19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமி"உலகம் என்ன நிறம்" என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் "நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.

தொடர்நாவல்: மனக்கண் (19) - அறிஞர் அ.ந.கந்தசாமி -ஸ்ரீதர் ஓர் இருட்டுலகத்திலே புகுந்துவிட்டான். விடியாத நிரந்தர இரவொன்று அவனைச் சூழ்ந்தது. அந்தக் கரிய உலகத்திலே வாழ்க்கையின் சகலத்தையுமே இழந்துவிட்டது. போல் அவன் இருதயம் இரத்தக் கண்ணீர் பெருக்க ஆரம்பித்தது. பலமான ஓர் ஆயுதத்தினால் தலையில் மோதினால் மூளையில் ஒரு ஸ்தம்பித நிலைமை ஏற்படுமல்லவா? ஆரம்பத்தில் இருட்டின் மூட்டம் அப்படிப்பட்ட நிலையைத்தான் அவனுக்கு ஏற்படுத்தியது. பல தினங்களாக நீடித்த ஸ்தம்பித நிலைமை சிறிது சிறிதாகத் தளர்சியடைய ஏறக்குறையப் பத்து நாட்கள் வரை ஆகிவிட்டன. இப்பத்து நாட்களும் அவன் அதிகம் பேசக் கூட வில்லை. அம்மாவை எங்கும் அகலவிடாது அவள் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு கட்டிலிலோ ஒரு ஒரு சாய்மணை நாற்காலிலோ உட்கார்ந்திருப்பான். "அம்மா நீ எங்கும் போய்விடாதே. கண்ணற்ற நான் நீயும் போய்விட்டால் என்ன செய்வேன்? நீதான் என் கண், அம்மா, சில பெண்களுக்கும் அம்மாக்கண்ணு என்று பெயர் இருக்கிறதல்லவா? அப்பெயர் உனக்கு நல்ல பொருத்தம். நீ என் அம்மாக் கண்ணு" என்று தாயின் தோள்களைப் பற்றிக் கொண்டு குழந்தை போல் ஏதேதோ பேசினான். தாய்க்கோ பேய் பிடித்தது போன்ற நிலை, எந்நேரமும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சரியாகத் தலை வாரிக் கொள்வது கூட இல்லை. அவன் கேட்கும் கேள்விகள் சில அவள் அடிவயிற்றை எரிய வைத்தன. "அம்மா நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன்? நீ ஏன் என்னைப் பெற்றாய்? அப்பாவைத் திருபதிப்படுத்த என்னால் அமுதாவைக் கல்யாணம் கட்ட முடியவில்லை. நான் திருப்தியடையப் பத்மாவைக் கட்ட முடியவில்லை. யாருக்கும் திருப்தியற்ற வாழ்வு. எனக்கும் இன்பமில்லை, அப்பாவுக்கும் இன்பமில்லை. உனக்கும் கூடத்தான். இவற்றை எல்லாம் பார்த்து நீ எவ்வளவு வேதனைப் படுவாய் என்று எனக்குத் தெரியும். போதாததற்கு கண்ணும் போய்விட்டது. அம்மா என் கண்கள் மீளுமா?" என்று கேட்டான் அவன். பாக்கியம், "ஸ்ரீதர், உன் கண்ணுக்கொன்றுமில்லை. சீக்கிரமே சுகமாகிவிடும் என்று டாகடர் கூறுகிறார்" என்று பதிலளிப்பாள். மகனின் கேள்விகளுக்கு இப்படிப் பொய்யான பதில்களைக் கூறும் போதெல்லாம் அவள் கண்களில் நீர் வழியும். அழுவாள். ஆனால் அது அவன் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாதென்று சப்தம் போடாது பல்லைக் கடித்துக் கொண்டு மெளனமாக அழுவாள். இருந்தாலும் எப்பொழுதும் தாயோடு நெருங்கி உட்கார்ந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதருக்கு அவள் அழுகை சில சமயங்களில் தெரியவே செய்தது. அப்படிப்பட்ட நேரங்களில் அவள் கண்களைத் தன் கைகளால் தடவிவிட்டு, "அம்மா, ஏன் அழுகிறாய். அழாதே." என்று சொல்லிக் குழந்தையின் தலையைத் தடவுவது போல் அம்மாவின் தலையைத் தடவி, தேறுதல் கூறுவான் அவன். அந்த நேரங்களில் "ஐயோ மகனே" என்று தன்னை அறியாமலே கதறி விடுவாள் தாய்.

"அம்மா, நீ ஏன் என்னைப் பெற்றாய்" என்ற கேள்விக்குப் பாக்கியம் "எங்கள் குலம் விளக்கமடைய உன்னைப் பெற்றேன். உன்னை எந்த நேரமும் என் பக்கத்தில் வைத்து விளையாடப் பெற்றேன். நீ என்னோடேயே எந் நேரமும் இரு ஸ்ரீதர்." என்ற உணர்ச்சிவசமாய் உரைப்பாள்.

"இல்லை, என்னைப் போன்றவர்கள் இவ்வுலகில் பிறந்திருக்கவே கூடாது" என்பான் ஸ்ரீதர்.

ஒரு நாள் "அம்மா, இவ்வுலகில் பணம் இன்பம் தரும் பொருள் என்று சொல்கிறார்களே, அது முழுப் பொய். எனக்குப் பணத்துக்கு ஒரு குறைவுமில்லையே. இருந்தும், வாழ்க்கையில் நான் கண்ட இன்பம் என்ன? அப்பாதானே இந்த இலங்கையிலேயே பெரிய பணக்காரராம் - அப்படியானால் அவரின் ஒரே வாரிசான நான் தானே இந்த நாட்டின் ஆளப் போகிற பெரிய பணக்காரப் பிள்ளை? இருந்தும் நான் விரும்பிய பெண்னை என்னால் மணம் முடிக்க முடியவில்லையே. இப்பொழுது கண்ணும் போய்விட்டது. எனது பணத்தால் இவற்றைத் தடுக்க முடியவில்லை. நான் இப்படிப் பெரிய பணக்கார வீட்டில் பிறக்காமல் பத்மாவைப் போல் ஓர் ஏழை வாத்தியார் வீட்டில் பிறந்திருந்தால் எப்போதோ அவளைக் கல்யாணம் செய்து சந்தோஷமாயிருந்திருப்பேன். இல்லையா அம்மா? மறு பிறப்புப் பற்றிச் சொல்லுகிறார்களல்லவா - அப்படி ஒன்றிருந்தால் நிச்சயம் நான் என் மறு பிறப்பில் ஓர் ஏழை வீட்டில்தான் பிறக்க விரும்புவேன். எங்கள் பெரிய மாளிகையை விட ஏழைகளின் குடிசைகளில்தான் இன்பம் அதிகம். அவர்கள் எங்களைப் போல் போலி அந்தஸ்துக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நாசமாக்கிக் கொண்டு கஷ்டப்படுவதில்லை. ஆனால் ஒன்று அம்மா. நான் எங்கே பிறந்தாலும் நீதான் என் அம்மாவாக இருக்க வேண்டும். நீ இன்று கூட அப்பாவைப் போல அந்தஸ்து அந்தஸ்து என்று சாகவில்லை. ஆனால் அப்பா கூட பணக்காரராகப் பிறந்ததால் தான் இப்படி இருக்கிறார். ஏழையாகப் பிறந்தால் சரியாகப் போய்விடுவார். அவர் மீது கூட எனக்கு வெறுப்பில்லை. என் மீது அவருக்கு இருக்கும் அன்பைச் சொல்ல முடியாது. என்னம்மா, அப்பாவுக்கு என் மீது அன்புதானே" என்றான்.

பாக்கியம் "அதில் சந்தேகமா? உனக்காக அவர் தன் உயிரையும் கொடுப்பாரடா" என்றாள்.

ஸ்ரீதர் "அவர்தான் என்ன செய்வார்? பணக்காரன் ஏழை என்று பார்க்கும் உலகத்தில் இந்த அந்தஸ்து என்ற பிரச்சினை இருக்கத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் எல்லோருமே பணக்காரராகவோ ஏழைகளாகவோ இருந்துவிட்டால் பிரச்சினை ஒழிந்துவிடும். பண விஷயத்தில் எல்லோருமே சமமாக இருக்க வேண்டுமென்று சுரேஷ் சொல்லுவான். அவன் அறிவாளி. அவன் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது" என்றான்.

சில சமயம் குருடனின் அந்தகார உலகைப் பற்றியும் அவன் பேசுவான். "அம்மா மோகனா அழகான கிளி. பளபளக்கும் பஞ்ச வர்ணங்களோடும் அது எவ்வளவு அழகாயிருக்கிறது. ஆனால் இப்பொழுது எனக்கு அதன் வர்ணங்களால் பயனேயில்லை. மோகனா இப்பொழுது எனக்கு ஓர் ஒலியாகிவிட்டது. ஏன், நீயும் கூட அப்படித்தான். உனது சிவந்த கன்னங்களில் ஒரு சுழி இருக்கிறதல்லவா? சுரேஷ் கூட அது மிகவும் அழகாயிருப்பதாகச் சொல்லியிருக்கிறான். ஆனால் அதனால் எனக்கு ஒரு பிரயோசனமுமேயில்லை. மோகனாவைப் போல நீயும் எனக்கு ஒலிதான். மனதுக்கு ஆறுதல் தரும் இன்ப ஒலி. ஆனால் நீ சமீபத்தில் வந்திருக்கும்போது உன்னுடலில் இருந்தும் உன் கூந்தல் தைலத்திலிருக்கும் மணமும் வீசுகிறது. அதனால் நீ ஒலியோடு மணமுமாகிவிட்டாய். ஆமம்மா எனக்கு உலகமே ஒலியாகவும் மணமாகவும்தான் தெரிகிறது." என்பான்.

சில சமயம் அந்தகர்களைப் பற்றிய பெரும் கவிஞர்களின் கவிதைகள் அவன் நினவுக்கு வரும். அவற்றை அம்மாவுக்குச் சொல்லிக் காட்டுவான். முக்கியமாக இடையிலே குருடாகிய ஆங்கிலக் கவிஞர் மில்டனின் கவிதைகளை அவன் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.

ஆண்டுதோறும் பருவங்கள்
அழையாதிங்கே ஓடி வரும்
ஈண்டிவ்விதமாம் மாற்றங்கள்

பகலுமில்லை இரவுமிலை
படுவான் எழுவான் காட்சியிலை
திகழும் மலரின் அழகில்லை
தெரியும் வசந்தக் காட்சியிலை

ஆடு மாடு மந்தைகளில்
அழகும் காணேன் - மனிதர்களின்
பீடு மிக்க முகங்காணேன்
பெருகும் இருளில்
வீற்றிருந்தேன்.

அறிவுப் புலனின் கதவொன்று
அடியோ டடைத்து முடிற்றே!
துருவிப் பார்க்கும் என் கண்கள்
தூர்ந்தே பார்வை மறந்தனவே.

சில சமயங்களில் அவன் அம்மாவிடம் இது பகலா இரவா? என்று கேட்பான். கேட்டுவிட்டு

"நண்பகலின் பேரொளியில்
நானிருட்டில் வாழுகிறேன்
சூரியனை ராகுவிங்கு
சூழ்ந்ததுவே ஆனால் அச்
சூரியர்க்கு மீட்சியுண்டு
சுடர் விழிக்கோ மீட்சியிலை
நித்தியமாம் கிரகணமென்
நேத்திரத்தைப் பிடித்ததுவே"

என்று பாடுவான்.

ஸ்ரீதர் கண்கள் மங்கிவிட்ட போதிலும் அதிலிருந்த நோவும் வலியும் டாக்டர் நெல்சனின் சிகிச்சையின் கீழ் இப்பொழுது முற்றாக மறைந்துவிட்டன. ஆகவே அவன் தான் ஒரு குருடன் என்பதை முற்றாகத் தன் மனதிலே ஏற்றுக் கொண்டு, தன்னை உலகின் பிரசித்தி பெற்ற குருடர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவானான். "துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன் ஒரு குருடன். மாளவ தேசத்துச் சத்தியவானின் தந்தை ஒரு குருடன். தேபேஸ் மன்னன் ஈடிப்பஸ் ஒரு குருடன். ஏன், எங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாடிகூடக் குருடனென்றுதானே சொல்கிறார்கள். ஆங்கிலப் பெரும் கவிஞன் மிலடன் ஒரு குருடன். அசோக மன்னனின் ஒரு மைந்தன் கூடக் குருடனாம்." இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனான் அவன். சில வேளைகளில் "அம்மா, இனி என்னைப் பார்ப்பவர்கள், 'அதோ ஸ்ரீதர் போகிறான்' என்று சொல்ல மாட்டார்கள். 'குருடன் போகிறான்' என்று தான் சொல்வார்கள்" என்று கூறிச் சிரித்தான். நோவுகள் மறையச் சிரிப்புச் சிறிது சிறிதாக மீண்டது. பகடிப் பேச்சுகளும் மீள ஆரம்பித்தன. ஆனால் நான் முழுவதும் சிரிக்கும் அவனது முன்னைய போக்கு மீளவில்லை. இடையிடையே வேதனையுடன் சேர்ந்து வெளிப்பட்டன இப்புதிய வேடிக்கைப் பேச்சுகள்.

பொழுது போவதற்குப் புத்தகங்கள் படிக்க முடியாத நிலை. சித்திரம் தீட்ட முடியாத நிலை. நாடகம் நடிக்க முடியாத நிலை. சினிமா பார்க்க முடியாத நிலை. கவலையின்றித் தனியே ஊர் சுற்ற முடியாத நிலை. இந்நிலையில் புதிய பொழுது போக்குடன் தேவைப்பட்டன. இசைத்தட்டுகளும் வானொலி நிகழ்ச்சிகளும் அதற்குதவின. சிவநேசர் பட்டணத்துக்குப் போகும் போதெல்லாம் புதிய இசைத்தட்டுகளைத் தேடி வாங்கி வருவார். அவன் அறைக்குள் போய் "ரேடியோகிராமில்" தாமே இசைத்தட்டைக் கழுவி, ஊசியையும் அதன் மீது வைத்துவிடுவார் அவர். "அப்பாவா, நல்ல பாட்டு" என்பான் அவன். சிவநேசர் ஒன்றும் பேசமாட்டார். கண்கள் கலங்க வெளியே போவார். அதிமனிதர் அவ்வேளைகளில் சாதாரண மனிதராகிவிடுவார்.

ஒரு நாள் தந்தை சிவநேசரிடம் ஸ்ரீதர் "அப்பா என் கண்களுக்குச் சந்திர சிகிச்சை செய்தாலென்னா? சில பேருக்குச் சந்திர சிகிச்சையால் பார்வை மீண்டதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்."

சிவநேசர் அதற்கு "உனது கண்னில் ஏற்பட்டுள்ள நோய் நரம்புகளோடு சம்பந்தமானதாம். சந்திர சிகிச்சை உயிருக்கே ஆபத்து உண்டாக்கலாமென்று டாக்டர் நெல்சன் கூறுகிறார். இந்த நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுமாம். ஆகவே சந்திர சிகிச்சை செய்ய அவர் அஞ்சுகிறார் ஸ்ரீதர்" என்றார்.

"மேல் நாடுகளில் இதற்குச் சிகிச்சை இருக்கக் கூடுமல்லவா?" என்றான் ஸ்ரீதர்.

"அங்கும் இந்த நிலைதானாம். சந்திர சிகிச்சை பற்றி உத்தரவாதம் கொடுக்க முடியாதென்கிறார். சில சமயம் உயிருக்கே ஆபத்து விளையலாம் என்று அவர் தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி அதற்குச் சம்மதிக்க முடியும்?" என்றார் சிவநேசர்.

"அப்படியானால் குருடனாயிருக்க வேண்டுமென்பது தான் என் தலை விதி போலும்." என்று பெருமூச்சு விட்டான் ஸ்ரீதர்.

ஒரு நாள் ஸ்ரீதர் அம்மாவிடம் குருடர் பாடசாலையில் குருடர்களுக்குப் புத்தகம் வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது பற்றிப் பேசினான். " நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். பிரெயில் முறை என்று அதற்குப் பெயராம். லூயி பிரெயில் என்ற பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த முறை. குருடர்களுக்கு அறிவுக் கண்ணைக் கொடுத்தவர் அவர். நானும் அதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்." என்றான் அவன்.

அவன் இவ்வாறு சொல்லி நாலைந்து நாட்களிலேயே கொழும்புக்குச் சென்று ஒரு பிரெயில் வாத்தியாரை அம்ர்த்திவிட்டார் சிவநேசர். சீக்கிரமே பிரெயிலைக் கற்றுப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினான் அவன். கொழும்பில் குருடர் செவிடர் பாடசாலை முகாமைக்காரரோடு, ஏற்பாடு செய்து பிரெயிலில் வெளியிடப்பட்ட பல நாவல்களையும் நாடகங்களையும் கவிதை நூல்களையும் கூட மகனுக்குப் பெற்றுத் தந்தார் சிவநேசர். அவர்கள் செய்த இவ்வுதவிக்குத் தமது பதிலாகக் குருடர் செவிடர் பாடசாலைக்கு ரூபா இருபத்தையாயிரம் நன்கொடை வழங்கவும் அவர் தவறவில்லை.

இவை இப்படிப் போய்க் கொண்டிருக்க, தன் காதலி பத்மா விஷயமாக ஸ்ரீதரின் மன நிலை எப்படியிருந்தது? சூரை மரத்தடியில் நாடகத்துக்கு மறுதினம் தந்தையாருடன் அவன் செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் பத்மாவைச் சிவநேசரே அனுமதித்தாலன்றித் தான் மணப்பதில்லை என்று அவன் ஒப்புக் கொண்டிருந்தானல்லவா? சிவநேசரையும் பாக்கியத்தையும் பொறுத்தவரையில் இது அவர்களின் அன்பு மகன் செய்த பெரும் தியாகமாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் இத்தகைய ஒப்பந்தத்திற்குத் தான் வந்தமை உண்மையில் தான் பத்மாவுக்குச் செய்த மன்னிக்க முடியாத துரோகமாகவே பட்டது. "என்னுடைய இன்பத்தைத் துறப்பதற்கு எனக்கு உரிமை இருக்கலாம். அவ்வாறு என் இன்பத்தை நானே துறப்பதைத் தியாகம் என்று கூடக் கொண்டாடலாம்தான். ஆனால் இன்னொருவர் இன்பத்தை, பத்மாவின் இன்பத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நம்பியிருந்தவளை நட்டாற்றில் விட்டுவிட்டேனே. தந்தை மீது கொண்ட அன்பாலும் என் உள்ளத்தின் மிருதுத் தன்மையாலுமல்லவா நான் அவ்வாறு நடந்து கொண்டேன். மிருதுத்தன்மை. இல்லவே இல்லை. இதுதான் கோழைத்தனமென்பது, ஐயோ, நான் எவ்வளவு கொடியவன். பொறுப்பற்றவன். ஒரு பெண்னைக் காதலித்து இல்லாத நம்பிக்கை எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்துப் பின்னர் மெல்ல நழுவி விட்டேனே! பெரிய மோசமல்லவா இது. அப்பாவை விட்டு என்னால் வாழ முடியாது. அம்மாவின் அன்பில்லாமல் என்னால் இவ்வுலகில் இருக்க முடியாது, என்பதால் அந்தோ பத்மாவைப் பரிதவிக்க விட்டுவிட்டேன். நான் பொய்ப்பெயர் கூறி ஆள்மாறாட்டம் செய்து பத்மாவிடம் அகப்பட்டுக் கொண்டபோது, "என்னை மோசம் செய்யத் தானே இந்த நாடகம்" என்று அவள் என் மீது குற்றஞ் சாட்ட நான் எவ்வளவு யோக்கியன் போல அதிக ஆத்திரத்துடன் அதற்குப் பதிலளித்தேன். ஆனால் நான் யோக்கியன்தானா? என் போல் பரம அயோக்கியன் யாரிருக்கிறான்?" என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் அவன்.

இந்த எண்ணங்கள் அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த போதுதான் அவன் கண் நோய் கடுமையாக ஆரம்பித்தது. ஒரு நாள் பத்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று கூட அவன் யோசித்தான். காகிதத்தையும் பேனாவையும் கூட எடுத்து வைத்துக் கொண்டான். ஆனால் என்ன எழுதுவது? தன் துரோகத்தை எவ்வாறு அவளிடம் சொல்லுவது? இவ்வாறு நினைத்துக் கொண்டதும் காகிதம் எழுதும் யோசனையைக் கை விட்டான். கட்டிலில் படுத்துக் கொண்டழுதான். அழுவதை விட என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் பத்மாவின் நினைவென்னவோ அவன் உள்ளத்திலிருந்து மறைவதாயில்லை. அது தினந்தோறும் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போவது போல் தோன்றியது. பத்மா பத்மா என்று ஸ்மரித்துக் கொண்டே அவன் காலம் கழிந்தது. மோகனாவை ஒரு நாள் கூட்டுக்கு வெளியே எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அதற்கு "பத்மா பத்மா" என்று கூப்பிடக் கற்றுக் கொடுத்தான். அதுவும் சீக்கிரமே பத்மா என்று கூவப் பழகிவிட்டது.

இவ்வாறு காலம் போய்க் கொண்டிருந்த போது தான் அவன் கருவிழிகளை இருட்படலம் முற்றாகக் கெளவி அவனைக் குருடனாக்கியது. குருடாகிய ஆரம்பத்தில் மனம் சிறிது காலத்துக்கு வேறு திசைகளில் சஞ்சரித்ததாயினும் குருட்டு வாழ்க்கை நிரந்தரமாகிவிட்டது என்றதும், இனி என்ன செய்வது என்ற நினைப்பில் மனதில் ஓர் அமைதி பிறக்கவே செய்தது. அந்த அமைதியிலே மீண்டும் பத்மாவின் நினைவலைகள் கடல் அலை போல் தோன்றி மோத ஆரம்பித்தன.

ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தி நன்னித்தம்பிக் கிளாக்கர் மூலமும், பண்டிதர் சின்னைய பாரதி மூலமும், வேலைக்காரர்கள் டிரைவர் மூலமும் அக்கம் பக்கங்களில் ஓரளவு பாவவே செய்திருந்தது. இது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவி தங்கமணியின் காதுக்கும் எட்டியது.

நன்னித்தம்பியின் மகள் சுசீலா தங்கமணியோடு உள்ளூர் அரசாங்கப் பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவள். நன்னித்தம்பிவீட்டு வாசல் வழியாகத் தங்கமணி போய்க் கொண்டிருந்த போது தற்செயலாகச் சுசீலாவைப் பார்த்தாள். இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது சிநேகிதிகள் நாவில் நடமாடிய ஊர் வம்பில் ஸ்ரீதரும் இடம் பெற்றான்.

"பாவம், அந்தச் சிவநேசரின் மகன் ஸ்ரீதர் இருக்கிறார்களல்லவா? அவருக்கு இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன." என்றாள் சுசீலா.

தங்கமணி "என்ன உண்மையாகவா?" என்று கேட்டு விவரங்கள் யாவையும் தெரிந்து கொண்டாள். அடுத்த வாரம் விடுமுறை முடிந்ததும் இச்செய்தி பல்கலைக்கழகத்து மூலை முடுக்கெல்லாம் பாவியது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவிகள் எல்லோரும் அது பற்றிப் பேசிக்கொண்டார்கள். "அவன் குருட்டு மன்னன் ஈடிப்பஸ் பாகத்தில் நடித்துக் கடைசியில் தானே குருடாகி விட்டான்." என்றான் ஒரு மாணவன்.

தங்கமணி இச்செய்தியைப் பத்மாவுக்குக் கூறிவிட வேண்டுமென்று துடிதுடித்தாள். ஆனால் என்ன காரணமோ விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கி இரண்டு மூன்று தினங்களாகியும் பத்மா, தங்கமணி கண்னில் பட வில்லை. கடைசியில் அவள் சற்றும் எதிர்பாராத சூழலில் பத்மாவைப் பிடித்தாள் தங்கமணி. ரெஜினாவும் அவளும் கொழும்பு மெயின் வீதியில் துணி வாங்கப் போன சமயத்தில் அவர்கள் முன்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் கமலநாதன் இருந்தான். அதன் பின் சீட்டில் பத்மா ஷிப்ட் என்னும் நாகரிகக் கவுன் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் பறங்கிப் பெண் போல் காட்சியளித்தாள். அவள் தலையில் வண்ணப் பூக்களிட்ட ஒரு "ஸ்கார்ப்." கமலநாதனிடம் ஏதோ கூறிச் சிரித்துக் கொண்டு இறங்கிய அவளைத் தங்கமணி வழி மறித்தாள்.

"பத்மா! ஆளை அடையாளமே காணவில்லை. இந்த உடை உனக்குப் பிரமாதம்." என்றாள் தங்கமணி.

"அப்படியா" என்று புன்னகை செய்தாள் பத்மா.

தங்கமணி "உன்னிடம் நான் ஒரு விஷயம் தனியே பேச வேண்டும். இங்கே வா" என்று பத்மாவை நடைபாதையின் ஓர் ஓரத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"நான் ஊரிலிருந்து இவ்வாரம் தான் வந்தேன். ஸ்ரீதருக்குப் பயங்கரமான கண் நோய். இரண்டு கண்களும் பொட்டையாகிவிட்டன. ஒன்றுமே தெரியாதாம். முழுக் குருடனாகிவிட்டார். என்ன வைத்தியம் செய்தாலும் சுகப்படாதென்று டாக்டர் சொல்லிவிட்டாராம்."

"என்ன?" என்று திடுக்கிட்டாள் பத்மா. தங்கமணி "அதற்கென்ன பத்மா? நீதான் புது ஆள் பிடித்து விட்டாயே. யார் இந்த புதிய மச்சான்?" என்று கேலியாகப் பேசினாள் தங்கமணி.

பத்மா பதிலளிக்கவில்லை. "அப்படியானால் அதுதான் அவர் எனக்குக் கடிதம் எழுதவில்லை போலும்" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.

பின்னர் கமலநாதனுடன் அவள் சில சாமான்கள் வாங்க ஒரு கடைக்குள் புகுந்தாள். தங்கமணியும் ரெஜினாவை அழைத்துக் கொண்டு துணி வாங்கப் போனாள்.

வழியில் ரெஜினா "உன் தோழி பத்மாவைப் போன முறை பார்த்தபோது சேலை அணிந்திருந்தாள். இப்பொழுது உடையை மாற்றிக் கொண்டு விடாள். அவள் அணிந்திருக்கும் ஷிப்ட் அவளுக்கு அழகாயிருக்கிறது." என்றாள்.

தங்கமணி வெடுக்கென்று "ஆமாம். ஆனால் ஆவள் உடையை மட்டுமா மாற்றியிருக்கிறாள்? மாப்பிள்ளையையும் அல்லவா மாற்றி விட்டாள்" என்றாள்.

கடையிற் சாமான்களை வாங்கியபின் கமலநாதனின் பின்னே மோட்டர் சைக்கிளில் உட்கார்ந்து போய்க் கொண்டிருந்த பத்மா சிந்தனையில் முழ்கியிருந்தாள். "நல்ல வேளை! எத்தகைய பெரிய விபத்தில் நான் சிக்குதற்கிருந்தேன். ஸ்ரீதர் என்னை ஏற்கனவே மணம் முடித்திருந்தானானால் நான் இப்பொழுது ஒரு குருடனில் மனைவியாகி இருப்பேனல்லவா? அந்தச் சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார். எவ்வளவுதான் பணமும் நடிப்பும் அழகும் இருந்தாலும் குருடனின் மனைவியாகக் காலந்தள்ளுவது இலேசா என்ன?" என்று சிந்தித்த அவள் கமலநாதன் தனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமே என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவனது முதுகைத் தன் கரங்களோல் அன்போடு தடவி விட்டுக் கொண்டாள்.

ஸ்ரீதரிடமிருந்து பத்மா தனது மனதைக் கமலநாதன் பால் மாற்றிக் கொண்டது தந்தை பரமானந்தருக்கு இன்னும் தெரியாது. அதை எவ்வாறு கூறுவதென்று தயங்கிக் கொண்டிருந்த அவளுக்கு ஸ்ரீதர் குருடனாகிவிட்டது ஒரு நல்ல செய்தி போலவே தோன்றியது. "ஸ்ரீதர் குருடனாகிவிட்டான். இந் நிலையில் பத்மா அவனை எப்படிக் கட்டுவது? கமலநாதன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். செய்து கொடுத்து விட்டால் என்ன? என்று அன்னம்மாக்காவை அப்பாவிடம் பேசும்படி தூண்டிக் காரியத்தைச் சாதித்துவிடலாம். எல்லாம் நல்லதுக்குத்தான்." என்றது பத்மாவின் உள்ளம்.

பத்மாவும் கமலநாதனும் பரமானந்தருக்குத் தெரியாமல் தான் நெருங்கிப் பழகி வந்தனர். பத்மா பல்கலைக்கழகத்துக்குப் போகும் வழியில் அல்லது வரும் வழியில் தான் அவர்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். அன்றும் அவ்வாறுதான் அவர்கள் சந்தித்துக் கொண்டனர். மோட்டார் சைக்கிள் சவாரி பத்மாவுக்கு இப்பொழுது சர்வ சகஜமாகிவிட்டது. அதற்குச் செளகரியமாகவே வெளியில் போகும் போது கூட அவள் கவுன் அணியும் வழக்கத்தை மேற்கொண்டாள். முதலில் சற்று தயக்கத்தோடுதான் அவள் இப்பழக்கத்தை மேற்கொண்டாள். பரமானந்தரைப் பொறுத்த வரையில் தம் மகள் நீச்சலுடைப் போட்டியில் கூடப் பங்குபற்றி விட்டதால், இப்பொழுது அவள் என்ன உடையை அணிந்தாலும், அவர் அதைப் பற்றி இலட்சியம் செய்வதில்லை. மேலும் இந்த உடைகள் எல்லாமே நீச்சல் ராணிக்கு இலவசமாகக் கிடைத்த பரிசுகள். எனவே பத்மா தன்னிஷ்டம் போல் அவற்றை அணிந்து மகிழட்டும் என்று அவர் விட்டு விட்டார். இன்னும் அக்கம்பக்கத்திலுள்ள பெரிய இடத்துப் பெண்கள் பலரும் இவற்றை அணிந்து கொள்வதைத் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக அவர் பல தடவை பார்த்திருக்கிறார். இந் நிலையில் அவற்றை அணியக் கூடாதென்று கூறுவது சுத்தக் கர்நாடகம் என்பது அவர் நினைப்பு. பத்மா இவ்வாறு புது மோஸ்தர் உடைகளை அணிவதைப் பற்றி அடுத்த வீட்டு அன்னம்மாக்க மட்டும் ஒரு நாள் ஏதோ கூறினாள். அதற்கு "போங்க அன்னமாக்கா. இன்று எல்லாப் பெண்களும் தான் இப்படி உடுத்துகிறார்கள். நான் மட்டும் இப்படி உடுத்தினால் என்னவாம். நீஙக கூட என் வயசாயிருந்தால் கட்டாயம் இப்படி உடுத்த விரும்புவீர்கள். ஏன் இந்த உடை எனக்கு அழகாயில்லையா?" என்றாள். "அழகுக்குக் குறைச்சலில்லை. அடக்கம் தான் குறைவாயிருக்கிறது." என்றாள் அன்னம்மாக்கா. "அது பரவாயில்லை" என்றாள் பத்மா.

பத்மாவும் கமலநாதனும் வழியில் பலதையும் பேசிக் கொண்டார்கள். கமலநாதன் "பத்மா, எப்போது எங்கள் கல்யாணம்?" என்று கேட்டான். "சீக்கிரமே ஏற்பாடு செய்கிறேன். பாருங்கள்" என்றாள் பத்மா.

ஸ்ரீதர் கண்கள் குருடானது பற்றி சுழிபுரம் கந்தப்பசேகரர் பங்களாவிலும் பேச்சடிப்பட்டது. யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற புற்றுநோய்ச் சங்க ஆண்டு விழாவுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த டாக்டர் நெல்சன் இச்செய்தியை அதிகார் அம்பலவாணரிடம் கூறியிருந்தார். அவரே இச்செய்தியைக் கந்தப்பசேகரர் பங்களாவுக்கு எடுத்து வந்தவர். இப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கிச் செல்வதில் அதிகார் அம்பலவாணருக்கு எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சி.

"மிஸ்டர் கந்தப்பசேகரர்! உங்கள் மகள் அதிர்ஷ்டசாலி. தப்பி விட்டாள்." என்றார் அவர்.

"என்ன விஷயம்? தெளிவாக சொல்லுங்கள்." என்றார் கந்தப்பசேகரர்.

"அதாவது ஸ்ரீதருக்கு இரண்டு கண்களும் சந்திர சிகிச்சை முடியாத அளவுக்குப் பொட்டையாகிவிட்டனவாம். நல்ல வேளை! நீங்கள் விரும்பியபடி திருமணம் சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்திருக்குமானால் உங்கள் மகள் இப்பொழுது குருடன் மனைவியாகியிருப்பாளல்லவா? உங்கள் நல்ல மனது காரணமாகவே கடவுள் அப்படிப்பட்ட சோதனையை உங்களுக்கு ஏற்படுத்தவில்லை." என்றார் அதிகார் அம்பலவாணர்.

கந்தப்பசேகரர் அதை அப்படியே ஒப்புக் கொண்டார். டாக்டர் அமுதா கூட தன்னை ஸ்ரீதருக்கு வாழ்க்கைப்படாது காப்பாற்றியது நல்லூர்க் கந்தன் தான் என்று நம்பினாள். "இல்லாவிட்டால் நான் குருடன் மனைவியாகியிருப்பேனே" என்று கூறிக் கொண்டாள் அவள்.

ஸ்ரீதரின் கண்களைப் பற்றிப் பேசப்பட்ட மற்றோரிடம் கிளாக்கர் நன்னித்தம்பி வீடு. தினசரி வீடு போய்க் கை கால் அலம்பிச் சாப்பிட்டு முடித்ததும் மனைவி செல்லம்மாவிடமும் மகள் சுசீலாவிடமும் சிறிது நேரம் வெற்றிலை போட்டுப் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். ஸ்ரீதர் தன் பார்வையை முற்றாக இழந்து விட்ட அன்று இரவு நன்னித்தம்பி அத்துக்கச் செய்தியை மனைவிக்கும் மகளுக்கும் மிக உணர்ச்சியோடு சொன்னார்.

"பாவம் சிவநேசர் மகன். மிகவும் நல்லவன். தகப்பனை விட மேலான குணம். அவரிடம் அகங்காரமும் மிடுக்கும் உண்டு. ஸ்ரீதரிடம் அவையுமில்லை. குழந்தை உள்ளம் படைத்த அவனுக்கு இப்படி நேர்ந்ததே" என்று சோகத்தோடு சொன்னார் அவர். சுசீலா தந்தை கூறிய விவரங்களைக் கேட்டுத் திகைத்தாள். "யாருக்கு கண் போய் விட்டதென்று சொன்னீர்கள்? ஸ்ரீதருக்கா? பாவம், அன்று உங்கள் கந்தோரில் என்னோடு பேசியபோது அவர் கண்கள் நன்றாகத்தானே இருந்தன? மிகவும் அழகான கண்கள் என்று கூட நினத்தேன். பாவம், நல்ல குணம். வேடிக்கையாய்ப் பேசினாரல்லவா அப்பா? அவருக்கா கண்கள் போய்விட்டன?" என்று கேட்டாள் அவள்.

அதற்கு நன்னித்தம்பியர் "ஆம் சுசீலா அவனுக்குத்தான் கண்கள் போய்விட்டன. எல்லாம் அவரவர் தலைவிதி. அதை யாரால் அழித்தெழுத முடியும்." என்றார்.

நன்னித்தம்பியர் மனைவி செல்லம்மாவோ, ஸ்ரீதர் சிறு குழந்தையாயிருக்கும் போது அவனைத் தன் மடியில் தூக்கி வைத்து விளையாடியவள். அதை நினைவுப்படுத்திப் பேசினாள் அவள். "உங்களுடன் நான் அமராவதி வளவு விசேஷங்களுக்கு வரும்பொழுதெல்லாம் ஸ்ரீதரைத் தூக்கி வைத்து விளையாடியிருக்கிறேன். மிகவும் அழகாயிருப்பான். என்னை மாமி என்று கூப்பிடுவாள். பாவம் அவனுக்கு இப்படி வந்ததே" என்று வருந்தினாள்.

இவை நடந்து சற்றேறக் குறைய ஒரு மாதங் கழிந்த பின்னர் பாக்கியத்தின் வேண்டுகோளுக்கிணங்க சின்னைய பாரதியின் முயற்சியால் அமராவதி வளவுக் கோவிலில் ஸ்ரீதரின் பெயரில் விசேஷ பூசைகள் சில தொடங்கப்பட்டன. அவனது சாதகத்தைப் பார்த்த பிரபல சோதிடர் ஒருவர் சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு ஒரு மாத காலம் பூசை செய்து நவக்கிரக சாந்தியும் செய்தால் ஸ்ரீதர் நாளடைவில் தன் கண் பார்வையைப் பெற இடமிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி ஏராளமான பணச் செலவில் பூசைகள் ஆரம்பமாயின.

பூசையின் ஆரம்ப தினத்துக்குத் தந்தை சிவநேசர், தாய் பாக்கியம் ஆகியவர்களைத் தவிர சின்னைய பாரதியும் மனைவியும் கிளாக்கர் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, மகள் சுசீலா ஆகியோரும் வந்திருந்தனர். நாதசுரம் வேணு தனது மேளக் கோஷ்டியுடன் வந்திருந்தான். இவர்களைத் தவிர அமராவதி வேலையாட்கள் எல்லோரும் கோவிலில் கூடியிருந்தார்கள். அர்ச்சகர் பஞ்சநாத ஐயர் பூசைகளை வழக்கம் போல் நடத்தி வைத்தார். பண்டிதர் சின்னைய பாரதியும் பிராமணராதலால் பூசைகளில் பஞ்சநாத ஐயருக்குத் துணை புரிந்தார்.

ஸ்ரீதர் பட்டுடுத்துப் பொட்டிட்டு மிகக் கம்பீரமாகவே விளங்கினானென்றாலும் தாய் பாக்கியம் அவனைத் தன் கரங்களால் வழிகாட்டி அழைத்து வந்த காட்சி மிகப் பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்தில் ஏறுபோல் நடக்கும் அவன் அன்று படிகளில் தட்டுத் தடுமாறி ஏறிய காட்சியைக் கண்டு எல்லோருமே கலங்கிவிட்டார்கள். சுசீலாவின் கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. சிவநேசரும் தன் கண்களைத் தன் சால்வையால் துடைத்துவிட்டுக் கொண்டார். பூசை செய்ய வந்த ஐயரின் கண்கள் கூடக் கலங்கின.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னோடு சிரித்து உரையாடிய ஸ்ரீதருக்கு இப்படித் திடீரெனக் கண் போய்விட்டதை நினைத்ததும் சுசீலா மனம் கலங்கி விட்டது. ஐயோ, பாவம், ஓர் இளைஞனுக்கு அவன் திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் இப்படியும் நேரலாமா என்று வருத்தப்பட்டாள் அவள்.

அன்றிரவு பூசை முடியும் போது பத்து மணியாகிவிட்டது. மாரிகாலம், கடும் இருள். நன்னித்தம்பியரும் செல்லம்மாவும் சுசீலாவும் அமராவதி வளவிலிருந்து அரை மைல் தூரத்திலிருந்த தங்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். நன்னித்தம்பியர் டோர்ச் லைட்டை அடித்துக் கொண்டு முன்னால் போனார். மனைவியும் மகளும் பின்னால் சென்று கொண்டிருந்தனர். முழு அமைதியுடன் விளங்க வேண்டிய அவ்விரவை வயல்களிலிருந்த தவளைகள் தம் சுருதியால் விண் கூவ வைத்திருந்தன. நன்னித்தம்பியர் எப்போதுமே ஏதாவது பேசிக் கொண்டிருப்பவர். ஸ்ரீதரைப் பற்றியும் சிவநேசரைப் பற்றியும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். மனைவி செல்லம்மா அவரை ஆமோதித்துப் பேசிக் கொண்டு வந்தாள்.

நன்னித்தம்பியரின் ஒரு வழக்கம் என்னவென்றால் அவர் பேசுவதற்குப் போதிய எதிரொலி இருக்கிறதா என்று அவதானித்துக் கொள்வதாகும். கூட வருபவர்கள் போதிய ஆமோதிப்பு வசனங்கள் கூறாவிட்டால் அவரால் அதைச் சகிக்கவே முடியாது. இது விஷயத்தில் செல்லம்மா சாடிக்கேற்ற மூடி. அவர் ஒன்று பேசினால், அவள் ஒன்பது பேசி ஆமோதிக்கத் தவறுவதில்லை. இன்றும் அவள் பேசிக் கொண்டே வந்தாள். என்றாலும் சுசீலா ஒன்றுமே பேசாது மெளனமாயிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே திடீரென "சுசீலா எங்கே? ஏன் பேசாமல் வருகிறாய்?" என்று கூறிக் கொண்டே தமது டோர்ச் லைட்டை அவளது முகத்துக்கு நேராகப் பிடித்தார் அவர். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அப்படியே திகைக்க வைத்துவிட்டது. சுசீலா தன் மேல் உதட்டைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் ரேகையிட்டு ஓடிக் கொண்டிருந்தது. "என்ன சுசீலா ஏன் அழுகிறாய்?" என்றார் நன்னித்தம்பியர். அவள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுவிட்டாள் என்றாலும் சமாளித்துக் கொண்டு தலையை ஆட்டி "ஒன்றுமில்லை" என்றாள்.

செல்லம்மாவும் மகளின் முகத்தைப் பார்த்தாள். "பாவம் அந்த ஸ்ரீதரின் குருட்டுத் தோற்றத்தைக் கண்டு அதற்கு இரங்கி அழுகிறாள். வேறென்ன. சுசீலாவுக்கு மிகவும் இளகிய மனசு. அவள் எப்பொழுதும் இப்படித்தான் எடுத்ததற்கெல்லாம் அழுது விடுகிறாள். அவளை நாம் இங்கே அழைத்து வந்திருக்கக் கூடாது. எங்கள் வீட்டுக் கோழி செத்ததற்குக் கூட இரண்டு நாள் அழுதவளல்லவா அவள்?" என்றாள்.

நன்னித்தம்பியர் "ஆனால் கோழியின் மீது சுசீலாவுக்கு மட்டும் தான் பிரியம் என்று எண்ணி விடாதே செல்லம்மா. எனக்கும் கோழி என்றால் பிரியம்தான். அதுவும் சூப்பு வைச்சால் அதிகம் பிரியம்." என்றார்.

சுசீலாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. தன் அழுகையையும் மீறிச் சிரித்துவிட்டாள் அவள். "அழுத பிள்ளை சிரிக்குது" என்றார் நன்னித்தம்பியர். வேடிக்கையாக, "பார் அப்பாவை. யார் அழுதது? நான் அழவில்லை" என்றாள் சுசீலா.

[தொடரும்)