-  கவிஞர் மேமன்கவி மார்ச் 23 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை -


" கண்ணகி கால் சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் படித்தோம்
என்மனைவி கை வளையல்களை கழற்றினாள்
நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்."

இந்தக் கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். கவிஞர் மேத்தா, தனது கண்ணீர் ப்பூக்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் சேர்த்துக் கொண்ட கவிதை இது. சிறிது காலத்தில் மேத்தா, ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சோழநிலா நாவல் எழுதி, முப்பதாயிரம் ரூபா பரிசினைப் பெற்றபொழுது , ஈழத்தில் எழுத்தாளர் நந்தினி சேவியர், நண்பர் இளங்கோவன் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட வாகை இலக்கிய ஏட்டில் இவ்வாறு பதில் கவிதை எழுதினார்,

“ அவர் மனைவி வளையல்களைத்
திருப்பிக்கேட்டாள்,
நீங்கள் 'சோழநிலா' வைப்
படிக்கிறீர்கள்.."

இப்படி ஒரு சுவாரஸ்யம் எங்கள் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. மனைவிமாரிடம் ஏச்சும் திட்டும் மாத்திரம் நாம் வாங்க வில்லை. எமக்கு அவசியம் நேர்ந்த சமயங்களில் அவர்களிடமிருந்து நகைகளும் வாங்கியுள்ளோம். இது தமிழ் எழுத்தாளர் பரம்பரையின் இலட்சணம். அவ்வாறு தனது அருமை மனைவியின் தாலிக்கொடியை ஈடுவைத்து கவிதைப் புத்தகம் வெளியிட்டவர் கவிஞர் ஈழவாணன். " உமக்கேனய்யா … இந்த வேலை? " என்று நண்பர்கள் சினந்தாலும் முகம் சுழிக்காத இலக்கிய உணர்வுமிக்க அருமையான பெண்மணி திருமதி. தர்மபுவனா ஈழவாணன். எனினும் கணவர் கேட்டாரே என்பதற்காக தாலிக்கொடியை அவர் கழற்றியிருக்கக்கூடாது என்று பேசினார்கள் நண்பர்கள். ஏனென்றால் கவிஞர் மேத்தாவுக்கும் மற்றும் பல தமிழக எழுத்தாளர்களுக்கும் கிடைத்தது போன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிசில்கள் ஈழத்து எழுத்தாளனுக்கு என்றைக்குமே கிடைத்ததும் இல்லை. கிடைக்கப் போவதுமில்லை. விற்ற நகையை மீட்பதற்கு.

ஈழவாணனை முதல் முதலில் அவரது அக்கினிப்பூக்கள் வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். கொழும்பு கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை மண்டபத்தைப்பற்றி அறிந்திருப்பீர்கள். இலக்கிய வட்டாரத்துக்கு பிரசித்தமான இடம். அங்கு அடிக்கடி நூல்

வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும். அங்கு நடந்த ஒரு நிகழ்வில் பேசிய கவிஞர் முருகையன், "இதன் பெயரை புத்தக பிரசார சபை மண்டபம் " என்று மாற்ற வேண்டும் எனக் கூறி கைதட்டல்களையும் சிரிப்பொலிகளையும் வாங்கிக் கொண்டார். அங்கு சென்றால் இலக்கியமும் சுவையான தேநீரும் கிடைக்கும். அக்கினிப்பூக்கள் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய அமைச்சர் குமாரசூரியர். நூல் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, எச்.எம்.பி.மொஹிதீன். அடுத்தடுத்து இரண்டு ஈஸ்வரன்களை அழைத்து விட்டேன். இனி முகம்மதுவை அழைக்கின்றேன். என வேடிக்கையாகப் பேசினார் குமாரசூரியர்.

அக்கினிப்பூக்கள் வெளியிட்ட கையோடு புதுக்கவிதை இதழ் வெளியிடும் ஆவல் தோன்றியது ஈழவாணனுக்கு. நண்பர் மேமன்கவி, வானொலிக்கலைஞர் சித்திரவேல் , கவிஞர் லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் அவருக்கு ஆதரவு வழங்கினர். ஆயினும்

கையை கடிக்கும் எனத் தெரிந்ததும் சிலர் ஒதுங்கிக்கொண்டனர். இறுதிவரையில் தாக்குப்பிடித்து அவருடன் நின்றவர் நானறிந்தவரையில் மேமன்கவி மாத்திரமே. ஈழவாணன் மறைந்த பின்பும் அவரது குடும்பத்திற்கு உதவுவதிலும் முன்னின்றவர் இந்த தமிழரல்லாத தமிழ்க் கவிஞர்தான். நானும் ஈழவாணனும் சந்தித்த காலம் இருவருமே வேலை தேடும் படலத்தில் கழிந்தது. இலக்கியம் பேசிப்பேசி வேலை தேடினோம். கிடைக்குமா.....? கிடைத்தது ஈழவாணனுக்கு மாத்திரம்தான்.
அக்னி புதுக்கவிதை ஏடும் ஆரம்பித்து சில மாதங்களில் அது அவர் கையைச் சுட்டு, நின்றுவிட்ட பின்புதான் தினபதியில் அவர் ஒப்புநோக்காளராக (Proof Reader) சிரமப்பட்டுச் சேர்ந்தார். அங்கு ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும்

அவருக்கிருந்தது. ஸ்ரீமா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் தடைசெய்யப்பட்டு இழுத்து மூடப்பட்ட நிறுவனம் அது. அச்சமயம் ஈழவாணனும் வேலை இழந்திருந்தார். தனது துயரம் போக்கும் வடிகாலாக அக்னி ஏட்டைத் துவங்கினார். ஆத்மா திருப்தியடைந்திருக்கலாம். இட்ட முதலும் இன்றி நட்டப்பட்டார்.

புதுக்கவிதை சரியா? அதனை ஏற்றுக் கொள்ளலாமா? இது காலத்தையும் வென்று வாழும் இலக்கிய வடிவமா? என்ற சர்ச்சைகள் மேலோங்கி தமிழகத்தில் வானம்பாடி குழுவினரால் நம்பிக்கையை தோற்றுவித்த வடிவம் அது. வானம்பாடியைப் போன்று ஈழத்திலும் அக்னியை தரமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகம். அதில் முழுவதும் கவிதையாக இராமல் விமர்சனங்களுக்கும் இடமளிக்க விரும்பினார். நண்பர்கள் எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் , மு.கனகராஜன் ,இ.இரத்தினம் , திருமதி பாலம்லக்ஷ்மணன், சில்லையூர் செல்வராசன் முதலானோரின் ஆலோசனைகளையும் பெற்றார்.

1970 களில் இலக்கியக் கூட்டங்களுக்குகென்ன, வேறு எந்தக் கூட்டங்களுக்குமே பெண்கள் தலைமை ஏற்பதில்லை. அத்தகைய சூழலில் பெண்களை சமமாக நடத்தி சம அந்தஸ்து வழங்குகிறோம் என்று பீற்றிக் கொள்ளும் நாமும் இது விடயத்தில்

அசிரத்தையாகத்தான் இருக்கிறோம் என்று சொன்னதுடன் நின்றுவிடாமல், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அக்னி முதல் இதழ் வெளியீட்டு விழாவில் திருமதி.பாலம் லக்ஷ்மணன் அவர்களைத் தலைமை ஏற்கச் செய்தார் ஈழவாணன். எதிலும் வித்தியாசம் வேண்டும். புதுமையை நாடவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு அதிகம். தனது புதுக்கவிதை ஏட்டிற்கு அக்கினி என பெயர் சூட்டாமல் அக்னி என்றுதான் வைத்தார். ஏன்...? என்று கேட்டேன். அக்னி என உச்சரிக்கும் பொழுது அழுத்தம் அதிகம் என்றார். அக்னியை குறைந்த செலவில் அச்சிடுவதற்காக, நீர்கொழும்பில் அப்பொழுது எனது நண்பர்கள் நவரத்தினராசாவும் யோகநாதனும் இணைந்து குத்தகை அடிப்படையில் நடத்திய சாந்தி அச்சகத்தை அறிமுகப்படுத்தினேன்.
அந்த அச்சகத்திலிருந்துதான் எனது சுமையின் பங்காளிகள், எழுத்தாளர் சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே, திக்குவல்லை எழுத்தாளரின் பூ புதுக்கவிதைத் தொகுதி, புத்தளம் தில்லையடிச் செல்வனின் விடிவெள்ளி புதுக்கவிதை ஏடு - மேமன்கவியின்

யுகராகங்கள், ஈழவாணனின் அக்னி முதலானவை வெளியாகின.

ஈழவாணன் சில நாட்கள் எம்முடனேயே அச்சகத்தில் இரவுப் பொழுதைக் கழித்து விடுவார். நானும் அவருடன் நித்திரை விழித்து அக்னியை ஒப்புநோக்குவேன் ( Proof Reading ) திருத்துவேன். கண்ணைச் சுழற்றினால் பேப்பர்களை தரையில்

விரித்து படுத்துவிடுவோம். நவரத்தினராசா தேநீருடன் வந்து எம்மை துயில் எழுப்புவார். ஈழவாணனுக்கு தேநீரும் சீகரெட்டும் இருந்தால் போதும். உணவே அவசியமில்லை. அவரது பசி போக்கிய ஆகாரங்கள் அவை. அவருக்கு மட்டுமல்ல, எனது மேலும் சில எழுத்தாள நண்பர்களுக்கும் வறுமையில் பசி போக்கியவை தேநீரும் சிகரெட்டும் தான்.

அக்னியில் பாரதி மறு பரிசீலனை என்ற தலைப்பில் அந்த மகாகவியை ஒரு பொருள் முதல்வாதியாக நிரூபித்து ஒருவர் எழுதினார். அதனைப் புருஃப் திருத்தும் பொழுது நண்பரை கடிந்து கொண்டேன். நண்பர் யேசுராசாவின் தொலைவும் இருப்பும்

ஏனைய கதைகளும் சிறுகதை தொகுதிக்கும் மட்ட ரகமான விமர்சனம் அக்னியில் வெளியாகியது. இவற்றைப் பிரசுரிக்க வேண்டாம் என்று ஈழவாணனுடன் சண்டை பிடித்தேன். " உமக்குப் பிடிக்காதிருக்கலாம் . ஆனால் இவற்றை விரும்பிப் படிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். " என்று மிகச் சுருக்கமாக எமது விவாதத்துக்கு முற்றுப்புள்ளி இட்டார். அவர் அக்னியின் ஆசிரியர். எதனையும் தீர்மானித்து முடிவெடுக்கும் உரிமை அவரைச் சார்ந்தது. நான் நண்பன். புரூஃப் திருத்துவது மாத்திரமே இப்போது எனது வேலை. அதனால் நட்பின் பொருட்டு விவாதத்தை தொடரவில்லை. நான் எதிர்பார்த்தவாறே அந்த விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பியது. அப்பொழுதும் அமைதியாகச் சிரித்தார் ஈழவாணன். அக்னி அவ்விதமாகவேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அவருக்கு. The Black Poets இல் இருந்து சில அற்புதமான கறுப்பு இனத்தவர் கவிதைகளை அக்னி மூலம் வெளியிட்டார். சில கவிதைகள் நண்பர்களினால் மொழி பெயர்க்கப்பட்டன. உண்மையில் அது தரமான சிறிய தொகுப்பு.

ஒரு நாள் அச்சகத்தில் தரையில் கிடந்த வெள்ளைத் தாளில் அச்சடிக்கப்பயன்படுத்தும் மை சிறிது கொட்டிவிட்டது. அச்சக ஊழியர் அந்தத் தாளை எடுத்து மடித்து குப்பைக் கூடையில் போடச் சென்றார். ஈழவாணன் அதனைக் கண்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த ஊழியரிடமிருந்து குறிப்பிட்ட தாளை வாங்கிப் பார்த்தார். அங்கே ஒரு நவீன ஓவியம் உருவாகி இருந்தது. பின்பு அதனையே புளக் செய்து அக்னி இதழின் முகப்பு அட்டையில் பிரசுரித்தார். ஆம். அட்டையில் அந்த ஓவியம் அழகாகத்தான் இருந்தது. பலரும் பின்னணி தெரியாமல் வியந்தார்கள்.

ஈழவாணனின் தொடர்பினால்தான் எனக்கு தமிழ்நாடு வானம்பாடி கவிஞர் அக்கினி புத்திரனுடைய தொடர்பும் கிடைத்தது. எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பிற்கு சுமையின் பங்காளிகள் எனப்பெயரிட்டதும் ஈழவாணன்தான். குறிப்பிட்ட தொகுதி

வெளியானதன் பின்னர் நீர்கொழும்பில் நடந்த வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். எனது தொகுப்பின் பிரதிகளை தமிழ்நாட்டுக்கு எடுத்துச்சென்று கவிஞர் அக்கினிபுத்திரனுக்கும் சேர்ப்பித்தார். அக்கினி புத்திரன் 06-07-1976 இல் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இந்தத்தகவலை குறிப்பிட்டு ,

ஏறத்தாழ ஈராயிரம் வருஷங்களுக்குப்பின்னால் மக்கள் இலக்கியம் மக்கள் இலக்கிய கர்த்தாக்களால் படைக்கப்படும் ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதில் நமக்குப்பெருமைதான். அந்த விதத்தில் உழைக்கும் மக்களின் ஜீவிதத்தை படைப்பிலக்கியமாக்குவதில் தமிழகத்தைப்போல ஈழ இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்களும் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில் தங்களது சுமையின் பங்காளிகள் வெளிவந்துள்ளது. கலகங்களுக்குப்பின்னால் புரட்சிகள் நடத்தி புத்துலகம் படைக்கும் பாட்டாளி வர்க்க யுகத்தில் வாழும் சிருஷ்டி கர்த்தாக்களாகிய நாம், நமது படைப்புகளில் போராடும் வர்க்கத்தின் மனிதாபிமானத்தையும் அதன் சமரசமற்ற யுத்தத்தையும் முன்னிறுத்தி புதிய கலாசாரத்தை படைக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். என்று தொடங்கும் நீண்ட கடிதமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

நீர்கொழும்பில் எமக்கு கல்வி ஒளி வழங்கிய விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மன்றம், நாமகள் விழாவை வெறும் சமயச் சடங்காக நடத்தாமல் கலை இலக்கிய விழாவாகவே கொண்டாடிய காலம் அது. ஒவ்வொரு நாமகள்

விழாவிலும் இலக்கியச் சொற்பொழிவு , கருத்தரங்கு, கவியரங்கு வைப்போம். ஒரு சமயம் விடியும் வரை கனவுகள் என்ற தலைப்பில் கவியரங்கு. தலைமை ஈழவாணன். அவரை வரவேற்க , “ அக்னி வேள்வியில் வந்துதித்த கவிவாணா எமதன்பு ஈழவாணா... “ என்று விளித்து கவிதை பாடினேன். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றோ என்ற ஐயப்பாடும் எனக்கு பின்பு தோன்றியது.

ஈழவாணன் தினபதியில் மீண்டும் சேர்ந்து பணியாற்றி சிறிது காலத்தில் மாரடைப்பால் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி மறைந்தார். ஈழவாணனின் நீண்ட கால நண்பரும் தினபதி செய்தி ஆசிரியருமான வி.ரி.இரத்தினம் ஈழவாணனின் பூத உடலை ஒரு தமிழ்க் கவிஞருக்கே உரித்தான முறையில் வேட்டி, சால்வையுடன் அலங்கரிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஈழவாணனின் மனைவியின் ஊர் திருநெல்வேலியில் இறுதிச் சடங்கு. பூத உடல் கொழும்பிலிருந்து புறப்பட்டது. எனக்கு உரிய நேரத்தில் பஸ் கிடைக்காமல் இறுதிச் சடங்கு முடிந்து, மறுநாள் காலையில் அஸ்தி எடுக்கும் வேளையிலேயே அங்கு போய்ச் சேர்ந்தேன். அவரின் அருமைத்துணைவி என்னைக் கண்டு கதறிய காட்சியும் அவரின் அன்புச் செல்வன் சிறிய பாலகன் வேட்டி அணிந்து என்னுடன் கைகோர்த்து தந்தையின் அஸ்தி எடுக்க புறப்பட்டு வந்ததும் இன்றும் என் மனக்கண்ணில் அழியாத சோகச் சித்திரம் தான். 1984 இல் கொழும்பில் வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் ஈழவாணனுக்கு கவிதா அஞ்சலி நிகழ்வை நடத்திய பொழுது எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பித்தேன்.

யுக வெளியின்
கவிப்புருஷா
நீ அக்னி யிடம்
அகப்பட்டுக் கொண்டாலும்
உன் அக்னி க் கவிதைகள்
உன்னையும் - உன்
காலத்தையும் வாழ்விக்கும்.
என்று வகவம் அன்று வெளியிட்ட சிறிய பிரசுரத்தின் முன்பக்கத்தில் அவரைப் போற்றியிருந்தது.

புதுமைப்பித்தன் மறைந்த பின்பு அவருடன் நெருங்கிப் பழகிய சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டதே என் நினைவுக்கு வருகின்றது. புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின்

சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. கவிஞர் ஈழவாணனைப் பற்றி நான் கூறுவதாயின் அவர் எமக்கெல்லாம் ஒரு பாடம்.

இலங்கையில் போர் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்குசென்றேன். ஈழவாணனின் மனைவியும் பிள்ளைகளும் திருகோணமலையில் உவர்மலையில் வசிப்பதாக அறிந்து அவர்களைத் தேடிக்கொண்டு சென்றேன். ஈழவாணன் கவிஞர்

புதுவை ரத்தினதுரையின் உறவினர். அந்தப்பயணத்தில் புதுவையின் மனைவி மகனைப்பார்த்துவிட்டு திருமதி ஈழவாணனின் வீடு பற்றி கேட்டேன். புதுவையின் இளைய மகன் உடன் வந்து வீட்டைக்காண்பித்தார். சுமார் 27 வருடங்களின் பின்னர் அவரைக்கண்டேன். அன்று தந்தை ஈழவாணன் தகனமாகிய பின்னர் என்னுடன் அஸ்தி எடுப்பதற்காக வந்த அவரது புதல்வன் வளர்ந்து தற்பொழுது மட்டக்களப்பில் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஈழவாணனின் தொடர்பினால் எனக்கு நண்பரான - கவிஞர் அக்கினிபுத்திரனை 1990 இல் சென்னையிலும் பின்னர் நீண்ட இடைவெளியையடுத்து கடந்த 2014 ஜனவரியில் கோயம்புத்தூரிலும் சந்தித்து மறைந்த ஈழவாணனின் நினைவுகளை பகிர்ந்துகொண்டேன். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடிவிடுகிறது. ஆனால் - கவிஞர் ஈழவாணனுடன் கழிந்த கணப்பொழுதுகள் மனதைவிட்டு ஓடிவிடாமல் நிலைத்துள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.