- வெங்கட் சாமிநாதன் -புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

இப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா? வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச்  செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது,  என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்கு ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப் போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன!

Wanted columns பார்த்து வேலைக்கு மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும்  இல்லை. அப்பா இன்னமும் டாக்கா வில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின்  மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

இம்முறை எதுவும் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்க வில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் மூத்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.
”பதினைந்து நிமிஷங்களாக பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக்கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரிய வில்லையே உனக்கு?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது? என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின்? ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தான் “Sir” சொல்ல வரவில்லையா? வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.

மறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும் என்று ஒரு ஆசை. மிக அழகான கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன்  A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது.  எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப்  பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும்  மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமை சாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது. 

ரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங் களையும் வேடிக்கையாகவும் அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்

புனிதர் அகஸ்டினின் Confessions பற்றிப் பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல் உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும்  பொருளைப் பற்றி விளக்கப் போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்கிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார்.  இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான காமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.

ஆனால் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத் தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.

அப்படித்தான் அன்று எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.

புர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும்ம் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.

இந்தப் பயணத்தில் என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூரிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.

கட்டக்கில் தங்கியது,  சுற்றி உலவியது எதுவும் எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.