இலக்ஷ்மண  ஐயர்எழுத்தாளர் முருகபூபதிபடைப்பாளிகளையும்   பத்திரிகையாளர்களையும்  கல்வித்துறை  சார்ந்த  ஆசிரியர்கள்,  விரிவுரையாளர்கள்,    பேராசிரியர்கள்   மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்   ஒரு  பிசாசு  இருக்கிறது.   இது  கண்களுக்குத்தெரியும்   பிசாசுதான்,   ஆனால்   எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்.  எங்கே  எப்படி  காலை வாரிவிடும்  என்பதைச்சொல்லமுடியாது. மானநட்ட  வழக்கிற்கும்  தள்ளிவிடும்  கொடிய  இயல்பு  இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான்  அச்சுப்பிசாசு. மொழிக்கு  ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான்.  1990  ஆம்  ஆண்டு  மறைந்த  எங்கள்  கல்விமான்  இலக்ஷ்மண  ஐயரை  நினைக்கும்  தருணத்தில்   அவர்  ஓட ஓட விரட்டிய  இந்த  அச்சுப்பிசாசுதான்  எள்ளல்  சிரிப்போடு   கண்முன்னே  தோன்றுகிறது. இலக்ஷ்மண  ஐயர்   கொழும்பு  மலே வீதியில்  அமைந்த  கல்வி  அமைச்சில்   தமிழ்ப்பிரிவின்  வித்தியாதிபதியாக  பணியாற்றிய  காலத்தில்  எங்கள்  நீர்கொழும்பூர்  விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின் ( தற்பொழுது  இந்து மத்திய  கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது)   பழைய  மாணவர்  மன்றத்தை  உருவாக்கியிருந்தோம் பாடசாலையில்  எமது  மன்றம்  நடத்திய  நாமகள்  விழாவுக்கு  பிரதமவிருந்தினராக  இலக்ஷ்மண  ஐயரை  அழைப்பதற்காக  சென்றிருந்தோம்.

குறித்த  நாளில்  அவருக்கு  வேறு  கடமைகள்  இருந்தமையினால்,  அங்கே  கல்வி  அதிகாரியாக   பணியிலிருந்த  சிவலிங்கம்  அவர்களை  அழைக்குமாறு  சொல்லிவிட்டு  அவரை   எமக்கு  அறிமுகப்படுத்தினார். சிவலிங்கமும்  நீர்கொழும்பு  விழாவுக்கு  வருவதற்கு  ஒப்புக்கொண்டார்.  நாம்  புறப்படும்தருவாயில்   எம்மை  அருகே  அழைத்த  இலகஷ்மணஐயர், “ தம்பிமாரே…விழா  அழைப்பிதழ்,  நிகழ்ச்சி  நிரல்  பிரசுரங்களில்  எழுத்துப்பிழை  வராமல்  பார்த்துக்கொள்ளுங்கள்.   உங்கள்  விழாவுக்கு  வரவிருப்பவரின்  பெயர்  இர. சிவலிங்கம் என்பதை  மறந்துவிடாதீர்கள்.  சில   பிரசுரங்களிலும்  பத்திரிகைகளிலும்  அவரது  பெயரை இரா. சிவலிங்கம்  என்று  தவறாக  அச்சிட்டுவிடுகிறார்கள்.”  என்று குறிப்பிட்டார்.

எனக்கு  அவரது  அறிவுரை  அந்தக்கணம்  விநோதமாகவும்  கவனத்தில்கொள்ளவேண்டியதாகவும்  இருந்தது.  வெளியே   வரும்பொழுது  எம்முடன் கல்வி  அமைச்சின்  வாசல்  வரையில்  வந்து  வழியனுப்பிய   சிவலிங்கம், “  பெரியவர்  சொல்வது   உண்மைதான்.  ஆனால்  நான்  இதுபற்றி  அலட்டிக்கொள்வதில்லை.  நீங்கள்  இர. சிவலிங்கம்  என்றே அச்சிடுங்கள்.  இல்லையேல்  அடுத்ததடவை  அவரைச்சந்திக்கும்பொழுது  நன்றாக  வாங்கிக்கட்டுவீர்கள்”  என்று  உரத்த  சிரிப்புடன்  சொன்னார். 1970  காலப்பகுதியில்  இலக்கியப்பிரவேசம்  செய்திருந்த  நான்,  கொழும்பு  கொள்ளுப்பிட்டியில்  அமைந்துள்ள  தேயிலைப்பிரசார  சபை  மண்டபத்தில்  சொக்கன் எழுதிய  கடல்  சிறுகதைத்தொகுதி  வெளியீட்டு  விழாவுக்கு  சென்றிருந்தேன்.

தலைமை இலக்ஷ்மண ஐயர். அவர் அன்று  கடல்   தொகுப்பின்   கதைகள்   பற்றி  அதிகம்  பேசாவிட்டாலும்  எம்மைப்போன்ற  படைப்பாளிகள்  பத்திரிகையாளர்களுக்கு  வழங்கிய  விரிவுரையானது  காலத்தால்  போற்றப்படவேண்டியது. தமிழ்பத்திரிகைகளுக்கே  அவர்   புத்திமதி  சொன்னார்.  நாம்  அன்றாடம்  எழுதும் செய்திகளில்   படைப்பு  இலக்கிய  ஆக்கங்களில்,  பேசும்  உரைகளில்  தவிர்க்கவேண்டிய  சொற்கள்,  நீக்கவேண்டிய  எழுத்துக்கள்  பற்றிக்குறிப்பிட்டு   வெகுசுவாரஸ்யமாக  தமது  தலைமையுரையை  நிகழ்த்தினார். அவரது   உரையிலிருந்து   சில  உதாரணங்களைத்தருகின்றேன்.

தலைமையின்  கீழ்  பேசினார்  என்று  எழுதுகிறார்கள். அப்படியாயின்  தலைமை  தாங்கும்  மேசையின் கீழ்  என்பதா  அர்த்தம்.  ஏன்…கீழ்…என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அநாவசியமாக  வருகின்றன. தலைமையில்  நடந்தது.  என்று  எழுதினால்  போதுமே. நடாத்தினார்கள்   என்று   எழுதுகிறார்கள்.   எதற்காக  மேலதிகமாக ‘h’ என்ற  எழுத்துவருகிறது.   நடத்தினார்கள்   என்று  எழுதலாமே. தமிழ்  எழுத்துச்சீர்திருத்தம்  முதலில்  தமிழ்ப்பத்திரிகைகளுக்குத்தான்  தேவைப்படுகிறது. ஒரு   வாகன  விபத்து  நடந்தால்.  அதில்  எவரும்  இறந்தால்,  ‘ஸ்தலத்தில்’  பலியானார்  என  எழுதுகிறார்கள்.  அது   என்ன  புனித  ஸ்தலமா?  அவ்விடத்தில்  பலியானார்  என்று  எழுதலாமே. அச்சுப்பிழை   கருத்துப்பிழையாகிவிடும்  அபாயம்   இருக்கிறது.

இலக்ஷ்மண  ஐயர்  தனது  வாழ்நாள்பூராகவும்  நான்  இந்தப்பத்தியின்  தொடக்கத்தில்  குறிப்பிட்ட  துறைகள்  சார்ந்த  அனைவருக்குமே  ஒரு  தந்தையாக  விளங்கியவர்.  வழிநடத்தியவர். இலங்கையின்   வடபுலத்தே  பலாலியில் 1918  ஆம்  ஆண்டு  பிறந்தார். கொழும்பு  பல்கலைக்கழகம்,  தமிழ்நாடு  அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,  காசி  பல்கலைக்கழகங்களில்   பட்டங்கள்  பெற்றார்.  கொழும்பு  ரோயல்  கல்லூரியில் தமிழ்  ஆசிரியராக  சுமார்  பத்தாண்டுகளுக்கு  மேல்  பணியாற்றிவிட்டு,  கல்வி  அமைச்சில்  வித்தியாதிபதியாக  சேவையாற்றினார்.   கல்வி  அமைச்சிலிருந்த  சமயமே  அவருக்கு  நான்  அறிமுகமானேன்.   எங்கள்  ஊரில்  நடந்த  பல சமய மற்றும்  தமிழ் விழாக்களுக்கு  அவரை  அழைத்திருக்கிறோம். அங்கு  நடந்த  ஆசிரியர்களுக்கான  பயிலரங்குகளிலும்   கலந்துகொண்டு  உரையாற்றியிருக்கிறார்.  அவரது  துணைவியார்  பாலம்  அம்மையார்   பல  சந்தர்ப்பங்களில்  உடன்வருவார்.

எங்கள்  ஊரில்  அவரை  இலக்ஷ்மண  ஐயா  என்றே  அழைப்பார்கள்.  மிகவும்  கௌரவமாகவே   உபசரிப்பார்கள். ரோயல்  கல்லூரியில்  அவர்  பணியிலிருந்த  வேளையில்  அவரிடம்  கற்ற  பல  மாணவர்கள்  பின்னாட்களில்  புகழடைந்தவர்கள்.  அவர்களில்  குறிப்பிடத்தகுந்தவர்கள்:   நடைபெறவுள்ள  வடமாகாண  சபைத்தேர்தலில்  தமிழ்தேசியக்கூட்டமைப்பின்  முதன்மை வேட்பாளரான  முன்னாள்  உயர்  நீதிமன்ற  நீதியரசர்  சி.வி. விக்னேஸ்வரன்,  மறைந்த  பேராசிரியர் க. கைலாசபதி,  சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம். எங்கள்  முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்   செயலாளர்  பிரேம்ஜி  ஞானசுந்தரனின்   திருமணம்   அவரது   தலைமையில்  நடந்ததாக  அறிகின்றேன். வழக்கமான   சமஸ்கிருத  மந்திரம்  ஓதும்  ஐயர்  இல்லாமல்  இன்னுமொரு   ஐயர்  தமிழில்  நடத்திய  திருமணம்  அது  என்று   நண்பர்கள்  வட்டத்தில்  சொல்வார்கள். இலங்கை   இலக்கிய  உலகில்  தற்காலத்தில்  நன்கறியப்பட்ட  சிலரது  உறவினர். அவர்கள்  ஞானம்  ஆசிரியர்  டொக்டர்  தி. ஞானசேகரன்,  எழுத்தாளர்  ரத்தினசபாபதி ஐயர்,  கனடாவில்  வதியும்  யாழ். பல்கலைக்கழக  முன்னாள்  விரிவுரையாளர்,  இலக்கிய  ஆய்வாளர்   சுப்பிரமணிய ஐயர். இலங்கையில்  அரசகரும  மொழித்திணைக்களத்தில்  மேலாளராகவும்  பணியாற்றியவர். இலங்கையின்  தினசரிகள்  வீரகேசரி,  தினகரன்,  தினபதி,  சிந்தாமணி உட்பட  இலக்கிய  இதழ்களிலும்  பல கட்டுரைகளை  எழுதியிருக்கிறார். 1972 -77 காலப்பகுதியில்  அவரை  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களில்  சந்தித்து  உரையாடியிருக்கின்றேன். எனக்கு  வீரகேசரியில்  1977 இல்  ஒப்புநோக்காளர்  வேலை  கிடைத்ததற்கு  இலக்ஷ்மண ஐயரின்  வழிகாட்டுதல்தான்  காhணம்  என்று கருதுகின்றேன்.  அவருடனான  உரையாடல்களிலிருந்து  நான்  பெற்றுக்கொண்ட  ஆதர்சமும்  அரிய தகவல்களும்  ஆலோசனைகளும்தான்  குறிப்பிட்ட  ஒப்புநோக்காளர்   பதவிக்காக  நடத்தப்பட்ட  தேர்வில்  நான்  சித்தியடைந்தேன்  என்றும்  சொல்லமுடியும்.

அன்று  ஒரு  மழைக்காலம்.  வீரகேசரிக்கு  நேர்முகத்தேர்வுக்கு  சென்றிருந்தேன்.  அங்கு  ஒப்புநோக்காளர்  பிரிவுக்கு  இரண்டுபேர்  தேவைப்பட்டிருக்கிறார்கள்.  நேர்முகத்தேர்வுக்கு  சுமார்  30 பேர்  வந்திருந்தார்கள்.  எனக்கு  கலக்கமாகிவிட்டது.  ஆட்களைப் பார்த்தவுடன்  எனக்கு  அந்த  வேலை  கிடைக்கும்  என்ற  நம்பிக்கை இல்லை. முதலில்   எழுத்துப்பரீட்சை  நடந்தது. சில படிகள் எழுத்துப்பிழை  திருத்துவதற்காக தரப்பட்டன.  சரியாக   திருத்திவிட்டேன்.  பின்னர்  ஒரு  ஒப்புநோக்காளரின்  கடமைகள்  பற்றி  ஒரு  கட்டுரை  எழுதச்சொன்னார்கள். அப்பொழுது  எனது மனக்கண்ணில்  தோன்றியவர்  இலக்ஷ்மண ஐயர். அவர்  ஏற்கனவே சொன்ன  கருத்துக்கள், ஆலோசனைகள்  அந்தக்கட்டுரையை  எழுதுவதற்கு  துணைபுரிந்தன. எழுத்துப்பரீட்சை  முடிந்ததும்.  ஓவ்வொருவராக  ஒரு  அறைக்கு  அழைக்கப்பட்டோம். அங்கே,  முகாமையாளர்  பாலச்சந்திரனும்  பிரதம ஆசிரியர்  சிவப்பிரகாசமும்  இருந்தனர்.  சில   கேள்விகள்  கேட்டனர்.  எனது  எழுத்துத்துறை  பற்றிய  கேள்வி  வந்ததும், கைவசம்  எடுத்துச்சென்ற  எனது  முதலாவது  சிறுகதைத்தொகுதி  சுமையின்  பங்காளிகள்  நூலைக்காண்பித்தேன்.   இருவரும்  புருவம்  உயர்த்திப்பார்த்தனர்.  பிறகு,  “அறிவிப்போம்…இனி  நீங்கள்  போகலாம்” என்றனர். 1977  ஆரம்பத்தில்  நடந்தது  இந்த  நேர்முகத்தேர்வு.  ஆடி மாதம்   கலவரம்   வந்தது.  ஆனால்  நேர்முகத்தேர்வு  முடிவு மட்டும்  வரவில்லை. சரிதான்…  இந்த  வேலையும்  எனக்கு  இல்லை  என்ற  கவலையுடன்  வேலை தேடும் படலத்தைத்  தொடர்ந்தேன்.  ஒருநாள்   எதிர்பாராமல்   எனது  நியமனக்கடிதம்  வந்தது. மறுநாள்   கடமையில்  இணைந்தேன். அங்கு  ஆசிரியபீடத்தில்  துணை  ஆசிரியராக  பணியிலிருந்தவர்  எனக்கு  ஏற்கனவே  அறிமுகமான  மூர்த்தி. ( இவர்  தற்பொழுது  கனடாவிலிருக்கிறார்.  வீரகேசரி  மூர்த்தி  என்ற  பெயரில்  எழுதுகிறார்.) என்னைக்கண்டவுடன், “ ஐஸே…உம்முடைய  ஒப்புநோக்காளரின்  கடமைகள்  கட்டுரையை  படித்தேன்.  பிரதம   ஆசிரியர்  பார்க்கத்தந்தார்.  அதனைப்படித்தபொழுது  நிச்சயம்  நீர்  தெரிவுசெய்யப்படுவீர்   என  நம்பினேன்”  என்றார்.  நான் மனதிற்குள்  இலகஷ்மண ஐயரை  வணங்கினேன். அந்தத்தேர்வில்  தெரிவு  செய்யப்பட்டவர்கள்  இருவர்.  ஓன்று  நான்.  மற்றவர் தற்பொழுது   தினக்குரல்  பத்திரிகையின்  பிரதம  ஆசிரியராக  இருக்கும்  எனது அருமை  நண்பர்  தனபாலசிங்கம். சுமார்  36  வருடங்களின்  பின்னர்  இந்தச்சம்பவங்களை  நினைத்துப்பார்க்கின்றேன்.  திரும்பிப்பார்க்கின்றேன். ஓப்புநோக்காளர்  கடமை  என்பது  மிகவும்  பவித்திரமானது.  ஒரு  எழுத்துத்தவறினால்  பாரதூரமான  விளைவுகளும்  ஏற்படும்  என்பதை  அனுபவத்தில்  அறிந்திருக்கின்றேன்.

அறிஞர்  சிலம்புச்செல்வர்  ம. பொ. சிவஞானம்  படைப்பாளிகள்  விந்தன்,  ஜெயகாந்தன்  ஆகியோர்  ஆரம்பத்தில்   ஒப்புநோக்காளர்களாக  விளங்கியவர்கள்  என்ற  தகவலையும்  இச்சந்தர்ப்பத்தில்  பதிவுசெய்கின்றேன். இலக்ஷ்மண  ஐயர் கல்வி  அமைச்சில்  பணியிலிருந்த  காலப்பகுதியில்  நடந்த  சம்பவம்  பலருக்கும்  ஒரு  முக்கிய  பாடம். கல்வி  அமைச்சராக  இருந்தவர், முன்னாள்  கம்பளை  சாகிராக்கல்லூரியின்  அதிபர் பதியுதீன் முகம்மத்.  வீரகேசரியில்  அவர்  சம்பந்தப்பட்ட  செய்தி  ஒன்று  வெளியானது. கல்வி  மந்திரி  என்று  வரவேண்டிய  செய்தியில்  கலவி  மந்திரி  என்று  வந்துவிட்டது.  அக்காலத்தில்  கணினி  இல்லை.  வெள்ளீய  எழுத்துக்களை  ஒவ்வொன்றாக  கோர்த்தே செய்திகள்  அச்சுக்குப்போகும். தொடர்ச்சியாக   எழுத்துக்கள்  பயன்படுத்தப்படுவதானல்  சில சமயங்களில்  அச்சுக்கள்  தேய்ந்துவிடும்.  அச்சுக்கோப்பாளர்கள்  தமது  கடமைவேளையில்  நேரம்  ஒதுக்கி  தேய்ந்த  அச்சுக்களை  அகற்றவேண்டும்.  அவ்வாறு  அகற்றப்பட்ட  வெள்ளீய  எழுத்துக்கள்  பின்னர்   உருக்கப்பட்டு   புதிய எழுத்துக்கள்  தயாரிக்கப்படும். ‘ல்’  என்ற  எழுத்தின்  மேலிருந்த புள்ளி  தேய்ந்து  அழிந்துவிட்டது.   ஒரு  புள்ளி கருத்தையே  மாற்றிவிட்ட  அபாயத்தை  பார்த்தீர்களா?

அச்சமயம்  நான்  வீரகேசரியில்  இணைந்திருக்கவில்லை. அலுவலக  நிருபர் சனூன்  கல்வி  அமைச்சு  சம்பந்தப்பட்ட  செய்திகளை  எழுதுபவர்.  ஒரு  நாள்  இலக்ஷ்மண ஐயர்,  அவரை  கல்வி  அமைச்சில்  பிடித்துக்கொண்டார்.  இத்தனைக்கும்  சனூன்  ஏற்கனவே  கம்பளை  சாகிராக்கல்லூரியில்  பதியூதீன்  முகம்மத்  அதிபராக  பணியாற்றிய  காலத்தில்  அங்கு  படித்தவர்தான்.  அதனால்  அமைச்சருக்கும்  சனூனை  நன்கு  தெரியும். சனூன்  கல்வி  அமைச்சுப்பக்கம்  வந்தால்  அவனைப்பிடித்து  என்னிடம்  அனுப்பிவையும்  என்று  இலக்ஷ்மண  ஐயருக்கு உத்தரவிட்டிருந்தார்  அமைச்சர். அமைச்சரின்  முன்னால்  மிகவும்  சங்கடத்துடன்  நின்றார்  சனூன். “ சேர்…அந்த  எழுத்தில் குத்து  இல்லாமல்  போய்விட்டது  சேர்…” என்றார். “ அப்படியா… நல்லா  குத்துங்க… என்  பெயரில்  குத்தாதீங்க  என்று  ஆசிரியருக்குச்சொல்லும்”  என்றாராம்  அமைச்சர். 

இந்தச்சம்பவத்தை  நான் வீரகேசரியில்  இணைந்த  பின்பு,  சனூன்  ஒருநாள்  சொல்லிச்சிரித்தார். அச்சுப்பிசாசு  எத்தகைய  ஆபத்துக்களை  உருவாக்கும்,  எத்தனை  பேருக்கு  தண்டனை  வாங்கிக்கொடுக்கும்  என்பதையெல்லாம்  அங்கே பணியிலிருந்தபொழுதுதான்  தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணம்  நல்லூரில்  சங்கிலி  மன்னன்  சிலையருகில்  நடந்த ஒரு கூட்டம்  பற்றிய செய்தியில்  சங்கிலி என்ற  சொல்லில் ங் வராமல்  க்  வந்துவிட்டது.  எப்படியிருக்கும்? ஜே. ஆர். ஜயவர்தனா  ஜனாதிபதியாக  பதவியிலிருந்த  காலத்தில்  ஒரு  செய்தி: சனியன்று   ஜனாதிபதி   பயணமானார்  என்று  அச்சாகியிருக்கவேண்டும்.  சனியன்று  என்ற  சொல்லில்  று  இல்லை.  எப்படி  இருக்கும்? சுமார்  பத்தாயிரம்  பிரதிகள்  அச்சிடப்பட்ட  பின்னர்தான்  இந்தப்  பாரிய  தவறு கண்டுபிடிக்கப்பட்டது.  உடனே  அச்சு  இயந்திரத்;தை   நிறுத்திவிட்டு,  அனைத்து  பிரதிகளையும்  ஒரு  அறையில்  வைத்து  பூட்டினார்கள்.   குறிப்பிட்ட  பக்கத்தை திருத்திய  பின்னரே  பத்திரிகை  அச்சிடப்பட்டது.   அதனால்  வெளியூர்  பதிப்பு  தாமதமானது.  நிருவாகத்திற்கு  சிறிய  நட்டமும்  ஏற்பட்டது.  குறிப்பிட்ட  அச்சுத்தவறுடன்  பத்திரிகை  வெளியே  வந்திருந்தால்    பாரிய  நட்டம்  வந்திருக்கும். பின்னர்  உள்ளக  விசாரணை  ஒரு வார காலம்  நடந்தது.  அச்சுக்கோர்த்த  ஊழியருக்கு ஒரு  வார  காலம்  சம்பளமற்ற  லீவு.  எச்சரிக்கை  கடிதம்.  அதுபோன்று  ஒப்பு நோக்காளர்  பிரிவு  தலைமைப்பொறுப்பாளருக்கும்  எச்சரிக்கை  கடிதம்  தரப்பட்டது.  அவர் நெஞ்சு  நோவினால்  சிகிச்சைக்கும்  சென்றார். அந்தப்  பாரிய  எழுத்துப்பிழையுடன்  வீரகேசரி  அன்று  வெளியே  வந்திருந்தால்  நிருவாகம்   மிகப்பெரிய  சங்கடங்களை  சந்தித்திருக்கும். லேக்ஹவுஸ்  பத்திரிகை  நிறுவனத்தின்  ஆங்கில இதழ்  ஒன்றில்  வெளிவிவகார  அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீட்  சம்பந்தப்பட்ட  செய்தி  ஒன்றில் முற்றிலும்  தவறான  படம் வெளியானமையால்  பிரதம  ஆசிரியர்  பாராளுமன்றத்துக்கு  அழைக்கப்பட்டு  எச்சரிக்கப்பட்டார். அச்சமயம்  அந்த  சிங்கள  பிரதம  ஆசிரியரின்  அடிப்படை  மனித  உரிமைக்காக  குரல்  கொடுத்தவர்  அப்பொழுது  எதிர்க்கட்சித்  தலைவராக இருந்த அமிர்தலிங்கம்  என்ற  தகவலையும்  இங்கு  பதிவுசெய்கின்றேன். இந்தப்பத்தியை  படிப்பவர்கள்  இலக்ஷ்மண ஐயரின்  சேவை  தமிழ்  உலகிற்கு  தந்த  பெறுமதி  எத்தகையது என்பதை  புரிந்துகொள்ளுவார்கள். இலங்கை  வானொலியில்  கல்விச்சேவை  உட்பட  பல  நிகழ்ச்சிகளில்  பங்கேற்றிருந்தார்.  இன்று  இலங்கையில்  பல  வானொலி மற்றும்  தொலைக்காட்சி  சேவைகளைப்பார்க்கும்பொழுது  இலக்ஷ்மணஐயரின்  வெற்றிடம்  துலாம்பரமாகத்தெரிகிறது.

தொலைக்காட்சிகளில்  நேர்காணல்  சந்திப்பு  நிகழ்ச்சிகளை  நடத்துபவர்கள்  தமது  ஒப்பனைக்கு  செலவிடும்  நேரம்  குறித்த  ஆர்வத்தை , பேட்டி  காணவிருப்பவர்  பற்றி  அறிந்துகொள்வதற்கு   காண்பிப்பதில்லை.  ஒளிப்பதிவுக்காக  கலையகத்திற்கு  வந்தபின்பு, “  உங்களைப்பற்றி  முதலில்  சொல்லுங்கள்”  என்று ஆரம்பிப்பார்கள்.    வந்தவர்    தனது   பூர்வீகம்   சொல்வார்.  இறுதியாக  இந்த  சமுதாயத்திற்கு  என்ன  சொல்ல  விரும்புகிறீர்கள்?  எனக்கேட்டு  நேர்காணலை  முடிப்பார். வானொலியில்    அரச   மரக்கூட்டுத்தாபனம்   என்று  சொல்லவேண்டியிருந்தால்,  அரசமரக்கூட்டுத்தாபனம்   என்பார்கள்.  அரசமரத்துக்கு   எங்கே  கூட்டுத்தாபனம்  இருக்கிறது? அரச  எனச்சொல்லி  ஒரு  செக்கண்ட்  இடைவெளிவிட்டு,  கூட்டுத்தாபனம்  என  செய்தி  வாசிக்கவேண்டியதை,  அந்த  ஒரு செக்கண்ட்  மணித்துளி  இடைவெளி  இன்றி  அரசமரக்கூட்டுத்தாபனம்  என்பார்கள்.
இவ்வாறு  அசட்டுத்தனமான  நிகழ்ச்சிகள்  அரங்கேறிக்கொண்டிருக்கும்பொழுது  எமக்கு இலக்ஷ்மண  ஐயர்தான்  நிiனைவுக்கு  வருவார். இந்தக்கொடுமைகளை  பார்க்காமலேயே  அவர்  போய்விட்டார். திருமண   அழைப்பு  அச்சிடுவது  குறித்தும்  அவர்  அரியதொரு  கருத்தை  சொல்லியிருக்கிறார்.

'ஆங்கிலத்தில்  Wedding  Invitation   என்றுதான்  குறிப்பிடுவார்கள். ஆனால்  தமிழில்  திருமண  அழைப்பு   என்று  அச்சிடாமல்  திருமண அழைப்பிதழ்  என்றே  அச்சிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் Wedding Invitation Card என்றா  அச்சிடுகிறார்கள்?  என்பதே  அவரது  கேள்வி. நான்  அடிக்கடி  நினைத்துச்சிரிக்கும்   ஒரு  தகவலையும்   அவர்  ஒரு  சந்தர்ப்பத்தில்   சொன்னார். எனக்கு  நன்கு  தெரிந்த  ஒரு  பிரபல  கவிஞர்.   அவர்  ஆசிரியராகவும்  பின்னர்   கல்விவெளியீட்டுத்திணைக்களத்திலும்   பணியாற்றியவர். அவர்  சம்பந்தப்பட்ட   செய்தி   ஒன்று  ஒரு  பத்திரிகையில்   வெளியானது   இப்படி:-அவரது   பழைய   மனைவி    உரையாற்றுகையில்… “  அந்தச்செய்தியில்   அவரது   பழைய   மாணவி   என்றுதான்   வந்திருக்கவேண்டும்.  ஆனால்   குடும்பத்துக்குள்ளே   விவகாரத்தை   ஏற்படுத்தும்விதமாக   அச்சிட்டிருக்கிறார்கள்   பாரும்” என்றார்.

இலங்கை  வானொலியில்,   “தமிழைப்பிழையின்றி எழுதலும்  பேசலும்”   என்ற  தலைப்பில்  பல  தமிழ்  அறிஞர்களின்  தொடர்  உரைகள்  ஒலிபரப்பாவதற்கும்  அதேபோன்றதொரு   தொடர்   சென்னை  தூர்தர்ஷனில்   ஒளிபரப்பாவதற்கும்  இலக்ஷ்மண   ஐயர்  பின்னணியிலிருந்தார்   என்ற  தகவலை  அறிந்திருக்கின்றேன். 1982  இறுதியில்  இலங்கையில்  பிரதேச  அபிவிருத்தி  இந்து  கலாசார  அமைச்சராக  பதவியிலிருந்த   செல்லையா  இராஜதுரை  பம்பலப்பிட்ட   சரஸ்வதி  மண்டபத்தில்  பாரதி  நூற்றாண்டு  விழாவை  நடத்தினார்.   அதற்கு  தமிழ்நாட்டிலிருந்து  கல்வி  அமைச்சர்  நாவலர்  நெடுஞ்செழியனும்  இசையமைப்பாளர்    எம்.  பி. ஸ்ரீநிவாசனும்  வருகை  தந்தனர்.   ஸ்ரீநீவாசனின்   பின்னணி  இசையில்   கார்த்திகா  கணேசரின்  இயக்கத்தில்    ஒரு  நாட்டிய  நிகழ்வும்   இடம்பெற்றது. அமைச்சரின்   வருகைக்காக   சபை  காத்திருக்கிறது.  இலக்ஷ்மண  ஐயர்  மண்டபத்துக்குள்  வராமல்  வாசலில்  யாருக்கோ   காத்து  நிற்கிறார்.  அமைச்சர்  நெடுஞ்செழியன்  வந்தபின்னர்தான்,   அவர்  யாருக்காக  காத்துநின்றார்   என்பது  தெரிந்தது.   அமைச்சரை    கைகுழுக்கி   வரவேற்று    அழைத்துக்கொண்டு  மேடை வரையில்  வந்தார்  இலக்ஷ்மண ஐயர். விழா   முடிந்ததும்  ஐயரிடம்  கேட்டேன், “  நெடுஞ்செழியனை   ஏற்கனவே  தெரியுமா  ஐயா?”

“  ஆமாம்…  அவர்  தமிழகத்தில்   என்னோடு  படித்தவர்.  நீண்ட  நாட்களுக்குப்பின்னர்   சந்திக்கின்றேன்.”   என்றார்.

இலக்ஷ்மண ஐயர்  இலங்கையில்   கல்வித்துறையில்   மட்டுமன்றி   தமிழகத்திலும்   நன்கறியப்பட்டவர்.  அவரது  இந்திய  தத்துவ ஞானம்   என்ற  நூல்  பல  பதிப்புகளைக்கண்டுள்ளது.   அதனை    அடிப்படையாகவைத்தும்   சிலர்  ஆய்வு  நூல்கள்   எழுதியுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில்   சில  கசப்பான  உண்மைகளையும்   இங்கு  பதிவுசெய்யவிரும்புகின்றேன்.  இலங்கையிலும்  இந்தியாவிலும்  பல  பல்கலைக்கழக  பேராசிரியர்கள்  விரிவுரையாளர்களின்  வசம்  இருக்கும்  இந்திய  தத்துவஞானம் நூல்   அவர்களின்   இந்துநாகரீகம் தொடர்பான  விரிவுரைகளுக்கு பயன்படுகிறது.  ஆனால்  எத்தனைபேர்  உசாத்துணையாக  அதனை  பயன்படுத்தினோம்  என்று  பதிவுசெய்கிறார்கள். தமிழகத்தின்  ஒரு முன்னணி  படைப்பாளியும்  அந்த நூலை  வரிக்குவரி  நகல்  எடுத்து  ஒரு  நூல்  எழுதியிருப்பதாகவும்  தகவல்  வெளியாகியிருக்கிறது. நூல்பதிப்பித்தலில்   காப்புரிமை  என்று  ஒரு விடயம்  இருக்கிறது.  குறிப்பிட்ட  நூலை  எழுதியவர்  உயிரோடு  இல்லையென்றால்  எவர் வேண்டுமானாலும்  அதனை  மீள்  பதிப்பு  செய்து  பணம்  சம்பாதிக்க முடியும் என்ற  நிலை  துர்ப்பாக்கியமானது.  எங்கள்  தேசத்து தங்கத்தாத்தா  நவாலியூர்  சோமசுந்தரப்புலவரின்  நூலுக்கும்  அந்தக்கதி  நேர்ந்துள்ளது.  இலக்ஷ்மண ஐயர்  இன்றில்லை.  அதனால்  எவர்  வேண்டுமானாலும்  அந்த  நூலை  பாவித்து  ஆய்வுக்கட்டுரைகளை  எழுதி  சம்பாதிக்கமுடியும்.

இலக்ஷ்மண  ஐயர்  பலாலியில்    மின்சார  வசதிகளே  இல்லாத  ஒரு  குக்கிராமத்தில் சுமார்  95  ஆண்டுகளுக்கு  முன்னர்  ஒரு  சாதாரண  குடும்பத்தில்  பிறந்தவர். அவர்  பிறந்த  சமூகம்  அவரை  கோயில்  பூசகராக்கியிருக்கலாம்.  அல்லது  புரோகிதராக வலம்வந்து  ஆயிரக்கணக்கான  கோயில்  ஐயர்கள்  போன்று  ஆலயங்களில்  கும்பாபிஷேகம்  செய்து  பெயர்  தெரியாமல்  மறைந்திருக்கலாம்.  ஆனால்  ஒழுக்கசீலராக  வாழ்ந்து  இந்து நாகரீக  கல்வித்துறைக்கும்  கல்விப்பணிக்கும்  எழுத்துச்சீர்திருத்தத்திற்கும்  தொடர்ந்து  உழைத்தார். பதவியிலிருந்து  ஓய்வு  பெற்றபின்பும்  முன்னைய  அரசுகளின்  செல்வாக்கு  மிக்க  அமைச்சர்களினால்   புதிய  பதவிகள்  அவரைத்தேடி  வந்தபோதும்  அவற்றை  சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டு  நாட்டைவிட்டு  புலம்பெயர்ந்தார். அவுஸ்திரேலியாவில்    1990  ஆம்  ஆண்டு  சிட்னியில்  மறைந்தார்.  அவரது 95  வயது   நிறைவு  காலத்தில்   அவர் ஏற்கனவே   எழுதிய  கட்டுரைகள்,  ஆய்வுகளை   தொகுத்து   வெளியிடுவதற்கு   அன்னாரின்   குடும்பத்தினர்  தயாராகியுள்ளனர். எனவே  அவர்  சம்பந்தப்பட்ட   ஆக்கங்களை  தம்வசம்  வைத்திருக்கும்    அன்பர்கள்   பின்வரும்  முகவரியுடன்   அல்லது  மின்னஞ்சலுடன்   தொடர்புகொண்டு   ஆக்கபூர்வமாக  உதவவேண்டும்  என்று  இச்சந்தர்ப்பத்தில்   கேட்டுக்கொள்ள   விரும்புகின்றேன்.

Mrs. Mangalam Vaasan
23, Kingsley Crescent,
Mont Albert
Victoria – 3127
Australia

E.Mail:     இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.