வாசிப்பும் யோசிப்பும்!அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை.  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 'உயிர்மை' மாத சஞ்சிகையில் 'பறவைக்கோணம்' என்றொரு பத்தி எழுதிவருகின்றார். இம்முறை (செப்டம்பர் 2012) உயிர்மை இதழில் வெளியான பத்தி 'வல்லவன் ஒருவன் - பளிங்கினால் ஒரு மாளிகை' என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. அதில் ராமகிருஷ்ணன் 'பளிங்கினால் ஒரு மாளிகை' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 'பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் என்ற வல்லவன் ஒருவன் படப்பாட்டைப் பல ஆண்டு காலமாகத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்பாடல் தரும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாகவே இருக்கிறது.' ஒரு பாடல் எவ்விதம் கேட்பவரைப் பொறுத்து வித்தியாசமான விளைவுகளை எற்படுத்துகிறதென்பதற்கு ராமகிருஷ்ணனின் மேற்படி பாடலைப் பற்றிய கருத்துகள் எடுத்துக்காட்டு.

எனக்கு இந்தப் பாடலை இரண்டாவது தடவையாக அவதானித்துக் கேட்டபோது இதனை எழுதிய கவிஞரின் தந்திரம்தான் வியப்பினைத்தந்தது. இரட்டை அர்த்தங்கள் தொனிக்கும் பல மெல்லிசைப் பாடல்களில் இதுவுமொன்று. வெளிப்பார்வைக்கு இப்பாடலின் முதல் அர்த்தம் மேலோட்டமாக மண்டபமொன்றினை மையமாக வைத்துப் பாடப்பட்டிருப்பதைப் போல் தோன்றினாலும்,  சிறிது ஊன்றிக் கவனித்தால் அப்பாடலினூடு தொக்கி நிற்கும் இன்னுமொரு கருத்தினைப் புரிந்துகொள்ளலாம்.

'பளிங்கினால் ஒரு மாளிகை.
பருவத்தால் மணி மண்டபம்.
உயரத்திலொரு கோபுரம்.
உன்னை அழைக்குது வா!'

பளிங்கினாலான மாளிகையாகப் பெண்ணின் உடலைக் கருதிக்கொண்டால் உயரத்தில் இருக்கிற கோபுரத்தினையும், பருவத்தாலான மணி மண்டபத்தையும் ஊகித்துக்கொள்வதில் சிரமமெதுவுமிருக்கப் போவதில்லை. எனக்கு ஆபாசத்தின் உச்ச வடிவமாகத் தெரியுமிந்தப் பாடல், இன்னுமொருவருக்கு பல ஆண்டுகளாகக் கேட்குந்தோறும் புத்துணர்வூட்டுவதாக அமைந்திருக்கிறது.

மேற்படி உயிர்மை இதழில் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் 'திருட்டுப் போகும் புகழ்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். மிகவும் சுவையாக, நகைச்சுவை ததும்பக் கூறப்படுமொரு கட்டுரையது. ஒரே பெயரைக் கொண்ட இருவர் இருப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி வேடிக்கையாக விபரித்திருப்பார் அ.மு. வாசிக்கும்போது வயிறு குலுங்க நன்கு சிரிக்கலாம். அதில் அவரது பெயரைக் கொண்ட ஒரு கவிஞர் பற்றியும், அக்கவிஞரின் முகநூல் பற்றியும் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

'கடந்த சில வருடங்களால என்னுடைய புகழ் எல்லாம் வேறு யாருக்கோ போய்க்கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்தது. அவர் ஒரு கவிஞர். அவருக்கும் என் பெயர்தான். நீண்ட நீண்ட வசனங்களை எழுதி சுள்ளி முறிப்பது போல அவற்றை முறித்து அடுக்கி கவிதையாக்கிவிடுவார். அவருடைய முகப்புத்தகம் பிரபலமானது என்று அதைப் பார்த்தவர்கள் சொல்வார்கள்.

'காப்பியாற்றுக் காப்பியனார்' என்ற புலவர்  சங்க காலத்தில் வாழ்ந்ததால் காபி குடிக்கும் பழக்கம் அப்பொழுதே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்பதை ஆதாரத்தோடு தன் கட்டுரையில் நிறுவியவர். ஏறக்குறைய 4000 நண்பர்கள் அவருக்கு.  ஒருநாள் அவர் முகப்புத்தகத்தில் 'மேப்பிள் மரம்' என எழுதுவார்.  16 பேர் பிடித்தது என்று  பதில் போடுவார்கள். இன்னொருநால் 'புதன் கிழமை' னெறு எழுதுவார். உடனேயே 22 பேர் பிடித்தது என்று எழுதிவிடுவார்கள். ஒருமுறை 'தமன்னா' என்று எழுதினார். அவரால் நம்பமுடியவில்லை 117 பேர் உடனுக்குடனே பிடித்தது என ப்திவு செய்தார்கள்.  அந்த மகிழ்ச்சியில் மூன்று கவிதைகள் தொடர்ச்சியாக எழுதித் தள்ளி விட்டார். இவ்விதமாகச் செல்லும் கட்டுரை. வாசிக்கும்பொழுதே எழும் சிரிப்பினை அடக்க முடியாது. அ.மு.வின் 'புதுப் பெண்சாதி' சிறுகதை என்னை மிகவும் கவர்ந்த , பாதித்த சிறுகதை. அந்தப் புதுப்பெண்சாதி பாத்திரம் வாசிப்பவர் நெஞ்சினை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது. அதனை எவ்விதம் என்னால் மறக்க முடியாதோ இந்த நகைச்சுவை கொழிக்கும் கட்டுரையினையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

ஒரே பெயரில் எழுதுபவர்கள் என்றதும் ஞாபகம் வருகிறது. இது என் சொந்த அனுபவம். அவ்வப்போது இணையத்தில் என் பெயருக்கு கூகுளில் தேடுதல் நடத்துவதென் வழக்கம். ஒருமுறை அவ்விதமான எனது தேடலின்போது என் பெயரில் மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியான நூலொன்றின் விபரம் கிடைத்தது. நான் எப்பொழுதுமே வ.ந.கிரிதரன் என்றுதான் எழுதுவது வழக்கம். மணிமேகலை பிரசுரமோ வி. என்.கிரிதரன் என்ற பெயரில் அந்த நூலினை வெளியிட்டிருந்தது.

நூல் விபரம் வருமாறு:
முத்தமிழில் நல் முத்துக்கள் 
ஆசிரியர்: வி.என்.கிரிதரன்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

இது பற்றி மணிமேகலை பிரசுரத்தினரின் மின்னஞ்சலுக்கு விபரம் கேட்டு எழுதினேன். இதுவரையில் பதிலில்லை. பின்னர் எழுத்தாளர் திலீப்குமாருடன் தொடர்புகொண்டபோது அவர் அந்த வி.என்.கிரிதரன் தமிழகத்தின் சிற்றூர்களிலொன்றைச் சேர்ந்தவரென்று அறிந்து கூறினார்.

இதே போன்று என் 'மண்ணின் குரல்' நூல் கன்னிமாரா நூலகத்திலும் இருப்பதை இணையத் தேடுதல் மூலம் அறிந்துகொண்டேன். தமிழகத்திலிருந்து குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியான நூலது. வேறெந்தப் பதிப்பகத்தாருக்கும் அதனை வெளியிட  அனுமதி கொடுத்திருக்கவில்லை. இருந்தாலும் அதே நூல் இன்னுமொரு பதிப்பகத்தாரின் பெயரைத்தாங்கியபடி இன்னுமொரு நூலகத்தில் (புதுக்கோட்டையிலுள்ள கிளையொன்றில்)  இருக்கும் விடயமும் தெரிந்தது. இது எப்படி இருக்கு?

மேற்படி உயிர்மையில் எழுத்தாளர் இமையத்தின் 'பெத்தவன்' என்றொரு நெடுங்கதையும் வெளியாகியிருக்கிறது. படித்து முடித்ததும் நெஞ்சு வலிக்கும். தீண்டாமைப் பேயினைச் சுட்டெரிக்கவேண்டுமென்றொரு ஆவேசத்தினை எழுப்புமொரு கதை. மிகவும் தத்ரூபமாக தீண்டாமையினால் எவ்விதம் ஒரு குடும்பத்தின் இருப்பே சீர் குலைகின்றதென்பதை விளக்கும் கதை. கதை மாந்தர் உரையாடல்கள், உறவுகளுக்கிடையிலான உணர்வுகளின் கொந்தளிப்புகள் இவற்றையெல்லாம் தீண்டாமைப் பேயின் பாதிப்பினை வாசிக்கும் வாசகரின் மனதில் ஆழமாக உறைக்கும் வண்ணம் இமையம் படைத்திருக்கின்றார். ஒருமுறை படித்ததும் இருக்கும்வரை பதிந்துவிடும் கதைகளில் இதுவுமொன்று. எவ்விதம் மனிதர்களை அவர்கள் வாழும் சமூகச் சூழல்கள் கைதிகளாக்கி விடுகின்றன. அச்சமூகச் சூழல்கள் எவ்விதம் பெண்களை அடிமைகளாக வாழ நிர்ப்பந்தித்து விடுகின்றன. இவையெல்லாம் இப்படைப்பினை வாசித்ததும் எழும் கேள்விகள். அவற்றின் விளைவான சீற்றம் இப்படைப்பின் வெற்றி.