ஒருமுறை, அவரது Yasnaya Polyanaவிலிருந்து, அவரது ‘எளிய மனிதர்களில்’ ஒருவரோடு நான் பயணம் செய்ய நேரிட்டது. இந்த எளிய மனிதர் கூறினார்: ‘கடவுளே என்ன இது… எப்பேர்ப்பட்ட மனிதர்… கண்டிப்பும்… நேர்த்தியும்… சீற்றமும்’. மேலும் கூறினார்: ‘ஏன். அவர் ஓர் அனார்க்கிஸ்ட்தான்’.

இந்த எளிய மனிதர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகவும், மிக பருத்த வயிற்றைக் கொண்டவராயும், பார்க்க பசிய இறைச்சியின் நிறம் கொண்ட தடித்த முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஏன் இவர் டால்ஸ்டாயை ஒரு அனார்க்கிஸ்டாக காண்பதில் திருப்தி கண்டார்? இக்கேள்வியை ஆழ்ந்து அலசும் போதே, ரஷ்ய ஆன்மாவில் உள்ளடங்கும் ஆழ்ந்த ரகசியங்களையும் நான் கற்கக் கூடியதாக இருந்தது.

யாரொருவரையும் திருப்திபடுத்துவது என்றால், அது டால்ஸ்டாய்க்கு, கைவந்த கலையாக இருந்தது. ஒரு புத்திபூர்வமான பெண்ணை விட இதனை அவர், கச்சிதமாக நிறைவேற்றினார். பலதரப்பட்ட வட்டங்களுடன் கைகோர்த்தவர், அவர். ஒரே மேசையில் இவர்களுடன் தேநீர் அருந்தியவர்.

மாபெரும் கோமகன் நிக்கலாய், வீட்டுச் சாயம் பூசுபவன் இல்யா, ஒரு புரட்டஸ்தாந்து மதப்பிரிவைச் சார்ந்த பட்சுக், ஒரு இசைக்கலைஞன், ஒரு கோமகள், ஒரு கவிஞன்-இவர்கள் அனைவரையும் அவர் வெறித்து பார்க்க வைத்து விடுவார். Lao-Tse இன் (சீன தத்துவஞானி) தத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்க உரையாற்றி கொண்டிருப்பார். பல்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு சேர்ந்திசை (Orchestra) செய்கையை இவர் ஒருவராக நிகழ்த்துவதாக, அது காட்சி தரும். ஒரு ட்ரம்ப், ஒரு ட்ரம், ஒரு புல்லாங்குழல், ஒரு எக்கார்டியன்-அனைத்தையும் இவர் ஒருவராகவே வாசித்து கொண்டிருப்பார்.

கடந்த காலங்களைப் பற்றி மிக அருமையாகப் பேசக்கூடிய மனிதர் அவர். சிறப்பாக, துர்கனேவை (Turgenev) பற்றி. ரஷ்ய கவிஞனான Afanscy Fet குறித்து பேசும் போது வாய் விட்டு சிரித்தபடி கூறினார்: ‘Fet ஐ பற்றி ஏதோ ஒரு நகைச்சுவையை எப்போதும் அவர் கூறக் கூடியதாக இருந்தது. நிக்கோலாய் நெக்ரசோவ் (1821-1878) எனும் ரஷ்ய கவிஞர்-இவரைப் பற்றிய பேச்சு உணர்ச்சியற்றதாயும் நம்பிக்கையற்றதாகவுமே இருந்தது. ஆனால், பொதுவில் எழுத்தாளரைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் ஏதோ அவரது வீட்டுப் பிள்ளைகள் போலவும் அவர்களின் குறைபாடுகள் அத்தனையையும் அவர் அறிந்திருந்தது போலவும், இருந்தபோதிலும் அவர்களின் பலவீனமான அம்சங்களை விட்டு பலமான அம்சங்களையே சுட்டிக்காட்டுபவராயும் இருந்தார்.

யாரையாவது தூற்றினால் கூட, அது, அவர் வழங்கும் கொடையாகத்தான் இருந்தது. அவரது விமர்சனம் கலக்கமளிக்கக் கூடியதுதான். இதனைக் கேட்டும் ஒருவர் இறுக்கமான புன்னகையுடன் தமது பார்வையைத் தாழ்த்தி கொள்வார்-ஒன்றுமே தங்க போவதில்லை.

ஒருமுறை, செக்கோவ் குறித்து கூறினார்:

‘இதோ ஒரு எழுத்தாளன். வலிமையில் அல்லது உண்மையில் இவன் டஸ்டாவஸ்கியை நினைவூட்டுவதாய் இருக்கின்றான். ஆனால் டஸ்டாவஸ்கி வெறுமனே புதிர்களை எழுதுவதிலும், பெருமைகள் பாராட்டுதலிலுமே நாட்டம் கொண்டிருந்தார். உஸ்பென்ஸ்கி (Uspensky) மேலும் எளிமை வாய்ந்தவரும் உண்மையானவரும் கூட. ஆனால், அவரிடம் பெரிதாய் திறமை இருந்ததாகவும் இல்லை. அவரிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமானால், நிச்சயம் அவர் ஒரு மாற்றுக் கருத்தாளராகவே-மறுதலிப்பவராகவே முடிந்திருப்பார்’.

‘ஆனால், நீங்கள் அவர், Tula பேச்சுவழக்கில் எழுதுவதாகவும் திறமையற்றவர் என்பதாகவும் குறிப்பிட்டீர்களே…’

‘ஆம்…அவர் மிக மோசமாகத்தான் எழுதினார். அதுவும் ஒரு மொழிநடையாகுமா? சொற்களை விட அதிகமாக இருத்தல் குறியீடுகள். திறமை என்பது இறுதியில், அன்பு செலுத்துவது என்றே பொருள்படும். யார் ஒருவர் அன்பு செலுத்தக் கூடியவராக இருக்கின்றாரோ, அவரிடம் திறமை குவிவது இயல்பானதாகின்றது’.

டஸ்டாவஸ்கியைப் பற்றிப் பேசும் போது, ஒரு வித தயக்கத்துடன், தவிர்க்கும் முகமாகவே இவர் பேசினார்-ஊக்கமின்றி- ஏதோ ஒன்றைத் தாண்டுவது போல!

‘அவர், கன்பூசியஸ் அல்லது பௌத்த தத்துவங்களைக் கற்றிருக்க வேண்டும். அது அவரைச் சாந்தப்படுத்தி இருக்கும்… அவர் படுமோசமாய், கிளர்ந்த ஓர் நிலையில் இருந்தார். அவர் கோபப்பட்ட போது, அவரது வழுக்கை தலையில் ஆங்காங்கே வீக்கங்களும் புறப்பட்டன. அவரது காதுகளும் துடியாய்த் துடித்து இழுத்துக் கொண்டன. அவர் நிறைய ஆழமாகவே உணர்ந்தார். உணர்ச்சி பிழம்பாக செயல்பட்டார். ஆனால் எப்படி சிந்திப்பது என்பது அவர் அறியாத விடயமாக இருந்தது. சிந்திப்பதை அவர் Fourierists இடத்திலும் Butashevich இடமிருந்தும் கற்றுக் கொண்டார். (ஒருவர் பிரான்சிய தத்துவ ஞானி. மற்றவர் ரஷ்ய கற்பனாவாதி). அதன் பின் தன் வாழ்நாள் முழுவதும் இவ்விருவரையும் அவர் நிந்திக்கச் செய்தார். அவரது ரத்த நாளங்களில் ஏதோ ஒரு யூதத் தன்மை ஓடவே செய்தது. அவர் ஒரு சந்தேக பிராணி. சண்டைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இரங்கத்தக்கவர். பல நபர்கள் அவரைத் தேடித் தேடி வாசிப்பது வேடிக்கையானது. அவரது Idiots, Hobbledehoys, Raskolnikovs போன்றவை வாசிக்க மிக எளிதானவை. உள்வாங்கக் கூடியவை. ஆனால், Leskovவின் நூல்கள்-இவற்றை யாருமே படிப்பதில்லை. அவர் ஒரு உண்மையான எழுத்தாளன். அவரை நீ வாசித்ததுண்டா?’

‘மொழியை பற்றிய அவரது அறிவு அபரிமிதமானது. மொழியை எப்படியும் வளைக்க கூடியவர் அவர். ஆனால், நீ அவரை விரும்புகிறாய் என்பது புதிரானது. உன்னில் ஏதோ ரஷ்யன் அல்லாத ஒரு தன்மையுண்டு. உனது சிந்தனைகள், உண்மையில், ரஷ்ய சிந்தனைகள் அல்ல. கோபப்படாதே. எனக்கு வயது சென்றுவிட்டது. நான் ஒரு வயோதிபனாக இருக்கலாம். இன்று உள்ள ரஷ்ய நவீன இலக்கியத்தைப் புரிவதில் எனக்குச் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் எப்போதும் என்னை உறுத்துவது எதுவெனில்-இவை, ரஷ்ய தன்மையுடன் படைக்கப்படவில்லை என்பதே. ஏதோ வெண்பாக்கள் போல எழுதிக் குவிக்கின்றார்கள். எதற்காக இவை? யாருக்காக? கவிதை எழுத வேண்டுமென்றால் அதனை புஷ்கின், துர்கனேவ், Fet ஆகியோரிடமிருந்து கற்றாக வேண்டும். என்னை நோக்கினார்: ‘நீ ரஷ்யன்தான். ஆம். மிக, மிக, மிக…’.

ஒருநாள் டால்ஸ்டாயின் மகளுடன், செக்காவ், குறுகிய ஒரு பாதை நெடுகிலும் ஒரு தோட்டத்துள் நடந்து கொண்டிருந்தார். நாற்காலியில் அமர்ந்து அவர்கள் செல்வதையே உன்னிப்பாகப் பார்த்த, டால்ஸ்டாய் என்னிடம் சொன்னார்: ‘அழகான மனிதன். அடக்கமும் அமைதியும் நிரம்பியவன். ஒரு பெண்ணைப் போல… பார், அவனது நடை கூட ஓர் இளம் வயது பெண் நடப்பதைப் போல்… அழகானவன்தான்…’-இதனை அவர் மெல்லிய ஓர் அமுங்கிய குரலிலேயே என்னிடம் கூறினார்.

ஒரு நாள் மாலை எங்களுக்கு Father Sergius இன் ஒரு பகுதியை வாசித்து காட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் Father Sergiusஐ பாலுணர்வுக்குத் தூண்டி விடும் காட்சி. வாசித்தபின் தலையை நூலில் இருந்து எடுத்து, கண்ணை மூடியபடி கூறினார்: ‘ம்…கிழம், நன்றாகவே எழுதியுள்ளது…’

இந்த வார்த்தைகள் என்னில் விளைவித்த தாக்கங்களைச் சொல்லி மாளாது. இதனை இவரிடம் மறைக்க நான் பெரும் பிரயாசை செய்ய வேண்டியிருந்தது. என் இதயம் படபடத்தது. புதிய ரத்தம் முகத்தில் பாய்ந்தது. வர்ணிக்க முடியாத அளவில் அல்லது வார்த்தையில் அகப்படாத அளவில் அவரது பேச்சின் வசீகர தன்மை இருந்தது. மேலோட்டமாய்ப் பார்க்குமிடத்து அவை பொருந்தாதது போல தோன்றுவதுண்டு. சில வார்த்தைகள், ஓயாமல் திரும்பத் திரும்ப அவரால் சொல்லப்படுகின்றன. இது விவசாய பண்பு. ஆனால், இது அவர் நேரடியாகப் பேசும் போதே கண்டுகொள்ளக்கூடியது. அவரது பேச்சின் வலிமையானது, அந்தக் குரலின் ஏற்ற இறக்கத்திலும், அப்பேச்சின் உயிர் தன்மையிலும் மாத்திரம் தங்கியிருப்பதற்கில்லை. மாறாக அவரது கண்களில் வீசும் ஒளி கணலானது அவரது பேச்சிற்கேற்ப மாறுபடும் - வளம் பெறும். இது போன்ற அழகிய கண்களை நான் பார்த்தது கிடையாது. ஒரு சோடி கண்களில் ஓராயிரம் கண்கள்.

Suler, செக்காவ், Sergei Lvovich ஆகிய மூவரும் அமர்ந்து பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரமாய், அவர் இந்தச் சம்பாசணையில் ஈடுபடாமல், அமைதியாக இருந்தார், பேசாது.

பின் திடீரென கூறினார்: ‘பெண்களைப் பற்றிய உண்மைகளை நான் ஒரு நாள் கூறத்தான் செய்வேன்-எனது ஒரு கால் புதைகுழியில் இருக்கும் போது… சொல்லியபின் பெட்டிக்குள் படுத்து, மூடியை இழுத்து மூடி விடுவேன்… என்னைப் பிடியுங்கள் அப்போது…’ அவரது கண்கள் அப்போது வித்தியாசமாகப் பிரகாசித்தன. ஏதோ எம்மைப் பயமுறுத்துவது போல.

அவரது ஆன்மா வித்தியாசமான ஒரு பொருள். Vasily Buslayev என்ற ஐதீக புரூடனின் பராக்கிரமம். Father Avvakum இன் (1638-1682) பிடிவாதம். Chaadayevவின் நம்பிக்கையீனம் - இவை மூன்றும் ஒன்றாய்க் கலந்தது. Father Avvakum பண்பு, அவரது ஆன்மாவை சித்திரவதை செய்து புரட்டி எடுக்க Vasily Buslayev வின் பண்பு அவரை தாந்தேயையும் சேக்ஷ்பியரையும் மறுதலிக்க வைத்தது. Chaadayevவின் கூற்று அவரது ஆன்மா அடைந்த வதைகளையும் வேதனைகளையும் கண்டு அவரையே நகைக்க வைத்தது.

அவரில் காணப்பட்ட, தொன்மைகள் சார்ந்த பழைய ரஷ்ய மனிதனே, விஞ்ஞானத்தை, இவர் மறுதலிக்கக் காரணமாய் இருந்தவன்.

இது போன்றே, ரஷ்யாவில், ஒரு மானுட அடிப்படையில், வாழ்வைப் புதிதாய்க் கட்டுவிப்பதற்கான முயற்சிகளின் வரலாறே, ஈற்றில் ஓர் சாத்வீக அனார்க்சிசத்தையும் (Passive Anarchism) ரஷ்யாவில் கொண்டு வந்து சேர்த்தது எனும் கருத்தை நிராகரிக்கவும் இவரை இது வற்புறுத்தியது.

Simplicissimus இன் கார்டூனிஸ்ட்டான, Olaf Gulbransson, எதனாலோ, தூண்டப்பட்ட காரணங்களால் டால்ஸ்டாயின் இந்த அடிப்படை அம்சங்களைக் கண்டறிந்ததாக இருந்தது. அவர் வரைந்துள்ள டால்ஸ்டாயின் உருவப்படத்தைக் கூர்ந்து நோக்கினால், அனைத்தையும் தூக்கியெறியும் பராக்கிரமத்தின் இருப்பைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு உருவமானது உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். அதே ஆழமான கண்கள். எந்த ஓர் புனிதத்தையும் துச்சமாகத் தூக்கி எறியும் ஒரு துணிச்சல். எந்த ஒரு மாயஜாலத்திற்கோ அல்லது மூட நம்பிக்கைக்கோ அல்லது இது போன்ற சோம்பிய எண்ணங்களுக்கோ இடம் தராத ஒரு ஆளுமை.

டால்ஸ்டாய்களின் மத்தியில், மிக உயர்ந்த கோபுரமாக இவர் காட்சி தருகின்றார். இவர் எழுப்பும் நாத ஓசை, உலகம் முழுவதும் வியாபித்து ஒலிக்கின்றது. இவரது ஓசையைக் கேட்கும் ஏனைய டால்ஸ்டாய்கள், குட்டி நாய்கள் போன்று தாவியும், குரல் எழுப்பியும் ஒருவரை ஒருவர், களவாகப் பார்த்து அதி உச்சமாய் தாவுவது அல்லது குரைப்பது என்பதில் போட்டிப் போடுகின்றார்கள். இந்த பிரகிருதிகள்தான் டால்ஸ்டாயின் வீட்டையும் தோட்டத்தையும் (Yasnaya Polyana) நிறைக்கும் கலைஞர்கள் ஆவர். பாசாங்கும், கோழைத்தனமும், சோரம் போதலும், எதிர்பார்ப்புகளும் இவர்களிடை காட்டாறு வெள்ளம் போல் பொங்கி வழிகின்றது.

இவ்வகையில் இவர்களில் ஒருவர், Yasnaya Polyana வில் முட்டை உண்பதை முற்றாக மறுதலித்தார். இதற்கான காரணம், கோழியின் மேல் அவர் கொண்ட ஈவிரக்கம் எனக் கூறப்பட்டது. Tula ரயில் நிலையத்தில் இவர் ஆவலுடன் கோழி இறைச்சியை உண்டு மகிழ்வதைப் பார்த்ததுடன் கூடவே, அவரது கூற்றான, ‘கிழவர் ஆகக் கூடத்தான் பேசுகிறார்’ என்பதனையும் காதாரக் கேட்டேன்.

இப்படித்தான் சாதுர்யம் சார்ந்த இப்பெருங்குடியினர், தத்தமது லௌகீக காரியங்களுக்கு ஏற்றாற் போல், திறமையுடன் இவ்வகை ஏமாற்றத்தை முன்னெடுத்தனர்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.