'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'  பொங்கல் செய்வோம்; களிப்போம்.

உலகப் பந்தின் திக்குக ளெங்கும்
பரந்து வாழும் தமிழர் வாழ்வில்
முக்கிய நாளே! பொங்கல் நாளே!
அதிலும் கதிரின் கருணை வாழ்த்தி
உழுது வாழும் உழவர் போற்றும்
உன்னத நாளிது வாழ்த்தி நிற்போம்
இந்த நாளில் இன்பமும் பொங்கிட
வேண்டி நிற்போம். வேண்டி நிற்போம்.
யுத்தம் மலிந்த பூமியில் இனிமேல்
நித்தமும் அமைதி நிலவிட வேண்டும்
என்றே நாமும் வேண்டி நிற்போம்.
மானிடர் யாவரும் அன்பு கொண்டு
மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும்
நிலவிடும் பிரிவுகள் நீங்கி அன்புடன்
வாழ்ந்திட வேண்டி நிற்போம் நாமே.

பிரிவுகள் இனியும் மானிடர் வாழ்வில்
வேண்டாம்! வேண்டாம்! இருக்கும் வாழ்வும்
சிறிதே. இருப்பும் நிலைத்து இங்கே
இருப்பது இல்லை; விரிந்து பெருக்கும்
வெளியில் இயங்கும் உலகும் சிறிதே.
மற்று மிந்த உலகில் வாழும்
உயிர்கள், மரங்கள் மற்றும் அனைத்தும்
மானிடர் எமது நண்பர் என்பதைப்
புரிந்து வாழ்வோம். உணர்ந்து வாழ்வோம்.
இவற்றை உணர்ந்தால் , புரிந்தால் இனியும்
மோதல்கள் இங்கு வேண்டாம் என்று
இந்த நாளில் அனைவரும் உறுதி
எடுப்போம். விட்ட பிழைகள் திருத்தி
இந்த நாளில் பாரதி வழியில்
'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'
இன்று பொங்கல் செய்வோம்; களிப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.