வாசிப்பும் யோசிப்பும் - 10அண்மையில் அ.முத்துலிங்கத்தின் நூலான 'ஒன்றுக்கும் உதவாதவன்' படித்தேன். அதிலொரு கட்டுரை 'கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக்கல்'. பேராசிரியர் ம.இலே.தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் சில Love Stands Alone என்னும் பெயரில் வெளிவந்திருந்தது பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் மிகவும் நன்கறியப்பட்ட பாரி மகளிரின் கவிதையான புறநானூறுப் பாடலான 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' பாடலின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

பொருள் மிக எளிது. 'அற்றைத் திங்கள் தந்தை இருந்தார். குன்றும் இருந்தது. இன்றைய திங்களில் வெற்றிகொண்ட அரசர் குன்றைக் கைப்பற்றிக்கொண்டனர். தந்தையும் இல்லை'. இதை மொழி பெயர்ப்பதும் எளிது. வெண்நிலவு என்பதை Full Moon என்று மொழிபெயர்ப்பதே வழக்கம் ஆனால் அந்த வரி இப்படி வருகிறது.

But tonight
the moon is full again.
the triumphant kings
marched with their battle drums
have our hill,
and we are fatherless.

Full moon என்பதற்குப் பதிலாக the moon is full again என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சந்திரன் மறுபடியும் நிறைந்துவிட்டான். தேய்ந்த சந்திரன் மீண்டும் வளர்ந்து ஒருமாத காலம் ஓடி விட்டது சொல்லப்படுகிறது. ஒரு சிறிய சொல் வித்தை கவித்துவ அழகை உயர்த்திவிடுகிறது.'

மொழிபெயர்ப்பு இவ்விதமாக இருக்கிறது:

மீண்டும் நிலவு முழுமையடைந்த
இந்த இரவில்
தங்களது போர் முரசங்களுடன்
நடந்து செல்லும்
வெற்றிவாகை சூடிய மன்னர்கள்
எங்கள குன்றினை கைக்கொண்டுள்ளார்கள்.
நாமோ
தந்தையும் இல்லாதவர்களாகினோம்.'

இந்த நிலவானது மீண்டும் முழுமையடைந்துள்ள இந்த இரவினில் நாம் எம் குன்றினை (பறம்பு மலையினை) அதாவது எம் மண்ணினை எம்மை வெற்றிவாகை சூடிய மன்னர்களிடம் இழந்துவிட்டோம். எம் தந்தையும் இல்லாதவர்களாகிவிட்டோம். இந்த மொழிபெயர்ப்பினை ஆங்கிலத்தில் வாசிக்குமொருவர் ஒருபோதுமே சென்ற முழுநிலவில் இக்கவிதையினை எழுதிய பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகிய இருவரும் தந்தையுடன் அவரது ஆட்சியிலிருந்த சொந்த இராச்சியத்தில் இருந்த விடயத்தையும் ஊகித்து விடுவாரா என்பது சந்தேகத்துக்குரியதே. நிலவு முழுநிலா ஆவதும், பின்னர் தேய்வதும் வழக்கமானதொரு செயல். அவ்விதமான வழக்கமானதொரு நிகழ்வாக மேற்படி ஆங்கில மொழிப்யர்ப்பினை வாசிக்குமொருவர் 'மீண்டும் நிலவு முழுமையடைந்த இந்த இரவில்'
என்னும் வரிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளலாம். வார்த்தைகளின் அர்த்தமானது அவ்விதமான விளக்கத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விடலாம். அதற்கான சாத்தியங்களுள்ளன. சென்ற முழுநிலவில் தந்தையிருந்த விடயமும் அவரின் அரசு இந்த விடயமும் மேற்படி கவிதையின் வாசிப்பின் புரிதல்களிலொன்றாக மட்டுமே அறிந்துகொள்ளப்ப்படலாம். ஆனால், தமிழ் மூலத்தில் வரும்,

'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!'

என்னும் வரிகளை வாசிக்குமொருவருக்கு இந்த விடயத்தில் எள்ளளவும் சந்தேகம் தோன்றுவதற்குக் காரணமில்லை. 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்' என்ற வரிகள் மிகவும் உறுதியாக சென்ற முழுநிலவில் தந்தையிருந்த விடயத்தையும், பறம்பு மலை (குன்று) இருந்த விடயத்தையும் கவிதையினை வாசிக்குமொருவருக்குத் தெரிவிக்கின்றன.

அற்றைத் திங்களில் இருந்தவற்றையெல்லாம் இற்றைத் திங்களில் இழந்துவிட்டோம் என்ற விடயத்தையும் தெளிவாக

'இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!'

என்னும் வரிகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களிலொன்றான 'புறநானூறு' தொகுப்பில் வருமிந்தக் கவிதை மூவேந்தர்களினால் தந்தையையும், தந்தையின் ஆட்சியிலிருந்த சொந்த அரசினையும் இழந்த பாரி மகளிரின் கையறு நிலையினைப் புலப்படுத்துகின்றது. அவர்களின்  துயரத்தினை  வெளிப்படுத்துகின்றது. அந்தத் துயரம் வாசகரின் நெஞ்சினிலும் வலியைத் தந்துவிடுகின்றது.

'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்' என்ற வரிகளின் பின்னாலிருக்கும் துயரமும், வலியும் ஆங்கில மொழிபயர்ப்பில் இல்லை. தமிழ் மூலத்தில் மிகவும் உறுதியாகத் தெளிவாகக் கூறப்பட்ட 'அற்றைத் திங்களில்' பாரி மகளுருக்கிருந்த நிலை, மொழிபெயர்ப்பில் ஊகங்களிலொன்றாகி விட்டது. இவ்விதமாக நேரடியாகவும், வலிமையாகவும் விபரிக்கப்பட்டதொரு துயரமும், அது விளைவித்த வலியும், வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்குமொரு புதிராக, விடுகதையாகப் போனது மொழிபெயர்ப்பில்.  ஒரு பிரதியின் வாசிப்பானது ஒவ்வொரு வாசகருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்பதற்கு எனது இந்தப் புரிதலோர் உதாரணம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.