அத்தியாயம் 2009 -7

பங்குனி பிறந்து வெய்யில் கனத்திருந்தது. இரவுக்கும் பகலுக்கும் வெளிச்சம் தவிர வேற்றுமை அதிகம் இல்லாதிருந்தது. பகலில்போல் இரவிலும் குண்டுகள் விழுந்து வெடித்தன. பகலில்போல் இரவிலும் மனிதர்கள் சிதறி அழிந்தார்கள். தெய்வங்களும் நீங்கிப்போன பூமியாயிருந்தது வன்னி நிலம். பிரார்த்தனைகள் மனிதருக்கு ஆறுதலைத் தந்தன. பலன்களைத்தான் தராதிருந்தன. பதுங்கு குழி இருந்ததில் அதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த இடம், யுத்தம் புதுக்குடியிருப்பைநோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையிலும் தகுந்த பாதுபாப்பைத் தருமாவென யோசனையாகிப் போனது முருகமூர்த்திக்கு. அதுவரை இருந்தது சரிதான், ஆனால் இனி என்ற கேள்வி அவன் மனத்தில் விடைத்து நின்றிருந்தது. கடைசியில் மேலே நகர்ந்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு அவன் வந்தான். மாசி 4இல் இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி ஓய்ந்திருந்த ராணுவத் தாக்குதல், மறுபடி மாசி 6ஆம் திகதியிலிருந்துதான் உக்கிரமடைந்திருந்ததை அவன் நினைவுகொண்டான்.

இரண்டு நாட்கள் இந்தக் குண்டுவீச்சுகளுக்கு ஒரு இடைவெளி விட்டாலும், குண்டுகள் எட்டாத இடத்துக்கு பிள்ளைகளோடு அவன் ஓடிவிடுவான். பலபேர் குண்டுகளை யோசிக்காமல் ஓடினார்கள். அவனால் முடியவில்லை. அவனுடைய மகள் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் நடுங்கி ஒடுங்குகிறாள். எந்தநேரமும் பதுங்குகுழிக்குள்ளே அடங்கிக் கிடக்கிறாள். ஷெல்லடியில் தாய் உடல் சிதறிச் செத்த துக்கத்தையும், அதன் பயத்தையும் அவளால் இலகுவில் மறந்துவிட முடியாது. அவள் சிரித்து என்றும் பார்த்ததேயில்லையென ஆகியிருந்தது. முருகமூர்த்தி நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. சித்திரை 14இன் புதுவருஷத்துக்கு முன்னர் வன்னியின் முழுநிலப் பரப்பையும் பிடித்துவிடுகிற மூர்க்கத்தில் ராணுவம் மும்முரமான எறிகணை வீச்சில் இறங்கியதுதான் நடந்தது. கடற்புறத்திலிருந்து பீரங்கிப் படகுகள் குண்டுகளை வாரி இறைத்துக்கொண்டிருந்தன.

பங்குனி பத்தாம் திகதிக்கு மேல் பயங்கரமான ஷெல்லடி தொடங்கியது. கடற்கரை பிளந்து தனிநிலமாய் அசைவதாய் கண்டவர் ஆரோ கதைத்தார்கள். மாத்தளனிலிருந்து அம்பலவன்பொக்கணையூடாக நந்திக்கடல்வரை எழுப்பியிருந்த புலிகளின் மண்ணரண் தகர்ந்துகொண்டிருந்தது. புலிகள் நிலைகளை பின்னகர்த்திக்கொண்டு இருந்தார்கள்.

குண்டுகள் மக்களுக்கிடையில் வந்து விழுந்துகொண்டிருந்தன. தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் மக்கள் அலறியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். ஜனங்களுக்கிடையில் விழுந்த எறிகணைகளுக்கும், வெடித்த ஷெல்களுக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் மரணங்களையும், ஆயிரக்கணக்கானவர்கள் காயங்களையும் அடைந்திருந்தனர். மாத்தளனுக்கு எடுத்துச் சென்று கப்பலில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புகிற வசதியும் பலபேருக்கு கிடைக்கவில்லை. வீதிக் கான்களில் விடப்பட்டிருந்த காயம் பட்டவர்களின் ரண வலி ஓலங்கள் சமுத்திரத்தின் தீராத பேரோசையாய் எழுந்துகொண்டிருந்தன.

மாத்தளன் மண்ணரண் தகர்ந்தால் புதுக்குடியிருப்பு மேலே பாதுகாப்பான பிரதேசமில்லை. அது விரைவில் நடக்கலாமென எல்லோரும் திகிலில் இருந்தனர். வெகுக்கும் வெடி முழக்கங்கள் மனத்திலும் கால்களிலும் எங்காவது ஓடிவிடும் விசையை எவரிடத்திலும் ஏற்படுத்திக்கொண்டிருந்தன. பதுங்கு குழி கிடைத்தவர்கள் அவற்றுக்குள் ஒடுங்கியிருந்தனர். நாள், திகதி எல்லாம் அவர்களுக்கு மறந்துபோயிருந்தது. பகலும் இரவும் பசியும் தாகமும் மட்டும் தெரிந்திருந்த காலம் அது.

புதுவருஷத்துக்கு இரண்டு நாட்கள் முந்திய ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் குண்டுவீச்சு குறைந்திருந்தது. முருகமூர்த்தி வெளியே வந்தான். அடுத்த பதுங்கு குழியிலிருந்த குடும்பம் இன்னும் அங்கேயே இருந்துகொண்டிருந்தது கண்டான். அது அவனுக்கொரு தெம்பைத் தந்தது. இயக்கத்திலிருந்து யாரோ அவர்களுக்கு தகவல் சொல்லிப்போனதை அவன் ஒருமுறை கண்டிருந்தான். கிடைத்த தகவல்மூலம் அவர்களெடுப்பது யுத்த நிலைமைக்குத் தகுந்த முன்னகர்வாயிருக்கும். முருகமூர்த்தி தகவலறியக் காத்திருந்தான்.

வெளியே சனங்கள் குண்டுவீச்சு நின்றிருந்த அந்த இடைவெளியில் மூட்டைகளுடன் நகர்ந்துகொண்டிருந்தனர். எல்லாருடைய குறியுமே பாதுகாப்பான இடமாக இருந்தது. அது எங்கேயிருக்கிறதென்பதுதான் யாருக்கும் தெரியாமலிருந்தது.

வீதிக்கு வந்தபோது இன்னும் மோசமான நிலைமை விளையப்போவதின் அவசரங்களே தெரிந்தன. பெரும்பாலான சனங்கள் பொக்கணையை நோக்கி ஓடியிருந்தனர். போதுமான பணமிருந்தால் அங்கிருந்துகூட யாழ்ப்பாணம் போய்ச் சேர தோணியோட்டம் ரகசியத்தில் இயங்கியது.
யுத்தம் புதுக்குடியிருப்பைநோக்கி நகர்ந்தபோது இடையேயுள்ள காடுகள் வயல்களை ஊடறுத்து மறுபடி தருமபுரத்துக்கு பலர் ஓடியிருந்தனர். ஓடுகிறபோது குண்டுகள் வெடித்து இறந்தவர்களும் பலராயிருந்தனர். மிதிவெடியில் அகப்பட்டும் பலபேர் அங்கங்கள் சிதறியிருந்தனர். சிதறிய அங்கங்களின் துண்டுகளை காட்டெலிகள் வந்து கடித்ததைக் கண்டதான எல்லாக் கதைகளோடும் முருகமூர்த்தி திரும்பிவந்தான்.
அந்தளவில் ஜோதியும் விசாகனும் பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்தனர்.

ஜோதியையும் தம்பியையும் கண்ட நாகிக்கு பெரிய இரக்கமாகப் போய்விட்டது. அதுகளுக்கு நேர்ந்த சோகம்போல் யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாதென எண்ணினாள். கண்முன்னால் பெற்ற தாயைப் பறிகொடுத்தவர்கள் அவர்கள். எந்தநேரமும் ஒரு திடுக்காட்டத்தில் ஜோதி இருந்ததையும் அவள் கண்டாள். அவர்களது நடமாட்டமும் அத்தனை நாட்களில் அருகியே இருந்திருந்தது.

அழுதழுது அவளது பேரப்பிள்ளைகள் அப்போது சோர்ந்துபோய் படுத்திருந்தன. நடக்கக்கூட இயக்கமற்று களைத்துக் கிடந்தன. அவர்களின் கோலங்களே சேற்றில் உருவியெடுத்த உடம்புகள்போல் ஆகியிருந்தன.

ஒருமுறை தனபாலன் வந்து பார்த்துவிட்டுப் போயிருந்தான். கொண்டு வந்திருந்த இரண்டு சாப்பாட்டுப் பார்சல்களைக் கொடுத்தான். புதிதாகச் சொல்ல எதுவும் இருக்கவில்லை. ‘கவனமாயிருங்கோ’ என்றுமட்டும் சொன்னான். வேறு நம்பிக்கை அவனுக்கே இருந்திருக்கவில்லைப்போல இருந்தது அது. அவன் போகும்போது, ‘நீங்கள் கவனம்’ என்று பின்னாலிருந்து சொன்னாள் தயாநிதி. வேண்டுதல்களால் தன் நெஞ்சில் உறுதியை நிறைக்கப் பார்த்தாள்.

வெளியே நின்றிருந்த ஜோதி நாகியைக் கண்டதும் கிட்ட வந்தாள். அன்றைக்கு அவள் சற்றுத் தெளிந்திருந்ததுபோல் பட்டது நாகிக்கு. கொஞ்சம் வளர்ந்துமிருந்ததாய் எண்ணினாள். வளர்ச்சி அவளது பார்வையின், பேச்சின் முதிர்ச்சியிலாய்த் தெரிந்தது.

அந்த வளவுக்குள் கூடாரமொன்று போடலாமா எனக் கேட்டதற்கு மறுநாள் அவளை நேர்முன்னாய் எதிர்ப்பட்டிருந்த நேரத்தில் அவர்களைப்பற்றி நாகி விசாரித்திருந்தாள். தாய் இறந்த செய்தியும், விதமும் சொல்லி ஜோதி அழுதாள்.

அதன் பிறகு அப்போதுதான் அவளை நேர்நேரே காணுகிறாள். அவர்கள் அங்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிற நிலையிலும், அந்தத் தகவல்களைத் தவிர அவள் வேறு அறிந்ததில்லை. தேவையும் இருக்கவில்லை.

“என்ன, பிள்ளை?” நாகி கேட்டாள்.

“நீங்கள் என்ன செய்யப்போறியள், அன்ரி? அப்பாக்கும் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லையாம். எங்களுக்கு இஞ்ச இருக்க இருக்க பயமாய்க் கிடக்கு…” என்றாள் ஜோதி.கப்பனே அதைக் கேட்டிருக்கலாமெனத் தோன்றியது நாகிக்கு. அவர் மனைவியை இழந்ததுபோல, அவளும் தன் தாயை இழந்திருக்கிறாள். எல்லோரும்தானே இழந்துகொண்டு இருக்கிறார்கள்? இதில் ஏன் அவர் அவ்வளவு துக்கத்தில் அழுந்தி பூடகமாய் நடந்துகொள்ள வேண்டும்? பிறகு அவளுக்கு ஒரு தெளிவு வந்தது, ஒரே இழப்பானாலும் எல்லோருமே ஓரளவான துக்கத்தை அடைவதில்லையென்றும், இதில் அவரது துக்கம் எவ்வளவோவென்றும் நினைத்தபோது. அவள் சொன்னாள்: “சொல்லிச் செய்யிறமாதிரி நிலைமையொண்டுமில்லை, பிள்ளை. மாத்தளன் விழுந்துதெண்டா, பிறகு இஞ்ச தங்கேலாதெண்டுதான் எல்லாரும் பறையின. ஆனந்தபுரப் பக்கமாய்ப் போகலாமெண்டு சிலபேர் கதைக்கினம். அங்க சனங்களோட போராளியளும் இருக்கினமாம். என்னென்ன நடக்குமோ? விடியத் துவங்க நாங்களும் வெளிக்கிடப் போறம். எங்கயெண்டு தெரியா. சனம் போற பக்கத்துக்குத்தான் போகவேணும். நடக்கிறது நடக்கட்டும்” என்றாள் நாகி.

ஜோதி போய்விட்டாள்.

என்ன முடிவெடுப்பார்களோ என எண்ணினாள் நாகி. தாங்கள் போன பின்னால் அந்த பதுங்கு குழி இன்னும் பாதுகாப்பானதென இரண்டு நாட்கள் கூடுதலாய் தங்கவும் முடிவுசெய்யலாம். பதுங்கு குழி இல்லாதவர்களுக்குத்தான் மிக்க அவலம் அங்கே. பதுங்கு குழி இருந்தவர்கள் பாக்கியவான்கள். பலபேர் மண்ணணை எழுப்பிவிட்டுத்தான் பிள்ளைகளோடு படுத்தெழும்பினார்கள். அந்த அவதி அவர்களுக்கு வரவில்லை.
நாகியின் அபிப்பிராயத்தை தந்தையிடம் சொல்லிவிட்டு, ஜோதி அவசரமாக அடுப்பை மூட்டினாள். எறித்த வெய்யில் அடுப்பினை எரிக்க உதவிசெய்தது. சிறிதுநேரத்தில் அவள் கஞ்சிப் பானையை இறக்கி தறப்பாளின்கீழ் கொண்டுவந்தாள். மூவரும் கோப்பைகளில் ஊற்றி அவசரமாய்க் குடித்தார்கள். பின் மூவரும் திசைக்கொருவராய் இருளில் ஒதுங்கினர். பின் எங்கோ அதிர்வுகள் எழத் துவங்க, அவசரமாய் எழுந்து பதுங்கு குழிக்குள் ஓடிவந்து குதித்தனர்.

வானம் சின்னதாய் ஒரு ஒளியைச் சிந்திக்கொண்டிருந்தது. மூடப்படா பதுங்கு குழியில் அது விளக்காய் இருந்தது.

மரணமென்பது ஒரு துளி நேரத்தில் நிகழ்ந்துவிடின் அவர்கள் செய்த புண்ணியத்தின் சாங்கம் அதுவென நினைக்க முடியும். அங்கஹீனமாகி உயிரோடு எஞ்சுதல் பாவக் கணக்கு மிகைத்துவிட்டதின் அர்த்தம்தான். அத்தனை தெளிவிலும், முருகமூர்த்திக்கு அரியமலரின் மரணத்தை நினைக்கிறபோதெல்லாம் தாங்க முடியாத துக்கம் சுரந்தெழுந்தது. எவ்வளவு விசையில் அந்தக் கொடூரம் நடந்து முடிந்தது!
துக்கமேனும் அதை நினைப்பதில் சிலவேளை ஒரு சுகம் இருக்கிறது.

இரண்டு சாக்குகள், இரண்டு பைகளில் தேவையான சாமான்களை வைத்து கட்டியாகிவிட்டது. விடிய வெளிக்கிட்டுவிடலாமென்ற எண்ணத்தில் வீதியிலேறி வட்டக்கச்சியில் அவர்களது வீட்டின் முன்னால் தெருவைப் பார்த்தபடி முருகமூர்த்தியும், அரியமலரும், ஜோதியும், விசாகனும் நின்றிருந்தனர். பிள்ளைகள் சற்று உள்ளேயாக வாசலடியில். திடீரென வானத்தில் கூவிக் கேட்டது. சட்டென கண்டான் முருகமூர்த்தி ஒரு நெருப்புப் பிழம்பின் உருண்டை வடிவத்தை.

‘பங்கருக்கோடுங்கோ!’ என்று அவன் கத்தியபோது பிள்ளைகள் இரண்டும் பதுங்கு குழிக்குள் பாய்ந்துவிட்டன. முருகமூர்த்தி அப்படியே றோட்டில் குப்புற விழுந்துவிட்டான். அரியமலர் கால்வாயைத் தாண்டி ஓடினாள்.

அவன் தலையை சற்றே நிமிர்த்திப் பார்க்க குண்டு கூவியபடி வாசலைநோக்கி வந்துகொண்டிருந்தது. ‘கடவுளே…!’ என்றான்.
அது வெடித்துச் சிதறியபோது ஒரு சிறிய மனித ஓலமும் கூடஎழுந்தது. பிளந்த மண் பாளங்கள் உயர்ந்தெழுந்து விழுந்தடங்க, ‘ஐயோ, அரியமலர்…!’ என்று அவன் எழுந்து வாசலுக்கு ஓடினான்.

ஒரு சின்ன அசைவுடன் பாதியுடல்தான் கால்வாய்க் கரையில் கிடந்தது. தொட முடியவில்லை. தூக்க முடியவில்லை. ஆனால் அந்தப் பாதி உடம்பில் பாதியளவு உயிராவது இருந்தது.

கண்கள் அசைந்தன ஒருமுறை.

அத்துடன் உடம்பு முற்றாய் அசைவறுத்தது.

அரியமலரின் மீதியாய்க் கிடந்தது பாதிப் பிணம்.

சிதறிக் கிடந்த மீதிகளை எடுத்தான். பொருத்த முயன்றான். உடம்பில் துண்டுகள் குறைந்திருந்தன. எங்காவது பறந்துபோய்ச் சொருகியிருக்கும். பிள்ளைகள் காண்பதன் முன் எல்லாம் முடிக்கவேண்டும்.

கிடங்கு வெட்டி தாழ்த்தபோது அவள் புண்ணியம் செய்தவளென எண்ணினான் முருகமூர்த்தி.

பிள்ளைகள் பதுங்கு குழியிலிருக்கவே எல்லாம் முடித்து அவன் வந்தபோது விசாகன் சொன்னான், ‘அம்மா இன்னும் வரேல்லயப்பா’ என.
‘அம்மா இனி வரமாட்டா’ என்றான் அவன்.

என்ன புரிந்தானோ, ஒரு துக்கத்தைப் புரிந்தவனாய் அழுதுகொண்டிருந்தான் விசாகன். கேட்காமலே தெரிந்து அழுதுகொண்டிருந்தாள் ஜோதி.
நீண்டநேரத்தின் பின் வெளியே சனங்கள் தெருவில் போகிற சத்தம் கேட்டது.

நால்வருக்காய் கட்டிய மூட்டைகளை மூவராய்ச் சுமந்துகொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

முருகமூர்த்தியின் உடம்பு பதறியது. வாய் கோணி விசும்பல் வெடித்தது. முனைப்புக்கு அடங்காக் கேவல் பிறந்தது. “என்னப்பா?” என்று கேட்ட ஜோதிக்கு, “ஒண்டுமில்லை” என்றான் முருகமூர்த்தி. ஆனால் அவளுக்குத் தெரியும், அவர் அம்மாவின் மரணத்தையெண்ணி வதை படுகிறாரென்று. அவளுக்கும் துக்கமுண்டு. துக்கத்தைவிட பயம்தான் அதிகமாக இருந்தது.

அப்பாவை அழவிடக்கூடாதென நினைத்தாள். ஆனால் முகமெங்கே இருக்கிறது, அந்தக் கண்ணீரைத் துடைத்துத் தேற்ற? நிமிர்ந்திருப்பவரின் முகத்தை அவளால் குறிப்பில் தொடமுடியும். அவள் கையை உயர்த்த உன்னுகிற நேரத்தில் பதுங்கு குழியினருகே வெடித்துப் சிதறுகிறது ஒரு குண்டு. அவளது நெஞ்சைப் பிளந்து உள்ளிறங்குகிறது அதன் செவியறைந்த சத்தம். அவள் நடுங்குகிறாள்.

பதுங்கு குழிக்கு வெளியே குண்டுகள் வந்து விழுகின்றன. வெடித்துச் சிதறுகின்றன. சிதறிப் பறந்து எதிலெதிலோ தைக்கிற ஓசைகளும் பின்னால் கேட்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அலறல்களும். நிலம் அதிர்ந்துகொண்டிருந்தது. வெடித்த மின்னல்கள் கண்ணை அவித்தன. அதை யாரும் எதிர்கொண்டு பார்த்ததில்லை. கண்மூடிக் கண்ட வெளிச்சங்கள் அவை.

தானே மட்டுமெனில் ஒரு மரணம் முருகமூர்த்திக்கு ஒப்பாக இருந்திருக்கும். வெளியே வந்து நின்றால் போதும். மிச்சமில்லாமல் செத்து வீழ்ந்துவிடலாம். ஆனால் பிள்ளைகள்…?

விசாகன் பலகையில் படுத்திருந்தான். குண்டு முழக்கத்தில் எழுந்திருப்பான். ஆனாலும் சரிந்தபடி படுத்திருந்தான். பக்கத்திலே ஜோதி குறண்டிக்கொண்டு.

கீழே ஈரம் ஊறிய மண்ணில் தேகங்கள் விறைத்திருந்தன.

இரவின் குளிர் மேனியை நடுக்கியது.

குண்டுகள் ஓய்வெடுத்த நேரத்தில் ஜோதி எழும்பி சற்றுநேரம் நின்றிருந்தாள். எழுந்து நின்றால் தலை வெளியே தெரியும்படியான பதுங்கு குழிதான் அது. தெரிந்தது என்னவோ சில வெளிச்சப் புள்ளிகளும், இருளும்தான்.

பதுங்கு குழி மறுபடி அதிரத் தொடங்கியது.

கூச்சலிட்டபடி தொப்பென குந்தினாள். கையில் பிடித்து முருகமூர்த்தி அவளை அருகே இருத்தினான். பிறகு அவளது நடுங்கும் மேனியின் படபடப்பு கண்டு மெல்ல அவளை நெஞ்சோடு சாய்த்தான்.

வளவுக்குள் வெடித்த குண்டில் வெட்டிக் கொட்டியதுபோல் மண் உள்ளே வந்து விழுந்தது. அது ஒவ்வொரு முழக்கத்துக்கும்தான் உதிர்ந்தது. அவள் இன்னுமின்னுமாய் தந்தையின் அரவணைப்புக்குள் போய்க்கொண்டிருந்தாள். அவன் கைகளால் அவளுக்குப் பாதுகாப்பு வளையமிட்டான். அதை மீறி குண்டு அவளைத் துளைத்துவிடாது. அவள் பயத்தை தணிக்கத் துவங்கினாள்.

வெளியே வெடித்த ஒரு முழக்கத்தில் எங்கோ கூக்குரல் கேட்டது. பின் ஓலமாய்… அழுகையாய் தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் ஒரு நிசப்தத்தின் பயங்கர மூட்டம்.

அவளது உடம்பு இன்னும் நடுங்கிக்கொண்டு இருப்பதை அவன் உணர்ந்தான்.

‘அப்பா இருக்கிறன்தான? பயப்பிடாத, ஜோதி.”

அணைப்பால் தவிர அந்தநேரத்து ஆறுதல் எப்படி இருந்துவிடும்?

அவள் இப்போது அந்தக் கரங்களுக்கூடாக ஒரு கதகதப்பினையும் உணர்ந்தாள். ரோமத்தில் குத்தலெடுத்தது. அது பயமழிந்த ஒரு நிலையென அவளுக்குப் பட்டது.

சத்தம் வெளியே கேட்டதாயின் உள்ளே கேட்கவில்லை. மரணங்கள் வெளியே விழுந்ததாயின் அது உள்ளே தெரியவில்லை. வலியும் வேதனையும் வெளியே இருந்திருப்பினும் உள்ளே காணப்படாதிருந்தன.

அது பயமழிந்த நிலை.

அது இன்னுமின்னும் தேவையாக இருந்தது.

அதில்தான் பயம் மறைந்தது.

அது ஒரு மாயமான கவசமாகவிருந்தது.

பயத்தை மூடுகிற கவசம்.

எப்போதாவது பயம் அவளை உலுப்பினால் அந்தக் கவசத்தால் மூடிக்கொள்ளலாமென அவளுக்குப் பட்டது.

அது மூடியிருந்த வேளையில் அம்மா நினைவு வரவில்லை. அவளது மரணமும் நினைவுக்கு வரவில்லை. முன்னால் சுருண்டு கிடந்த தம்பியின் பாதுகாப்பு நினைவுக்கேறவில்லை. அப்பாவென்ற நினைவுமே அப்போது வரவில்லை. அந்த வேளையில் எதுதான் நினைவு வரக்கூடும்?
பயம் மறைந்த சுகமான துக்கம். பயத்தை மறைத்த துக்கமான சுகம். அவளுக்குள் துக்கமும், சுகமும் முண்டி எழுந்துகொண்டிருந்தன. இருளுக்குள் எழுந்த துக்கமும், சுகமும். ஆதிசேஷன் வாய்பிளந்து விஷத்தைக் கக்கியபோதே பாற்கடலிலிருந்து அமுதமும் பிறந்ததுபோல. ஒற்றைச் செயற்பாட்டில் விஷமும், அமுதமும். பிறகு அது சுகமாக மட்டும் தெரிந்தது. அப்படியே கிடந்து ஜோதி தூங்கிப்போனாள்.

 

[தொடரும்]