நெருக்கடி மிகுந்த இன்றைய காலப்பகுதியில், ரஷ்ய வெளிநாட்டு மந்திரியான, ‘லெப்ரோ’ என்ற மனிதரின் முக்கியத்துவம் பல மடங்குப் பெரிதாகின்றது. இதன் காரணமாகவே, பூமியில் வாழும், அரசியல் ஞானம் மிகுந்த ஜீவராசிகள் ஒவ்வொன்றும் இம்மனிதரை, தத்தம் பார்வையில், பார்க்க விழைவது இயல்பானதே. முக்கியமாக, உலகு இன்று வரலாறு காணாத இழுபறிகளுக்குள் சிக்கியுள்ள இந்நேரம், இது, பொதுவானதே. இதற்கு திரு. மு.நித்தியானந்தன் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல என்பதனை, அவரது வீரகேசரிக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

ii

ஒருமுனை ஒழுங்கில் இருந்து, இன்று, பல்முனை உலக ஒழுங்கை நோக்கி உலகுப் பயணப்பட்டுக் கொண்டிருப்பதாய்க் கூறப்படுகின்றது. இவ் இழுபறி, வடக்குக்கும், தெற்குக்குமான இழுபறி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. அதாவது, அமெரிக்காவின் தலைமையில் காணக்கிட்டும் ஓர் ஐரோப்பிய யூனியனின் இழுபறி, தூய வெள்ளை நிறத்தவருக்கும், சீன-ரஷ்ய தலைமையிலான தூய வெள்ளை நிறம் அல்லாத அல்லது கறுப்பு அல்லது மாநிறத்தவர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி என வரையறுக்கப்படுகின்றது. ஆனால், இது ஒரு பல்முனை ஒழுங்குக்கான முயற்சி அல்லது இதுவே இன்று வடக்கின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சி என்றும் கூறப்படுகின்றது.

iii

சீனத்தின், SHELONG விண்வெளி விமானம், இப்போது அமெரிக்காவின் X-37B விண்வெளி விமானத்துக்குப் போட்டியாகக் குதித்துள்ளது என்றும், இது விண்வெளியில் இருக்கும் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யும் மர்ம சாகசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இச்செய்திகளில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம். ஆனால், விண்வெளி ஆதிக்கத்துக்காக ஓர் உக்கிரப் போர் இன்று ஆரம்பமாகி உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே, இவ் உக்கிரப் போரினால் உந்தப்பட்ட நாடுகள், ‘நாளும்’ தத்தமது செய்மதிகளை விண்வெளியில் நிலை நிறுத்தத் தெண்டித்து வருவது இன்றைய நடைமுறையாகின்றது.

நாஜிகளுக்கு எதிரான 2ம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரஷ்யா இறங்கியது முதல் (09.05.2025 முதல்) ரஷ்ய-சீன உறவில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்பது பதிவாகியுள்ளது. இதுவும் விண்வெளியில் ஆதிக்கங்களை நிலைநிறுத்துவதில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

ரஷ்ய கொண்டாட்டத்தில் சீனா கலந்துகொள்வது போன்று, இன்று, நான்கு மாதங்களின் பின் சீனா அரங்கேற்றியிருந்த கொண்டாட்டத்தில், ரஷ்யா மாத்திரமன்றி வடகொரியாவும் கலந்துகொண்டது புதிய நிகழ்வாகின்றது. வடகொரியா இப்படி, பங்கேற்பது உலகை அதிர்ச்சிக்குள் உறைய வைத்தது. ஏனெனில், இதுவரை வடகொரியா, ஒரு தீண்டத்தகாத நாடாகவே உலகில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குச் சார்பாகத் தனது படைகளை அனுப்பி வைத்தது முதல் இன்று கொண்டாட்டத்திலும் கலந்து சிறப்பித்துள்ளது முக்கிய விடயமாகின்றது. சீனக் கொண்டாட்டமானது 03.09.2025இல் ஆரம்பித்து நடந்து முடிந்தது. இதற்கு இரு தினங்கள் முன்னதாகவேதான், சீனத்தில், SCO மாநாடானது, வெற்றியுடன் நடைபெற்று இக்கொண்டாட்டத்திற்கே பச்சைக்கொடி காட்டி, கட்டியம் கூறும் ஒரு நிகழ்வாகியது. இதில் வடகொரியா கலந்துகொள்ளாவிட்டாலும், இந்தியா தனது படையணியுடன் கலந்துகொண்டது கவனத்துக்குள்ளாகியது.

ட்ரம்பின் வரிக்கொள்கையை அனுசரித்து, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, சீனத்தின் SCOவில் கலந்துகொள்ளாமலும் இருக்கக்கூடும் என்று உலகு எதிர்பார்த்து இருந்தது. ஆனால், இவ் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மோடி இதில் கலந்துகொண்டது மாத்திரமன்றி புட்டினைக் கட்டிப்பிடித்தும், மறுகையில், XIக்கு கைலாகு கொடுத்தும் தனது திருவிளையாடல்களை ஆரம்பித்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரிவிதிப்பை நிர்ணயித்து இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டுவந்து விடலாம் என்று ட்ரம்ப் எதிர்பார்த்திருந்தாலும், மோடி ட்ரம்பின் தொலைபேசி அழைப்புகளுக்குச் செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக அதனை அசட்டை செய்தது வேறு உலகின் பேசும் பொருளாகியது. ஒரு நாட்டின் தலைவர், பிறிதொரு நாட்டின் தலைவரைத் தொலைபேசியில் அழைக்கும்போது, அதனைச் சட்டை செய்யாமல் இருந்தால் உலகம் வினோதமாகவே பார்க்கும் என்பது தெளிவு. ட்ரம்ப் மோடிக்கு நான்கு தரம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் ஆனால், மோடி அதனை அலட்சியப்படுத்தி விட்டதாகவும் செய்திகள் குவிந்தபடி இருந்தன.

தொடர்ந்து, செய்வதறியாது திகைத்துப்போன அமெரிக்கா, தனது கோபத்தை முடுக்கிவிட்டுக் கொண்டு, இந்தியாவுடனான வர்த்தக நிலைமைகளை மேலும் கடுமையாக்கியது. ஆகவே, ஒரு புறம் வடகொரியா. மறுபுறம் இந்தியா. உலகின் நெருக்கடிகள், இப்படியாகத் தீவிரம் பெறத் தொடங்கி விட்டன.

இச்சூழ்நிலையில், உக்ரைன் போரின் தீவிரம் மேலும் களைகட்டத் தொடங்கி விட்டது. சீனாவானது, இப்போர் தீவிரமடையும் பட்சத்தில், இது, உலகின் மறு பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. ஆனால் இதனைப் புறந்தள்ளிய ரஷ்யாவும் தனது அண்டை நாடான, சிறந்த தோழனுமாகிய, பெலாரூஸும் இணைந்து Zapad ராணுவ பயிற்சியை, லுத்வேனியா-போலந்து எல்லையில், மிகப் பிரமாண்டமான ரீதியில் நான்கு நாட்களுக்கு ஒரு தொடராய் நடத்திக் காட்டியது. இது சீனக் கொண்டாட்டம் நடந்து ஒன்பது தினங்களில் ஆரம்பமான நிகழ்ச்சி எனக் கூறுவதும் முக்கியமானது (12.09.2025).

இந்நிகழ்வில் இந்தியா தனது புகழ்பூத்த ரெஜிமன்ட் ஒன்றிலிருந்து 65 போர் வீரர்களை Zapad பயிற்சியில் கலந்துகொள்ள செய்தது ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்பட்டது. அதாவது, ட்ரம்பின் கோபமும், வரிவிதிப்பின் இறுக்கங்களும் இந்தியாவை ஒரு சிறிதும் அசைத்ததாகத் தெரியவில்லை.

ஆகவே, ஒருபுறம் சீனா தனது அணிவகுப்பை, இனி இல்லை எனும் அளவுக்கு நவீன விஞ்ஞானப் போர்த் தளபாடங்களை இறக்கியும், வடகொரியா-ரஷ்ய தலைவர்களைத் தனது கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்தமையும், இது நடந்து முடிய, சில தினங்களுக்குள்ளாகவே ரஷ்ய-பெலாருஸ் போர்ப் பயிற்சி என்பது (Zapad) முதன் முறையாக நடத்தப்பட்டு, அதில் அணுவாயுதங்களை இறக்கியும், Hypersonic ஏவுகணைகளைப் பயன்படுத்தியும், இந்தியாவைப் பங்கேற்கச் செய்த நிகழ்வும் உலகில் முதன் முதலாக நடக்கத் தொடங்கின. அதாவது, ரஷ்ய நாஜிகளின் வெற்றித் தொடர்பான பேரணி-பின் சீனத்தின் ஜப்பானிய பாசிசத்திற்கு எதிரான பேரணி- பின் Zapad போர் பயிற்சி (ஒரு லட்சம் துருப்பினரைக் கொண்டது, அணுவாயுத Hypersonic பயிற்சிகளையும் முதன் முதலாக உள்ளடக்கியது) என நிகழ்வுகள் வரலாறு காணாத அளவில் உலகில் அரங்கேறின.

இச் சூழ்நிலையிலேயே, இலங்கையானது, தனது ‘அமைவிட அரசியலை’ முன்னகர்த்தி, அதற்கு ஒத்திசையும் போக்கில் தன் பங்கிற்கு ஒரு சிறிய நனோ செயற்கைக்கோளை, நாசாவின் ஊடாக விண்ணில் ஏவியது. (19.09.2025).

அதாவது, ‘இலங்கையின் அமைவிட அரசியல்’ நடக்கும் உலக இழுபறியில் ரஷ்யா சார்பாக என்ன பாத்திரம் வகிக்கக்கூடும் என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதே, அதன் மீதான அகோர வரி விதிப்புக்கான காரணம் என ட்ரம்ப் எடுத்துரைத்திருந்தார். இதே போன்று, ரஷ்யாவுடன் அனைத்து விடயங்களிலும் ஒன்றுபட்டு ஒன்றாய்க் கலந்திருக்கும் சீனமும், ஒரு வழியில், இதற்காகவே பழிவாங்கப்படும் நாடுமாகின்றது. இச்சூழலில் ரஷ்யா சார்பாக, இலங்கையானது எடுக்க வேண்டிய அல்லது எடுக்கக்கூடிய பாத்திரம் எவ்வகைப்பட்டது என்ற கேள்வி இன்று மேலெழுவதாகவே உள்ளது. ஏனெனில், இதற்கான பதில், தமிழ் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுதான்.

iv

                                           - திரு.மு.நித்தியானந்தன் -

ரஷ்யாவைப் பொறுத்தமட்டில், புட்டினுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த நபராக உலக அளவில் கணிக்கப்படுபவர் லெப்ரோ ஆவார். அதாவது, லெப்ரோவைக் குறிவைப்பது, சாராம்சத்தில், ரஷ்யாவைக் குறிவைப்பதுதான் என்றாகின்றது.

உக்ரைனுக்கான தமிழர் இயக்கம் எனத் தொடங்கப்பட்ட இயக்கமானது இன்று நொடித்துப்போன ஒரு சங்கதியாகிவிட்ட நிலையில், திரு.நித்தியானந்தன் அவர்களின் லெப்ரோவ் குறித்த வீரகேசரி கட்டுரையானது, இந்நொடித்துபோன அரசியலின் தொடர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது.

21.08.2025இல், வீரகேசரியில் மு.நித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்:

“அதிபர் புட்டினின் ஊதுகுழல் எனக் கருதப்படுபவர் (லெப்ரோவ்). எதையும் நிராகரிக்கும் போக்கினால், ‘மிஸ்டர் நோ’ என அழைக்கப்படுபவர்”.

இத்தரவுகளின் உண்மைத் தன்மை ஒருபுறம் இருக்க, இப்பார்வையானது ‘உக்ரைனுக்கான தமிழர் இயக்கத்தின்’, பார்வைதான் என்பதை முதலில் தெளிவுறக் கூறப்பட வேண்டும். ஆனால், இவ்வகை அரசியல் எமது தாயக அரசியலில் எத்தகைய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது என்பதே கேள்வியாகின்றது.

முள்ளிவாய்க்காலின் அரசியலுக்கு வித்திட்ட பல கூறுகளில், ஆழமான ஒரு கூறு, எமது புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை. ‘பொறி இருக்கிறது… பொறி இருக்கிறது..’ என்று உசுப்பேற்றி உசுப்பேற்றியே யதார்த்தத்தை மறைக்க வைத்த பெருமை இப்புலம்பெயர் அரசியலையே சாரும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இது இன்று கடந்த வரலாறாகி உள்ளது.

புலம்பெயர் சமூகங்களின், இத்தகைய பிழையான வழிநடத்தல்கள், பொதுவில் புலம்பெயர் சமூகங்களிடை காணத்தக்கவையே. தற்போது நடந்துவரும் காசா இனப்படுகொலைக்கும் அவை வழிவகுத்துள்ளன என்பதிலும் பிழை கிடையாது.

கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பாலஸ்தீன புலம்பெயலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, கனேடிய நாடுகளுக்கு இதுவரை புலம்பெயர்ந்துள்ளனர் என்பது பதிவு.

இதில் புலம்பெயர்வது என்ற நிகழ்ச்சி ஒருபுறம் இருப்பினும், இப்புலம்பெயர்ந்தோர் தமது தாயகத்தில் செலுத்திய தாக்கங்கள் என்னென்ன – அவை எவ்வகைப்பட்டது என்பதெல்லாம் முக்கியமான கேள்விகளாகின்றன. Edward Said முதல் பல்வேறு பாலஸ்தீனிய புத்திஜீவிகளின் அறிவுரைகள் இன்றைய காசா நிகழ்வுகளுக்கு வழிவகுத்தனவா என்பதெல்லாம் இக்கேள்விகளுள் அடங்கக்கூடிய விடயங்களே.

திரு.நித்தியானந்தன் அவர்கள் ‘மிஸ்டர் நோ’ என்ற கதைக்கு அடுத்தபடியாகப் பின்வருவனவற்றைக் கூறுகின்றார்:

“இங்கிலாந்தின்… லிஸ் ட்ரஸ், சேர்ஜி லெப்ரோவுடன் பேசுவது செவிப்புலன் இழந்த ஒருவருடன் பேசுவதைப் போன்றது என்று கடுமையாகவே பேசுகிறார்” (அதே கட்டுரை -21.08.2025).

ஆனால், கார்டியனும் டெலிகிராமும் இதே விடயத்தை வேறு விதமாய்க் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

டெலிகிராம், தனது இதழில் பின்வருமாறு வர்ணித்தது:

“A conversation between a deaf and a dump person” என இக்கூற்றானது ‘லெப்ரோவால்’ ஊடக சந்திப்பின் போது கூறப்பட்டதாக இப்பத்திரிகை கூறியது. (10.02.2022).

இதே நிகழ்வை Guardian பின்வருமாறு வர்ணித்தது:

“Our conversation turned out to be between a mute with the deaf” என ‘லெப்ரோ’ கூறியதாக இந்த பத்திரிகையும் கூறியது. (10.02.2022).

அதாவது, இவை மு.நித்தியானந்தன் அவர்கள் குறிப்பிடுவது போல இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறியதாக இல்லை! இதற்கு நேர்மாறாக, மேற்படி வார்த்தைகள், ‘லெப்ரோவாலேயே’ கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையே பிழையாக விளங்கிக் கொண்டு திரு.மு.நித்தியானந்தன் அவர்கள் ஒரு பிழையான வர்ணனையில் ஈடுபட்டுள்ளார் எனலாம். இப்பிழையான வர்ணனை, ஒரு தனிநபர் சார்ந்ததா, அல்லது புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் சார்ந்ததா என்பது கேள்வி.

ஆனால், இச்சம்பாசணையில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த அம்சம், லிஸ் ட்ரஸ் அவர்கள், ரஷ்யாவை எச்சரிக்கும் பாணியில் நடந்து கொண்டார் என்பதேயாகும். அதாவது, நேட்டோ தன் முழுப் பலத்தைப் பிரயோகிக்கும் தருவாயில்தான் இப்போது உள்ளது எனத் தெரிவிப்பதற்காகவே, லிஸ் ட்ரஸ், ரஷ்யா சென்றுள்ளார் என்பதும், ரஷ்யாவின் கரிசனங்களை அவர் எந்த விதத்திலும் கேட்பதற்குத் தயாராக இல்லை என்பதனையே லெப்ரோ தனது உதாரணங்கள் மூலமாகத் தெளிவுபடுத்தினார்.

மேலும் லிஸ் ட்ரஸ் அவர்கள், ரஷ்யாவானது உடனடியாகத் தான் இருத்தியுள்ள தனது ஒரு லட்சம் போர் வீரர்களை, உக்ரைனின் எல்லையிலிருந்து உடனடியாக நீக்கல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதாவது, லெப்ரோவுக்குரிய எந்த ஒன்றையும் அவர் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

இதனையே, “ஊமை ஒருவன், காது கேளாத மற்றொருவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போன்றது இப்பேச்சுவார்த்தை” என லெப்ரோ வர்ணிக்க நேர்ந்தது.

ஆனால், மு.நித்தியானந்தன் அவர்களோ மனம்போன போக்கில் இவ்விடயங்களைத் திரிப்பது, புலம்பெயர் அரசியல் செலுத்தும் அரசியல் தாக்கத்திற்கு உதாரணமாகின்றது.

மறுபுறத்தில், நேற்றைய செய்திகள் படி, உக்ரைனின் எல்லை நெடுக இருக்கும் ரஷ்ய போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு லட்சம் துருப்பினரைத் தாண்டும் என புட்டினாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. (20.09.2025).

இவ் விவரங்கள், ரஷ்யாவின் இன்றைய முகத்தையும், உக்கிரமடையும் உக்ரைன் போர் நிலவரத்தின் இன்றைய நிலையையும் எமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கான தமிழர் அரசியலை முன்னெடுப்பது தமிழ் அரசியலுக்குப் பயன் தரக் கூடியதா என்பதே கேள்வியாகின்றது.

இதுபோன்றே, திரு.மு.நித்தியானந்தன் அவர்கள், லெப்ரோவை பற்றி வர்ணிக்கும் போது, “எதையும் நிராகரிக்கும் போக்கினால், ‘மிஸ்டர் நோ’ என்று அழைக்கப்படுபவர்” என வர்ணிக்கின்றார். ஆனால், வரலாற்றில் ‘மிஸ்டர் நோ’ என அழைக்கப்பட்டவர் ஒருவராகவே இருந்திருக்கின்றார். அது, ரஷ்யாவின் ‘ANDREI GROMICO’ என்பவர் மாத்திரமேயாகும். இவர் சோவியத் காலப்பகுதியில், ரஷ்யாவின் ஐ.நா. பிரதிநிதியாக இருந்தபோது, அதிகமான சந்தர்ப்பங்களில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து, முன்வைக்கப்பட்ட, அமெரிக்கா-ஐரோப்பிய பிரேரணைகளைத் தடுத்ததால் ‘மிஸ்டர் நோ’ என இவர் சித்திரிக்கப்பட்டார். (‘MR.NYET’- ரஷ்ய மொழி). இவர் 1940இல் ஐ.நாவில் அங்கம் வகித்தார். லெப்ரோவின் காலம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழிந்த காலப்பகுதியாகும். லெப்ரோ ஐ.நா. வில் அங்கம் வகித்தது 1994-2004 காலப்பகுதியிலேயே (இதன் போது கொசோவா, ஈராக் போர்கள் இடம்பெற்றன என்பதும் முக்கியமானது). இப்படி சரித்திர விடயங்களைத் தனது மனம்போன போக்கில் திரித்துக் கூறுவது ஒருவேளை நித்தியானந்தனுக்கு உவப்பான விடயமாக இருந்தாலும் இது தமிழ் அரசியலைத் தவறாக வழிநடத்தக் கூடியது என்பதிலேயே இதனது அபாயங்கள் உள்ளடங்குகின்றன.

லெப்ரோவின் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்தி, அதற்கூடு ரஷ்யாவின் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் இவ்வகை முயற்சிகள் பல திரிபுகளை, இவ்வகையில் உள்ளடக்கவே செய்கின்றன.

அண்மை நகர்வுகளின் படி, ட்ரம்ப், உக்ரைனானது தன் இழந்து போன நிலங்களை மீள பெறலாம் என்று கூறுவதும் இந்தியாவானது உக்ரைன் போருக்கு பெருத்த நிதி அளிக்கின்றது என மீள வலியுறுத்துவதும் ஒரு திருப்புமுனையை காட்டாமல் இல்லை. இதேசமயம், இவை உலகில் நடந்தேறும் கடுமையான மாற்றங்களைக் கவனத்துள் எடுக்கின்றனவா என்பதும் கேள்விக்குரிய ஒன்றே. 

புலம்பெயர் அரசியலின், ஒரு சாராரின் இத்தகைய பார்வை தமிழ் அரசியலை ஒருவகையில் முடமாக்குகின்றது அல்லது பிழையாக வழிநடத்துகின்றது என்பதில் ஐயமில்லை.

அன்னார் அவர்கள் பின்வருமாறும் எழுதுவார்:

“இந்தியாவுக்குச் சென்று இவர் (லெப்ரோவ்) ஒரு மாநாட்டில் உரையாற்றும் போது ரஷ்யா மீது உக்ரைன்தான் படையெடுத்திருக்கின்றது என்று பேசிய போது கூட்டம் சிரித்திருக்கின்றது…”

மேலும் எழுதுவார்:

“எனது நண்பர் ஜெய்சங்கர் ஐ.நாவில் பேசும் போது…”

சுருங்கக் கூறினால், கூட்டம் சிரிப்பதும் அல்லது இவரது நண்பர் ஜெய்சங்கர் ஐ.நாவில் உரையாற்றுவதுமாகத்தான் விடயங்கள் தமிழ் அரசியலுக்கு அறிமுகமாகின்றன.

இவ்வகை அரசியலானது, முள்ளிவாய்க்காலுக்கு அல்லது காசாவின் இனப்படுகொலைகளுக்கு அடித்தளமிடும் எனக் கூறினால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை எனலாம். வேறு வார்த்தைகளில் கூறினால், இது, வெறுமனே ஒரு தனி மனிதரின் பலகீனமா அல்லது புலம் பெயர்ந்த சமூகம் ஒன்றின் பகுதியினரின் சரிவா என்பது கேள்வியாகின்றது.

ஏனெனில், இவை கனவுநிலை அரசியலைத்தான் ஊக்குவிக்கக் கூடியது. ஆனால், இன்று, தமிழ் அரசியலானது இவ்வளவு பின்னடைவுகளுக்குப் பின்னாலும் இத்தகைய தனது கனவுநிலை அரசியலை விட்டகன்று, பொய்யுரைகளிலும் கனவுகளிலும் இருந்து விடுபட்டு காலூன்றி நிற்காவிட்டால், தமிழ் அரசியலின் தற்போதைய இழுபறிகள் நிரந்தரமாகும் என நிச்சயித்துக் கூறலாம். அதாவது கலையாத வேட்டி மடிப்பில் இருந்து நழுங்காமல், சாராய போத்தலை உருவி, மேசை மீது வைத்த அரசியலில் இருந்து நாம் எங்கெங்கெல்லாமோ பயணப்பட்டு வந்துள்ளோம். இனியாவது, லிஸ் ட்ரஸ் கூறியதைக் கூறலும் ‘மிஸ்டர் நோ’ என வாதிடுவதைத் தவிர்ப்பதும், இனி ஒரு காசாவுக்கான நிகழ்ச்சி நிரலைத் தடுப்பதாக இருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.