ஈரானிய-அமெரிக்க உடன்பாடு வெள்ளியன்று சுவிஸர்லாந்தில் கைசாத்திடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது (15.6.2026).
ஆனால், ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் இப்பொழுது கையெழுத்திட்டானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது (16.06.2026). 

உடன்படிக்கைக்கு முன்னர், அமெரிக்கா ஈரானுக்கு தந்த நெருக்குதல்கள் பல.

தரைவழி தாக்குதலுக்காக தனது விமானங்கள் கப்பல்களில் இருந்து, ஆயிரக்கணக்கான துருப்புகளை இறக்குவது உட்பட ஈரானின் நாகரிகத்தைக் கற்காலத்துக்கு அனுப்பி வைக்கப் போகின்றேன் என சபதமிட்டு, தனது அணு ஆயுதப் பாவிப்பு முறைமை ஈறாக, அனைத்து மிரட்டல்களையும் சம்பிரதாய பூர்வமாக ட்ரம்ப் ஈரானுக்கு விடுக்காமல் இல்லை.

இருந்தும், ஈரான் இப்பயமுறுத்தல்களுக்கெல்லாம் மசிந்ததாக தெரியவில்லை. செறிவூட்டப்பட்ட அணு துகள்களை (யுரேனிய துகள்களை) ஈரான், அமெரிக்காவிடம் பவ்வியமாக ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது ஈரானுக்குள்ளேயே அவற்றை அழித்து விட வேண்டும் என்ற நிபந்தனையையும் அது நிராகரித்திருந்தது. மேலும், ஹோமூஸ் நீரிணையானது, எந்தவொரு ஈரானின் சுங்க கட்டுப்பாட்டு வரிகளுக்கும் ஆட்படாது, கப்பல்கள் சுதந்திரமாக நடமாட ஈரான் இடமளிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் பில்லியன் டாலர் கணக்கான சொத்துக்களை, மீள கையளிப்பது தொடர்பில் அமெரிக்கா மேலும் ஆலோசனை நடத்த ஒன்றுமில்லை என்பது போன்ற அமெரிக்காவின் நிலைப்பாடுகள் ட்ரம்பால், ஈரானுக்கு அறிவிக்கப்பட்டே இருந்தன.

இச்சூழ்நிலையில்தான், ஆரம்பத்தில் பாகிஸ்தானும், பிந்திய ஒரு கட்டத்தில் கட்டாரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கின. (அமெரிக்காவின் தூண்டுதலால்?)

இதனை தொடர்ந்தே, அமெரிக்காவின் விட்டுக்கொடுப்புகள் மெதுமெதுவாக இடம்பெற துவங்கின என்பதும், உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடுவது என்பது நடக்கக்கூடிய ஒரு விடயம்தான் என்பதும் வெளிப்பட ஆரம்பித்தன.

2

ஈரானின், உயர்மட்ட பாதுகாப்பு சபையும், ராணுவ தலைமை பீடமும் அறிவித்துள்ள அறிக்கையின் பிரகாரம், உடன்படிக்கையானது ஹோமூஸ் நீரிணை குறித்தும், தாக்குதல்களின் நிறுத்தம் குறித்தும், முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும், அணு செறிவாக்கல் பொருத்தும் நேரடியாக அல்லது மறைமுகமாக கதைப்பதாயிருந்தன. உடன்படிக்கையானது இரு கட்டங்களில் நடந்தேறும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாயிற்று.

தாக்குதலானது, உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், மத்திய கிழக்கின் பல்வேறு யுத்த முனைகளிலும், நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்நிபந்தனையானது, லெபனானையும் உள்ளடக்கும் எனவும் உடன்படிக்கை கூறியது.

முன்னர், இஸ்ரேலின் தாக்கும் உரிமையானது உடன்படிக்கை பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டு இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால், தற்போதைய உடன்படிக்கைகளின் பிரகாரம் இத்தகைய இஸ்ரேலின் அடாவடித்தனம் உடன்படிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

இஸ்ரேலானது, தான் இவ் உடன்படிக்கையின் பங்குதாரர்களில் ஒருவர் இல்லை எனவும், அதனால் தனது லெபனான் மீதான தாக்குதல்களை (ஹிஸ்புல்லா) விட்டு கொடுக்க முடியாது என கூறி, இதனை ஒப்புவிக்கும் விதத்தில் சில தாக்குதல்களை அது லெபனான் மீது, இந்த உடன்படிக்கையின் பின்னால் தொடுக்கவே செய்திருந்தது.

ஹோமூஸ் நீரிணையை பொறுத்தமட்டில், அமெரிக்கா தற்போது விதித்துள்ள அனைத்து முற்றுகைகளையும் உடனடியாக நீக்கிவிடும் என்றும் ஹோமூஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாடும் ஈரானிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஹோமூஸ் நீரிணையானது கப்பல்களின் போக்குவரத்துக்காக திறந்துவிடப்படும் என்றும் உடன்படிக்கை கூறுகின்றது. மேலும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் (24 பில்லியன் டாலர்) 12 பில்லியன் இப்போது விடுவிக்கப்பட்டு மிகுதி தொடர்பில், அதாவது, ஈரானின் அணுத்திட்டங்கள், யுரேனியம் செறிவாக்கல் தொடர்பில் 60 நாட்கள் காலப்பகுதிக்குள் மேலும் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் உடன்படிக்கை கூறுகின்றது.

இருந்தும் உடன்படிக்கையின் ஷரத்துகள் பொதுதன்மை கொண்டதாகவும், அவை, நாடுகளுக்கு நாடு, ஏற்ற விகிதத்தில் வியாக்கினம் கொள்ளப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அமெரிக்கா நினைக்கும் விதத்தில் அமெரிக்காவும் ஈரான் நினைக்கும் விதத்தில் ஈரானும் இதனை பொருள் கோடல் செய்யலாம். அதாவது, போர்ச் சூழல், இன்னமும் முற்றாக அகன்றதாக இல்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.

உடன்படிக்கையின் பிரகாரம் இஸ்ரேலின் நிலைமைத்தான் தர்மசங்கடமாகி உள்ளது. ஆனால், உடன்படிக்கையை மீறி, தன் அடாவடித்தனத்தை இஸ்ரேல் தொடரும் நிகழ்வுகளும் ஆங்காங்கே இடம்பெறாமல் இல்லை (15.6.2026). மொத்தத்தில், உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர், வரும் 60 நாட்களும் முக்கியமானவையாக இருக்கும்.

இதேபோல், ரஷ்ய -சீனாவின் நலன்களும், இவ்வகையில் கவனிக்கத்தக்கவையாகவே இருக்கின்றன. முதன் முறையாக, சீனா, இஸ்ரேலைக் குறி வைப்பதும், இவ் உடன்படிக்கையின் பின் ஆரம்பித்துள்ள புதிய நிகழ்வுகளாகும்.

3

உடன்படிக்கையானது, இப்படி செயல்திட்டம் பெற்றதில், ஈரானின் மண்டியிடாத, போர்க் குணம் எவ்வளவு முக்கியமானதோ, அதனைப் போன்றே, ரஷ்யா-சீனா-ஈரான் போன்ற நாடுகளின் நவீன ஏவுகணைகளின் பாதுகாப்பும் விஸ்தரிப்பும் முக்கியமானது. இதனைப் போன்றே சீனம், நான்கு நாட்களுக்கு முன் விடுத்த எச்சரிக்கைகளும் அமெரிக்காவை இப்படி வழிக்கு கொண்டு வர செய்த காரணிகள்தாம் எனக் கூறுவதில் மிகை கிடையாது.

இப்போரின் போது, முதன் முறையாக, சீனம் தனது வாயைத்  திறந்து, தனது, கடுமையான எச்சரிக்கைகளை, 48 மணி நேரத்தில், இருமுறையில், அமெரிக்காவுக்கு நேரடியாக விடுவிக்க நேர்ந்தது குறிப்பிடதக்கதாகின்றது (10.6.2026). சீனாவின் எச்சரிக்கைப்படி, யுத்த நிறுத்தம் ஒன்று உடனடியாக அமுலுக்கு வரப்படாப் பட்சத்தில், விளைவுகள் மிக பாரதூரமாய் அமையும் என அது எச்சரிக்கை விடுத்தது. இவ் எச்சரிக்கைகள், அமெரிக்காவின் “ஈரானை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற ட்ரம்பின் எச்சரிக்கையின் பின்னணியிலேயே விடுக்கப்பட்ட ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது. அதாவது, ஓர் அணுஆயுத பிரயோகிப்பு என்பது, பின்னணியில் இருந்து செயல்பட்ட போதே, இவ்எச்சரிக்கை சீனாவால் விடுக்கப்பட்டதாயிற்று.

சீனம், இவ்வகையில், இவ்வாறு வாயை திறக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாகவே இருந்தது. மேலும் சீனத்தின் இவ்வகை எச்சரிக்கைகள், கடுமையான இத்தகைய தொணியில் இதற்கு முன்னர் விடுக்கப்பட்டதாகவும் இல்லை. இவை, ட்ரம்புக்கு புதியவகை தலைவலிகளை ஏற்படுத்துவதாய் இருந்தது.

இஸ்ரேலின், லெபனான்-காசா மீதான கொடூர தாக்குதல்கள் தொடர்ந்தேறும் ஒரு சூழ்நிலையில், அதாவது, இப்படியாய் இஸ்ரேலால் தொடரப்படும் தாக்குதல் ஏற்படுத்தும் நெருக்கடிகள், ஈரானை ஓர் வழிக்கு கொண்டுவந்துவிடும், என்று முற்றாக நம்பப்பட்ட சூழ்நிலையில்தான், சீனம் இப்படியாக, இடைநடுவே புகுந்ததாக காணப்பட்டது.

எனவேத்தான், இனிவரப்போகும் 60 நாட்களில், இஸ்ரேல் என்னென்ன அடாவடித்தனங்களில் இறங்கி (அமெரிக்காவின் மறைமுக தூண்டுதல்களுடன்) உடன்படிக்கையை சிதைக்க முயலும் என்பதும் இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

4

அமெரிக்காவின், மத்திய கிழக்கின் 22 தளங்கள், ஈரானால் தாக்கப்பட்டு விட்டன என்பதும், 70 சதவீத ஈரானிய ஏவுகணைகள், தமது இலக்குகளை அவற்றின் இலக்குகள் மாறாமல், சரியாக சென்றடையவே செய்தன என்பதும் உலகம் இன்று கண்டு கொண்ட ஓர் அதிசயமானது. (பெரிதும் பேசப்பட்ட இஸ்ரேலின் அல்லது அமெரிக்காவின் ஏவுகணை தடைகளைத் தாண்டி!).

மறுபுறம், அன்று, வியட்நாமின் போர்குறித்து, தனது ஆலோசனையை வெளியிட்ட கிசிஞ்சர், போர் முடிய நான்கு வருடங்கள் இருக்கும் முன்னரே அமெரிக்காவானது இப்போரில் இருந்து உடனடியாக வாபஸ் பெற்று விடுவது நல்லது எனத் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவரது கூற்று: “ஆனால், அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க காங்கிரசும் இப்புள்ளிக்கு வந்து சேர, ஒரு நான்கு வருட காலத்தை எடுத்து கொண்டனர்” என அவர் சேர்த்து கூறுவார்.

இதுபோலவே, இன்று, ஈரானிய போர் தொடர்பில், வெளிப்படுத்தப்படும் இன்றைய உண்மைகள், மேற்படி போரில், அமெரிக்காவின் வெற்றி என்பது மிகக் கடினமானது எனக் கூறப்பட்டாலும் (ஜனாதிபதி கிளின்டன் உட்பட ஏனைய அமெரிக்க உலக புத்திஜீவிகளின் கூற்றுகளைப் பார்க்கவும்) போரானது, இரு நாடுகளிடையேயும் ஏற்படுத்தியுள்ள சொத்துக்களின் சேதமும், 42 அமெரிக்க விமானங்களுக்கு மேலான அழிவும், அதன் நூற்றுக்கணக்கான ட்ரோன்களின் அழிவும் (சில, ட்ரோன்கள் 30 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டவை), என்பதும் ஈரானை பொறுத்தமட்டில், கொமெய்னி உட்பட 40 முக்கிய தலைவர்களின் படுகொலையும், ஈரானின், பாடசாலை சிறுசுகள் கூண்டோடு அழிபட்ட கொடூரக் கொலைகளும் நடந்தேறவே செய்தன என்பதை உலகம் கண்டது. இவற்றை விட முழு உலகமுமே, எண்ணெய், எரிவாயு இன்றி, பரிதவிக்கும் காட்சியும் ஏற்படுத்தப்பட்டது. இவை, இந்த யுத்தம் ட்ரம்பின் வடிவில் தந்த வரப்பிரசாதங்களானது.

ஆகவே, கேள்வி, அமெரிக்காவின் இவ் யுத்தத் திட்டமானது ஆதியுடன் அந்தமாய் முன்னதாகவே கலந்துரையாடப்படவில்லையா – ஆழமாக யோசிக்ப்படவில்லையா – அல்லது அனைத்து முடிவுகளும் சீர்தூக்கி பார்க்கப்படவில்லையா என்பதேயாகும். இச்சூழ்நிலையிலேயே, கிசிஞ்சரின் கூற்றும், கூடவே, இன்றைய செயற்கை புலமைகளின் (AI) பங்களிப்புகளும் அரங்கேறுகின்றன.

5

செயற்கைப் புலமைகளின் (AI) சாதனைகள் இன்று வானைத் தொடுவதாக மாத்திரம் இருக்கவில்லை – மாறாக சராசரி மனித வாழ்விலும் செயற்கைப் புலமை இன்று புகுந்து விளையாடுவதாக இருக்கின்றது.

கவிதை எழுதுகின்றது. ஓவியம் வரைகின்றது. இசை கோர்க்கின்றது. சத்திர சிகிச்சை செய்கின்றது. பாலம் கட்டுகின்றது. கப்பல்கள் ஓட்டுகின்றது. விண்வெளி செயற்கை கோள்களை இயங்க செய்கின்றது. ஆனாலும், இங்கே குறிப்பிடப்படும் தொழில் முறைகள் இச்சாதனைகளில் ஒரு சிலவே.

முக்கியமானது, நாட்டின் பாதுகாப்பில், ஆட்சி முறையில், வெளிவிவகார கொள்கையில், போர்;முனைகளில் இது என்ன பங்கு வகிக்கின்றது என்பதே.

நவீன யுத்தங்கள், ட்ரோன்களால் கட்டமைக்கப்படுகின்றன என ஒரு வசதி கருதிக் கூறப்பட்டாலும், இவற்றின் புதிய பரிமாணங்கள் அளவு கடந்தவை ஆகின்றன.

முற்றிலும் புதிய நடைமுறைகள், செய்மதிகளின் நேரடி பங்கேற்பு, விண்வெளி ஏவுகணைகளின் அட்டகாசம் - நீரிலும் நிலத்திலும், வானிலும் இந்த செயற்கைப் புலமையின் ஆட்சியுடைமை - இவையும் செயற்கை புலமையின், நவீன யுத்தப் பங்களிப்பின் ஒரு சிலவாகும்.

இச்சூழலில்தான், மறைகரத்தின், AI பாவிப்பு முறையும் அரங்கேறுகின்றது.

காலனித்துவ காலந்தொட்டு, தொழிநுட்ப வளர்ச்சிகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆதிக்க சக்திகள், இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகளை உள்வாங்க, பின்நிற்க போவதில்லை என்பது தெளிவு.

நவீன தொழிநுட்ப வளர்ச்சி முறைகளையும், அவை நடைமுறைப்படுத்திய காலத்துக்கு ஏற்ற கயமைகளையும் முன்னெடுத்து, உலகை அடிமைபடுத்திய காலனித்துவத்தின் ஆட்சி முறை, இறுதியில், நேற்றைய மனுக்குலத்தாலேயே வெற்றி கொள்ளப்பட்டது. இவை, நேற்றைய நிகழ்வகள்தாம், ஆனால், இத்தகைய  ஒரு  பின்னணியிலேயே, கிசிஞ்சரின் கூற்றும், AI பொறுத்த இன்றைய விமர்சனங்களும் தலையெடுக்க ஆரம்பித்து உள்ளன.

6

உக்ரைன் போரின் மிக ஆரம்ப கட்டத்தில், கிசிஞ்சர், போருக்கு எதிரான தனது கருத்தை கறாராக தெரிவிக்காமல் இல்லை, ஆனால், பின்னர் வந்த காலங்களில், தனது கருத்துக்களை அவர் மாற்றி கொண்டதாக ஊடகங்கள் கோரஸ் பாடின. இதற்கான வாய்ப்பும் வசதியும் பல கூறுகளால் வழங்கப்பட்டதும், அவரது வாழ்நிலையும் (100 வயது) வசதிகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டியதாகின்றது.

இன்றைய G-7 மாநாட்டில், செலன்ஸ்கி, புட்டினுடன் பேச வேண்டியது  ஒரு  கட்டாயம் என ஐயேராப்பிய யூனியனும், ட்ரம்பாலும் கூட்டாக முன்மொழியப்படுகின்றது. (15.6.2026). இப்பின்னணியில்தான், செயற்கைப் புலமை மீதான விமர்சனங்களும், கிசிஞ்சர் போன்றோரின் கூற்றுகளும் முக்கியத்துவப்படுகின்றன.

Fareed Zakaria, அண்மையில் செயற்கைப் புலமைக்கு எதிராகவும் மனித புலமையின் முக்கியத்துவம் குறித்தும் உரை ஆற்றினார். (Bard College: 25.5.2026).

செயற்கைப் புலமையானது, அனைத்து திறமைகளுடன் இருந்த போதும், அவை, விரிசல்களை, பின்னடைவுகளை உள்ளடக்காமல் இல்லை – ஆனால் மனித புலமை, சமயங்களில் இத்தகைய விரிசல்களை தாண்டி செல்கின்றது. மேலும், செயற்கை புலமையானது, இறுதி கணிப்பில், யாரோ ஒரு மனிதனாலேயே வடிவமைக்கப்படுகின்றது என்ற உண்மையும் எளிதில் கடந்து செல்ல முடியாததாகின்றது.

Fareed Zakariaவின் உரை முழுவதும் மனித புலமையைப் போற்றுவதாகவும் செயற்கைப் புலமைகளின் பின்னடைவுகளை உயர தூக்கி பிடிப்பதாகவும் இருந்தது.

உண்மைத்தான். இது   ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். உக்ரைன் போரும், ஈரானிய போரும் இத்தகைய திருப்பு முனைகளை ஒரு வகையில் பிரதிபலிப்பதாயுள்ளது என்பதும் வேறு பாரிய சிந்தனைகள் இச்சூழலில் தேவைப்படுகின்றன என்பதையும் இவ்விடயங்கள் அழுத்தி கூறுவதாய் அமைகின்றன.

இச் சூழ்நிலையிலேயே, Fareed Zakaria அவர்களின் உரையானது, தற்செயலானதா அல்லது நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுவதாய் உள்ளது.

7

மகா பாரதத்தின் கதை மிக சுவாரசியமானதுதான். கதையின் ஒரு பகுதியில், குரு ஷேத்திர போர் முடிந்தவுடன், ஈற்றில் கிருணனிடம் வினவப்படுகின்றது. போரின் உண்மை வீரன் யார் - அது அர்ச்சுணனா–கர்ணனா–அல்லது வீமனா என.

“இல்லை. அது சகுனியேயாகும்” என கிருஷ்ணன் கூறுவதாக கதை அமைகின்றது. கௌரவரையும் பாண்டவரையும் ஒருங்கே தீர்த்துக்கட்ட, திட்டிய தீட்டமே சகுனியினுடையது எனவும் அது எதற்காக என்ற சகுனியின் பின்புலத்தை வர்ணிப்பதாகவும் கதை, ஓடுகின்றது.

ஆனால், கேள்வி – மகாபாரத்தின் உண்மை சகுனி யார்? சகுனியா அல்லது கிருஷ்ணனா என்பதே கேள்வியாகின்றது.

இவ்விடத்திலேயே, Deep Stateஇன் முக்கியத்துவமும் வந்து சேர்கின்றது. ஆழ் அரசின் மறைகரம் என்பது யாது? அது எவ்வாறு செயல்படுகின்றது என்பது சமயங்களில் ஆழ நோக்கப்பட வேண்டியதாகின்றது.

முதலாளித்துவமானது, தூக்கில் தொங்கவிடப்படும் போதும் அல்லது அவ்வாறு கூறப்படும் போது, அது தான் தொங்கும் தூக்கு கயிற்றை விலை பேசி கொண்டிருக்கும் என்பது ஸ்டாலினின் கூற்று.

ஈரான் போரும், உக்ரைனிய போரும் எதிர்பார்க்க முடியாத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது என்றால், போருக்கு முன்னதான முடிவுகளில், செயற்கை புலமைகளின் தாக்கம் இல்லயா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. அதாவது, இவை இந்த ஆழ் மறைகரத்தின் தொழிற்பாடு என்றால், இதில், செயற்கை புலமையானது, சம்பந்தப்பட்டவில்லையா என்று கேள்வியாகின்றது.

இத்தகைய  ஒரு  பின்னணியிலேயே, Fareed Zakariaவின் உரையும் சம்பந்தப்படுகின்றது.

8

முன்னர் நாம் குறித்தப்படி, ஆழ் அரசின் மறைகரம் (Deep State) தனது ஜீவிதத்துக்கு அல்லது ஆதிக்கத்துக்குத் தேவைபடும் அனைத்தையும் (மனுக்குலம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களை) தனது அருவருக்கத்தக்க, பிரமாண்ட வாயால் உறிஞ்சி வைத்து கொள்கின்றது.

செயற்கை புலமையையும் (AI)இ இப்படி தனது ஆதிக்கத்துக்காக எப்படி அது உறிஞ்சி வைத்து கொள்கின்றதோ, அப்படியே இன்று செயற்கைப் புலமையின், எல்லைப்பாடுகள் பொறுத்தும் அது உணர்திறன் உடைய ஒன்றாகவே இருக்கின்றது. இவ் எல்லைப்பாடுகளையே, ஈரானிய போரும், உக்ரைனிய போரும் இன்று சுட்டிக்காட்டும் உதாரணங்களாகின்றன.

எனவே, Fareed Sakariaவின் உரை தற்செயலானது என கூறுவதற்கில்லை–அது திட்டமிட்டதேயாகும். விடயம், மாறும் ஓர் உலகில், எதிர் - எதிர் சக்திகளிடமும் இத் தொழிநுட்பங்கள் அகப்பட்டு போவதுதான். இதனையே, பாரதி எனும், மகா கவிஞன், ஒரு கட்டத்தில் உணர்கின்றான் எனவும் நாம் கூறத்  துணியலாம்.

9

ஈரானிய-அமெரிக்க உடன்படிக்கையானது,  ஒரு மூச்சு விடும் சந்தர்ப்பத்தை உலக நாடுகளுக்கு இன்று ஏற்படுத்தியே உள்ளது.

இனி, அடுத்து வரும் 60 நாட்களில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள், தத்தம் நலன்களை முன்னெடுக்கும் வழிவகைகளை ஆராயும். இதில், முக்கியமாக, இஸ்ரேலும் அடக்கம்தான். உலக மாறுதல்கள், மற்றும் மத்திய கிழக்கின் புதிய முகத்தின் தோற்றம் - இவற்றுக்கான கட்டியம் கூறலை, இதற்கான பிரதிபலிப்புகளை இவ் ஒப்பந்தம் முன் மொழிந்தாலும், இது இச்சந்தர்ப்பத்தில் இன்னமும் நிச்சயமாக கூற முடியாது, உள்ளது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில், இவ் ஒப்பந்தம் குறித்த, ஜனநாயக கட்சியினரின் விமர்சனம் கூட, ஆழ் அரசின் அடிவருடிகளால், அரங்கேற்றப்படக்கூடிய ஒன்றே. ஏனெனில், இது உருவாக கூடிய மக்கள் எதிர்ப்பை சமாளிக்க பயன்படும் என்ற ரீதியில், இத்தகைய ஜனநாயக கட்சியினரின் விமர்சனங்கள், இதே மறைகர ஆழ் அரச சக்திகளால் வரவேற்கப்படும்.

ஆக, செயற்கை புலமையுடன், மனித புலமையும் கைகோர்ப்பதும், உடன்படிக்கைகள் தோன்றுவதும் ஆழ் அரசுகள் விரும்பும் விடயமாகிறது – தான் கட்டாயப்படுத்தப்படும் போது.

இருந்தும், மனிதனின் மறுபக்கம் என்று ஒன்று உண்டு. சுயநலமே வாழ்வின் வழி, என்பதனையும் தாண்டி, பிரமித்தியூஸ் காலம் தொட்டு, ஆயிரக்கணக்கான வருடங்களாக அவன் செயல்பட்டு வந்துள்ளான்.

இச் செல்வங்களை உள்வாங்குவதும், மேற்படி மூலவர்களின் ஆக்கங்களை ஆழ்ந்து கற்றலும், அர்ப்பணிப்புடன் செயல்படுவதும், இவ் ஆழ் அரசுக்கு எதிராக செயல்படக்கூடிய மக்களின் தேவைபாடாகின்றது. ஏனெனில், புலமைகளுடன் இணைந்தாற்போல் செயல்படக்கூடிய கயமைகளை இனங்காண இவை தேவையுறும் முன்நிபந்தனைகள் ஆகலாம். இங்கேயே பாரதியின் வேரும் தென்படுவதாக இருக்கின்றது, என்றும் கூற துணியலாம்.

இச்சூழலில்தான், இந்த ஆழ் மறை கரத்தின் ஆசிர்வாதங்களுடன் G-7 மகாநாடு அரங்கேறுகிறது. தொடர்ந்து, அவர்களின் அடுத்த கட்ட நகர்வும் (பிளான் - Bயும்) அரங்கேறுகிறது.

சீனம், ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர் என்று முதன் முறையாக ஐரோப்பிய யூனியனின் தலைமை மாது குற்றம் சாட்டியுள்ளாள். மறுபுறத்தில், ட்ரம்ப்-ஐரோப்பிய யூனியனின் ‘பகைமை நாடகம்’ முடிவுக்கு வந்தது போல் படுகின்றது. இது, உலகு, புது யுகத்தில் நுழைவதாயும் பிளான் – B , அறிமுகப்படுத்தப்படுவதையும் எமக்கு காட்டுவதாயுள்ளன. (இதே காலத்தில்தான் சீனாவில், World Governance என்ற தனது வெள்ளை அறிக்கையையும் (White Paper) கட்டவிழ்க்க துவங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது (18.6.2026).

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.