1. நேரமது கிடைத்திடல் வேண்டுமே

நற்றமிழ்தனை ஆய்ந்திடல் வேண்டும்
நன்னூல்கள்பல படித்திடல் வேண்டும்
கற்றவருடன் பழகிடல் வேண்டும்
கவிதைகள் எழுதிடல் வேண்டும்

உற்றவர் உறவுகள் வேண்டும்
உண்மை நண்பர்கள் வேண்டும்
பெற்றவர் ஆசிகள் வேண்டும்
பிள்ளைகள் பெருமை வேண்டும்

ஆக்கங்கள் ஆக்கிடல் வேண்டுமே
ஆய்வுகள் செய்திடல் வேண்டுமே
நோக்கங்கள் நிறைவுறல் வேண்டுமே
நேரமது கிடைத்திடல் வேண்டுமே!

2. நட்புக் காட்டிடவும் மனம்வந்திடுமோ!

நெஞ்சினில் பொறாமைக் குணமும்
நினைவினில் கெடுதல் எண்ணமும்
வஞ்சனை கொண்டிட்ட உள்ளமும்
வாயினில் பசப்பு வார்த்தைகளும்

பொய்களைப் புனையும் போக்கும்
பொதுநல சேவையினில் நடிப்பும்
மெய்களை ஏற்றிடவிரும்பா மனதும்
மற்றவர்க்குதீங்குசெய்திடும்விருப்பும்

அடுத்துக் கெடுத்திடும் பழக்கமும்
அறத்தினை சிந்தித்திடா வாழ்வும்
கெடுத்து உறவுகளைப் பிரிக்கும்
கெட்ட சிந்தனை கொண்டாரோடு

ஊடிக்கூடிப் பழகிடத்தான் ஏலுமோ
உறவு கொண்டிருந்திடல் முடியுமோ
நாடிச்சென்று ஒன்றாய்க் குலவிடவும்
நட்புக் காட்டிடவும் மனம்வந்திடுமோ!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.