வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


10

லாம்பு கொளுத்த இன்னும் நேரமிருந்தது. மேற்கு மூலையில் சூரியன் அழுந்திச் செல்ல, கிழக்கு மூலையிலிருந்து கிளம்பி மேலே பரந்துகொண்டிருந்தது இரவு. பகலைச் சந்திக்கும் புள்ளியை இரவு கடக்கும் கணம் அது. பார்த்துக்கொண்டே சங்கவியிருக்க இரவு புள்ளியைத் தாண்டிற்று ஒரு பாய்ச்சலாக. நிலா தோன்றியிருக்க வேண்டிய நேரம். ஆனால் அதன் சுவடுகூட தெரியாதபடி வானத்தை மேகம் மூடியிருந்தது. எந்த நாளுமில்லாத ஒரு இருண்ட திரைபோல் வானத்தில் அது தொங்கிக் கொண்டிருந்தது. மடியில் கார்த்திகாவை இருத்தி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஒரு ஸ்தம்பிதத்தில்போல் மேற்குப் பார்த்தபடி இருந்தாள் சங்கவி.

மின்மினிகள் பறந்து இரவின் முழுமையைச் சொல்லிச் சென்றன.

மேலே இருளும், பூமியில் நிசப்தமும் நிரம்பி வழிந்தன.

எதிர் வீட்டுக்காரர் நல்ல சனங்கள். அவர்களும் போய்விட்டிருந்தனர். வீடு இருண்டு கிடந்தது. அம்மா, பாட்டி, அப்பா, தாமரையக்கா எல்லாரும் நல்லவர்கள். தாமரையக்காவின் தம்பி செழியனை ஆறு மாதங்களுக்கு முன் இயக்கம் வந்து தாய், தமக்கை, பாட்டி அத்தனை பேர் முன்னிலையிலும் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் அவனைப் போருக்கு இழுத்துச் சென்றது. கையிலே துவக்கு இருக்கிறபோதும் எதிரியை அவன் சுடுவானாவென சந்தேகப்படும்படி அவனது முகம் அந்தளவு பிள்ளைமைத் தனத்தோடு இருந்திருந்தது. ஊரிலே நடப்பது தெரிந்திருந்த தாயும் தந்தையும் கல்யாணமொன்றைச் செய்துவைக்க  அவனை நான்கு மாதங்களாகக் கெஞ்சினார்கள். வடிவான பெட்டை, பதினாறுதான் வயது, பொத்திப் பொத்தி வைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வீட்டிலே, அவளது ஒரு தமையனும், ஒரு தமக்கையும் இயக்கத்தில் இருப்பதால் போராளியாக வலுக்கட்டாயமாய் இயக்கத்தில் சேர்க்கிற பிரச்னையில்லாமல் இருக்கிறார்கள், அவளுக்கும் சம்மதமாயிருக்கிறதென என்ன அவர்கள் சொல்லவில்லை? தனக்கே பதினாறு வயதுதானாகிறது, ஓ.எல். எழுதியதும் ஏ.எல். படிக்கவேண்டும், கம்பஸ் போகவேண்டுமென்று விடாப்பிடியாக அவர்களது கெஞ்சல்களை செழியன் மறுதலித்திருந்தான். ஒவ்வொரு தெரிந்தவர் உறவினர் வீடாக கொஞ்சக் கொஞ்ச நாட்கள் ஒழித்தும் வைத்தார்கள். அவன் வீடு வந்திருந்த ஒருநாள் அதிகாலையில்  வந்து அவனை இயக்கம் பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டிலே மூன்று நாட்கள் விடாத அழுகையொலி கேட்டது. சோகம் மீறுகிற அளவில் அவனது தாய்க்கு ஒப்பாரியாகவே வந்தது. தாமரைதான், வில்லங்கமாய்க் கூட்டிப்போயிருந்தாலும், களத்தில் நிக்கப்போகிறவன்மேல் ஒப்பாரி வைக்கக்கூடாதென அவளை அடக்கிவைத்தாள். அப்போது அவள் கொஞ்சம் தெளிந்திருந்தாள். ஆனாலும் கண்ணீர் நிற்காதவளாகவே இருந்தாள். அதற்குள் சகலதையும் விட்டுவிட்டு அவர்கள் சொந்த மனை நீங்கிவிட்டார்கள்.

வெளிக்கிடுவதற்கு முன் தாமரையக்கா வந்து சங்கவியைக் கேட்டிருந்தாள். ‘சனமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கு, சங்கவி. நீயும் பாக்கிறாய்தான?’

பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் சங்கவி. அவலத்தின் ஊர்வலம். துயரங்களின் செல்நெறி. சுருட்டிய பாய்களோடு, கட்டிய பாத்திர மூட்டைகளோடு ஓடுகிற சனங்கள். சனங்கள் ஒரு அலையாய் ஓடிய பின்புதான் தெரிந்தது, மேற்கில் விடத்தல்தீவு விழுந்துவிட்டதென்று. இன்னும் சில நாட்களில் இன்னொரு அலை ஓடிற்று. அப்போது அறியவந்தது, இலுப்பைக்கடவையை ராணுவம் பிடித்துவிட்டதென்று. அறிந்தபடியேதான் இருந்தாள்.

ஒரு பாய், ஒரு பேணி, ஒரு தட்டு போதும் ஒரு பையிலேபோட்டு எடுத்துக்கொண்டு ஓட. ஆனாலும் அவள் ஓடாதிருந்தாள். பேசாமல் ஓடுவாரைக் கண்டுகொண்டிருந்தாள். ‘ஆமி பின்னால வந்துகொண்டிருக்கிறான்.’ யாரோ  ஓடுகிறபோது அவளைநோக்கி கத்திவிட்டு போனார்கள். அவள் ஓடவில்லை. முதன்மையான காரணம் ஓட முடியவில்லை என்பதுதான். தேகம், சித்தமெல்லாம் விறைத்துப்போயிருந்தன.

தாயாரின் இளைய சகோதரியின் மகளொருத்தி திருநகரிலே இருக்கிறாள். அவளும் சாந்தரூபியைப்போலத்தான். வீட்டில் விருப்பமில்லாமல் மதம்மாறிக் கல்யாணம் செய்துகொண்டாள். கல்யாணம் செய்த பக்கம் உயர்ந்த இடமாம், அவள் அந்தப் பக்கமே சாய்ந்திருக்க தீர்மானித்திருக்கிறாளாம், கொஞ்சங்கொஞ்சமாய் புருஷன் வீட்டுக்காரர் கதைக்க, வந்து போக ஆரம்பித்திருக்கிற அந்தச் சமயத்தில் அதுவே சரியாக இருக்குமாமென ஒருமுறை பரஞ்சோதியைக் கண்டபோது சொல்லியிருந்தாள். போகவென்று நினைத்திருந்த பரஞ்சோதி பிறகு அவள் வீட்டுக்குப் போகவில்லை. அது அவர்களை அங்கு வந்து பழகிச் செல்லவேண்டாமென்பதன் இன்னொரு மொழிதானே? அவளது பேச்சையே பிறகு பரஞ்சோதி எடுக்கவில்லை. இரண்டு வருஷங்களுக்கு மேலே ஆகிறது. எப்போதாவது கண்ட இடத்திலே நின்று கதைத்தால் உண்டு. அவள் அவளுக்கு மூன்று குழந்தைகளும் இருந்தன. அவள் ஓடியிருப்பாளா? சங்கவி யோசித்தாள்.

இப்போது… தாமரையக்கா சொல்லுகிறாள். ‘பூநரி விழுந்து. 58ஆம் படை அப்பிடியே பரந்தன் றோட்டால வந்துகொண்டிருக்காம். மன்னார்ப் பக்கத்தால வந்த ஆமி வேராவிலைப் பிடிச்சிட்டுது. கிளிநொச்சிக்கு எல்லாம் வர கனநேரம் ஆகாது, சங்கவி. அம்மாவும் இல்லாமல் தனிய இருந்து என்ன செய்யப்போறாய்?’

அம்மா கூடஇல்லாதவளை எல்லோரும் எண்ணுகிறார்கள். ஆனால் அம்மா எண்ணவில்லையே! ‘எப்ப ஏ9 பூட்டுவாங்களெண்டு தெரியா’தென அவள் வெளிக்கிடும்போதே சங்கவி சொன்னாள். ‘போறதும் வாறதுமாய் வருவ’னெண்டு சொல்லிவிட்டு ஓடினாள். ஏ9 பாதை பூட்டிவிட்டது, அம்மா வரவில்லை. அவள் அவ்வளவு தூரம் தாமதித்திருக்கக்கூடாதென்று எண்ணினாள் சங்கவி. இப்போதும் வர வழியிருக்கிறதாம். வழி இருக்கென்றுதான் குணாளன் போனவன். அதுபோல ஒரு வழி என்றும் இருந்துகொண்டுதான் இருந்தது. அந்த வழியிலாவது அம்மா வந்திருக்கலாம். ஆனால் வரவில்லை.

இயக்கத்திலிருந்தவளுக்கு நெஞ்சுரம் இருக்குமென்று நினைத்திருப்பாளோ? ‘என்ர மூத்ததுதான் புருஷனையும் இழந்திட்டு ரண்டு குஞ்சுகளோட இருந்து தனியாய்த் தவிக்கு’தென்று எண்ணிக்கொண்டும் அவள் நின்றிருக்கலாம். நிற்க முடிவெடுத்த பிறகே பாதையும் பூட்டியிருக்கலாம்.

தாமரையக்கா மேலும் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘பிள்ளையையாச்சும் நீ யோசிக்கவேணும். ஒரு நேரத்தில குணாளன் திரும்பிவந்து கேட்டா, என்ன பதிலைச் சொல்லுவாய்? என்ர பேச்சைக் கேள், இல்லாட்டி பிறகு கஷ்ரப்படுவாய். வா இப்பிடியே எங்களோட. எதுவெண்டான்ன வரட்டும். எல்லாருக்கும் ஒத்ததாய் வாறதுதான?’

சொல்லி முடிய சங்கவி நிதானமாகச் சொன்னாள். ‘திருநகரில சொந்தக்காறர் இருக்கினம். பாத்து… அவையோட வந்திடுறன், தாமரையக்கா.’

தாமரையக்காவுக்கு அவளோடு கதைத்து வீணாக்க அதற்கு மேலும் ஒரு துளி நேரமில்லை. ‘எதோ பாத்துச் செய். இனியும் இருக்கிறது நல்லமில்லை.’ அவள் போய்விட்டாள்.

பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

இப்போதுபோல.

அடுத்தநாள் அதிகாலையில் மூட்டைகளோடும் பைகளோடும் சென்ற அப்பாவின் சைக்கிளின் பின்னால் போனபோது தாமரையக்கா திரும்பிக்கூட பார்க்கவில்லை. குனிந்து யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு போனபடியிருந்தாள். நீண்ட காலத்துக்குப் பிறகு அன்றைக்கு சங்கவிக்கு கண்ணீர் வந்தது. அம்மா கண்ணீர் விடுவது கண்ட கார்த்திகா சிரித்தாள். இரணைமடுவிலிருந்து சோ…வென்ற இரைச்சல் எழுந்துகொண்டிருந்தது.

கலிங்கு திறந்திருக்கிறது. எங்கோ பெய்த மழைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. யுத்தம் உச்சம்பெறும் அந்த நிலையிலும்கூட அதை கவனிக்கிறார்கள்!

சங்கவி எழுந்துவந்து லாம்பைக் கொளுத்தினாள். மேலே கொளுக்கிக் கம்பியில் மாட்டினாள். கூப்பிட்ட குரலுக்கு ஏனேன்று கேட்க அயல் இல்லாமல் போயிருந்தது. ஏன் அந்த நிர்ப்பந்தத் தனிமை? ஏன் அந்தப் பிடிவாதம்? அவளுக்கே அதன் காரணம் தெரிந்திருக்கவில்லை. ஒன்று தெரிந்தது. அது பிடிவாதமில்லை. இன்னுமொன்று.

அவளுக்கு தான் எங்கோ தவறுசெய்துவிட்ட எண்ணம் கொஞ்சக் காலமாகவே மனத்துள் இருந்துகொண்டிருந்தது. அவள் இயக்கத்தை விட்டுவிட்டு வந்தவள். அவசியமேற்படின் துவக்கெடுக்க வருவேன் என வாக்கு கொடுத்தவள். சண்டை துவங்கியது. யுத்தம் பிரகடனமாயிற்று. அவள் போகவில்லை. எந்தவொரு வழியிலும் உதவியாக இருக்கவில்லை.

அவள் நினைத்தே இருக்கவில்லை, இயக்கத்தைவிட்டு நீங்குவதற்கு. ஆனால் குணாளன் அவளை நீங்கப்பண்ணினான். ஒரு பொறிபட்டு மூண்டெழுந்த சுவாலையில் அவளது எண்ணம் கரைந்தொழுகியது. கல்யாணமும் நடந்துவிட்டது. வீட்டுக்கு வந்த அன்றே அதன் குதூகலம் முடிந்துவிட்டதைப்போலத்தான் எல்லாம் ஆயிற்று. அவளுக்கு வாழ்வதுபற்றிய கனவு இருக்கவில்லை. மற்றவர்களது வாழ்வளவாவது அவள் வாழவேண்டும்தானே? அதுவுமே கிடைக்காதவரையில் அவள் இயக்கத்தைவிட்டு விலகியது வீண். ஒரு முள்ளுப்போல அது மனதுக்குள் நெருடியது.

பொறுப்பற்ற வாழ்க்கையில் கார்த்திகா பிறந்தது ஒரு விபத்து. அவளுக்கு மூன்று வயதும் ஆகியிருக்காத நேரத்தில் குணாளன் காணாமல் போனான். அதுவும் ஒரு விபத்துத்தான். திரும்பத் திரும்ப விபத்துக்குள்ளாகும் வாழ்க்கை இறுதியில் என்னத்துக்காகும்? அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகமிருந்தது. குணாளனை யாரும் கடத்திப் போகவில்லை, அவனாகவே தொலைந்துபோயிருக்கிறானென்று.

குணாளனை வெள்ளை வான்காரர் கடத்திப்போனதாய் ரமேஷ் தகவல் சொன்ன பிறகு, நிஷோருக்கு போய் வந்துகொண்டிருக்கையில் அவனை ஒருநாள்  சங்கவி கண்டிருந்தாள். அவனும் கண்டான். எடுக்கி வைத்திருந்த கார்த்திகாவை கீழே இறக்கிவிட்டு திரும்பினால் அவன் மாயமாய் மறைந்திருந்தான். ஓடி ஒழிகிறபோது ஒரு நொடியிலாவது தெரியும் உருவத்தைக்கூட அவள் காணவில்லை. அது ஒரு மறைதல் காற்றில் கரைந்ததுபோல. அவளோடு பேசும் சந்தர்ப்பமொன்றை அவன் அதன்மூலம் விலக்கியிருக்கிறான். ஏன்? உண்மையின் கீறு எதுவும் அந்த உரையாடலில் வெளிவந்துவிடக் கூடுமென்று பயந்தா? அவனது அக்காவை ஒருமுறை சந்தித்தபோது சில விபரங்களை அவள் சொன்னாள். அவற்றையா ரமேஷ் மறைக்கப் பார்த்தானென அவளுக்குத் தெரியாது. ஆனால் அவையும் அவளுக்கு குணாளனால் மறைக்கப்பட்டவையாகவே இருந்தன.

அவன் தன்னைத் தொலைத்ததான எண்ணம் அவளுக்கு வர அவையெல்லாமே காரணமாயிருந்தனவென அவள் அனுமானித்தாள். அவனுக்கு ஒரு சிக்கல் இருந்திருக்கிறது. அதற்காகவே அவன் அவசர அவசரமாய் அவளை என்ன மாயம் செய்தோ சம்மதிக்கவைத்து கல்யாணம் பண்ணியிருக்கிறான். தானுமே பின்னர் இயக்கத்திலிருந்து விலகிக்கொண்டான். அதன் பின்னாலும் அவன் குழப்பமடைந்தவனாகவே திரிந்துகொண்டிருந்தான். அவனுக்கு ஏற்பட்ட இக்கட்டு எதனால் ஏற்பட்டதோ? அது அவளது படையணியிலிருந்த போராளி ரதிக்கு வந்ததுபோன்றதாகவும் இருக்கலாம். அவன் யாழ் செல்லும் குழுவிலிருந்தவன். அவனது கண்களிலிருந்த வெளிநாடு செல்லும் வெறி அவனை என்னவும் செய்யப்பண்ணியிருக்கும்.

வேண்டுமென்று காணாமலாகியவன் இல்லாமலே இருந்துவிட்டுப் போகட்டும். அவள் தேடிக் களைத்துப்போனாள். பாதை பூட்டுகிறவரை யாழ்ப்பாணத்துக்கு அலைந்தாள். பின்னால் கிளிநொச்சியில் மனித உரிமைகள் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், பிறகு நிஷோர் என எங்கே அவள் அலையவில்லை? அவனின் துரோகத்திற்காகவே தனக்கான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற ஆக்ரோஷம் அவளுள் வளர்ந்திருந்தது. வாழ்க்கையென்பது என்னவென்பதை அறிவதற்காகவேனும் வாழவேண்டும். தாமரையக்கா சொன்னாள், ஒரு நேரத்திலே குணாளன் வந்து குழந்தையைப்பற்றிக் கேட்டால் அவள் என்ன சொல்வாளென்று. அப்போது அவள் தனக்குள்ளே சிரித்திருந்தாள். ‘மூண்டு வருஷமாய் வராதிருக்கிறவன் இனியே வரப்போறான்?’

தெருவில் இரைந்தபடி சாமான்கள் ஏற்றிய ட்ராக்ரர் ஒன்று புகைத்துத் தள்ளியபடி போய்க்கொண்டிருந்தது. சில பெண்கள், சில பிள்ளைகள், சில ஆண்கள் பின்னால் ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தனர். ட்ராக்ரரின் பின்னால் எவ்வளவு நேரம் ஓடுவார்கள்? முடிந்தவரை ஓடுவார்களாயிருக்கும்.

இரணைமடுக்குள பாதைவழி போய் எதிர்ப்படும் சந்தியில் இடது பக்கம் திரும்பி வட்டக்கச்சி போகும், தருமபுரம் போகும், இல்லையேல் கண்டாவளை போகும். இல்லையேல் இருட்டுமடுவுக்கு பாதையெடுத்து வவுனியா போக தெண்டிக்கும். இலக்கையடைய வசதி இல்லையேல் சாமான்களைக் கொட்டிவிட்டு ஆட்கள் மட்டும் போய்ச் சேர்வார்கள். எதுவும் சொல்லிக்கொண்டில்லை.

ட்ராக்ரர் தூரப் போனபின் காற்றில் இரணைமடுவின் கலிங்கு பாய்ந்த சத்தமெழுந்தது.

இரணைமடு குளத்துக்குப் பின்னால் இரணைமடுக் காடு அமைதியில் கிடந்தது. அதுவும் சிலநாட்களுக்கு முன்னர் பெரும் களேபரம் கண்டு அடங்கிய காடுதான். அவள் இரணைமடுக் காடு காவலரணில் கடமையாற்றிய காலத்தில் அதனுள் கிடந்த இரகசியத்தின் உரையாடலை அவள் கேட்டிருந்தாள்.

இப்போது அந்த இரகசியத்தை உலகமே அறிந்து வியந்துபோயிருக்கிறது. ஆழ ஊடுருவும் படையணியினர் காட்டில் கிடந்த அந்த இரகசியத்தை புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.

உள்ளே புலிகளின் விமான ஓடுதள பாதையொன்று இருந்தது.

நத்தாருக்கு முதல் நாளான மார்கழி 24, 2008இல் அது காணப்பட்டிருந்தது. இருபத்தெட்டு மீற்றர் அகலமும், முந்நூற்று எண்பது மீற்றர் நீளமும் கொண்டதாக அந்தப் பாதை இருந்திருக்கிறது. ஓடுதள பாதை கண்டுபிடிக்கப்பட்டதும் அதை அழிக்கும்வேலைகள் ஆரம்பித்தன. கொழும்பில் மாசி 27, 2007இல் குண்டு வீசிய விமானம் அந்தப் பாதையிலிருந்துதானே கிளம்பிப் போயிருக்கும்? விமானங்களுக்கு என்ன ஆயிற்று? அவற்றை பிரித்து மறைத்துவைப்பது அவ்வளவு சிரமமாய் இருந்திருக்காதென்று எண்ணினாள். ஒரு பெரும் ராட்சத வல்லூறின் அளவான விமானம்தான் அது. மண்ணுள் புதைத்து வைத்திருந்தால் அதை எடுத்து என்ன செய்யலாம் இனி?
வெப்பம் வானத்திலிருந்து கசிந்துகொண்டிருந்தது. மேனி வியர்த்து ஒழுகியது. கழுத்தில் நசநசப்பாய் இருந்தது.

கார்த்திகாவுக்கு சாப்பாட்டை போட்டு வர சங்கவி லாம்பை எடுத்தாள். கூரையில் மழை சரசரத்துக் கேட்டது. ‘உந்த மழைக்குத்தான் அவ்வளவு வெக்கையாய் இருந்ததோ?’வென எண்ணியபடி ஓடிப்போய் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்தாள்.
கார்த்திகா மழையைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். தெருவிலிருந்தும் கான்களிலிருந்தும் நீர் வீட்டு முற்றத்தால் வழிந்தோடிச் சென்றது. வெள்ளத்தில் கிளம்பிய தொப்புளங்களைக் கண்டு கார்த்திகா அந்த இரவில் மேலும் மேலும் சிரித்தாள்.
மழை விடாது பெய்துகொண்டிருந்தது.

லாம்பை தெண்டி ஊதி அணைத்துவிட்டு பாயில் கார்த்திகாவுக்கு பக்கத்தில் சரிந்தாள் சங்கவி. விழித்துக்கொண்டே கிடந்தாள். றோட்டில் ஓடிய சனங்களின் முகங்கள்… முகமற்ற சனங்கள்… மிகவும் நெருக்கமாகப் பழகிய தாமரையக்காவின் முகம்... எல்லாம் மனத்தில் வந்து வந்து போனபடியிருந்தன.

படுக்கையை திண்ணையிலேதான் போடுவது வழக்கம். அதுதான் ஒரு சிறு சத்தத்துக்கும் அவளால் திடீரென எழும்ப வசதியாகவிருக்குமென்று நீண்ட நாளாக அதிலேதான் படுத்தாள்.

மறுநாள் அடக்கி அடக்கிப் பெய்த மழைக்கு அடிவளவுக்குள் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. மாலையிலும் நிலைமை பெரிதாக மாறவில்லை. ஆனால் மழை அப்போது துமித்துக்கொண்டிருந்தது.

ஒரு பத்து மணி இருக்கும். வானத்தில் எதுவோ கூவிப் பறந்தது கேட்டது. திடீரென்று அடிவளவில் நெருப்பாய் வெடித்துச் சிதறியது குண்டொன்று. நிலம் அதிர்ந்தது. மண் கிளம்பிப் பறந்து மழைபோல் சொரிந்து கேட்டது. திடுக்கிட்டெழுந்து திகைத்திருந்த ஒரு கணத்தின் பின் கார்த்திகாவை வாரி எடுத்துக்கொண்டு திண்ணையோடு கவரெடுத்ததுபோல் ஒதுங்கி இருந்துகொண்டாள். மேலும் ஒரு குண்டு எங்கோ விழுந்து வெடித்தது. பிறகு மேலும் ஒன்று. சிறிதுநேரத்தில் இன்னுமொன்று. கடைசி இரண்டு குண்டுகளும் குடிமனையில் விழுந்திருக்கவேண்டும். அந்தத் தடவைகளில் சனத்தின் கூக்குரல் இரண்டு தடவைகள் எழுந்தெழுந்து அடங்கியது. வீட்டு வாசலுக்கு யுத்தம் வந்துவிட்டதை உணர்ந்தாள் சங்கவி. லாம்பை கொளுத்தி பையை எடுத்து தனக்கும் கார்த்திகாவுக்குமான இரண்டொரு சட்டைகள், துவாய், ஒரு தட்டு, ஒரு பேணியென எடுத்து வைத்தாள். அறைக்குள்ளிருந்த தறப்பாளை எடுத்து மடித்து பையினுள் அடைந்தாள். இனியும் அங்கே இருப்பது விவேகமற்றது. எந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமற்ற இருப்பு. அப்படியான நேரத்தில் அத்தகைய இருப்பு முட்டாள்தனமானதும். விடியலைக் காத்திருந்தாள் சங்கவி.

எங்கே போக? எங்கேயும் போகலாம். யுத்தமற்ற எந்தத் திசையிலும் போகலாம். அது சனங்களோடும் திசையாகவே இருக்கும்.காலையில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த சனங்களோடு சங்கவி சங்கமித்தாள்.

அது வட்டக்கச்சி நோக்கிய திசையாகவிருந்தது.

அங்கே அவளுக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். போனால் தேடிப் பிடித்துவிடலாம். முன்னாள் போராளிதான். சண்டையில் காயம்பட்டு காலிழந்தவள். யாழினியென்று பெயர். அவள் ஏற்கனவே அங்கிருந்து ஓடிக்கூட விட்டிருக்கலாம். அதனாலென்ன? வேறு யாரேனும் ஓடுகிறவர்களில் பழக்கமானவர்கள் சந்திப்பார்கள். அல்லாவிடின் புதிதாக பழக்கமாகிக் கொள்கிறதுதான்.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.