2009 -2

வவுனியா ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கிருந்த சுமார் பத்து கிமீ தூரத்தை ஓட்டோவில் கடந்துகொண்டிருந்த பொழுதில், கழிந்துசென்ற மூன்றாண்டுகளாய் தான் அனுபவித்திராத சுதந்திர வெளியின் பரவசத்தில் திளைத்திருந்தாள் சங்கவி. நிலத்தில் ஊர்வதுபோலன்றி, வானத்தில் அப்போது வட்டமிட்டுக்கொண்டிருந்த அந்த ஒற்றை வல்லூறாக, சிறகடித்து மிதப்பதாய் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் கண்கள் அவ்வப்போது மூடி, வேகமாக முகத்திலும் மார்பிலும் மோதிக்கொண்டிருந்த காற்றின் சுகிப்பை மிக நிதானமாகவும் ஆழமாகவும் அவள் செய்துகொண்டிருப்பதைக் காட்டின.

அதேபோதில், முன்பு தானறிந்திருந்த ஒரு தேசமே வரலாற்றில் அப்போது அழிந்துபோயிருந்த நிஜத்தையும் அவள் மிகக் கசப்பாக உணர்ந்தாள். எல்லாவற்றையும் எண்ணித் துக்கித்து, மனத்துக்குள்ளாகவே அழுது முடிந்துவிட்டது. எல்லாம் கனவுபோல் நடந்து இறுதிநிலை அடைந்திருந்ததை அவள் புனர்வாழ்வு முகாமிலேயே அறிந்திருந்தாள். ஆனாலும் அதன் பிரத்தியட்சம் கண்கூடாகக் கண்டபோது மனம் மறுபடி சிதிலமாகிப் போனாள்.

தாய் அவ்வப்போது அவளைத் திரிம்பிப்பார்த்தும் எதுவும் கேட்காததில் மகளின் மனநிலையை உணர்ந்தாள்போலத் தோன்றியது. தடுப்பு முகாமில் மூன்றாண்டு நெடிய காலத்தைக் கழித்துவிட்டு வெளியே வருபவளின் மனநிலையை, எவராலும்தான் புரிந்திருக்க முடியும். புரியாத கார்த்திகாதான் விறைத்தவளாய் உட்கார்ந்திருந்த தாயையும், கண்ணாடியில் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்த ஓட்டோ ட்ரைவரின் முகத்தையும் கண்டு சிரித்தபடி இருந்தாள்.

ஆஸ்பத்திரி வாசலில் இறங்கி ஒரு ஓரமாக சாந்தரூபி வருவதற்காக காத்துநின்றனர். சுழன்று நோக்கி அவள் இன்னும் வரவில்லையென்றாள் பரஞ்சோதி. சங்கவியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிவராது போக, தானாகவே, “கெதியில வந்திடுவாள்” என்று நம்பிக்கை சொன்னாள்.
கைப்பிடியில் நின்று கார்த்திகா அவளைச் சுற்றிக்கொண்டிருந்தாள். ஆஸ்பத்திரி முடிந்துவிட்ட யுத்தத்தின் இன்னும் முடிவுறா அவலங்களின் காட்சிகள் நிறைந்ததாய்த் தெரிந்தது. அங்கேயே அப்படியிருந்தால் இன்னும் அனுராதபுரம் மற்றும் தர்மபுரம் ஆஸ்பத்திரிகளில் வதைபடுவோரதும், அவர்களுக்காய் அலையும் உறவினரதும் தொகை எவ்வளவாயிருக்குமோவென எண்ண சங்கவிக்கு தலை கிறுகிறுத்தது.
அப்போதுதான் அந்த தெரிந்த அந்நியன் வாசலைக் கடந்து அவசரமாக வந்துகொண்டிருப்பதை அவள் கண்டாள்.

பத்துப் பேருக்கு மத்தியிலும் தன்னைத் தனியாய் இனங்காணச் செய்யும் கம்பீரம் அவனுக்கிருந்தது. அந்த மூன்றாண்டுக் காலத்தில் அவன் இன்னும் செழுமை கொண்டிருந்தான்போல் தோன்றினான். அதில் மிடுக்கு இலகுவாய் இறங்கியிருந்தது. திடமாயும் அதேவேளை நிலமதிராமலும் நடந்தான். கண்ட மாத்திரத்தில் மனத்துள் உறைந்துகிடந்த எரிவு அவளது உடம்பெங்கும் வியாபித்தெழுந்தது. அவன் மாற்றியக்கத்தானாய், புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ராணுவத்துடன் இணைந்த துணைப் படையாளியாய் இருக்கக்கூடிய நிச்சயம் ஓமந்தையிலேயே அவளிடத்தில் உண்டாகிவிட்டது. துன்பங்களுக்குள் அழுந்திச் சீரழிந்த பின்னால் அந்த நிச்சயம் அவளை சங்காரியாய் அவதாரமெடுக்கத் தூண்டியது. அவளது பற்கள் நெருமி, கைகள் தினவேறித் துடித்தன.

எதற்குமே அவசரப்படாவிடினும் அவனில் ஒரு துரிதமிருந்தது எப்போதுமாய். ஓமந்தையிலும் அந்த மாதிரித்தான் நடந்திருந்தான். வெறுப்போடு எண்ணினாள் சங்கவி.

அவசரமாய் வந்துகொண்டிருந்தவனது நடை திடீரென வேகம் குறைந்தது. யாரின் பார்வை தன் நடையை இடறியதெனப் பார்க்கப்போல் அவன் திரும்பினான். அவள்தான். அந்த ஒல்லி உயரத்தை அவனால் மறந்துவிட முடியாது. அந்தக் கண்கள் இன்னும் மறதியின் எல்லைக்குள் செல்லாதவையாய் இருந்தன. கடந்த மூன்று வருஷங்களாக எவளின் நிலமைக்காக வருந்திக்கொண்டிருந்தானோ, அந்தப் பெண்தான் ஆஸ்பத்திரி மதிலோரமாய் நின்றுகொண்டிருந்தாள்.

அவளை ஏறிட்டுப் பார்க்க, தலை நிமிர மறுத்தது. அவனது கம்பீரம் சுருங்கியது. அங்கிருந்து நகரும் முயற்சியுமின்றி அவன் அந்த இடத்திலேயே நிலைகொண்டிருந்தான்.

பக்கத்தில் நின்றிருந்த பெண்ணை அவனுக்குத் தெரியும். கண்டபோது சிரிக்கிற அறிமுகம்கூட இருந்தது. அவனிருக்கும் வீட்டுக்கு கிட்ட இருக்கிறவள். அவளது முன்னிலையில் அவளோடு பேசலாமாவென்ற தயக்கம் எழுந்தது.

சாந்தரூபியைக் கண்டு பரஞ்சோதி வாசலுக்கு அவனைக் காணாமலே விலகிப்போக ஏற்பட்ட தனிமையில் அவன் அவளை தயக்கமாக நெருங்கினான். “மூண்டு வரஷமாய்த் தேடிக்கொண்டிருக்கிறன். எந்தளவில வெளியில வந்தனிர்?”

அவனுக்குப் பதில்சொல்ல அவளுக்குத் தேவையில்லை. ஆனால் அவளைத் தேடிக்கொண்டிருந்த காரணத்தைத் தெரிய அந்தக் கேள்விக்கு அவள் பதிலிறுக்க வேண்டும். “இண்டைக்கு காலமைதான்.” இரண்டு வார்த்தைகளும் நெருப்பில் தோய்ந்தெழுந்த சொல்லுருண்டைகளாக இருந்தன.
அவன் அவளது பதிலில் அதிர்ந்தான். “இண்டைக்கா?” என்று தனக்கே சொன்னதுபோல் முனகினான். பிறகு, “முந்தியே கனபேரை வெளியில விட்டிட்டினமே. நீரும் வந்திருப்பீரெண்டு நினைச்சன்” என்றான்.

அதற்கு, “ஏன் என்னைக் காணவேணும்?” என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கையில், “வா, சங்கவி. பாக்கிற நேரம் முடியப்போகுது” என்று சாந்தரூபி பரஞ்சோதியோடு நடந்தாள். அவன் அவசரமாய், “கட்டாயம் நான் உம்மோட கதைக்கவேணும். எங்க வீடெண்டு சொல்லும், வந்து பாக்கிறன்” என்று கேட்டான்.

அவன்பற்றித் தெரிய, இன்னும் குணாளன்பற்றியுமே ஏதாவது தகவல் கிரகிக்க, அதை ஒரு வாய்ப்பாக்கும் எண்ணத்தோடு, “அம்மாவோட கனகாம்பிகைக் குளத்தில இருக்கிறன்.” அவள் இடத்தைச் சொல்லிவிட்டு கார்த்திகாவோடு தாயையும் தமக்கையையும் பின்தொடர்ந்தாள்.
“முன்னால போறவதான் அம்மாவா? அப்ப வீடெனக்குத் தெரியும்.”

அவன் அவதி பொறாமல் அங்குமிங்குமாய் அலைந்தபடி அந்த இடத்திலேயே சுழன்றுகொண்டு திரிந்தான். அவள் திரும்பி அவனது நிலைமையை அதிசயமாய்க் கண்டுகொண்டு ஆஸ்பத்திரிக்குள் மறைந்தாள். திரும்பித் திரும்பி அவனைப் பார்த்து கலகலத்துக்கொண்டு இருந்த கார்த்திகாவின் சிரிப்பும் மறைந்தது.

இரண்டு நாட்கள் வீட்டில் தங்கிநிற்க சாந்தரூபி வற்புறுத்தினாள். அங்கேயும் அந்த அந்நியனின் நினைப்பு அவளுக்கு வந்தது. அவனது நினைப்போடு ஒட்டி குணாளனும் நினைவில் வந்தான். தன்மீது ஆழமான துன்பங்களையும் அவலங்களையும் சுமத்திய அந்த இரண்டு ஆண்களையும் அவளால் லேசுவில் மறந்துவிட முடியாதுதான்.

முகாமிலிருந்து விடுபட்ட மூன்றாம் நாள் ஒரு துணிப் பையுடன் கார்த்திகாவோடும் தாயோடும் அவள் கனகாம்பிகைக் குளம் வந்தபோது, அது அவள் ஒரு காலத்தில் அறிந்திருந்த பிரதேசமாக தோன்றவேயில்லை. மரங்களும் இடம்மாறியிருந்தனபோல் ஒரு கீழ்மேலான மாற்றம். தனக்கான ஒரு பாடசாலையைக் கொள்ளுமளவு நிலைபெற்ற ஒரு குடியேற்றமாய் அமைந்து வந்து, இறுதி யுத்தத்தில் தன் ஸ்திதி குலைந்திருந்த அக் குடியேற்றம், தன்னை அந்த அழிவுகளிலிருந்து மீட்டெடுக்க கொண்டிருக்கும் சிரமம் அதன் இயக்கத்தில் தெரிந்தது.

பஸ்நிலையத்தில் இறங்கி நடந்துவந்த வழியிலே எதிர்ப்பட்ட முகங்களெல்லாமே அந்நியமாயிருந்தன. கறுப்பு லோங்சும் வெள்ளைச் சட்டையும் அணிந்து, முதுகில் கொளுவிய பாக்-பாய்க்குடன் போயும் வந்தும் கொண்டிருந்த இளைஞர்கள், அந்த நாட்டவராய் இருக்கக் கூடுமாயினும், அந்தப் பகுதியில் அந்நியத் தன்மை கொண்டவராயிருந்தனர். சிலர் அவளை உறுத்துப் பார்த்தனர். “இது எங்கட குடியேற்றம்தான, அம்மா?” என்ற கேள்வியில் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்திவிட்டு அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். “கொஞ்சநாள் போக உனக்கு எல்லாம் பழகியிடு”மென்று சொன்னாள் அம்மா.

ராணுவ வாகனமொன்று கடந்து சென்றது. எதிரே வந்த இரண்டு ராணுவ ஜீப்கள் இரைந்தபடி சென்று மறைந்தன. பழைய குடியிருப்புப் பிரதேசமாய் அது மீண்டும் எழுந்துகொண்டிருந்தாலும், அறிமுகமற்ற மனிதர்களே நிறைந்த புதிய குடியேற்றமாயும், ராணுவ வாகனங்களின் நடமாட்டம் நிரம்பிய ராணுவ பிரதேசமாகவும் அதன் கட்டமைப்பு மாறியிருந்தது. அங்கேயே தொடர்ந்து வாழவேண்டி இருக்கப்போகும் விசனம் பட்டுக்கொண்டு, யுத்தத்தின் இன்னும் எஞ்சிய அடையாளங்களைக் கண்டபடி அந்த அந்நியத்தின் மேல் மிதித்து அவள் தொடர்ந்து நடந்தாள்.
வவுனியாவிலே நின்றிருந்தபோது தாயிடம் கேட்டிருந்தாள், ‘வீடு எப்பிடியம்மா இருக்கு?’ என. அதற்கு, ‘வீட்டுக்கென்ன? போயிருக்கிற மாதிரித்தான் இருக்கு. என்னவொண்டு, வெளிக் கேற்றையும் வீட்டுக் கதவையும் பிடுங்கிக்கொண்டு போட்டாங்கள்’ என்றிருந்தாள் தாய். வீட்டை அண்மியபோதுதான் தெரிந்தது, கேற் இல்லாதது மட்டுமில்லை, வேலியே அதற்கு இருக்கவில்லையென்று.

வெறித்துக் கிடந்திருந்த முற்றமெங்கும் காவிளாயும், வெட்டொட்டியும், தொட்டாற்சுருங்கியும் வளர்ந்தும் படர்ந்தும் கிடந்தன. வீட்டைச் சுற்றி ஆளுயரத்துக்கு பூடுகள் முளைத்திருந்தன. ஏறக்குறைய மூன்று வருஷங்களில் அம்மா அங்கே தங்கவேயில்லையா?

மலைத்தவளாய் கேற்றடியில் நின்றபோதுதான், எதிர்ப்பக்க ஒழுங்கையின் செழித்த வாழைகள் மறைத்திருந்த தங்கம்மாப் பாட்டி வீட்டிலிருந்து அந்த அந்நியன் வெளியே வந்து அவளைக் கடந்து மோட்டார்ச் சைக்கிளில் போகையில் சிரித்துவிட்டுச் சென்றான். தங்கம்மாப் பாட்டி எங்கே? தாமரையக்கா வந்துவிட்டாளா? எல்லாம் இனிமேல்தான் அறியவேண்டி இருந்தது.

அவள் வீடு வந்து சிலநாட்கள் ஆயின.

இரணைமடுப் பக்கமிருந்து இருளும் நிசப்தமும் விரிந்தெழுந்து கொண்டிருந்த ஒருநாள் மாலை, “வாரும், லோகீஸ்” என்று பரஞ்சோதி யாரையோ உபசரிப்பது உள்ளேயிருந்த சங்கவிக்கு கேட்டது. அவள் வெளியே எட்டிப் பார்த்தாள். ஓமந்தை அந்நியன்! தாய்க்கு எப்படி அவன் அறிமுகமானான்? அவனது பெயரையும் அவள் தெரிந்து வைத்திருக்கிறாளே!

“சங்கவி நிக்கிறாதான”யென கேட்டுக்கொண்டு திண்ணை ஒட்டில் இருக்கச் சென்றான். “மேல இருக்கலாம், லோகீஸ். கதிரை எடுத்துப் போடுறன்” என்று அவசரமாய்ச் சொன்னாள் பரஞ்சோதி. “பறவாயில்லை, அன்ரி” என அவன் ஒட்டிலே அமர்ந்தான்.
“சங்கவீ, உன்னோடதான் லோகீஸ் கதைக்க வந்ததாம். வந்து என்னெண்டு கேள். நான் தேத்தண்ணி வைச்சு வாறன்” என்றுவிட்டு அடுக்களைக்கு நடந்தாள் பரஞ்சோதி.

புதிதாக தகரக் கூரை போட்டு, செத்தை கட்டி, பனைமட்டை வரிச்சுப் பிடித்து, படலை வைத்த அந்த இடம் சமைப்பதற்கு மட்டுமானது. மீள் குடியேற்றத்தின்போது யுஎன்’னின் உதவியாக பரஞ்சோதிக்கு கிடைத்திருந்தவை அந்தத் தகரங்கள். அவற்றை பத்திரமாக வைத்திருந்து சங்கவி வந்த பின்னால் வேலிக்கு நான்கு தகரங்கள் போக மீதி எட்டில் அந்த அடுக்களையைக் கட்டியிருந்தாள். அந்த கடல் நீலத் தகரங்கள் பக்கப்பட்டில் சரிந்து இறங்கியிருந்தபடி வானத்தைப் பார்த்து இரவுகளில் மினுப்புக் காட்டின.

சங்கவி வந்தாள். அவளுக்கு அறியவேண்டிய விஷயத்திலேயே குறியிருந்தது. “எதோ பேசவேணுமெண்டு அண்டைக்கும் சொன்னிர்.”
“ஓமோம்… அண்டைக்கு ஓமந்தையில கண்டோடனயே உம்மை அடையாளம் தெரிஞ்சிட்டுது.”

“அப்ப... முந்தியே என்னைத் தெரியுமோ உமக்கு?”

“தெரியும்.”

“என்னெண்டு?”

“குணாளனால தெரியும்.”

“குணாளனை என்னெண்டு தெரியும்?”

“குணாளன் எங்கட ஊர் ஆள்தான? சின்ன வயசிலயிருந்தே தெரியும்.”

“அது காணாமல்ப் போய் இப்ப அஞ்சாறு வருஷமாகுது.”

“தெரியும்.”

“நாங்கள் கலியாணம் கட்டின பிறகுதான் என்னைத் தெரியுமோ? இல்லாட்டி அதுக்கு முந்தியே தெரியுமோ?”

“கலியாணம் கட்டினாப் பிறகுதான். அப்பவே நீர் முந்தின போராளியெண்டு தெரியும்.”

“இதையெல்லாம் நீர் எதுக்காண்டி தெரிஞ்சு வைச்சிருக்கவேணும்?”

கேள்வி ஒரு சரீர தாக்குதல்போல் இருந்ததை அவன் உணர்ந்தான். அவன் தயங்கியோ தடுமாறிவிடவோ கூடாது. அவன் கதைக்க வந்தவன். அவனுக்கே கதைக்கும் அவசியம் இருந்தது. அவன் தன்னைச் சுதாரித்தான். “நீங்கள் கலியாணம் கட்டி மூண்டு வரியத்துக்கு கிட்ட ஒண்டாய் இருந்திருப்பியளெண்டு நினைக்கிறன்.”

“மூண்டு வரியம்தான்.”

“இந்தக் காலத்தில நீர் அவரைப்பற்றி எவ்வளவு அறிஞ்சிருக்கிறிரோ எனக்குத் தெரியா. ஆனா குணாளன்ர நடத்தையில ஒரு ரகசியமிருந்திது. அது குணாளன் இயக்கத்திலயிருந்து விலகிறதுக்கு முந்தியே எங்களுக்குத் தெரியும். இயக்கத்திலயிருந்து விலகினதே அந்த ரகசியத்தோட தப்பியோட எண்டதுதான் எங்கட சந்தேகம். இந்தத் தேடலெல்லாம் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கத்தான்.”

தான் ஏற்கனவே சந்தேகிக்காத ஒன்றாய் அது இருக்குமாவென அவள் யோசித்தாள். அப்படியாக இருந்தால் அதில் தானறியாத என்ன கூறு இருக்கிறதென்பதைத் தெரியவேண்டும். “என்ன ரகசியம் அப்பிடி குணாளனில?”

“நான் கதைக்க வந்த விஷயம் வேற.”

“ஆனா அது எனக்கு தேவையாயெல்லோ இருக்கு?”

“அதை இன்னொரு நாளைக்குக் கதைப்பம்.”

“அதுசரி, நாங்கள் நாங்களெண்டு சொல்லுறிரே, ஆர் அந்த நாங்கள்? சொன்னா நானும் எல்லாம் விளங்கச் சுகமாயிருக்கும்.”

“நாங்களெண்டது புலியள இல்லை எண்டதைமட்டும் நீர் இப்ப தெரிஞ்சாப் போதும். இண்டைக்கு நான் கதைக்க வந்தது ஓமந்தையில நீர் லைன் மாறி நிண்ட விஷயத்தைப்பற்றித்தான்.”

“ஏன், அதில கதைக்க இனியென்ன இருக்கு?”

“அதில என்ர பிழை ஒண்டுமில்லையெண்டது இருக்கு.”

அவள் பார்வையை அவன்மேல் சுருக்கினாள். கண்டுகொண்டும் அவன் தொடர்ந்தான்: “நீர் பிள்ளையோட பொதுமக்கள் லைனில நிக்கேக்கயே நான் உம்மை அடையாளம் கண்டிட்டன். அப்பவும் குணாளன் நிக்கிறானோ, எங்க நிக்கிறானெண்டதுதான் என்ர கேள்வியாய் இருந்திது. புலியளில இருந்தவையை தனி லைனில போய் நிக்கச்சொல்லி எனவுன்ஸ் பண்ணினோடன அந்தரப்பட்டிர். அப்பிடி லைன் மாறி நிண்டிட வேண்டாமெண்டு சொல்லத்தான் உமக்குக் கிட்ட நான் வந்தது.”

“சொல்லாட்டியும், சைகையிலகூட நீர் அதைக் காட்டேல்லையே. மூண்டு வரியத்தை அந்த நரகத்துக்குள்ள கழிச்சிருக்கிறன்.”

“சொல்ல வந்த என்னை முன்னுக்கு வரச்சொல்லி கூப்பிட்டாங்கள். அவசரமா வந்து சொல்லியிட்டுப் போனா, நானே உம்மை மற்றாக்களுக்கு காட்டிக் குடுக்கிறதாய்ப் போயிடுமெண்டு பேசாமப் போயிட்டன். திரும்பிவந்து பாத்தா உம்மைக் காணேல்ல. அண்டையிலிருந்து… சொன்னா நம்பமாட்டிர்… என்ன நடந்துதோவெண்ட கவலையில இருந்தன். வவுனியா ஆஸ்பத்திரியில கண்டாப் பிறகுதான் என்ர மனம் ஆறிச்சுது.”
ஒரே ஊர்க்காரனை மணந்ததாலேயே ஒரு பெண்மீது அந்தளவு அக்கறையை யாரும் பட்டுவிட முடியுமா? அவளால் நம்பமுடியாமலிருந்தது. ஆனாலும் அவனது கண்களின் உணர்ச்சியலைகள் அவளை நம்பத் தூண்டின. அதை அவள் கேட்டு நிச்சயப்படுத்த நினைத்தாள். “அவ்வளவுக்கு நீர் இரக்கப்பட என்னில என்ன இருந்திது? உம்மட ஊர்க்காறனைக் கலியாணம் செய்ததால மட்டுமாய் அது இருந்திராது?”

“அந்தநேரத்தில ஆரிலயும் நான் இரங்கியிருப்பன். அந்தளவு இழப்புகளோட முடிஞ்ச யுத்தம், முடிஞ்சதாயே இருக்கவேணுமெண்டு நினைச்சன். அதுக்கு மேல ஒரு உயிர் சித்திரவதைப்படவோ அவலப்படவோ எனக்கு சம்மதமாயில்ல.”

மேலே அவர்கள் பேசமுடியாதபடி தேநீரோடு பரஞ்சோதி வந்தாள். கார்த்திகாவின் கூச்சப்பட்டு சிரிக்கும் அழகை ரசித்தபடி தேநீரைக் குடித்தான் லோகீசன். அப்போது சங்கவி கண்டாள், அவனது கண்கள் சிவந்து கலங்கியிருந்தன.

கிளம்பும்போது சங்கவி பின்னால் நடந்தாள். “நீர் எங்க இருக்கிறிர்? தங்கம்மா ஆச்சி வீட்டிலதானோ?” எனக் கேட்டாள். லோகீசன் திரும்பிச் சொன்னான்: “அங்கதான். நாங்கள் கதைக்க இன்னும் கனக்க இருக்கெண்டு நினைக்கிறன். கிட்டத்தான, நேரம் வரேக்க பாப்பம்.”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அப்போது சாமி கொட்டிலில் இருந்திருந்தார். குப்பிவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவன் விலகிச்சென்று நெடுநேரமாகியும் அவள் அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்ட சாமி, அவர்களுக்குள் நடந்துகொண்டிருந்த உரையாடல் எதுபற்றியதானாலும், அது அந்தளவில் முடிந்துவிடவில்லையென நினைத்துக்கொண்டார். அது செல்லக்கூடிய விரிந்த எல்லையையும் அனுமானித்தார்போல் அவர் மெல்லச் சிரித்தார்.
நிறைய பேசவிருப்பதாகச் சொன்ன லோகீசனை ஒரு மாதமாகியும் பின்னர் அவள் காணவில்லை. அவன் வேலை முடிந்து வரும் நேரங்களில் அவள் வாசலில் நின்று கவனிக்க முனைந்தாள். அப்போதும் தூரத்திலேயே அவனைக் காணக்கூடியதாக இருந்தது.

அது அவளுக்கு பெரும் விசனமாகவிருந்தது. அவள் அவனிடம் குணாளனைப்பற்றி கேட்டுத் தெரிய நிறைய இருந்தது. அவனுக்கான அலைச்சல்கள் முடிந்தனவென அவள் நினைத்திருந்தாலும், அவன் ஒரு இருண்ட கோணத்தைக் கொண்டிருந்தானென்ற நிச்சயமான தகவல் அவளளவில் சாதாரணமானதில்லை. அவளும் சாதாரணளல்ல. ஒரு காலத்துப் போராளி. அவளுக்கு குணாளனது முழு ரகசியமும் தெரியவேண்டும். அவள் காத்திருந்தாள் லோகீசனிடம் உண்மை தெரிய.



2012 - 3

அணைக்கட்டுக்கு அப்பால் இருள் விழுந்து செறிந்துவந்த மேற்கின் தூரத்திலிருந்து, மெல்லமெல்ல நிசப்தமும் வந்து கவிகிற நேரமாயிருந்தது அது.

இரணைமடுப் பாதையில் சியோன் கொஸ்பெல்லாரின் ஆலய கட்டிடத்தோடு கிளைப் பாதையாய்ப் பிரிந்து, கனகாம்பிகைக் குடியேற்றத்தை நீளக் கிழித்து குறுக்காக ஓடி ஏ9 நெடுந்தெருவின் 155ஆம் கட்டையடியில் மிதந்த பாதையில், ஒன்றிரண்டு சைக்கிள், மோட்டார் சைக்கிள்களின் அருகிய போக்குவரத்து ஆளரவத்தின் அடங்குகையை திணிவாகச் சொல்லிக்கொண்டிருந்தது.

யுத்தம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருஷத்தின் பின்னால்தான் முகாங்களிலிருந்து சிறிது சிறிதாக அவர்கள் அங்கே மீளத் துவங்கினார்கள். பலரளவில் அது வருவதும் போவதுமாக இருந்தது. அந்த இடம் தவிர வேறு போக்கிடமற்றவர்கள், தமது இழப்பின் வலிகளோடும், அவலத்தின் சுமைகளோடும் நிரந்தரமாய்த் தங்கினார்கள். காலம் அவர்களின் ரணத்தை நிச்சயமாக மாற்றும். ஆனால் அவர்கள் இழந்த வாழ்க்கையை எதனால் மீட்டுக் கொடுக்க முடியும்?

வெளிவாசலில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு தகரங்கள் அடிக்கப்பட்டிருந்த பரஞ்சோதியின் அந்த வீடு, மண்ணினாலும் சீமெந்தினாலும் கிடுகினாலும் அமைந்திருந்தது. அது அழிந்து மீண்டதன் கதை அதன் ஒவ்வொரு இஞ்சியிலும் பதிந்திருந்தது. அது முந்திய நிலையை அடைய இன்னும் காலமெடுக்கும்.

திடீரென ஒருநாள் மோட்டார் சைக்கிள் உறுமி நின்ற சிறிதுநேரத்தில் லோகீசன் அங்கே வந்தான். அப்போது அங்கே நின்றிருந்த தாமரையக்கா சொல்லிக்கொண்டு போக, திண்ணை ஒட்டிலே அமர்ந்தான். “அம்மா எங்க வெளியிலயோ?” என்று கேட்டான். அவள் வடமராட்சி போயிருப்பதை சங்கவி சொன்னாள். அந்தத் தனிமையை விரும்பினவன்போல் அவனில் ஒரு ஆசுவாசம் விழுந்ததை சங்கவி கண்டாள்.

அவனுக்கு சற்றுத் தள்ளியிருந்த தூணோடு சாய்ந்து, தானுமே அதை வேண்டியிருந்தாள்போல அமர்ந்தாள்.

எதிர்த்திசையிலிருந்து காற்று குளிர்ந்து எழுந்துகொண்டிருந்தது. மேற்கே சுடர் விரித்த செங்கோளம் அணைக்கட்டுக்கு அப்பால் அழுந்திக்கொண்டிருந்தது. கிழக்கே நட்சத்திரங்கள் சில தெரிவனவாயிருந்தன. பகலும் இரவும் சந்திக்கிற அந்தப் புள்ளி அற்புதமான பொழுதாயிருந்தது.

அவ்வாறான பொழுதில் சாப்பிடக்கூடாதென்று சின்ன வயதிலே அவனது சின்னம்மா சொல்வது ஞாபகமாயிற்று அவனுக்கு. ஏனென்று அவன் கேட்பதற்கு, அது அந்தரித்தலையும் அந்திப் பேய்களின் பொழுதென்பாள் அவள். அவற்றை பின்னால் நினைப்பதற்கு அவனுக்கு அபூர்வமாகவே சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. அவ்வாறு சொன்னவளும், தம்பிக்கு வைத்த வெடியில் தொலைந்துபோனாள். அவளுமே ஆவியான பிறகு, அந்தரித்தலையும் அந்திப் பேய்களை அவன் அடிக்கடி நினைத்தான். அதுவும் ஆவிகள் அலையும் காலமும் பொழுதும்!

குணாளனது ஆவியும் அலைகின்ற அந்திப்பொழுதாக அது இருக்குமா? அதுபற்றி அவனால் நிச்சயமான ஒரு முடிவுக்கு வரமுடியாது. கடைசியாக அவன் பார்த்தபொழுதில் குணாளன் உயிரோடுதான் இருந்திருந்தான். அவன் அவ்வாறு காணாமல் போனதில் தனக்கும் ஒரு பங்கிருக்கிறதென்ற நினைப்பு அவனை எப்பொழுதும் வதைத்துக்கொண்டே இருந்தது. அவளைத் தேடியதுபோல் அவனையும் அவன் தேடினான். தானல்லாத ஒரு காரணத்தில் அவன் இல்லாமல் போயிருப்பின் அது லோகீசனுக்கு திருப்தியான முடிவாகவே இருக்கும். ஆனால் உடனடியாகத் தொலைந்துபோகிற அளவுக்கு அவன் புண்ணியம் செய்தவனாய் லோகீசன் கருதவில்லை. அவளுடன் பேச அவன் அவாவியது அவன்பற்றி அறியவெனினும், அவனது தொலைவின் தொடக்கப் புள்ளியை அவனே இட்டுவைத்தானென்ற உண்மையை, அவள் தெரியாதிருந்த குணாளனின் ரகசியத்தை அவளுக்கு அறிவிப்பதனூடாகவே வெளிவரப் பண்ணுதல் சாத்தியமென்பதில் அவனுக்குத் தெளிவிருந்திருந்தது. அதனால்தான் தன் மனத்தை ஊக்கப்படுத்த தயார்நிலையில் வந்திருந்தான். ஆனாலும் அதை அவனது மனைவியிடமே யாரோவின் சம்பவம்போல் அவனால் சொல்லிவிட முடியாது.

நினைத்து வந்ததைச் சொல்ல அவனுக்குள் தடங்கல் இருப்பதை அவள் கண்டாள். வீசி நின்ற காற்றில் அவனிலிருந்து மெல்லிய சாராய வாடை அடித்தது. அந்தத் தடையை அது உடைக்கும். சிலருக்கு அந்த நிலையில்தான் சில நுண்மையான விஷயங்களை அணுகமுடிந்திருந்தது. அதற்காகவே அவனும் குடித்துவிட்டு வந்திருப்பான். அவள் பேசாதிருந்தாள்.

இலையுதிர் கால மரக் கிளைகள் மேல்காற்றில் சருகுகளை உதிர்த்தன. மேகங்கள் அசைந்து உருவங்கள் மாறின. காற்றில் எங்கோ கனத்த வெறிக் குரலொன்று பாடிக் கேட்டது. அது செத்தாரின் விதத்தைச் சொல்லியழுத பாடலாக இருந்தது. சனிகளில் அவ்வாறு நடப்பது சகஜமாகப் போயிருந்ததுதான் எங்கேயும்.

சங்கவி எழுந்து கூடத்துள் விளக்கைக் கொளுத்தி வைத்துவிட்டு வந்து கார்த்திகாவை அருகே வைத்துக்கொண்டு மறுபடி அமர்ந்தாள்.
அவன் திரும்பி அவளை ஒருமுறை பார்த்தான். பக்கத்தே அமர்ந்திருந்த கார்த்திகாவை நோக்கினான். பின் திரும்பிக்கொண்டு இதோ சொல்லத் தொடங்கிவிட்டதைப்போல் எச்சியை முழுங்கினான்.

சங்கவி அவனையே பார்த்தபடி இருக்க, திடீரென்று அவனில் கேவல்கள் துடித்தன. சொல்ல எதுவுமறியாது அவள். சிரித்தபடி கார்த்திகா. அவன் சிறிதுநேரத்தில் தானே தெளிந்தான். “ஆயுதமெடுத்த போராளியாய் இருக்கேக்க ஒரு புளுகமும் பெருமையும் இருந்ததுதான். ஆயுதத்தை விட்ட பிறகுதான், ஆயுதத்தோட வாழ்ந்த காலக் கதையளின்ர சரி பிழை தெரிய வருகுது. இருக்கிற நிம்மதியெல்லாத்தையும் அது அடிச்சுக்கொண்டு போயிடுது. போராளியாய் உமக்கு என்னமாதிரி அனுபவமோ, ஆனா எனக்கு அந்தமாதிரியான அனுபவம் கனக்க.”

அவள் இடையிடாமல் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“எல்லாத்தையும் தாங்குறது கஸ்ரமாய்ப் போயிடுது. அப்பிடிச் செய்யாம இருந்திருக்கலாமோ, இப்பிடிச் செய்யாம இருந்திருக்கலாமோ எண்ட மனவுளைச்சல் வந்திடுது. ராவில நித்திரையும் கொள்ள ஏலாமப் போயிடுது. செத்தவை அந்த ராவுகளில உயிர்த்தெழுந்து வந்தா… நித்திரை கொள்ளுறதெங்க பேந்து? அந்தி நேரங்கள் தாங்கேலாத துயரைத் தருகிது எனக்கு. எந்த நிழல் அசைவும் நெஞ்சைத் திடுக்கிட வைக்கிது. ஆவியாய் வந்தது ஆரெண்டு மனம் ஏங்கிச் சாகிது. இதெல்லாம் அந்த தனி ஆளின்ர செயல்பாடு இல்லைத்தான். அந்தக் காலத்தின்ர நிர்ப்பந்தம். எண்டாலும் அதை லேசில தாங்க முடியிறேல்ல. அப்பிடி… பல வேதனையள் எனக்கு. அதையெல்லாம் நினைக்கிற நேரத்தில இப்பிடித்தான் வெடிச்சு அழுறமாதிரி வந்திடுது. சாராயத்தாலயும் அதைத் தாங்கேலாமப் போயிடும்.”

அவன் மறுபடி நிறுத்தினான். சிறிதுநேரம் வெளியையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு தொடர்ந்தான். “அதுகள்லயிருந்து இப்ப தெளிஞ்சு கொண்டிருக்கிறன். எண்டாலும உழைக்கிறதும் குடிக்கிறதுமே வாழ்க்கையாய்ப் போயிடேலாது. அதால இப்ப நான் ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ள வந்த குற்றவாளியாய் இதில இருந்துகொண்டிருக்கிறன்.”

“விளங்கேல்ல.”

“விளங்கும், நான் எல்லாம் சொன்னாப் பிறகு.”

“எனக்கு முதல்ல தெரியவேணும், குணாளனைப்பற்றி. அதுக்காண்டித்தான் நீர் எப்ப வருவிரெண்டு இவ்வளவு நாளாய்க் காத்திருக்கிறன். சொல்லும், குணாளனிட்ட இருந்த ரகசியமென்ன?”

அங்கயிருந்தும் தொடங்கலாம்தானென திண்ணப்பட்டதுபோல் தனது சிறுபொழுதைய தயக்கத்தை விலக்கிவிட்டு லோகீசன் சொன்னான்: “சொல்லப்போறன். குணாளன் தன்ர இயக்கத்துக்கே நேர்மையாய் இருக்கேல்லை, சங்கவி. அவருக்கு இயக்கத்துக்கு வெளியில தொடர்பு கனக்க இருந்திது. அதுவும் புலியளின்ர கட்டுப்பாட்டில இல்லாத யாழ்ப்பாணத்தில. அதைக் கவனிக்கிற பொறுப்பை என்ர இயக்கம் என்னிட்டத்தான் தந்திது. நானும் விசாரிச்சன். அப்பதான் எனக்கு தெரியவந்திது, குணாளன் புலியளின்ர பேரால காசு அடிச்ச விஷயம்.”

“இயக்கத்தின்ர பேரால?” அவள் திகைத்தாள். “அது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை! எதிர் இயக்ககாறன் உமக்கும் இது தெரியுமெல்லோ?”

“தெரியும். இஞ்சயிருந்து காசு அடிக்கிறதுதான் கஷ்டம். வெளிநாட்டில அவற்ர சிநேகிதன் மூலமாய்ச் செய்யிறது, நான் நினைக்கேல்லை, அவ்வளவு கஷ்ரமெண்டு.”

“எப்பிடி அதைச் செய்திது? இனி எதையும் என்னிட்ட நீர் மறைக்கக்குடாது.”

“இஞ்ச வந்த ஒரு கனடாக்காறனை கடத்திவைச்சிட்டு அங்க அந்தாளின்ர வீட்டிலயிருந்து ரண்டு லட்சம் டொலர் எடுத்தாங்கள். அதில பாதி குணாளனுக்கும் கூட்டாளியளுக்கும் கிடைச்சிது. உண்டியல்ல வந்த காசு கைமாறுற நேரத்திலதான் விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சிது. அதாலதான் யாழ்ப்பாணம் வந்த ஒருநாள் குணாளனை தூக்கினம்.”

“அப்ப… குணாளனைக் கடத்தினது உங்கட இயக்கம்தானோ?” அவள் அதிர்ந்தாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பிறகு திரும்பிக்கொண்டு, ‘எங்கட இயக்கம்தான். அதைச் செய்ததும் நான்தான்’ என்றான். பிறகு மௌனமாகிக்கொண்டு தலைகுனிந்திருந்தான்.

“அவரைப் போட்டிட்டியளோ?” அவள் தானே நம்பமுடியாத ஒரு வலியோடு கேட்டாள்.

“இல்லை. போடுற எண்ணமே எனக்கு இருக்கேல்லை. போட்டிடுவன் எண்டுதான் வெருட்டினன். ஒரு கரச்சலுமில்லாம காசு இருக்கிற இடத்தை குணாளன் சொல்லியிட்டான்.”

“பொய் சொல்லுறியள். அவரை நீர் போடேல்லயெண்டா குணாளன் எங்க போச்சுது?”

“பொய் சொல்லுறதெண்டா நான் இஞ்ச வந்திருக்க மாட்டன். குடிச்சிருக்கவும் மாட்டன். உண்மை சொல்லுற தீர்மானத்தோடதான் வந்தன். நான் அவனைப் போடேல்லை. குணாளனைக் காணேல்லயெண்டோடன நானும் யோசிச்சன், எங்க போயிருப்பானெண்டு. எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்ல. கொஞ்சக் காலம் தேடினன். பிறகு நானும் இயக்கத்தில இல்லை. அதுக்குமேல என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியா.”
அன்றைக்கு அவன் அவ்வளவுதான் சொன்னான். அவ்வளவுதான் சொல்ல முடிந்தான்போல இருந்தான். மேலேயும் அவன் பேசினான், சொன்னதையே திரும்பத் திரும்ப. புதிதாய்க் கிரகிக்க அவளுக்கு எதுவும் அதில் இருக்கவில்லை.

அவன் சொல்லிக்கொண்டு போய்விட்டான். வாசலில் மோட்டார் சைக்கிளோடு இடறுப்பட்டபோது, “கவனம்” என்ற சாமியின் குரல் கேட்டது.
அதன் பின்னால் என்றைக்குமே அவள் அதுபற்றி அவனிடம் பேசியதில்லை. அவனது அழுகை அவளின் கேள்விகள் எல்லாவற்றிற்குமான பதில்களை தன்னுள் கொண்டிருந்துவிட்டது. அவனது அழுகை, குணாளன் காணாமல் போனதற்கு அவனையே காரணமென யாரையும் நினைக்கவைக்கக் கூடும். அவளையல்ல. அவள் முன்பே அவனது மறைவின் காரணத்தின் சில பகுதிகளை அறிந்திருந்தாள். ஊடுகளை நிரப்பி ஒரு கதை செய்ய ரமேஷின் அக்கா சொன்ன தகவல்கள் அவளுக்குப் போதுமாயிருந்தன. எஞ்சிய இடைவெளியை லோகீசனின் பேச்சு நிரவியிருக்கிறது.

திரும்ப அங்கே வந்து உரையாடிப் போக லோகீசனுக்கு வெகு நாட்களாயிற்று.

கார்த்திகாமீது பெரிய வாஞ்சை வைத்திருந்தான் லோகீசன். ‘லோகீஸ்..லோகீஸ்…’ என்று கலகலத்துக்கொண்டு அவனைக் கண்டால் பிறகும் முன்னுமாய் அந்தப் பிள்ளையும் திரிந்துகொண்டிருக்கும். பின்னால் வந்து அவனது கழுத்தில் பிடித்துக்கொண்டு முதுகில் தொங்க சமயம் பார்த்திருக்கும். அப்படி ஈடுபாடு இருவருக்குமிடையில். மாமாவெண்டு சொல்லவேணுமென பரஞ்சோதி எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. “மாமாவெண்டு சொல்ல அவளுக்கு விருப்பமில்லைப்போல” என்று அவளுக்குமட்டும் கேட்கும்படி மெல்லமாய்ச் சொல்லி சிரித்தான் லோகீசன்.

பிறகொருநாள், “இவ்வளவு விருப்பமிருக்கு. தனியாயும் இருக்கிறீர். வேணுமெண்டா தத்தெடுத்து வைச்சிரும். இதை வைச்சு என்னால அண்டலிக்கேலாமல் இருக்கு” என சங்கவி பகடியாகச் சொன்னதற்கு, அவனுக்கொரு பதில் தயாராக இருந்தது. “எனக்குச் சம்மதம்தான்...” என்றுவிட்டு, “அம்மாவையும் சேர்த்தெண்டா” என மெல்ல முடித்தான்.

அதுக்கு நான் காத்துக்கொண்டெல்லோ இருக்கிறனென்று சொல்ல வாய்வரை வந்த வார்த்தைகளை அவள் முழுங்கிக்கொண்டாள்.
எப்படியெப்படியோ நேரடியாயில்லாமல் எல்லாம் பூடகமாய் அவர்களின் விருப்பங்கள் பரிமாறப்பட்டிருந்தன. குணாளன் அவர்கள் பேச்சுக்குள் மறந்துபோயிருந்தான். எவன் அவளது கணவனைக் கடத்தினானோ, எவனால் ஒரு கொடுந் துன்பத்துள் நீண்ட காலத்தைக் கழித்திருந்தாளோ அவன்மீது ஒரு பற்று வளர்தல் என்பது எண்ணினால் அதிசயமாகக் கூடியது. ஆனால் அதுதான் சங்கவியிடத்தில் நடந்திருந்தது.
காலம் அந்த உறவின் நித்திய சாத்தியத்தை எண்பிக்கக் கேட்டது. அவரவரும் தத்தம் மனங்களில் பழைய காயங்களும் நோவுகளும் கசடுகளுமின்றி வாழ்ந்துவிடுவார்களா என வினா தொடுத்தது. சங்கவியின் செவிகளில் அதன் கேள்வி விழவேயில்லை. அவளுக்கு குணாளன் ஆள் கடத்திலில் ஈடுபட்டு பணம் கொள்ளையிட்ட இயக்கக் குற்றவாளியாய் விசாரணைக்காக இருந்துகொண்டிருந்தான். ஆனால் லோகீசன் அதைக் கேட்டான் போலிருந்தது. குணாளனின் முடிவு தெரிந்த பின்னால் அவளை நெருங்க அவன் தீர்மானம் கொண்டான்.
அவளிடம் வருபவன் ஒரு எல்லையில் நின்றே பேசினான். வெட்டவும் வெட்டாமல், ஒட்டாவும் ஒட்டாமல்… அப்படியொரு உறவு.
லோகீசன் காணாமல் ஆக்கப்பட்டோர்பற்றிய கூட்டங்களுக்கு, மனு கொடுத்தல்களுக்கு அவளை எப்போதும் போகவே தூண்டிக்கொண்டிருந்தான். அவளுக்கு விருப்பமோ நம்பிக்கையோ இல்லாதபோதும் அதைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குள்ள தீவிரத்தை வியந்துகொண்டு அவனுக்காக அவள் போனாள்.

கடைசியாக அவள் கலந்துகொண்ட காணாமல்போனோரின் கண்டன அமைதிப் பேரணியில் அவள் கண்ட, கேட்ட சம்பவங்கள் அவளின் மனநிலையை இறுகப் பண்ணியிருந்தன. இனி குணாளன் தனக்குப் புருஷனாகவும், கார்த்திகாவுக்கு தகப்பனாகவும் திரும்பமாட்டானென்று ஏனோ அவளுக்குள் ஒரு முடிவு விழுத்தியிருந்தன. பாதி விருப்பத்தோடுதான் அன்றைக்கும் போயிருந்தாள். அவளளவு நம்பிக்கையும் விருப்பமுமில்லாத வேறு இரண்டுபேர் அங்கே அவளுக்கு அறிமுகமாகினர்.

“என்னவோ, எனக்கு இப்ப அந்தாள் உயிரோட இருக்குமெண்டு நம்பிக்கையில்லை. ஊராக்கள் என்ன சொல்லுங்களோண்டு வந்தன்” என்று வெளியாகவே தன் அந்தரங்கத்தைச் சொன்னாள் அதிலொருத்தி.

மற்றவளும், தன்னுடைய உறவுக்காரரின் நச்சரிப்பிலும், அந்தாள் திரும்ப வராட்டியும், காணாமல்போன ஆக்களின் மனைவிகளுக்கு என்ஜிஓக்களால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களுக்காகவும், அரசாங்கத்தால் கிடைக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகைக்காகவும் வந்ததாகச் சொன்னாள். தனக்குத் தெரிந்த பலருக்கு அதுவே கனவாயிருப்பதையும் அவள்தான் தெரிவித்தாள்.

சங்கவி கேட்டு மௌனமாயிருந்த பொழுதில், பின்னால் நின்ற ஒரு மூதாட்டி, “உப்பிடி நெக்கக்கூடாது, பிள்ளையள். இப்பிடியெல்லாம் அலையிறது உங்களுக்குக் கஷ்ரமாய்த்தானிருக்கும். எண்டாலும் ஒரு சீவனெல்லே? செத்து ஆத்துமமாய்ப் போயிருந்தாலும், நீங்கள் சொன்னதக் கேட்டா எப்பிடித் துடிச்சுப்போகுங்கள்?. நேரில இருக்கேக்க அதுகளை எந்தளவு உதாசீனம் செய்யலாம் சரி, கள்ளப் புருஷனோட படுத்திட்டு வந்தாக்கூடப் பறவாயில்லை, ஆனா காணாமல் போய் இந்தளவு காலமாச்சு, அதுகளைப்பற்றி அக்கறையெடுத்து ஒரு விசாரிப்புச் செய்யவேணும். அது முக்கியம்” என குரல் தழுதழுக்கச் சொன்னாள்.

அவள் அவனுக்கான தேடலைச் செய்தாள். ஆனால் ஆண்டுக் கணக்கில் அதையே செய்துகொண்டு திரிவதில் என்ன பிரயோசனம் இருந்துவிடப்போகிறது? ஒருமுறை யாழ்ப்பாணம் போய்வர தேவைப்படும் இருநூறு ரூபாய்க்குக்கூட பலவேளைகளில் அவள் அல்லாடித் திரிந்திருக்கிறாள். அதனால்தான் சில ஊர்வலங்களையும், சில ஒன்றுகூடல்களையும் அவள் தவிர்த்தாள். அதற்காக அவள் எந்த வருத்தத்தையும் பட்டுவிடவில்லை.

வாழ்க்கை தன் திசையில் ஒவ்வொருவரையும் இழுத்து வேறு திசைகளின் கவனத்தை மறக்கச் செய்துகொண்டிருந்தது.
அதற்கான காலம்தான் அது.


2012 - 4

வீட்டு முற்றத்தில் மங்கிய மஞ்சள் விளக்கொளியொன்று இலேசாக விழுந்திருந்தது. நிசப்தம் சுமந்து வந்த காற்று, கூடத்துக் கதவு பெயர்ந்திருந்த அந்த வீட்டின் வாசல்வழி உள்ளே நுழையத் தயங்கிப்போல் நின்றுவிட, அலைக்கழியாச் சுடர் விரித்து தன் இயல்புக்கான வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தது கூடத்து மேசையிலிருந்த கைவிளக்கு.

மேசைக்கு முன்னால் கதிரையில் அமர்ந்திருந்தாள் சங்கவி.

நீண்ட நாளாய் அவளிடத்தில் லாம்பொன்று வாங்குவதற்கான எண்ணம் கிடந்தது. வெளிச்சத்தைக் கூட்டவும் குறைக்கவுமான திரிதூண்டியும், காற்று கொளுந்தை அவித்துவிடாதபடி சிமிலியும் கொண்ட லாம்பு மிக வசதியும் பாதுகாப்பும் லாபகரமுமானது. அவ்வாறு ஒரு லாம்பு அவளிடமும் இருந்தது. கனகாம்பிகைக் குள குடியேற்றத் திட்ட வீடுகளிலிருந்து இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த 2008ன் மார்கழியில் ஒரு மாரி நாள் வெள்ளத்துள் எல்லோரும் குடிகலைந்தபோது, அகப்பட்ட நாலு துணிகளை அள்ளிக்கொண்டு, மூன்று வயதுக் குழந்தையாகவிருந்த கார்த்திகாவை கையில் எடுத்தபடி போகவே முடிந்திருந்ததில், ஏறக்குறைய மூன்றாண்டுகளின் பின் திரும்பக் கிடைத்த அந்த வாழ்க்கையில் லாம்பு அவளுக்கு கனவாகிப்போனது.

குறுக்கு சலாகையில் கையெட்டும் உயரத்தில் ஒரு கொளுக்கிக் கம்பி தொங்கியபடியிருந்து, அந்த வீட்டில் இடப்பெயர்வின் முன் அவள் லாம்புடன் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லிக்கொண்டிருந்தது. அதுபோன்றதே அவளது தாய் பரஞ்சோதியினதும் கனவாய் இருந்தது. அவள் வடமராட்சி போயிருக்காவிட்டால், அவளும்கூட அந்த இரவில் வழக்கம்போல் கதவு நிலையோடு சாய்ந்து முன்னொட்டுத் திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்து, அணைக்கட்டுத் திசையின் இருளைக் கண்களால் அளைந்தபடி, ஒரு லாம்பின் தேவையை எண்ணிக்கொண்டு இருந்திருக்கக் கூடும். லாம்பு கனவாக இருக்கிற வாழ்க்கையில் விளக்கு மறக்கமுடியாப் பெரும் அவலத்தை விளைத்திருக்க நிறைந்த சாத்தியமிருக்கிறது. இதில் பரஞ்சோதியினதும் சங்கவியினதும் லாம்புக் கனவு எதனாலானது?

அன்று மாலையில் அவள் தோய்ந்துவிட்டு வந்தபோது இருட்டு நன்றாக விழுந்திருந்தது. விளக்கைக் கொளுத்தி மேசையில் வைத்துவிட்டு, ஏற்கனவே ‘நித்திரை வருகு’தென சொல்லிக்கொண்டிருந்த கார்த்திகாவுக்குச் சாப்பாட்டைக் கொடுத்தாள். கார்த்திகா கூடத்துள்ளிருந்த நார்க் கட்டிலில் படுக்க, வந்து முற்றத்தில் வெகுநேரம் நின்று மேற்கு மூலை இருளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு வாசல்புறக் கொட்டிலில் சாமி இன்னும் வந்திராத வெறுமையை உணர்ந்தவளாக உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தாள்.

அப்போது ஒரு அவசரத்தில்போல் லோகீசன் வந்தான்.

மறுநாள் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர்பற்றிய விசாரணைக் குழுவின் விசாரணைக்கு அவள் முன்னிலையாக வேண்டுமென வற்புறுத்துவதுமாதிரி பேசிக்கொண்டிருந்தான். “நாளைக்கு நடக்கப்போறது முக்கியமான விசாரணையாயிருக்கும்.”
“எப்பவும் நடக்கிறது முக்கியமான விசாரணையெண்டுதான் சொல்லுகினம்.”

“மனித உரிமை ஆணையரின்ர கவனத்தில இந்த விசாரணையை இலங்கை வெளியுறவு அமைச்சு நடத்திது. இங்கிலாந்து வெளியுறவு மந்திரி, சிறீலங்கா ஜனாதிபதியெல்லாரும் கிட்டடியில யாழ்ப்பாணம் வந்துபோனாப் பிறகு, காணாமல்போன ஆக்களைப்பற்றின விசாரணையை கெதியில முடிக்கச்சொல்லி அழுத்தம் குடுத்திருக்கினம்.”

“சிறீலங்கா அரசிட்ட இருவதாயிரம் மனு குடுத்திருக்காம். ஒரு மனுவுக்கு பதில் வந்துதெண்டாலும், நான் பிறகு வாற எல்லா விசாரணையளுக்கும் போறன். இப்ப என்னைக் கொஞ்சம் நிம்மதியாய் இருக்க விடும்.”

“காணாமல்போன உறவுகளின்ர விஷயத்தில எங்களுக்கு ஒரு தார்மீக கடமையிருக்கு, சங்கவி. எல்லா நியாயங்களைப்போலயும் இதையும் நாங்கள் கைவிட்டிடக்குடாது.”

அவள், அவன் சுவரில் விழுத்திய நிழலிலிருந்து தன் பார்வையைத் மீட்டு அவனைப் பார்த்தாள்.

அந்த நியாயத்திலிருந்து எது காரணம்கொண்டும் விலகக்கூடாதென்ற தீர்க்கம் அவன் கண்களில் இருந்துகொண்டிருந்ததை அவள் கண்டாள். அவனுக்கானதல்ல, அவளுக்கானதே அந்த நியாயமெனினும், அதில் அவன் கொண்டிருந்த பற்றுறுதி அவளுக்கு எரிச்சலைத் தந்தது.
அந்த விஷயத்தை அந்தளவில் முடித்துக்கொண்டு அவன் வேறு எதையாவது பேசலாமென்பதே அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவன் அந்த மய்யத்தைவிட்டு நகரவில்லை.

இருள் விழுந்த அந்த நேரத்தில் அவன் வந்தது கண்டு உடம்பெங்கும் சிலிர்த்துக்கொண்டிருந்த பொழுதில், தான் நினைப்பிலும் ஒதுக்க நினைத்திருந்த விஷயத்தையே அவன் பேசியதில் அவளது மனம் களைத்தது. தாங்கள் அந்த யுத்தத்தில் இழந்துவிட்ட பல அறங்களில் அதுவும் ஒன்றாக ஆகிவிடக்கூடாதென எத்தனை தடவைதான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறான்? அவள் பிடிவாதம் இளகாததில் என்ன நினைத்தானோ, “நீர் நாளைக் கூட்டத்துக்குப் போறதுதான் நல்லதெண்டு படுகிது, சங்கவி. நல்லாய் யோசிச்சு வையும். காலமை வெள்ளண வாறன்” என்று சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே போய்விட்டான்.

நிலமரைய கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துணி உட்பூச்சற்ற சுவரில் விழுத்தியிருந்த நிழலின் நீள்கோட்டுக்குப் பக்கத்திலேதான் அவனது நிழலும் நின்றிருந்தது. அவனது வார்த்தைகளைக் கேட்டபடி நிழலைப் பார்த்திருந்தவேளையில், அவன் அங்கிருந்து விலகிச் செல்வதை அவள் கண்டாள். ஆயினும் நிமிஷங்கள் கழிந்த பின்னர்தான் அவன் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டிருந்ததின் வெறுமையை அவள் உணர்ந்தாள். அப்போதும் அவனது நிழல் சுவரில் இருந்ததாய் அவளுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.

அவன் விட்டுச் சென்ற வார்த்தைகள் மீண்டுமெழுந்து அவளை உறுக்கின. ‘நீர் நாளைக் கூட்டத்துக்குப் போறதுதான் நல்லது.’
தங்கள் மனங்களிலிருந்த ஆசையின் திசைவழி அவளோடு பயணிக்க தனக்கு விருப்பமில்லை என்பதையா அவன் அதன்மூலம் அவளுக்குத் தெரிவித்திருக்கிறான்? அவன் சொல்லும் தார்மீக நியாயங்களுக்கு இணைந்தா அவனது ஆசையின் நியாயங்களும் இருக்கின்றன?
ஒரு நிமிஷம் நின்று தான் சொல்ல விரும்பியதை அவன் கேட்டுப் போயிருக்கலாமென்று பட்டது அவளுக்கு. ‘இனிமேல் குணாளனைப்பற்றின பேச்சை என்னிட்ட எடுக்காதயும். அளவுக்கும் மேல நான் அலைஞ்சு களைச்சிட்டன். அதை இண்டளவும் உயிரோட வைச்சிருப்பாங்களெண்டும் நான் நம்பேல்லை’யென அவனிடம் சொல்ல அவள் தயாரான வேளையில்தான் அவன் அப்படிச் செய்திருந்தான். அவளுக்கு மனதை முறுக்கியது.

இனி ஆருக்குச் சொல்ல? ஆரோடு வாதாட? அவள் பிடித்துவைத்த அவனது நிழலோடு பேசுவதைத்தவிர அவளுக்கு வேறு மார்க்கமில்லை.
அப்போது அருகில் நிழல் அசைவதுபோலிருக்க திடுக்கிட்டு அவள் நிமிர்ந்தாள். அது சிற்றுருவொன்றின் நிழலாயிருந்தது. நார்க் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கார்த்திகா பக்கத்தில் வந்து அவளது தோளோடு நின்றிருந்தாள்.


2012 - 5

கார்த்திகாவை உள்ளே படுக்கவைத்துவிட்டு நார்க்கட்டிலில் வந்தமர்ந்தாள் சங்கவி. மேசையிலிருந்த விளக்கு எடுத்துச்சென்று உள்ளே பணிய வைக்கப்பட்டிருந்தது. நிலத்தில் படிந்து திறந்திருந்த கதவினூடாக கூடத்துக்குள் வந்து விரிந்த வெளிச்சம், அப்பால் செல்ல திறனற்று இருளில் கரைந்திருந்தது.

அவள் கதவற்ற முன் வாசலூடு முற்றத்தைப் பார்த்தாள். மேகம் கவிந்த வானத்திலிருந்து நிலா ஊமை வெளிச்சத்தைப் பரத்திக்கொண்டிருந்தது. மெல்லிய நிழல்கள் முற்றத்தில் விழுந்து அசைந்துகொண்டு கிடந்தன.

சுவரை நோக்கியபோது தெரிந்தது, அவள் பிடித்து வைத்திருந்த அவனது நிழலும் அவன்போலவே அவளுக்காகத் தாமதித்து நிற்காமல் கலைந்து போயிருப்பது. அவனது நிழலோடாயினும் சம்வாதிக்கும் எண்ணம் அப்போதே அவளில் அழிந்தது.

அப்படியே சுவரில் சாய்ந்தாள்.

அவனது அபிப்பிராயத்தைப்பற்றி விடிவதற்குள் அவள் ஒரு முடிவை எடுத்தும் ஆகவேண்டும். காலையில் வெள்ளென வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான்.

எவ்வளவுதான் நெருங்கிய ஒரு உறவு வட்டத்துக்குள் வந்திருந்தாலும் அவன் அக்கணம்வரை அந்நியன். நெஞ்சுக்குள் வந்திருந்தால்போல என்ன? அவனுடைய உதாசீனங்களுக்காக வருந்தத்தான் முடியும். ஆனால் உதர பந்தத்தோடுள்ளவளே எதுவும் எண்ணாமல் அவளைத் தனியே விட்டுப்போனாளே, அதை என்ன சொல்ல? அந்த ரீச்சரம்மாவின் தாய் தானுமே ஒரு ரீச்சர்போல கொண்டையும் போட்டு, கையில் கண்ணாடிக் கூடும், தோளில் கொளுவிய கான்ட் பாய்க்குமாய்ப் போனது நெஞ்சில் வந்து நின்றது. பரஞ்சோதி அப்போதெல்லாம் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னம் மதியச் சாப்பாடு முடிந்ததும் ஒரு அவசரம்போல் வெளிக்கிட்டுக்கொண்டு வடமராட்சி போவதாகச் சொன்னாள். ‘இப்பவா? நேரம் மூண்டு மணிக்கு மேல ஆயிட்டுதேம்மா!’ என்றாள் சங்கவி. ‘ஞாயிற்றுக் கிழமைதான? லோகீஸைக் கேட்டிருக்கிறன். அது கொண்டுபோய் என்னை கிளிநொச்சி பஸ் ஸ்ராண்டில விடும். இருட்டுறதுக்குள்ள சாந்தி வீட்டை போயிடுவன்’ என்றாள்.

போவதற்கிருந்த தேவையைத் தெரிந்திருந்தாலும் அந்தளவு அவசரத்தில் அவள் போயிருக்கவேண்டாமே என்பதுதான் அப்போதும் சங்கவியின் எண்ணத்தில் கிடந்தது.

மற்ற இரண்டு பிள்ளைகளில் அம்மா காட்டும் கரிசனத்தில் பாதியைக்கூட தன்னில் காட்டவில்லையே என்று எப்போதும் அவளில் ஒரு நீண்ட ஆதங்கம் இருந்தே வந்தது. லோகீசன் போய்விட்ட அழலோடு அப்போது அது உற்பூதமெடுத்து வந்து அவள் எரிச்சல்படும்படி தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டிருந்தது.

இரணைமடுப் பகுதியிலிருந்த ராணுவ நிலையில் ஆயுதங்களும் வாகனங்களும் கொண்டுவந்து குவிக்கப்பட்டு, அங்கே நிரந்தரத் தளவமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்தி அன்று காலையில்தான் ஊரெங்கும் பரவிவந்தது. வீடுகளில், நேர்நேர் எதிர்ப்படுகிறவர்களில் பேச்சு அதுவாகவே இருந்தது. தாமரையக்கா வீட்டில் கேட்டுவந்து அதை சங்கவியிடத்தில் சொன்னவளும் அவள்தான். அதையும் யோசிக்காமல் போய்விட்டாளே.

வெளியில் தென்படும் கலகலப்புகள், போக்குவரத்துக்கள், புதிய புதிய வாகனங்களில் வரும் வெள்ளை மனிதர்கள் எல்லாம் யுத்தம் முடிந்ததின் அடையாளங்களேயொழிய, யுத்தத்தின் பின்விளைவுகளின் பாதிப்புகள் அகன்றதான அர்த்தமில்லையென்பது, ரீச்சரம்மாவோடேயே நீண்டகாலம் இருந்தும், பின்னால் அடிக்கடி அவள் வீட்டுக்கு ஓடியோடிப் போய்க்கொண்டும் இருக்கிற அம்மாவுக்கு புரியாமல் போனது ஏன்? எந்த நிலைமையும் இறுதி யுத்தம் முடிந்து மூன்றாண்டுகளாகியும் பெரிதாக அங்கே மாறிவிடவில்லையே!

இன்னும் மீளக் குடியேற்றப்படாத மக்கள் கணிசமான அளவில் ஆங்காங்கே இடைத்தங்கல் நிலையங்களில் இருக்கிறார்களென அவள் அறிந்திருந்தாள். மேலும் பெரும் பரப்பளவு வன்னி நிலம் விடுவிக்கப்படாமல் ராணுவக் கட்டுப்பாட்டில் பெரும் பிரதேசம் முட்கம்பிச் சுருள் வலைகளுக்குள் வெறித்துக் கிடக்கின்றது. அவற்றின் காவல் கோபுரங்களிலிருந்து நான்கு திசைகளையும் துளைத்துக்கொண்டு இருக்கின்றன கூர்த்த ராணுவ விழிகள். நிலம் அந்நியப்பட்டே இருக்கிறது.

அவ்வாறான ஒரு பிரதேசத்தில், அப்படியான ஒரு சூழ்நிலையில் அவளைத் தனியேவிட்டு, அதுவும் வாசல் கொட்டிலில் படுக்கும் சாமிகூட இல்லாதிருக்கிற நேரத்தில், அம்மா போகாமல் இருந்திருக்கலாமென்றே அவளுக்குத் தோன்றியது.

அம்மா அங்கே இல்லாதது தனிமையின் அந்தரமா அவளுக்கு? அப்படிச் சொல்லமுடியாது. அவள் பல்வேறுவிதமான பயங்கரங்களையும், அபாயங்களையும் கடந்து வந்திருப்பவள். நடந்த யுத்தத்திற்கு முப்பது வயதெனில் அவளுக்கு இருபத்தொன்பது. யுத்தத்திற்குள் பிறந்தவள் அவள். அவளது எண்ணங்களை யுத்தமே வகுத்திருக்கிறது. அவளது இயல்பான மனநிலைக்கு இரணைமடு ராணுவத் தளவமைப்பு ஒரு செய்தியாக மட்டுமே இருக்க முடியும். கூடியபட்சம் இடைஞ்சல் படுத்துகிற செய்தியாக. ஆனால் ஒரு பெண்ணாக வாழ எல்லா நொய்மைகளையும் அடைந்துகொண்டு வருகிற காலப்பகுதியில் அவள் தனிமைப்பட்டிருக்க விரும்பாதவளாய் இருந்தாள்.

மூத்தவள் சாந்தமலர் கணவன் இல்லாவிட்டாலும் மாத ஊதியம் பெறுகிற ஒரு ஆசிரியையாக இருந்தாள். அவளது பிள்ளைகளும் பதின்னான்கு பதினாறு வயதுகளில் பேச்சுத் துணைக்காவது அவளோடு கூட இருந்துகொண்டிருந்தன. சங்கவிக்கு யார்? எப்போதாவது ஓம் இல்லையென்றோ, வேணும் வேண்டாமென்றோ மட்டுமே சொல்லத் தெரிந்துகொண்டும், வேண்டிய பொழுதுகளில்கூட அழத் தெரியாமல் எந்நேரமும் சிரித்துக்கொண்டும் இருக்கிற அவளது ஏழு வயது மகளால் எவ்வளவான துணையைக் கொடுத்துவிட முடியும்?

அம்மா யோசிக்கவில்லை என்பதே அவளில்லாத இடம் ஏற்படுத்திய தனிமையின் உளைச்சலைவிட அதிக கனமாக இருந்தது.
மதியத்துக்கு மேலே அவளை கிளிநொச்சி பஸ்நிலையத்தில் கொண்டுபோய்விட அன்று லோகீசன் வந்திருந்தான். வெளிவாசலில் அவனைக் கண்டதும் பேர்ஸை எடுத்து அடையாள அட்டை இருக்கிறதாவெனப் பார்த்து கவனமாக பாய்க்கில் வைத்ததும், பத்து நாட்களுக்குள் வந்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டு போய்விட்டாள். போகும்போதுமட்டும் மறக்காமல் நின்று சொன்னாள்: ‘இண்டைக்கு இல்லாட்டி நாளைக்கு சாமி வந்திடும். அதுக்கு மேல அதுக்கு வெளியில நிக்கிற பழக்கமில்லை. ராவில நித்திரை கொள்ளாத சாமி நாயைப்போல நல்ல காவல்தான? ஹோலுக்கு கதவு போட்டிருந்தா இன்னும் தெம்பாய்ப் போயிருப்பன். லாம்பில்லாமல் இருக்கிறதும் ஒருமாதிரித்தான் இருக்கு. கெதியில ஒண்டு வாங்கிப்போடவேணும். ம்… லோகீசிட்டச் சொல்லியிருக்கிறன், கொஞ்சம் பாத்துக்கொள்ளச் சொல்லி. தாமரையக்கா இருக்கிறாதான முன்னால, எதோ பாத்து இருந்துகொள். அவசரமெண்டா சாந்தியின்ர நம்பருக்கு அடிச்சுச் சொல்லு.’
அவள் போய்க்கொண்டிருக்கையில் மௌனம் கலைந்து சங்கவி சொன்னாள்: ‘ நான் இருந்திடுவன், நீங்கள் போங்கோ.’
அவள் புறப்படுகிற நேரமெல்லாம் அவ்வாறே சொல்லுகிறாள். இவளும் பதிலாக அதையே சொல்லி அனுப்புகிறாள். எப்போதும் சொல்லிச்சொல்லியே சுரணையற்றுப்போன வார்த்தைகளாய் இருவருக்குமே தெரிந்திருந்தும் அதைவிட வேறு என்ன வார்த்தைகளை அவர்கள் சொல்லியிருக்க முடியும்?

‘ம்ஹ்ம்… அம்மா!’ சலிக்கவும் அவளுக்கு அலுப்பாயிருந்தது. அதைமட்டுமே செய்யவும் முடிவதாயிருந்தது.

எங்ஙனம் அவள் அம்மாவை வெறுத்துவிட முடியும்? அவள் செட்டைக்குள் குஞ்சுபோல் தன் பிள்ளைகளைக் காத்தவள். வளர்ந்த பின்னால் மீன் தன் குஞ்சுகளைப்போல் கண்களாலும் அவர்களை ரட்சித்துக்கொண்டிருந்தவள். தன் முழுப் பிரக்ஞையிலும் அவர்களையே முன்னிறுத்தி வாழ்ந்தவள். தனியாகவிருந்து எல்லாம் அவள் செய்தாள். தந்தையை சங்கவி கண்ட ஞாபகம்கூட இல்லாதிருக்கிறாள். அக்கா சாந்தமலர் மட்டும் நடராசசிவமென்ற அவர்களது அப்பாவின் ஞாபகங்கள் சிலவற்றைக் கொண்டிருக்க, சின்ன அக்கா சாந்தரூபி சிவப்பாய், நெடுப்பமாய், வேட்டியை எப்பவும் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு வீட்டுக்குள்ள திரிஞ்ச ஒரு உருவத்தை தனக்கு மங்கலான ஞாபகமிருப்பதாய்ச் சொல்கிறாள். அவளுக்கோ மங்கலாகக்கூட எதுவும் ஞாபகமில்லை. சங்கவியைப் பொறுத்து தந்தை தங்கள் பெயரோடு ஒட்டிக்கொண்டிருந்த ஒரு வால் மட்டுமே. பசித்த வேளையில் பாதி வயிற்றுக்கென்றாலும் அம்மாதான் அடித்துப் போட்டாள். இல்லாதவராகிவிட்ட ஒரு மனிதரின் இருப்பை அவர்களுக்கு நம்பிக்கையோடு சொல்வதுபோல் அவள் குங்குமம் இட்டபடியே கடைசிவரையும் இருக்கிறாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குங்குமம் இந்திய ஸ்ரிக்கர் பொட்டாகியிருப்பினும், கண்ணாடி பார்க்காமல் நெற்றியின் நடுவில் துல்லியமாய் வைத்துக்கொள்ள முடிகிறது அவளுக்கு. கண்ணாடி பார்த்தேனும் தன்னால் அவ்வளவு கச்சிதமாய் வைக்கமுடியுமாவென்று சங்கவிக்கு சந்தேகம்.

சங்கவி பிறந்து சிறிது காலத்தில் தொடங்கிய ஓட்டம். அம்மா ஓடுகிற நேரமெல்லாம் தன் நான்கு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டுதானே ஓடினாள்? தனியாளாய் இருந்திருந்தால் எந்தக் குண்டுவீச்சையும் அவள் பொருட்படுத்தியிருக்க மாட்டாளென்றே தெரிந்தது. அவள் உடல்-உயிர் இசைந்திருப்பை அந்தளவு வெறுத்திருந்தாள். உயிர்வாழ்க்கையைத் தாங்கமுடியாத களைப்பு அவளில் விழுந்திருந்தது. 1987இன் வடமராட்சி யுத்தம் தொடங்கியபோது அல்வாயிலிருந்து தென்மராட்சிக்கும், அங்கே வரணியில் தங்கியிருந்தவேளை தென்மராட்சி யுத்தம் 2000இல் தொடங்க எழுதுமட்டுவாளைநோக்கியும் ஓடினாள்.

சங்கவியின் சின்ன வயதுக் காலத்தில் அவர்கள் அல்வாயிலிருந்தபோது, இரவுநேரத்தில் காணிகளுக்குள்ளால் குறுக்கு வழியாக நடக்கையில் ‘பாத்து நடவுங்கோ… பாத்து… பாத்து…’ என்று ஆயிரம் தடவைகள் சொல்லிக்கொண்டு வருவாள் அம்மா. ஒற்றையடித் தடம் விலகி நெருஞ்சி முள்ளுக்குள் கால் வைத்துவிடாத அளவுக்குமே அவர்கள்மேல் அம்மாவுக்கு கரிசனம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அல்வாய் புறப்பட்ட நேரத்திலும், ‘பாத்து இருந்துகொள்’ளென்று சொல்லிவிட்டுத்தான் போனாள். இவ்வளவும் செய்பவளை வெறுத்துவிட எப்படி முடிந்துவிடும்? ஆனாலும் அம்மாவின் நடத்தைகள் சங்கவியின் மனத்தை உழையவே வைக்கின்றன.

அவளுக்குள் ஏதோ ஓர் அவசரம் என்றும் குடிகொண்டிருக்கிறது. ஓர் அந்தரம் அவ்வப்போது புற்றுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஜந்துவைப்போல தலைகாட்டி மறைகிறது. அம்மாவுக்குள் அவசரமும் அந்தரமும்போல் இரகசியங்களும் இருக்கின்றனவோ என ஒருபோது யோசித்தாள் சங்கவி. அவ்வாறெனினும் அது அப்போதைக்கு அவளுக்கு வேண்டாதது. உடனடிப் பிரச்னையின் தீர்வுக்கான சிந்திப்பை அது ஒத்திப் போட்டுவிடும்.

சங்கவி இருப்பின் விறைப்பை மாற்ற கொள்ள இறங்கி சுவரோடு சாய்ந்தாள். ஒருமுறை லோகீசனின் நிழல் விழுந்த சுவரை திரும்பி நோக்கினாள். இருள் பரந்து விழுந்து சுவரை மறைத்திருந்தது. லோகீசனின், தொங்கிய துப்பட்டாவின் நிழல்கள் எதுவுமில்லை.
அவனை நினைக்கிறபோது உடம்புக்குள்ளும் ஒரு விறுவிறுப்பு ஏறுவதை சங்கவி பலவேளைகளிலும் உணர்ந்திருக்கிறாள். அந்த ஒல்லி உடம்புக்குள்ளும் நினைப்பில் கிளரும்படியான தகிப்பு இருக்கக்கூடுமென்பது நம்பமுடியாதது. போரடி விளையாட்டில் வெற்றியை போட்டியாளனின் வலுவோடு சேர்ந்து நிர்ணயிப்பவை ஒல்லியான தேங்காய்களாலேயே முடிந்திருக்கிறது. அமுக்கிவைத்த சுருள் கம்பிபோன்ற வன்மை அது. எந்தநேரமும் விடுபட்டுவிடும் முறுக்கோடேயே இருக்கிறது. நரம்புகளுள் திமிறும் உணர்ச்சியும் அவ்வாறுதான். விடுபடும்வரை ஓயாத வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கக் கூடியதும்.

சின்ன வயதில் நல்ல சிவப்பு சங்கவி. சுண்டினால் தோல் ரத்த நிறமடைந்து தனியாய்த் தெரிகிற சிவப்பு. ஒடுங்கிய அந்த முகத்திலும் இன்னும் அழகு மாறாதிருந்த கண்கள் அவளுடையவை. கண்களாலேயே அவள் அழகாகத் தோன்றியதுபோலும் இருந்தது. எந்த இழுப்புக்கும் பின்னலுக்கும் முடிப்புக்கும் அடங்கிவிடாத ஒரு பரட்டைத் தன்மை அவளது கூந்தலுக்கு இருந்தது. எந்நேரமும் கொஞ்ச இழை நெற்றியில் வந்து புரண்டுகொண்டே இருக்கும். அவள் குறைய சிரிப்பவளாய் இருந்தாலும், சிரிக்கும்போது பளீரென்று வெண்மையடிக்கும் வரிசையான பற்கள் கொண்டிருந்தாள். தனித்தனியே அழகென்று கூறிவிடமுடியாத அக்கூறுகள் அவளில் ஒன்றாகச் சங்கமித்தபோது அவளையும் அழகானவளாகக் காட்டின.

அந்த மூலதனத்தில் அவனுக்கும் விருப்பமிருந்தது. ஆனால் திடீரென்று அவளிலிருந்து அவன் விலகினான். விலகியும் ஓடிவிடாமல் ஒரு எல்லைக்குள் நின்றிருந்தான். ஏன் அவ்வாறு ஆனது?

அவளுக்குமே அவன்மீது தோன்றிய தன் ஆர்வம் ஆச்சரியமாக ஒருபோது இருந்தது. அவன் அவளது முழு வெறுப்பையும் மூன்று வருஷங்களாக, முகாமில் இருந்த காலம் முழுவதும், கொண்டிருந்தவன். ஒரு வாரத்துள் அந்த வெறுப்பு அதன் உச்சியிலிருந்து தகர ஆரம்பித்தது. என்ன நடந்தது அதற்கு?

பதில் பல்வேறு சம்பவங்களுள் புதைந்திருந்தது.


2012 - 6

வெளியே விட்டுவிட்டு கிரீச்சிட்ட சிள் வண்டின் இரைச்சல், இறுக விழுந்திருந்த நிசப்தத்தை மேலும் திண்ணியதாக்கியிருந்தது. நிசப்தமென்பது எங்கேயும் தனியாக இருப்பதில்லையோ? அது எங்கிருந்தேனும் ஒரு சப்தத்தின் கீறை வலிந்திழுத்து தன் அருகே வைத்துக்கொள்கிறது. அல்லது தன்னிருப்பை அது சப்தத்தின் ஒரு கீறேனும் உள்ள இடத்தில் ஸ்தாபித்துக்கொள்கிறது.

சங்கவி ஒருபோது தன் அக உலகத்திலிருந்து வெளியுலகு மீண்டபோது சப்தக் கீறெடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு இறுகிக்கிடந்த நிசப்தத்தை உணர்ந்தாள். அது திண்மமாய் தன்னில் இடறுப்படுவதாய் உடனடியாக ஓர் அதிர்வலை சலனித்தெழுந்தது. பெரும்பெரும் வெடி முழக்கங்களுக்கு அதிர்ந்த நிலை போய், நிசப்தத்திற்கும் அதிருகின்றதாய் மனம் ஆகியிருப்பதை அப்போது ஆச்சரியமாய் அவள் நினைத்தாள். சப்தமா நிசப்தமா மனத்தை அச்சப்படுத்துகிறதென்பது. சூழ்நிலை மனத்தில் இட்டிருக்கும் உணர்வோட்டத்தின் நிமித்தமானதென துணிந்தாள்.
முற்றத்தில் வான வெளிச்சம் வரைந்திருந்த மென்நிழல்களை மூடி இருள் கவிந்து கிடந்தது. கை மணிக்கூட்டை லாச்சியிலிருந்து எடுத்து அச்சொட்டாய் நேரமறியும் அவசியமற்றிருந்ததில், வழக்கம்போல் அனுமானத்தில் நேரம் பத்து மணியிருக்குமெனக் கணித்தாள். சாமி கொட்டிலுக்கு வந்திருக்குமாவென ஒரு எண்ணம் எழ, வெளியே வந்தவள் கேற்றடியில் பார்வையை வீசினாள். அந்த இருளும் தன்னுடன் ஒரு கீற்று ஒளியைக் கொண்டிருந்தது. வாசலோரமிருந்த கொட்டில் நிழல்க் கூம்பாய்த் தெரிந்தது.

சாமி இருந்திருந்தால் சின்ன பொட்டுவிளக்கையேனும் சிறிதுநேரம் எரியவைத்திருப்பார். அவர் வாசிக்கிற நேரம் அதுவாகவே இருந்தது. அகப்பட்ட பழைய பேப்பரெல்லாவற்றையும் சுருட்டிக் கட்டிவந்து வாசித்துக்கொண்டிருப்பார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் எந்தப் பேப்பரையும்தான் கொண்டுவருவார். எந்த மொழிப் பேப்பரை வாசித்தாரென்றும் அவளுக்குத் திட்டமில்லை. ஆனால் வாசிப்பது அவருக்கு ஒரு இடையறாப் பழக்கமாகியிருந்ததை மட்டும் அவள் கண்டிருந்தாள்.

எழுத்தும்கூட உண்டு. அது பருவ காலத்துக்குப்போல நடப்பது. அதிலும் அவர் தீவிரமாய் இருப்பார். என்ன எழுதினாரோ அவ்வளவு மூச்சாக? அவளறியவில்லை.

படுத்திருக்கிற நேரத்தில் சாமி புகைக்கும் வீடியின் கங்கும் சிலபோது கனன்று தெரியும். சிலவேளை பீடியைக் குலைத்து எதையோ வைத்துச் சுருட்டியும் புகைப்பார். அவளுக்கு அது என்னவென்று தெரியும். ஆரம்பத்தில் அவளுக்கு அது பிடிக்காமல்தான் இருந்தது. தாய் பரஞ்சோதிகூட, ‘அப்பிடியான மனிசனை அங்க தங்கவேண்டாமெண்டு சொல்லுவ’மென்றுகூட, அவர் ஒருபோது ஆற்றியிருந்த உதவியின் கடனை மேவியும், ஒருநாள் சொன்னாள். பின்னால் அவரும் சகஜமாக, அதுவும் சகஜமாகிப்போய்விட்டது அவர்களுக்கு. அந்தாளுக்கும் என்ன துக்கமோ, எதை மறக்க அப்பிடிச் செய்யுதோவென்று இருந்துவிட்டார்கள்.

கஞ்சா புகைக்கிற நேரத்தில் மெல்லிய குரலில் சித்தர் பாடல், பழைய சினிமாப் பாடலெல்லாம் சாமி பாடுவார். வெறிப்பாட்டாய் அவை இருக்கவில்லை என்பதுதான் அதன் விசேஷம். அப்பாடல்களின் அர்த்தம் நேரடியாகப் புரியாதபோதும், தனது உணர்வுகளுக்கு மிக அண்மித்தவையாய் அவை இருந்ததை அவள் கண்டாள். சிலவேளைகளில் கண்கலங்கவும், மனம் பொங்கியெழவும், உடம்பு சூடேறவும்கூட அவளை அவை செய்தன.

அப்போது சாமி கொட்டிலுக்குத் திரும்பியதின் அடையாளமெதுவும் அவளுக்குத் தென்படவில்லை.

‘சாமி பாவம்.’

அது சாமியின் வயதுபொறுத்து எல்லோராலும் கொள்ளப்பட சாதாரணமாகக் கூடியதுதான். ஆனால் அவள் அப்போது முனங்கியதில் அதையும் தாண்டிய புரிதலொன்று இருந்தது.

சாமி நினைவுகளின் சுமையோடும், விருத்தாப்பியத்தின் இயலாமையோடும் மிகவும் பலஹீனம் கொண்டிருந்தார். நூறு வருஷங்களின் பாரத்தை தன் நினைவிலேந்தித் திரிவதாய் சாமி ஒருமுறை சொல்லியிருந்தார். காலத்தால் அழிக்கவோ மறைக்கவோ செய்யமுடியா நினைவுகளின் அடுக்கிலிருந்து கிளர்ந்த இயலாமையா அது?

சாமி நினைவுகளைப் புரட்டுகிறபோதுகளில் சங்கவி கவனித்திருக்கிறாள். அவர் பெரும்பாலும் கொண்டிருந்தது சோகங்களின் சுமையை என்றே தெரிந்தது.

முகாமிலிருந்து வெளியேறி கனகாம்பிகைக் குளம் வந்த காலத்தில் திடீரென வாசலோடு இருந்த கொட்டிலில் ஒருநாள் அவரைக் கண்டாள் சங்கவி. அது மாமாவின் மேற்பார்வையில் காணி இருந்தபோது, அந்த வீட்டில் கூலிப் பிழைப்புக்காக வந்திருந்த குடும்பத்துக்கு கட்டிக்கொடுத்த கொட்டில்தான். அம்மா சிறிதுகாலம் ஒரு பசுமாடு வாங்கி அந்தக் கொட்டிலிலே கட்டி வளர்த்துவந்தாள். அப்போது காட்டுத் தடிகள், மரத் துண்டுகளை போட்டு மழைக்கு பாதுகாப்பாய் வைக்க உதவிக்கொண்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒழுக்கு விழும் விறகுக் கொட்டில்.
கொட்டிலுள் புரண்ட அசைவு தெரிய சங்கவி கிட்டப்போய்ப் பார்த்தாள். சாமி இரண்டு கிடுகுகளை இழுத்துப் போட்டு தூங்கிக்கொண்டிருந்தார். பழைய அந்த கொட்டிலிலே மாடுகள் கட்டப்பட்டு வெகுகாலம் ஆகியிருந்தும், மண்ணே சாணாகப் படையாய் கறுத்திருந்த அந்த இடம் காலத்துக்கும் எரு மணத்தைக் கொண்டிருக்கக் கூடியது. சாணாக, மாட்டு மூத்திர நாற்றம் பெருமளவு சுவடழிந்திருக்காது. என்றாலும் ஒருவரால் அவசியத்துக்குத் தாங்கக்கூடிய இடமாய்த்தான் இருந்தது. சங்கவி அழைத்துப் பார்த்தாள். சாமியின் மெல்லிய குறட்டையே பதிலாக வந்தது. ‘சரி, படுக்கிறதெண்டால் படுத்திருந்திட்டுப் போகட்டும்’ என விட்டுவிட்டாள்.

பரஞ்சோதி வந்ததும் சாமி படுத்திருப்பதைச் சொல்ல, ‘நீ ஆரிட்டயோ குடுத்துவிட்ட காயிதத்தை கொண்டுவந்து தந்தது உந்தாள்தான். அதாலதான் கொட்டிலுக்குள்ள படுக்கிறத பேசாம விட்டிட்டன்’ என்றாள் அவள்.

ஆரம்பத்தில் சாமி எப்போதும் அங்கே படுப்பார் என்பதுமில்லை. ஒரு லொட்ஜில்போல் வந்து தங்கிநின்றுவிட்டு இரண்டொரு நாளில் போய்விடுவார். என்ன அலுவல் இருந்ததோ சாமிக்கு? ஆனால் அது பின்னாளில் தொடர்ந்தேர்ச்சியாகி சாமியின் நிரந்தரத் தங்குமிடமாகவே ஆகிவிட்டது. இரவிலே விழித்திருந்து பகலிலே தூங்குகிற சாமியை வீட்டில் தனியே இருக்கிற எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது? சாமியால் வளர்ப்பு நாயொன்றின் காவலைக் கொடுக்கமுடியும்.

எங்காவது போனால் திரும்பிவர சாமிக்கு சிலவேளை வாரங்களே ஆகிவிடும். திரும்பிவந்துவிட்டால் சாமியின் இருப்பு தனியாகத் தெரியும். எப்படியும் சாமி அங்கே இருக்கிறபோது ஒரு துணையின் இருப்பை அவள் அடைந்தே வந்திருந்தாள்.

அவளுக்கு மிகப் பிடித்தது எங்கிருந்து பிடித்துவந்தாரோ, அந்தப் பூனையை சாமி அக்கறையோடு கவனித்த விதம். அதனோடு சிலவேளை சாமி பேசிக்கொண்டிருப்பதை அவள் கண்டிருக்கிறாள். அதுவும் கேட்டுக்கொண்டு இருப்பதுபோல சாமியைப் பார்த்துக்கொண்டே இருக்கும். அது மறந்துகூட அவர்கள் வீட்டுப் பக்கம் வந்ததில்லை. சாமி இல்லாத காலங்களில் அது எங்கும் வெளியே காணப்பட்டதுமில்லை. நூறு வருஷங்களை சுமையாய் நினைவிலேற்றித் திரியும் ஒரு சாமி… அவர் வளர்க்கிற பூனை… சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது நினைக்க.
பிறகு லோகீசனின் நினைவு வந்தது. உறுதியாய்ச் சொல்லிவிட்டு லோகீசன் போன விசையிலிருந்தே. தன்னால் அதை நிராகரித்துவிட முடியாதென்று சங்கவிக்குத் தெரிந்தது. அது அவனைக் காயப்படுத்தும். லோகீசனின் முடிவை அவள் கவனமெடுக்கவே வேண்டும்.
மறுநாள் நடைபெறவிருந்த காணாமல் போனோர்பற்றிய விசாரணைக் கமிஷனில் முன்னிலைப்பட சங்கவி தீர்மானித்தாள்.
எல்லாம் எண்ணிக்கொண்டிருக்க தூக்கம் வந்தது அவளுக்கு.

தூங்கி சிறிதுநேரத்தில் விழிப்பு வந்தது.

வெளியே குருவிகளின் சத்தம் எழுந்துகொண்டிருந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



 வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com

]