டு, மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள், வயல் இலக்கியம், ஊஞ்சல் இலக்கியம், வசந்தன்கூத்து ஒரு நோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள், கூத்தர் வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும், கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும், கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை, இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை, ஓமரின் இலியட், ஒடிசி காப்பியங்கள் (தமிழ் மொழிபெயரிப்பு பாட்டுவடிவில்) , ஐங்குறுநூற்று அரங்கம், சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம், சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள், பெருங்கதை ஆய்வுநோக்கு எனப் பல நூல்களை அவர் தனது அச்சகத்தின் மூலம் கனடாவில் வெளியிட்டுள்ளார். .

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல்கள் பல வெளிவந்துள்ளன. தேடகம் (கனடா)  அமைப்பினரும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.  கவிஞர் சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' , வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைத் தொகுப்பொன்று , கவிஞர் செழியனின் நூல்கள், சக்கரவர்த்தியின் 'யுத்த சன்னியாசம்', அளவெட்டி சிறிசுக்கந்தராசாவின் சிறுகதைகள் (மித்ர வெளியீடு), என்.கே. மகாலிங்கத்தின் 'சிதைவுகள்', 'உள்ளொலி' போன்ற நூல்கள், கெளரியின் 'அகதி', கவிஞர் ஆனந்த பிரசாத்தின் கவிதைகள் (காலம் வெளியீடாக வெளிவந்தது.), நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்' , கடல்புத்திரனின் 'வேலிகள்', எழுத்தாளர் இணையத்தின் 'அரும்புகள்' (சிறுகதைத்தொகுப்பு), சுமது ரூபனின் 'யாதுமாகி நின்றாய்', எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனியின் சிறுகதைத் தொகுப்பு, கவிஞர் கந்தவனத்தின் கவிதைத் தொகுப்புகள் (காந்தளகம் வெளியிட்டதுட்பட) , மெலிஞ்சி முத்தனின் ' வேருலகு', நாவற்குழியூர் நடராசனின் 'உள்ளதான ஓவியம்', குறமகளின் நூல்கள் (மித்ர வெளியீடுகளாக வெளிவந்தவை), தமிழ்நதியின் நூல்கள், கவிஞர் புகாரியின் நூல்கள், டிசெதமிழனின் நூல்கள், வடலி அமைப்பினரின் நூல்கள், எழுத்தாளர் அகிலின் நூல்கள்,  எனப் பல நூல்கள் கனடாத் தமிழ் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் கனடாவிலோ, தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ வெளியிடப்பட்டாலும் அவை நூலுருப்பெற்ற கனடாத் தமிழ்ப் படைப்புகள் என்ற வகையில் முக்கியமானவை. குறிப்பிடப்பட வேண்டும். கட்டுரையாளர் காலம் சஞ்சிகையும் நூல் வெளியீட்டில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும் ஏனையவர்களைக் குறிப்பிட்டிருப்பதைப் போல் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பொதிகை என்றொரு சஞ்சிகை ஆரம்பத்தில் குரும்பசிட்டி ஜெகதீசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து பின்னர் நிருபா தங்கவேற்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.  அது பற்றிய தகவல்களையும் மேற்படி கட்டுரை மறந்துள்ளது. நமு பொன்னம்பலம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான செரந்தீபம் (பத்திரிகை), வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'கல்வி', 'இரவி' (பத்திரிகைகள்) போன்றவற்றின் விபரங்களும் காணப்படவில்லை. இப்பத்திரிகைகளெல்லாம் ஓரிரு இதழ்களே வெளியாகி நின்று போனவை. இவற்றையெல்லாம் மறந்த கட்டுரை ஆசிரியர் மறக்காமல் 'Our Universe', ''The World of Computers' என்ற இரு இதழ்கள் வெளிவரவதற்குக் காலாக இருந்தவர் வ.ந.கிரிதரன் என்று குறிப்பிட்டிருப்பது எதிர்பாராத வியப்பு. உண்மையில் 'நமது கிரகம் (Our Planet), 'கணினி உலகம்' ஆகிய செய்திக் கடித இதழ்கள் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருந்திருக்கும்.

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...கனடாத் தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட ஆசிரியர் கணித்தமிழ் பற்றியும் , இணைய இதழ்கள் பற்றியும் தனது பார்வையினைச் செலுத்தாதது வியப்புக்குரியது. செலுத்தியிருந்தால் 'பதிவுகள்' போன்ற இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிருப்பார். ஓர் ஆண்டு மலரில் , கலாநிதி ஒருவரால் எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை சிறிது விரிவாக்கப்பட்டு, மேலதிகத் தகவல்களுடன் எழுதப்பட்டிருந்தால் நன்றாகவிருந்திருக்கும். அதற்கான ஆதங்கத்தின் விளைவே எனது இக்குறிப்புகளுக்கான காரணம்.