* ஓவியம் AI
உக்ரைன்-ரஷ்ய மோதலானது, உலகின் முகத்தைத் தீவிரமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டுள்ளது எனச் சிலர் கருதுவர். இன்னும் சிலர் இதனை ஒரு நிரந்தர மாற்றம் எனவும் வாதிப்பர். மேலும் சிலர் இது Uni Polar World என்பதிலிருந்து Multi Polar World என்ற உலகை நோக்கிய ஒரு பயணம் எனவும் விவரிப்பர்.
இது, சுவாரஸ்யமானது.
கிஷோர்-மஹுபானியும் (Kishore-Mahoubani) “அமெரிக்கா தனது இலக்கைச் சரியாகத் தேறாமல் தொடுத்துவிட்ட முட்டாள்தனமான போர் இது” என விசனிப்பர்.
ஹென்றி கிசிஞ்சரைத் துணைக்கு அழைத்து, அவர் மேலும் கூறுவதாவது: “அது ஒரு நீண்ட நண்பகல் உணவு. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம். மீட்டுப் பார்க்கும்போது அவர் கூறியதின் மொத்தச் சாரமும், அமெரிக்காவானது தனது இலக்கைச் சரியாக நிர்ணயிக்காமல் போரில் இறங்கி விட்டது என்பதேயாகும்”.
கிசிஞ்சர், ஆரம்பத்தில் மாத்திரம் உக்ரைன் போருக்கு எதிராக இருந்தவர் என்பது தெரிந்ததே.
மீன் தனது இரையைக் கவ்விக்கொள்ள தன் வாயைத் திறந்து, ஈற்றில் ஒரு திமிங்கலத்தையே விழுங்க எத்தனித்தக் கதைதான் இது.
வியட்நாம் யுத்தத்தின்போது, அதனை முழுமையாகப் பார்த்து, அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே, அமெரிக்க நலன்களுக்குப் பாதிப்பில்லாதது எனக் கிசிஞ்சர் முடிவு செய்கின்றார்.
“ஆனால், அந்தப் புள்ளிக்கு அமெரிக்கா வந்து சேர 04 வருடங்கள் பிடித்தன…” என்பார் கிசிஞ்சர்.
ஆனால், புட்டினின் விடயத்தில், இது மறுதலையாக இருக்கின்றது.
“04 வருடங்களை” மிகத் தெளிவாகப் பார்த்த ஒரு மனிதராகவே அவர் காட்சி தருகின்றார்.
MINSK Agreement தொடக்கம், இன்று வரை அவரது முகபாவத்தில் பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டதாய் இல்லை. எப்போதும் போல சிரித்த முகத்துடனேயே காட்சி தருகின்றார். வார்த்தைகளையும், ஒரு நாகரிகக் கட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டுகின்றார். ஆரம்பத்தில் MINSK Agreement ii என்ற பெயரில் ஒரு ஒப்பந்தமானது 2015இல் கைச்சாத்திடப்பட்டபோது சிரித்த முகத்துடனேயே அவர் காட்சி தந்தார்.
பின், அது, மீண்டும் 2019இல், இது, இரண்டாம் உலகப்போரின் நோமெண்டி ஒப்பந்தத்தை ஒத்தது என்ற போது, புட்டின், அப்போதும் சிரித்தபடியே இருந்தார். இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் ஜெர்மனியின் ஏஞ்சலா மெக்ரல், பிரான்சின் மெக்ரோன், புட்டின், செலன்ஸ்கி ஆகியோராவர்.
பின், 03 வருடங்கள் கழிந்தநிலையில், யுத்தம் ஆரம்பித்து தீவிரமடைந்தபோது, ஏஞ்செலா மெக்ரல், இந்த MINSK ஒப்பந்தமானது செலன்ஸ்கிக்கு யுத்த தயாரிப்புகள் செய்வதற்கு வேண்டிய நேரத்தைப் பெற்றுக்கொடுக்கவே செய்துகொள்ளப்பட்டது என்று விஷயத்தைப் போட்டுடைத்தபோதும், புட்டின் சிரித்துக் கொண்டேதான் இருந்தார்.
இதன் பின்னர் G-7 மாநாட்டின்போது, இங்கிலாந்தின் ஜோன் போரிஸ் தனது மேற்சட்டையைக் கழட்டித் தன் வெற்றுடம்பைப் புட்டினுக்குக் காட்டிப் பயமுறுத்திய போதும், புட்டின் சிரித்தவாறே, “இத்துடன் இவர் நிறுத்தியதே பெரிது-இன்னும் கீழிறக்காமல்” எனக் கூறி, புன்னகைத்தப்படியே இருந்தார்.
பல வருடங்கள் கழிந்தநிலையில், இந்த இச்சிரிப்பு BBC போன்ற மேற்கத்தைய ஊடகங்களாலும் கண்டுகொள்ளப்பட்டதாயிற்று. கடந்த கிழமைகளில், BBC யின் தலைப்பு செய்தி: “கிரம்ளின், இன்று முற்று முழுதாய், சிரித்த முகத்துடனேயே காட்சி தருகின்றது” (01.05.2025).
ஆனால் இச்சிரிப்பின் பின்னால், உலகின் முகம் தீவிரமாக மாறுதலடைகின்றது என்பதே எமது கேள்வியாகின்றது.
உக்ரைன் ஆனந்தித்த கணங்கள்:
கிரைமிய பாலம் தாக்கப்பட்டபோதும், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டபோதும், மொஸ்கோவின் கோபுரத்தை ட்ரோன்கள் தாக்கித் தீப்பிடிக்க செய்தபோதும், ஏங்கெல்ஸ் விமானத்தளம் இது போன்றே தாக்குதலுக்கு உள்ளானபோதும் உக்ரைன் மகிழ்ந்திருந்தது. அதன் கொண்டாட்டத்தை முழுமைப்படுத்த அது முத்திரைகளையும் வெளியிட்டு மகிழ்ந்திருந்தது.
ஆரம்பத்தில், செலன்ஸ்கியும் ராணுவ உடையில் அடிக்கடி தொலைகாட்சிகளில் தோன்றினார். (இப்போது வேறு உடையில்).
வாரத்திற்கு ஒருமுறை, அவர், சொல்லிவைத்தாற்போல் நாடுகளின் பாராளமன்றங்களுக்கு அழைக்கப்பட்டார். அமெரிக்க சபாநாயக பெண்மணியை–அவர் 85 வயதான கிழவி என்றபோதிலும் கட்டிப்பிடித்து வாயில் முத்தமிட்டு மகிழ்ந்தார் (உலகமே அதிர்ந்து போனது என்பதெல்லாம் வேறு விடயம்).
அன்று, போர்க்கோலம் பூண்டிருந்த அவர் 50 நாடுகளுக்கும் மேலாக, அவற்றுக்கு, உரை நிகழ்த்தினார்.
ஐரோப்பிய-ஆங்கிலேய தலைவர்களும் போட்டா போட்டிப்போட்டு உக்ரைனுக்கு விஜயம் செய்வது நேற்றைய மாமூல் நிகழ்வாயிற்று.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு எம்மைப் பின்னடைய செய்திருந்தாலும், “உக்ரைனுக்கான தமிழர் இயக்கம்” என்ற பெயரில் இயங்கும் அளவுக்கு உக்ரைன் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது.
இருந்தும், இவற்றையெல்லாம் உன்னிப்பாக, நிதானமாகப் பார்த்து, தன் காலடியை எடுத்து வைக்கத் துவங்கியது புட்டினின் ரஷ்யாவே.
ரஷ்ய பின்னடைவுகள்:
பொருளாதார தடைகளால் அதிர்ந்ததும், உலகின் விநியோகங்கள் அல்லது வியாபார கொடுக்கல்-வாங்கல்கள், உற்பத்தி யாவையும் ஸ்தம்பிதம் அடைந்ததும், 11 கோடி டொலர் செலவில் அமைக்கப்பட்ட ஜெர்மனிக்கான நோட்ஸ்ட்ரீம் i ரூ ii எரிவாயு குழாய்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதும் (20.09.2022) அன்றைய உலகு நடப்புகளாயின.
இருந்தும், இதன்போதும், புட்டின் சிரிப்புடன் இருப்பதைப் பார்த்து வயிற்றெரிச்சல் தாங்காமல் பைடன், புட்டினைத் தூற்றத் தொடங்கினார்.
அமெரிக்க சபாநாயகரை வாயில் முத்தமிட்டது வேறு இவரது வயிற்றெரிச்சலை இருமடங்காய் கூட்ட, இந்தத் தள்ளாத வயதிலும் பைடன் “புட்டின் ஒரு கொலையாளி” (2021) என்றும் “புட்டின் ஒரு வேசியின் மகன்” (2024) என்றும் வாய்க்கூசாமல் தூற்ற ஆரம்பித்தபோதும், புட்டின் சிரிப்புடனேயே காட்சி தந்தார்.
மாறிய உக்ரைன்-ரஷ்யாவின் முகபாவங்கள்:
விண்வெளியைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பது, நவீன யுத்தம் கோரும் ஓர் நடைமுறையாகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால், விண்ணிலிருந்தே இன்றைய நவீன யுத்தம் துவங்குகிறது என்பது நெஞ்சில் இருத்தத்தக்கதே.
ட்ரோன்களைக் களமிறக்குவது, பின் செயற்கைக் கோள்களை இடைமறிப்பது, பின் அணுவாயுதங்களை விண்ணில் நிறுத்துவது, பின் முழு யுத்தப் பிரதேசத்தையும் தனது இலத்திரனியல்-காந்தவியல்-மின்னியல் வலையின்கீழ் கொண்டுவந்து, அனைத்தையும் ஸ்தம்பிதம் செய்வது - இவை நவீன போர் முறையின் உத்திகளாகின்றன.
இதுபோக, தாங்கிகளையும், நவீன நீர்மூழ்கிக் கப்பல்களையும், பென்னம் பெரிய ஆர்ட்டிலரிகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணைகளையும் களமிறக்கிக் கொள்வது இன்றைய நடைமுறை போர் யதார்த்தங்களாகின்றன.
உக்ரைன்-ரஷ்ய போரில், இவை அனைத்தும் தாராளமாகப் பாவிக்கப்பட்டன என்பது பதிவு.
நவீன இஸ்கந்தார் ஏவுகணைகள் முதற்கொண்டு (ISKANDAR-M: MACH 6-7) ஒரேசினிக் (ORESHNIK: 10 MACH) வரை பாவிக்கப்பட்டன (27.11.2024).
எலன் மஸ்க்:
இத்தகைய ஒரு உக்ரைன்-ரஷ்ய போரின்போது, எலன் மஸ்கின், “Star Link” செயற்கைக் கோள்கள் முதுகெலும்பாகச் செயல்பட்டன, எனக் கூறப்படுகின்றது.
சில கிழமைகளின் முன்னாள்கூட தனது ரொக்கட்டுக்கள் மூலம் 25 செயற்கைக் கோள்களை எலன் மஸ்க் விண்ணுக்கு அனுப்பி வைத்தார் என்ற செய்தி வெளிவந்திருந்தது. (24.02.2025).
“எமது இலக்கு 39400 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்புவதே” என்ற எலன் மஸ்கின் அறிவிப்பு உலகை அதிரச் செய்தது.
இதனாலோ என்னவோ, இன்றைய சீனமும், கிட்டத்தட்ட நாளைக்கு ஒன்று என்ற அளவில் இன்று செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனைப் படைத்து வருகின்றது, அது.
“38000 செய்மதிகளை விண்ணில் நிறுத்துவதே எமது இலக்கு” என்று சீனம் போட்டிப் போட்டு, அண்மையில் அறிவித்திருந்தது.
7.7 பில்லியன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருக்கும் Star Link இன் உண்மையான உள்நோக்கம் யாதென வெளிப்படுத்தப்படாததாகவே இருக்கின்றது.
இருந்தும், 100 மில்லியன் டொலர் செலவிலான Star-Ship அதன், அதி நவீன Super பளு கொண்ட ரொக்கட்டானது (Heavy Weight Rocket) இரண்டாவது முறையாக வெடித்துச் சிதறியபோது, Multi Polar World இன் உருவாக்கம் வாண வெடிகளுடன்தான் ஆரம்பிக்கப்படுகின்றதோ என்ற சந்தேகமும் தட்டுப்படாமல் இல்லை.
இத்துடன், இன்றும், எலன் மஸ்கின், 120 செய்மதிகள் காரண காரியமில்லாமல் எரிந்து விழுந்து சாம்பலாகின (07.02.2025). மேலும் 20 முற்றாகச் செயலிழந்து மறைந்தன, (15.02.2025) என்பதும் சேர்த்து வாசிக்கத்தக்கதே.
ஆனால் புட்டினின் முகம் வழமை போல் சிரித்தவாறே இருந்தது.
போதாதற்கு, அவர் மிக அண்மையில் பின்வருமாறு கூறியும் இருந்தார்: “எலன் மஸ்க் ஓர் விதிவிலக்கான மனிதர். இவர் ஒரு பிறவி ஞானி. உலகில் இப்படியாய் பிறப்பவர்கள் இரண்டொருவரே. செவ்வாய் கிரகம் பொறுத்த இவரது ஆர்வம் கட்டுக்கடங்காதது. இடைநிறுத்தப்படாதது” (17.04.2025).
தனது ரொக்கட்டுக்கள் வெடித்துச் சிதறிய சூழ்நிலையில், புட்டின் இப்படி கூறியதாவது, எலன் மஸ்கிற்குப் போதிய ஆறுதலைத் தந்திருக்கும் என நம்ப இடமுண்டு. (இதனைப் புட்டின் வேண்டுமென்றே கூறினாரா என்பது தெரிய இடமில்லை).
உலக முகங்களின் வெடிப்புகள்:
இவ் இழுபறிகள் ஒருபுறம் இருக்க, உலகின் உண்மை இழுபறிகள் அதன் பொருளாதாரம்-வியாபாரம்-விநியோகம்-உற்பத்தி சார்ந்ததாகவே இருந்தது.
உதாரணமாக, தெற்காசியாவை எடுத்துக் கொண்டால் ஆசியன் அமைப்பானது (ASEAN)> தசாப்தங்களாக, அமெரிக்காவின் செல்வாக்கு மட்டத்தில், அமைந்திருந்த ஓர் அமைப்பாகும்.
1967இல், பத்து நாடுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இத்தென்கிழக்கு அமைப்பானது, 600 மில்லியன் மக்களை இன்று உள்ளடக்குவதாகவும், 10.2 ட்ரில்லியன் டாலர் GDPயை (2022 இல்) அது உற்பத்தி செய்வதாகவும் இருக்கின்றது. 2022இல் அமெரிக்காவுடனான, இதன் வர்த்தக நிலை 500 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியது.
இச்சூழலில், இதன் பாரம்பரியத்தையும் நோக்கத்தையும் ஆதிமுதல் அந்தமாக அறிந்து வைத்திருந்த சீனா 1980-1985 காலப்பகுதியில், மெது மெதுவாகத் தனது காலடியை எடுத்து வைத்து 40 பில்லியன் டொலருடன், தனது, கொடுக்கல்-வாங்கலை ஆரம்பித்தது. வேறு வார்த்தையில் கூறுவதானால் இந்த 40 பில்லியன் டொலர் யாருக்கும், எந்த நிலையிலும் அச்சுறுத்தலாக அமையவோ அல்லது போட்டியாகவோ அமையவோ போவதில்லை.
ஆனால், 2023ம் வருடத்தை அடைந்தபோது சீனாவின் வர்த்தக நிலையானது, சிங்கபூருடன், அமெரிக்காவை விஞ்சி 975 பில்லியன் டொலராக உயர்ந்து காணப்பட்டது.
இது தொடர்பில், கிஷோர்-மஹுபானி இரு விடயங்களை முன்வைப்பார்: ஒன்று, சிங்கபூர் உட்பட உலகமானது சீனத்தால் நன்மை பெறப் போகின்றது என்ற உண்மை. மற்றது, சீனப் பொருட்களின் விநியோகத்தை உலகம் இன்று வரவேற்று ஆராதிப்பதாய் உள்ளது என்பது. அதாவது, வேறு வார்த்தையில் கூறுவதானால், உலகத்தின் முகம் இன்று இப்படியாய் மாறுதலடைந்துள்ளது.
அமெரிக்க மாற்றங்கள்:
இதற்கியையவே, அமெரிக்காவின் முகத்திலும் மாறுதல் ஏற்படாமல் இல்லை.
ஒரு காலத்தில், உலகின் காவல் நாயகனாகவும் (World Police) உலகின் ஒரே ஒரு பேரரசனாகவும் (சோவியத்துக்கு பின்) விளங்கிய அமெரிக்காவின், இன்றைய நிலைமை பெரும் சோகமயமானது.
வீடற்றோர், சிறையில் வாடுவோர், வறுமை கோட்டின்கீழ் வாழ்பவர் ஆகியோர் அனைவரும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து காணப்பட்ட போதிலும் விடயத்தின் உண்மை ஆழமானது, இவற்றைவிட, பின்வரும் மூன்று முக்கிய புள்ளிவிபரங்களில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது:
i. அமெரிக்க டொலரின் இன்றைய நிலை.
ii. அமெரிக்கத் திறைசேரி முறிகளின் இன்றைய நிலை.
iii. அமெரிக்க உள்நாட்டு கடன் விவகாரத்தின் (தேசிய கடனின்) இன்றைய நிலை.
டாலரின் மதிப்பிறக்கம்:
இவற்றில், முதலாவதாக, டாலரின் அந்தஸ்த்தை எடுத்துக்கொள்வோம். BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) இன்று, 2023இல், 65 வீத வர்த்தகங்களைத் தமது சொந்த நாணயத்தில் செய்ததாகப் பதிவுகள் கூறுகின்றன.
இது போக, சீனா-ரஷ்யா வர்த்தகத்தைத் தனிப்பட, எடுத்துக்கொண்டால்கூட, அங்கே 70 சதவீதமான வர்த்தகமானது உள்நாட்டு நாணயத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்கத் திறைசேரி வரிகள்:
இரண்டாவது பேரிடி, அமெரிக்காவின் திறைசேரி முறிகளைச் சார்ந்ததாகும். 2012-2016 ஆண்டுகள் வரை சீனாவே அமெரிக்கத் திறைசேரி முறிகளை வாங்குவதில் முதலிடம் பெற்ற நாடாக விளங்கியது. இவ் ஆண்டுகளில் அது வைத்திருந்த அமெரிக்க திறைசேரி முறிகளின் மொத்த பெறுமானம் 1.3 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது.
ஆனால், அண்மைக்காலத்தில் (முக்கியமாக BRICS தோன்றுகையின் பின்னர்) சீனா, அமெரிக்கத் திறைசேரி முறிகளை வாங்குவதை நிறுத்தியது மாத்திரமல்லாமல் அதனை சந்தையில் மெதுவாகக் கரைத்துவிட எத்தனித்தது. இன்று, அது வெறும் 759 மில்லியன் டொலர் பெறுமானமிக்க திறைசேரி முறிகளையே கொண்டிருப்பதாய் தெரிகின்றது. (டிசம்பர் 2024).
அமெரிக்காவின் உள்நாட்டு கடன்:
மூன்றாவது தாக்கம், அமெரிக்காவின் உள்நாட்டு கடன் குறித்ததாகும். இது தற்போது 36.22 ட்ரில்லியன் டொலர்களை, வரலாறு காணாத வகையில் எட்டிப் பிடித்துள்ளதாக செய்திகள் காட்டுகின்றன.
சுருங்கக்கூறின், மேற்குறிப்பிட்ட மூன்று தலையிடிகளும் இன்றைய அமெரிக்காவை, ஒரே நேரத்தில் தாக்குவது மாத்திரமல்லாமல், இவை, பற்பல ட்ரில்லியன் டொலர்களை உள்ளடக்கியது எனக் கூறுவது உலகத்தை ஒரு விதத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்குவதுதான்.
இந்நிலையில், அமெரிக்கா கொடுத்ததாகக் கூறப்படும் உக்ரைனுக்கான 500 பில்லியன் டொலர் போர் உதவியானது வெறும் பிச்சைகாசு ஆகின்றது.
ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை, இதுவும் கூட, இன்றைய உலகில், இதனைப் (பிச்சைகாசை) போராடிப் பெறப்பட வேண்டிய ஒன்றாகின்றது.
இதன் தாக்கம்:
இப்படியாக அசுர அடிகளால் திணறிப்போய் கிடக்கும் அமெரிக்கா, இதற்கியைய, தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய இறுக்கமான தேவையையும் எதிர்நோக்குகின்றது.
விநியோகத்தில், உற்பத்தியில், அல்லது வியாபாரத்தில் தலைதூக்கியாக வேண்டுமென்றால், அது, சீனா-ரஷ்யா நாடுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்பந்தத்தை அது எதிர்நோக்குகின்றது-திமிங்கலத்தை விழுங்க வாய்த் திறக்கும் கதைதான் இது.
சீனாவை ஒரு கட்டுக்குள் கொண்டு வராமல் கடற்பாதைகளில் சுதந்திரமாக, தனக்கு விருப்பமான முறையில் நடக்க முடியாது. இதுபோலவே, ஏனைய விவகாரங்களிலும் தனது அந்தஸ்தை மீள நிலைநிறுத்துவது என்றால், அது, அதாவது, வழமையாக தான் கொள்ளையடித்து வரும் நடைமுறையில் இருந்து விலகி புதிய பல பரிமாணங்களை அது தேர்ந்தாக வேண்டி உளது.
இதன் முதற்கட்டமாக, சீனா-ரஷ்யாவை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது, தேவைப்படும் என்றாலும், இது இப்போது. புதிய பரிமாணங்களை எட்டுவதாய் உள்ளது. அதாவது தாய்வான் என்ற நாடு, சீன முரண்பாட்டில், பாவிக்கப்படும் போது, அதற்கு புதிய கொடுப்பனவுகள் தாய்வானுக்குத் தேவைப்படுவது போல ரஷ்ய அமெரிக்க முரண்பாட்டில் புதிய கொடுப்பனவுகள் உக்ரைனுக்குத் தேவையுறுவதாகின்றது.
ஆனால், முதலில் உக்ரைன் ஏன் தேர்வு செய்யப்பட்டது–அதன் சிறப்பம்சங்கள் யாவை என்பது கேள்வியாகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.