- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த " மலையகம் 200" என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைகு என் நன்றி.  -


“பிரட்டின் அதிர்விலே
விடியலே அதிர்ந்து போய்
தேயிலையின் மீது
சரிந்துகிடந்து…
… …
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரைகளை
அமைவுற நோக்கியே…
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…”

மலையக மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அல்லது நான்கு ஐந்து தலைமுறைகள், கழிந்தப் பின், மலையக மக்கள் தாமும் இந் நாட்டில் ஒரு குடியினர்தாம் என்று தமது சமூக இருப்பை இந்நாட்டில் கட்டமைத்து வேர்பதித்து கொள்ளத்துவங்கியதன் பிரதிபலிப்பாய், அவர்களின் பிரதிநிதியாய் தோன்றியிருக்கக்கூடிய ஒரு கவிஞன் இப்படியாய்ப் பாட முன் வந்தான். பெயர்: சீ.வி. வேலுப்பிள்ளை.

வேலுப்பிள்ளையின் முக்கியப்படைப்புக்களான 'தேயிலைத்தோட்டத்திலே' (In The Ceylon Tea Garden 1952–1953) அல்லது 'உழைக்கப்பிறந்தவர்கள்'  (Born To labour 1958–1959) போன்றே 1959 இல் வெளிவந்திருக்கக்கூடிய அவரது 'மலையக அரசியல் தலைவர்களும், தளபதிகளும்' என்ற நூல் மிக முக்கியமானது.  அவரது அரசியலை நுட்பமாக வெளிக்கொணரக்கூடியது. ஆனால், அவரது அரசியலைப் போன்றே அவரது கவிதை மனநிலையையும் இங்கே அலச முற்படுவது, இனி மலையகத்தில் உருப்பெறபோகும் இளம் கவிதை மனங்களுக்கு பயன் தருவதாய் அமையக்கூடும். இதனை இசை உலகின் விளிம்புகளில் ஒளிரக்கூடிய சில உதாரணங்களுடன் விளக்க முற்படலாம்.

II

இசையைப் பொறுத்து பல்வேறு இலக்கிய கர்த்தாக்களும் அரசியல் தலைவர்களும் அவ்வவ்போது தமது கருத்தை முன்வைக்கத்தவறவில்லை. ஜெயகாந்தனின் வீணை குறித்த அபிப்பிராயம் குறிக்கத்தக்கதாகின்றது. ‘ஒரு நுட்பமான கருவி. அதனை மேடைகளில் வாசித்தலாகாது. அந்தரங்கமாய்… தனித்த அறைகளில்…’ எனுமாப்போல் அவர் கூறியுள்ள கருத்துக்கள் சற்று ஆழமாகவே பார்க்கத்தக்கதுதான். இது போலவே பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர் புல்லாங்குழல் வித்துவான் மாலி பொறுத்தும் கலந்துரையாடியுள்ளார். ‘துவங்குவார்… பத்திக்கிச்சின்னா…’ என்று முடிப்பார்.

ஜெயமோகனின் அணுகுமுறையோ சற்று வித்தியாசப்பட்டது: “மிகமிக குறைவாகவே எனக்கு இசை ரசனை உண்டு… ஆனாலும் இசை ஓரளவிலேனும் தேவையாக உள்ளது. ஒரு நாள் கூட இசை இல்லாமல் தூங்கவும் முடிவதில்லை. சினிமா இசை என்பது குறைவானது அல்ல. அது தன்னுள் இசையின் எல்லாக் கூறுகளையும் கொண்டிருக்கின்றது … இசை அவசியம் - மூளையைக் குளிப்பாட்டுவதுபோல… பெரிய இளைப்பாறல்…”

இவ்வாறு, இசை நோக்கிய இருவரதும் அணுகுமுறைகளும் வித்தியாசங்களை ஏந்தாமல் இல்லை. 

இதனைப் போன்றே அப்துல் கலாமின் அணுகுமுறையும் சற்று வித்தியாசப்பட்டதாகவே செய்கின்றது. “லதா மங்கேஷ்கர்க்கு இந்நாடே கடமைப்பட்டிருக்கின்றது” என்பது அவரது கூற்று

தேசிய இயக்கத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கும் அளவில் லதா தனது இதயத்தின் உணர்திறனை வடிவமைத்துக் கொண்டார் - அப்படியெனில் அதற்கான விலையையும் அவர் கொடுத்த பின்னரே இந்நிலையினை அவர் அடைந்திருக்கக் கூடும் என்பதெல்லாம் இக்கூற்றின் உட்கிடையாகின்றது. இது தொடர்பில், லதாமங்கேஷ்கரின், தேசிய பாடலை கேட்க நேர்ந்த ஒரு தருணத்தில் நேரு கண்ணீர் சிந்த நேரிட்டது என்பது கதையாக கூறப்படுதலும் பரிசீலிக்கத்தக்கது.

இப்படியான கண்ணீர்க்கதைகளின் ஒரு நீட்சியை நாம் பாடகி சுசிலாவிலும் காணலாம். பொதுவில் அசையா பொம்மைப் போல் காட்சி தரும் அவர், தனது குரலில் எப்படி இத்தகைய நுட்பமான நளினங்களை ஏற்படுத்துகின்றார் என்பதெல்லாம் கேள்வியாகவே அமைகின்றது. விடை பகரும் விதமாக, அவர் தனது 70வது வயதுகளில், ஒரு இசை நடுவராக வந்த போது, ஒரு சிறுமி பாடிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டு தன்னையறியாது அவர் கண்ணீர் சிந்த, பின் வெட்கமுற்று அதனை ரகசியமாக துடைத்துக்கொள்ளவும் முயன்றார். சுசிலாவின் இந் நடத்தைகள் அவருள் மறைந்துள்ள நுட்ப உணர்வுகள் வெளிக்காட்டும் ஒரு சிறிய தருணமாகும் என நாம் கொள்ளலாம்.

மனிதர்கள் உகுக்கும் இப்படியான கண்ணீர் பொறுத்து இலக்கியம் ஏற்கனவே அறிந்துள்ளது. உதாரணமாக டால்ஸ்டாய், தனது புத்துயிர்ப்பில், கண்ணீர் பொறுத்து, பின்வருமாறு கதைப்பார்:

“என் முதல் சொட்டுக் கண்ணீர் புனிதமானதுதான். ஆனால் இதனைத் தொடரும் இரண்டாம் சொட்டுக் கண்ணீர் சற்றே மாசு படைத்தது. காரணம், முதல் சொட்டுக் கண்ணீரின், பிறப்பை, உள்வாங்கும் மனமானது, இம் முதல் சொட்டு பொருத்து, தனக்குத்தானே பெருமைப்பட்டு, தனது இரண்டாம் சொட்டுக் கண்ணீருக்கு பாதை சமைக்கின்றது.”

தனிமனித சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் இது போன்ற கண்ணீர்த் துளிகள் ஒருபுறம் இருக்க, சிந்தப்படும் கண்ணீர் துளிகளில் உள்ளடங்கக்கூடிய அரசியல் - அப்படியேதும் இருந்தால்–அது யாது என்ற கேள்வியையும் மனித மனம் அலைக்கழிக்காமல் விட்டதில்லை.  அதாவது, இசை சில தருணங்களில் சில ஆளுமைகளை அசைக்கவே செய்கின்றது – வெவ்வேறு விதங்களில் எனலாம். இருந்தும் வடிக்கப்படும் கண்ணீரின் தாற்பரியங்களுக்கான வெவ்வேறு அளவுகோல்களை இலக்கியம் அளக்கவே செய்கின்றது.

இவ்வகையில், இசை சில இடதுசாரி அரசியல் மூலவர்களுக்கும் அந்நியமானதாக இருந்ததில்லை. உதாரணமாக, பிரெடெரிக் ஏங்கல்ஸ், மார்க்சிற்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில், பீத்தோவனின் (பெத்தோவன்) நான்காம் சிம்பனி குறித்து குறிப்பிடும் போது, இதனைக் கேட்டிராதவர் இதுவரை இசையைக் கேளாதவர் எனக் குறிக்கும் அளவிற்கு பிரமாதமானதாய் இருக்கின்றது எனக் குறிப்பார்.

இதனைப் போன்றே லெனின், கார்க்கியிடம் உரைப்பார்:

“பீத்தோவனை (APPASSIONATA) நாள்முழுவதும் கேட்க விழைகின்றேன். இதனை விட சிறப்பான எதனையும் நான் அறிந்திலேன். என்ன ஒரு அதிமானுடப் படைப்பு. மனிதர்கள், இப்படியும் படைக்கக்கூடுமா… என அதிசயிக்கின்றேன்… “இவ்வளவு அழகுடன்–அதுவும் அநாகரிகமான இந்த உலகிலிருந்து…”

ப்ரெஞ்சு இசை மேதையான, பீத்தோவனின் இசையில் இப்படியாக இவர்கள் மூவரும் மெய் மறப்பது இயல்பானதுதான் என்றளவில் பீத்தோவனின் இசைப் பிரவாகம் அமைந்திருந்தது. இதற்குறிய காரணங்களை ஆராயும் ஆய்வாளர்கள் பின்வருமாறு குறிப்பர்: “ப்ரெஞ்சுப் புரட்சியின் உற்பத்தி இவர்” என (பாரதிப் போன்று–இந்திய விடுதலை இயக்க தொடர்பில்)

இனி, மேற்படி விடயங்களை வேலுப்பிள்ளை என்ற மனிதனின் தோற்றுவாயுடன் இணைத்து – அதுவும் கிட்டத்தட்ட ஒரு 140 வருடங்கள் கடந்த ஒரு புலம்பெயர் உழைக்கும் சமூகம், பெருந்தோட்டத்திடை தனது கால்களைப் பதிக்கும் தருவாயில், அதனிடம் இட்டுச் செல்வதாய் உள்ளது.

III

மலையக மக்கள், தென்னிந்தியாவின் பின் தங்கிய கிராம–விவசாய பின் புலங்களில் இருந்து அள்ளி வரப்பட்டிருந்தாலும், நாளடைவில் (சில தலைமுறைகள் கழிந்து போன நிலையில்) அவர்கள் அப்படி தாம் அள்ளி வந்திருந்த நாகரிகங்களுக்கு – தமது கலாசாரங்களுக்கு – ஒரு மீள் உருவாக்கத்தை அளிக்கத் தவறவில்லை. ஏனெனில் ஒரு விவசாய சமூகத்தினிடை இருந்து புறப்பட்டு வந்த இவர்கள், ஒரு பெருந்தோட்ட உற்பத்தி முறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவ் உற்பத்தி முறைக்கு உரித்தான–ஒரு புதிய நாகரிகத்தை வடிவமைக்க வேண்டியவர்களாகின்றனர். அதாவது, ஒரு தனி மனிதனாக–அல்லது தனித் தனி மனிதர்களாக உற்பத்தியில் இறங்கி இருக்கும் மனிதர்கள் மறைய–இப்போது, அதுவும் நூறு அல்லது ஆயிரக்கணக்கில் மனிதர் ஒன்றிணைந்து நாட் கூலிக்காய்–உற்பத்தியில் இறங்க நேரிடுவதும்–அதுவும் தமது உழைப்பின் விளைபொருளானது (உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை)–கிட்டத்தட்ட முழுவதுமாய், தம்மிடம் இருந்து பறிப்பட்ட நிலையில் அல்லது அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் ஓர் புதிய வாழ்வை வாழ ஆரம்பிப்பதும், இதனடிப்படையில் இவர்கள் தமது சமூகத்தை கட்டுவிக்க முனைவதும் இவர்களது வரலாறு ஆகின்றது.

அதாவது, தளிர்களின் வடிவில் அமைந்திட்ட கண்களால், நிரைகளை அமைவுற நோக்கி – பின்னர் இரண்டு இலைகள் - ஒரு குருத்து என்ற பாடலொன்று இவர்களிடைப் புறப்பட, இங்கே வாழ்வு மாற்றியமைக்கப்பட வேண்டியதாகின்றது. ஆனால், இங்கு உழைப்பானது வெறுமனே வழமை பிரகாரம் சாராசரியாய் கொட்டப்படுவதுப்போல் கொட்டப்படாது, உழைப்பானது எதிர் சக்தியாய் அணித்திரளக் கூடிய ஓர் எதார்த்தமும், அதனடியொட்டியெழும் அதன் அரசியலும் அதனடிப்படைகளும் இங்கு கொட்டப்படும் அவ் உழைப்பில் உள்ளடங்குவதாய் அமைந்துப் போகிறது.

இதனை, இச் சமூகத்திடை, 140 ஆண்டுகளின் பின் தோன்றும் ஒரு கவிஞன் உள்வாங்குகின்றான் - அல்லது இதனை உள்வாங்கிடக்கூடிய நிலையில் இருக்குமாறு தன் ஆழ் மனதை பண்படுத்திக் கொள்கின்றான். பல இலட்சம் மனிதர்கள் கால ஓட்டத்தில் செத்து மடிந்திருக்க, இவன் மாத்திரம் தன் இதயத்தை பண்படுத்தி நின்றமைக்கான காரணிகள் எவை, யாவை, எப்படி என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகளாகின்றன.

IV

மைசூரின், சாமுண்டீஸ்வரி நந்தியானது (1659) கிட்டத்தட்ட 40–50 இடிந்துப்போன படிக்கட்டுக்களின் வழியாக, கோயிலிலிருந்து கீழிறங்க, ஒரு முட்புதர் நிறைந்திருந்த சூழலில் காணப்படுவதாய் இருந்தது – கிட்டத்தட்ட 30 வருடங்களின் முன்னர்.  இதற்கும் மேலே காணக்கிட்டிய சாமுண்டிஸ்வரி கோயிலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும், கிட்டத்தட்ட 15 அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாய், பார்ப்பவர்களை திகிலில் ஆழ்த்தும் அளவில், அந்நந்தி அழகும் கம்பீரமும் ஜொலிக்க, கண்ணங்கரிய நிறத்தினதாய் காட்சித்தந்தது. இதனை ஏன், இந்த சிற்பி, இப்படியாக தனித்து, யாருக்கும் தெரியாமல் மறைத்து செதுக்கி இருந்தான் என்பது கேள்வியானது.

அதாவது கோயிலின் அருகே அல்லது தஞ்சாவூர் நந்தியைப்போல் கோயிலின் உள்ளேயே செதுக்கப்பட்டிருக்க வேண்டிய கலைவடிவம், இப்படி ஓர் ஒதுக்குப்புறமாய் செதுக்கப்பட்டிருந்ததன் காரணம் என்ன? இச்சிற்பத்தை செதுக்கக்கூடிய கருங்கல் பாறை இவ்விடத்திலேயே காணப்பட்டிருந்ததாலா? அல்லது வேறுகோணத்தில் பார்ப்பின், மக்களிடமிருந்து மறைந்து தன் கலை ஆக்கத்துடன் ஒன்றினையும் முயற்சியை இச்சிற்பி முயன்றதாலா? அல்லது இன்றுதான் இக்கலைவடிவம் இப்படி தனித்துப்போய் நிற்கின்றதா- நேற்றைப்போல் அல்லாமல்?  இப்படியாய் ஒன்றன்பின் ஒன்றாய் எழக்கூடிய அனந்தக்கேள்விகள் ஒருவரது மனதில் இயல்பாய் தோன்றுபவைதான்.

தனது 17வது வயதில், கார்ல்மாக்ஸ் என்ற ஒரு பதின்வயது இளைஞன் பின் வருமாறு கூறியிருந்தான்: “மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொறுத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோம் என்றால், எந்த சுமையும் எம்மை வீழ்த்தாது. எமது நற்பனிகள் சத்தமின்றி ஆனாலும் நிரந்தரமாக வேலை செய்துக்கொண்டே இருக்கும். எமது மறைவிற்கு பின் எமது சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் மட்டும் சிந்தப்படும்…”

இங்கே தேவையுறுவது “சத்தமின்றி” எனும் வார்த்தை பிரயோகம் மாத்திரமே–இக்கட்டுரையைப் பொறுத்தவரை . இதனையே பாரதி “தன்னை மறக்கும் போழ்தினிலே…” என்றும் கூறியிருக்கக் கூடும்.

ஒரு நந்தியின் பிரமாண்டம்–அழகு–அதன் அதிமானுட கம்பீரம்–இவையனைத்துமே “சத்தமின்றி” என்ற வார்த்தைக்கு அருகாக எம்மை அழைத்துச்செல்லத் தக்கவைதான். இருந்தும், வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் நந்தி வகைப்பட்ட கலை உருவாக்கம் அல்ல என்பதனையும் நாம் கூறித்தான் ஆகவேண்டும்.

V

இந்திய விடுதலை இயக்கமும் தாகூரும் அவரது சிந்தைக்கருகே மிக நெருக்கமாக இருந்தாலும், காந்தியை அவர் ஒரு விமர்சனப் பார்வையுடனேயே அணுகினார் எனலாம். கடவுள் பொறுத்தும், வெள்ளையன் பொறுத்தும் போதிய விமர்சனங்களை அவர் உள்ளடக்கியவராகவே இருந்தார். அதாவது, ஒரு புறத்தில் உலக இலக்கியத்தினதும் இந்திய விடுதலை இயக்கத்தினதும் செழுமைகளில் கால்பதித்து அதனை உள்வாங்க முயற்சித்த வேளை மறு புறத்தில் காந்தியையும் ஒரு விமர்சனக் கண் கொண்டு நோக்கத் தலைப்பட்டார். காந்தி பொறுத்து இவரது விமர்சனக்கண்ணோட்டத்தை ஜெயகாந்தனின் கண்ணோட்டத்துடன் ஒப்பு நோக்கலாம்.

ஜெயகாந்தனின் நாவலில் வரக்கூடிய ஒரு பாத்திரம், சிறையில் தன் தூக்குமரத்தை நோக்கி நடக்கும் போது, அப்பாத்திரம் உருவாக்க முனைந்திருந்த காந்தி சிலை காட்சிப்படுத்தப்படுகின்றது.  அச்சிலையை வேண்டுமென்றே தலையற்ற சிலையாக படைத்திட்ட அக்கைதி சிரித்தப்படி தூக்குக்கயிற்றை நோக்கி செல்வதாக ஜெயகாந்தன் சித்திரிக்கின்றார்.

இங்கே ஜெயகாந்தனின் தர்க்கப்புத்தி மேலோங்குவதாக இருக்கலாம். அல்லது இவ்விமர்சனப்பார்வை ஜெயகாந்தன் கொண்டிருந்த இடதுசாரி அரசியல் பின்னனியால் உருவாகியிருக்கலாம். ஆனால் வேலுப்பிள்ளையை பொறுத்தமட்டில், இது, தர்க்கப்புத்தி என்பதனை விட, வாழ்நிலை தோற்றுவித்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து பிறப்பெடுப்பதாகவே இருக்கின்றது. அதாவது காந்தியின் போதாமைகளை இவர் தெளிவுறக் காண்பதற்கான விமர்சன அடிப்படைகளை, பெருந்தோட்ட அமைப்பு முறையும், அங்கு முகிழ்த்திருந்த ஓர் போராட்ட அரசியலும் இவருக்கு உதவியிருக்கலாம். ஆனாலும் இவர் இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் அல்லர்.

இதற்கான ஏனைய காரணங்களுடன், இராமையா–ரொசாரியோ போன்ற இடதுசாரி தலைவர்களின் போதாமையும் காரணமாக இருந்திருக்கலாம். அதாவது, ஐரோப்பிய இலக்கியங்களை, (டால்ஸ்டாய் ஈறாக) கற்றுத்தேர்ந்திருக்கக்கூடிய ஒரு லெனினோ அல்லது பீத்தோவனின் இசைக்கும் அல்லது எண்ணற்ற இலக்கிய செழுமைகளுக்கும் அன்னியமாகாத இரட்டையர், மார்க்ஸ்–ஏங்கல்ஸ் போன்ற ஆளுமைகளோ வேலுப்பிள்ளையின் வட்டத்தில் இருந்ததாக இல்லை. இருந்தும் பேராசிரியர் கைலாசபதி அவர்களை  வேலுப்பிள்ளையின் மீது வரையறுக்கப்பட்ட ஓர் எல்லைக்குள் செல்வாக்கு செலுத்திய ஒருவராகவே நாம் இனங்காணலாம்.

வேலுப்பிள்ளையின் எளிமையானது, மாயவகைப்பட்டது–கண்னை மயக்குவது எனக்கூறும் திரு கைலாசபதி அவரது பல்வேறு பரிமாணங்களை ஓரளவில் மிகச்சரியாக உள்வாங்கியிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். உண்மையில் வேலுப்பிள்ளையின் அரசியலை உள்வாங்குவது என்பது குறித்த தருணத்தில் சிரமமான ஒரு செய்கையே.

வேலுப்பிள்ளை அவர்களின் 'மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூலில் அவர் அசீஸ் முதல் தொண்டமான் வரையிலான, பதினான்கு மலையகத் தலைவர்களை சித்திரப்படுத்தி தன் விமர்சனப்பார்வையை முன்வைத்திருந்தார். இச்சித்திரங்களில் திரு நடேசனை விதந்துரைத்திருந்த விதம் குறிக்கத்தக்கது: “ஆங்கிலத்தின் சில சிறந்தப் பாரம்பரியங்களில் ஊறித்திளைத்திருந்த போதிலும் காங்கிரசில் அதுவரை போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த சம்பிரதாயங்களுக்கு (இவர்) சவால் விடுத்தார்”.

“அவருடைய சுயேச்சையான சிந்தனையையும் விவேகத்தையும் சங்கடமான நிலைமைகளை துரிதமாக மதிப்பிட்டறியும் அவருடைய மதிநுட்பத்தையும் காங்கிரசின் உளுத்துப்போன பிரச்சினைகள் சிலவற்றை அணுகுவதில் அவர் காட்டும் புத்திக்கூர்மையையும் கவனிக்கும் போது அவர் சாதாரண அறிவாற்றல் படைத்தவரல்ல என்பது தெளிவு”. (பக்கம் 185)

“காங்கிரசின் கோத்திர தலைமையையும் பெரிய ஜில்லாக்களில் அது நிலச்சுவான் முறையில் அமைந்துள்ளதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்”. (பக்கம் 186)

மேலும் திரு நடேசனின் தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்பிலும் சில குறிப்புகளை வேலுபிள்ளை பார்க்கத் தவறினார் இல்லை: “1951ஆம் ஆண்டில் பெர்லின் வாலிப விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்ற வேளையில் பிரஸெல்ஸில் திரு நடேசன் கைது செய்யப்பட்டார்…”

“திரு நடேசன் பிரிட்டிஷ் மியூசியத்திலும் நூல் நிலையத்திலும் பல வருடங்கள் ஆராய்ச்சி வேலைகள் செய்துள்ளார். இலங்கையில் உள்ள தோட்டத்தொழிலாளர்களின் சுருக்கமான சரித்திரத்தை எழுதியிருக்கின்றார்”.

வேலுப்பிள்ளையின் நடேசன் குறித்த மேற்படி சித்திரிப்புக்களுடன், அவர் தொண்டமான் குறித்து எழுதியுள்ள சித்திரம் ஒப்புநோக்கத்தக்கது. ஏனெனில் அத்தகைய ஒப்பு நோக்கு வேலுப்பிள்ளையின் அரசியலை ஓரளவிற்கு வெளிக்கொணர்வதாக இருக்கும்.

“ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன் திரு தொண்டமான், காங்கிரசில் பிரவேசித்தார். அவரின் தகுதி என்னவென்றால் அவருடைய நிறையளவு பொன்னுடையவர் என்பதுதான் என்று கூறினார்கள். காங்கிரசிற்காக செலவிடுவதற்கும் அவருக்கு போதிய பணம் உண்டு என்று திரு பெரிசுந்தரம் கருதினார்… அவரிடம் திட்டங்கள் ஒன்றும் இருக்கவில்லை ‘கோணங்கி’ தனது பணத்தின் மதிப்பை பெறத்தானே வேண்டும். புத்தகங்களை படிக்க திரு தொண்டமானுக்கு பொறுமையில்லை. ஆதலால் தாம் தலைமை தாங்குவதற்கு தகுந்த படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், பேச்சாளர்களையும் தேர்ந்தெடுத்தார்… உருளவெளித் தோட்டத்தில் நடைபெற்ற ஹர்த்தாலில் அவர் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா முதலீடு செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை… அவர் பாராளுமன்றத்திற்கு உரிய உறுப்பினர்களைப்பற்றி.. முடிவு செய்தார்”. (பக்கம் 41, 42)

வேலுப்பிள்ளை அவர்கள் ஏனைய பன்னிரண்டு மலையகத்தலைவர்கள் பற்றியும் தன் விமர்சன பார்வையை முன் வைத்திருந்தாலும் மேற்படி தலைவர்கள் குறித்த அவரது பார்வை அவர் கொண்டிருந்த அரசியலை தெளிவுற வெளிக்கொணர்வதாய் உள்ளது. ஆனால் இன்று அவரது கவிதைகளும் சரி அல்லது அவரும் சரி தலைகீழான பொருட்கோடலுக்கு ஆளாகுவதாகவே படுகின்றது. அதாவது, காந்தியை வளைத்துப்போடும் மோடியின் அதே அரசியல் இப்படியாக இன்று செயல்படுவதாக உள்ளது. அதாவது காந்தியைக் கொன்ற கோட்சேயின் அரசியலானது, வரலாற்றின் ஒரு கட்டத்தில், காந்தியை கரங்கூப்பி தொழுவதாய் உள்ளது. தமிழ் நாட்டில் இது திருவள்ளுவரையும் வளைத்துப்போட எத்தனிப்பதாய்க் கூறப்படுகிறது.

இப்படியான ஒர் அரசியலானது, மலையகத்தில் இன்று உருவாகியுள்ள மத்திய தர வர்க்கத்தின் வரப்பிரசாதமாகியுள்ளது என்று சொல்லிக்கொள்வதில் தயக்கம் தேவையில்லை. ஆனால் வேலுப்பிள்ளையின் இலக்கிய அல்லது அரசியலானது சமரசங்களுக்கு ஆட்படியாது மனுக்குல செழுமைகளை, இலக்கியங்களின் உண்மைப் பாரம்பரியங்களை முன்னெடுப்பது பாற்பட்டதாகும்.

முடிவாக…

மைசூர் நந்தியிலிருந்து உள்ளடக்கத்தில், வித்தியாசப்பட்ட ஒரு கலை வடிவத்தை திரு வேலுப்பிள்ளை தனது காலத்தில் செதுக்கியுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு பெருந்தோட்ட அமைப்பு முறை அடிப்படையான காரணமாக இருந்தப்போதிலும் அவர் தன் இதயத்தை நுண்ணுனர்வு மிக்கதாய் தன் இளம்பிராயம் தொட்டு வளர்த்துக்கொண்டதன் நேர்த்தி குறிப்பிடத்தக்கதாகின்றது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டு தன் வாழ்வை முன்னெடுத்திருக்கக்கூடிய இக்கலைஞன், இதற்காக கொடுத்திருக்கக்கூடிய விலை குறிப்பிடத்தக்கதாகவே இருந்திருக்கும். ஆனால் மலையகத்தின் இன்று வளர்ந்துவரும் ஒரு மத்திய தர வர்க்கத்திற்கு மேற்படி வாழும் முறைமைகள் அந்நியப்பட்டதாகவே இருக்கும் என்பதில் அதிசயம் கிடையாது. எனவே வேலுப்பிள்ளை பொறுத்த புதிய பொருள் கோடல்கள் அல்லது பல சந்தர்ப்பங்களில் நேர் விரோதமான பொருள் கோடல்கள் ஆற்றப்பட்டு வருவதை உலகு இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

1950களில் தனது போராட்டத்தின் பின் ஒரு பொலிஸ் வேனுக்குள் பத்து மணிநேரம் அடைக்கப்பட்ட திரு வேலுப்பிள்ளை அவர்கள் தனது தேயிலை தோட்டத்திலே என்னும் புகழ் பெற்ற நெடுங் கவிதையை எழுதி பின்வருமாறு முடிக்கின்றார்.

புழுதியில் விழுந்த
நூறாண்டு வியர்வையும்
நூறாண்டு கண்ணீரும்
ஒன்றாய் திரண்டிங்கே
புதியதோர் ஞாயிறுக்காய்
உரத்துக் கூவும்.
பல இலட்சம் மனிதரை
அது
பொழுதுகளின் விடியலுக்காய்
அணி வகுக்க
உந்தும்.
ஆம்
அவர் அணி நடை நடப்பார்…
அணி நடை நடப்பார்…
பிரட்டின் அதிர்வுக்காய்…
பிரட்டின் அதிர்வுக்காய்…

இனி வரவிருக்கும் ஒர் இளைய கவிஞன், இக்கவிதையின் அடுத்த வரிகளை தொடரக்கூடும் - மேற்படி அம்சங்களுக்கு அந்நியமுறாது  எனலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.