தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக போருக்குள்ளே வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கைப்பாடுகளை ஈழத்துப் புனைகதைகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன. ஒருபுறத்தில் போரால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிதைவுகளும் மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இருபுறத்தார் மீதான விமர்சனங்களும் ஈழ - புகலிடப் படைப்புக்களில் அதிகம் பதிவாகியுள்ளன. பொதுவாகவே மக்களின் பக்கமிருந்து பொது எதிரியை விளித்து எழுதப்பட்ட புனைகதைகளும் அதிகமதிகம் வெளிவந்தன. விலகல்கள் எனும்போது தமிழ்ப் போராட்டக் குழுக்களின் அரசியல் முரண்பாடுகள், அமைப்புக்களின் தன்னிச்சையான அதிகாரப்போக்கை எதிர்த்து எழுதப்பெற்ற படைப்புக்கள் 80களின் இறுதியில் இருந்து அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. புகலிடச் சூழலும் இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறத்தில் போராட்டத்தின் தேவை சார்ந்தும் அதன் அமைப்பு சார்ந்தும் உள்ளிருந்து எழுதப்பெற்ற படைப்புக்களும் வெளிவந்தன. அருளரின் லங்காராணி (1978), தா. பாலகணேசனின் விடிவுக்கு முந்திய மரணங்கள் (1986), மலரவனின் போருலா (1993) முதலான புனைவுகளை உதாரணமாகக் கூறலாம்.

   இந்த அடிப்படையில் குணா கவியழகன் தான் சார்ந்த அமைப்புக்குள் இருந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோரின் பார்வையில் இந்நாவலை எழுதியுள்ளார். ஒரு கொள்கைக்காகத்  தங்களைத் தியாகம் செய்வதில் எதிர்கொள்கின்ற இடர்ப்பாடுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதியீனங்கள் இவற்றைத் தாண்டித்தான் தம் வாழ்வைத் தியாகம் செய்கிறார்கள் என்பதை நாவல் காட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களது குடும்பங்கள் அக்காலங்களில் பட்ட வாழ்க்கைப் பாடுகளைக் கருவாகக் கொண்டமைந்ததே நஞ்சுண்ட காடு. இது இவரது முதல் நாவலாகும். இதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக வேறு நாவல்களை எழுதியுள்ளார்.

  ஓர் அமைப்பைச் சார்ந்தோர் அதன் உள்விவகாரங்களை எழுதிய காரணத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளானார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. இதற்கு நல்ல உதாரணமாகக் கோவிந்தனைக் (புதியதோர் உலகம்) குறிப்பிடலாம். ஆனால் இது வித்தியாசமானது. இந்நாவலில் பிற்பகுதியில் கூறப்படும் மக்களின் வாழ்வு அதிகமும் ஈழப்படைப்பாளிகளால் பதிவாக்கப்பட்டமை நாம் அறிந்ததே.

   இந்நாவல் 2004இல் ‘ஏணைப்பிறை’ என்ற பெயரில் எழுதப்பெற்றது. 2006 இல் இதற்கொரு முன்னுரையை க.வே.பாலகுமாரன் எழுதினார். இந்நாவல் வன்னியில் உள்சுற்று வாசிப்பில் இருந்ததெனவும் ஒரு தகவல் உண்டு. பின்னர் தமிழ்நாட்டில் அகல் பதிப்பகம் 2014இல் முதற்பதிப்பைக் கொண்டுவந்தது.

   நாவலின் முதற்பாதிக் கதைக்களம் விடுதலைப்புலிப் போராளிகளின் பயிற்சி முகாமாக அமைகின்றது. காடும் காட்டின் மத்தியில் அமைந்திருந்த முகாமும் விபரிக்கப்படுகிறது. போராட்டத்திற்குத் தம்மை அர்ப்பணம் செய்தவர்களின் அன்றாடப் பயிற்சி அனுபவங்களையும் கூறுகின்றது. மறுபாதியில் வீட்டுச்சூழல் வருகின்றது. எவ்வகையான வீட்டுச்சூழலில் இருந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு வந்தார்கள். அவர்தம் பெற்றோரது கனவுகள் எவ்வாறாக இருந்தன? அக்குடும்பங்கள் அக்காலகட்டங்களில் எவ்வகையான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டார்கள்,  யுத்தத்திற்குப் பின்னரான சமாதான காலத்திலும் குடும்பங்களின் நிலைமை இன்னமும் மாற்றம் பெறவேயில்லை என்பது வரையான கதைகள் கூறப்படுகின்றன.

   இந்நாவலின் கதைப்போக்கு 13 பேர் இயக்கத்தில் இணைவதற்காகக் கன்ரர் வாகனம் ஒன்றில் பயணம் செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. அவர்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள். இயக்க முகாம் ஒன்று அங்கு அமைந்திருக்கின்றது. அங்கு அமைக்கப்பட்ட கொட்டில்களில் இருந்து கதையின் பெரும்பாகம் விரிகின்றது.

   காலைக்கடன் கழிப்பதில் உள்ள வசதியீனங்கள், மரத்தால் அமைக்கப்பட்டு உரப்பைகளால் மறைப்புக் கட்டப்பட்ட தற்காலிக மலசலகூட வசதி பற்றி சொல்லப்படுகிறது. வந்தவர்களில் ஒருவன் எப்படியோ தப்பிவிடுகிறான். அவனைக் காடெல்லாம் தேடுகிறார்கள். கண்டுபிடிக்கமுடியவில்லை. பயிற்சிக்காலத்தில் காவற்கடமை, சாப்பாடு, உரையாடல்கள், தண்டணைகள் யாவும் கூறப்படுகின்றன.

   பயிற்சி முகாமை நிர்வகிப்பவர்கள் அதனை நடாத்துபவர்களது மனநிலைகள் பயிற்சி பெறுவர்களது மன எண்ணங்கள் போன்றவற்றை இந்நாவலில் அறியமுடிகின்றது. மறுபுறத்தில் போராளிகளின் குடும்பங்களின் நிலைப்பாடு பற்றிச் சொல்லப்படுவதிலும் போராட்டத்திற்கு வந்த பல இளைஞர்கள், வாழ்வில் பல ஏற்ற இறக்க அனுபவங்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இதனாலேதான் முன்னுரையில் “ஏணைப்பிறை முழுவதும் ஒரு வலி பரவிக் கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்ற பெரும் துயர் இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள் வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது” (பாலகுமாரன், முன்னுரை) என்று குறிப்பிடப்படுகின்றது.

   இயக்க நடைமுறைகளை நாவலில் ஆங்காங்கே ஆசிரியர் கூறிச் செல்கிறார். அதற்கூடாகவே கதை நகர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்குப் பெயர் வைத்தல், இயக்கப் பொறுப்பாளர் பயிற்சியாளர்களை உற்சாகப்படுத்தி உரை நிகழ்த்துதல், இயக்க நடைமுறைகள் பற்றி புதியவர்களுக்குச் சொல்லுதல் என நாவல் நகர்கிறது.

       -  எழுத்தாளர் குணா கவியழகன் -

“இனி நீங்கள் சாதாரண ஆக்களில்லை. விடுதலைப் புலிகள், போராளிகள், வீரமும் தியாகமும் உள்ளவர்கள். பயிற்சி முடிந்து வெளியில் போனால் சனங்கள் உங்களை இயக்கப் பொடியள் போறாங்கள் என்று சொல்லுவார்கள்” (ப.23)

   உரப்பையில் bag தைத்தல், பயிற்சியின்போது மரத்தாலான கொட்டன்களை துவக்குகளாகப் பாவனை செய்தல், அவற்றைத் தம்மோடு வைத்திருக்காத சந்தர்ப்பங்களில் தண்டனை பெறுதல், அரிக்கோன் லாம்பை ‘கையான்’ எனக் கூறுதல், காவுதடி உதவியுடன் நீர் நிரப்பிய கான்களைத் தூக்கி வருதல், காற்சட்டையை வெந்நீரில் அவித்து அணிதல், கடுமையான பயிற்சிகளைச் செய்யாது மீறுவோர் தண்டனைக்கு உட்படுதல், (பயிற்சியின்போது மயங்கி விழுவதுபோல் நடித்த கோபிக்கு அடி விழுகிறது) காட்டில் புகைக்காத விறகாய் முதிரைக் கட்டையை எடுத்து எரித்தல், சங்கேதச் சொற்கள் ஆகியன இயக்க நடைமுறைகளாகக் கூறப்படுகின்றன.  

   இரவுக் காவலில் கொட்டில்களைச் சுற்றி வரும்போது  எஸ்.எம். ஜி என்று சங்கேதச் சொல்லைச் சொல்லுதல், பதிலுக்கு பொருத்தமான அன்றைய சங்கேதச் சொல்லைச் சொல்லுதல் அல்லாவிடில் சந்தேகப்படுதல். “அன்றைக்கு ஒன்பதாம் அணியில கரடி போக சங்கேத மொழியைக் கேட்டிருக்கிறான் சென்ரிக்காரன். அது பேசாமற் போக திரும்பக் கேட்டிருக்கிறான். பிறகு விளங்கீற்று கத்திக்கொண்டு ஓடிற்றான்.” (பக்.68)

   பண்பான வார்த்தைப் பிரயோகங்களுக்கு மாறாக தூஷண வார்த்தை பேசியதற்காக தண்டனை வழங்கப்படுகின்ற சந்தர்ப்பமும் கூறப்படுகிறது. சுகுமார் தூஷணம் பேசியதற்காக இரவு சில மணித்தியாலங்கள் கேபிளில் ஏறி நிற்கும்படி பணிக்கப்படுகின்றான்.

“முதலில நல்ல பழக்க வழக்கங்களைப் பழகுங்கோ. சண்டியர் கூட்டத்தையாடா இயக்கத்தில வளர்க்கிறம். ஒழுக்கமில்லாத ஓர்மம் வீரமாடா? அதுக்கு வேற பேர் சண்டித்தனம், காடைத்தனம், றவுடித்தனம் எண்டுவரும். ஒழுக்கமுள்ளவனிட்ட ஓர்மம் இருந்தால்தான்ரா அது வீரம்”(ப.62)

   ஏற்கெனவே கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, ரவியின் ‘குமிழி’ நாவல்களிலும் போராளிகளின் பயிற்சிக் களங்கள் விபரிக்கப்பட்டிருக்கின்றன. போராளிகளின் பயிற்சிக் காலங்களில் நித்திரைக்கு மிகக் குறைந்த நேரம் ஒதுக்கப்படுகிறது. நித்திரைக்கு நேரம் கிடைத்தல் பெரிய அதிஷ்டமென எண்ணுகிறார்கள்.

“இந்தப் பயிற்சி முகாமில் நித்திரை என்பது சாதாரண விடயமில்லை. இந்த உலகத்திலேயே ஆகப்பெரிய அதிஷ்டம் நித்திரையாகத்தான் இருந்தது. அதுவும் இப்பவெல்லாம் இரவில் ‘அலேட்’ விசில் ஊதத் தொடங்கிற்றாங்கள்.  அதனால இரவில் விசிலுக்கு எழும்பி ஓடவேண்டியும் அதுக்காக அடிவாங்க வேண்டியும் குறித்த நேரத்தில் வராமை, பொருள் தவறியமை, என்றதுக்காக இரவுத்தண்டனை வாங்க வேண்டியும் இருந்தது. இந்தக் காலத்தில பார்த்தால் நித்திரை என்பது ஒரு வரம்.” (பக். 40-41)

   இவ்வாறான மிக நுட்பமான இயக்க நடைமுறைகள் இந்நாவலில் பதிவு பெற்றுள்ளன. ஒருவன் போராளியாக உருவாகின்றபோது எவ்வகையான பயிற்சிகளையும் மனநிலையையும் பெற்றிருக்க வேண்டும் என்பதும் இவற்றுக்கூடாக எதிர்பார்க்கப்படுகிறது.

   இந்நாவலில் மிக அதிகமான பாத்திரங்கள் வந்தாலும் சுகுமாரும் அக்கா பாத்திரமும் மனத்தில் நிறையும்படி வார்க்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு அடுத்ததாக கதைசொல்லி இனியவன் என்ற பாத்திரத்தைக் குறிப்பிடலாம்.

   சுகுமார் மற்றவர்களுக்கு உதவக்கூடியவனாகவும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டவனாகவும் இருக்கின்றான். பயிற்சிக் காலத்திலேயே மற்றவர்களால் நேசிக்கப்பட்ட பாத்திரமாகவும் சில சந்தர்ப்பங்களில் தன்னையே வருத்திக்கொண்ட பாத்திரமாகவும் வார்க்கப்பட்டுள்ளான். சக தோழன் ஒருவனுக்கு பயிற்சியின்போது காலின் காயம் ஏற்பட்டபோது பலவேளைகளில் அவனுக்கு உதவி செய்கிறான். இதனால் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்கிறான். இயலாத நண்பனுக்காகத் தண்ணீர் நிரப்புவதிலும் பங்கெடுக்கிறான், வேதநாயகம் மற்றொரு நண்பனை இழிவுபடுத்திக் கதைத்தபோது கோபம் கொண்டு வாய்த்தர்க்கம் புரிந்தபோதும் பொறுப்பாளர்களுக்கு குற்றம் செய்தவரைக் காட்டிக்கொடுக்காமல் நண்பர்களுக்காகத் தண்டனைகளைத் தானே ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறான பண்புடைய பாத்திரமாக சுகுமாரை ஆசிரியர் படைத்திருப்பார்.

   இயக்கத்திற்கு வந்தவர்களிடம் பல காரணங்கள் இருக்கின்றன. புண் நாகேந்திரன் பாதருக்குப் படிச்சவன். அப்படிப்பை நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தவன்.

“அந்தத் துறவைவிடவும் இந்தத் துறவு அர்த்தமுள்ளதெண்டு நினைக்கத் தொடங்கினன். அது மக்களுக்காக எண்டால் இதுவும் மக்களுக்காகத்தானே, மலைப்பிரசங்கத்தில யேசு சொல்லுறார் கனி கொடாத மரங்களை வெட்டி நெருப்பில போடவேண்டும் என்று. இப்ப இந்த மக்களின்ர பாதுகாப்பு இப்ப உள்ள இளம் தலைமுறையின்ர கையிலதான். அதில நானும் ஓராளாய் இருக்ககேக்க மலட்டு மரமா இருக்ககேலாதுதானே? பாதிரிக்குப் படிச்சால் மக்களுக்கு ஆண்டவனைப் பற்றிப் போதிக்கலாம். இதில ஆண்டவன்போல அவர்களைக் காப்பாற்றலாம். இப்பிடியெல்லாம் யோசிச்சன்.  சூசையப்பர் வாள் வச்சிருக்கேல்லையே சாத்தான்களை விரட்ட. நான் துவக்கு வச்சிருப்பன் சாத்தான்களை விரட்ட எண்டு நினைச்சன். வந்திட்டன்.” (பக்.111-112)

   சுகுமார் பெற்றோருடன் இருந்தபோது உழைப்பதற்கு எடுக்கும் பிரயத்தனங்கள் இக்கதையில் கூறப்படுகிறது. மரக்கறி வியாபாரம் செய்தல், சைக்கிள் கடையில் வேலை செய்தல், பத்திரிகை விநியோகம் செய்தல், சுருட்டுச் சுத்தச் செல்லுதல் ஆகியவை கூறப்படுகின்றன.

“நான் உழைக்கிறதுக்கு வழி தேடினன். சயிக்கில் கடையிலையும் நிண்டுகொண்டெல்லே ஒரு தொழிலத்தேடோணும். கடைசியில ஒரு மார்க்கம் பிடிபட்டிது. ஈழநாதம் பேப்பர் வைமன் ரோட்டில இருந்து வடமராட்சிக்குக் கொண்டுபோக ஆள் வேணுமெண்டு அறிஞ்சன். காலமை இருட்டோட மூண்டரைக்கு அங்க நிக்கோணுமாம். விடியிறதுக்கு முன்னம் வடமராட்சிக்குக் கொண்டுபோய்க் குடுக்கோணும். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபா தருவாங்கள். ஈழநாதத்திற்குப் போய்க் கதைச்சன். அந்த வேலையைத் தந்தினம். வாய்ச்சுப்போச்சு, தொடக்கத்தில நாலைஞ்சு நாள் ஏலாமல்தான் இருந்திது. காலெல்லாம் செம வலி வலிச்சிது. மரக்கறி வியாபாரத்தை விட்டன். தூரத்துக்கு சயிக்கில் ஓடிப்போட்டு வந்து மரக்கறிகட்டத் தோதுவரேல்லை. இரவில சுருட்டுச் சுத்தப் போறபடியால் மரக்கறியை எடுத்துவைக்கவும் ஏலாது.” (ப.96)

சுகுமார் தன்னைப் பற்றிக்கூறும்போது,

“மூன்றரைக்கு எழும்பினால் நல்லூர் வைமன் ரோட்டுக்குப் போய் பேப்பர் கட்டி வல்லைவெளியால் உழக்கி வடமராட்சிக்குப் போய், பிறகு வேகமாய் வந்து, சொல்லி வைச்ச இடத்தில மரக்கறி அல்லது தேங்காய் கட்டிச் சந்தையில குடுத்திட்டு பிறகு வந்து சைக்கிள் கடையில நிண்டு மாய்ஞ்சு பொழுதுபட திரும்பி சுருட்டுக் கொட்டிலுக்குப் போய்ப் பத்துப் பதினொண்டு வரைக்கும் வேலை செஞ்சு படாத கஷ்டப்பட்டன்” (ப.100)

   தான் ஏன் இயக்கத்துக்கு வந்தேன் என்பதனை பின்வருமாறு கூறுகிறான்.

“நீ யோசிச்சுப்பார். ஆனையிறவுத் தோல்விக்கு அடிப்படவனே காரணம். அடிபடப்போகாதவன்தான் காரணம். சண்டைக்குப் போனதாலேயோ அறுநூறுபேர் செத்தவங்கள். நாங்கள் சண்டைக்குப் போகாததாலதான் செத்தவங்கள். வாழ்க்கை அவலங்களுக்குச் சிங்களவனோ காரணம்? நாங்களுந்தான் காரணம். இப்பிடியெல்லாம் யோசிக்க இருக்கேலாமல் போயிட்டுது.”  (ப.113)

   இந்நாவலில் வருகின்ற அக்கா பாத்திரம், சுகுமார் தன் கதையைச் சொல்லி விட்டஇடத்திலிருந்து தொடர்வதாக அமைந்துள்ளது. அக்கா தன் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறாள். குடும்பத்தின் மீது அக்கறையுடன் செயற்படுகிறாள் என்பது மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தின் இன்பங்களையும் துன்பங்களையும் சுமந்து கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கிறாள். கனவுச்சிறையில் ராஜி என்றொரு பாத்திரத்தை தேவகாந்தன் படைத்திருப்பார். கோசலையில் அம்மா என்றொரு பாத்திரத்தை ரஞ்சகுமார் படைத்திருப்பார். குணா கவியழகன் இங்கு அக்கா என்ற பாத்திரத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் பெண்கள் எல்லாம் வரலாறு முழுவதும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். குடும்பங்களின் சுகங்களை, துக்கங்களை, இயலாமைகளை, ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.  

“நாலு பொடியளுக்கு ஒரேயொரு பொம்பிளைச் சகோதரம் அக்கா. அதால அக்காவிலதான் பாசம். அவளுக்கும் என்னில பாசம்தான். சைக்கிள் கடைக்காரன் தொடக்கத்தில முப்பதுரூபா தருவார். சொந்தமா உழைச்சதில அதே பெரிய காசாத்தான் இருந்திது. தம்பியாக்களுக்கு கொப்பி பென்சில் எண்டு எதிலும் குறைவிடுறதில்லை. அம்மாட்டக் காசைக் குடுப்பன். கொஞ்சநஞ்சம் வாற சில்லறைக் காசை அக்காட்ட உண்டியலுக்க போடக் குடுப்பன். அதுக்கு உண்டியலுக்குப்போட காசு குடுத்தா படு புழுகம். அது ஆறாம் வகுப்போட பள்ளிப்படிப்பை விட்டு. அம்மா சந்தைக்குப் போறதால சமையல் வீட்டலுவல் எல்லாம் அக்காதான். அக்கா கோழி வளத்திது. முட்டை விற்கும். எனக்கும் இரகசியமா அவிச்சுத்தரும். சிலவேளை அதை நான் இரகசியமா தம்பியாக்களுக்குப் பாதிபாதி குடுப்பன். என்ர உழைப்புப் பெரிய உழைப்பில்லை. ஆனாலும் இப்ப குடும்பத்தில மத்தியானச் சாப்பாடு, இரவுச் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. காலமையில தம்பியாக்களுக்கு ஒவ்வொரு சங்கிலிபணிஸ் அக்கா குடுக்கும். ஆடு வளர்த்தம். ஆட்டுப்பாலில ஒரு தேத்தண்ணி. அதுதான் மற்றாக்களுக்குச் சாப்பாடு, பழசு ஏதாவது மிஞ்சியிருந்தால் அதக் குழைச்சு ஒரு திரளை தின்னுவம்.” (ப.73)

   அக்காவுக்கு நல்ல சட்டை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்ற விருப்பத்தில் கடைக்கு அழைத்துச் செல்கிறான். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு எத்தனை ஆசைகள் இருந்தும் வாங்குவதற்குப் பணப் பற்றாக்குறை இருக்கும். அந்த நினைப்பை முகம் காட்டிக்கொள்ளாது.

“நான் வியந்து பாக்கிறதுபோல பாத்து, நீ பாத்த சட்டைக்குள்ள இதுதான் நல்லாயிருக்கடி. உனக்கு போட நல்லா அமைஞ்சு வரும் எண்டன். கடைசியில அக்கா அந்தச் சட்டையை வேண்டுறதாக முடிவெடுத்திச்சு. அதுக்குள்ள மேல ஒரு பொம்மையில போட்டு வைச்சிருந்த எடுப்பான சட்டையை அக்கா பிடிச்சுப் பிடிச்சுப் பாத்துக்கொண்டிருந்திச்சு. கடைக்காரன் எடுத்த சட்டைய பையில போட்டுக்கொண்டிருக்க. அக்கா இதப்பிடிச்சு வைச்சுக்கொண்டு கேட்டிச்சு, கடைசி தொளாயிரம் போடமாட்டியளோ எண்டு. எனக்குத்தூக்கி வாரிப் போட்டுது, இதுகிட்ட எங்கயாம் இப்ப தொளாயிரம். அவன் இல்லைத்தங்கச்சி ஆயிரத்து நூறுக்குக் குறையாது. எண்டிட்டான். பையில போட்டுத்தந்த சட்டைக்கே பில் போட்டான் கடைக்காரன். அறுநூற்றி இருவத்தஞ்சு ரூவா. எடுத்த சட்டையைப் வாங்கீற்றுப் படியிறங்கிறன். அக்கா அந்தச் சட்டையப் பிடிச்சுப் பாத்துக்கொண்டிருக்கு. பிறகு நான் கூப்பிட இறங்கி வந்திது, உனக்கு அந்தச்சட்டை பிடிச்சிருக்குப்போல எண்டன். ஓமடா திறமான சட்டை. ஆனா, உந்த விலைக்கு வாங்கேலுமே. எண்டிச்சு. முதலே பாத்திருந்தா அப்பற்ரைய வாங்காமல் இத வாங்கியிருக்கலாம் எண்டன். சீ. அப்பாவைப் பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போய் வாறது. மாத்துறதுக்கு சாறமுமில்லை. அவருக்குக் கட்டாயம் வாங்கத்தான் வேணும். அக்கா சொல்லிச்சு. (ப.94)

   எமது சொந்த வாழ்வில் நடக்கின்ற யதார்த்தபூர்வமான சம்பவமாக இக்காட்சி அமைந்திருக்கின்றது. அவள் தன் குடும்பத்தவர்களில் வைத்திருக்கக்கூடிய அன்பும் அக்கறையும் தனக்குரிய தேவையைக்கூட தன் குடும்பத்தவர்களுக்காகப் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களும் காட்சிப் படிமமாக வேறு இடங்களிலும் இந்நாவலில் விரிகின்றன. இவ்வாறான கதைசொல்கின்ற நடையை பல படைப்பாளிகள் அழகாக எடுத்தாண்டுள்ளார்கள். நான் மீளவும் மீளவும் வியப்பது அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகளிலும் அ.இரவியின் காலமாகி வந்த கதைகளிலும்தான். இவ்வாறான கதைசொல்லல் நடை குணா கவியழகனை ஒரு தேர்ந்த படைப்பாளியாகக் காட்டுகிறது.

   தகப்பன் பற்றிக் கூறும்போது,

“அப்பாக்கு இன்ன வேலையெண்டு இல்லை. கூலிவேலைக்குப் போவார். சுருட்டுச்சுத்தப் போவார். மனிசன் குடியும். ஊரில செத்தவீடெண்டால் பட்டினத்தார் பாட்டுப்படிக்க இவரைத்தான் கூப்பிடுறது. இப்ப அவருக்கு ஏலாது. பாரிசவாதத்தில கால் இழுத்திட்டுது. மூத்தது அக்கா. மற்றது அண்ணா. இரண்டு தம்பி சின்னாக்கள். அண்ணை பொறுப்பில்லாதவன். ஊர் சுத்துறதுதான் தொழில். நான் படிச்சுக் கொண்டிருந்தன். அம்மா சந்தையில காய்கறி வித்தா.  கொஞ்ச வருமானம். சாப்பிடுறதே பெரும்பாடு. அதில் படிக்கிறதென்னெண்டு. நான் பின்நேரத்தில சைக்கிள் கடையில உதவிக்கு நிண்டன். வகுப்பில பத்துக்கும் இருவதுக்கும் இடையில வருவன். அதுக்கு மேல வர ஏலாது. பணமில்லை. அதனால் ரீயூசனில்லை. பணமில்லை. அதனால வீட்ட படிக்கவும் மனமில்லை. பணமில்லாததால படிப்பு ஒரு பிரச்சினையாயுமில்லை. வீட்டில அதவிடப் பெரிய பிரச்சினைகள் முக்கியமானதாக இருந்திருக்கு.” (ப.72)

   தாயார் பற்றிய நினைவு வருகிறது. சென்ற முதல்நாளே கொட்டிலில் உறங்கியவாறு இனி இதுதான் நிலைமை என்று எண்ணுகிறான்.

“கால்மாடு போர்த்துவிட அம்மா இல்லை. இனிமேல் அம்மாவும் இல்லை. போர்வையுமில்லை. நினைக்க நெஞ்சின் இடப்புறத்தினுள் மிகச் சிறிய சைக்கிள் போல்ஸ் அளவில் ஓடியதுபோல் ஏதோ இருந்தது.” (பக்.17)

என்ற தொடக்கம் கதைசொல்லி பாத்திரத்தை அறிமுகப்படுத்துகின்றது. இந்நாவலில் சுகுமார், மற்றும் சுகுமாரின் அக்கா ஆகியயோரின் கதைகளே நாவலில் அதிகம் பேசப்பட்டாலும் இயக்கத்திற்கு வந்த பல இளைஞர்களின் குடும்பங்களின் நிலைமைகளும் பதிவாகியுள்ளன. அவ்வாறாக, அம்புறுசு என்ற இளைஞன் தனது கதையைச் சொல்லும்போது…

“வீட்டில பயங்கரக் கஸ்ரமடா. அப்பன் பயங்கரக் குடிகாரன். தொழிலென்று ஒண்டுமில்லை. எங்கயாவது கூலிக்குச் சிலநேரம் போவார். கிடைச்ச காசைக் கொண்டு போய்க் குடிப்பார். வீட்ட ஒவ்வொரு நாளும் வாறதெண்டுமில்லை. இரண்டு அக்காக்கள், அவையும் வீட்டிலதான். ஒரு தம்பியும் தங்கச்சியும் சின்னாக்கள். ஒரு நாளைக்குக் கஞ்சி குடிக்கிறதே பெரியபாடு. அக்கா நீத்துப்பெட்டி இழைக்கும், அதை விக்கிறதென்றாலும் பெரும்பாடு. எங்க விக்கிறது. பக்கத்துக் கடைக்குக் கொண்டு போனால் இரண்டு ரூபா ஒரு ரூபா என்றுதான் கேப்பாங்கள். சீவியம் பெரிய கஸ்ரம்.”

“நான் மரக்காலை ஒன்றில் விறகு கொத்தப் போறனான். தூக்குக்கு இருபத்தஞ்சு ரூபா. பழக்கமில்லைத்தானே. இரண்டு தூக்குத்தான் கஸ்ரப்பட்டுக் கொத்துவன். அதுவும் ஒவ்வொரு நாளும் வேலையில்லை. விறகு முடிஞ்சாத்தான் முதலாளி கூப்பிடுவார். ஓவ்வொரு நாளும் காலமையில போய்ப் பார்ப்பன். விறகேத்த வாறாக்கள் சிலருக்கு ஏத்திவிட்டால் ஐஞ்சு ரூபா குடுப்பினம் கிட்ட உள்ள உத்தியோகக்காரர் சிலர் வந்தா முதலாளி சொல்லுவார். ‘அவனுக்கு பத்தது ரூபா குடுங்கோ வீட்ட கொண்டு வந்து போடுவான்’ என்று. சிலர் சம்மதிப்பினம். ஐஞ்சு ரூபா தாறதெண்டும் சொல்லுவினம். மயிலிட்டியில இருந்து இடம்பெயர்ந்த பிறகு உரும்பிராய் அகதி முகாமுக்கு வந்து இப்பிடித்தான் சீவியம். ஓவ்வொரு நாளும் உலை கொதிக்க  வைக்க உலகப் படாதபாடு. அவனுக்கு மீண்டும் கண்ணில் நீர் முட்டியது. கொஞ்ச நேரம் சும்மாயிருந்தான். நாங்கள் ஒன்றும் கதைக்கேல்ல. கொட்டில் முழுவதும் நிசப்தம் (பக்.59-60) என்று உணர்வுபூர்வமாக இந்நாவலில் பதிவாகியுள்ளது.

   இந்நாவலில் சமூக விமர்சனம் என்பது குடும்பங்களின் நிலைமை பற்றிச் சொல்லும்போது வெளிப்படுகிறது. மனிதர்களின் சுயநலமும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இங்கு சொல்லப்படுகின்றன. மனிதர்கள்தான் இந்த வாழ்க்கையைப் பொல்லாதது ஆக்கியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வது மனிதத்தனம் என்பதற்குப் பதிலாக புண்ணியம் என்றுதான் சொல்லி வைக்கிறார்கள். அதனால் சுயநலமும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

“ஒருத்தன் கஷ்ரப்பட்டால் அவனுக்கு உதவி செய்! இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடு! எழும்பி நிக்கிறவன் விழுந்தவனைத் தூக்கு! எண்டு சொல்லிக் குடுக்கமாட்டாங்களாம். ஏனிதுக்குள்ள புண்ணியத்தைச் சேர்த்து அதை யாவாரம் ஆக்கிறாங்கள். மனிசனை எதில கூடுதல் லாபம் எண்டு அலையப் பழக்கிறாங்கள். மனிசத்தனத்தை யாவாரம் ஆக்கிப்போட்டாங்களே! தாய் பிள்ளைக்குப் பால் குடுத்தால் தாய்க்குப் புண்ணியம் எண்டா சொல்லிக் குடுக்கிறியன். இல்லையே. தாய்மை எண்டுதானே சொல்லுறியள். அதுமாதிரி இருக்கிறவன் இல்லாதவனுக்கு குடுக்கிறது மனிசத்தனமெண்டாவது சொல்லுங்களன். தாய்மை எண்டது மகத்துவம் ஆனதுபோல மனிசத்தனமெண்டதும் மகத்துவமானதா ஆகட்டுமே….. நான் உறைந்துபோய் இருந்தேன். குற்ற உணர்வு ஒருபுறமும் மறுபுறம் ஏதோ முடிச்சுக்கள் அவிழ்வதாயும் இருந்தது.” (ப.88) இவ்வாறு கதை சொல்லி குறிப்பிடுவது சமூகம் தொடர்பான விமர்சனமாக உள்ளது.

   ஈழக்கதைகளின் தனித்துவத்தில் ஒன்றாக மொழிநடையைக் குறிப்பிடலாம். இந்நாவலிலும் சில பிரதேச வழக்குச் சொற்கள் வருவதை அவதானிக்கலாம். நக்கல், மண்டுதல், தலைமாடு, கால்மாடு, சொட்டைத்தனம், புருடாவிடுதல், முறாளாய் இருக்கோ முதலானவை தமிழ்நாட்டு வாசகர்களுக்கு புரிதற் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டானியலின் எழுத்துக்கள் தமிழ்நாட்டு வாசகர்களிடத்தில் இவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்தியவை மனங்கொள்ளத்தக்கது. ஆனால் உயிர்ப்பான அந்த வார்த்தைகள் கதையோட்டத்தில் வருவதே சிறப்பானது.

   இலக்கியச் சிறப்புமிக்க நடையினையும் ஆங்காங்கு வெளிப்படுத்தியிருப்பார். இவை நாவலின் அழகியல் உணர்வை எடுத்துக்காட்டுகின்றன.

 “கத்தியால் வெட்டியெடுக்கக்கூடிய இருள்” (ப.15)

“வானத்தில் நிலவு ஏணைமாதிரித் தூங்குது. இதில் ஏறிப்படுக்க எத்தனை பேருக்குத் தெரியும்?” (ப.66)

“வானம் மனசுக்கு இதமான ஒரு விடயமில்லையா? இளகின மனங்களுக்குத்தான் அப்பிடி அதிகப் பணம் உள்ளவர்களுக்கு அப்படியில்லை” (ப.66)

   இதேபோல் வர்ணனைப் பகுதி ஒன்றையும் எடுத்துக்காட்டலாம். முகாமில் வரிச்சு மட்டையால் அமைக்கப்பட்ட இருக்கையிலிருந்து இரவு  வானத்தைப் பார்த்தபடி நண்பர்கள் உரையாடுகிறார்கள். இதனாலேயே ஆரம்பத்தில் ஏணைப்பிறை என்ற தலைப்பை குணா கவியழகன் இந்நாவலுக்கு வைத்திருக்கவேண்டும்.

“வளர்பிறை அற்புதமாய் குழந்தையின் ஏணைபோலத் தெரிந்தது. எல்லாரையும் தாலாட்ட வானம் ஏனோ ஏணை கட்டி வைத்திருக்கிறது. குழந்தையின் பராக்கிற்காக மின்மினிகள் எண்ணி முடித்திடவா முடியுமதை? மின்மினிகளை ஒளித்து விளையாட்டுக் காட்டுகின்றன வெண்முகில்கள். அவற்றை அள்ளிக் கையில் சுற்றிக்கொண்டால் அருமையாக இருக்கும் போலயிருக்கிறது. வாழத்தெரிந்தவன் அந்த ஏணையில் படுத்துப் பரவசம் அடையலாம். யார் வேண்டுமானாலும் எத்தனைபேர் வேண்டுமானாலும் எங்குள்ளவர் வேண்டுமானாலும்…” (ப.65)

   புதிய கதைக்களத்தையும் மக்களின் கதைகளையும் மட்டுமல்லாமல், பிரதேச வழக்குச் சொற்களையும் அழகியல் உணர்வுபூர்வமான சொற்றொடர்களையும் பொருத்தமான வர்ணனைகளையும் பயன்படுத்தியுள்ளமை நாவலோடு வாசகரை ஒன்றிக்க வைத்துள்ளது.

   எனவே, ஒரு போராட்ட அமைப்புக்குள் இருந்து எழுதப்பட்ட படைப்பாக நஞ்சுண்ட காடு அமைந்திருக்கின்ற அதேநேரம் மக்களின் வாழ்வியல் துன்பியற்பாடுகளும் அப்போராட்டத்திற்குத் தம்மை அர்ப்பணித்த இளைஞர்களின் பார்வையிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அமைப்பு சார்ந்து எழுதும்போது அமைப்பின் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்துவதாகவோ ஏனைய அமைப்புக்களின் குறை குற்றங்களைப் பூதாகரமாக வெளிப்படுத்துவதாகவோ அமையாமல் வாழ்க்கைக் கோலங்களை எமது வாழ்வனுபவங்களுக்கு மிக நெருக்கமாக யதார்த்தபூர்வமான படைப்பாக குணா கவியழகன் தந்திருக்கிறார். இதனாலேயே ‘நஞ்சுண்டகாடு முழுவதும் ஒரு வகையான நெருஞ்சிமுள்வலி பரவிக் கிடக்கின்றது.’ (என். செல்வராசா, ஒரு போரிலக்கிய நாவலின் உயிர்மீட்பு, 22 ஒக் 2015) என்று குறிப்பிடப்படுகிறது. போருக்குள்ளான வாழ்வையும் வாழ்வதற்கான தியாகத்தையும் நஞ்சுண்டகாடு வாசகர் மனங்களில் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.  

நன்றி: ஜீவநதி, ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ் -2, சித்திரை 2023

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.