ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்!வாசிப்பும் யோசிப்பும்!கலாமணி பரணீதரனை ஆசிரியராக, 'அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் 'ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

மேற்படி கனடாச்சிறப்பிதழ் கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்துள்ளது. அ.முத்துலிங்கம், வீரகேசரி மூர்த்தி, மணி வேலுப்பிள்ளையுட்பட எழுவரின் கட்டுரைகளையும், தேவகாந்தன், ஸ்ரீரஞ்சனி, மெலிஞ்சி முத்தன், த.மைதிலி, வ.ந.கிரிதரன் ஆகியோரின் சிறுகதைகளையும், திருமாவளவ்ன், தமிழ்நதி, மயூ மனோ, சேரன், டிசெதமிழன் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஆனந்த பிரசாத், கறுப்பி, நிவேதா ஆகியோரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது 'ஜீவநதி' கனடாச்சிறப்பிதழ். முதலாவது கட்டுரையான 'கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல்' என்னும் சுல்பிகாவின் கட்டுரை ஆழமானது. ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறும் பொருள்பற்றி ஆராய்கிறது. மணி வேலுப்பிள்ளையின் 'நொறுங்குண்ட இதயம் ஓர் அரிய நாவல்' என்னும் கட்டுரை மங்களநாயகம் தம்பையாவினால் எழுதப்பட்டு 1914இல் வெளிவந்த 'நொறுங்குண்ட இருதயம் ஓர் அரிய நாவல்' என்னும் தேடி எடுத்த நாவல் பற்றி பதிவு செய்கின்றது. பொருளாசையினால் துட்டர்கள் கையில் தம் பெண் பிள்ளைகளைக் கொடுக்கும் பொருளாசையெனும் கொடிய நோய்க்காளாகியுள்ள தந்தையர்மேல் பரிதாபப்பட்டு அதற்குத் தீர்வாக அரிய சற்போதமென்னும் (நற்போதனையென்னும்) மருந்தினை வழங்குவதே நாவலின் கரு என்பதைக் கட்டுரையாளர் நாவலின் பாத்திரமொன்றின் உரையாடலினூடு எடுத்துக் காட்டுகின்றார். நாவலின் பிரதான பாத்திரங்களெல்லாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றார்கள். சந்தோசமாக வாழ்கின்றார்கள். 'நாவலாசிரியர் கூறும் பரிகாரம் வேறானதாகவிருந்தபோதும்  மனச்சாட்சியே இந்நாவலின் பிரதானமான மையக்கரு. அதுவே நாவலின் மாந்தர் அனைவரையும் கொண்டு நடத்துன்றது. பரிகாரம் எதுவாயினும் இது அரியதொரு நாவலெ'ன்ற தனது கருத்தினையும் முன் வைக்கின்றார் கட்டுரையாசிரியர். அத்துடன் நாவலாசிரியரின் ஆங்கிலப் புலமை காரணமாக அவர் பல ஆங்கில மொழியில் கையாளப்படும் கூற்றுகளைத் தமிழ் மயப்படுத்தி ஆங்காங்கே பாவித்துள்ளதையும், பாத்திரங்கள் நல்ல தமிழில் உரையாடும் பண்பினையும் அவதானித்துக் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளார். இக்கட்டுரையின் முக்கியமான பயன்களிலொன்று இந்த நாவல் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிவித்ததுதான். இக்கட்டுரைவாயிலாகத்தான் நானே இந்த நாவல் பற்றி அறிந்துகொண்டேன்.

சிறுகதைகளில் தேவகாந்தனின் 'ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்' சிறுகதையின் பெயர் வித்தியாசமாகவிருந்தது. ஸரமகோ (José de Sousa Saramago) உலகபுகழ்பெற்ற போர்த்துகேய எழுத்தாளர். இவரொரு நாவலாசிரியர்; கவிஞர்; நாடகாசிரியர்; பத்திரிகையாசிரியர். 1998ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல்பரிசு பெற்றவர். இவரது எழுத்துநடை புகழ்பெற்றது. நீண்ட வசனங்கள் (சிலவேளைகளில் ஒரு பக்கத்துக்கும் அதிகமாக) இவரது அதன் தனிச்சிறப்பு. பின்நவீனத்துவப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஆனால் இவர் போர்த்துக்கல்லின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இறுதிவரை (1969இலிருந்து) இருந்தவர். ஸரமகோதாசன் என்று கதையின்  தலைப்பு இருந்ததும் கதையும் ஸ்ரமகோவின் பாணியில் அமைந்திருக்குமோ என்று எண்ணியபடியே வாசிக்க ஆரம்பித்தேன். ஸ்ரமகோதாசன் கூட வித்தியாசமாக இருக்குமே என்றதொரு காரணத்திற்காகத்தான் அந்தப்பெயரை வைத்திருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார். கதை தேவகாந்தனின் வழக்கமான எழுத்து நடையில் நகர்கிறது. பத்திரிகையாளனான ஸரமகோதாசன் அடிக்கடி தனது புத்தகமூட்டைகளுடன் வீடு மாறுபவன். வழக்கம்போல் இம்முறையும் வீடுமாறுகிறான். அவனது வீட்டுக்காரியான சிங்களப் பெண்மணியிடமிருந்து வாடகை முன்பணமாகக் கொடுத்த பணத்தை மிகவும் இலகுவாக மீளப்பெற்று கதைசொல்லியை ஆச்சரியப்பட வைக்கின்றான். அதற்குத்தான் கரப்பான் பூச்சிகள் அவனுக்கு உதவுகின்றன. வீட்டுக்காரியின் கரப்பான் பூச்சிகள் மீதான அருவருப்பு/வெறுப்பினைக் காரணமாக வைத்து ஸரமகோதாசன் எவ்விதம் தனது வாடகை முன்பணத்தை மீளப்பெற்றுக்கொள்கின்றான் என்பதுதான் கதை. சுவைக்கிறது. கூடவே மெல்லியதொரு புன்னைகையினையும் வரவழைக்கின்றது.

ஸ்ரீரஞ்சனியின் சிறுகதையான 'மனசே மனசே'யில் வரும் தம்பதிக்கிடையில் ஒருவிதமான திருப்தியின்மை நிலவுகின்றது. ஆளுமைச் சிக்கல்களும், சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனைகளும் அடிப்படைக்காரணங்கள். மனைவி வாகன விபத்தொன்றில் சிக்கிக்கொள்கின்றாள். அதற்குக்காரணமானவன் நாயகனின் விருப்பத்திற்குரிய பிரபல எழுத்தாளன். அவனை நாயகன் சந்திக்கச் செல்கின்றான். எழுத்தாளன் காரைத்திருத்திக்கொடுக்கச் சம்மதிக்கின்றான். அவனுடனான உரையாடலின்போது கதை நாயகனுக்கு அவனது விருப்பத்திற்குரிய எழுத்தாளன் மனைவியைப் பிரிந்து வாழ்வது தெரிகின்றது. அவனுடன் தன் நிலையினை ஒப்பிட்டுக்கொள்கின்றான். தன் மனைவியின் மீதான மதிப்பு பெருகுகின்றது. அதன் விளைவாக அவனது மனம் ஒருவித அமைதியில் சாந்தமடைகின்றது. கதையும் முடிவுக்கு வருகின்றது.

மெலிஞ்சிமுத்தனின் சிறுகதையான 'காலத்தைக் கடக்கும் படகு' வித்தியாசமான முறையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றினூடு அன்றைய, இன்றைய ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு, அப்போராட்டத்தின் உபவிளைவாக மீறப்பட்ட மானுட உரிமைகள் பற்றி, இன்னும் யாழ் சமுதாயத்தில் நிலவும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் பற்றி விமர்சனத்தை முன்வைக்கின்றது.

த.மைதிலியின் அபஸ்வரங்கள் நல்லதொரு சிறுகதை. கமலாவும் அவள் கணவன் சுரேஷும் தொடர்மாடியொன்றில் வசிக்கும் சுரேஷின் நண்பனான ராஜனின் இருப்பிடத்திற்கு, ராஜனின் அண்ணன் ஊரில இறந்ததன் காரணமாகத் துக்கம் விசாரிப்பதற்காகச் செல்கின்றனர். கமலாவின் உடல்நிலை சரியில்லாதபோதிலும் அவள் நாகரிகம் கருதி, ஊர்ப்பேச்சுக்கஞ்சிக் கணவனுடன் செல்கின்றாள். ராஜனின் மனைவி புஷ்பாவுக்கு வாங்கிய புது வீட்டுக்குத் துடக்குக் காரணமாக பால காய்ச்ச முடியாதென்ற கவலை. அங்கு துக்கம் விசாரிக்க வந்த பாக்கியம் கொழும்பில் இருக்கும் தனது இரு வீடுகள் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்கின்றாள். ராஜன் தம்பதியினர் வீடு வாங்கியது பெரிய அதிசயமாகவும் அவளுக்கும் அவளது கணவன் சாமிநாதனுக்கும் பெரியதொரு மன உலைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இதனை மையமாக வைத்துப் பின்னப்பட்ட சிறுகதை. மனித பலவீனங்களை, வீண்பெருமை பேசும் பண்பினை, 'இழவு' வீட்டிலும் ' 'உலையும்' மனதின் போக்குகளை விபரிக்கின்றது 'அபஸ்வரங்கள்'.

வ.ந.கிரிதரனின் 'வீட்டைக் கட்டிப்பார்' வீடு வாங்கி, அதனைத் தக்க வைப்பதற்காகப் போராடிச் சோர்ந்து, ஒதுங்கிவிடும் குடும்பமொன்றின் கதையினை விபரிக்கின்றது. அத்துடன் வீடு வாங்குதல், கடன் சுமை தீர்த்தல் போன்ற துறைகளில் பணிபுரியும் ஆலோசகர்களின் செயற்பாடுகளையும் விபரிக்கிறது. 'வாழ்வதற்காக வீடு!  வீட்டிற்காக வாழ்வு அல்ல' என்று சித்திரிக்கும் இச்சிறுகதை பலருக்கு நல்லதொரு பாடமாகவும் இருக்கக் கூடும். காலத்தின் அவசியமானதொரு பதிவு.

கவிதைகளில் தமிழ்நதியின் கவிதையான 'கப்பற் பறவைகள்' 'பனிப்பாலையில் இருபது கூதிர்களைக் கழித்த பின்னும் தணியாத ஞாபகத்தின் தகிப்பினைக் கூறுகிறது. விளைவு: 'அங்கேயுமில்லை; எங்கேயுமில்லை; எங்கேயுமில்லை'. திருமாவளவனின் 'கனாவரவம்' 'முள்ளிவாய்காற் பெருந்துயர் கடந்த' பெருந்துயர் பற்றிக் கூறும். 'போர் தவிர்த்து நீள நடந்து இருபது ஆண்டுகள் கழிந்தும்' கவிஞரை தப்பிப்பிழைத்த நினைவு கண் கொத்திப் பாம்பெனப் பின்தொடர்ந்து கனவுகளில் துரத்துகின்றது. இது போல் முள்ளிவாய்க்காலில் நிக்ழ்ந்த இறுதிப் போரில் தப்பிப்பிழைத்த குழந்தைகளையும் அவர்களது கனவுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தக் 'கொடுங்கனவுப் பாம்புகள்' துரத்தப்போகின்றனவோ என்று கவிஞரின் மனம் வலி கொள்கிறது. கறுப்பியின் 'சூர்ப்பனகை' ஆவேசம் மிக்க பெண் விடுதலைக் குரலாக ஒலிக்கிறது. 'கவனம்! தீயாய்த் தகிக்குமுன் சொற்களில் என்னிரத்தம் கொதித்திருக்குமொருநாளில் சூர்ப்பனகையாகி என் விரல் கொண்டுனதுதலை கொய்தெறிவேன்' என்று எச்சரிக்கை விடுக்கிறது. 'புலம் இழந்த பூர்வீக குடிகளும், நானும் எனது முதலாளிகளும்' இவரது பணி அனுபவத்தை மையமாக வைத்து அவரது உணர்வுகளைக் கூறுகிறதென்று புரிந்து கொள்கின்றேன். 'இருத்தலுக்காய் வாழுமெனக்குள், இறந்து கிடந்தன வெஞ்சொற்கள்' என்ற அவரது வரிகளுக்கு அவ்விதமே அர்த்தம் கொள்கின்றேன்.

வீரகேசரி மூர்த்தியின் 'பிரசவவேதனைப் புதினம்' வாசித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். இவரது அங்கதம் கலந்த நடை மிகவும் சிலாகிக்கத்தக்கது. கனடாவில் இலவசப் பத்திரிகையாசிரியர்கள் சிலரைப்பற்றிய தனது அனுபவத்தை இக்கட்டுரையாகப் பிரசவித்துள்ளார் காவலூர் மூர்த்தி.  'அவர்கள் வெளியிடும் பத்திரிகைகளில் ஆணித்தரமான ஆசிரியத் தலையங்கம் இருக்காது. அறிவு பூர்வமான கட்டுரைகள் இருக்காது.  இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் அவர்களது அறிவுக்கு ஏற்ற வகையில் கடத்தல், கற்பழிப்பு, கொலை சம்பந்தமான செய்திகளையும் கொப்பி அடித்து வெளியிடுவார்கள். அத்துடன் தாம் கலந்து கொள்ளும் வைபவங்களில் சில பிரமுகர்களுடன் நின்று எடுத்துக்கொள்ளூம் தமது படங்களையும் முன்பக்த்தில் பெரிதாகப் பிரசுரிப்பார்கள்' என்று சாடும் வீரகேசரி மூர்த்தியின் கூற்று சிந்திக்கத்தக்கது. மேலும் 'மரண விளம்பரங்களை எடுப்பதற்காக மையப் பெட்டிக்கடைக்காரனைப் போன்று யாராவது சாகமாட்டார்களா என ஒரு பிரதம ஆசிரியர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்' என்றும் சாடுகின்றார்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'எட்டாவது சிகரம்' அமர்நாத் குகைக்குப் ப்யணித்த அமெரிக்கப் பெண் ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையில் அங்கு பயணிக்கும் பயணிகளால் பாவிக்கப்பட்ட பிளாஸ்டிக் குடுவைகளால் குப்பையாக வீசப்படும் மில்லியன் கணக்கான குடுவைகள் குவிந்து பல்தலைமுறை கடந்து இமயமலைத்தொடரின் எட்டாவது சிகரமாக மாறக்கூடுமென்று சூழல் பாதிப்பு பற்றி எச்சரிக்கை விடுக்கிறது. அத்துடன் போதிய கழிப்பிட வசதிகளற்ற நிலையினையும் விமர்சிக்கின்றது.

மேற்படி ஜீவநாதி: கனடாச் சிறப்பிதழின் முக்கியமான அம்சமாக எழுத்தாளர் க.நவத்தினுடனான நீண்டதொரு நேர்காணல் விளங்குகின்றது. மேற்படி நேர்காணலில் தனது இலக்கியப் பிரவேசம், தனது படைப்பாக்க முயற்சிக்கு ஊக்குவித்தவர்கள், ஈழத்திலும் கனடாவிலும் அவரது கலை, இலக்கியப் பங்களிப்பு, அவரை ஆசிரியராகக் கொண்டு, அவரே வெளியிட்ட 'நான்காவது பரிமாணம்' சஞ்சிகை பற்றிய அவரது அனுபவங்கள், புலம்பெயர் இலக்கியம் பற்றிய, அதன் எதிர்காலம் பற்றிய அவரது கருத்துகள், கனடாத் தமிழர்களின் ஒன்று கூடல்கள் பற்றி, கனடாத் தமிழ்ச் சமுதாயத்தினர் மத்தியில் நிலவும் சாதிய உணர்வுகள் பற்றி, நாடக மற்றும் திரைப்படங்களுக்கான அவரது பங்களிப்பு பற்றி, இவ்விதம் பல்வேறு விடயங்களைப் பற்றியும் மிகவும் சிந்திக்கத்தக்க, காத்திரமான பதில்களை அவரளிக்கின்றார். 'இப்பொழுதெல்லாம் கலை இலக்கிய விமர்சனங்களிலும், கட்டுரைகளிலும் கூடுதலான கவனம் செலுத்தி வருவதாக'க் குறிப்பிடும் நவம்   'கனடாவில் உள்ள குறிப்பான தமிழ் இலக்கிய ஆளுமைகள்' பற்றிக் குறிப்பிடும்போது 'கனடாவிலுள்ள அத்தனை படைப்பாளிகளும் ஏதோவொரு வகையில் தத்தமக்குள்ளே தமிழ் இலக்கிய ஆளுமைகளே' என்று தடடிக் கழிப்பது ஆச்சரியத்தினைத் தருகின்றது.

மொத்தத்தில் ஜீவநதி சஞ்சிகைக் குழுவினரின் மேற்படி 'கனடாச் சிறப்பிதழ்' முயற்சி பாராட்டுதற்குரியது. இது போன்று பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் இலக்கிய முயற்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான மேலும் பல சிறப்பிதழ்களை அவர்கள் வெளியிட வாழ்த்துகள். மேற்படி கனடாச் சிறப்பிதழ் குறுகிய காலத் தயாரிப்பாக வெளிவந்ததால் பல இலக்கிய ஆளுமைகள் விடுபட்டுப் போயிருக்கின்றார்கள். இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு படைப்புகளைச் சேகரித்து இவ்விதமானதொரு சிறப்பிதழினை வெளிக்கொண்டுவந்தது பாராட்டுதற்குரியது. இதற்காக ஆசிரியர் கலாமணி பரணீதரனையும் , ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழுவினரையும் பாராட்டலாம்.