நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நாம் பேசிக்கொண்டிருந்தபோது, மாத்தளை கார்த்திகேசு, நோய்வாய்ப்பட்டிருப்பதாகவே நண்பர்கள் சொன்னார்கள். பத்மநாப அய்யர் மாத்தளையுடன் மிகவும் நெருக்கமானவர். மு. நித்தியானந்தன் கலை, இலக்கிய ரீதியில் மாத்தளை கார்த்திகேசுவுடன் மிக மிக நெருக்கமானவர். இவர் எழுதிய பதிவை ஞானம் இதழில் பார்த்துவிட்டுத்தான் எமது நண்பர் தனது கண்களை நிரந்தரமாக மூடினாரா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு நிகழ்ந்திருப்பின் அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என நிச்சயமாக நம்பலாம். சமூகத்திற்காக வாழ்ந்தவர்களை வாழும்போதே கொண்டாடவேண்டும் , பேசவேண்டும் , எழுதவேண்டும். அவர்கள் மறைந்தபின்னர் எழுதப்படும் - பேசப்படும் எந்தவொரு அஞ்சலிக்குறிப்புகளும் எம்மை நாம் திருப்திப் படுத்திக்கொள்வதற்கான தேவைதான். சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளைக்குச்சென்றிருந்தபோது கார்த்திகேசு அவர்களையும் பார்த்தேன். எமது தாய்மாமனார் பெண் எடுத்த ஊர். எங்கள் அத்தையின் பூர்வீகம். அதனால் மாத்தளை , கண்டி, குருநாகல் முதலான பிரதேசங்களில் எமக்கு உறவினர்களும் அநேகம். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் மாத்தளைக்கும் நேரம் ஒதுக்கி சென்றுவிடுவேன். அவ்வாறு இறுதியாக நான் சென்றவேளையில் மாத்தளை கார்த்திகேசு எனக்குச்சொன்ன ஒரு உண்மைச்சம்பவத்தின் பின்னணியிலேயே எனது கதைத் தொகுப்பின் கதையை எழுதினேன். இந்தத் தலைப்பில் எனது 70 வயது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியிட்டுள்ள கதைத் தொகுப்பின் கதைத் தொகுதியில் அந்தச்சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. அதுபற்றியும் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இரண்டு நண்பர்களிடத்திலும் சொன்னபோது ஆச்சரியமடைந்தனர். அதுபற்றி இந்த அஞ்சலிக்குறிப்பின் இறுதியில் பேசுகின்றேன்.

நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க - இது மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம்.. இலங்கைக்கு 60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து இனவாதிகள் வழங்கிய அடையாளம்தான் கள்ளத்தோணி. இனவாதிகள் மாத்திரமா..? நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்து குவிந்த அகதிகளைக்கூட இங்கே அரசு தரப்பும் வெள்ளை இனத்தவர்களும் Boat People – படகு மனிதர்கள் என்றுதான் நாகரீகமாக அழைக்கின்றார்கள். ஆனால், இன்றும் எங்கள் இலங்கை தேசத்தின் மலையகத்தில் பசுமையை தோற்றுவிக்க, காடுமேடு எங்கும் அலைந்து அட்டைக்கடி உபாதைகளுடன் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு வழங்கிய பெயர்கள் வடக்கத்தியான் – கள்ளத்தோணி. அந்த உழைக்கும் வர்க்கத்தின் அடுத்தடுத்து வந்த தலைமுறையும் தென்னிலங்கை – வட இலங்கைக்கு வீட்டுவேலைக்காரர்களாக – பணிப்பெண்களாக இறக்குமதிசெய்யப்பட்ட அவலத்தின் பின்னணியில், அவர்கள் வெறும்சோற்றுக்கே வந்தவர்கள் என்ற சிறுகதையை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் எழுதிவைத்துவிட்டு, அவரும் மாத்தளை கார்த்திகேசு சென்றவிடத்திற்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் போய்ச்சேர்ந்துவிட்டார்.

வெறும்சோற்றுக்கே வந்தவர்களின் பிரதிநிதியான ஒரு யுவதி எரிகாயங்களுடன் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து, அந்த பெண்ணுக்கு நீதிவேண்டும் என்று பரவலாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கள் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தி வந்திருக்கிறது. நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் கொழும்பு இல்லம் ( 129 / 25, ஜெம்பட்டா வீதி, கொச்சிக்கடை . கொழும்பு – 13 ) தலைநகரில் கலை, இலக்கியவாதிகள், நாடக – திரைப்படக்கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்ந்த வாசகர்களுக்கும் மிகவும் பரிச்சியமான இடம். இங்கே அடிக்கடி கலை, இலக்கிய சந்திப்புகள் நடக்கும். மாத்தளை கார்த்திகேசு கொழும்பில் நீண்டகாலமாக இயங்கிவரும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் அனைத்து பதவிகளிலும் இணைந்திருந்தவர். அத்துடன் தமது இல்லத்தின் முகவரியிலிருந்த குறிஞ்சி பதிப்பகத்தின் மூலம் பலரதும் நூல்கள் வெளிவருவதற்கும் உந்து சக்தியாகத்திகழ்ந்தவர். நான் எழுத்துலகில் பிரவேசித்தபின்னர், அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் அடிக்கடி அவரது அந்த இல்லம் சென்று உரையாடியிருக்கின்றேன். அங்கு நடந்த இலக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றேன். அதனால் அவரது மென்மையான இயல்புகளையும், துணிவோடு கருத்துச்சொல்லும் நேர்மையையும் அவதானித்திருக்கின்றேன். எமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் மாத்தளை கார்த்திகேசுவின் அந்த இல்லத்தில்தான் பிரிவுபசார நிகழ்வு நடந்தது. நான், 1985 இல் சோவியத் நாட்டில் மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர், மாணவர் விழாவில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியபோது மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நண்பர் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் வரவேற்பு தேநீர் விருந்துபசாரக்கூட்டம் நடந்ததும் அதே இல்லத்தில்தான்.

மாத்தளை கார்த்திகேசு அனைத்து தரப்பு சிந்தனைகொண்டிருந்த எழுத்தாளர்கள் – கலைஞர்களுடனும் நெகிழ்வுத்தன்மை கொண்ட நண்பராக உறவாடியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் உறவைப்பேணியவாறே, அதற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வந்த எஸ். பொ. வுடனும் அவர் சிநேகம் கொண்டிருந்தார். அத்துடன் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் முக்கியபொறுப்புகளிலும் இணைந்திருந்து மலையக இலக்கியத்திற்கும் வளம்சேர்த்தார். தமிழ்க்கதைஞர் வட்டத்திலும் அங்கம் வகித்து, சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்யும் குழுவிலும் அர்ப்பணிப்புடன் இயங்கினார். மாத்தளையில் தான் கல்வி கற்ற காலம் முதலே நாடகக்கலை வளர்ச்சிக்கும் தனது எழுத்துப்பிரதிகள், நெறியாள்கை, அரங்க நிர்மாணம் முதலானவற்றால் வளம்சேர்த்து வந்திருக்கும் அவர், பின்னாளில் திரைப்படத்துறையிலும் ஈடுபட்டு அதன் அனுபவங்களையும் புத்திக்கொள்முதலாக்கிக்கொண்டவர். இளம்பராயம் முதலே தொடர்ச்சியாக – அயர்ச்சியின்றி இயங்கிய அவரை ஒரு விபத்து, சிறிதுகாலம் வீட்டில் முடங்கியிருக்கச்செய்திருந்தாலும், மாத்தளை வீட்டிலிருந்த தமது நூலகத்தின் மூலம் , மாத்தளை தமிழ்ப்பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொண்ட மலையக நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயல்திட்டத்திற்கும் தனது பங்களிப்பினை வழங்கினார்.

உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் தாம் எங்கு வாழநேர்ந்தாலும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அந்தவகையில் மாத்தளை கார்த்திகேசு புதிய தலைமுறையினருக்கும் ஆதர்சமாக திகழ்ந்து மாத்தளை இளம் தமிழ்ப்பட்டதாரிகளின் ஆவணமாக்கல் முயற்சிகளுக்கும் உதவினார். கவின்கலை மன்றம் என்ற நாடகத்துறை சார்ந்த அமைப்பின் அச்சாணியாகியாக திகழ்ந்த அவரது நாடகங்களான களங்கம், போராட்டம், ஒரு சக்கரம் சுழல்கிறது என்பன குறிப்பிடத்தகுந்தன. எனினும் அவரது காலங்கள் அழுவதில்லை என்ற நாடகம் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்த நாடகம் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு அரங்கில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தலைமையில் பிறநாட்டு அறிஞர்கள் முன்னிலையில் மேடையேறியது. அத்துடன் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.

மாத்தளை கார்த்திகேசுவின் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தினை ஜே. பி. ரொபர்ட் இயக்கினார். இதில் பரீனாலை, டீன்குமார், திருச்செந்தூரன், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் நடித்தனர். கொழும்பில் சில நாட்கள்தான் இத்திரைப்படம் ஓடியது. எங்கள் நீர்கொழும்பூரில் மீபுர திரையரங்கிலும் இதனை காண்பிப்பதற்காக அவரே நேரில் வந்திருந்தார். நாடகம், திரைப்படம், கலை, இலக்கிய அமைப்புகள், சமூகப்பணிகள் என்று தொடர்ந்து இயங்கிய மாத்தளை கார்த்திகேசு இலக்கிய வாசகர்களுக்காக தனது வழிபிறந்தது நாவலையும் வரவாக்கியுள்ளார். இந் நாவல் மலையக உழைக்கும் வர்க்கத்தினரின் ஆத்மாவை பேசியது. இந்நாவலுக்கு தமிழக இலக்கிய விமர்சகர் வல்லிக்கண்ணன் விரிவான அணிந்துரை எழுதியிருக்கிறார்.

இனி இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் சொன்ன அந்தக்கதைக்கு வருகின்றேன். நண்பர் மாத்தளை கார்த்திகேசு, கொழும்பு பம்பலப்பிட்டியில் சிறிது காலம் ஒரு சைவ ஹோட்டலை நடத்திக்கொண்டிருந்தார். ஒருநாள் அங்கே வாடிக்கையாளர்கள் உணவருந்திவிட்டு கைதுடைக்கும் காகிதம் முடிந்துவிட்டது. மாத்தளை கார்த்திகேசு அங்கிருந்த பணியாளரை அருகே இருந்த பழைய பேப்பர் கடைக்கு அனுப்பியிருக்கிறார். பணியாளரும் கைதுடைப்பதற்கு ஏற்ற வடிவத்தில் பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் பல பிரதிகளை வாங்கிவந்து கிழித்து மேசைகளில் வைத்திருக்கிறார். அதில் ஒரு பக்கம் மாத்தளை கார்த்திகேசுவின் கண்களில் பட்டிருக்கிறது. அது ஈழத்தின் ஒரு பிரபல எழுத்தாளரின் சாகித்திய விருதுபெற்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து கிழிக்கப்பட்டது. அவர் திடுக்கிட்டு, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, குறிப்பிட்ட பழைய பேப்பர் கடைக்கு ஓடியிருக்கிறார். அங்கே அந்த நூலின் மேலும் சில பிரதிகளும் அவற்றுடன் ஒரு டயறியும் கிடந்திருக்கிறது. அவற்றையும் நண்பர் எடைபோட்டு வாங்கி வந்துவிட்டார். அந்த டயறி பல இலக்கியச் செய்திகளையும் பதிவேற்றியிருந்திருக்கிறது. இந்தச்செய்தி நண்பராலேயே வெளியே கசிந்ததும், அந்த டயறியை சில எழுத்தாளர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். எனினும் நண்பரின் ஊர் ஊர்விட்டு ஊர் ( கொழும்பு – மாத்தளை ) இடம் மாற்றங்கள் நிகழ்ந்தவேளையில் அந்த அரிய டயறியும் காணாமலே போய்விட்டது. இதனை நண்பர் இறுதியாக நான் அவரை மாத்தளையில் சந்தித்தபோது சொன்னார்.

யார் அந்த எழுத்தாளர்..? தேசிய சாகித்திய விருது பெற்ற அந்த நூலின் பெயர் என்ன..? கொட்டும்பனி – அற்பாயுளில் மறைந்துபோன – நான் சாகமாட்டேன் என்ற கதையையும் வெறும் சோற்றுக்கே வந்தவர்கள் கதையையும் எங்களுக்கு வரவாக்கிவிட்டுச்சென்ற செ. கதிர்காமநாதன். இவ்வாறு சொல்லவேண்டிய ஒரு கதையையும் சொல்லிவிட்டுச்சென்ற எமது இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசுவுக்கு தொலை தூரத்திலிருந்து சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.