வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அண்மையில் இளங்கோவின் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது நிகழ்வு முடியும் நிலையிலிருந்தது. வன்முறையும் எழுத்தும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இளங்கோவின் நூலினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் பின்னர் அதுபற்றி எழுதுவேன். ஆனால் வாசித்த அளவில் இளங்கோவின் கதைகள் கூறும் பொருள் முக்கியமானதென்று உணர்ந்தேன். புலம்பெயர்ந்த சூழலில் நிலவிய இளைஞர் குழுக்கள் பற்றிய பதிவுகளை அவரது சிறுகதைகள் பல செய்துள்ளன. இவ்விதமான ஆவணப்பதிவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. இது போல் அண்மையில் வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கருணை ரவியின் 'கடவுளின் மரணம்' சிறுகதைத் தொகுப்பும், யோ.கர்ணனின் 'சேகுவேராவின் வீடு' தொகுப்பும் ஆவணப்படுத்தும் விடயங்கள் முக்கியமானவை. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலகட்டத்தில் , சிறு துண்டு நிலத்தினுள் அடைந்து கிடக்கும் மக்கள் அடையும் துயர், அன்றாட அத்தியாவசியக் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் (குறிப்பாகப் பெண்கள்) அடையும் சிரமங்கள் இவற்றையெல்லாம் கருணை ரவியின் சிறுகதைகள் ஆவணப்படுத்துகின்றன.  மேற்படி இளங்கோவின் நூல் வெளியீட்டில் 'காலம்' செல்வத்தின் 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சியும் / விற்பனையும் நடைபெறறது. இம்முறை எனக்கொரு புதையல் அங்கு கிடைத்தது. வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) எழுதி, தானே வெளியிட்ட 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்' நெடுங்கவிதையின் மொழி பெயர்ப்பும், அது பற்றிய விரிவான திறனாய்வும் அடங்கிய நூல். நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் இருந்திருக்கவேண்டும், செல்வம் அதற்கு $5 என்று விலையிட்டிருந்தார். 516 பக்கங்களை உள்ளடக்கிய நூலின் விலை $ 5.  அந்த நூலுக்காக, அந்த விலைக்காக,  'காலம்' செல்வத்தைப் பாராட்டுகின்றேன். அந்த நூலுக்கு அந்த விலை மிகவும் குறைவு. ஆனால் வாசகர்களின் தேவையினைப் பொறுத்தவரையில் (Demand) அது குறைவாகவிருந்த காரணத்தினால் அவர் அந்த விலையினை நிர்ணயித்திருக்கவேண்டும்போல் படுகின்றது. ஏனெனில் பல அண்மைக் காலத்து நூல்களெல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால்தான் அவ்விதம் கருதினேன்.

இன்னுமொரு விடயத்திற்காகவும் செல்வத்தைப் பாராட்டுகின்றேன். வர்த்தமான மகாவீரனை (மாரப்பன்) இந்த நூல் மூலமே அறிந்துகொண்டேன். வர்த்தமானன் மகாவீரனின் பரந்த அளவிலான வாசிப்பும், தனது எண்ணங்களை அவர் அடுக்கும் பாங்கும் என்னைக் கவர்ந்தன. அவரது பரந்து பட்ட வாசிப்பையும், அதன் விளைவாக கூறும் பொருளில் அவருக்கிருந்த தெளிந்த பார்வையையும் நூலை வாசிக்குமொருவர் உடனடியாகவே புரிந்து கொள்வார். அதிகமாக வடமொழிச் சொற்களை அவர் பாவித்தாலும் அது என் வாசிப்புக்கு இடையூறாகவிருக்கவில்லை. தனித் தமிழ் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மொழியானது ஏனைய மொழிகளிலிருந்து காலத்துக்குக் காலம் சொற்கள் பலவற்றை உள்வாங்கியே வளர்வது வழக்கம். அதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கல்ல. இவ்விதமான தனது மொழி நடைக்காக அவர் தேவநேய பாவாணர் போன்றவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றார். நூலாசிரியர் கவிஞர் தேவதேவனிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறார். அதற்குப் பிரதியுபகாரமாகக் கவிஞர் தேவதேவன் இந்நூல் பற்றி எழுதிய குறிப்பினை நூலின் பின் அட்டையில் பிரசுரித்திருக்கின்றார். அதிலவர் எலியட்டின் 'பாழ்நிலம்' நெடுங்கவிதை பற்றிப் பின்வருமாறு கூறுவார்: "நோபல் பரிசு பெற்ற நவீன காவியம்.  மேற்கோள்களான  ஓர் இசைக் கதம்பம்.  இந்நீள் கவிதை என்றும், அதை முழுமையாய் வாசித்து முடிக்க ஒருவர் ஆங்கில மொழி மரபு மற்றும் சமகால உலக இலக்கியங்களில் பெரும் புலவராய் இருக்க வேண்டியது அவசியமென்றும் கூறுகின்றன திறனாய்வுகள்" என்கின்றார். இக்கூற்றானது நூலாசிரியரின் இலக்கியத் தகுதியினை வெளிப்படுத்துகின்றது.

டி.எஸ்.எலியட்டின் 'பாழ் நிலம்' நெடுங்கவிதையினை வாசிக்க விரும்பும் எவருக்கும் இந்நூல் மிகவும் உறுதுணையாகவிருக்கும். இவரைப் போன்ற படைப்பாளியொருவரை ஏன் இதுவரைகாலமும் எம்மால் அறிந்து கொள்ள முடியாமலிருந்தது. இவரது பல படைப்புகள் பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடப்பதையும் இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. வாசகர்களைக் கவரும் வகையில் சுவையாக எழுதும் 'இன்றைய வெகுசன'ப் ப்டைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அதிக அளவில் வெளியிடும் பதிப்பகங்கள் இவரைப் போன்ற தீவிர வாசிப்பும், ஆய்வுக் கண்ணோட்டமும் மிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுவதிலும் கவனம் செலுத்தலாமே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.