அறிமுகம்'ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ளபொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் 1955 வரை எழுந்ததாகத் தெரியவில்லை. மூதூரைச் சார்ந்த வ.அ.இராசரத்தினம் 1955 இல் ஈழகேசரியில் எழுதிய கொழுகொம்பு நாவலே இவ்வகையில் முதல் நாவலாகக் கிடைக்கிறது.' என்று ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் நா. சுப்பிரமணியன் எழுதியுள்ளார். கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்ட வகையில் தனிமனித உணர்வுசார்ந்த காதல், உறவு, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கொழுகொம்பு அமைந்திருக்கின்றது.
கதையும் கதைவளர்ச்சியும்
வ.அ.இராசரத்தினம் இந்நாவலை, பிரதேசப் பண்பும் சமூக இயங்கியலும் வெளிப்படும் வண்ணம் எழுதியுள்ளார். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி எவ்வாறு அவர்தம் சந்ததிகளின் வாழ்வை அலைக்கழித்துச் சிதைத்தது என்பதுதான் மையக்கதையாக அமைந்துள்ளது.
அம்பலவாணர் சமூகத்தில் மிகப் பிரபலமான நபர். நிலபுலம் உள்ள பணக்காரர். சமூக நிகழ்வுகளில் முன்னிற்பவர். கௌரவமும் சமூக அந்தஸ்தும் முக்கியம் என எண்ணுபவர். அவரது ஒரே மகன் நடராசன். ‘அப்போதிக்கரி’க்கு படித்துக் கொண்டிருப்பவன். அம்பலவாணர் பட்டினசபைத் தேர்தலில் கிராமத்தில் இருந்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் கிராமமக்கள் அவரை ஆதரிக்காமையினால் தோல்வியடைந்து விடுகிறார். அவரது மைத்துனர் கந்தையரும்கூட தனக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பதால் அவர் மீதும் கோபம் கொள்கிறார். அக்கோபம் பெரும்பகையாக மாறிவிடுகிறது. தனது ஒரே மகன் நடராசனை மாமன் வீட்டுப் பக்கம் போகக்கூடாது என்று கட்டுப்பாடு போடுகிறார். நடராசன் தனது முறைமச்சாள் ஆகிய கனகத்தைக் காதலிக்கிறான் அவளைத்தான் திருமணம் செய்யவும் இருக்கிறான். தகப்பனின் கட்டளையால் அவன் மனஞ்சோர்ந்து விடுகிறான். குழப்பமடைகிறான்.
மைத்துனர் கந்தையரும், அம்பலவாணர் தன்னையும் தன் குடும்பத்தையும் புறக்கணிப்பதை அறிந்து மனம் வெதும்புகிறார். நடராசன் - கனகம் தொடர்புக்குத் தடை விதித்து 'தம்பி நீர் இங்கு வரவேண்டாம்' என்று சொல்கிறார். தந்தையிடமும் மாமனிடமும் இருக்கும் இந்த முரண்பாடுகளால் நடராசன் வீட்டைவிட்டு வெளியேறி, கொழும்பு சென்று விடுகிறான்.
மறுபுறத்தில் இப்பிரச்சினைகளைப் பூதாகரமாக்கிச் சுயநலம் தேட சண்முகம் என்பவர் இருவரின் வீட்டுக்கும் சென்று மேலும் குழப்பங்களை ஏற்படுத்தி விடுகிறார். ஊரில் வேலையில்லாமல் இருக்கும் சுந்தரத்திற்கு கனகத்தைத் திருமணம் செய்து வைக்க கந்தையருடன் பேச்சுவார்த்தை நிகழ்த்துகின்றார்.
பல்வேறு நெருக்கடிகள், புறக்கணிப்புகள் ஆகியவற்றின் மத்தியில் கனகமும் மதம் மாறி, துறவு வாழ்க்கையில் ஈடுபட விரும்பி மூதூரை விட்டு வெளியேறுகிறாள். கொழும்பு சென்ற நடராசனுக்கு பலவித பிரச்சினைகளின் பின்னர் நண்பன் தியாகுவின் உதவியுடள் ஹட்டனில் உள்ள தோட்டப்பிரதேசத்தில் வேலை கிடைத்துவிடுகிறது, அங்கு மருத்துவம்பார்க்கச் சென்ற இடத்தில் பிலோமினாவுடன் தொடர்பு ஏற்பட்டு அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான். அவன் ஹற்றனில் இருப்பது அறிந்து மச்சான் செல்லன் வர பழைய பிரச்சினைகள் பிலோமினாவுக்குத் தெரியவருகிறது. அவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு நடராஜன் - கனகம் வாழ்வு தன்னால் பாழாகி விடக்கூடாது என்றெண்ணி தன் உயிரைத் தியாகம் செய்கிறாள். ஆணுக்குப் பெண் கொழுகொம்பாக இருப்பது என்பதை விட ஒரு சமூகத்தில் பெண் தனித்து வாழ்வதற்கு சமூகம் கொழுகொம்பாக இருக்கவேண்டும் என்ற இலட்சியத்தை முன்னிறுத்துவதோடு நாவல் முற்றுப் பெறுகின்றது,
குறித்த பிரச்சினைகளின் பின்னர் கனகம் மூதூரில் இருந்து கல்முனைக்கு வந்துவிடுகிறாள். அங்கிருந்து மதம் மாறி கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற ஹட்டன் வருகிறாள். அங்கு நடராசன் இருப்பதும் அவனுக்கு பிலோமினாவுடன் தொடர்பிருப்பதும் தெரியவர மடத்தில் இருந்து வெளியேறி வீடு சென்றுவிடுகிறாள்.
பாத்திரப் பண்புகள்
இந்நாவலில் மிகக் குறைந்த பாத்திரங்கள் ஊடாக குடும்ப முரண்பாடுகளை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். அம்பலவாணர், கந்தையர், நடராசன், கனகம், தியாகு ஆகியோர் இந்நாவலில் முதன்மையான பாத்திரப்பண்புடன் படைக்கப்பட்டுள்ளனர்.
அம்பலவாணரின் கஞ்சத்தனமும் அதிகார ஆசையும் அவரின் ஒரே மகன் ஊரைவிட்டே வெளியேறுவதற்குக் காரணமாகி விடுகிறது. தான் கிராமசபைத் தேர்தலில் வெற்றியீட்டவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மைத்துனர் கந்தையர் மீது கோபம் கொள்கிறார். தன் மகன் மீது இருக்கும் வெறுப்பை 'அவன் பிறாவாதிருந்தால் அவனுக்கு மட்டுமல்ல. எனக்கும் நலமாயிருக்கும்.' என்று கூறும் மனநிலைக்கு ஊடாகப் புரிந்து கொள்ளலாம்.
அம்பலவாணரின் வீட்டுக்குச் சென்ற தனது குடும்பத்தையே வெளியே போகுமாறு அவமதித்ததை மனதில் வைத்து அம்பலவாணருக்குத் தான் அடிமையில்லை என்பதைக் காட்டுவதற்காக கந்தையரும் தனது மருமகனான நடராசனைத் தூக்கியெறிந்தமை அவனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அம்பலவாணரும் கந்தையரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்தாலும் இருவரும் ஊர் நிகழ்வுகளில் மரமும் மட்டையும்போல் இருந்தார்கள் என்று ஆசிரியர் எள்ளலாகக் குறிப்பிடுவார். “எப்படியோ இருவரும் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். இருவர்க்கும் பொதுவான காரியங்கள் எத்தனையோ ஊரில் நடக்கத்தான் செய்தன. கல்யாண வீடுகள், சாவீடு எல்லாவற்றிலும் இருவரும் மரம்போல மட்டைகள்போலக் கலந்து கொண்டார்கள். மட்டையும் மரமுமாகவே பிரிந்து போனார்கள். எந்த உணர்ச்சியும் அவர்களை ஒன்றாக்கி வைக்கவில்லை.” (ப.262)
ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளாத - மாற்றமுறாத மனநிலை கொண்டவர்களாக விளங்குகிறார்கள். ஒருவர், தனக்குக் கௌரவக் குறைச்சல் ஏற்பட்டு விட்டது என்பதற்காக குருட்டுத்தனமாக உறவை விலத்தி விடுகிறார். மற்றவர், அவரின் அதிகாரத்திற்கு நான் கட்டுப்பட்டவனா? எனக்கும் கௌரவம் முக்கியம் என்று முரண்டு பிடிக்கிறார். இந்த இருவரின் தீராப்பகைக்குள்ளும் போட்டிகளுக்குள்ளும் அகப்பட்டு நடராசன் - கனகம் வாழ்வு அலைக்கழிக்கப்படுகிறது.
வற்றாளைக் கொடிகள் கொழுகொம்பின் துணையின்றித் தரையிலே படர்ந்து விடுகின்றன. எந்தப் பெண்ணும் வளர்ந்த பிறகு வற்றாளைக் கொடியைப்போல தான் பிறந்த நிலத்திலேயே படரமுடியாது வள்ளிக் கொடியைப்போல பிறந்த நிலத்தைவிட்டு வேறொரு கொழுகொம்பிற்தான் படரவேண்டும்? என்ற எண்ணம் இப்பிரச்சினைகளின் பின்னர் கனகத்தின் மனத்தில் தோன்றுகின்றது.
நடராசனின் கொழும்பு நண்பன் தியாகு பாத்திரமும் இந்நாவலின் கதைநகர்வுக்கு முக்கியமான பாத்திரமாக அமைந்துள்ளது. நடராசனை பல வழியிலும் சமாதானப்படுத்த முயல்கிறான் தியாகு. நடராசன் கனகத்தின் மீது தீராக்காதல் கொண்டிருப்பது அறிந்து குடும்பப் பிணக்குகளை மறந்து குடும்பத்தாரைச் சென்று பார்க்கவும் கனகத்தைத் திருமணம் செய்வதற்கும் வற்புறுத்துகிறான். ஹட்டனில் அவனுக்கு ஒரு வேலை பெற்றுக்கொடுக்கவும் காரணமாக இருந்தவன் தியாகு. நடராசன் மீது கொண்ட நட்பின் காரணமாக தியாகு செயற்பட்டமை தியாகுவை ஓர் உன்னத பாத்திரமாக ஆக்கியிருக்கிறது.
பிலோமினா உறவினர் இல்லாமல் ஹட்டனில் நோய்வாய்ப்பட்ட தாயாருடன் அல்லாடும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள். பிலோமினாவின் தாயருக்கு வைத்தியம் செய்ய நடராசன் செல்கிறான். அங்கு தனிமைத்துயருடன் இருக்கும் பிலோமினாவின் அன்புக்குப் பாத்திரமாகின்றான். நடராசனுடன் உரையாடுவது பிலோமினாவுக்கு சிறிது நிம்மதியைக் கொடுக்கிறது. தாயார் இறந்த பின்னர் தனித்துப்போன பிலோமினாவுக்கு நடராசன் துணையாவதோடு கண்டி சென்று பதிவுத் திருமணம் செய்கிறான். ஆனால் அதன் பின்னர் நடராசன் இருக்கும் இடம் வீட்டாருக்குத் தெரியவர பிலோமினாவுக்கும் நடராசனின் கடந்த கால வாழ்வு தெரிகிறது. தன்னால் ஒரு குடும்பம் சிதைய வேண்டாம் என்று இறுதியில் அவள் தன்னைத் தியாகம் செய்கிறாள்.
நாவலாசிரியர், பிலோமினாவை இறுதியில் ஓர் இலட்சியப் பாத்திரமாக மாற்றிவிடுகிறார். வ.அ இராசரத்தினத்தின் முற்போக்குக் கருத்துக்கள் பிலோமினாவுக்கு ஊடாக நாவலில் இறுதியில் வெளிப்படுத்தப்படுவது அவரது கருத்தியல் பின்புலத்தைக் காட்டுவதாக அமைகின்றது.
இதனாலேதான் “வ.அ. இராசரத்தினம் எழுதிய கொழுகொம்பு (1955-56) நாவல் காதல், தியாகம் முதலிய தனி மனித உணர்வுகளுடமைந்ததொகு குடும்பக் கதையாக அமைந்தாலும் கதை நிகழும் களம், கதாசிரியர் வழங்கும் செய்தி ஆகியவற்றினடியில் அதனையும் சமகால சமூக உணர்வுடைய நாவலாகவே கொள்ள வேண்டும்.” (ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், ப.63) என்ற கருத்தை நா. சுப்பிரமணியம் பதிவு செய்திருக்கிறார்.
உத்திகள்
கதைநகர்வில் மேலதிகமான விளக்கத்திற்கு உவமைகளையும் மேற்கோள்களையும் தந்திருப்பது தமிழ் இலக்கியத்தில் ஆசிரியருக்குள்ள மிகுந்த ஈடுபாட்டையும் வாசிப்பு அனுபவத்தையும் வெளிப்படுத்துகின்றது. தாகூர், காண்டேகர், விபுலாநந்தர், பாரதி, புதுமைப்பித்தன் முதலியோரின் படைப்புக்களில் வரும் கருத்துக்களோடு பைபிள் சுலோகங்களையும் எடுத்துக்காட்டுவார். அவரின் உரைநடைச் சிறப்புக்கும் வர்ணனைக்கும் பின்வரும் பகுதியை உதாரணமாகக் காட்டலாம்.
“அந்தி மயங்கி இருட்டாகி விட்டபோது பிச்சைக்காரனின் முதுகைப்போல மேடும் பள்ளமுமாக ஓடும் அந்த வீதியிலே இரண்டு துவிச்சக்கரவண்டிகள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. தெருவின் இரு கரையிலுமாக நிமிர்ந்து சடைத்து நின்ற காட்டுமரங்களின் நிழல், கிழக்கே அடிவானத்திலிருந்த வெண்கல உருண்டையாகக் கிளம்பிக் கொண்டிருந்த சந்திரனின் தெளிவற்ற ஒளியை விழுங்கிக் கொண்டிருக்கையில் அந்தப் பாதை இருண்டுதான் கிடந்தது. அந்த இருளில் தூரத்தே மரங்களற்றிருக்கும் வெறுமையான இடத்தில் சந்திரஒளி, பிய்ந்து விழுந்த தங்கப்பாளம் போலத் தெருவிலே தேடுவாரற்றுக் கிடக்கையில், அந்த ஒளியே ஒரு பயப்பிராந்தியைக் கொடுத்தது.” (ப.43)
பிலோமினா நடராசன் உரையாடலிற்கு ஊடாகவும் உத்திமுறைகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளமையைக் குறிப்பிடலாம்.
“இராத்திரி அமைதியாகத் தூங்கினார்களா? என்று கேட்டபடியே நடராஜன் அவள் தாயாரின் நாடியைப் பரிசோதித்தான். தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கொலைக் குற்றவாளிபோலப் பிலோமினா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நித்திரையற்றிருந்தாற் சிவந்து போயிருந்த அவள் கண்களிலிருந்து, கடற்பஞ்சிலே பட்டு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்த் துளிகளைப் போலக் கண்ணீராறு அவள் கன்னங்களில் ஓடிற்று.” (ப.247)
கிழக்குப் பிரதேசத்திற்கேயுரிய வழக்காறுகளுக்கு ஊடாக புதிய உவமை, பழமொழிகள், சொற்சேர்க்கைகளையும் நாவலில் ஆங்காங்கே கொண்டு வருவார்.
“காலைச் சூரியனின் ஒளியில் சலவைக்கற் பூவைப்போல மினுங்கும் அவள் அழகு முகம்”
“முன்னங் கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக் கொண்டு நடக்கும் தெருநாயைப்போல அவன் நடந்தான்.”
“வெட்டுப்பட்ட ஆமணக்கிலிருந்து சொட்டும் பாலைப்போல”
“சினந்து கொண்டு அறுந்த மூக்கை சிரித்துக் கொண்டு ஒட்டினால் ஒட்டுப்படுமா?”
“அடி ஆமணக்கென்றால் நுனி நொச்சியாகவா இருக்கும்?”
“தூண்டிற்காரனுக்கு மிதப்பிலே கண் இருக்குமாம்”
முதலான உவமை பழமொழிகள் சொற்சேர்க்கைகளை பாத்திரங்களின் மனவுணர்வுகளுக்கு ஏற்றாற்போல ஆங்காங்கே கதையோட்டத்தின் சிறப்புக்குப் பதிவு செய்திருப்பார்.
நோக்குநிலை
நடராசனுடன் தனக்கு திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றறிந்த கனகம் துறவு பூண விருப்பம் கொள்கிறாள். இந்நிலை, காதலில் தோல்வி ஏற்பட்டால் கடவுளின் பெயரில் சேவை செய்யப்போகிறேன் என்று கூறுவது எவ்வகையில் நியாயமானது அதை புழுக்குத்திய பழங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பது போலல்லவா தூய்மையற்றதாக இருக்கும்? என்று கனகம் தன்னைத்தானே சீர்தூக்கிப் பார்க்க வைக்கிறார் ஆசிரியர்.
“வாடி வதங்கிய காய்களையும், புழுக்குத்திய பழங்களையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்த காயீனைப்போல, அவளும் உளுத்துப்போன, உளுத்துப் போய்க்கொண்டிருக்கும் மனத்தையா கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பது? செல்லாக் காசைக் குருட்டுப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்கும் தர்மப் பிரபுவைப்போலத் தூய்மையற்ற மனத்தையா ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பது? மனிதனின் நடபடிக்கைகளை இருட்டிலும் கண்காணித்துக் கொண்டிருக்கிற கடவுளைக் குருட்டுப் பிச்சைக்காரனாக எண்ணி ஏமாற்றுவதா?”
தானும் அப்படித்தான் ஆண்டவனை ஏமாற்றி விடவேண்டுமா? என்று கன்னியாஸ்திரியாகப் பணிசெய்வதற்குப் பயிற்சிக்குச் சென்றவள் மனங்குழம்பிய நிலையில் இருக்கிறாள். இதனை அவதானித்த மடத்துத்தலைவி சில காலம் நீ வீட்டுக்குச் செல். பின்னர் இங்கு வரலாம் என்கிறாள்.
“ஆண்துணை கிடைக்காவிட்டாலும் நாட்டிலே தனித்தியங்கக்கூடிய ஒரு நிலையைத்தான் நான் வேண்டுகிறேன்.” என்ற பிலோமினாவின் கடைசி ஆசையான புதிய சமுதாயம் உருவாவதற்கு நடராஜன் மட்டும் மாறினால் போதுமா எல்லாரின் மனமுமல்லவா மாறவேண்டும். உண்மையில் ஆண்கள் பெண்களுக்கு கொழுகொம்பாக இருக்கவேண்டும் என்பதல்ல. சமூகத்திலே பெண்கள் ஆண்களை நம்பியிராது தமது சொந்தக்காலிலே தனித்து நின்று இயங்கவல்ல புதிய சமுதாயத்தின் மாற்றம்தான் பெண்களின் உண்மையான கொழுகொம்பு என்பதை பிலோமினா பாத்திரத்தினூடாக ஆசிரியர் வலியுறுத்துகிறார். இதேபோலவே தனது வெண்மணற் கிராமத்திலும் கிரௌஞ்சப் பறவைகளிலும் வ.அ. இராசரத்தினம் பெண் பாத்திரங்களைப் படைத்திருப்பார். ஒட்டுமொத்தமாக பெண்கள் பற்றிய உயர்வான சமூகப் பார்வையை இந்நாவலிலும் முன்வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
நிறைவு
எனவே, கிழக்கிலங்கையில் இருந்து வெளிவந்த ‘கொழுகொம்பு’ தனிமனித உணர்வு சார்ந்த அம்சத்தைக் கொண்டிருந்தாலும் தங்களைப் பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் மனத்தளவில் பண்படாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் அதிகாரப் போட்டி காரணமாக அவர்களின் சந்ததியினர் வாழ்வில் ஏமாற்றங்களையும் வாழ்க்கைச் சிதைவுகளையும் ஏற்படுத்துவதற்கு காரணர்களாகவும் இருக்கிறார்கள். ஆண்தான் பெண்ணுக்குக் கொழுகொம்பாக இருக்கவேண்டும் என்ற ஆணாதிக்கக் கருத்தினை விடுத்து புதிய சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம்தான் பெண்களின் கொழுகொம்பு என்பதனை வ. அ. இராசரத்தினம் இந்நாவலில் புதிய சிந்தனையாகப் பதிவு செய்திருக்கிறார். ஈழத்து நாவல் இலக்கியம் பேசுபொருளாவதற்கு வ.அ. இராசரத்தினம் போன்ற படைப்பாளிகளின் பங்களிப்பும் முதன்மையாக இருந்துள்ளமையை இந்நாவல் காட்டுகின்றது.
* ஜீவநதி, வ.அ. இராசரத்தினம் நூற்றாண்டுச் சிறப்பிதழில் ( பங்குனி, 2025) வெளியான கட்டுரை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.