- எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை -

- 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே'  - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின்  In Ceylon's Tea Garden  ஆங்கில நெடுங்கவிதையின்   எழுத்தாளர் சக்தீ அ. பால ஐயா (சக்தீ அ.பாலையா)  அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு  பாக்கியா பதிப்பகத்தால் இரு பதிப்புகள் 1956, 2007 இல் வெளியிடப்பட்டன. மேலுமொரு பதிப்பு  செய்தி பதிப்பகத்தால் 1969இல் வெளியிடப்பட்டது. -


முன்னுரை:

அமர காவியம் இது” என ஆர்ப்பரித்து மொழிப்பெயர்த்துள்ள சக்தீ பாலையா கூறுவார்: ‘நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்ப்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள்’ (மேற்கோள்:திலகர்:சூரியகாந்தி:25.12.2023).

இக்கூற்றில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்றாலும் திரு.சக்தீ பாலையா அவர்களே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.

கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரில் இருந்து சற்றே மாறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாய் இருக்கக்கூடும்.

1952இல், மலையக மக்களின் வாக்குரிமை பறிபட்டமைக்கு எதிராக, காங்கிரஸ், பிரதம மந்திரியின் அலுவலக வாயிற்படியில், காந்திய மோஸ்தாரில் ஒரு சத்தியாகிரகத்தை நடத்தியிருந்தது. கிட்டத்தட்ட 798,000 தொழிலாளர்களை அன்று கொண்டிருந்த மலையகம் இக் கொடுஞ்செயலுக்கு எதிராக, ஏன் வேலை நிறுத்தங்களில் இறக்கப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானதொன்று. வெறும் 6000 தொழிலாளர்களை மாத்திரமே, வேலை நிறுத்தம் அல்லாமல், வெறும் சத்தியாகிரகம் என்ற பெயரில் பங்குபற்ற செய்தமை ஒரு வரலாற்று கேள்வியாகின்றது.

                             - எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை -

எது எப்படியிருப்பினும், பத்து மணி நேரமாய், இவ் எழுத்துக்களின் சொந்தக்காரரான, திரு.வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு போலீஸ் வேனில் அடைக்கப்பட்டார் என்பதும் இந் நெடுங்கவிதையின் பெரும்பகுதி, அப்போலீஸ் வேனிலேயே எழுதப்பட்டது என்பதும் பதிவு.

மலையகத்தின் ஒரே ஒரு பாணன் (Bard) என கூறக்கூடிய திரு.வேலுப்பிள்ளை அவர்கள், தன் இளம் வயதிலேயே தொழிற்சங்க அரசியலில் நுழைந்து பிரவேசம் கொண்டார் என்பது பம்பாயின் ஜெக் மோகனின் (JAG MOGAN)) 1954இல் முன்னுரையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது, அவரே ஒரு கேள்வியும் கேட்டு தன் முன்னுரையை முடித்து வைக்கின்றார்: ‘இங்கே ஒரு மர்மம் உண்டுதான் - இந்த கவிதைகளை பார்வையிடுமிடத்து, தாகூரின் சிஷ்;ய பிள்ளையாக திகழ்ந்த வேலுப்பிள்ளை அவர்கள், ஒரு குறித்த காலத்தில், எப்படி தாகூரின் அன்றைய ரொமான்டிசிசத்தை (Romantism) தூக்கியெறிந்து, நவீன கவிதை (Modern Poet)க்குள் நுழைந்து கொண்டார் என்பதே அந்த மர்மமாகும்’.

மனிதனின் சிறுமையும் பெருமையும் அவரவர் மக்கள் திரள்வுடன் கொள்ளும் நெருக்கத்திலிருந்தே பிறப்பெடுக்கின்றது எனலாம். இந் நெருக்கமானது சில வேளைகளில் மறைமுகமாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் இயங்க தொடங்குவதுதான். இருப்பினும் இந்நெருக்கங்களின் வெவ்வேறு பரிமாணங்களுக்கேற்ப, குறித்த கவிஞனது எழுத்துக்கள் புடம்போடப்படுகின்றன. அவற்றில் தவழும் சத்தியம், இந்நெருக்கங்களை எதிரொலிக்காமல் விடுவதும் இல்லை.

‘தேயிலை தோட்டத்திலே’ என்னும் இந் நெடுங்கவிதையின் சிறப்பம்சங்கள் பலவாயிருந்தாலும் சில முக்கிய விடயங்கள் ஓரிரண்டை மாத்திரம் நாம் தொட செய்யலாம்: ஒன்று, அம்மக்கள் பொறுத்த முழுமையான ஓர் பார்வையை உருவாக்கி கொள்ள திரு.வேலுப்பிள்ளை அவர்கள் தெண்டித்திருப்பது.

இதனையே, ஜெக் மோகன் போன்றோர், 798,000 தொழிலாளர்களின் குரல் இது என விஸ்தரிப்பார். அதாவது, அடக்கப்பட்ட மக்களின் குரலாய் பேசுவதில் வேலுப்பிள்ளை பெருமை கொள்கின்றார் எனலாம்.

இங்கேயே, அவரில் விகசித்த, ஆங்கில இலக்கியத்தின் செழுமையும், பெருந்தோட்ட அமைப்பு முறைகள் உருவாக்கி தரும் வாழ்க்கை முறைகளும் கைகோர்க்கின்றன எனவும் கூறலாம்.

இரண்டாவதாய், எல்லா மாபெரும் கவிஞர்களை போலவே (தாகூர்-பாரதி போன்றோர்) நாளை வரவிருக்கும், ஒரு வரகவிக்கு வாழ்த்து கூறவும், திரு.வேலுப்பிள்ளை அவர்கள், இந்நெடுங்கவிதையில் தவறவில்லை.

மேலும் இந் நெடுங்கவிதையின் நடையானது ஒரு ராணுவ நடை போன்று மூலத்தில் காணக்கிட்டுவது குறிப்பிடத்தக்கதாகின்றது. சொற்செறிவுடன், பொருள் செறிவும் ஒன்று சேர இவரது கவிதை, மூலத்தில், அணிநடை பயில்கின்றது.

திரு.வேலுப்பிள்ளை அவர்கள், மாக்சிய தத்துவத்தில் ஊறி திளைத்தவர் இல்லை எனினும், இவ் எழுத்துக்களை கூர்ந்து நோக்கும் போது, இவை ஓர் வர்க்க கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒருவராலேயே தீட்டப்பட்டுள்ளதாய் காட்சி தருவது, ஆச்சரியப்பட வைக்கின்றது. இதுவே வேலுப்பிள்ளை அவர்களின் இக்கவிதை ஜெக் மோகன் போன்றோரை அவரை, மர்மமாகக் காணவும் செய்கின்றது.

வாழ்க்கை ஏற்படுத்தி தரும் அனேக மர்மங்களில் இதனையும் ஒன்றாக வரையறுத்துக் கொள்வது மகிழ்வூட்டக் கூடியதுதான்.

ரதி-மன்மதன் கதை போன்றவற்றை இம்மக்கள் ஆழ்ந்து சிலாகிப்பதை சிலாகிக்கும் வேலுப்பிள்ளை பிறிதொரு கோணத்தில் இவ்விடயத்தை அணுகவும் தவறவில்லை. அதாவது, இந்த மக்களின் இச் சிலாகிப்பு, மயக்கத்தில் கிறங்குவதேயாகும் என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். இது, கண நேரம், இம்மக்களை ஆசுவாசப்படுத்துகின்றது என்பதையும் காண்கின்றார். உண்மையில் இவ் ஆசுவாசப்படுத்தலானது இம்மக்களுக்கு தேவைப்படுகின்றது – மீண்டும் அவர்கள் தங்களின் புத்துணர்வை மீட்டுக்கொள்ள, என்பதை இந்த ஆங்கிலேய பெருந்தோட்ட தர்பார்களும் அறிந்து, அவற்றை தமக்கு சாதகமாக பாவித்து கொள்கின்றனவா என இவர் ஐயுறவு கொள்வதும் இந்நெடுங்கவிதையில் காணக்கிட்டும் முக்கிய விடயங்களில் ஒன்றாகின்றது.

மக்களின் கோயில் விழாக்களை அல்லது திருவிழாக்களை தோட்டத்து நிர்வாகம் எப்படி வரவேற்று வசதி செய்து தருகின்றது என்ற பார்வை இங்கேயே ஒடுங்குவதாயும் உளது –

இப்படித்தான், இம்மக்களின் சோகத்தை, மகிழ்வை, ஆர்ப்பரிப்பை பிழிந்து காட்டும் போதே அவர்களின் வியர்வையை, அவ் வியர்வையால் பொங்க கூடிய ஏனைய விடயங்களை – முக்கியமாக – வியர்வையின் பறிப்பையும் காட்ட வேலுப்பிள்ளை முற்பட்டுள்ளது குறிக்கத்தக்கதாகின்றது.

இத்தகைய பிரஞ்ஞை கொண்டதாகவே எழுத்தாளரான திரு.வேலுப்பிள்ளை அவர்களின் இந் நெடுங்கவிதை மிளிர்வதை காணக்கூடியதாக உள்ளதும் பெருமைக்குரியது. இப்பண்புகள் உண்மையான மக்கள் கவிஞர் ஒருவருக்கே பொருந்தி வருவதாயும் இருக்க கூடும். இதனாலேயே, ஜெக் மோகன் கூறுவது போல குறிப்பிட்ட காலத்தில் சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இச் சமூகத்தின் பாணனாக இருந்துள்ளார் எனலாம்.

இவ்வளவும் கூறும் நாம் இந் நெடுங்கவிதையில் பலவீனங்கள் இல்லை என்பதாகாது. யானைகளுக்கும் அடிகள் சறுக்கும் என்பது போல. ஆனால், மூலத்தை விட, மொழிப்பெயர்ப்புகளில்தான் அநேக குறைபாடுகள். இது, தன்னடக்கமோ அன்றி யாரையும் இகழ்வதற்காக கூறப்படும் ஒன்றல்ல. மாறாக மூலத்தின் வலிமையை குறிக்கவே இங்கு கூறப்படுகின்றது என்பதை புரிதல் நன்று. இனி, வேலுப்பிள்ளையின் கவிதைகளுக்குள் செல்லலாம்:

எனது விதி

நாழிக்கு நாழி
வீதியில் நின்று
என்
யாழினை எடுத்து
என் கீதத்தை
இசைப்பேன்…

என் பாடல்கள் யாவும்
ஈழத்தின் மானுடர்க்காய்…
வயல், புல்வெளிகளிலும்
ரப்பர், தேயிலை தோட்டங்களிலும்
பிறந்திட்ட மானுடர்க்காய்
ஆம் நான் காதலிக்கும்
அவர்களுக்காய்…

மலைகளை கேளுங்கள்

பிரட்டின் அதிர்வு…
ஆம்
அது

மீள் ஒலி; எழுப்பி
நெடு… மூச்… செறியும்…
அமைதி காக்கும் -இம்
மலைகளின் மீதும்
சப்தமே அற்ற - இப்
பள்ளத் தாக்குகள் நெடிதும்
மீள் ஒலி எழுப்பி
நெடு… மூச்… செறியும்…

மோனமாய்
நிற்கும்
இவையோ
இங்கு
காலம் காலமாய்
காத்திடும் தம் பதிவை

ஓர் நூற்றாண்டு காலத்து
எலும்புகள் குறித்தும்
ஓர் நூற்றாண்டு காலத்து
வியர்வை குறித்தும்
ஓர் நூற்றாண்டு காலத்து
கண்ணீர் குறித்தும்
தம்முள் பதித்துள்ள
வரலாற்று கணக்கினை
நெடுநீள் மரபுடன்
விழிப்புறக் காக்கும்.

எனது மக்கள்

எனது மக்கள் காள்….
ஓ …..
அவர் தாம்
புழுதியின் கீழ் புழுதியாய்
தேயிலையின் கீழே….

நினைவோ சின்னமோ
ஏதுமே அற்று
தனித்து அவர்தம்
கல்லறை குழியினுள்,
துணைக்கு ஓர் சிறு
கானகப் பூவதன்
அணைப்போ உறவோ நெருக்கமோ
இன்றி
ஏகாந்தமாய் உறங்குகிறார் நன்று.

தந்தை புதைந்த
மேட்டின் மீதே
மிதித்து உழன்று
நின்று ஓய்ந்த
தனயனும்
தளர்ந்து வீழ்ந்து
இறந்தே போனான்.

வெட்கம்தான் ஏது
மானுடனே – நீ
கல்லறை சமைக்கவும்
மறந்தனை அவர் தமக்கே…

இறைவன் மாத்திரம்
பெரும் கருணை கொண்டு
மென் பசும் புற்றரையால்
மெல்ல
போர்த்தி அவரை
மூடினான்: மறைந்தார்.

மலைகளின் இருண்ட
இடுக்குகள் இங்கே
மதர்த்த காலை
தேயிலை யிடையே
வெண்ணுரை பொங்கி
உம்மையும் அழைக்கும்.

தேவையோ,
நலிந்த மாதரின்
தசையில் எலும்பில்
நரம்பில் எங்கும்
தீயினை மூட்டும்
தீயினை மூட்டும்.

அன்னையர் செவிலியர்
கண்ணியர் யாவரும்
கூடைகள் முதுகினில்
குறுக்காய் தொங்கிட
மென்னுடல் குறுங்க
சாரல்கள் நோக்கி
அணி நடை நடப்பர்.

தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரல்களை
அமைவுற நோக்கியே
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
‘இரண்டு இலைகள் ஒரு குறுத்து’
ஆம்
‘இரண்டு இலைகள் ஒரு குறுத்து’

அவள்

உச்சி வெயிலின் கோரமோ
அன்றி
பருவக் காற்றின் சீறலோ
இல்லை
கசியும் நீரின்
பெருகும் கோபமோ
எம் பெண்டீர் காலை
கட்டுவதில்லை.

நலிந்த இந்த
மானுட வண்டிகள்
கூடையின் பாரங்கள்
சுமையாய் அழுத்த
தங்கமாய் பொங்கும்
தேயிலை சுமந்தே

மலைகளின் உச்சிகள்
வரட்டு பள்ளங்கள்
மேடுகள் என்றே
யந்திர கதியில்
ஏறியும் இறங்கியும்
அசைந்து அசைந்து
இறுதியாய் அங்கே
நிலுவையின் கணத்தினை
நோக்கி நகர்வர்.
ஓர்,
அற்ப தவறோ
ஓர்,
அற்ப பிழையோ
இல்லை,
முற்றிய இலையோ
அன்றி,
நிரைகளில் பிந்தலோ
இல்லை
தன் பச்சிளம் குழந்தையை
நிலையத்தில் பிரிந்ததில்
சுணங்கிட்ட இரண்டொரு
அற்ப கணங்களோ
அட,
போதுமாம் இவை
ஓர் ஆயிரம் தூ~pப்பை
இவர் மேல் சொரிய
ஒரு நாளின் உழைப்பை
இவரிடம் பறிக்க!

இரவு,
அதுவும் நீண்டு
மீள இவளில்
வதைகளை பொறிக்கும்.
அவளின் கணவன்
குழந்தைகள் வீடு
யாவும் அவளின்
உழைப்பினை கோர, கோர
இவளோ,
சமைத்து முடித்து
அலுத்து சோர…. சோர
உண்மை
இரவு,
அதுவும் நீண்டு
மீள இவளில்
வதையாய் தொடரும்.

விடியலின் புன்னகை
பிரட்டின் கூவல்
இவற்றை எண்ணியே
உடுக்களின் சுடரை
கொண்டவள் கண்கள்
துயின்றும் விழித்தும்
கனவில் சோர
களைத்து நைந்த
அவளின் உடலம்
சரிந்த கிடக்கும்
இரவில், பாயில்.

எத்தனை ஆண்டுகள்
எத்தனை ஆண்டுகள்
உழைப்பு மிகுந்த
அவளின் பகல்கள்
அதனை தொடரும்
அவளின் இரவு
இதுவாய் இதுவாய்
முடிந்தது இங்கு.

என்,
வெண்கல தோல் மனிதர்காள்…
எழுவான் புலர்ந்தது முதல்
பள்ளம், குன்றுகள், மலைகள் என
எதிரொலி செய்யவே
குத்துளி, கோடாரி, சுத்தியல், அலவாங்கு
மண்வெட்டி சகிதம்
மலைகளில் ஏறுவர்.
மலைகளின் முதுகினை
முள்ளால் கீறவும்
தேயிலை செடிகளை
வெட்டி சாய்க்கவும்
மருந்து தெளிக்கும் மருந்தடி காரராயும்
காட்டு புற்களை களைகளை
செதுக்கி தள்ளும் புல்வெட்டு ஆளாயும்
கவ்வாத்து ஆளாயும்
தேயிலை மலைகளில்
முள் ஆளாயும்
அவர்
மலைகளில் நுழைவர்.
கலைந்த தேனீ கூடவர்
இதயம்.
கசியும் தேன் திரட்டவர்
கரங்கள்.
வெட்கையில் சிதறிய வியர்வை துளிகள்
புழுதியில் புரண்டு ஓட,
வாரத்தில் ஏழு நாட்கள்
நாட்களில் எண் மணி நேரம்
இப்படியாய் இரத்தம் சிந்தும்
என் வெங்கல மனிதர்கள்.
யார், எவரின்
மோட்சத்து வாழ்க்கையை
இங்கேயே நிச்சயித்து விட.
யார் எவரின்
பூமியை இங்கோர்
சுவர்க்கபுரியாக ஆக்கிவிட
உழைத்தனர் - உழைத்தனர்
என் வெண்கல தோல் மனிதர்கள் -
இப் பிரட்டின் அதிர்வுக்கே…!

[தொடரும்]

உசாத்துணை நூல்கள்

1. 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை (The Ceylon Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - சக்தீ அ.பால - ஐயா , பாக்கியா  பதிப்பகம், 1956, 2007
2. தேயிலைத் தோட்டத்திலே - ஆங்கில மூலம்- ஸி.வி.வேலுப்பிள்ளை  / தமிழாக்கம் - சக்தீ அ.பாலையா , செய்தி பதிப்பகம், 1969
3. In Ceylons' Tea Garden - C.V.Velupillai, published by Harison Peiries, 1954