5
இதேபோல், பழமையின் செழுமைகளில் இவன் ஆழ ஈடுபாடு கொண்டிருந்தாலும் அது நவீன அரசியலில் இவன் கால்பதிப்பதை தடுப்பதாக தோன்றவில்லை. அதாவது, பண்டைய அரசியல் சிந்தனைகளில் இருந்தும், மரபுகளில் இருந்தும் ஒப்பீட்டளவில் விடைபெற்ற இளைஞனாகவே இவன் தனது 23-25 வயதில் தோற்றம் தருபவனாக காட்சியளிக்கின்றான்.
இந்திய அறிவு சிந்தனைகளை ஆழ பாதித்த இரு சிந்தனை வட்டங்களை நாம் குறிப்பிடலாம். ஒன்று, தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் (1824-1883). மற்றது ராம் மோகன் ராய் போன்றோர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம சமாஜம். இது தாகூராலும் (1817-1905) பின்னர் சென்னாலும் (1838-1884) செழுமைப்படுத்தப்பட்டதாயிற்று. ஆர்ய சமாஜமானது உருவ வழிபாடுகளை நிராகரித்தும் உபநிடதங்களை ஏற்று சாதிபிரிவினைகளை நிராகரித்தும் பெண்களின் ஒடுக்குமுறையான-உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை எதிர்த்தாலும் தாகூர் போன்றவர்கள், இஸ்லாமிய, கிருஸ்தவ கருத்துக்கள் சமாஜத்தில் உட்புக கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். இதேவேளை, வேதங்கள் கூறியபடி பண்டை ஆரிய சமூகத்தை கட்டியெழுப்பிட வேண்டும் என தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் அபிப்பிராயப்பட்டனர். பாரதி இவ்விருவரில் இருந்தும் ஒருவகையில் வேறுபட்டு நின்றான், எனலாம்.
பங்கிங்காமின், (ஆனந்தமடம்) நாவலால் அவன் ஈர்க்கப்பட்டு, ‘வந்தே மாதரத்தை’ அவன் மொழிப்பெயர்த்திருந்தாலும் கூட, நாவலில் காணப்படும் சன்னியாசிகள் சார்பாகவும் மகமதிய சார்பின்மையுடனும் இயங்கியவன் அல்ல, அவன். அவனது பார்வை நாவலில் காணப்பட்ட பிரிட்டிஷாரின் எதிர்ப்புடன் ஒன்று சேர கூடியதாகவே இருந்தது. இருந்தும், ஒரு கட்டத்தில் பாரதி அப்பாதையை நிராகரித்து நவீன காலத்துக்குள் பிரவேசிக்கின்றான். (சன்னியாசிகள் மாத்திரம் காட்டுக்குள் கூடும் அரசியல் என்பதை நிராகரித்து).
இந்திய தேசிய விடுதலை இயக்கம் நவீனமய படுத்தப்படல் வேண்டும் என்ற நோக்குடன் இவன் ‘இரும்பை காய்;ச்சி உருக்கிடுவீரே’ என்றும் ‘சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்றும் ‘ஞாலம் நடுங்க வரும் கப்பல் செய்வோம்’ என்றும் ‘காசி புலவர்கள் பேசும் குரல் காஞ்சியில் கேட்க ஓர் கருவி செய்வோமே’ என்றும் இவன் பாட அந்த ‘ஆனந்த மட’ ஈர்ப்பு இவனை தடுத்ததாய் இல்லை. அதேவேளை, ‘கன்னியராகி நிலவினில் ஆடி’ என்று பாடவும் அவன் தயங்கினானில்லை. அதாவது கடந்த காலத்தின் செழுமையை நிகழ்கால யதார்த்தங்களுடன் இணைப்பதாகவே அவனது அரசியல் அன்று இருந்தது.
பிரம்ம சமாஜம் அல்லது ஆர்ய சமாஜம் என்பவை புத்தி ஜீவிகள் மத்தியிலேயே பிரபலம் பெற்று இருந்தது போல் இவனது கவிதைகள் இருக்கவில்லை. வெகுஜனத்துடன் இரண்டற கலக்கும் பண்பையே, இவன் அடிப்படையில் கொண்டிருக்கலானான். இத்தகைய அடித்தளங்களை காட்டும் அவனது ‘தேடல்’ அமைந்த கூறுகள் வேறுபட்டதென நாம் கருதலாம். அதாவது, அவனது அரசியல் இப்படியாய் மாறுபட்டு ஒலிக்க அவனது வெகுஜன தொடுகையும், ஒரு காரணமாயிற்று எனலாம்.
6
“… வந்திருந்த வாலிபர் எல்லோரும் கூட்டமாய் சேர்ந்து ஸ்ரீ சுப்ரமணிய பாரதியின் வந்தே மாதர கீர்த்தனத்தை வாக்கியம் வாக்கியமாய் உச்ச ஸ்தாயியில் ஓத, மற்ற மாணவர்களெல்லாம்… அப்பாடலை கோஷித்துக் கொண்டு… இடையிடையே… பாரதியால் புதிதாய் கட்டப்பட்ட ‘ஜெய ஜெய பாரத, வந்தே மாதரம்’ என்ற வீர ரசம் சொறிந்த… கீர்த்தனைகளை கம்பீரமான குரலுடன் மயிர் கூச்செறியுமாறு வழி நெடுக பாடி சென்ற காட்சி பரம ரமணீகரமாய் இருந்தது…”. (பாரதி தரிசனம்: பாகம்:1 பக்கம்: 73)
சுருக்கமாக கூறினால், இவ் இளைஞனின் அரசியல் இப்படியாகத்தான் உருவெடுக்கின்றது. அதாவது, இவனது கவிதை தனித்து கிடக்காமல் மக்களோடு மக்களாய் பிண்ணி வெகுஜனங்களோடு, பிணைந்து எழும்ப முற்படுகின்றது.
இது மேற்படி இரு சமாஜங்களின் தொடுகையில் இருந்தும் வித்தியாசப்படுவதானது, முன்னரே கூறியப்படி இவ்விரு சமாஜங்களும் இந்திய புத்தி ஜீவிகளிடையே மாத்திரம் அன்று செல்வாக்கு வகித்தனவாக கூறப்பட்டன. இங்கே, இவ் இளைஞன் வித்தியாசமாக தன் அரசியலை உருவாக்குவதாய் உள்ளது.
7
பிரிட்டிஷாரின் நுணுக்கமான நகர்வுகளை எல்லாம் அவதானிக்கும் இவன், அவர்களது மறைகரங்களையும், தேர்ந்த திட்டங்களையும் சதிவலைகளையும் ஆழ புரிகின்றான். (இந்த பார்வை, எமது காலத்தைய இன்றைய அரசியலில் இல்லை அல்லது காண்பது அரிதானது என்பது புரியத்தக்கது).
ஒரு உதாரணம்: இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜான் மார்லியுடன், இந்திய தலைவர் கோக்லே அவர்கள் மிகுந்த நட்பாக இருந்துள்ளார். இது குறித்து இவ் இளவயது பாரதி எழுதுவான்:
“இந்த காங்கிரசை… என்ன எண்ணத்துடன் கோக்லே நடத்த விரும்புகிறார் என்பது தெரியவில்லை… கோக்லேயும் மார்லியும் சினேகிதர்கள்…. இவர்கள் ரஹசியங்கள் பேசுவதுண்டு… இவர் (கோக்லே) இங்கிலாந்தில் இருந்து திரும்பிய போது அந்த ரஹசியங்களின் உளவை தேசத்தாருக்கு வெளியிடவில்லை. மார்லி இந்தியாவுக்கு பெரிய பெரிய காரியங்கள் செய்யப் போகின்றார் என்று… பொதுப்டையாக… கோக்லே சொல்லுகின்றார்… மார்லியை நம்புங்கள் என்று உபதேசம் செய்கின்றார்…
மிஸ்டர் மார்லியின் காலத்தில் இதுவரை கிடைத்திருக்கும் சீர்திருத்தங்களாவன:
மகமதியர்களுக்கும், ஹிந்துக்களுக்குமிடையே உத்தியோகத்தர்களின் உதவியால் விரோதம் அதிகரித்திருத்தல்.
இதுவரை ஸாமானிய ஜனங்களை ராஜத் துரோகிகளென்று சிறைப்படுத்தி வந்ததை இப்போது மிகவும் சகஜமாக்கியிருத்தல்.
லாலா லஜபதிராயைத் திவாந்திரத்திற்கேற்றி அனுப்பிய புதுமை.
வாலிபர்கள் ராஜாங்க வி~யங்களைக் கவனிக்காதிருக்கும்படி மகா வஞ்சனையுள்ள சூழ்ச்சிகள் செய்திருத்தல்.”
(பாரதி தரிசனம்: பாகம்-2: பக்கம்-32)
இது கோக்லேக்கும் பாரதிக்கும் இடையிலான மிக ஆழமான வேறுபாட்டை காட்டுவதாய் உள்ளது. ஒருவர் ‘நம்புங்கள், நம்பங்கள்’ என்று கூறும் அரசியலையும் மற்றவர் பிரிட்டிஷாரின் நுணுக்கங்களை புதுவிதமாய் பார்க்கும் அரசியலையும் முன்னெடுக்கின்றனர். இவ்விரு அரசியல்களும், அன்று, மோதி கொள்வதாய் இருக்கின்றது.
8
போதாதற்கு இளைய பாரதியின் அரசியலானது, ஆட்சி முறைகளின் பரிணாமத்தையும் எடுத்தியம்புவதாகவும் இருக்கின்றது.அதாவது, வெறுமனே, மேலோட்டமான அரசியலாக இது இல்லாது, மனுகுலம் இதுவரை தாண்டி வந்துள்ள அரசியல் முறைமைகளின் பரிணாமத்தை இவ் இளைஞன் தன் இள வயதிலேயே உள்வாங்கி கொள்வதாகவே இருக்கின்றது. (இதேவேளை, மார்லி தொடர்பான இத்தகவல் எம்மை, எரிக் சோல்ஹேம் அல்லது மரண ஊசி கதாநாயகர்கள் குறித்து இங்கே மீட்டு பார்ப்பதை தடுப்பதாயும் இல்லை).
எழுதுவான்:
“மனித ஜாதி அநாகரீக நிலையில் இருந்து சிறிது சிறிதாக… நாகரீக பெருக்கம் கொண்டு மாறி வருகின்றதென்று அறிஞர்கள் நம்பிக்கை கொள்கின்றார்கள்… மனிதர்களின் முன்னோர் குரங்குகளாக இருந்தார்கள் என்றும் நம்பப்படுகின்றது…ஆனால்… அபிவிருத்தியையும், சிறப்பு பெறுதலையும் நோக்கமாக கொண்டு, ஒவ்வொரு நிமி~த்திலும் பெருமையும் நன்மையும் அதிகரித்து வருகின்றது… உலக நாகரீகம் முதிர்ச்சியடைந்த பின்னர் ரஷ்ய தேசத்து ஜார் சக்கரவர்த்தி… (தோன்றுகின்றார்). இவரது படுக்கையை காப்பதற்கு பிரமாண்டமான பொலிஸ் படையும் ஒற்றர்களும் நிற்கின்றார்கள். இப்போது… அமெரிக்கா முதலிய தேசங்களிலெல்லாம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே கலகம் முதிர்ந்து வருகின்றது… இதிலே தொழிலாளிகள் பலமடைந்து வருகின்றார்கள். இதன் பெயரில் அடுத்த ஆட்சிமுறை சோ~லிஸ ஆட்சியாக இருக்குமென்பது நிச்சயமாக தெரிகின்றது… சோ~லிஸ ஆட்சி என்பது… ஜனசங்கத்தார் தம்மை தாமே ஆண்டு கொள்வது… வாழ்க்கையில் ஹிதம் அடைவதற்குரிய பாதைகள் இப்போது அனேகருக்கு மறுத்து வைக்கப்பட்டிருப்பது போல அப்போது இராது.. எல்லோரும்… (பாரபட்சமின்றி)… ராஜாங்கத்தால் நடத்தப்படுவார்கள்… இது அனேகருக்கு வெறுப்பை உண்டாக்கலாம்… ஆனால் வெறுப்பு மாறி போய் விடும்… அதுபோலவே சோஸலீஸ ஆட்சி முறையும் நெருக்கமாகிவிடும் என்பதில் ஆட்சேபமில்லை… (இது) உலகம் அனைத்திலும் பரவிவிடும்… ஒரே விதமான ஆட்சிமுறை சாசுவதமில்லை… மாறுபாடே உலகத்தில்… அகற்ற முடியாத இயற்கை”
நியூ ஆசியா ஆர்டிக் ரிவிவ்யூ என்ற பத்திரிகை தலையங்கத்தை ஒட்டி எழுதப்பட்டதாக இவ் இளைஞன் எழுதுகின்றான்.
(பாரதி தரிசனம்: பாகம்-2: பக்கம்:268)
9
ஆனால், இது வெறும் தத்துவமாகவே காணக்கிட்டுகின்றது. நடைமுறைக்கு வரும் போது, இவன் ர~;யாவை ஆழ்ந்த அனுதாபத்துடன் நோக்குவதும், அங்கு ஜாருக்கு எதிராக இடம்பெறும் கலகங்களை உற்சாகத்துடன் வரவேற்பவனாகவும் இருக்கின்றான். மறுபுறம், இந்தியாவில், விடுதலை இயக்கமானது, தொழிலாள விடுதலையுடன் ஒன்றுசேர இணைதல் வேண்டும் என இவன் அபிப்பிராயப்படுவது ஒப்பீட்டளவில் புதிதாகவே இருக்கின்றது. இதனாலேயே, அவன் சர்க்கரை செட்டியாருடன் இணைந்து பிபின் சந்திர பாலரை, சென்னைக்கு வரவழைக்கின்றான். சர்க்கரை செட்டியார் பற்றிய குறிப்பு பின்வருமாறு இருக்கின்றது:
“1906-1908 காலத்தில் பாரதியாருடன் சுதேச விடுதலையில் ஈடுபட்டார். சென்னை கார்ப்பரே~னில் மேயராக இருந்தவர்… தொழிற்சங்கங்களை… போராட்டங்களை நடத்தியவர்… தமிழ்நாடு மற்றும் அகில இந்திய தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றியவர்”.
(பாரதி தரிசனம்: பாகம்-2: பக்கம்-304).
இதேவேளை பிபின் சந்திரபாலர் வங்காளத்தை சேர்ந்தவரானார். தொழிலாளிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய தொழிலாளிகள் ஒரு கிழமையில் 48 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய வேண்டும் என்பது இவரது அழுத்தமான கோரிக்கையாக இருந்துள்ளது. பாரதியை போலவே, இவரும் சுதேசிய போராட்டத்தை இந்திய தொழிலாளரின் வர்க்கப் போராட்டத்துடன் இணைய வேண்டும் என கருதினார். இவரை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில், தகுந்த உள் நோக்கங்களுடன், சர்க்கரை செட்டியாரும் பாரதியாரும் இயங்கினர் எனலாம். சுருக்கமாக சொன்னால், அன்றைய பிரிட்டிஷாரின் ஆட்சியில், இந்திய மிதவாதிகளின் அரசியலுக்கும் (கோக்லே முதல் காந்தி ஈறாக) நேர்மறையான ஓர் அரசியலை இவ் இளைஞன் தன் இளவயதில் ஏந்துபவனாகின்றான். மேலே கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் இவ் இளம் பாரதியின் அன்றைய அரசியலை தெளிவுடன் கோடிடுகிறது. ஆனால், இது முற்றும் முழுதான ஓர் பார்வையாகாது என்பதும் தெளிவு.
முடிவுரை:
ஓர் இறுக்கமான வழிகாட்டும் அமைப்பு இவன் காலத்தில், இவனை வழிநடத்த இருந்ததாய் இல்லை என்பது ஓர் பின்னடைவே. உதாரணமாக, கார்க்கியை வழிநடத்த, ஓர் லெனினது கட்சியும் அவரது தீர்க்கமான விமர்சனங்களும் இருந்தது போல், இவனது காலத்தில் அமைந்தது இல்லை எனலாம். இருந்தும், இவன், தன்னளவில் ஆற்றியுள்ள கருமங்கள் அல்லது முயற்சிகள் - இவனது அரசியல் - என்பவற்றை நிதானித்து நோக்கும் போது, அவை இன்றும் போற்றத்தக்கதாகவே இருக்கின்றது என்பது தெளிவு. இதன் அடியாக பிறப்பெடுப்பதே அவனது கவிதை என்றும் கூறலாம். இதுவே, இவ் இளைஞனின் அன்றைய அரசியலாகின்றது.
உசாத்துணை நூல்கள்:
1. சீனி.விஸ்வநாதன். காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி எழுத்துக்கள். தொகுப்பு 2, 3.
2. இளசை மனியன்-ஸி.எஸ்.சுப்ரமணியம் - பாரதி தரிசனம்- பாகம் 1 மற்றும் 2
3. சீனி.விஸ்வநாதன்: கால வரிசையில் பாரதி பாடல்கள்.