அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.
ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.
வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.
2
மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.
இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.
பல்கலைகழகங்களின் ஸ்தாபிப்பில் இருந்து, விண்வெளியை ஆட்சிப்படுத்துவது முதல், கிட்டத்தட்ட பதினொரு விமானம்தாங்கிக் கப்பல்களை உலகம் முழுவதும் சுற்றி வரச் செய்தும், கிட்டத்தட்ட 750 ராணுவ தளங்களை உலகெங்கிலும் 80 நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவானது, இப்படியாய், இன்று தனது உலக ஆதிக்கத்தைக் கட்டமைத்து உள்ளது.
இப்படிப்பட்ட நடத்தையானது தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் அதேசமயம் பிறிதொரு நோக்கில், அந்தந்த நாடுகளில் அவற்றின் முதலாளித்துவ கட்டமைப்பையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், அரசியல் தலைமைகளையும் கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடுடைய சூழலுக்கும் அமெரிக்கா தள்ளப்படுவதாய் இருக்கின்றது. ஒரு விதத்தில், இது நாடுகளுக்கிடையேயான ஒன்றிய வாழ்வு என கூறத் துணிந்தாலும், இதற்கு மாற்றுச் சக்தியாகச் சோவியத் ரஷ்யாவும் மாவோவின் சீனமும் உயிர்ப்பெற்று வந்தது, உலக வரலாற்றின் ஒரு கட்டமாய் இருந்திருக்கவே செய்கின்றது.
3
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சி முறையில் இருந்து, அமெரிக்க ஆதிக்கத்திற்கு உலகம் கைமாறிய போது, காலனித்துவ பொருளாதார முறையில் இருந்து, உலகம் நவ காலனித்துவ பொருளாதார முறையினுள் பிரவேசிக்கின்றது.
அதாவது, நாடுகளில் காலனித்துவ ஆட்சியை உருவாக்குகையில், அவற்றைக் கைப்பற்றி, அடிமைப்படுத்தி, அவற்றில் பெருந்தோட்டம் முதலானவற்றையும் திறந்து, உழைப்பாளிகளைத் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றுமதி செய்து மேலும் எண்ணற்ற இவ்வகை வன்முறைகளைச் சவுக்கடிகளின் கீழ் உருவாக்கிச் சுரண்டுவதுதான் காலனித்துவ ஆட்சியின் சாரமாகின்றது - இது கடந்த காலம் (ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் ஈறாக).
இப்போதோ, பல்வேறு மூலதனக் குவியல்களைக் கொண்ட நிதி நிறுவனங்களும் இவற்றுக்குச் சேவை புரியும் உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி அமைப்புகளும் வந்து சேர்வதாய் உள்ளன.
ஆக, சுரண்டலானது, இப்போது காலனித்துவ அடிப்படையில் இயங்காது, Black Rock போன்ற ராட்சஷ நிதி நிறுவனங்களின் கரங்களில் சிக்குண்டு, இலங்கை போன்ற நாடுகளின் திறைசேரி முறிகளை விற்பனைசெய்ய அழுத்தம் தந்து, அதற்கூடு அம்முறிகளை வாங்கிப் போட்டு, அவற்றின் வட்டியிலேயே, முழு நாட்டையும் உறிஞ்சி எடுக்கும் உன்னத நிலைக்குப் போய்ச்சேர்ந்து விடுகின்றன.
இந்நிலைமையில், அமெரிக்க அரசு இயந்திரமானது சர்வதேசத்து நாணய நிதியம் போன்ற ஸ்தாபனங்களின் ஊடாக உலக நாடுகளுக்குக் கடன்களை வழங்குவதும், அதற்கேற்றாற் போல் டாலர்களைத் தனக்கேற்ற விதத்தில் அச்சிட்டுக் கொள்வதும், போதாதற்குத் தனது திறைசேரி முறிகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்று மக்களை ஈவிரக்கமின்றிச் சுரண்டித் தள்ளுவதும், மேலும் இத்தகைய நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உக்ரைன் அல்லது ஈரானிய அல்லது காசா போர் முனைகளைத் திறந்து விடுவதும், கூட உடன் நடந்தேறும் நிகழ்வுகளாகின்றன.
Black Rock போன்ற இத்தகைய மாபெரும் நிதி நிறுவனங்களுக்கு இப்படியாய் சேவை புரிய அமெரிக்க அரசு கடப்பாடுடையதாக இருப்பது இவ்வமைப்பின் ஆணிவேராகத் திகழ்கின்றது. இதுவே நவ காலனித்துவத்தின் கூறாகவும் அடிப்படையில் காலனித்துவத்தில் இருந்து வித்தியாசம் காட்டும் பக்கமாகவும் இருக்கின்றது.
4
Black Rock> J.P.Morgan போன்ற ராட்சஷ நிதி நிறுவனங்கள், போருக்குப் பின்னதான உக்ரைனைக் கட்டியெழுப்ப இணைந்தாற்போல் 400 கோடி டாலர்களை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக 2023லேயே கூறி நின்றனர். இதனாலேயே, பைடனும், ஒபாமாவும் பின்னர் ட்ரம்பும் இதற்கான வழி வகைகளைக் கண்டறிந்து, உருவாக்க வேண்டிய நிர்பந்தங்களை உடையவர்களாக இருந்தனர். ஆனால், இதனையே புட்டின், சீனா, வடகொரியா, ஈரானிய உதவியுடன் நிர்மூலமாக்க நேர்ந்தது என்பது வேறு கதையானது.
இன்று Black Rock உக்ரைனில் மேற்கொள்வதாய் கூறிய, இந்த 400 கோடி டாலர் கதையை யாரும் எடுப்பதாக இல்லை. Black Rock போன்ற தனியொரு நிதி நிறுவனத்தின் நிதி குவியலானது 11.6 ட்ரில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகின்றது. கிட்டத்தட்ட 110 கிளைகளை 70 நாடுகளில் விஸ்தரித்திருக்ககூடிய இவ் ஸ்தாபனமானது பல்வேறு கம்பனிகளின் சொத்துடைமையாளராகத் திகழ்கின்றது. (உதாரணம்: Microsoft, Amazon போன்ற பல்வேறு நிறுவனங்கள்).
இத்தகைய சிக்கலுற்ற ஒரு பின்னணியிலேயே நாடுகள் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்வதும், பின் அத்தகைய ஒரு தலைமைத்துவத்திற்குத் தலைவணங்கும் சூழலும் உலகில் உருவாகத் தொடங்குகின்றது. ஆனாலும், இது ஒருவழி பாதை அல்ல. ஓர் ஆதிக்கச் சக்தியானது, தனது படைபலத்தால், அல்லது மூலதனக் குவியலாய் அல்லது தொழிநுட்ப வளர்ச்சி திறனால் அல்லது ராணுவ பலத்தால் மாத்திரம் நாடுகளை அடிமைப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் என்பது போக இந்நாடுகளே, இத்தகைய ஒரு சக்தியின் ஆதிக்கத்தை ஏற்று வழிமொழிந்து ‘அடிபணியும்’ ஒரு சூழலும் உருவாகின்றது. சாதாரண மொழியில் கூறுவோமானால் தாம் ஆளப்படுவதை வரவேற்று உச்சி முகர்ந்து கொள்ளும் ஒரு நடைமுறையை உருவாக்கிக் கொள்வது உலகில் ஒருமுனை ஒழுங்கு உருவாவதின் நடைமுறை ஆகின்றது.
5
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின், உலகில் ஒருமுனை ஒழுங்கானது இவ்வகையிலேயே நிச்சயிக்கப்பட்ட ஒன்றாயிற்று. அதாவது, சோவியத் உடைவின் பின்னரே அமெரிக்காவின் புதிய முகம் தெளிவுறக் காணக்கூடியதானது.
ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து நாடுகளும் (இரண்டொன்றைத் தவிர) இவ் ஆதிக்கத்தின் நடைமுறையை வரவேற்பதாய் இருந்தன.
ஆனால், இவ் ஆதிக்க முறையானது, இலகுவாக, ஒரு நாளில் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது முக்கியமானது.
நாடுகளை போன்றே மக்களும் தாம் ஆளப்படுவதற்கு ஓர் சம்மதத்தை வழங்க வேண்டியிருக்கின்றது. அதாவது, இத்தகைய ஓர் சூழலும், மனோ நிலையும் உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது.
அதாவது, மூலதனக் குவியல் அல்லது ராணுவ பலம் மாத்திரமே இத்தகைய அடிமைகளின் மனோ நிலையை உருவாக்கும் என்பதை விட, கலைக்கூடாகவும், அரசியலுக்கூடாகவும் பல்வேறு நிறுவனங்களுக்கூடாகவும், பல்வேறு சட்டவலு கொண்ட அமைப்புகளுக்கூடாகவும், பல்வேறு ஜனநாயக ஏற்பாடுகள் என்ற பெயரிலுமே இது நடைமுறைப்படுத்தப்பட்டு கட்டிக் காக்கப்படுகின்றது.
ஐ.நா முதல், அதன் அத்தனை மனித உரிமை சாசனங்களும், அமைப்புகளும் இது போன்றனவையே. மற்றும் கலையை எடுத்தால், அங்கே Magical realism முதல் இருப்புவாதம், அந்நியமாதல் போன்ற கலை வடிவங்களும் பின்னர் நீதிமன்றங்களும், சட்ட ஏற்பாடுகளும் அல்லது சட்டக் கோட்பாடுகளும் இதற்குள் அடங்குபவையே.
ஆனால், இவை யாவற்றையும் சேர்த்துப் பிடித்தாலும், இது இப்போக்கின் ஒரு துளியே என்பது கவனிக்கத்தக்கது. உலகில் தனக்கெதிராய், தோற்றம் கொள்ளும் வர்க்க அரசியலை வேருடன் களைவது இவ் ஆதிக்கச் சக்தியின், தேவைப்பாடுகளில் ஒன்றெனிலும், இப்படி களை எடுக்கும்போது, அதற்குப் பதிலாக (அதாவது கிளர்ந்தெழும் வர்க்க அரசியலுக்குப் பதிலாக) பிரதியீடாய், அதே அலைவரிசையில் கிளர்ந்தெழும் புதிய ஒன்றை உருவாக்கி நிறுத்துவதன் மூலம் மனிதனின் அரசியலைத் திசை திருப்பி விடலாம் என்ற எண்ணச் செயலை, இவ் ஆதிக்கச் சக்தியானது நன்கு உணரவே செய்துள்ளது.
எனவேதான், இதற்கான புதிய திட்டங்களும் நடைமுறைகளும் உருவாக்கம் செய்யப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன எனலாம்.
இன ரீதியாக மக்களைக் கூறுபோடுதல், மத ரீதியாக மக்களைப் பிரித்து வைத்தல் என்பன, வெறும் கவர்ச்சிகரமான வார்த்தைப் பிரயோகங்களினால் மாத்திரம் தூண்டிவிடப்படாமல் இவற்றுக்கான கச்சிதமான நடைமுறைகளும் களமிறக்கப்படுகின்றன.
உதாரணமாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒரு நாட்டில் விதைத்து வளர்ப்பதென்றால் அதற்குரிய நிதி, அதற்குரிய குறித்த சித்தாந்தம், பின் அச்சித்தாந்தத்தை நுணுகிப் பயிற்றுவிக்கும் பல்கலைகழகங்கள் இவை யாவும் தேவைப்படும் ஒன்றாகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே, குறுந்தேசியவாதமும் ஒரு நாட்டில் பரப்பப்படுகின்றது எனலாம். இவற்றிடை, இச்சித்தாந்தங்களை உருவாக்குவதிலும் பரப்புவதிலும், ஊடகங்களின் பங்கு தலையானதாக விளங்குகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில், இது வேறுபாடு கொண்டதாக இயங்காமல், உண்மையாகவே இயங்க முற்படுகின்றது. (இச்சிக்கலுக்குள் அகப்படக் கூடிய சில வித்தியாசம் பூண்டவர்கள் அரைபட போவது திண்ணம் என்றாகின்றது). தெற்காசியாவைப் பொறுத்தமட்டில், சவுதியும் கட்டாரும் அண்மை காலம் வரை ரோகிங்கிய முஸ்லிம் மக்களின் அரசியலை எவ்விதம் கையாண்டன என்பது இவ்வகையில் உதாரணமாகத் திகழக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.
இதுபோலவே, இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளும், அதன் பின்னணியில் எழுச்சி கண்ட சிங்களப் பெருந்தேசிய வாதமும், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய இஸ்லாமிய தீவிரவாதமும் எப்படி எப்படி கைகோர்த்தன என்பதனை இன்றைய இலங்கை புலனாய்வு துறையின் பணிப்பாளர் நீக்கப்பட்ட நடவடிக்கையானது அம்பலப்படுத்துவதாக உள்ளது. (நிலாந்த ஜெயவர்தன நீக்கம்: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால்: வீரகேசரி:21.07.2025).
அதாவது, இந்நிகழ்வுகள் ஒருபுறம் தீவிர இஸ்லாமிய இளைஞர்களையும், தமிழ் இளைஞர்களையும் உருவாக்கி, தேவை ஏற்படின் அவர்களை ஒரு நாட்டில் இருந்து பிறிதொரு நாட்டிற்கு இறக்குமதி செய்தும், ஏற்றுமதி செய்தும், மறுபுறத்தில் மகிந்த-கோத்தா-ரணில் போன்ற அரசியல் தலைமைகளை உருவாக்கி நிறுத்தவும் உதவி புரிவன என்பதில் மாற்றுக் கருத்தில்லை (இந்நிகழ்வுகளின் பின்னணியிலும் ஊடகங்களின் பங்கும் பாத்திரமும் தனியே அலசத் தக்கதுதான்).
வேறு வார்த்தையில் கூறினால், புதிய அரசியலின் தோற்றுவிப்பும் இதை ஒட்டிய புதிய கலைகளின் தோற்றுவிப்பும், அல்லது புதிய சட்டங்களின் தோற்றுவிப்பும் அல்லது இவை போன்ற பலவற்றினது தோற்றுவிப்பும் இதன் அடிப்படையில் நிகழும் அடிப்படை நிகழ்வுகளாகின்றன. இவற்றையே நாம் ஆதிக்கச் சக்திகள் உருவாகும் அரசியலின் ஒரு துளி என்கின்றோம்.
அதாவது, இப்புதிய நகர்வுகளானது காலத்தின் தேவைக்கேற்ப ஆதிக்கச் சக்திகளால் மாற்றி, மாற்றி அமைக்கப்படுகின்றன. அதாவது, புதிய ஆட்சி முறை அரசியல்-இங்கே உதயமாகின்றது. தந்ரோபாயங்கள் வித்தியாசப்பட போகின்றன. நகர்வுகள் வேறுபடுகின்றன. இதன் பின்னணியிலேயே Black Rock போன்ற நிதி நிறுவனங்களின் ஆளுமை என்றும் நீடித்து வாழக் கூடியதாய் சாசுவதமாகின்றது.
அதாவது, காசாவின் படுகொலைகளையும், உக்ரைனிய போர் முனைகளையும், எலன் மஸ்கின் விண்வெளி பயணங்களையும், அவரது வலைபின்னல்களையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் இப்பின்னணி பொறுத்த அறிவு அவசியமானது என்றாகின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.