இலங்கையை விட்டு எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடும்படி உள்நாட்டுப் போர் எங்களில் பலரைத் துரத்தியது. அதன் விளைவு, நாங்களும் எங்களின் அயலார், உற்றார், உறவினர்களும் இந்தப் பூமிப் பந்தின் பல்வேறு தேசங்களிலும் சிதறிப் போனோம்.

அங்ஙனம் விதி விட்டவழி நாங்கள் சிதறி விழுந்த இடங்களில், மொழித் தேர்ச்சி போதாமல், படிப்புக்கேற்ற வேலை கிடையாமல், புதிய சீதோஷ்ண நிலைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற தயார்நிலை இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். எனினும், முடிவில், தஞ்சம் தேடிய புகலிடங்களில் ஆழமாகவே காலூன்றி வாழ எங்களால் முடிந்திருக்கிறது. நாங்கள் பெற்றுக்கொண்ட புகலிடக் குடியுரிமை தொலைத்திருந்த உறவுகளைத் தேடி, அந்தந்த உறவுகள் வாழும் நாடுகளுக்குச் செல்வதற்கும் வழிசெய்திருக்கிறது.

“இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என அன்று கண்ணதாசன் கூறியதுபோல, சொந்த நாட்டையும் உறவுகளையும் பிரிந்த துன்பம் எங்களுக்குள் உழன்று கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இருந்திருந்தால் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்திருக்கக்கூடிய பல விடயங்களை இப்போது எங்களால் சுலபமாகச் செய்யமுடிகிறது. அவ்வகையில் விரும்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதற்கு எங்களின் குடியுரிமை அனுமதிப்பதும் ஒருவகையில் ஒரு கொடுப்பனவுதான். இல்லையா?

முதுமை என்பது ஒரு எச்சரிக்கையாகவும் இருப்பதால், பயணம்செய்ய முடியாமல் போக முன் அந்தக் கொடுப்பனவை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டுமென்ற என்ற எண்ணம், அடுத்ததாக நோர்வேயையும் பார்த்துவிட வேண்டுமென்ற அவாவை எனக்குள் வளர்த்தது. அங்கு சென்றால் நான்கு தசாப்பதங்களுக்கு மேலாகக் காணாமல் இருக்கும் உறவுகளையும் சந்திக்கலாமென்பது, அந்த எண்ணத்துக்கு மேலும் வலுச்சேர்த்தது.

நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வேயைக் கண்குளிரக் காண்பதற்கு ஜுன் மாதம் எல்லாவகையிலும் பொருத்தமானதாக இருக்குமென முடிவெடுத்தபோது, அது இளைய மகள் சங்கிக்கும் வசதியானதாக இருந்தது. ஆனால், அவவுக்கு இரண்டு கிழமை மட்டுமே லீவு இருந்ததால், போக்குவரத்துக்கான நேரம் போக, நோர்வேயில் மிஞ்சியிருக்கப்போவது ஏழே ஏழு நாள் மட்டும்தான் என்றானபோது, அந்த ஏழு நாள்களுக்குள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதுடன் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதென்பது இலேசான ஒரு விடயமல்ல என்பது நன்கே புரிந்தது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வாழ்கின்ற Stavanger, Bergen, Oslo ஆகிய மூன்று நகரங்களும் இடம்பெறக்கூடியதாக எங்களின் பயணத்திட்டத்தை அமைப்பதற்காக நிறைய ஆராயவேண்டியிருந்ததால், சங்கிக்குப் பரீட்சை நிகழ்ந்துகொண்டிருந்த நேரத்திலும் அவவை அடிக்கடி குழப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. எனினும், முடிவில் யாவுமே சுமுகமாக நிகழ்ந்து, நோர்வேப் பயணம் மிகவும் மகிழ்ச்சியான, பயனுள்ள ஒரு பயணமாக அமைந்திருந்ததில் மிகவும் திருப்தியே. அதற்காகப் பயணத்தை நன்கு திட்டமிட்டிருந்த சங்கிக்கும், அந்தப் பயணத்தின்போது எங்களை மனதார வரவேற்று உபசரித்த உறவுகளுக்கும்தான் நன்றி கூறவேண்டும்.

சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளைத் தன் நில எல்லைகளாக கொண்டிருக்கும் நோர்வேயின் மேற்கு மற்றும் வடக்குக் கரையோரப் பகுதிகளை வட கடலும் நோர்வேயியன் கடலும் வட அத்திலாந்திக் சமுத்திரமும் சூழ்ந்திருக்கின்றன. மிகவும் ஒடுக்கமாகவும் நீளமாகவும் அமைந்திருக்கும் நோர்வேதான், உலகிலேயே மிகவும் நீளமான கடற்கரையைக் கொண்டிருக்கிறது. மலைகள், நுழைகழிகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், பனிப்பாறைகள் எனப் பரவசம் தரும் பல்வேறு வகையான நிலப்பரப்புகளைத் தன்னகத்தை அடக்கியிருப்பதே இதன் அபாரமான அழகின் சூட்சுமெனலாம். அத்துடன், நோர்வேயின் மொத்தப்பரப்பில் 3/5 பங்கு மலைகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? இயற்கை அழகு மிக்க நோர்வே அதிகமான மழைப் பொழிவைக் கொண்ட ஒரு நாடாகவும் அமைந்திருக்கிறது.

ஐரோப்பாவிலேயே மக்கள் அடர்த்தி குறைந்த நாடான நோர்வேயிலிருந்து...

இயற்கை வாயுவும் பெற்றோலியப் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது நாட்டின் செல்வச் செழிப்பைச் சொல்லப் போதுமானது எனலாம். கடலுக்குள்ளால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் ஊடாகவே இங்கு அதிகமான போக்குவரத்து நடைபெறுகிறது. Osloஐயும் Bergenஐயும் இணைக்கும் Lærdalstunnelen என்ற 24.5 கிமீ சுரங்கப்பாதையே நோர்வேயிலுள்ள மிகவும் நீளமான சுரங்கப் பாதையாகும்.

டெனிஸ் மொழியின் அடிப்படையிலான Bokmål, மற்றும் கிராமத்து வட்டார வழக்கிலிருக்கும் Nynorsk என இரு மொழிகள் நோர்வேயில் பேசப்படுகின்றன. சுவீடனுடனான ஒன்றியத்தில் இருந்து பிரிந்தபின், டெனிஸ் மொழிக் கலப்பற்ற நோர்வே மொழியை அனைவரும் பேச வழிசெய்ய வேண்டுமென்பது நாட்டின் ஒரு குறிக்கோளாக இருப்பினும், இரண்டு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் இங்கு வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஏதாவது இரண்டு மொழிகளில் தேர்ச்சி இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுவதால், Nynorsk கற்பதைவிட தமிழ் கற்பது தமிழ் மாணவர்களுக்கு ஒப்பீட்டளவில் இலேசாக இருக்கிறது என்பது எங்களின் மாணவர்கள் தமிழ் கற்பதை ஊக்குவிக்குமொரு விடயமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகளிடையே முரண்கள் தோன்றும்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நோர்வே பல ஆண்டுகளாகப் பெரும்பங்காற்றி வருகிறது. அவ்வகையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், ராஜதந்திரத்தைச் செயல்படுத்துவதில் பெயர்பெற்ற நாடாக இருக்கும் நோர்வே, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் முன்நின்றமை பற்றி நாங்கள் அனைவரும் நன்கறிந்திருக்கிறோம். அத்துடன், அணு ஆயுதங்களைக் குறைப்பதையும் அணுசக்தியை அழிவற்ற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதையும் நோர்வே தீவிரமாக ஆதரிக்கிறது என்பதும் அந்த நாட்டின் ஒரு சிறப்பாகும்.

மேலும் சுவீடன் இரசாயானவியலாளரான Alfred Nobelஇன் உயிலின்படி வழங்கப்படும் ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றான நாடுகளிடையேயான அமைதிக்காகப் பாடுபடும் தனிமனிதருக்கோ அல்லது சமூகத்துக்கோ வழங்கப்படும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வருடாவருடம் ஒஸ்லோவிலேயே வழங்கப்படுகிறது. அத்துடன், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது LGBT மற்றும் பெண்களுக்கான சம உரிமை வெகுகாலத்துக்கு முன்பே நோர்வேயில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சமத்துவமாகவும் இருக்கவேண்டுமென்ற அந்த நாட்டின் கோட்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

நோர்வே வழங்குகின்ற மாணவர்களுக்கான விசாவைப் பயன்படுத்தி 80களில் அதிகமான தமிழர்கள் நோர்வேக்குச் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்களின் மாமாவின் நான்கு பிள்ளைகளும், என் மூன்று சகோதரர்களும் அவ்வாறே அங்கு சென்றிருந்தனர். (பின்னர் என் சகோதரர்களும் மாமாவின் ஒரு பிள்ளையும் கனடாவுக்கு வந்துவிட்டனர்.) அவர்களின் மொழியைக் கற்பதற்கு நோர்வே அரசாங்கம் கொடுத்த அந்த ஊக்குவிப்பு, எம்மவர்களில் பலர் பல்கலைக்கழகப் படிப்பு ஈறாகப் படித்து நல்ல வருமானம் தரும் உடலுழைப்புத் தேவையற்ற, மதிப்பான தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியிருக்கிறது.

முன்நிபந்தனைகள் எதுவுமின்றி இங்கிலாந்துக்குச் செல்வதற்கான விசா 85இல் இலங்கையில் வழங்கப்பட்டபோது, இலண்டன் தூதரகத்துக்கருகே கொள்ளுப்பிட்டியில் விஜேந்திராவும் நானும் வேலைசெய்து கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து பலர் அந்த விசாவைப் பெற்றுக்கொண்டபோது, நாங்களோ இலங்கையை விட்டு நீங்கப் போவதில்லை என்ற ஒன்மத்தில் இருந்தோம். பின்னர் 89இல், எங்காவது போய்விட வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில், நோர்வேயின் மாணவர் விசாவுக்கு விஜேந்திரா விண்ணப்பித்தபோது அவரின் கல்வித் தகுதி அதிகமாக இருக்கிறதென, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படிருந்தது. அவ்வாறாக விண்ணப்பிக்காமல் மேற்படிப்புக்கென விண்ணப்பித்திருந்து அது ஏற்கப்பட்டிருந்தால் எங்களின் வாழ்க்கைப் பயணத்தின் திசை மாறியிருந்திருக்கும், ஆனால், அதற்கான விதி எமக்கிருக்கவில்லை.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.