

சீனா, திபெத் பீடபூமியில், ஓர் 540 அடி உயரமான அணையை, கட்டி முடித்துள்ளதாக தகவல். இதன், நிலப்பரப்பானது, செங்குத்தான மலை தொடர்களையும், மிக மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதைவிட, சுவாசத்திற்கு தேவைப்படும் ஒட்சிசனின் அளவும் குறைவாகவே இங்கு காணப்படுகின்றது.
இக் காரணிகளை கவனத்துள் கொண்ட சீனா, முற்றும் முழுதாய் தானியங்கி ட்ராக்குகளையும் தானியங்கி புல்டோசர்களையும், மற்றும் தேவைப்படும் ஏனைய அனைத்து தொழில் முறைகளையும், தானியங்கி முறையில் (AI, 5G) Auto ரோபோக்களின் உதவியோடு, மனித கை சம்பந்தப்படா வகையில் அணையை கட்டி முடித்துள்ளதாக தகவல். மனிதர்களின் சம்பந்தமில்லாமல் இம்மாபெரும் அணையை நிர்மாணிப்பதில் சீனாவின் விஞ்ஞானிகள் வெறுமனே அலுவலக மேசையில் வரைபடங்களை கீறி, திட்டங்களை தீட்டுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனா அறிவித்துள்ளது.
இதனை போன்றே, நவீன விஞ்ஞான தொழிநுட்பங்களை முற்றும் முழுதாய் பயன்படுத்தி, சீனா Guangz Hou எனும் கப்பல் துறைமுகத்தையும் கட்டி முடித்துள்ளது. அமெரிக்காவின், மாபெரும் துறைமுகங்களை ஒன்றாக சேர்த்தாலும் இதன் கொள்ளளவு, அவற்றை மீறியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
லட்சக்கணக்கான, மாபெரும் கன்டெய்னர்களை ஏற்றுவதும் இறக்குவதும், அவற்றை ஒரு கச்சிதமான முறையில் வரிசை தவறாமல் அடுக்கி வைப்பதும், மீண்டும், AI தொழிநுட்பத்துடனும் தானியங்கும் நவீன விஞ்ஞான வசதிகளுடனும் சீனா உருவாக்கியுள்ளது. இரண்டொருவர் மாத்திரமே கம்பியூட்டர் மூலமாக இத்துறைமுகத்தை இயக்க செய்ய போதுமானவர்கள் எனவும் சீனா அறிவித்துள்ளது. இதனை போலவே, இன்னும் 52 துறைமுகங்களை நாடு முழுவதும் சீனா அமைத்திருப்பதாக கூறியுள்ளது.
மறுபுறத்தில், இத்துறைமுகங்களுக்குள் நுழையும் சீன கப்பல்களும் முற்றும் முழுதாய் தானியங்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 5G, AIமற்றும் ரோபோக்களின் துணையுடன் கப்பல்கள் ஒரு கட்டத்தில் முற்றும் முழுதாக தானியங்கும் கப்பல்களாக மாறுகின்றன. அவற்றை துறைமுகத்தினுள் செலுத்துவதும், சரியாக நிறுத்துவதும், நிறுத்தியதன் பின் பொருட்களை க்ரைன் மூலமாக ஏற்றுவதும் இறக்குவதும் அடுக்கி வைப்பதும் அனைத்தும் தானியங்கும் முறைகளே.
இதுபோலவே, வானிலும் சீனா, தனது கை வரிசையை காட்டாமல் இல்லை. நவீன ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Hypersonic முதல் ; DF-61 வரை). பின் நவீன லேசர் கருவிகள், இத்தியாதிகள், மற்றும் செய்மதி வலைப்பின்னல்கள், விண்வெளியில் நிலைகொள்ளும் மின் நிலையங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாகின்றது.
2
இத்தகைய சூழ்நிலையிலேயே, இன்று ஈரானியப் போர் தொடங்கியுள்ளது. இப்போதைக்கு 30 நாட்கள் கடந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது என்றும், அமெரிக்காவின் அதிகாரிகளான மார்க் ரூபியோ முதல் குருஷ்னர் வரை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர் எனவும் ட்ரம்ப் அறிவித்திருந்தாலும் ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நாங்கள் ஒரு பதினைந்து அம்ச திட்டத்தை பாகிஸ்தானுக்கூடு, ஈரானுக்கு வழங்கியுள்ளோம் என்பதையும் ஈரான் நிராகரித்து விட்டது (25.03.2026).
“அமெரிக்கா தன்னுடன் தானே கதைத்து கொண்டால்தான். நாங்கள் அதில் சம்பந்தப்படவில்லை” என ஈரான் கூறியது (26.03.2026). இப்படி இரு தரப்பினரும் ஆளுக்காள் முரண்பட்டு மறுத்து பேசுவது இப்போரின் உண்மை லட்சணங்களை அல்லது சரியான நிலவரங்களை அறிய தருவதாக இல்லை என்றே படுகின்றது.
3
போர் ஒன்றின் போது, முதலாவது பலிகடாவாக ஆகுவது ‘உண்மையே அன்றி வேறொன்றில்லை’ என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. பிரசார போரானது, வலிமை பெற்ற நாடுகள், உலகில் உருவாக்கி இருக்கும் தமது பிரசார வலைபின்னல்களின் ஊடாக பிரஞ்ஞையுடன் தமக்கு ஆதரவான பக்கத்தை முன்னெடுக்க பாவிக்கப்படுவதாய் இருக்கின்றது.
போரை வெற்றிக் கொள்ள இத்தகைய ஊடகங்கள் ஆற்றும் பிரசாரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.இதன் காரணமாகவே ட்ரம்ப் இன்று கூறுவது மிக பலமாக ஒலி எழுப்புவதாகவும், ஈரானின் கூற்று பலமிழந்து ஒலிப்பதாகவும் உள்ளது. இக்காரணத்தினாலேயே போலிகள்-உண்மைகளின் நிலவரம் சரியாக வெளிவராததாக இருக்கின்றது.
இரண்டாம் உலக போரின் போது, ஜெர்மனி தனது பிரசார பீரங்கிகளை யூதருக்கு எதிராய் திருப்பி விடுவதில் வெற்றிக் கண்டது. ஆனாலும், இது ஒரு புள்ளி வரையிலேயே செல்லுபடியாகும் என்பது நியதியாகின்றது.
உலக யதார்த்த சூழல்கள், முற்றும் முழுதாய் மாறும் போது இப்பிரசார பீரங்கிகள் பலமிழந்து போகின்றன. ஒரு கட்டத்தில், இப்பிரச்சார பீரங்கிகளின் தலையாய ஸ்தாபகரான கொயபெலஸ் மரணிப்பதும், ஹிட்லர் தனது குடும்பத்தாரோடு தற்கொலை செய்து கொள்வதும் மேற்படி மாறிய யதார்த்தங்களை சுட்டிக் காட்டுவதாய் இருக்கின்றன.
இலங்கையில் கூட, ‘துருவப்படுத்தல் அரசியலின்’ முக்கியத்துவம், இப்பிரச்சார பீரங்கிகளினாலேயே குறிப்பாக முன்னெடுக்கப்பட்டது. மகிந்த-கோட்டா-மைத்திரி-ரணில் ஆகியோரை பதவியில் அமர்த்த இந்த பிரச்சார பீரங்கிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. (இதில் தமிழ் ஊடகங்களும் பங்கேற்றது என்பதை குறிப்பிட்டு சொல்வது அவசியம்). ஆனால், சடுதியாக தோன்றிய ஜேவிபி அலையானது ‘இத்துருவப்படுத்தும் அரசியலுக்கு’ ஓர் முடிவு கட்டுவதாக இருந்தது.
ஆனால், இத் துருவப்படுத்தும் அரசியலானது, இதே பிரசார பீரங்கிகளினால், இன்று மீண்டும் கட்டி எழுப்பப்படுவதாக உள்ளது என்பதை மேற்படி பிரச்சார பீரங்கிகளை கவனமாக அவதானிப்பதன் மூலம் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
4
சீனாவின் வெற்றிகளும் வளங்களும் எந்தளவில் உயர்ந்துள்ளதோ, அதனை போன்றே இன்று ரஷ்யாவின் வெற்றிகளும், அதனைவிட ஒப்பீட்டளவில் குறைந்தளவில் இந்தியா போன்ற நாடுகளின் வெற்றிகளும் வளர்ச்சிகளும் இன்று காணக்கிட்டுவதாய் உள்ளன.
வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒரு முனை உலகு என்பது ஒரு கடந்த கால சமாசாரமாகிவிட்டது. பல்முனைக்கான ஓர் பாதையில் உலகு செல்ல தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
இச் சூழ்நிலையில், ஒரு 38 ட்ரில்லியன் டாலர்களை உள்நாட்டு கடன்களாக கொண்டுள்ள அமெரிக்கா, தன் சொந்த உற்பத்தியும் தொழிநுட்பங்களும், ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, சோபிக்காத, நிலையில் தள்ளாடுவதாக தெரிகின்றது. இதனிடையே உள்நாட்டு கலகங்கள் வேறு தோற்றம் கொள்ளுமாயின் யாது செய்வது என திண்டாடும் அமெரிக்காவின் முதலாளிகள் தமக்கு தெரிந்த வேறு வழிகளை பற்றி யோசிப்பது தர்க்கப்பூர்வமானதாகின்றது.
இத்தகைய ஓர் பின்னணியிலேயே, கொவிட் பெருந்தொற்று பிறப்பெடுத்து உலகில் அறிமுகமாகியது. கொவிட் பெருந்தொற்றானது உலகின் உற்பத்தி வலைபின்னல்களையும் விநியோக சங்கிலிகளையும் பிய்த்தெறிந்து நாசம் செய்வதை பொதுவில் கொண்டிருந்தாலும், அதன் முழு தாக்கமும் வீரியமும் சீனா போன்ற நாடுகளை மையப்படுத்தி திசைத்திருப்பபட்டிருப்பது அவதானிகக் கூடியதாய் இருந்தது.
இது முதல் சுற்று. ஆனால், இம்முதல் சுற்றானது, தள்ளாடும் அமெரிக்காவை முழுவதுமாக காப்பாற்றியதாக தெரியவில்லை. தடைகளை தூக்கியெறிந்த நாடுகள், மேலெழுவதற்கு வேறு வழிமுறைகளை கண்டறிந்த போது, இரண்டாம் சுற்றும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
எரிகுழாய்களின் வெடிப்பு (நோர்ட் ஸட்ரீம்) உக்ரைனிய போர் என்பவற்றை தொடர்ந்து பொருளாதார தடைகள் கட்டவிழ்த்து இறக்கிவிடப்பட்டன.
முழு உலக நாடுகளையும் பெரிதளவில் பாதித்த இப் பொருளாதார தடைகள், மென்மேலும் விநியோக சங்கிலிகளையும், உற்பத்தி வலைபின்னல்களையும் தொடர்ந்து நாசம் செய்தாலும் மீளவும் உலகம் விழித்தெழுவதாகவே இருந்தது. புதிய கூட்டுகள், புதிய உறவுகள் என என்றுமில்லாதவாறு உலகம் களைகட்ட தொடங்கிவிட்டது. இக்கூட்டுகளினிடையே, முக்கியமானதாக, சீனா-ரஷ்யா கூட்டும், புரிதல்களும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு செழிக்க தொடங்கி விட்டது.
இதனைப் போன்றே இந்தியா போன்ற ஏனைய நாடுகளின் நிலவரமும் மாறத் தொடங்கி இருந்தது. BRICS போன்ற புதிய அமைப்புகள் அல்லது புதிய கூட்டுகள் முளைவிட தொடங்கி இருந்தன. இவை இரண்டாம் சுற்றின் விளைவுகள். ஆக, இவ் இரண்டாம் சுற்று ஏற்பாடுகளும் தள்ளாடும் ஓர் அமெரிக்காவை காப்பாற்றியதாக தெரியவில்லை.
இச்சூழலில், தனது மூன்றாம் சுற்றை ஆரம்பிக்க அமெரிக்காவின் ட்ரம்ப் முன்வர தொடங்கினார். மனம் போன போக்கில் அவர் புதிய வரிவிதிப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்திய போது, உலகம் ஆரம்பத்தில் அதிர்ந்துதான் போனது.
சீனத்துக்கு, ஒரு நூற்றி முப்பது வீதமும் இந்தியாவுக்கு ஒரு ஐம்பது வீதமும் என்று வரிகளை விதித்த போது நாடுகள் பொறுமையாய் புன்னகை பூத்து கொள்வது தெரிந்தது. இதனை தொடர்ந்து உலகமானது மேற்கும்-கிழக்குமாக பிரிபடுவது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருந்தது. ஏனெனில், ஒரு புறத்தில், ஒரு கட்டத்தில், ட்ரம்ப் இறங்கி வர வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. வரி விதிப்புகளை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
அதேசமயம், பிரான்ஸ்-ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவுடனும் (2025) சீனத்துடனும் (2026) தனித்தனியாக வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் ஈடுபட்டன. சீனாவும் ஜெர்மனியும் பெப்ரவரி 2026இல் மாபெரும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. சீனா, ஜெர்மனியின் 120 விமானங்களை கொள்வனவு செய்வதாக ஏற்றுக் கொண்டது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்காவின் மூன்றாவது சுற்றும் இப்படியாக மண் கவ்வ அமெரிக்கா வேறு வழிமுறைகளை கண்டறிய நிர்பந்திக்கப்பட்டு போனது. இதற்கிடையில் செய்வதறியாது, திகைத்து போன ட்ரம்ப் புதிய வரைபட அரசியலை ஒரு சில நாடுகள் தொடர்பில் அறிமுகப்படுத்த தொடங்கினார்.
அவர் வெளியிட்ட இந்தியாவின் வரைபடம் முற்று முழுதான கா~;மீரை உள்ளடக்கி புதிய முரண்களை உருவாக்கும் நோக்குடன் (பாகிஸ்தானுடன்) படைக்கப்பட்டது. ஆனால், இவ்வரைபடத்தை இந்தியா ஒரு சிறிதும் சட்டை செய்ததாக தெரியவில்லை. இருந்தும், இவ்வரைபட அரசியலின் முன்னோடி இஸரேல்தான். 2025, ஜனவரியில், இஸ்ரேல் வெளியிட்ட இஸ்ரேலிய வரைபடமானது, சவுதி அரேபியா-ஜோர்தான்-எகிப்து-சிரியா-கட்டார்-ஈராக் ஆகிய நாடுகளின் பெரும் நிலப்பரப்புகளை இஸ்ரேலின் நிலங்களாக அறிவித்தன. இஸ்ரேலின் இப்புதிய வரைபடத்தை கண்ட மேற்படி நாடுகள் ஒதுங்கி விடுவது சாலவும் நன்று என்பதுபோல் ஒதுங்கியிருக்க தலைப்பட்டன. இப்பின்னணியிலேயே, இஸ்ரேல் காசாவின் மீது தனது அரக்கத்தனமான தாக்குதலை ஆரம்பித்தது.
மத்திய கிழக்கின் தலையாய சண்டியனாக காட்சி தந்த இஸ்ரேலுடனும் ஒரு மோதுகையை தவிர்க்கும் முகமாகவே மேற்படி வரைபடம் முன்யோசனையுடன் வெளியிடப்பட்டதா என்பது இன்று ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்வியானது. அதாவது, கொவிட் பெருந்தொற்று, பொருளாதார தடைகள், எரிகுழாய்களின் வெடிப்பு, உக்ரைனிய போர், புதிய வரிவிதிப்பு போன்ற அனைத்தும் உலகின் உற்பத்தி வலைபின்னல்களையும் விநியோக சங்கிலிகளையும் ஓரளவில் சிதைத்தாலும், இச் சிதைப்புக்கள் பெருமளவில் உலக சக்கரத்தின் சுழற்சியை பின் தள்ளுவதாக இருக்கவில்லை. புதிய ஒப்பந்தங்கள், புதிய கூட்டுகள் என உலகம் புதிய முகத்துடன் முன்னேறியதாக இருந்தது. வேறு வார்த்தையில் கூறினால், 38 ட்ரில்லியன் டாலர்களால் தள்ளாடும் அமெரிக்கா தனது தள்ளாட்டத்தை தொடருவதாகவே இருந்தது.
5
இத்தகைய ஒரு சூழலில்தான் காசாவில் வீசிய ரத்த வாடையின் தொடர்ச்சியை வெனிசுலாவிலும், தற்போது ஈரானிலும் அமெரிக்கா அமுல்படுத்துவதாயிற்று. அதாவது, குறிப்பிடத்தக்க அளவில் விநியோக-உற்பத்தி சங்கிலிகள் சிதைக்கப்பட முடியாத நிலையிலும், தொழிநுட்ப விருத்திகளையும் புதிய கூட்டுகளையும் உலகில் தடைசெய்ய முடியாத ஒரு சூழலிலும் போர் ஒன்றே வழிமுறையானது, ஆனால், இதற்கு சில முன் நிபந்தனைகளும் தேவைப்பட்டன. சர்வதேச சட்டங்களை கிழித்தெறிவதும், சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறி அவ் ஒப்பந்தங்களை கிழித்தெறிவதும், இம் முன் நிபந்தனைகளில் சிலவாகும்.
‘சர்வதேச சட்டங்களை கிடப்பில் போட்டு எனக்குரிய சட்டத்தை நானே தேர்வேன்’ என ட்ரம்ப் அறிவித்து நின்ற போது ஒரு சர்வதேச பொலிஸ்காரன், ஒரு சர்வதேசத்துப் பொறுக்கியாக மாறிக் கொண்டிருக்கும் சித்திரத்தை உலகம் வினோதமாய் பார்த்தது.
இச் சூழ்நிலையிலேயே, ரஷ்யா-சீனா போன்ற நாடுகள் இப்போக்கை தொடர விட்டால், இது, முழு உலகுக்கே பாதகமாக முடியும் என்ற ஓர் தீர்க்கமான முடிவுக்கு இறங்க வேண்டிய கட்டாயத்துள் தள்ளப்படுவன ஆகின.
6
‘உளவு சமிஞ்ஞைகளை ரஷ்யாவே ஈரானுக்கு வழங்குகின்றது’ என்று ட்ரம்ப் அறிவித்த போது புட்டின் மௌனமாய் சிரித்துக் கொண்டிருப்பதாகவே பட்டது. அமெரிக்க-ஐரோப்பிய மோதல்களை சாக்காக வைத்து ட்ரம்ப் நடத்திய நாடகத்தை, புட்டின் வெகுவாக ரசித்தது மாத்திரமல்லாமல், தானும் அந்நாடகத்தில் பங்கேற்று, அமெரிக்காவுடன் கூட்டு சேர்வதாக, தன் பங்குக்கு ஒரு நாடகத்தை மேடையேற்றினார்.
மறுபுறம், வெறுமனே உளவு அறிக்கைகளை ஈரானுக்கு அளிப்பதாக இல்லாமல், முழு வின்வெளி ஆதிக்கத்தையும் ஈரான் சார்பாக திருப்பி விடுதலில், ரஷ்யாவுடன் சீனா இணைந்திருப்பது இன்றைய வரலாறுதான்.
7
அமெரிக்காவின் பிரமாண்டமான விமானி தாங்கி கப்பல்களான ஜெரால் போர்டு மற்றும் ஆப்ரகாம் லிங்கன் ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டது பற்றிய தகவல்கள் உண்மையானால், இரண்டாம் நிலை கட்டளை பீடத்தின் இருப்பு என்பது நிரூபணமாகின்றது.
ஆனால், இந்த கப்பல்களை தாக்கிய ஏவுகனைகள் மாத்திரம் இங்கே முக்கியத்துவப்படுவதில்லை. இவ் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் விண்வெளி பாதுகாப்பு ராடர்களை, இக்கப்பல்கள் கொண்டிருப்பது வழமையாகின்றது. அதாவது, வின்வெளி செய்மதி வலையமைப்புகளை கொண்டு இ;க்கப்பல்கள் ஒரு மாபெரும் தொழிற்சாலையாக, படை அணியாகவே செயல்பட கூடியதுதான். கிட்டத்தட்ட 90 விமானங்களையும், ஒரு லட்சம் தொன் எடைகளையும், அணுசக்தியால் இயங்கக்கூடியதுமான, அனைத்து இலத்திரனியல் வசதிகளையும் உள்ளடக்கிய இக்கப்பல்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது உண்மை எனில், இதன் பின்னணியில் சீனா-ரஷ்ய கூட்டின் முக்கியத்துவம் அம்பலமாகின்றது.
28.3.2026 அறிக்கைகளின்படி, தாக்கப்பட்ட ஜெரால் போர்டு என்ற கப்பல் தற்போது, மத்திய கிழக்கு போர்முனையை விட்டகன்று, இப்போது, பழுது பார்;க்கப்படுவதற்காக க்ரோட்சியா துறைமுகத்தை அடைந்து விட்டதாகவும் தகவல், ஆனால், ட்ரம்ப், தனது விளையாட்டுக்களை இத்துடன் நிறுத்தியதாக தெரியவில்லை. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இஸ்ரேலை ஏவிவிட்டு ஈரானிலும், ஜோர்டானிலும், லெபனானிலும் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்தார்.
இச்சூழ்நிலையில்தான், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லெப்ரோவின் கூற்றுகளும் முக்கியமானதாகின்றன:
“எல்லா சமிஞ்ஞைகளும் மூன்றாம் உலக போர் ஒன்று தொடங்கி விட்டதை காட்டுவதாய் உள்ளன” (லெப்ரோ:24.3.2026).
சரியாக இரண்டு நாட்களின் பின், புட்டின் கூறினார்: “இந்த போர் எத்தகைய திருப்பங்களை உள்ளடக்கப் போகின்றது என்பது யாருக்குமே தெரியாது” (26.3.2026).
இச்சூழலில், ஈரானிய போர் வெற்றியின் மூலம், சீனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஓர் பலம் வாய்ந்த ஸ்தானம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த ட்ரம்ப், சீனத்துடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை திடீரென ஒத்தி வைத்தது ஆச்சரியமூட்டக்கூடிய நிகழ்வு அல்ல. அதாவது, பல்வேறு துருப்பு சீட்டுகளை கொண்டு, சீனத்தில் குதிக்க கனவு கண்டார் மனிதர். ஆனால், போரின் நிலவரமும், ஆப்ரகாம் லிங்கனின் நிலைமையும் அவரது முடிவை அவசரமாக மாற்ற வைத்தன. சீனத்துடன் ஒத்திவைத்த பேச்சுவார்த்தையை இப்போது உடனடியாக துவங்க வேண்டும் என அவசரபட தொடங்கி விட்டார், மனிதர்.
ஏனெனில், ரஷ்-சீன கூட்டானது, ஈரானிய விடயத்தில், மேலும் இப்படி தொடருமானால், மேலும் பல தோல்விகளை தாம் சந்திக்க நேரிடும் என்பதை புரிந்து கொண்டார். (சீனா, ஈரானுக்கு ர்லிநசளழniஉ நவீன ஏவுகனையை வழங்குவதாக தகவல்).
இதற்கிடையில், ட்ரம்பின் ஆலோசனை பிரகாரம் தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்த இஸ்ரேல், ஈரானுக்காக ரஷ்யா கட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் புஸ்சர் அணுவாலையை குறிவைத்து தாக்க தொடங்கியது. இங்கே, 200 தொடக்கம் 300 ர~;யர்கள் தொழில் புரிவதாக கூறப்படுகின்றது. இஸ்ரேலின் இறுதி தாக்குதல் அணுவளாகத்துக்குள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் மீது தமது இரண்டாவது ஏவுகணையையும் வெற்றிகரமாக ஏவிவிட்டதாக யேமன் அறிவித்தது. யேமானுக்கும், இஸ்ரேலுக்குமிடையிலான தூரம் கிட்டத்தட்ட 2000கி.மீ ஆகும்.
இந்த தாக்குதல்களினால், யேமன் போராளிகள் இப்போது பெற்றுள்ளது நவீன ரக ஏவுகணைகள் மாத்திரமல்லாமல், அவர்களுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்களையும் இது கோடிடுவதாய் இருக்கின்றது. ஏனெனில், இத்தகைய தாக்குதல்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை இதே வின்வெளி ஆதிக்கம் செயல்பட வேண்டும் என்பது தெளிவு.
யேமனுக்கு, ரஷ்யாவே ரகசியமாய் ஏவுகணைகளை வழங்கி வருவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால், மேற்படி தாக்குதலில் புட்டினும் லெப்ரோவும் கூறியது போல இப்போர் ஒரு புதிய பரிமாணத்தை காட்டுவதாக இருக்கும்தான்.
ஈரான் ர்லிநசளழniஉ (னுகு-17) ஏவுகணைகளை சீனாவிடம் இருந்து பெறுமிடத்து அமெரிக்காவின் நிலை மாறுபட்டதாக இருக்கும். எனவே, சீனாவின் பேச்சுவார்த்தையின் போது, ஈரானுக்கு நவீன ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்றும், ரஷ்யாவை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது முக்கியமானது எனவும் ட்ரம்ப், கலந்துரையாட எண்ணி இருக்கலாம். ஆனால், சர்வதேச பொறுக்கி என்று ஏற்கனவே பெயரெடுத்த விட்ட அமெரிக்காவின் இப்போதைய சித்திரம் இன்று அழிபட முடியாத நிலையில் உள்ளது. அதாவது, 38 ட்ரில்லியன் டாலர் கடன் பளுவுடன் தள்ளாடும் ஓர் அமெரிக்கா, மேற்படி சூழலில் “மேலும் மேலும் போர்” என்ற முடிவை நோக்கி போவது தவிர்க்க முடியாததாகின்றது, ஆனால், இது, புட்டின் கூறியது போல, பல திருப்பங்களை உள்ளடக்ககூடியதுதான். ரஷ்யா-சீன கூட்டு என்பது ஒருபுறமாய் இருக்கையில், மறுபுறத்தில், ட்ரம்பின் இத்திட்டங்களுக்கு எதிர்ப்புகளும் உள்நாட்டில் கிளம்பி உள்ளதாய் அறிக்கைகள் கூறுகின்றன. மறுபுறம் கொமேய்னியின் இறப்போடு, ஈரான் விழுந்து விடும் என்ற ட்ரம்பின் கருத்தில் இடி விழுந்ததாகவே தெரிகின்றது.
8
இந்தியாவின் முந்தைய வெளியுறவு செயலாளர் சிபலின் கூற்றும் வருமாறு:
‘ஈரான் கடந்த 40 வருடங்களில் தனது கட்டமைப்புகளில் பல மாற்றங்களை செய்துள்ளது. நவீன ஆயுதங்கள் நவீன உறவுகள் என்பவை இவற்றில் அடங்கும்’, ஆனால் இதனைவிட ஈரான் தனது இரண்டாம் நிலை கட்டளை பீடத்தை இப்போது வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இவ் இரண்டாம் நிலை கட்டளை பீடமானது மாகாணம் தோறும், பரந்துபட்ட ஒரு நிலையில் அமையப்பெற்றுள்ளது. தாங்கள் அழியும் பட்சத்தில், இவ் இரண்டாம் நிலை அதிகாரிகள் யாது செய்தல் வேண்டும் என தீர்க்கமான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தாங்கள் அழிந்தாலும், ஈரானை காப்பாற்ற, இம்முடிவுகள் உதவி செய்வனவாக உள்ளன.
வேறு ஒரு விமர்சகரின் கூற்றுப்படி, ஈரானின் 31 மாகாணங்களும் இப்போது ஒப்பீட்டளவில் தனித்து இயங்கி இவ் இரண்டாம் நிலை கட்டளை பீடத்தை இயங்க வைப்பதாக கூறுகின்றார். இக்கூற்றுகள், உண்மை நிறைந்தவையாக இருக்கலாம். ஏனெனில், ஈரானிய புரட்சி படையின் ஓர் இளம் அதிகாரி, புதிதாக தோற்றம் கொண்டு ஊடகங்களில் கூறினார்: “அமெரிக்கா ஈரானில் கால்பதித்து, நடத்தும் தரைவழி தாக்குதல்களை வரவேற்க ஈரான் காத்து கிடக்கின்றது” என கொமெய்னி மற்றும், தளபதிகள் என ஒரு கிட்டத்தட்ட 40 பேர் கொன்றொழிக்கப்பட்ட நிலையில் இந்நிகழ்வுகள் முக்கியமானவையாகின்றன.
9
எரிவாயு-எண்ணெய்-வாழ்க்கை செலவு என்பன இலங்கையில், ஈரானிய போரால் உயர்ந்தன என்பது போக, ஈரான் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலுக்கு இலக்கானது என்பது நிரூபணமானது. ஆனால், அதைவிட முக்கியமானதாய் இக்கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் (கிட்டத்தட்ட 40 பேர் என கூறப்படுகின்றது) தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா அல்லது சிகிச்சை பெறுகின்றனரா என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றது.
இச்சூழ்நிலையில்தான், ர~;ய துணை அமைச்சரின் வருகையும், இந்திய எண்ணெய் கப்பலின் வருகையும் இலங்கையின் நிலவரத்தை அப்பலப்படுத்துவதாய் உள்ளது (28.3.2026). அதாவது, இலங்கையின் நிலைமையானது ஓர் இருதலை கொள்ளி எறும்பின் நிலையுடன் ஒப்பிடலாம். ஒருபுறம், அமெரிக்க அழுத்தங்கள் (சர்வதேச நாணய நிதியம் உட்பட) தோன்றிட, மறுபுறம் ர~;ய அல்லது பிரதேச வல்லரசான இந்தியாவின் அழுத்தம் காணப்படுகின்றது. இவற்றில் எதை பெறுவது என்பது எதை விடுவது என்பது ஜேவிபி அரசு முகம் கொடுக்க வேண்டிய புதிய நிர்பந்தமாகின்றது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், ஈரானிய போர் தனது தாக்கங்களை உலகம் முழுவதுமாய் செலுத்தும் அதேவேளை, பிராந்திய வல்லரசும் ரஷ்யாவும் வெறுமனே பேசாமல் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகின்றது. இத்தகைய சூழலில், ஈரானிய போர் எதை நோக்கி செல்லக்கூடியது என்பது கேள்வியாகவே இருக்கின்றது.
முடிவுரை
ஆகவே, ஒரு 38 ட்ரில்லியன் டாலர் கடன் பளுவாலும் தள்ளாடும் அமெரிக்கா, உள்நாட்டு கலவர சாத்தியங்களைத் தடுப்பதற்காகத் தனது சொந்த உற்பத்தி திறனையும், விநியோக திறனையும் அதிகரிக்கும் கட்டாயத்தில் உள்ளது, ஆனால், தற்போதைய உலக முன்னேற்றத்தால், இப்பாதை அதற்கு நிரந்தரமாக மூடி உள்ளது.
உலகின் ஏனைய நாடுகள், தமது மூலதன விருத்தியாலும் தொழிநுட்ப அபிவிருத்திகளாலும் விநியோகத்திலும் உற்பத்தியிலும் கணிசமான பங்கினை வகிக்கின்றன. இதற்கு மிக நல்ல உதாரணம், நவீன காலத்து சீனமாகும். ஆகவே, போட்டி போட முடியாத அமெரிக்கா, உலகத்து உற்பத்தி சங்கிலியினையும், விநியோக சங்கிலியையும் பிய்த்தெறிவதே தெரிந்த முதலாவது வழிமுறையானது. இதற்காக, பல்வேறு தந்திரங்களையும் நாசங்களையும் அமெரிக்கா உலகில் ஏற்படுத்த பின்நிற்கவில்லை. இதனையே, ஓரளவில், விலாவாரியாக மேலே பார்த்தோம், ஆனால், இவை அனைத்தும், சாதகமாகாத ஒரு சூழலில், தனது ‘சர்வதேச பொறுக்கி’ எனும் பெயருக்கேற்ப ஏனைய நாடுகளின் மூலபொருட்களை இன்று அபகரிப்பதை தவிர அதற்கு வேறு வழி தெரிந்ததாயில்லை. ஈராக், சிரியா, வெனிசுலா என்று தொடரும் ஒரு நீண்ட பட்டியலில், தற்போது ஈரானின் பெயரும் பொறிக்கப்படுவதாகின்றது.
“எமக்கு தேவையானது, ஈரானின் எண்ணெய் வளமே” என்று நாகூசாது, ட்ரம்ப் அவர்கள், ஒரு அமெரிக்க பேட்டியின் போது, மிக அண்மையில் கூறி இருந்தார் (29.03.2026), ஆனால், இது ஈரானை மாத்திரம் குறிவைப்பதல்ல. ஆனால், முழு மத்திய கிழக்கையும் குறிப்பதேயாகும் என வல்லுனர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
இப்புள்ளியிலேயே, ரஷ்யா-சீனா கூட்டு, இன்று புதிதாய் விழித்தெழ வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ர~;ய-சீன கூட்டு என்பது கடந்த இரண்டொரு வருடங்களின் முன்பிருந்தே இயங்கி வருவதுதான் என்றாலும், தற்போது முகிழ்த்துள்ள இப் புதிய சூழலில், இக் கூட்டு, ஒரு புதிய பரிமாணத்தை பெற வேண்டி உளது. இதனை, இந்நாடுகள், தெளிவுற இன்று காண்பதாகவே உள்ளது. மாட்டை கடித்து, மனிதரை கடித்து, தம்மையும் ட்ரம்ப் கடிப்பதற்கு முன்னர் தாம் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதனையா இவற்றின் இன்றைய நடவடிக்கைகள், இன்று காட்டுவதாயுள்ளன?
அமெரிக்காவின் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்கள் தாக்கப்படுவதும், ஈரான் மிக கடுமையாக போரை எதிர் கொள்வதும் (கொமேய்னி முதலானோர் இறந்த பின்னாலும் கூட) பேச்சுவார்த்தைகளை கிடப்பில் போட்டு, திடமாக எதிர்ப்பதும், யேமன் புதிதாக இன்று ஈரானிய போரில் குதிப்பதும், ஏவுகணைகளை அது இஸ்ரேலுக்கு எதிராக ஏவி விடுவதும் உலகம் பார்த்திராத இன்றைய புதிய நிகழ்வுகளாகும். மேலும், இப்போரானது, உலகின் பல பாகங்களை நோக்கியும் இன்று விரைந்து விஸ்தரிப்பதாயும் உள்ளது.
இலங்கையில் இப்போர் ஏற்படுத்தியிருக்கும், வரலாறு காணாத வாழ்க்கை செலவு உயர்வுகளாலும், எண்ணெய்-எரிபொருள் நெருக்கடிகளாலும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது (புது வருட கொண்டாட்டத்தின் பின் இவை மேலும் கூடலாம் என்ற சாத்திய கூறுகள் உண்டு) இந்நெருக்கடியை வைத்து, ஓர் ஆட்சி மாற்றத்தை இலங்கையில் கொண்டுவந்து, மீண்டும் ஓர் இனவாத அரசை பதவியில் ஏற்றி, தமது நலன்களை முன்னெடுக்க திட்டங்கள் உண்டா என்ற கேள்வியும் எழுவதாகவே உள்ளது, ஆனால், இதுவும் கூட, கேள்விக்குரியதே. ஏனெனில், ஏனைய நாடுகள் இவ்விடயத்தில் (விடயம் இப்படி இருக்குமெனில்), வெறுமனே வாளாதிருக்க போவதில்லை என்பதனையே இன்றைய சம்பவங்கள் காட்டுவதாயுள்ளது. உதாரணமாக, ரஷ்யாவின் துணை வெளிநாட்டமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது (31.3.2026). இதற்கு சில நாட்கள் முன்னதாயும் ரஷ்யா தனது எரிசக்தி துறை துணை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை யாவும், புது நிகழ்வுகள் என கூறப்படலாம். ஆக முழு உலகமுமே, இப்போரால், ஏதோ ஒரு வகையில் மிக மோசமாக தாக்கப்படுவதும் அலைக்கழிக்கப்படுவதும், இயல்பாகின்றது. அமெரிக்காவின் முதலாளிமார் கூட்டம், தமது ட்ரம்பிற்கூடாக, இவ்வாறு உலகை, யார் கையிலோ பூமாலை என்பது போல், பந்தாடி மகிழ்வது எவ்வளவு தூரம் செல்லும் என்பது கேள்வி. மறுபுறத்தில், உலகம் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதே உண்மையான கேள்வியாகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
டிஜிட்டல் ஓவியம் - AI