2012 - 7

பாயில் சரிகிற இரவுகளில், ‘அப்பனே முருகா!’ என்று ஆசுவாசத்துடன் படுக்கிற காலமொன்று இருந்ததை பரஞ்சோதி கண்டிருக்கிறாள். அது வெகுகாலத்துக்கு முந்தி. அம்மாச்சிபோல் அந்தளவு ஆசுவாசமாகத் தூங்கச் சரிந்த வேறெவரையும் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. ‘அப்பனே, சன்னதியானே!’ என்று அவள் முனகிச் சரியும்போது, அந்த ஒலியலைகளால் உலகமே நிறைந்து பனைவெளிக் காற்றும், தள்ளியிருந்த விரிகடல் அலையும்கூட அடங்கித் தோன்றும். அக்கணத்திலிருந்து விடியும் முன் வரும் எக் கணத்திலும், எருது வாகனமேறி யமதர்மன் வந்துவீசக்கூடிய பாசக் கயிற்றில் மிக இலகுவாக தன் உயிரைக் கழற்றிக் கொளுவிவிடும் நிறைவாழ்வின் பூரணம் அவளில் இருந்தது. விடிந்தெழுந்தால்தான் அன்றைய கடமைகள் பாரமாகும். அன்றைய நாளின் பூர்த்தி, அன்றைய வாழ்வின் பூர்த்தியாய் ஆசை, அவா, அவதி யாவுமறுத்து விரிந்திருந்த காலம் அது.

இப்போது அது இல்லை.

அம்மா ஆச்சிப்பிள்ளையின் காலத்தில் அது மாறத் துவங்கியிருக்கலாம். அம்மா, ‘போய்ச் சேர ஒரு நேரம் வருகிதில்லையே!’ என்ற ஏக்கத்துடன்தான் பல இரவுகளையும் படுத்திருந்தாள். ஆறு பிள்ளைகளையும் அரவணைத்து வளர்க்கவேண்டிய அவசியம் இருந்த நிலைமையிலும், அவள் எல்லாம் மறந்து அக்கணமே உயிர் கழற்றி எறியும் அவதிகொண்டிருந்தாள். வாழ்க்கை அவளை அந்தளவு அழுத்தியிருந்தது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அழுத்தம். அப்போது படுக்கவாவது முடிந்திருந்தது. ஒரு பாய், விரிக்க ஒரு திண்ணை, காற்று வீசும் வெளி, இடிமுழக்கமற்ற இரவு, ஆவிகளும் பேய்களும் பற்றியவை தவிர்த்து வேறு பயம் விளைக்காக் கனவு எல்லாம் இருந்தன. இப்போது படுக்க முடிவதே பெரிய காரியமென நினைக்கிற அளவுக்கு நிலைமைகள் ஆகியிருக்கின்றன. படுக்க முடிந்தவர்கள் பாக்கியவான்களாக இருந்தார்கள். ஒரு கண் நித்திரை கொள்வதென்பது பெரிய புண்ணியத்தின் பலனாகவிருந்தது. ஆசுவாசம்பற்றி நினைப்பதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். ஆகாமலும் போகலாம். அப்போது அடைந்ததே ஆசுவாசம்தான் என நினைத்துவிட்டுப் போகவேண்டும்.
படுத்திருந்து அத்தனையும் நினைத்தாள் பரஞ்சோதி.

அவளது புறப்பாட்டில் விருப்பமின்மையோடிருந்த சங்கவியிடம் சொல்லிக்கொண்டு, அன்று மாலையாகிற வேளையில் பஸ்நிலையம் சேர்ந்தவள் வந்த முதல் யாழ்ப்பாணம் பஸ்ஸிலேயே ஏறிவிட்டிருந்தாள். பஸ் முகமாலை தாண்டியபோதே இருட்டிவிட்டிருந்தது. கொடிகாமத்தில் இறங்க நிறைந்த ஜனங்களோடு பருத்தித்துறை புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது கடைசி பஸ். அது கடைசி பஸ் என்பதை சூழல்தான் தெரிவித்தது. அருகிய ஜன நடமாட்டமும், பஸ் புறப்பட்டுச் சிறிதுநேரத்தில் பூட்டிவிடத் தயாராக பாதி திறந்த கதவுகளுடன் இருந்த கடைகளும், சைக்கிள் மோட்டார்ச் சைக்கிள்களில் தெரிந்த விரைவும் சொன்னது வேறில்லை.

கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு ஒன்றோடு ஒன்று முறுகிக்கொண்டிருந்த பத்து பன்னிரண்டுவரையான அமானி நாய்கள், பஸ் புறப்பட்ட பின் எங்கேனும் ஒதுங்கிவிடும். அவைகள் பார்த்துக் குரைப்பதற்கான சூழ்நிலை மேலே இருக்காது.

பயணம் தப்பினால் மரணம் என்னுமளவுக்கே ஒரு முன்னிரவுப் பிரயாணத்தின் நிலைமைகள் இருந்த காலம் அது. மரணமென்று இல்லையெனினும், சிதைவுகள் நிச்சயமாகியிருந்தன. சட்டம் ஒழுங்குகளின் முப்பதாண்டுப் பராதீனம் அந்த நிலைமையை உண்டாக்கியிருந்தது. இதை யுத்தத்தின் அனர்த்தம், உள்நாட்டுப் போரின் பின்விளைவென்ற எவ்விதச் சொற்பாட்டிலும் பொருத்திவிடலாம். அதுதான் பயத்தை எழுப்பியது. பயம் அனைவரிலும் ஓடுகின்ற அவசத்தைக் கிளர்த்திக்கொண்டிருந்தது.

அங்கிருந்து ஒரு கிமீ தூரத்திலுள்ள வரணிச் சந்திக்குப் போய் வேம்பிராய் றோட்டில் திரும்பிவிட்டால், எந்த வீட்டிலும் அந்த இரவுக்கு ஒரு தங்குமிடம் அவளுக்குக் கிடைத்துவிடும். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியில் அவள் வசித்திருக்கிறாள். 1994இன் வலிகாமம் யுத்தம் ஒட்டுமொத்தமான மக்களையும் தெற்கு நோக்கி விரட்டியபோது, அவள் பிள்ளைகளோடு வந்து காலாறிய இடம் வரணியாக இருந்தது.
இரண்டறைகளும் விறாந்தையும் கொண்ட அந்தக் கல்வீட்டின் மனிதர், குழந்தைகளுக்காகவே விறாந்தையில் ஒதுங்க இடம்கொடுத்தார். மூன்று மாதங்களுக்குள் அவர்கள் வெளிநாடு பயணமாக, அங்கிருந்து எழுதுமட்டுவாளுக்கு ஓடிய 2000ம்வரை அந்த வீட்டை அவளே அவர்கள் விருப்பத்தின் பேரில் காபந்து பண்ணிக் கொடுத்திருந்தாள். பின்னால் அந்த வீடும், அயல் வீடுகளும் இடிந்து சிதறித்தான் போயின. இன்றும் சிதைவுகளின் அவலம் சொல்லிக்கொண்டே அவை கிடக்கின்றன. சிதைவுகளை பிரான்ஸிலுள்ள வீட்டுச் சொந்தக்காரருக்கு அவள் அவ்வப்போது ஞாபகப்படுத்துவதும், தாங்கள் வந்து ஆகவேண்டியவற்றைக் கவனிக்கும்வரை அதிலே ஒரு ‘கண்’ வைத்திருக்க அவர்கள் சொல்லுவதுமாய் கடிதங்களில் தகவல் பரிமாற்றம் இன்னும் அவர்களுக்குள் இருக்கின்றது. அவளும் அவ்வப்போது வடமராட்சி வரும் நேரமெல்லாம் வீட்டை ஒரு எட்டு எட்டிப்பார்க்காமல் போவதுமில்லை. அவளது நன்றி விசுவாசத்தில் அயல் சிலிர்த்துப்போகிறது. அப்படியான ஊரில் ஒரு இரவைத் தங்க அவளுக்குச் சுலபமாகவே முடியும்.

ஆனால் அப்படியான ஒரு பாதுகாப்புள்ள இடத்தை அடைவதற்குள் இரைப்பட்டுவிடக்கூடிய அவதி எந்தப் பெண்ணிலுமேதான் இருந்துகொண்டிருந்தது. அவ்வாறு இரைப்பட்ட கதைகள் பல காற்றிலேறி எந்நேரமும் அலைந்துகொண்டிருந்தன. அவற்றின் எச்சரிக்கையைக் கவனமெடுக்காதவர்கள் பின்னால் அவர்களே எச்சரிக்கையாகிப் போயிருக்கிறார்கள்.

கொடிகாமம் பஸ்நிலையத்திலிருந்து வரணிச் சந்திக்கு வருவதற்குள் இடையிட்டிருந்த வெளியைத் தாண்டுவதை, இடையிடையிட்ட தோட்டக் காணிகளுடன் குடிமனைக் கூட்டங்கள் அங்கங்கே இருந்தபோதும் அச்சத்தை விழுங்கிக்கொண்டே செய்யவேண்டியிருந்தது.
இன்னொரு இடம் இன்னொரு வகையான அனர்த்தம் விளைப்பது. அதிலே இதயத்தைப் பிய்த்தெறியும் சோகமொன்று அப்பிக் கிடந்தது. சற்றொப்ப இறுதிப் போர் முடியும்வரை வெள்ளை நடுகல் வரிசைகளைக்கொண்டு மாவீரர் துயிலும் இல்லமாக இருந்த அந்த இடத்தை, போர்நிலத்து எந்திரங்கள் இடித்தும் உடைத்தும் கிண்டியும் பாழ்படுத்திவிட்டிருந்தன. அதன் மேல் அப்போது ஒரு ராணுவ முகாம் இருந்துகொண்டிருந்தது.

அந்நிலத்தில் உறங்கிக் கிடந்த மாவீரரின் நூறு நூறான ஆவிகளெல்லாம் அந்தரித்தெழுந்து அக்கம்பக்கத்து காணிகளில், அண்மித்த வெளிநிலத்தில் கூவித் திரியும் பயங்கரம் நிலவுவதாய் அயல் அடிக்கடி சொல்லியது. தங்களின் ஈகங்கள் வீணான சோகத்தில் வெறிபிடித்து அலையும் அந்த ஆவிகளின் கூச்சல் வெகு கடூரமாய் இருந்ததென்றும், அவை ரத்தவெறி கொண்டலைந்தனவென்றும் சொல்லப்பட்ட கதையை எல்லோரும் நம்பினார்கள். ராணுவத்தினர் சிலரே இரவுகளில் தாம் கேட்ட அந்த அவலக் குரல்களைப்பற்றி தெரிவித்திருக்கிறார்கள். சூழவிருந்த பல வீடுகளும் அது காரணமாயே அவசர அவசரமாய் வெறுமை கொண்டன.

அவ்வளவு அவத்தைகளுக்கும் ஆளாகாமல் கடைசி பஸ் பிடித்து நெல்லியடிச் சந்தி சேர்ந்து, அங்கிருந்து ஒன்றரை கிமீயை நடந்து அவள் அல்வாயில் மகளின் வீடு வந்துசேர முடிந்திருந்தாள்.

வீட்டில் லைற்றுகள் எரிந்துகொண்டிருந்தன. கூடத்துள் சாந்தமலர் இருந்திருந்தாள். மேசையில் வர்த்தினி அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். மயூரன் வீட்டில்தான் இருக்கவேண்டும். அவனது சைக்கிள் போர்டிகோவில் வர்த்தினியின் சைக்கிளோடு நின்றிருப்பதைக் கொண்டு பரஞ்சோதி யூகப்பட்டாள். அப்போதுதான் வெளியிலிருந்து வந்தவனாய்க்கூட இருக்கலாம். ஆனாலும் அந்தநேரத்துக்குள் வந்துவிட்டான். அதுதான் முக்கியம்.

கூடத்துள் செய்திகள் கேட்பதற்கு மட்டுமாக, வேறு நிகழ்ச்சிகள் பார்ப்பதை சாந்தமலர் ஒப்புக்கொள்ளமாட்டாள், ஒரு ரெலிவிஷன் இருக்கிறது. அது சத்தமடங்கிக் கிடந்தது. எட்டு மணிக்கா ஒன்பதுக்கா செய்தி ஒளிபரப்பாகின்றது என்பது பரஞ்சோதிக்கு ஞாபகமில்லை. அது எட்டு மணிக்காயிருந்தால் முடிந்திருக்கும். ஒன்பது மணிக்காயிருந்தால் இனிமேல்தான் சாந்தமலர் ரெலிவிஷன் போடுவாள். ஒன்பது ஒன்பதரைக்கு அங்கே சாப்பாட்டு நேரம். மேலே படுக்கைதான்.

செய்தியும் சாப்பாடும் ஒரே நேரத்தில் முடிந்தன. முக்கியமான தகவலேதும் இரண்டு பேரிடமுமே பரிமாற இல்லை. ‘எதாவது தேவையெண்டா கூப்பிடுங்கோ’ என்றுவிட்டு சாந்தமலர் படுக்கப்போய்விட்டாள்.

அவள்கூட தூங்காமல் விழித்திருந்து மயூரனை எவ்வாறு அவனது சினேகிதங்களின் கூட்டிலிருந்து விலக்கியெடுத்து ஒழுங்கான ஒரு பிள்ளையாய் வளர்த்தெடுப்பது என்பதுபற்றியோ, வர்த்தினியை காபந்து பண்ணி நல்லபடி ஒரு கல்யாணத்தைச் செய்துவைத்து வெளிநாட்டுக்கு அனுப்புவதுபற்றியோ, அல்லது பத்து வருஷங்களுக்கு முன்னால் மறைந்துபோன தன் கணவன் வைத்தீஸ்வரனைப் பற்றியோகூட, யோசித்துக்கொண்டு கிடக்கலாம்.

தசையும் நரம்புகளும் அவ்வகை உறவின் நினைவுகளை மட்டுமல்ல, அதனால் தீர்க்கப்படவேண்டிய உணர்ச்சிகளையும் கொண்டிருக்கின்றன. மிஞ்சிமிஞ்சிப் போனால் முப்பத்தெட்டு வயதுதானே ஆகிறது சாந்தமலருக்கு?

செய்ய பலது இல்லாவிட்டாலும், யோசிக்க அவரவருக்கும் நிறையவே கிடந்தது.

பரஞ்சோதியின் பார்வையில் வைத்தீஸ்வரனின் மாலையணிவித்து உயரச் சுவரில் கிடந்த படம் விழுந்தது. அவளுக்கு நல்ல ஞாபகம், நான்கு வருஷங்களுக்கு முன்பு, அதற்குப் பக்கதத்திலேதான் ஆனையிறவுச் சமரில் இறந்துபோன அவளது மகன் சாந்தகுமாரின் படமும் மாலைபோட்டு வைக்கப்பட்டிருந்தது. அவன் மாவீரனான புதிதில் சாந்தமலரே படம் கொண்டுபோய் கடையில் கொடுத்து பெரிதாக்கி பிறேம் போட்டுவந்து வைத்தது அது.

பின்னர் ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வந்ததும் வராததுமாய் சாந்தகுமாரின் போட்டோவைக் கழற்றி சட்டங்களை நொருக்கி படத்தை தனியாகக் கழற்றியெடுத்தாள் சாந்தமலர். ‘ஏன், பிள்ளை?’ என்று பரஞ்சோதி பதற, ‘இனிமே இந்தமாதிரி புலி யூனிபோம் போட்ட படங்களை வீட்டில வைக்காம விடுறதுதான் நல்லமம்மா. மயூரன் வளந்து வாறான். வெளிவெளியாய்க் காட்டாமல்தான் சில ஞாபகங்களை இப்ப நாங்கள் வைச்சிருக்கவேணும்’ என்றாள் அவள்.

‘அவன்ர படங்களுக்க உதுதான் நல்ல வடிவு’ என்று மனவருத்தப்பட்ட தாயை, ‘அப்பிடியெண்டா தாறன், கொண்டுபோய் அங்க கனகாம்பிகைக் குளத்தில வைக்கிறியளோ?’ என்று கேட்டாள்.

‘அங்க ஒண்டிருக்கு.’

‘அப்ப இதை எறிஞ்சிடுவம். இஞ்ச வேண்டாம். குணாளனுக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது. சங்கவி தேடித் திரியிறாள். காணாமல்ப் போன ஆக்களைப்பற்றின கூட்டம், ஊர்வலத்துக்குப் போயிட்டு இஞ்சதான் வந்து நிண்டுபோறாள். இதெல்லாம் ஒரு அடையாளமாய் இந்த வீட்டில விழுந்திடும், அம்மா.’

பரஞ்சோதி அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு எல்லாம் விளங்கியிருந்தது. சாந்தமலரும் யார்மீதும் கோபித்துக்கொண்டு அவ்வாறு சொல்லவில்லை. 2006இன் வடபகுதி நிலைமை புலிகள் தொடர்புள்ள எல்லாக் குடும்பங்களையும் அவ்வாறு இயங்கும்படி வற்புறுத்துவதாகவே இருந்தது.

அவர்கள் கனவுகளில் வந்துபோயிற்று ஒரு வெள்ளை வாகனம்.

சாந்தமலர் பல தடவைகளிலும் கண்டிருக்கிறாள், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு வெள்ளைப் பிரேத வான் நிற்பது. அதுபோல நூறு நூறு வெள்ளை வான்கள் வடபகுதியெங்கும் சுற்றிச் சுழன்று திரிந்தன. அவற்றில் பிரேதம் எடுத்துச் செல்லும் வான் எது? பிரேதமாக்க எடுத்துச் செல்லும் வாகனம் எது? அவளின் இரவுகளைப் பாழ்படுத்த அந்த வெள்ளை வான் கனவு போதுமாயிருக்கும்தான்.
அல்வாயிலிருந்து 1994ல் தென்மராட்சிக்கு ஓடுகிற நிலைமை ஏற்பட்டது உண்மையில் தனது குடும்பத்துக்கு நன்மை- தீமை எதுவாக இருந்ததென பலவேளைகளிலும்போல், அப்போதும் யோசித்துப் பார்த்தாள் பரஞ்சோதி. இரண்டுமாகவே அது இருந்ததாய்ப் பட்டது. ஒரு உக்கிரத்தில் மனத்தைச் சிதற வைப்பதும், பின் மெதுவாக அமைதிகொள்ளச் செய்வதுமான பல சம்பவ அடுக்குகளால் நிறைந்திருந்தது அக்காலப் பகுதி. அவளால் இனி மனத்தில் எழுத முடியாது. எழுத்துக்களில் அடங்காமல் திமிறி நிற்கும் நிகழ்வுகள் அவை. அவை நாளும் நாளும் விரிவும் ஆழமும் கண்டுகொண்டே இருக்கின்றன. எத்தனை தடவைகள்தான் அழித்தழித்து எழுதிவிட முடியும் ஒருவரால்?
ஓ.எல். பரீட்சை பிரத்தியேகமாய் எடுப்பதற்கு கணித பாட ரியூசன் வேண்டுமென்று சாந்தன் சாவகச்சேரிக்கும், சாந்தரூபி கச்சேரியடிக்கும் போய் படித்துக்கொண்டிருந்தனர். படிக்கிறானோ இல்லையோ ஒழுங்காக ரியூசனுக்குப் போய்வந்துகொண்டு இருந்தான் சாந்தன். சாந்தரூபி போவதையும் வருவதையும் எழுதுவதையும் படிப்பதையும் வைத்துப்பார்த்தால், சாந்தன் எதுவுமே படிக்கவில்லை என்றுதான் தோன்றியிருக்க முடியும். இதில் யார் நேரத்தை மினக்கெடுத்தி விளையாடித் திரிகிறார்களென்பதை பரஞ்சோதியால் கண்டுகொள்ள முடியவில்லை. ‘என்னெண்டான்ன செய்யுங்கோ. ரண்டுபேருக்கும் சொல்லிப்போட்டன். இதுதான் கடைசிச் சோதினை. பாஸ் பண்ணினாச் சரி, இல்லாட்டி கனகாம்பிகைக் குளத்தில கொண்டுபோய் விட்டிடுவன். மிளகாயைச் செய்துகொண்டு காலத்தைக் கழியுங்கோ’ என்று பொதுப்படச் சொல்லி முடித்துக்கொண்டாள்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலிருந்து சாந்தமலர் வீடு வந்திருந்த நேரம். சங்கவி வீட்டில் இருந்திருந்தாள். வாசலில் பெடியளோடு பேசிக்கொண்டு நின்றிருந்த சாந்தனும் உள்ளே வந்துவிட்டான். சாந்தரூபியைத் தவிர எல்லோரும் வீட்டில். பொழுதுபடுகிற நேரமாகிவிட்டது, இன்னும் அவளைக் காணவில்லையென்ற பதற்றத்தில் பரஞ்சோதி. அப்போதுதான் சாந்தமலரிடமிருந்து அந்தக் கேள்வி பிறந்தது. ‘ரூபி எப்பவும் உப்பிடித்தானோம்மா? உந்தமாதிரித் திரியிறதெண்டா, என்னிட்ட ஒரு உதவியும் இனி கேக்கப்படாது.’
பரஞ்சோதியால் என்ன சொல்ல முடியும்?

அப்போது திடீரென்று வாசலிலே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. கையில் புத்தகம் கொப்பிகளுடன் இறங்கினாள் சாந்தரூபி. மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த வாலிபனையும் உள்ளே வர வற்புறுத்தி அழைத்தாள்.

அந்த நேரம் வரையில், யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்னை, வாகனமெதுவும் ஓடவில்லைப்போலும், அதனால்தான் தெரிந்த அல்லது கூடப்படிக்கிற சிநேகிதியின் அண்ணனோ யாரோ அவளை வீட்டில் கொண்டுவந்துவிட நேர்ந்திருக்கிறது என்பதே அனைவரதும் எண்ணமாகவிருந்தது. ஆனால் அவனை அமரச் சொன்ன சாந்தரூபி சங்கவியை தேநீர் வைத்துவரச் சொன்னபோதுதான் அது ஆபத்துதவிகளின் வரவேற்பல்ல என்பது தெரிந்தது.

சாந்தரூபியின் அகலமான சிரிப்பு அவர்களுக்குள் இருந்த உறவு என்னவென்பதை ஊகிக்க இடம் கொடுத்தது. சாந்தமலர் சாந்தனைத்தான் திரும்பிப் பார்த்தாள். ‘ஆம்பிளப்பிள்ளையெண்டு வீட்டில இருக்கிறாய், இளைய சகோதரங்கள் இந்தமாதிரி அலைஞ்சு திரியிறதக் கண்டிக்க மாட்டியோ?’ என்பதுபோல் இருந்தது அது. அதை விளங்கிக்கொண்ட சாந்தனும் மௌனமாய்த் தலைகுனிந்து , ‘இது உங்களுக்கத்தான் புதுசு. இதில தலையிட்டு நான் மூக்கையும் உடைச்சுக்கொண்டன்’ என மனத்துக்குள் புறுபுறுத்தபடி இருந்துகொண்டிருந்தான்.

பரஞ்சோதி அந்தக் களத்திலில்லாமல் தூரத்தில் வெட்டிவைக்கப்பட்ட காய்போல அமர்ந்திருந்தாள். அப்போதுதான் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த மென்குரல் மாற்றி, ‘இது சில்வெஸ்ரர்’ என்று அவர்களுக்கு ஒரு மேலோட்டமான அறிமுகத்தைச் செய்துவைத்தாள் சாந்தரூபி.

எல்லோரும் இருந்தபடியே திகைப்பில். அது தனக்கு எதுவுமே இல்லையென்பது மாதிரி தொடர்ந்து தன் சிநேகிதனுடன் கதைத்துக்கொண்டிருந்தாள் ரூபி.

சங்கவி தேநீர் கொண்டுவர தானே எழுந்துபோய் சில்வெஸ்ரருக்கு எடுத்துக்கொடுத்தாள். அது மேலும் இருந்து கதைப்பதற்கான சூழ்நிலையைக் கொண்டிருக்கவில்லையென்பது சில்வெஸ்ரருக்குத் தெரிந்திருக்கவேண்டும். தேநீரை அவசரமாய்க் குடித்துவிட்டு, யாரிடமென்றில்லாமல், ‘போட்டுவாறன்’ எனச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான். சாந்தரூபி வாசல்வரை போய் வழியனுப்பிவிட்டு வந்தாள்.

ரூபி வர சாந்தமலர் கேட்டாள்: ‘சோதினை எப்ப துவங்குது, ரூபி?’

‘வாற மாசம் பதினைஞ்சாம் தேதி, அக்கா.’

‘பாஸ் பண்ணியிடுவியோ?’

‘பாஸ் பண்ணியிடுவனக்கா.’

‘ம். இப்ப வந்து போற பெடியன் உன்னோட கூடப் படிக்குதுபோல?’

‘இல்லை. ரியூட்டரிக்கு முன்னால கடை வைச்சிருக்கு.’

‘கடை வைச்சிருக்கிற ஆக்களோடயெல்லாம் உனக்கென்ன கதை பேச்சு?’

‘ஆத்திரம் அந்தரமெண்டு ஒரு தேவை வந்திட்டா…’

‘இண்டைக்கு அப்பிடி என்ன அந்தரம் வந்தது உனக்கு?’

ரூபியிடமிருந்து பதில் கிளம்பவில்லை. ஆனாலும் பதில் அவளிடத்தில் இருந்திருந்தது.

அக்கா அந்தமாதிரி கேள்வி கேட்பதின் நோக்கத்தை அவளால் விளங்கிக்கொள்ள முடியும். அப்படியான சமயத்தில் அவர்களுக்கு இறுதியாகச் சொல்ல ஒரு வார்த்தை அவளிடம் தயாராக இருந்தது. அதுபோல ஏதாவதொரு கடைசிக் கூராயுதத்தை வைத்திருந்து அவள் யார், எவரென்று பார்க்காமல் பிரயோகிப்பாளென்பது சாந்தமலருக்கும் தெரிந்திருந்தது.

அவள் இனி வாதாட்டத்தைத் தொடர்வது வீணானது. அவள் முடிவாகச் சொன்னாள்: ‘என்ன நினைப்பில இப்பிடியெல்லாம் நடக்கிறியெண்டு எனக்குத் தெரியுது, ரூபி. அதுக்கு இந்த வீடு தோதில்லையெண்டத நல்லா ஞாபகம்வைச்சிரு. முடிஞ்சா அடக்கமாயிருந்து சோதினையை எழுதிப்போட்டு நல்லமாதிரி வாழுற வழியைப் பார். இல்லை, சோதினையும் எழுதாமல் விரும்புறமாதிரித்தான் நடக்கப்போறனெண்டாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை.’

எல்லாம் முடிந்து விட்டது. இனி சொல்லவும் கேட்கவும் எவருக்கும் எதுவும் இல்லை.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பத்து மணிக்கு வழக்கம்போல் வெளியே போன ரூபி மாலையில் வீட்டுக்குத் திரும்பவில்லை. இரவிலும் திரும்பவில்லை. போகும்போதே தன் கண்களில் தன் முடிவை தெரிவித்துவிட்டுப் போயிருந்ததைக் கண்டிருந்த அம்மா அலம்புப்பட்டு அவளைத் தேடி அலையவில்லை.

மூன்றாம் நாள் பகலில் சில்வெஸ்ரரோடு வந்து தங்களுக்கு பதிவுத் திருமணமாகிவிட்ட விஷயத்தைச் சொல்லி, தாங்கள் தொழில் நிமித்தம் முல்லைத்தீவுக்குப் போகப்போவதாகத் தெரிவித்தாள் சாந்தரூபி. ‘எங்களை இஞ்ச ஒருதருக்கும் பிடிக்காது. அதால நான் வரமாட்டனம்மா. விருப்பமெண்டா நீங்கள்தான் அங்க வரவேணும்.’

‘முல்லைத்தீவுக்கு என்னத்துக்கு? அங்க போய் என்ன செய்வியள்?’ பரஞ்சோதி திகைத்துக் கேட்டாள்.

‘அவையின்ர தொழில் அதுதான, அம்மா? போர்ட் ஓடும், லொறி ஓடும், இல்லாட்டி கரைவலை போட்டு மீன் பிடிக்கும். அதுகின்ர தமக்கை புருஷனெல்லாம் இப்ப முல்லைத்தீவிலதான் இருக்கினம். போனா பிழைச்சிடுவம்.’

‘என்னவோ… நல்லாயிருந்தாச் சரி. நீ போய் விலாசத்தை அனுப்பு. முடிஞ்சா நான் வரப்பாக்கிறன்.’

சாந்தரூபி போய்விட்டாள்.

இது நடந்து இரண்டு வாரம் ஆகவில்லை. ஒருநாள் படிக்கவென்று போயிருந்த சாந்தகுமாரின் சைக்கிளை கொண்டுவந்து வீட்டிலே கொடுத்துவிட்டு அவன் இயக்கத்திலே சேர்ந்துகொண்டு போய்விட்டதான தகவலை அவனது நண்பர்கள் சொல்லிச் சென்றார்கள்.
பட்ட காலிலேதான் எல்லாம் படுமா?

ஆனாலும் அதுவொன்றும் அபூர்வமாய் நடக்கிற விஷயமாய் அப்போது இருக்கவில்லை. வலிகாமம் யுத்தத்திற்குப் பின் குடாநாட்டிலிருந்தும், தென்மராட்சி கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்தும் நிறைய இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ஒற்றை இயக்கமாய் தன்னை நிறுவியிருந்த புலிகள் இயக்கம், ஒரு போராட்டத்தின் பன்முகத் தன்மையை நிர்தாட்சண்யமாய் மறுதலித்திருந்தது. அது பெரிய அரசியல் விபரங்கள் தெரியாத சாதாரண மக்களுக்குக்கூட ஒவ்வாததாகவே தோன்றியது. ஆனாலும் கேள்வி கேட்க யாரும் தயாராக இருக்கவில்லை. அது கேள்வி கேட்கிற நேரமாக யாருக்கும் தோன்றவில்லை. அந்தளவுக்கு ராணுவத்தின் கொடுமைகள் இருந்தன. தொண்ணூறுகளின் திருகோணமலை குமரபுரம் படுகொலைகளும், அதன் ஒட்டுமொத்த அழிச்சாட்டியத்தின் அடையாளமாக செம்மணி மயானத்தில் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளும் இருந்ததில் பரஞ்சோதியும் கேள்வியற்று விட்டுவிட்டாள்.

ஆசிரிய பயிற்சி முடிய சாந்தமலருக்கு வடமராட்சிப் பள்ளியொன்றிலே நியமனம் கிடைத்தது. சிறிதுகாலத்தில் தான் விரும்பிய ஆசிரியரையே கல்யாணம் செய்துகொண்டு அல்வாயிலே, பரஞ்சோதி அவளுக்கு எழுதிக்கொடுத்த பூர்விகக் காணியிலே, நிலைபேறடைந்தாள். சங்கவி இருக்கின்றாள் என்பதைக்கூட பரஞ்சோதி கருத்திலெடுக்கவில்லை. அவளுக்குத் தேவையென்று வருகிறபோது கனகாம்பிகைக் குளத்துக் காணி இருக்கிறதுதானேயென நினைத்துக்கொண்டாள். தன்னுடைய காலத்தைப்பற்றியெல்லாம் அவள் நினைப்பில் எடுப்பதில்லை.
2000ஆம் ஆண்டு வந்தது. அப்போது சங்கவியோடு மட்டும் இருந்துகொண்டிருந்த போதுதான் தென்மராட்சி யுத்தம் தொடங்கியது. கைக்கீழ்ப் பிள்ளையாயிருந்த சங்கவியைக் காப்பாற்றவேண்டுமேயென முதலில் எழுதுமட்டுவாள் பக்கமாகவும், பின்னர் கனகாம்பிகைக் குடியேற்றத்துக்குமாக ஓடினாள்.

அது எண்பத்தைந்தின் முன்னடியில் நடராசசிவம் வாங்கிய காணி. நடராசசிவத்தின் அத்தனை கால உழைப்பின் ஒற்றைப் பலனாக குடும்பத்துக்கு மிஞ்சியது அது மட்டுமே. பரஞ்சோதியின் தம்பி மகேந்திரன்தான் தனது திருவையாற்றுக் காணியோடு அதையும் பராமரித்து வந்தான்.

அவ்வளவு காலமும் வாழ்க்கை அனைவரையும் ஒரு உச்சிப்பிடித் தடுமாற்றத்திலும் அச்சத்திலும் வைத்துத்தான் நடத்திக்கொண்டு போயிருக்கிறதென்பதை பரஞ்சோதி யோசிக்கப் புரிந்தாள். யாரும் கழிந்திருந்த ஆண்டுகளை வாழ்ந்திருக்கவே இல்லை. அவளும்தான். வாழ்வின் துடிப்புகள் இன்னும் மீதமாய்க் கிடக்கின்றன உடம்புள் அமுங்கி. அவற்றின் துடிப்புகளால் நரம்புகளில் என்றும் கிளர்ந்துகொண்டிருக்கிறது ஒரு சங்கீதம். அவளுக்கு அப்போது அறுபது ஆகியிருந்தது. நரம்புகள் கீதமிசைக்காது விட்டுவிடுமா? அதனாலான அவள் தாபம் அவளோடு இருக்கவேதான் போகிறது சாங்காலம்வரை.

ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னான காலத்தில் மனத்தைக் கிளறும்படியான செய்திகள் அவளுக்கு அறியவருகின்றன. நீண்டவொரு காலத்துக்கு எதுவித தொடர்புமற்றிருந்த அவளது கணவன் நடராசசிவம் சுகதேகியாய் இருப்பது மட்டுமல்ல, அவர் இலங்கையையும் வந்துசேர்ந்துவிட்டாரென அவரது நண்பர் ஒருவர்மூலம் தெரிந்தாள்.

கண்ணால் பார்த்தால்கூட போதும்போலவே இருந்தது செய்திகேட்ட கணத்தில். பிறகு அந்த உணர்ச்சியை மேவவிடுவதன் முன்னம் ஒரு கேள்வியின் பதிலறியும் தேவை இருப்பது தோன்ற அவள் தணிந்தாள்.

இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊரிலா, வெளியூரிலா, நாட்டிலா, வேறு நாட்டிலா என்பது தெரியாமல் திடீரெனக் காணாமல்போனவர் அவர். அங்குமிங்குமோடி விசாரித்த அளவில்தான் தெரியவந்தது, 1990 ஜனவரியில் இலங்கையைவிட்டுச் சென்ற இந்திய ராணுவத்துடன் கப்பலேறிய இயக்கத்தினரோடு அவரும் இந்தியா போய்விட்டாரென்று. பலபேர் மனைவி பிள்ளைகளுடன் போயிருந்தனர் என்பதும், சிலர் குடும்பமாக வேறு மாகாணங்களில் மிகுந்த அரச பாதுகாப்புக்கிடையே ஒதுங்கிக்கொண்டனர் என்பதும் தெரிந்த பரஞ்சோதி சிதறிப்போனாள். அவளும் நான்கு பிள்ளைகளும் அந்த மனிதருக்கு எதுவுமேயாக இருக்கவில்லையா?

அந்த நசிந்த மனிதருக்கு இயக்கத்துக்கு பணத்தையும், ஆளையும் சேர்ப்பதைத்தவிர எதுவும்தான் இயலாமலிருந்தது. அப்படியிருந்தும் புலிகளின் பயத்தில் இந்தியா ஓடியிருக்கிறார். பயந்துதான் ஓடினாரா அல்லாமல் வாழ வேறு மார்க்கம் இல்லையென்று ஓடினாரா என்பதை அவளால் திடப்பட முடியவில்லை. எல்லோருக்கும் தெரிந்து, அவளுக்கு மட்டும் தெரியாமல் ஓடினாரெனில் அவள் சந்தேகப்பட ஒரு வெளி இருக்கிறது.ரம்பத்திலெல்லாம் அந்த ஒல்லி மனிதர்மீது அவளுக்கு அதிகமும் தோன்றியது பச்சாதாபம்தான். கோழிமேல் சேவல் பாய்ந்து பாய்ந்து பலமுறை கொத்தும். நடராசசிவம் பாயாது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் கொத்தும். ‘இண்டைக்கு வேண்டாம்’ என்றால் அழுவாரைப்போல போய் குறண்டிக்கொண்டு கிடந்துவிடும். அப்படியொரு ரகமும், சுகமும் அவருக்கு. பலத்திலல்ல, அவரது பலஹீனத்தில்தான் அவளுக்கு அவர்மேல் காதலும் ஆகிற்றோ? ஆனால் அப்போது அவளிடத்தில் இருந்தது அதுவல்ல.

வடமராட்சியில் இயக்கவேலைக்கு வந்துபோன பொழுதில்தான் நடராசசிவத்துக்கும் அவளுக்கும் தொடுப்பினை ஏற்பட்டது. அது எண்பத்து நான்கின் நடுப்பகுதியாக இருந்தது. தம் தொடுப்பினையை நடராசசிவமும், பரஞ்சோதியும் சொல்லிக்கொண்டது குழந்தை வயிற்றில் உருக்காட்டிய பிறகுதான்.

வடபகுதியில் ஒரு காலத்தில் சோற்றுக் கலியாணங்கள் இருந்திருந்தன. மாப்பிளையை வரவழைத்து பொம்பிளை கையால் சாப்பாடு பரிமாற வைத்துவிட்டால் அந்த இருவருக்கும் சமூக வழக்கப்படி திருமணமாகிவிட்டதென்பது அர்த்தமாகிவிடும். அது தேசவழமைச் சட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கலியாணமான புருஷனோடு பரஞ்சோதிக்கு வாழ்ந்த ஞாபகங்கள் பெரிதாக இருக்கவில்லை.
நடராசசிவம் மட்டக்களப்பு போயிற்று. கண்டி போயிற்று. மறுபடி கிளிநொச்சி போயிற்று. எப்படியோ கடனோ கிடனோபட்டு கனகாம்பிக்கைக் குளத்தில் யாருக்கோ பெர்மிட் முடிந்திருந்த காணியை வாங்கிற்று. பிறகு படகேறி இரண்டு மூன்று தடவைகள் இந்தியாவுக்கும் போய்வந்தது. அது இயக்கத்தின் முக்கியமான பிரச்சார வேலைகளை தலையில் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருந்தது. ‘கண்சிவந்தால் மண் சிவக்கும்’, ‘ஊமை விழிகள்’ படமெல்லாம் இரவிரவாக விழிந்திருந்து கிராமங்கள் தோறும் காட்டிற்று. மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணம், மலைநாடு எல்லாம் போய்க்கூட பிரச்சார வேலை பார்த்தது. மூன்று நான்கு மாதங்களென்று இடையே காணாமல் போகும் நடராசசிவம், திரும்பிவந்தாலும் வாரக்கணக்கில் வீட்டிலே தங்கிவிடுவதில்லை. ஆயினும் ஒன்று ஒன்றரை வருஷத்துக்கு ஒரு குழந்தையாக பரஞ்சோதியும் பெற்றுக்கொண்டே இருந்தாள்.

இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்தபோது காரிலும், வானிலும், சிலவேளை ஹெலியிலுமென அது திரிந்தது. பின் இந்திய ராணுவம் இலங்கையைவிட்டுப் புறப்படுகிற சமயத்தில் அது கூடவே உயிரபயம் உள்ள ஒரு இடத்தைச் சென்று சேர்ந்துவிட்டது. தனிப்பட்ட உணர்வுகளின் கூச்சல் இருந்தது தவிர, நாட்டுக்காக குடும்பங்களைப் பிரிகிற ஆண்களும், தாய் தந்தையரைப் பிரிகிற இளைஞர் யுவதிகளும் எங்கெங்கும் கதைகளாய், காட்சிகளாய் இருந்துகொண்டிருந்த வகையில், பரஞ்சோதி கிலேசம்பட பெரிதாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் தனக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் போய்விட்டதே என்பதுதான் துன்பமாயிருந்தது. ஏன் சொல்லாமல் போனதென அவள் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள். தனியாகப் போகாதபடியால்தான் சொல்லாமல்போனதோவென பின் அந்தக் கேள்வியே வேறு வடிவமெடுத்தது. காரணமற்ற சந்தேகம். ஆனால் சந்தேகிக்க காரணமுள்ள பிணி.

ஆனால் தன் பிள்ளைகளுக்கு அவர்கள் தந்தை அவர்களை ஒரு நிர்க்கதியில் விட்டுப்போன கதையை அவர்கள் சின்னதாக இருந்தபோதோ, வளர்ந்த பின்னாலோ அவள் சொல்லியதில்லை.

இறுதி யுத்தத்தின் பின்னால் நடராசசிவம் இலங்கை திரும்பிவிட்டதான ஒரு தகவல் கசிந்தது. அவர்களது தொடுப்பினை உருவாகிய காலத்தில் அறிமுகமாகியிருந்த சந்திரனண்ணா பஸ்நிலையத்தில் அவளை அடையாளங்கண்டு வந்து பேசினார். ‘பரஞ்சோதியெல்லோ?’

‘ஓம். என்னத்துக்கு?’

‘என்னைத் தெரியேல்லையோ? நான் சந்திரன். நடராசசிவத்தோட உங்கட வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறன்.’

‘ஓ.. ஓ… ஞாபகம் வருது. எப்பிடியண்ணை இருக்கிறியள்?’

‘இருக்கிறம். அதுசரி… எதாவது புதிசாய் கேள்விப்பட்டியளோ? நடராசசிவம் இஞ்ச இலங்கைக்கு வந்திட்டுதெண்டு அறிஞ்சன்.’

‘தெரியாதே.’ அவள் அதிர்ந்துபோய் நின்று சொன்னாள்.

அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலிருந்துதான் சில நிலைமைகள் அவருக்குப் புரியவும் ஆரம்பித்தன. ஆனாலும் ஊகங்களைச் சொல்லி அவளைக் கலவரப்படுத்த அவர் விரும்பவில்லை. ‘எங்க நிக்கிறியளெண்டு தெரியாமல் அலைஞ்சுகொண்டு இருக்கிறார்போல. உந்த காம்பெல்லாம் போய்த் தேடிக்கொண்டுதான் வரப்போறார்.’

‘அதுசரி, நீங்களெங்க நிண்டனீங்கள் இவ்வளவு காலமும்?’

‘நான் கண்டியில நிண்டிட்டன். புலியளுக்குப் பிறகுதான் இப்ப வந்து கொழும்பில நிக்கிறன்.’

சந்திரன் போய்விட்டார். எதையோ சொல்லாமல் அவர் மறைத்துக்கொண்டு போனதுபோல் அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை சந்திரனண்ணாவிடம் அந்தக் கேள்வியை வெளியாகவே கேட்டிருக்கலாமோவென எண்ணினாள். அது ஒரு பாரமாக, முள் நெருடலாக இருந்துகொண்டிருந்தது.

போகும்போது சொல்லாமல் போனவர் வந்தபோதும் சொல்லவில்லை. சொல்லாமல் போனதற்கு எது காரணமென நினைத்தாளோ, வந்து தெரியாமலிருப்பதற்கும் அதுதான் காரணமென அவள் உறுதிப்படலாம். ஆனால் எதற்கும் அந்த விஷயத்தில் சாட்சிகள் தேவையாயிருந்தன. அவசரப்படுவதில் ஆதாயமில்லை.

அதற்கான ஒரு சந்தர்ப்பம் பிறகொரு தருணத்தில் அவளுக்கு வாய்த்தது.

அவள் வவுனியாவில் பஸ்சுக்காக நிற்கிறாள். அவளை நீண்டநாள் அறிந்த நடராசசிவத்தின் நண்பரொருவர் வருகிறார். குசல விசாரிப்பின் பின், ‘அவர் இலங்கைக்கு வந்திட்டதாய் அறிஞ்சன். நீங்களெதாவது அறிஞ்சியளோ, அண்ணை?’ என்று அவள் கேட்க, அவர் பதிலைத் தடுமாறினார். பின், தானும் அவ்வாறுதான் அறிந்ததாகச் சொன்னார். ‘அண்ணை, மறைக்காமச் சொல்லுங்கோ, அந்தாள் இந்தியா போகேக்க தனியாய்த்தான் போனதோ? அந்தாளில அப்பவிருந்தே எனக்கொரு சந்தேகம். ஆனா இப்ப எனக்கு அதின்ர உண்மை தெரியவேணும். இருவது வருஷமாய்க் காத்திருக்கிறனண்ணை, இனியும் நான் ஏமாறக்குடாது. சொந்த தங்கச்சியெண்டாச் சொல்லமாட்டியளே? உண்மையைச் சொல்லுங்கோ’ என அவள் கண்ணீரொழுக அபயமானாள்.

மேலே அவரால் எதையும் மறைத்துவிட முடியவில்லை. ‘நடராசசிவம் இந்தியா போகேக்க ரண்டு பிள்ளையளோட ஒரு குடும்பத்தை கூட்டிக்கொண்டுதான் போனது’.

பதிலைக் கேட்டதும் பரஞ்சோதி கண்களைத் துடைத்தாள். அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். ‘சரியண்ணை, இப்பவாச்சும் தெரிஞ்சுதே. இனி நான் காத்திருக்கத் தேவையில்லை. வாறனண்ணை’ என்றுவிட்டு வந்த கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஏறிவிட்டாள்.
பரஞ்சோதிக்கு கண்ணைக் கலக்கிக்கொண்டு வந்தது படுத்திருந்து நினைக்கையிலும்.

அது சாந்தமலர் திருமணமான பிறகு கட்டிய வீடுதான். அந்த இடத்தில் முன்பு பரஞ்சோதி வாழ்ந்த ஒரு மண்வீடு இருந்தது. அந்த வீட்டிலேதான் நடராசசிவத்துக்கும் அவளுக்கும் உறவு பிறந்தது. அவர்கள் வாழ்ந்ததும் அங்கேயிருந்துதான். அந்த மண்வீடு அழிந்து அதன் சுவடுகளேயற்ற சாந்தமலர் வீடென ஆகியது நல்லது. அந்த மண்வீட்டின் நினைப்பும் அதில் நடராசசிவத்தோடு வாழ்ந்த வாழ்க்கையும் பின்னர் அவர் கைவிட்டுப் போன கதையும் நினைவுவந்து அவள் எப்போதும் அழுகின்ற நிலை தோன்றாமல் போயிற்று. பக்கத்தில் குடியிருந்த சின்னம்மா குடும்பமும் வெகுகாலத்துக்கு முன்பே காணியை விற்றுவிட்டு நினைவு தூரத்தில் நிற்கும்படியாய் எங்கோ போய் ஒதுங்கிக்கொண்டது. ஆனால் அப்போதும் அவளுக்கு அழுகை வந்தது.

அவள் விசும்பாது விட்ட கண்ணீர்த் துளிகள் கன்னம்வழி இறங்கி தலையணையில் ஊறின.

சுவர் மணிக்கூட்டின் டக்… டக்… ஒலி கேட்டது. எங்கோ ஒரு நாய் குரைத்தது. மனித சஞ்சாரமற்ற வெளியாகியிருந்ததாய் பிரபஞ்சம் தோன்றிற்று. அடங்கிய வெளியுலகும், அடங்காத யுத்தவோசையுமாய் இருந்த காலம் இப்போது இல்லை. நள்ளிரவிலும் ஒரு உயிர்பறிக்கும் துவக்குச் சூட்டுச் சத்தம் எழுந்திருக்கிறது. பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளின் உறுமலொலி கேட்கும். மேலே வீட்டிலிருந்த உறவுகளின் கதறல் எழும். அண்டை அயலாரின் பேச்சொலி. பின்னர் எதுவுமற்ற நிசப்தத்தின் இறுக்கம். குடாநாட்டிலென்று இல்லை, இலங்கைத் தீவு எங்கணிலுமே இவ்வாறான நிலைமை யுத்தம் முடிகிறவரை இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

இரவுகள் அடங்கியே கிடக்கின்றன. உயிர்கள் அச்சத்தில் உறைந்தே துயில்கின்றன. அன்றுபோலவே இன்றும். ஆனால் அவை வேறுவகையான அல்லல்களும் அவலங்களுமாக.

நடராசசிவம்பற்றிய தகவலறிந்ததும் அவள் மாறினாள். அழகாகக் கொண்டை போட்டாள். ஒரு பழைய கான்ட் பாய்க் சாந்தி வீட்டில் கிடக்க, அது தனக்கு வேணுமென எடுத்துக்கொண்டாள். அவளது பழைய சேலைகளும் ஒன்றிரண்டு எடுத்தாள். பரஞ்சோதி உள்ளுள் மாற வெளியில் மாறினாள். அவளது நெஞ்சின் நெருப்பு அவ்வாறு ஆக்கியது. சற்றொப்ப கால் நூற்றாண்டுப் பிரிவைத் தாங்கும் வலு படைத்தவளுக்கு ஏமாற்றத்தைத் தாங்க முடியாதுபோனது. ஆனாலும் உடம்பும் மனமும் சிலிர்க்காமலே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவளுள் பேரர்கள்பற்றிய கவலை முன்னதாக வந்து நிற்கிறது.

பல சந்தர்ப்பங்களிலும் சங்கவியோடு கூடத்தங்காமல் தான் வடமராட்சிக்கு ஓடி வந்துவிடுவது சங்கவிக்கு குறையாக இருக்குமென்பது அவளுக்கு விளங்கும். ஆனால் வேறுமாதிரி அவளால் நடந்துவிட முடியவில்லை.

அங்கே மயூரனை வைத்துக்கொண்டு சாந்தமலர் படுகிற அவதியினை பரஞ்சோதி அறிவாள். தாயைக்கூட சிலவேளைகளில் எதிர்த்துப் பேசிவிடும் மயூரன், அவள் பேச்சுக்குத்தான் மந்திரிக்கப்பட்டவன்போல், ‘சரி அம்மம்மா… சரி அம்மம்மா’ என்று கேட்டு தலையாட்டுகிறான். அவனது பள்ளிச் சிநேகிதம் அல்லாதவை அவனைக் கெட்டுப்போக மட்டும் வைத்துவிடாது, அவனையே அழித்துவிடும் பாதைகளிலும் இட்டுச்செல்லக் கூடியவை. மேலும் அந்தக் குடும்பத்தையே மொத்தத்தில் ஆபத்துக்கு உட்படுத்தக் கூடியவையும். அவனை அந்தப் பாதையிலிருந்து திருப்பியே ஆகவேண்டும். அது அவளால் முடியுமா முடியாதா என்பதல்ல பிரச்னை. அவள் அதை முயலவேண்டும். அதனால்தான் அவசர அவசரமாக அங்கே வந்தாள்.

மயூரன் அவளது கன்றின் கன்று. சாந்தனை அப்படியே உரிச்சு வைச்சுப் பிறந்த பிள்ளை. உயரம், நிறம், தலைமயிர் எல்லாமே மாமன்தான். அற்பாயுளில் போய்ச் சேர்ந்தான் அவன். அதை எண்ணும்போதே அவளின் அடிவயிற்றைக் கலக்கியெழுகிறது துக்கம். அவ்வாறான ஒருநிலைமை சாந்தமலருக்கு வந்துவிடக்கூடாது. சாந்தன் போரில் அழிந்த வலியையே பரஞ்சோதியால் தாங்க முடியவில்லையே.
தன் ஒரே மகனின் நலம் சாந்தமலருக்கு மகளினதைவிடக்கூட அபேட்சையானது. அதனால்தான் பொத்திப்பொத்தி வைத்து வளர்க்க நினைக்கிறாள். அவன் திமிறி ஓடும்போதெல்லாம் மனதே உடைந்து போகிறாள். ஒழுங்கின் அந்தத் திமிறல் போரின் உபவிளைவாகவே இருக்கட்டும், காலத்துக்கும் அது சாந்தமலரை வதை செய்துகொண்டு இருந்துவிடும். வர்த்தினியையும் அவனைக் காப்பாற்றுவதன் மூலமாகவே அவள் காபந்து செய்ய முடியும்.

சாந்தனைக் காக்கத் தவறிய பரஞ்சோதி மயூரனையேனும் காப்பாற்றி ஆகவேண்டும்.

சாந்தனைக் காக்க பரஞ்சோதி தவறினாளா? அவள் அதற்கான பதிலை நிறைய நிகழ்வுகளிலிருந்து எடுத்துவைக்க வேண்டியிருக்கும். அவளறிந்து மகனையோ மகளையோ போராளியாய் இழந்த நான்கு தாய்களை பரிச்சயமாயிருக்கிறாள். இன்னும் மொத்தக் குடும்பத்தையுமே பறிகொடுத்த தாய்களையும் தெரிந்திருக்கிறாள். தங்கள் பிள்ளைகளை காக்க தாங்கள் தக்க சமயத்தில் முயற்சியெடுக்கவில்லையென்றே பலரும் சொல்லி அழுதிருந்தார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. இனியென்ன…? ‘ம்ஹ்ம்!’ பரஞ்சோதி அலுத்தாள்.
ஏனோ திடீரென்று அன்றைக்கு சாமி கொட்டிலுக்குத் திரும்பியிருக்குமாவென்று யோசனை பிடித்தது அவளுக்கு.


2012 -8

அன்று சாமி கொட்டிலுக்குத் திரும்பியிருந்தார். எப்படியும் அது கிணற்றடியில் போய்நின்று குளிக்கக்கூடிய நேரமில்லையென வசதியாக கணிப்பைச் செய்தார். குளிப்பதென்பது எப்பவுமே சுகமான செயற்பாடில்லை அவருக்கு. ‘ஊத்தைச் சாமி’யென்று சிலவேளைகளில் கார்த்திகா கேலி பண்ணுவாள். குளிப்பதை அவர் அவ்வப்போது செய்தாலும், பிறருக்கானதுதான் அது.

அவர் பையை கப்பில் அடித்திருந்த ஆணியில் கொளுவினார். மரத் துண்டுகள் சில இருட்டில் காலிலே இடறுப்பட்டன. தீக்குச்சியைத் தட்டி குப்பிவிளக்கைத் தேடிக் கொழுத்தினார். அந்த அரவங்களில் அவர் வந்துவிட்டதைத் தெரிந்த பூஸ் மேலே பரணிலிருந்து ‘மியா…’வென அனுங்கிக் குரலெடுத்தபடி இறங்கிவந்தது. அதை எதிர்பார்த்ததுபோல் தான் பொலித்தீன் பையில் சுற்றி கொண்டுவந்திருந்த சின்னச் சரையைப் பிரித்து அதற்கு சாப்பிட வசதியான இடத்தில் வைத்தார்.

பின் புகைத்து நெடுநேரமாகிவிட்டதென்ற தவனத்தோடு, வசதியாக அமர்ந்து பீடியொன்றை எடுத்து சுகமாகப் புகைத்தார். அவரை அவராக்கிய புகையிழையங்கள் நாசியிலிருந்து கழன்றன.

அந்தக் காலங்களின் இரவுகள் தானறியா நிசப்த வெள்ளத்தை பெருகச் செய்வனவாய் வெளியைப் பார்த்து சாமி உணர்ந்துகொண்டிருந்தார். இருள் திணிந்து, நிசப்தம் உறைந்து காலம் தன்னியல்பறுந்து இருக்கிறதென்பது அவரது எண்ணமாக இருந்தது.

ஐந்து நாட்களுக்கு முன் ஒரு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பியவர், அப்போதுதான் திரும்பியிருக்கிறார். முல்லைத்தீவில் நின்றிருந்தபோது இரண்டு நாட்கள் மழை பெய்து அவரை ஒட்டுத் திண்ணையொன்றில் முடக்கத்தில் வைத்துவிட்டது. மீதி மூன்று நாட்களும் அலைச்சல்தான். அந்த மூன்றில் ஒருநாளில் ‘பொட்டலம்’ தேடுவதில் கழிந்தது. அவர் நரம்புகளில் ‘பொட்டல’த்தின் சாறு ஊறிக் கிடக்கிறது. அதை அவர் தவிர்க்க அவ்வப்போது நினைத்தாலும் இயல்வதாயில்லை.

ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால் அதே வன்னியில் அவர் கஞ்சா புகைத்ததற்காக இரண்டு பெண் போராளிகளின் முன்னிலையில் போராளி பிரதீபனிடம் பூவரசம் கம்படி பட்டிருக்கிறார். ‘சாமியெண்டு ஊசாட விட்டா… அதுவும் என்ன சாமியோ ட்றவுசரும் சேட்டும் போட்டுக்கொண்டு… தமிழீழத்தை நாறடிக்கிறதெண்டு நிக்கிறியோ?’ என்று கேட்டுக் கேட்டு அடித்தான்.

‘ஆ… நானிதை மருந்தாத்தான பாவிக்கிறன்’ என்று குதித்துக் குதித்து சாமி குழறினார்.

‘வருத்தத்துக்கு கஞ்சாவும் மருந்தாய்க் குடுக்கினமோ? என்ன வருத்தம் உனக்கு?’

‘மனவருத்தம்தான்.’

என்ன மனவருத்தமென்று பிரதீபன் கேட்கவேண்டுமென சாமி எதிர்பார்த்தார். ஆனால் அவ்வாறொன்றிருப்பதையே அறியான்போல், ‘அதுக்கு இதுதான் சரியான மருந்து’ என்று கம்பு சிம்பலாகும்வரை அவன் சாமியை அடித்துத் தீர்த்தான். ‘இருக்கிறதாயிருந்தா ஒழுங்காயிரு. இல்லாட்டி உப்பிடியே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு ஓடியிடு.’

‘போயிடுறன்… போயிடுறன்…’

போராளிகள் போய்விட்டனர்.

சாமி சொன்னபடி அடுத்த வாரமே போய்விட்டார். எங்கே போனாரோ? ஏ9 பாதை திறந்திருந்த காலமாயிருந்ததில் போன இரண்டு மாதத்தில் சாமி மறுபடி வன்னியில் வந்து தோன்றினார். அப்போது கஞ்சாவை மறைவாய்ப் புகைக்க சாமி கற்றிருந்தார்.

யாழ்ப்பாணத்திலும் சரி, கொழும்பு வவுனியா மட்டக்கிளப்பு கண்டியென்று எந்த இடத்திலும் சரி, போகிற வேளைகளில் தங்குவதற்கு இடமில்லையென்று சாமி ஒருபோதும் இடஞ்சல் பட்டதில்லை. அவருக்கு இரண்டடி அகல, ஐந்தடி நீள இடம் எங்கேயும் போதுமானதாக இருந்தது. மட்டுமில்லை, பஸ் நிலையம், ரயில்வே ஸ்ரேஷன், நடைபாதையென எந்த இடத்திலும் ஒரு பேப்பரை விரித்துக்கொண்டு சரிந்துவிட தயாராகவே அவரும் இருந்தார். பக்கத்திலே மோட்டர் இரைவது, வீதியில் வாகனங்கள் உறுமுவது, கண்ணைக் குத்தும்படி பிரகாசமான வெளிச்சம் எரிவது எதுவுமே அவரது நித்திரையைக் குழப்பிவிடுவதில்லை. எழும்புவதையும் அலாரமில்லாமலே அவரால் திட்டமாய்ச் செய்யமுடியும். லொட்ஜைவிட அது மிகுந்த பாதுகாப்பானதென்பது சாமியின் எண்ணம். பத்தாயிரம் ரூபாவை பையிலே வைத்துக்கொண்டும் சுகமாக நடைபாதையில் அவர் தூங்கியிருக்கிறார்.

வன்னியிலும் தக வாழ அந்த மனிதருக்குத் தெரிந்திருந்தது. எந்த முக்கியமான இடத்தில் அவர் அங்கே தங்கவில்லை? கிளிநொச்சியா, கண்டாவளையா, தருமபுரமா, உடையார்கட்டா, வற்றாப்பளையா, மன்னாரா, முல்லைத்தீவா… எல்லா இடத்திலும் தன் வாழ்க்கையை மிக இலகுவாக அவர் கழித்திருக்கிறார்.

அவரது தம்பலகாமம் நண்பி சீவலியிடம் காபந்துக்காய் கொடுத்துவைத்துள்ள பைக்குள், அவர் மிக்க பெறுமதியானதென்று கருதும் முந்திய காலத்தின் செழிப்பைக் கூறும் சில போட்டோக்கள் இருக்கின்றன. அவரது வாழ்க்கையின் சுருக்க வரலாறு அவை. உயிருக்கு நிகராக சாமி நினைத்திருக்கிற கருவூலம். தம்பலகாமம் போகும் சமயங்களில் அந்தப் படங்களைப் பார்ப்பதிலேயே சாமியின் நேரம் பெரும்பாலும் கழிந்துவிடுகிறது.

எண்பதுகளிலிருந்து ஊராந்திரியாய், தேசாந்திரியாய் திரிந்த அவர், சாதுவாய் மாற ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அவரன்றி, வாழ்க்கை அவருக்காக எடுத்த திசையாகவிருந்தது அது. தன்னையே மறந்து அவர் திரிந்த காலம் கொஞ்சம் அவரது அஞ்ஞாதவாசத்தில் இருந்தது. அதன் கணக்கும் அவர் அறிந்ததில்லை.

தன் வாழ்க்கையோடும், விதியோடும், தனக்குள் விழுந்த அரசியலின் சுமையோடும் அவர் புரிந்தது ஒரு தனிமனித யுத்தமாகும். எல்லாம் பெருங்கதைக்குள் மட்டுமே அடங்கக்கூடியன. அப் பெருங்கதையாடலுள் செல்ல அவர் பெரும்பாலும் விருப்பமற்றவராக இருப்பது அந்த வலியைத் தாங்கமுடியாது என்பதனாலேயே ஆகும். அப்போது, ‘நான் சிதறுதேங்காயாய்ப் போவன்’ என்று முனகி அவர் கண்கலங்குகிறார்.
அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அப்பெருங்கதையின் பதிவுகளை ஒவ்வொன்றாய் ஒழுங்கின்றியேனும் மனத்தில் மீள கொண்டுவருவது மட்டுமே.

2006 மேயில் இறுதி யுத்தம் பிரகடனமாகாமலே ஆரம்பித்தபோது, இராமநாதபுரம் மகாவித்தியாலயத்துக்கு அண்மையில் உரிமைக்காரர் வெளிநாடு சென்றுவிட வெறிதாகியிருந்த ஒரு வீட்டில் தன் ஒற்றைப் பையோடு சென்று ஒதுங்கினார் சாமி. ஏகாந்தியான அலைவில்தான் அவர் அந்த தனிமை நிறைந்து வழிந்துகொண்டிருந்த வீட்டைக் கண்டடைந்தது.

அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்த மனிதர்கள் அவரை விசாரிப்பதற்குப்போல் பார்த்த பார்வையை சாதுர்யமாய் விலக்கினார். ஆனால் போர் வன்னியை நெருங்க நெருங்க அவர்களுக்கும் அந்த முனைப்பு பின்னர் இல்லாமல் போய்விட்டது.

இறுதி யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் எப்படியோ தன் பயணத்தின் திசையை மாற்றி ஒரு மரண வழி மூலமாக நெடுங்கேணி சேர்ந்தவர், யுத்தமும் முடிந்துவிட்டது, எல்லாமும் முடிந்துவிட்டதென்ற அறிவிப்பில் கிளிநொச்சி திரும்ப பஸ்நிலையம் வந்தார். அங்கேதான் அவர் கிளிநோச்சி போகிறவரானால் ஒரு கடிதத்தை கனகாம்பிகைக் குளத்தில் அந்த முகவரியில் கொடுக்கமுடியுமாவென ஒரு பெண் கேட்டாள். அவர் மறுக்கவில்லை.

பஸ்ஸெடுத்து கிளிநொச்சியில் வந்து இறங்கினார். இரணைமடுக் குளப் பாதையில் நிறைய ராணுவ வாகனங்களின் போக்குவரத்துக்குள் ஏதொன்றையும் யோசிக்காமல் நடக்கத் தொடங்கினார்.

கனகாம்பிகைக் குளத்தில் அரை ஏக்கர் திட்டத்து பல வீடுகளும் சிதறிப்போய்க் கிடந்ததன. தென்னைகள், வேம்புகள், முதிரைகளென மரங்களெல்லாம் விழுந்தும் முறிந்துமாய். எதிரெதிராய் அழிபாடடைந்து கிடந்த அந்த மூன்று வீடுகளையும் கண்டு சாமி தாமதித்தார். கதவுகளற்றுக் கிடந்த கல்வீடென்றோ மண்வீடென்றோ சொல்லமுடியாதிருந்த ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிந்தது. விசாரித்து கடிதத்தைக் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு பந்தத்தில்போல் சாமி தயங்கிநின்றார். வீட்டில் தங்கிநின்ற பெண் அவசரமாக வெளிக்கிட்டுச் செல்ல, விறாந்தையில் சென்று ஒதுங்கினார்.

திருவையாறு, திருநகர், முரசுமோட்டையென அக்கம்பக்கத்து குடியேற்றங்களில் மீள்குடியேற்றத்துக்குத் திரும்பிய மக்கள் இன்னும் உதவிப் பொருட்கள் கிடைக்காத நிலையில் மகாவித்தியாலயம்போன்ற பல இடங்களில் பிதுங்கிப்போய் இருந்தார்கள். பலரை இன்னும் தகுந்த வைத்திய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டியும் இருந்தது. அவர்களது ஓலம் வீதிகளெங்கும் நிறைந்து எதிரொலித்துக்கொண்டு கிடந்தது. ஆனால் சாமி அந்தளவில் ஒரு வாசஸ்தலத்தையே கண்டுவிட்டிருந்தார்.

சிலநாட்களின் பின் அந்த வீட்டின் சொந்தக்காரி பரஞ்சோதி மறுபடி வந்தாள். அவருக்குக் கவலையில்லை. வாசல்புறமிருந்த கொட்டில் அவருக்குப் போதுமாயிருந்தது. கொட்டிலில் அவர் போயமர்ந்தது கண்டும் அவள் எதுவும் பேசாதிருந்தாள்.

கொட்டிலில் இருக்கும்போதுதான் ஒருநாள், ‘நானும் அடிக்கடி அங்கயிஞ்சையெண்டு அலையிற ஆள். கூரையையும் ஆளில்லாட்டி பிய்ச்சுக்கொண்டு சனம் போயிடும். இருக்கிற நேரம் கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ’ என்று அவள் சொன்னாள். அது அவர் அங்கே தங்குவதற்கான அனுமதிப் பத்திரம்.

அந்தக் காலப் பகுதியிலேதான் பூஸி வந்து அவரோடு ஒண்டியது. அதற்கு ஒரு வாஸியான பரண் கிடைத்திருந்தது அங்கே. மரங்களில் உறங்கியும், மரங்களில் பதுங்கியும் இருந்துவந்த அந்தப் பூனை மண்ணைத் தன் பாதுகாப்பிற்காகக் கொள்ளாதிருந்தது. மண்ணில் அதற்கேதேனும் உயிரச்சுறுத்தல் இருந்திருக்கக்கூடும். சாமி இருந்தால் கீழே இறங்கும். இல்லாவிட்டால் பரணே அதன் கதியென்றிருந்தது.
நொறுக்கு… நொறுக்கென்று பூஸ் எலும்பு கடித்த மெல்லிய சத்தம் அப்போது நின்றிருந்தது. தொடர்ந்து அது பரணிலேறுவது அதன் வெண்மஞ்சள் கப்பிலே ஊர்வதிலிருந்து தெரிந்தது. இனி பூஸ் உறங்கிவிடும். பகலைப்போல இரவிலும் அதனால் தூங்க முடியும்.
பூனைகளுக்கும் சாமிக்கும் மிகப் பொருத்தம் இருக்கிறது. முப்பது வருஷங்களாக விரும்பாத ஒரு மிருக சங்காத்தத்துக்கு வேறு காரணத்தை அவரால் கொள்ள முடியாது. எத்தனை பூனைகள்! ஆரம்பத்தில் ஒரு வெள்ளைப் பூனை. அதுதான் பெரியம்மா வீட்டில் நின்றிருந்தது. பின்னால் இரண்டு கறுப்புப் பூனைகளும், ஒரு சாம்பல் பூனையும். அப்போதுள்ள மஞ்சள் பூனையுடன் ஐந்து பூனைகள். சாமி அவற்றை தான் வளர்த்ததாக என்றைக்கும் சொல்லியதில்லை. அவை பெரும்பாலும் தாமாக வந்து, தாமாகவே எங்கேயென்று தெரியாமல் போனவைதான். இராமநாதபுரத்தில் மட்டும் அவர் பூனையை நீங்கிப் போனார்.

சாமிக்கும் பூனைகளுக்கும் இடையிலான கதை மஹா சுவாரஸ்யமானது. மனித மிருக உறவு நிலைகளால் ஒருவர் நெஞ்சை உலுப்பக்கூடியது. இந்தக் கதை அவரது பெரியம்மா காலமானதிலிருந்து துவங்குகிறது. ஐந்து பூனைகளின் கதையும் ஒற்றைச் சரட்டில் இணைந்துபோகக்கூடியவை. அதை தருணங்களுக்கேற்ப சாமி கூறுகூறாக நினைவுகொள்வார். வாழ்வின் திருப்பங்களுக்கும், விருத்திகளுக்கும், விரக்திகளுக்கும் ஏற்ற வண்ணமாக அந்த நினைப்பு இருக்கும்.

சொந்த ஊரும் முடிந்ததென்று தன் ஈறல்களோடு ஒரு சூட்கேசும், ஒரு கைப்பையுமாக ஒரு நறையிருட்டு நாளில் ஒழுங்கையிலிறங்கி தெருவிலேறி சென்றுகொண்டிருக்கிறார். வெகுதூரம் சென்றபிறகு அவரால் உணர முடிகிறது, உரு வெள்ளைச் சிற்றுரு தன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதை. அவர் திகைத்தார். அதோடு அவர் சிரமப்பட வேண்டியிருக்கும். தெருவில் காணும் ஒரு பூனையை எந்த நாயும், தெருநாய்கூட, செல்லவிட்டு சும்மா பார்த்துக்கொண்டு இருந்துவிடாது. அவர் கல்லெடுத்து எறிந்து பூனையை விரட்டினார். அது ஓடுவதாகப் போக்குக் காட்டிவிட்டு பதுங்கிக் பதுங்கி பின்தொடர்ந்துவிட்டது.

அந்தப் பூனையை எப்போதும் அவர் விரும்பியிருந்ததில்லை. கண்ட நேரத்தில் கண்டதையும் எடுத்தெறிந்து அதை விரட்டவே செய்துகொண்டிருந்தவர். அது அவரைப் பயந்து ஓடிக்கொண்டிருந்த பூனை. பெரியம்மா இறந்த பின்னால்தான் தான் தனியனாகிவிட்டது அவருக்குப்போல பூனைக்கும் தெரியவந்திருக்கலாம்.

எப்போதும் ஒரு அடியை எதிர்பார்த்ததுபோல் எச்சரிக்கையிலேயே அது இருந்திருக்கும். பூனையின் அந்த ஸ்திதியில் சாமிக்கு அலாதியான பிடிப்பு. தான் விட்டகல எண்ணினாலும் பூனை விட்டகலாதபடி விழுந்திருந்த அந்தத் தொடுப்பு பூனைக்கும் அவருக்குமான தனிமையை அகற்றும் தேவையின்மேல் தொடர்ந்து இருந்துவிட்டது. அது அவரது பிரக்ஞையில் படாமலே ஒரு குறுகிய காலத்துள் எங்கோ தொலைந்தது.
அடுத்த அந்தக் கறுப்புப் பூனையும் தானாக வந்து அவரோடு சேர்ந்துகொண்டதுதான். பின்னால் ஒரு பச்சைப் பூனை. பிறகு ஒன்று. அப்போதிருப்பது ஐந்தாவது பூனை. மனிதர்களைவிட்டு அவர் விலகியபோது தாமாக வந்த அந்த ஜீவன்களில் கவனம் பெரிதாய் இல்லையெனினும் அன்பு இருந்தது. அதைமட்டுமே அவரால் செய்யமுடிவதாயும் இருந்தது.

அன்றைக்கு முழங்கால் மூட்டு வலி தூங்கவிடாமல் செய்யப்போகின்றதென சாமிக்கு அப்போதே தெரிந்துவிட்டது. பொட்டலமுமில்லை, அமிர்தாஞ்சனமும் இல்லை. எண்ணெயும் குப்பிவிளக்கினுள் குறைவாகவே இருந்தது. கொண்டுவந்திருந்த பேப்பர்களை அன்றைக்கு வாசித்துவிட முடியாது. மேலே என்ன செய்யலாம்?

சாமியிடம் அப்போது ஒரு பாய் இருந்தது. உடுப்பை மாற்றிக்கொண்டு பாயை விரித்து களைப்போடு படுத்தார்.

காலம் அவருக்கு காலமழிந்த வயதைக் கொடுத்து எல்லாம் இயன்றவராய் அண்மைக் காலம்வரை வைத்திருந்தது. காலத்தை விழுங்கிவிட்டு வாழ்ந்த வாழ்வு இனி அவருக்கு வாய்க்காதென அவரே எண்ணுமளவு ஒரு களைப்பு வந்து அவரை மூடியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்த அந்த பிரமாண்டமான தோல்வியும் அவரை வதைக்கவே செய்கிறது. தோல்வியே அல்ல, அந்தத் தோல்விக்கான காரணம். அந்தத் தோல்வியின் விதம். அவர் எவ்வளவோ சொல்லியிருந்தார். கேட்கப்படாமல் போய்விட்டது. அது பாதித்தது அவரைப் பெரிதாக.
சிறிதுநேரத்தில் நினைவுகள் கரைந்தழியா மனத்துடன் சாமி தூங்கிப்போனார்.

ஒரு சாமத்தில் இடையறுந்தது தூக்கம் .

கையொன்று நீண்டு அவரைத் தொட வருகிறது. விரல்களைப் பிரித்து எட்டியெட்டி அவரைப் பிடிக்க முயல்கிறது. அவர் புரண்டு அதன் பிடியிலிருந்து நழுவுகிறார். யாரென்று பார்க்க திரும்பி தேடுகிறபோது உருவம் அங்கே தென்படவில்லை. கல் திசுமமான கையொன்று மட்டுமே அனுமன் வால்போல் விலக விலக நீண்டுகொண்டிருக்கிறது. எங்கிருந்தோ தூர தூரத்திலிருந்து அது வளர்ந்து வந்திருக்கிறது. அவரை பீதி பிடிக்கிறது. மேனியெங்கும் வியர்வை துளிர்க்கிறது. அலறுவதற்கு வாய் உன்னுகிற பொழுதில் அந்தக் கையின் திசுமம் மாறி மென்மையும் வனப்பும் பெறுவதை அவர் காண்கிறார். ஸ்பரிசத்தை மறுத்து, தரிசனத்தைச் சுகிக்க பிரீதி கொள்கிறார். ஆனால் மாயக் கை அவரையே மொத்தமுமாய் வலித்திழுக்கும் வேட்கையோடு அவரைநோக்கி துளாவிக்கொண்டிருக்கிறது. தன்னை எங்கோ இழுத்துச் செல்ல முயலும் கையிலிருந்து நழுவுவதன் முயற்சியோடும், எங்கே கொண்டுசெல்ல முயல்கிறது என்ற கேள்வியோடும் அவர் உருண்டுகொண்டே இருக்கிறார். அப்போது மேலும் புரள முடியாதபடி ஏதோவொன்று அவரைத் தடுக்கிறது. ‘ஆ!’

அப்போது அவர் விழித்தார்.

எழுந்திருந்து யோசிக்க மாயக்கையின் ஆதிகதை ஞாபகத்துக்கு வந்தது சாமிக்கு.

அது அவர் பிறந்து வந்த மண்ணாகவிருந்தது. மாயக்கையின் குகையோரத்து நாச்சிமார் கோயிலின் அடர்ந்த வேம்பு இலந்தை சந்தன மரங்களுக்கிடையே சின்ன வயதில் ஓடியும் ஆடியும் குதித்தும் விளையாடியவர் அவர். மாயக் குகைக்குள் அவர் வாழ்வின் சுகம் கண்டவர். அங்கே தெய்வம் மட்டுமில்லை, தனபாக்கியமும் குடியிருந்தவள். அவர் நினைக்காதபோதும் மண் அவரை நினைத்ததின் அடையாளமா மாயக்கையிலிருந்து நீண்ட மாயக் கரம்?

‘அந்த மண்ணிலேதான் அக்கம்மா இருக்கிறாள். நான் அதை மறந்திருக்கக்கூடாது.’ சாமி முனகினார்.

அப்படியே படுத்தவர் மீண்டும் எழுந்தபோது வெளியே வெய்யில் சுட எறித்துக்கொண்டிருந்தது.


 2012 - 9

பின்னாலிருந்த கடலின் மேற்கினுள் இறங்கத் தொடங்கியிருந்தது சூரியன். வீட்டில் எல்லோரும் தங்கியிருந்து தேநீர் அருந்தும் அவ்வாறான ஒரு பின்னேரப் பொழுதை அபூர்வமாகவே அங்கிருந்த நாட்களில் பரஞ்சோதி கண்டிருக்கிறாள். மயூரனும் அந்நேரமளவில் வீடு திரும்பியிருந்தான். அவளுக்கு அது பெரிய மனச்சாந்தியாக இருந்தாலும், அவன் இன்னும் உடுப்பை மாற்றாதது திரும்ப அவன் எங்கேயாவது கிளம்பிவிடுவானோவென்ற சஞ்சலத்தையும் ஏற்படுத்தியது.

யாராவது ஒரு பெடியன் மோட்டார் சைக்கிளிலே வரும். அதற்காகவே காத்திருந்ததுபோல் மயூரனும் ஏறிப்போய்விடுவான். அதுவரை அவன்கொண்டிருக்கும் பரபரப்பு அவளுக்கு அச்சம் தருவது.

அவ்வாறான ஒரு பரபரப்பிலும் கோலத்திலும்தான் சாந்தன் இயக்கத்தில் சேர்ந்துகொண்டு ஓடிய மாலையிலும் நின்றிருந்தானென்பதை எண்ண அவளின் தேகமெல்லாம் பதறியது. மயூரன் நடத்தைகள் சாந்தனிலிருந்து பெருமளவு மாறியில்லை. சாந்தன் யுத்தத்தினால் ஈர்பட்டான். மயூரன் தறுதலைத்தனமான அக்காலத்திய சந்தோஷங்களினால் இழுப்புண்டான்.

அவலங்களையும், ஆபத்துக்களையும் வேறுவேறு உருக்களில் கொண்டதாயே அப்போதைய காலம் இருக்கிறது. உருக்கள் அளப்பரிய ஆகர்ஷங்கள் கொண்டிருந்தன. பாம்பைப்போல மினுக்கிக் காட்டினாலும் அவை தம்மைப் பளுதென்று நம்பவைத்தன. அவை தாமே தமக்கான அறங்களை நிர்மாணித்தன. அவற்றில் ஆகர்ஷமாவோர் அவ்வறங்களை தம் அறங்களாய் உச்சாடனம் செய்தனர். காலத்தின் அந்த மாயவலையை பரஞ்சோதி கண்டுகொண்டே இருக்கிறாள். அவளால் தன் பேரர்களின்மீதான அக்கறையை எக்காரணம்கொண்டும் தளர்த்திவிட முடியாது.

பள்ளியிலிருந்து திரும்பியவுடனே உடுப்பை மாற்றிக்கொண்டு ஒரு கட்டுக் கொப்பிகளுடன் கூடத்துக்கு வந்த சாந்தமலர் முன்னால் வைத்து ஒவ்வொன்றாக திருத்தம் செய்ய ஆரம்பித்தாள். ஆனாலும் சூழலை அவளது நிமிர்ந்து சுழலும் கண்கள் அவதானித்துக்கொண்டே இருந்தன. அதை பரஞ்சோதி கவனித்தாள். இருந்தும் அவளை உச்சிக்கொண்டு போய்விட மயூரனுக்கு வெகுநேரம் ஆகிவிடாது.

மயூரன் இன்னும் அங்கேதான் சுழன்றுகொண்டு திரிந்தான். சாந்தமலர் ஏதோ வேலையாக குசினிக்குப் போயிருந்தாள். அறைக்குள் சாமிவிளக்கு ஏற்றிக்கொண்டிருந்தாள் வர்த்தினி.

நேரமாகவாக பரஞ்சோதியின் அவசம் குறைந்துகொண்டு வந்தது. அதுவரை மயூரனின் நண்பர்கள் யாரும் அவனைத் தேடி வந்திருக்கவில்லை.
மறுநாள் சமையல் செய்துகொண்டிருக்கும்பொழுதில் ஏதோ ஞாபகத்தில் சாந்தமலர் தாயைக் கேட்டாள், ‘மயூரன் சாந்தனைவிட நிறம். ஐயாவின்ர நிறத்துக்கு இருப்பானோ, அம்மா?’ என்று.

பரஞ்சோதி ஒரு கணம் திகைத்துப்போனாள். கொஞ்சத்தால் தெளிந்துகொண்டு சொன்னாள்: ‘அந்தாளைப்பற்றிக் கதைச்சு என்னை எரிச்சல்ப் படுத்தாத. நான் இந்தளவு காலத்தில எல்லாத்தையும் மறந்துபோயிருக்கிறன்.’

அது அப்படியில்லையென்பது கூடத்துள் இருந்து யோசித்தபொழுதில் பரஞ்சோதிக்குத் தெரிந்தது. அவள் அவரையும் மறக்கவில்லை, அவரது துரோகத்தையும் மறக்கவில்லை. அதுபோல் பிள்ளைகளும் அவர் பிம்பத்தையாவது மறக்காதே இருக்கின்றன. அவர்கள் மறக்காதிருப்பதின் மூலம் அவளை நினைக்கப்பண்ணுகிறார்கள். பிள்ளைகளும், ஊரும் எல்லாருமே அவரை மறக்கவேண்டுமென்றுதான் ஆரம்பத்திலிருந்தே அவள் முயன்று வந்தாள்.

கடந்த இருபத்திரண்டு வருஷங்களாக அவளுக்கு அவர் இல்லாமல் இருந்தவர். ஆனால் அவரின் நினைவு, அடியாழத்தில் இருந்திருக்கிறது. ஒரு கேள்வியோடு சேர்த்துக் கட்டப்பட்டு அவர் அங்கே இருந்தார். அந்தக் கேள்வியால் அவளுக்கு ஏக்கமே வந்துகொண்டிருந்தது. பின்னால் கேள்விக்கான பதில் கிடைத்தபோது அது கோபமாக மாறியது. அவள் ஏக்கமடைந்ததற்கும், கோபப்பட்டதற்கும் அந்த நினைவிருந்ததே காரணமாகும். அதனால்தான் அவர்பற்றிய ரகசியத்தை அறிந்த பின்னால், கொண்டை கட்டி, கண்ணாடி போட்டு, கான்ட் பாய்க் கொளுவி ஒரு புதிய அவதாரமெடுத்து அந்த சிதறலிலிருந்து தன்னைச் சுதாரித்தாள். நினைவில்லாமல் சிதறல் எப்படி சாத்தியம்?

அவ்வளவு காலத்துக்குப் பின் மூத்தவள் அவரை நினைவுகொண்டது அவளுக்கு ஆச்சரியம். அது நினையாப் பிரகாரமாய் வந்த உசாவலென அவள் பிறகு தணிந்தாள்.
அகம் கட்டுக்குள் வந்துகொண்டிருந்தபோது புறம்மட்டும் ஏன் இவ்வாறு தெளிவற்றும் குழப்பமாகவும் இருக்கின்றது? பரஞ்சோதி யோசித்தாள். எல்லா ஓட்டங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தும், வாழ்க்கையில் அந்தரமும், அவதியும், அச்சமும் இன்னும் மாறாமலே இருக்கின்றன. பரஞ்சோதிக்கு ஏன் அதுவென்று உண்மையில் விளங்கவேயில்லை.

அப்போது சாமி ஒருபோது சொன்னது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

வாசலடி கூட்ட அவள் வெளியே வந்தபோது, கொட்டிலிலிருந்த சாமி மிக்க வேதனையில் முகம் சுளித்தபடி முழங்கால்களைத் தேய்த்துக்கொண்டிருந்தார். ‘என்ன, சாமி, கால் உழையுதோ? என்றாள்.

‘ம்… ஒரே உழைவு குத்தாயிருக்கு. ராராவாய் நித்திரையுமில்லை’ என்றார் சாமி.

‘வாய்வுக்காயிருக்கும். எதுக்கும் ரண்டு உள்ளிப் பல்லும் நாலு மிளகும் வெத்திலையில வைச்சு சப்பி, சுடுதண்ணி குடியுங்கோ, போயிடும்’ என்று அவள் சொன்னதற்கு, ‘இது உள்ளிப் பல்லுக்கு போற உழைவு குத்தில்லை, பிள்ளை. வினை. இத்தனை காலத்தில எல்லாம் செய்துசெய்து அடுக்கித்தான வைச்சிருக்கு? கடைசிக் காலத்தில இப்பிடித்தான் வந்து கழுத்தை அறுக்கும்’ என்று பதிலிறுத்தார் சாமி.
‘உள்ளிக்குப் போகாட்டி இருக்கட்டும். அதால ஒரு கெடுதியும் வந்திடாது’ என்று சொல்லி உடனே போய் வீட்டிலிருந்து உள்ளியும், மிளகும் கொண்டுவந்து கொடுத்தாள்.

அதன்மேல் விழுந்த இடைவெளிகளில் பேச்சு வேறு திசைகளை அளாவியது.

‘திரும்பவும் ஜனாதிபதியாய் வந்த மகிந்த றோட்டுப் போட்டார், ஆஸ்பத்திரி கட்டினார், பஸ்சும் ரயிலும் ஓடவிட்டார்... எல்லாம் சரிதான், ஆனா பிரச்சினைக்குத்தான் தீர்வுகாண ஒண்டும் செய்யாம இருக்கிறார்’ என்று வாசலைக் கூட்டியபடி ஒரு சலிப்போடு பரஞ்சோதி புறுபுறுத்தாள். அந்தமாதிரி புறுபுறுக்காமல்கூட வாழ்ந்துவிடுகிற காலமாயில்லை அது. வாதம் செய்யாவிட்டாலும் பலரும் புறுபுறுக்கவே செய்தார்கள்.
சாமி விடவில்லை. இன்று அவர் வாய் திறப்பதற்கு ஜாதகத்தில் பலனிருந்திருக்கிறது. ‘அப்ப… மகிந்த நினைச்சா சமரசம் வந்திடுமெண்டு சொல்லுறிர்?’ என்றார்.

‘ஏன், இப்பவும் எல்லா அதிகாரமும் இருக்கிற ஜனாதிபதிதான மகிந்த?’

‘அது சரிதான். அவர் நினைக்கட்டும், சமரசம் வரட்டும், எல்லாம் நடக்கட்டும். ஆனா ஒண்டு சொல்லுறன் கேளும். இப்பவே சமரசத் தீர்வு வந்துதெண்டாலும், இன்னும் பத்து பதினைஞ்சு வரியமாகும் இருக்கிற எல்லா குழப்பமும் தீர. அப்பவும் சண்டை துவங்கிறதுக்கு முந்தியிருந்த நிலமை வரவேவராது.’

சாமியின் பேச்சை அவ்வளவு சுலபமாய்த் தள்ளிவிட முடியாதென்று அவள் தெரிந்திருந்தாள். ‘அவ்வளவு காலமாகுமோ, சாமி?’
‘மேல போனாலும் போகும். யுத்தத்தைத் துடங்கிறது சின்ன விஷயம். அதை முடிக்கிறதுதான் கஷ்ரம். அதைவிடக் கஷ்ரம் யுத்தத்தில இழந்ததுகள திரும்ப கட்டியெழுப்புறது. அப்பவும் கஷ்ரமிருக்கும், வாழ்க்கையின்ர பெறுமானங்களைக் கட்டியெழுப்புறது. எது நல்லது, எது கெட்டதெண்டு அறிஞ்சிருந்ததெல்லாம் அப்பேக்க அடிதலை மாறி இருந்திடும். நாங்கள் நம்பின வாக்குக்கும், நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்துக்கும் இருக்கிற மதிப்பெல்லாம் அப்ப காணாமல் போயிருக்கும். நான் போயிடுவன். இருக்கப்போற ஆக்கள் நீங்கள், பாப்பியள்தான.’
அவள் மனத்தில் சட்டென பாரமேறியது.

எத்தனையோ மாதங்களாகிவிட்டன சாமி அவ்வாறு சொல்லி. இப்போதுதான் புதிதான வார்த்தைகளாய் அவள் சுவரில் சாய்ந்திருந்தபடி எண்ணி அதிர்வுகொள்கிறாள். சாமியின் வார்த்தைகள் நிஜமாகிக்கொண்டிருப்பதையே எங்கெங்கும் இப்போது அவள் காண்கிறாள்.

போருக்கு புதல்வனைத் தந்தவள் அவள். இருந்தும் அலைந்துகொண்டுதானே இருக்கிறாள்? எண்பத்தேழில் தொடங்கிய ஓட்டம் இரண்டாயிரத்து பன்னிரண்டு வரையிலும் அவளில் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது?

அவளுக்கு திருமணமான காலத்தில் யுத்தம் ஒரு பிரமிப்பாக இருந்தது. குடும்பம் பெருத்து நான்கு பிள்ளைகளென்று ஆன காலத்தில் அது உயிரவலம் ஆயிற்று. இன்று யுத்தம் முடிந்தும் அவலம் தீரவில்லை. பேரப்பிள்ளையும் கண்டுவிட்ட அந்த வாழ்வில் அந்தத் தலைமுறையைக் காப்பதிலுள்ள சிரமங்களெல்லாம் சமூகம் சீரழிந்து கிடக்கிறது என்பதைத்தானே தெரிவிக்கின்றன? ‘இப்பவே சமரசத் தீர்வு வந்தாலும் இன்னும் பத்தோ பதினைந்தோ வருஷத்தில்தான் அமளிகள் குறைந்து வாழ்க்கை சீரடைய வாய்ப்புண்டாகும்’ என்றல்லவா சாமி சொன்னது? எல்லாம் தானே சாட்சியாகி கண்டுகொண்டிருக்கிறாள் பரஞ்சோதி.

சிறிதுநேரத்தில் அங்கே வந்த மயூரன் அம்மம்மா கூடத்துள் தனியாயிருப்பதைக் கண்டு தானும் வந்து சுவரோடு அவளருகே அமர்ந்துகொண்டான். அவளது நீட்டியிருந்த முழங்கால்களில் கைபோட்டு உருக்கமாய் வழிந்தான். அம்மம்மாவின் கால்கள் எவ்வளவு தூரங்களை நடந்து கழிக்கின்றன என்பதுபோல் மெல்ல அவற்றை அமுக்கிவிட்டான். அந்த அனுபவம் ஒரு சுகமான இசையாய் அவளில் பரவியெழுந்தது.

அவனது இரங்குதலில் அவள் உருகினாள். ஏணைப் பிஞ்சாய், உடும்புப் தவ்வலாய், தத்துப் பிள்ளையாய், குதிமன் குத்திய சிறுவனாயென்று எத்தனை வளர்ச்சியின் படிநிலைகளில் அவனை அவள் தூக்கிக் கொஞ்சி, அணைத்து, கண்பதித்து மகிழ்ந்திருக்கிறாள்!

சின்ன வயதிலேயே நிறைய விஷயங்களை அறிந்து பெரியவர்களாக அவர்கள் நடந்துகொள்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு பல விஷயங்களும்தான் தெரிந்திருந்தன. அவ்வாறு தெரிவதற்கான சைபர் உலகங்கள் வெளியெங்கும் விரிந்து கிடந்தன. பதினான்கு வயதுக்குள் சிலருக்கு உடல்தினவே ஏற்பட்டுவிடுகிறது. சிகரெட்டும், கஞ்சாவும், இன்னும் வேறுவேறு போதைப் பொருட்களும் பாவிக்கும் பழக்கம் நிறையப் பேரிடம் இருக்கிறது. அவற்றை அவர்கள் சிரமத்தோடு கற்றுக்கொண்டார்கள். ஒவ்வொன்றின் ருசியையும் ஒருதர் மற்றவருக்கு செல்பேசியின் குறுஞ்செய்திகளிலும் பரவவிட்டார்கள்.

மயூரனுக்கிருந்த பழக்கங்களைச் சொல்லி ஒருநாள் சாந்தமலர் கண்ணீர்விட்டு அழுதாள். பரஞ்சோதியால் நம்ப முடியவில்லை. நம்பாமலுமிருக்கவும் முடியவில்லை. கதிகலங்கி நின்று சொல்லி அழுவது அவனைப் பெற்ற தாய். ஆனாலும் அந்தப் பிஞ்சு முகமும், சின்ன வயதுமா அந்தமாதிரி நஞ்சேறியிருக்கிறதென அவள் ஆச்சரியப்பட்டாள்.

அன்பாலேயே அவனை மாற்றமுடியுமென பரஞ்சோதி நம்பினாள். கெட்ட சகவாசமுள்ள ஒரு பிள்ளைபோல் அவள் அவனைப் பார்த்ததுகூட இல்லை. சாந்தமலரின் அணுகுமுறையும் அதுபோலவே இருந்தது. அது பலன் தந்திருக்கிறது. மூத்த உறவுகளை அவன் மதிக்கிறான். அந்தச் சொந்தங்கள் படும் சிரமங்களை உணர்கிறான். அவர்கள்மீது அவனுக்கு இரக்கம் வருகிறது. அது பெரிய விஷயமல்லவா?

பரஞ்சோதி அவனது முகத்தை ஏறிட்டு நோக்கினாள். கள்ளம் கபடில்லாமல் எவ்வளவு சாந்தரூபமாயிருக்கிறது அந்த முகம்! அவள் ஆதூரத்துடன் அருகிலிருந்த பேரன் தலையில் கைவைத்து அவனது கேசத்தை தன் மெலிந்த விரல்களால் கோதினாள்.

அந்த அன்பில் நெகிழ்ந்து அம்மம்மா இன்னும் தலையைக் கோத வளமாக கழுத்தை அவள்பக்கம் சாய்த்து அமர்ந்திருந்தான் மயூரன்.
பரஞ்சோதியின் கண்கள் கலங்கிவந்தன. அப்போது உள்ளே வந்த வர்த்தினியும், பின்னால் வந்த சாந்தமலரும் அக்காட்சியைக் கண்டு நெகிழ்ந்தபடி சென்று அமர்ந்தனர்.


2012 - 10

இருள் மூடியிருந்த வானம் வெள்ளிகளைச் சொரிந்துகொண்டிருந்தது. பருத்தித்துறைக் கடல் இரைவது கேட்டபடியிருந்தது. வீட்டில் தொலைக்காட்சி நிறுத்தியாகிவிட்டது. வர்த்தினி படித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதங்களிருந்தன அவளின் ஏ.எல் இறுதிப் பரீட்சைக்கு. சாந்தமலரும் பழைய பத்திரிகையொன்றைப் புரட்டிக்கொண்டிருந்தாள். மயூரன் படுக்கப் போய்விட்டான்.

படுக்கைக்குப் போக தயாரான சாந்தமலர் தாயைநோக்கி நிமிர்ந்தாள். பரஞ்சோதி நிலத்தில் கால்நீட்டி சுவரோடு சாய்ந்தமர்ந்து நேரத்தைத் தொலைத்துக்கொண்டிருந்தாள். என்னென்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தனவோ? தனியே விட்டுவந்த சங்கவிபற்றி, வவனியாவில் இருக்கும் சாந்தரூபி மற்றும் அவளது பிள்ளைகள்பற்றியென அது இருக்கக்கூடும்.

ஒருமுறை வவுனியா போய்வரப் போவதாகவும், பஸ்சுக்கு காசு வேணுமென்றும் அவள் கேட்டபோது, பாக்கலாமம்மா என்று அவளது தேவையைப் பின்தள்ளிப் போட்டுவிட்டாள் சாந்தமலர். அதைப்பற்றிக்கூட யோசிக்கலாம்.

அவளால் காசைக் கொடுக்க முடிந்திருக்கும். ஆனால் மயூரன் அவ்வாறு குணவியல்புகளில் ஒரு தெளிநிலையை அடைந்துவருகிற நேரத்தில் தாயை ஒரு வாரம், பத்து நாட்களென்று அனுப்ப யோசிக்கவேண்டியிருந்தது. ஆனாலும் அவள் பாவம்தான். அன்றளவும் தானடிச்சு தன்னைக் கவனிப்பவள். அவளடியிலேயே அவர்களும் வளர்ந்தவர்கள்.

தாயில் நிலைத்த சாந்தமலரின் பார்வையில் கனிவு ததும்பிக்கொண்டிருந்தது. பரஞ்சோதி நேர்நேராய்ப் பார்க்கவும் கிலேசப்பட்டவளாய் எங்கோ பார்த்துக்கொடிருந்தாள். சாந்தமலர் அழைக்க திரும்பினாள். “வவுனியா எப்ப போப்போறியள்? வாற வெள்ளிக் கிழமை போய் திங்கக் கிழமை வந்திடேலுமோ?” என்று கேட்டவள் அடுத்த அறைக்குக் கேட்காதபடி குரலைத்தணித்து, “இப்ப மயூரன்ல நல்ல ஒழுங்கிருக்கு. கனநாள் நீங்கள் வெளிய இருந்தா பழையபடி துவங்கியிடுறானோ தெரியாது” என்றாள்.

அதற்கு அதே மெல்லிய தொனியில், “பாத்துக்கொண்டுதான இருக்கிறன். இதெல்லாம் எனக்குச் சொல்லவேணுமோ? திங்கக் கிழமை பின்னேரத்துக்குள்ள இஞ்ச நிப்பன்” என்றாள் பரஞ்சோதி. பிறகு, “சங்கவிதான் பாவம் அங்க தனிய இருக்குது. அதுகின்ர பிற்காலமும் என்னமாதிரி முடியப்போகுதோ… அது அந்தச் சன்னதியானுக்குத்தான் வெளிச்சம். அக்கம்பக்கத்தில இருக்கிறதுகள் ஒரு ஆத்திரம் அந்தரத்துக்கு ஓடிவந்து உதவக் கூடின மனிசர். முன்வீட்டில இருக்கிறா தாமரை. நல்ல ஒட்டு ரண்டுபேருக்கும். அதால மனம் கொஞ்சம் ஆறுதலாயிருக்கு. முன்வாசலுக்கு ஒரு கதவும், ஒரு லாம்பும் இருந்திருந்தா இன்னம் ஆறுதலாயிருப்பன் ” என்றாள்.

“நீங்கள் சங்கவியின்ர நினைப்போடதான் எப்பவும் இருக்கிறியளெண்டு எனக்குத் தெரியும், அம்மா. நீங்கள் இருக்கிற நிலையிலயிருந்தே நான் அதைச் சொல்லுவன். என்ன செய்ய? அவசரப்பட்டுக் கலியாணம் கட்டினது ஒருவகையில நல்லதெண்டாலும், இப்ப குணாளனும் இல்லாமல்தான இருக்கிறாள். நானும் இந்தளவு வீட்டுப் பிரச்சினையளுக்குள்ள அவளையும் நினைக்கிறன்தான். அதுக்கு மேல என்ன செய்யேலும்?”

“அவளுக்கு நீ தன்னைக் கோவிச்சுக்கொண்டிருக்கிறாயெண்டது சரியான மனவருத்தம். சொன்னாக் கோவிக்காத, அந்தமாதிரி அண்டைக்கு நீ அவளைப் பேசியிருக்கக்குடாது.”

“நானென்ன, வேணுமெண்டே பேசின்னான்? சொல்லச் சொல்ல ஒவ்வொண்டாய் கஷ்ரங்களை இழுத்துப் போட்டது அவள்தான? பிறகு அந்தக் கஷ்ரங்கள எங்கட தலையிலயும் விழுத்திறமாதிரி நடக்கிறதெண்டா…?”

“நீ சொல்லுறது சரிதான். ஆனா பாவம், சங்கவி. இப்ப தனிச்சுப்போயிருக்கு.”

நினைவுகளை விரித்தெடுக்கும் அளவுக்கு, அவற்றைச் சுருக்கி அ டக்குவது அவ்வளவு சுலபமில்லையோ? சாந்தமலரில் அடுத்த நினைவு தாவியது. “அவளின்ர பிள்ளை இப்பவும் அந்தமாதிரித்தான் இருக்கோம்மா?”

“அப்பிடித்தான் இருக்கு. கொழும்பில கொண்டுபோய்க் காட்டினா சரியாக்கலாமெண்டு சொல்லுகினம். அதுக்கெல்லாம் காசுக்கு எங்க போறது?”

“இப்ப அங்க கனக்க என்.ஜி.ஓ.க்கள் வந்து வேலைசெய்யினம். எதெண்டாலும் உதவிசெய்ய மாட்டுதோ, அம்மா? அதுக்கு வந்ததும் இந்தச் சண்டைக்குள்ள வந்த பிரச்சினைதான?”

“நானும் போற இடமெல்லாம் கேட்டுக்கொண்டுதான் திரியிறன். சங்கவியும் தெரிஞ்சாக்களிட்ட சொல்லிவைச்சிருக்கிறாள்.”

“உதவினா நல்லம்தான். நீங்கள் அவளிட்டச் சொல்லுங்கோ, எனக்கு அவளில ஒரு கோபமும் இல்லையெண்டு. ஆனா வாறதெண்டா இஞ்சமட்டும் வந்துபோகவேணும். ”

“சொல்லுறன்.”

பரஞ்சோதிக்கு அந்தளவாயினும் சம்மதித்தாளேயென்று திருப்தியாயிருந்தது.

“அங்க கிட்ட இருக்கிற பெடியனொண்டு அவளில ஆர்வமாயிருக்கெண்டு சொன்னியள் போன முறை வந்திருக்கேக்க.”

“அப்பிடித்தான் தெரியுது. ஆனா அந்தப் பெடியனும் சுணங்கிக்கொண்டு இருக்கிறதில காரணம் இல்லாமலில்லை. குணாளன்ர நிலமை எங்களுக்கு நிச்சயமாய்த் தெரியாதெல்லோ?”

“இந்தளவில ஒரு முடிவும் தெரியேல்லத்தான?”

“அது மெய்தான். சாமியிட்டச் சொல்லியாச்சும் ஒருக்காக் கேப்பிக்கவேணும்.”

“சன்னியாசி மாதிரி ஒருதர் இருந்தாரே, அவரைச் சொல்லுறியளோ?”

“அந்த ஆள்தான். அந்தாளின்ர தலைமயிராலயும், தாடியாலயும்தான் சாமி. கவண்மென்ரில பெரிய வேலையெதோ பாத்திருக்காம். எழுபத்தேழுக் கலம்பகம் நடந்தோடன இனி அவங்களிட்ட வேலைசெய்ய மாட்டனெண்டு விட்டிட்டு வந்ததாம். கன விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கு மனிசன். ஆனா சொல்லுறதில விஷயம் பாதி ஒருத்தருக்கும் விளங்கிறேல்ல. எல்லா நேரத்திலயும் ஒரே மாதிரியும் பேசாது. ஒருக்கா சாமிமாதிரிப் பேசும், ஒருக்கா வாத்தியார் மாதிரிப் பேசும், இன்னொருக்கா, கேட்டாலும் வாயைத் திறக்காது. ஆனா பகல் முழுக்க நித்திரை கொண்டிட்டு, ரா முழுக்க முழிச்சிருக்கும். பகல் முழுக்க நித்திரையாய்க் கிடந்தா வீட்டுக்குத் தரித்திரமெல்லே? வேற கஷ்ரமொண்டுமில்லை.”

“பாக்க கீக்க ஆளில்லையெண்டா கடைசி நேரத்தில உங்கள்ல பொறுப்பாய்ப் போயிடும், கவனம்.”

“சண்டை நடந்த காலத்தில றோட்டு றோட்டாய்க் கிடந்து இழுபட்ட எத்தினையோ பிரேதங்களை, ஆர் எவரெண்டு பாக்காமல் சனம்தான வெட்டித் தாட்டோ, எரிச்சோ விட்டுதுகளாம். அந்தமாதிரி தூக்கிக்கொண்டு போய் எரிச்சிட்டாப் போகுது. இல்லாட்டி இடம்கண்ட இடத்தில வெட்டித் தாட்டுவிடுறது.”

“தோட்டக் காணிக்கை எங்கனயும் தாட்டிடாதயுங்கோ. தின்னுற மரக்கறி விஷமாய்ப் போயிடும்.”

“அப்ப வன்னியில விளைஞ்சு வாறத இனிமே நீ தின்னமாட்டியோ?”

“ஐயோ, நான் தின்னமாட்டனப்பா. விளைச்சல் அள்ளிக்கொட்டத்தான் செய்யும். தின்னுறதுகள பாத்துத் தின்னுங்கோ, ரத்தவாடை இருந்திடப் போகுது. அதை விடுங்கோ, அப்ப… நீங்கள் வாற வெள்ளிக்கிழமை காலமை வெளிக்கிடுறியள்?”

“ரூபியை ஒருக்காப் பாத்திட்டு வந்திட்டனெண்டா நிம்மதியாய் இருப்பன்.”

“எங்க… வந்தும் கொஞ்ச நாளில திரும்ப துவங்கியிடுவியள், சங்கவியைப் பாக்கப் போகவேணுமெண்டு.”

“நானென்ன செய்ய, சாந்தி. சொன்னா மனம் கேக்குதே?”அது கேள்வியல்ல, ஒரு தாயின் பதில். தொடர்ந்து, “அதுக்குள்ள ஒருக்கா சந்திரிகாவையும் பாத்திடவேணும்” என்றாள் பரஞ்சோதி.

“அதார்? அந்த யாழ்ப்பாணப் பிள்ளையோ? அது சில்வெஸ்ரர் ஆக்களோட நல்ல பழக்கமெல்லே?”

“அந்தப் பிள்ளைதான். சில்வெஸ்ரர் ஆக்களோடதான் எங்களுக்கு நல்லது கெட்டதெண்டு எந்தத் தொடர்பும் இல்லாமலிருக்கு. வவுனியா போறதுக்குள்ள அதையாச்சும் ஒருக்கா பாத்திட்டுப் போறது நல்லது.”

“அந்தமாதிரிப் போக்குவரத்துக்களை எல்லாம் கொஞ்சம் கவனமாய் வைச்சிருங்கோ. அதுவும் சங்கவிமாதிரித்தான? இயக்கதிலயிருந்த பிள்ளையெல்லே?”

“ம். அதை முடிச்ச பெடியனையும் வெள்ளைவான்காறர்தான் கொண்டுபோனாங்கள்.”

“அதாலதான் சொல்லுறன்.”

சாந்தமலரின் அச்சங்களெல்லாம் ஒரே புள்ளியைச் சுற்றி ஆதாரங்கொண்டு இருக்கிறதென்று பரஞ்சோதிக்கு முன்பே தெரிந்ததுதான். அதற்காக அவ்வாறெல்லாம் அச்சங்கொண்டு எல்லாரும் ஒழுகிவிடத் தேவையில்லையென்பது பரஞ்சோதியின் நிலைப்பாடு. சராசரி மூன்று வீடுகளுக்கு ஒரு வீடு போருக்கு புதல்வியரையோ புதல்வரையோ கொடுத்த, போரிலிருந்து இடையில் ஓடிவந்த, போராளிகளைத் திருமணம் செய்த இளைஞர் யுவதிகளையோகொண்ட வீடாகத்தான் இருக்கிறது. பரஞ்சோதி அதை அறிவாள். எனினும் சாந்தமலர் சாந்தமாகும் வண்ணம் சொன்னாள்: “இந்த விஷயத்தில நானும் உன்னைமாதிரித்தான். லேசில அப்பிடி நடந்திடமாட்டன்.”

“ம். கேக்கவேணுமெண்டிருந்தன். மறந்து மறந்து போயிடுது. அதுசரி, நீங்கள் எப்ப பாத்தாலும் லாம்பொண்டிருந்தா நிம்மதியாயிருப்பனெண்டு எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறியள். என்ன கதையது?”

“கதையில்லை, உண்மையாய் நடந்தது. நான் கண்ணால கண்டது. ஆ… என்ன பயங்கரம்!” பரஞ்சோதியின் நினைவுக்குழியிலிருந்து நெருப்பெழுந்தது. தேகம் உதறியது.

பரஞ்சோதி சொன்னாள்: “நான் சின்னனாய் இருக்கேக்க, பக்கத்து வீட்டிலதான் எங்கட சின்னம்மா… அம்மாவின்ர தங்கச்சி வள்ளிப்பிள்ளை… இருந்தா. ஒருநாள்… அண்டைக்கு வெள்ளிக்கிழமை. விரத நாள். நல்லா கலமை அரப்பு வைச்சு முழுகியிருந்தா. சின்னம்மாக்கு நல்ல நீளமான தலைமயிர். முழுகிப்போட்டு நிண்டா முடியாத தலைமயிர் தும்புமாதிரி நாலடி நீளத்துக்கு காத்தில பறந்துகொண்டிருக்கும். அண்டைக்கு ராத்திரி தலைமாட்டில கைவிளக்கை வைச்சிட்டுப் படுத்திருக்கிறாபோல. பூனையோ என்னவோ வந்து தட்டிச்சுதோ... இல்லாட்டி நித்திரையில இவதான் தட்டிவிட்டாவோ தெரியா, கைவிளக்கு கீழ சரிஞ்சு நெருப்புப் பிடிச்சிட்டுது. சின்னம்மான்ர தலைமயிர் அப்பிடியே பொசுக்கெண்டு பத்தி… மூஞ்சையே எரிஞ்சுபோச்சு. பாய் எரிஞ்சு, துணியளெரிஞ்சு, கூரைவீடும் அப்பிடியே எரிஞ்சு சாம்பலாய்ப் போச்சு. சின்னம்மாவை தண்ணி வாழையடியில வைச்சு குடத் தண்ணியை எடுத்து ஊத்திச்சினம். அப்ப அவ கத்தின சத்தமிருக்கே… என்னால சாகும்வரை மறக்கேலா. ஆஸ்பத்திரியில ஆறேழு மாசமாய்க் கிடந்தா. கடைசியில திரும்பவந்த சின்னம்மாவைப் பாக்க எனக்கே பயம் வந்திட்டுது. மூஞ்சையே எரிஞ்சு அடையாளம் தெரியாம கிடந்திது. அதுதான் அவவுக்குப் பிடிச்ச சனி. பிறகு எடுத்ததுக்கெல்லாம் மூஞ்சைத் தோல் உரிஞ்சு புண்ணாக்கி… அது ஒருநாள் ஏற்பாக்கி சின்னம்மா செத்துப் போனா. கைவிளக்கைப் பாத்தா இப்பவும் எனக்கு சின்னம்மாதான் ஞாபகம் வருவா. உடம்பும் நடுங்கத் துவங்கியிடும்” என்று சொல்லி உடம்பைச் சிலிர்த்தாள் பரஞ்சோதி.

“உங்கட பயம் ஞாயம்தான். எதுக்கும் நீங்கள் கிளிநொச்சி போகேக்க சொல்லுங்கோ, நானொரு லாம்பு வாங்கித் தாறன்” என்றுவிட்டு சாந்தமலர் உள்ளே சென்றாள்.

அடுத்தடுத்த நாள் பரஞ்சோதி யாழ்ப்பாணம் புறப்பட்டாள்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com