பேராசிரியர் கா.சிவத்தம்பிபேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினமான மே 10 அன்று அவரை நினைவு கூரும் முகமாக நிகழ்வுகள் பல நிகழ்ந்தன. தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஆளுமைகளிலொருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையான 'கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு' என்னும் கட்டுரையில் பேராசிரியர் பற்றிய தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருப்பார். அதில் அவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலக்கியத் திறனாய்வாளராக இனங்காண்பதற்குப் பதில் இலக்கியக் கோட்பாளராகவே இனங்கண்டிருப்பார். மேலும் பேராசிரியரின் தேடல் பற்றிய கேள்வியினையும் பேராசிரியரின் ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ நூலிலுள்ள் இறுதிக்கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பியிருப்பார். அதில் ஜெயமோகன் கீழ்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"அதே அதிர்ச்சியை 1984 பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதி மூன்று பதிப்பு வந்துள்ள ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ என்ற நூலின் இறுதிக்கட்டுரையை வாசித்தபோது அடைந்தேன். மதம் தமிழ் இலக்கியத்தில் ஆற்றிய பங்களிப்பு குறித்து மார்க்ஸிய நோக்கில் விரித்து எழுதிச் செல்லும் சிவத்தம்பி. இறுதியில் ‘தமிழிலக்கியத்தில் மானுடம்’ என்ற முடி வுரையின் மகுடமாக சித்தர் பாடல் தொகுதியில் இருந்து உலகாயதச் சித்தர் பாடிய 7 வது பாடலை எடுத்து அளித்திருக்கிறார்! இந்நூல் இருபதிப்புகள் வந்து பல்கலைப் பாடநூலாக இருந்து இப்போது மே. து. ராசுக் குமாரின் முன்னுரையுடனும் சிவ தம்பியின் விரிவான புது முன்னுரையுடனும் வெளி வந்துள்ளது!.

மனிதனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லை – இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங் காண்டி
இன்னும்

(உலோகாயதச் சித்தர் பாடல் 7 சித்தர் பாடல்கள்)

சித்தர் பாடல்களின் நம்பகத் தன்மையைப் பற்றிய அறிஞர்களின் ஐயத்தையோ, அல்லது இந்த ‘உலோகாயதச் சித்தர்’ என்பவர் ச.து.சு யோகியாரால் சேர்க்கப்பட்ட ஒரு பொய் என்ற தகவலையோ அறியாத ஒரு வாசகர் கூட ஓரளவு தமிழிலக்கிய வாசிப்பு உடையவராக இருந்தால் மேற்கூறிய நாலேநாலு வரிகளை வைத்து இது மிகப்பிற்காலத்தில் செய்யுள் என்று ஊகித்துக் கொண்டிருப்பார். அந்த ஐயத்துடன் வேறு சித்தர் பாடல் தொகைகளை எடுத்துப் பார்த்திருந்தால் பிரபலமான பல பிரசுரங்களில் இந்தச் சித்தரின் பெயர் இல்லை என்பதையும் கவனித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக சிவத்தம்பி தன் தேடலை தமிழிலக்கியத்தில் ஒலித்த மானுடம் என்ற கருப் பொருளின் உச்சத்தை நோக்கிய பயணமாக அமைத்துக் கொண்டு மேலேகூறிய வரிகளில் கொண்டு வந்து நிறுத்துகிறார். மானுடம், மெய்மை போன்ற சொற்கள் இவ் வரிகளில் உள்ள பொருளில் இருப தாம் நூற்றாண்டு மார்க்ஸிய விவாதங்களில் மட்டுமே உருவாக்கப் பட்டு கையாளப்பட்டன என்பதும் சரி, இந்தக் கருத்துக்கள் எளிய மார்க்ஸியக் கருத்துக்கள் என்பதும் சரி அவரது உற்சாகத்தை அதிகரிக்கவே உதவுகின்றன"

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் சித்தர் பாடல்களில் பெரும்பாலானவற்றை அங்கீகரிக்கவில்லை என்பதைக் கட்டுரையில் குறிப்பிடும் ஜெயமோகன் இந்த உண்மையினைக் கூட அறிந்து கொள்ளாமல் , போலிச்சித்தர் ஒருவரின் கூற்றினைத் தனது தர்க்கத்துக்கு ஆதாரமாகப் பேராசிரியர் கொள்வதைச் சுட்டிக் காட்டுகின்றார். 'சித்தர் பாடல்களின் நம்பகத் தன்மையைப் பற்றிய அறிஞர்களின் ஐயத்தையோ, அல்லது இந்த ‘உலோகாயதச் சித்தர்’ என்பவர் ச.து.சு யோகியாரால் சேர்க்கப்பட்ட ஒரு பொய் என்ற தகவலையோ அறியாத ஒரு வாசகர் கூட ஓரளவு தமிழிலக்கிய வாசிப்பு உடையவராக இருந்தால் மேற்கூறிய நாலேநாலு வரிகளை வைத்து இது மிகப்பிற்காலத்தில் செய்யுள் என்று ஊகித்துக் கொண்டிருப்பார். அந்த ஐயத்துடன் வேறு சித்தர் பாடல் தொகைகளை எடுத்துப் பார்த்திருந்தால் பிரபலமான பல பிரசுரங்களில் இந்தச் சித்தரின் பெயர் இல்லை என்பதையும் கவனித்திருப்பார்' என்று குறிப்பிடும் ஜெயமோகன் பேராசிரியரின் தேடலைக் கேள்விக்குட்படுத்தியிருப்பார்.

இவ்விதமானதொரு வியப்பு எனக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதி Frontline (Volume 16 - Issue 9, Apr. 24 - May. 07, 1999 )  சஞ்சிகையில் வெளியான '50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியம்' (50 years of Sri Lankan Tamil literature ) என்னும் கட்டுரையினை வாசித்தபொழுது ஏற்பட்டது. ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் பிதாமகர்களிலொருவராகக் கருதப்படும் பேராசிரியர் மேற்படி கட்டுரையில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் பெயர்களைக் குறிப்பிட மறந்துள்ளார். ஒரு காலத்தில் முற்போக்குக் கூடாரத்தில் உள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகின்றார். மஹாகவி போன்ற ஏனையவர்களைப் பற்றியெல்லாம் திட்டமிட்டு மறைத்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் அதற்குப் பிரதியுபகாரம் செய்வது போல் முன்பு மறைத்தவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு, அன்று குறிப்பிட்ட பலரின் பெயர்களைத் தவிர்த்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது மேற்படி கட்டுரை.

மேற்படி கட்டுரை பற்றி 'பதிவுகள்' இணைய இதழின் புரட்டாதி 2000   இதழ்-9 இல் 'கா.சிவத்தம்பியும் '50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியமும்' என்ற கட்டுரையொன்றினையும் எழுதியிருந்தேன். அதிலிருந்த முக்கியமான பகுதிகளை மீண்டுமொருமுறை அசை போடலாமென்று நினைக்கின்றேன். அதன் விளைவாக அக்கட்டுரையின் முக்கியமான பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

"அண்மையில் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஐம்பது வருட ஸ்ரீலங்காத் தமிழ் இலக்கியம் என்னும் கட்டுரையினை வாசிக்க முடிந்தது. கட்டுரையினை வாசித்து முடித்ததும் எவ்வளவு தூரம் திட்டமிட்ட முறையில் சிலரை இவர் இருட்டடிப்பு செய்துள்ளார் என்பது இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை உணர்ந்தவர்களிற்குத் தெரிய வரும். ( ஆதாரம்: '50 years of Sri Lankan Tamil literature' ,Front Line , Apr. 24 - May. 07, 1999). கலாநிதி சிவத்தம்பி ஒரு கல்லாநிதியாக இருந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவரது கட்டுரை ஒரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் தமிழகம் உட்பட பலரும் இவரை நன்கு கற்றறிந்த பேராசிரியராகக் கருதுகின்றார்கள். இவர் சொல்வதை அப்படியே வசிட்டர் வாக்காகக் கொள்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதிப்படுத்தும் சந்தர்ப்பம் இவரைப் போன்றவர்களிற்கே அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. இந்நிலையில் இவரது போதிய ஆய்வற்ற ஈழத்து இலக்கியம் பற்றிய கட்டுரைகள் பிற நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பிழையான தகவல்களைத் தந்து விடும் அபாயம் நிறையவே இருக்கின்றது.

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப இவரது மேற்படி கட்டுரையில் காணப்படும் ஒரு சில தகவல்களைப் பார்ப்போம். முதலாவதாக ஈழத்துத் தமிழ்க் கவிதை பற்றிக் குறிப்பிடும் இவர் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

".....In poetry, the chief figures were Murugaiyan, Mahakavi, Neelavanan and Puratchikkamal, with the par younger poets such as M.A. Nuhman, Shanmugam Sivalingam, Maruthoorkkani and Jeyapalan....."

ஆனால் ஈழத்துக் கவிதை உலகின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. இவரது 'எதிர்காலச் சித்தன் பாடல்' , 'சிந்தனையும் மின்னொளியும்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கடவுள் என்சோர நாயகன்' போன்ற பல கவிதைகள் முக்கியமானவை. அ.ந.க.இருந்த காலத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற பல கவியரங்குகளில் முருகையனுட்படப் பலர் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அளவிற்கு ஈழத்துக் கவிதை உலகில் அ.ந.க அவர்கள் கோலோச்சிக்கொண்டிருந்தார். பேராசிரியர் கைலாசபதி கூட தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை இவரிற்கே சமர்ப்பணம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. இவரது பெயரினை மறைப்பதானது மிகப்பெரிய துரோகமாகும். அ.ந.க ஒரு பல்துறை விற்பனர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனப் பல் துறைகளிலும் உறுதியாகக் கால் பதித்தவர். அவரது பெயரினை மறைப்பதென்பது முழுப் பூசணிக்காயினைச் சோற்றினுள் மறைப்பதைப் போன்றது. கலாநிதி சிவத்தம்பிக்கு இது கூடப் புரியாமற் போனது தான் வியப்பினைத் தருகின்றது.

அதே சமயம் சிறுகதைத் துறையினில் சாதனை படைத்த பலர் விடுபட்டுப் போயுள்ளார்கள். உதாரணமாக அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி, சொக்கன், தாழையடி சபாரத்தினம், சு.வேலுப்பிள்ளை, கே.கணேஷ், பல மலையக எழுத்தாளர்கள், வ.அ.இராசரத்தினம், செம்பியன் செல்வன், அப்பச்சி மகாலிங்கம்,..இப்படிப் பலர். இவர்களில் சிலர் நாற்பதுகளில் முக்கியமான சிறுகதையாசிரியர்களாக இருந்தவர்கள். தொடர்ந்து ஐம்பதுகளில், அறுபதுகளிலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர்கள். 

ஈழத்து நாடகத் துறையினை எடுத்துக் கொள்வோம். அறுபதுகளில் வெளிவந்த முக்கியமான நாடகம் 'மதமாற்றம்'. அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியது. காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் வெளிவந்து பலமுறை மேடையேற்றப் பட்டுக் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்திய நாடகமிது.அ.ந.க. வின் 'மதமாற்றம்' நாடகம் பற்றிக் குறிப்பிடும் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:

"..இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் 'மதமாற்றம்' என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை.....கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை..."

'டெய்லி மிரரில்' அர்ஜுனா பினவருமாறு கூறுவார்:

"...திரு. கந்தசாமியை எவ்வித் தயக்கமுமின்றி அவரது நாடகப் புலனிற்காக மெச்சுகின்றேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினவூட்டுவதாக அமைந்துள்ளது. கடைசிக் காட்சியில் மிகச்சிறந்த நாடகப் பண்புகள் அமைந்துள்ளன..."

இவ்விதம் நாடகம் 1967ன் ஆண்டில் மேடையேற்றப் பட்டபோது ஈழத்தில் ஆங்கிலத் தமிழ்ப் பத்திரிகைககள் சஞ்சிகைகள் அனைத்திலும் நாடகவிமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதொரு நாடகத்தை எவ்விதம் மேற்படி "ஐம்பது வருட ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் கா.சிவத்தம்பியினால் மறைக்க முடிகின்றது?

ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை , கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல துறைகள் பற்றிய வரலாறென்பது விரிவாக எந்தவிதச் சார்புமற்று ஆராயப் படவேண்டியது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் விமர்சனம் என்று பார்க்கப் போனால் நல்ல பல முக்கியமான விமர்சகர்கள் தங்களது பங்களிப்பினைச் செய்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக பேராசிரியர் கைலாசபதி, இரசிகமணி கனக செந்திநாதன், அறிஞர் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை, செ.கணெசலிங்கன், கே.கணேஷ், பண்டிதர் கணபதிப்பிள்ளை, ஏ.ஜே.கனகரத்தினா..இப்படிப் பலர். இவர்களையெல்லாம் கா.சிவத்தம்பி தனது கட்டுரையில் குறிப்பிடவேயில்லை.  ஆனால் தளையசிங்கம் பற்றியெல்லாம், நாவலர் பற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்துச் சோமுவின் "ஈழத்து இலக்கியம்: பல்துறை நோக்கு"  ஈழத்து இலக்கியம் பற்றித் தரும் விரிவான விளக்கத்தைக் கூட கா.சிவத்தம்பியின் மேற்படி கட்டுரையில் காண முடியவில்லை. இத்தகைய கட்டுரைகள் சிவத்தம்பியவர்களின் பெயரிற்கு ஊறு விளைவிக்கக் கூடியன. இது போல் தான் அவரது ஏனைய கட்டுரைகளும் நுனிப்புல் மேய்ந்தனவையோ என்னும் ஐயத்தினை ஏற்படுத்தி விட இத்தகைய கட்டுரைகளே காரணங்களாக இருந்து விடக் கூடாதென்பதுதான் என் ஆதங்கம்.."

 பேராசிரியர் கா.சிவத்தம்பி'50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்று குறிப்பிட்டு விட்டு மிகவும் முக்கியமான படைப்பாளிகளையெல்லாம் பேராசிரியர் தவிர்த்திருப்பது என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இவர்களையெல்லாம் குறிப்பிடாமல் தவிர்த்து விட்டு இவர்கள் பங்களித்த இலக்கியச் சஞ்சிகைகள், கோட்பாடுகள் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்லும் கட்டுரையில் பல அண்மைக்கால எழுத்தாளர்கள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் தவிர்க்கப்பட்டவர்கள் [செல்வி சிவரமணியின் கவிதைகள் முக்கியமானவை. இவர் கூட விடுபட்டுள்ளார்.] ஆற்றிய இலக்கியப் பங்களிப்புடன் ஒப்பிடும்பொழுது மிகக் குறைந்த அளவே பங்களித்தவர்கள். இத்தகைய பலருக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, கொடுக்கப்பட வேண்டிய முன்னோடிகள் பலருக்குக் கொடுக்கவில்லை. அது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.  இது அந்த முன்னோடிகளுக்கு நாம் செய்யும் துரோகமாகும். மேலும் முற்போக்கிலக்கியத்தின் பிதாமகர்களிலொருவராகக் கருதப்படும் பேராசிரியர் அரசியல் காரணங்களுக்காகக் காணாமல் போன, படுகொலை செய்யப்பட்ட  யாழ் பல்கலைக் கழக மாணவியான கவிஞர் செல்வி, மருத்துவப் பிரிவின் விரிவுரையாளர் ராஜினி திரணகம போன்றவர்களின் விடயத்தில் கடைப்பிடித்த மெளனமும் புதிர் நிறைந்தது. மனித உரிமைகள் விடயத்தில் மெளனம் காப்பதென்பது முற்போக்கு என்ற பதத்திற்கு எதிரானதல்லவா.

உசாத்துணை கட்டுரைகள்:

1. 50 years of Sri Lankan Tamil literature By KARTHIGESU SIVATHAMBY [FrontLine, Volume 16 - Issue 9, Apr. 24 - May. 07, 1999] - http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1609/16090780.htm
2. கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு - ஜெயமோகன்   http://www.jeyamohan.in/?p=186
3. கா.சிவத்தம்பியும் '50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியமும்'  - வ.ந.கிரிதரன்  http://www.geotamil.com/pathivukal/aboutsivathamby.html