கிட்டத்தட்ட 500-600 ஆசிரியர்கள், சடுதியாக, ஹட்டன் கல்வி வலயத்தில், ஜுன்-12, 2023முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரணங்களில் பிரதானமானது, சமரசங்களுக்கு கட்டுப்படாத அல்லது அடிவருடித்தனங்களுக்கு ஆட்படாத, மலையக ஆசிரிய ஒன்றியம் போன்ற நடுநிலை ஆசிரிய தொழிற்சங்கங்கள், ஆசிரிய இடமாற்ற சபையில் இருந்து அகற்றப்பட்டது என்பது முதற் காரணமாக இருக்கின்றது. இரண்டாவது, மேற்படி ‘சிதைப்பு’ படலமானது, மலையகத்தை சார்ந்தவர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு அரங்கேற்றப்படுமாயின் - அது இன்னமும் கன கச்சிதமாக சோபிப்பதாய் அமைந்துவிடும் என்ற எண்ணப்பாடு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆழ வேரூன்றி இருந்தமையும் காரணமாகின்றது.

மேற்படி பின்னணியிலேயே, கிட்டத்தட்ட 29 குற்றச்சாட்டுகளை தன்மீது சுமந்திருந்தாலும் மலையகத்தை சேர்ந்த பெ.ஸ்ரீதரன் அவர்கள் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக மீண்டும் மத்தியால் நியமிக்கப்படுகின்றார். 2016-2021 காலம் வரை ஹட்டன் கல்வி வலயத்தில், பணிப்பாளராய் ஏற்கனவே, பணி புரிந்த பெ.ஸ்ரீதரனின் காலப்பகுதியிலேயே, அதிக அளவிலான, திட்டமிடப்பட்ட, மாணவ இடைவிலகல் ஹட்டன் வலயத்தில் காணப்பட்டது என்ற பாரிய உண்மை போக, இதன் காரணமாய் சில மாணவ மணிகள் தற்கொலைக்கும் முயன்றிருந்தார்கள் என்பது போன்ற தீவிர குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை குழுவினருக்கும், உயர் கல்வி அதிகாரிகளுக்கும் செய்யப்பட்டிருந்தன. இது, இவ்அதிகாரிக்கு எதிராக செய்யப்பட்ட அனந்த முறைப்பாடுகளில், ஒரு சிலவே, என்ற கூற்றின் உண்மை வெளிப்பாடாகும்.

இவ் உண்மைகளை மீண்டும் வெளிப்படுத்திய, அண்மித்த மேல் நீதிமன்ற வழக்கு ஒன்று (Writ 07/2023), குறித்த இவ் அதிகாரி அரச பரீட்சை ஒன்றின் போது, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காய் 2007ம் வருடத்தில் இருந்து தொடர்ச்சியாக ஐந்து வருட காலப்பகுதிக்கு, இலங்கை அரசால் நடத்தப்படும் எந்த ஒரு பரீட்சையிலும் பங்கேற்க கூடாது என பரீட்சைகள் ஆணையாளரால் தடை விதிக்கப்பட்டிருந்த புகழுக்கும் சொந்தக்காரராய் இவர் விளங்கியிருந்தார் என்பதும் மேற்படி வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டதோர் உண்மையானது.

இதுபோக தனது பணிப்பாளர் காலப்பகுதியான 2020இல், (அதாவது கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடிய காலப்பகுதியில்) கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய எத்தனித்த கருமமும், இவரது ‘புகழ் பட்டியலின்’ 29 குற்றச்சாட்டுகளை போலவே உள்ளடங்குகின்றது. ஆனாலும், குறித்த அந்த 2020இன் இடமாற்றங்கள், மலையகத்தின் மாணவர் - பெற்றோர்கள்-பாடசாலைகள் போன்றவை ஒன்று திரண்டு காட்டிய ஒன்றுபட்ட எதிர்ப்புகளினால், கல்வி அதிகாரிகளினால் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 29 முறைப்பாடுகளை ஏந்தியிருந்த அன்னாரும் (பெ.ஸ்ரீதரன் அவர்களும்) உடனடி இடமாற்றத்திற்கு உள்ளாகி, ஹட்டனில் இருந்து கண்டிக்கு அகற்றப்பட வேண்டிய சூழ்நிலையும் அன்று வந்தமைந்தது. மலையக கல்வி வரலாற்றிலேயே-அல்லது பொதுவில் நாட்டின் வரலாற்றிலேயே இப்படி 29 குற்றச்சாட்டுக்களை சுமந்த ஒரு கல்வி அதிகாரி இதற்குமுன் காணப்பட்டாரா என்பது சுவார~;யமான கேள்வியாகவே இருக்கின்றது. இருந்தும், இந்த 29 குற்றச்சாட்டுக்களை, இன்று புறந்தள்ளி, இவரையே, மீண்டும் 16.01.2023 தொடக்கம் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக, மத்திய மாகாண கல்வி சபை புதிதாய் நியமித்து வரலாறு கண்டுள்ளது.

இந்நியமிப்பை அடுத்து, திரு.பெ.ஸ்ரீதரனின் செயற்பாடுகள் ஹட்டன் கல்வி வலயத்தில் ஜனவரி 2023 தொடக்கம் இடம்பெற தொடங்கியது. உதாரணமாக அண்மையில் இவர் மேற்கொண்ட அதிரடி ஆசிரிய இடமாற்றங்கள் மலையகத்தின் கல்வி முதுகெலும்பை உடைத்தெறியும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டிருந்தன என்ற குற்றச்சாட்டில், உண்மை ஓரளவு அடங்கியிருக்கவே செய்திருந்தது.

“மலையகத்தின் முதுசம்” என வர்ணிக்கப்பட்டிருந்த ஹைலன்ஸ் கல்லூரியை தனது பிரதான இலக்காக கொண்டு இயங்கிய இவரது செயல்பாடுகளின் நோக்கம் இன்று அம்பலப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து, கிட்டத்தட்ட 36 ஆசிரியர்கள், ஒரே சமயத்தில், சடுதியாக அகற்றப்பட்டுள்ளமையானது பாடசாலையின் நிர்வாக அமைப்பை அடியோடு சீர்குலைத்து தடம் புரள செய்துவிட்ட நிர்வாக சீர்கேட்டை இன்று விதைத்துள்ளது. உதாரணமாக இவ் இடமாற்றங்களில் ஒன்று கிழக்கை சார்ந்த திரு.சர்மேந்திரனின் இடமாற்றம் என்பது குறித்து காட்டப்பட வேண்டிய தேவையை உள்ளடக்குகின்றது. அதாவது, ஹைலன்ஸ்ஸின் கடந்த கால அதிபரான திரு.விஜயசிங் அவர்களால், மோப்பம் பிடித்து, தேடப்பட்டு, திட்டமிட்ட ரீதியில் தேர்வு செய்யப்பட்டு பிறிதொரு தேசிய கல்லூரயில் இருந்து, முன்னால் அமைச்சர் திரு ராதாகிருஸ்ணனின் உதவியோடு, “கடத்தி” வரப்பட்ட கணித ஆசிரியர் திரு.சர்மேந்திரனின் பங்களிப்பு குறிக்கத்தக்கது.

மறைந்த திரு.ஜீவராஜனின் (இன்னுமொரு கிழக்கை சார்ந்த ஆளுமையின்), கணிதப் போதிப்பை இடைநிரப்புவதற்காக கொண்டுவரப்பட்ட திரு.சர்மேந்திரனின் கற்பித்தல் காரணமாக, எண்ணற்ற ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்கள் பல்வேறு பல்கலைகழகங்களை சேர்ந்த பொறியியல் பீடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டதுடன், ‘ஹைலன்ஸ் எமது முதுசம் (கலாநிதி. சரவணகுமாரின் பார்வையில்) என்ற சொற்றொடருக்கும் பின்னணி அமைத்தவர் என்று கூறினால் அது மிகையாகாது. ஆனால், 120 மாணவர்களுக்கும் மேலாக, ஹைலன்ஸ் கல்லூரியில், கணித பாடத்தை புகட்டி வந்த திரு.சர்மேந்திரன்இன்று சடுதியாக இடமாற்றம் பெற்று 12 மாணவர்களையே உள்ளடக்கி நிற்கும் சென்ஜோசப் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள துர்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் மேல் தேவையற்ற கண்டிப்பை அமுல்படுத்துபவர் அல்லது 100 வீத பரீட்சை பெறுபேறுகளையே எதிர்நோக்கி சில மாணவர்களை வெளியேற்றுவதில் சம்பந்தப்பட்டவர் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக இருப்பினும், ஹைலன்ஸ் கல்லூரியின் கடந்த கால சாதனைகளில் இவரது பங்கு, ஜீவராஜன் போன்றே, தலையானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

கடந்த எட்டு வருட காலத்தை எடுத்து பார்ப்போமானால் இவர் தனது ஹைலன்ஸ் காலப்பகுதியில், கணித பாட, (உயர் வகுப்பில்) 100% பெறுபேறுகள் ஒரு சாதனைதான் என்பதில் ஐயமில்லை. இதனை தக்கவைத்து நூற்றுக்கணக்கான மாணவர்களை இவர், பலதரப்பட்ட பல்கலைகழகங்களுக்கும் அனுப்பி வைப்பதில் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளார் என்னும் உண்மை இலகுவில் தட்டிக்கழிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதுபோக, இவரது இடமாற்றத்தை போலவே, திரு கிருபாகரன் போன்றோரின் இடமாற்றமும் நீங்காத வடுக்களை இனி வரப்போகும் காலங்களில் ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஏற்படுத்த கூடியவைதாம்.

இடமாற்றத்துக்கான தயாரிப்புகள்:

ஒரே பாடசாலையில், தொடர்ச்சியாக 8 வருட காலப்பகுதியில் தத்தமது சேவைகளை ப10ர்த்தி செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் பெறலாம் என்ற நியதியை தளர்த்தி, குறைத்து இதனை ஆறு வருடமாக்கி, பின் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்திற்காக, முதலில் அவராலேயே தேர்வு செய்யப்படும் மூன்று பாடசாலைகளை தெரிவு செய்யும் அதிமுக்கிய ஆசிரிய உரிமையை ஆசிரியர்களிடம் இருந்து பறித்தெடுத்தப்பின், இதற்கு முன் குறித்த தொழிற்சங்கங்களை இடமாற்ற சபையில் இருந்து அகற்றியும்-மேற்படி இடமாற்றங்களுக்கான தகுந்த அடிதளங்கள் இடப்பட்டன. அதாவது:

    முதலில், ஆசிரிய இடமாற்ற சபையில், தமது நோக்கங்களுக்கு தடங்கலாக அல்லது பிரச்சினைகளாக தோன்றக்கூடிய ஆசிரிய தொழிற்சங்கள் அகற்றப்பட்டமை.

    இரண்டாவதாக, குறித்த ‘எட்டு வருட கால’ தேவைப்பாடு என்பது ஆறு வருட காலமாக குறைத்தது.

    மூன்றாவதாய் குறித்த ஆசிரியர்களிடம் இருந்து அவர்களின் மூன்று பாடசாலைகளுக்கான தேர்வு சிபாரிசுகள் பறிபட்டது.

இம்மூன்று அடிப்படை உரிமைகளையும், புறந்தள்ளியே, 29 குற்றச்சாட்டுக்களை தனது முதுகில் சுமந்திருந்த திரு.பெ.ஸ்ரீதரன் அவர்கள், தான் பதவியேற்றதன் பின், மேற்படி இடமாற்றங்களை உடனடியாக அமுல்படுத்த வெளிக்கிட்டார் - துணையாக ஆசிரிய அடிவருடி சங்கங்களும் இவருக்கு கரம் கொடுப்பதாய் இருக்க.

இவ் ஆசிரிய இடமாற்றங்களின் விளைவுகள்:

12.06.2023இல் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆசிரிய இடமாற்றங்கள் மலையக கல்வி உலகின் அடித்தளத்தை அதன் வேரிலிருந்தே உலுக்கி எடுத்து சிதைப்பதை தனது அடிநோக்காக கொண்டிருந்தது, என்ற உண்மை இதில் புரிந்து வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உதாரணமாக மீண்டும் ஹைலன்ஸ் கல்லூரியை எடுத்துக் கொண்டால், சிறப்பு தகுதிகள் பெற்ற ஆசிரியர்கள் உள்ளடங்கலாக, மொத்தமாய் 36 ஆசிரியர்கள், அங்கு ஒரே சமயத்தில் இடமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

நான்கே நான்கு மாதங்களில், உயர் கல்வி பரீட்சை அரங்கேறவிருக்கும் ஒரு சூழ்நிலையில், அக்கல்லூரியின், தலையாய, உயர்கல்விக்கான ஆசிரிய-ஆசிரியைகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் விN~டமானது. அதாவது, பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க இருக்கும் மாணவர்கள், எந்த ஒரு ஆசிரிய இடமாற்றங்களாலும் பாதிப்படைய கூடாது என்பது அரசின் கொள்கையாக இருந்த போதிலும், இக் கொள்கைகளை கிடப்பில் போட்டே மேற்படி இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிக்கத்தக்கது.

மறுபுறத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இக்குறித்த 36 ஆசிரியர்களுக்கும் பிரதியாக 36 ஆசிரியர்கள் ஹைலன்ஸ் கல்லூரியில் வந்திறங்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டாலும், இடமாற்றங்களை சற்று கூர்ந்து கவனித்தால் பின்வரும் விடயங்கள் அம்பலப்பட்டு போவதாய் அமைந்து விடும்: அதாவது, தலைக்கு தலை என்ற வகையில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மேம்போக்காக கூறப்படாலும், ஹைலன்ஸில் தற்சமயம் 10 ஆசிரிய வெற்றிடங்களும் (Shortage of Teachers for particular subjects) 09 மேலதிக ஆசிரிய நியமனங்களும் (Excess Teachers)) நடந்தேறியுள்ளது என்ற உண்மையானது இன்று தலைவலியை தோற்றுவிக்கும் சிக்கலாக அமைந்துள்ளது.

கணித பாடங்களுக்கு மாத்திரம், மேலதிகமாக மூன்று ஆசிரியர்கள் வினோதமாய் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, இதே வலயத்தில் இடமாற்றம் பெற்றுள்ள பொகவான கிளார்னி பாடசாலையில் கணிதம் கற்பிக்க இருந்த ஒரே ஒரு ஆசிரியரும், இவ் இடமாற்ற திட்டத்தால், இடமாற்றம் பெற்று ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்டார் என்ற உண்மையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே.

தற்சமய இடமாற்றங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ் அவலநிலையின் காரணமாக இன்று கிளார்னி மாணவர்கள் பரிதவித்து நிற்கின்றனர். அதாவது, ஒற்றைக்கல்லில் இரண்டு சீர்குலைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது ஹைலன்ஸ் சீர்குலைந்தது ஒருபுறம். கிளார்னி சீர்குலைந்தது மறுபுறம். மேலும், இது சர்மேந்திரனின் இழப்பு ஏற்படுத்தும் வெற்றிடத்தை நிரப்பி விட கூடுமா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை. அதுவும் இன்னும் நான்கே நான்கு மாதங்களில் பரீட்சைக்கு முகம் கொடுக்கவிருக்கும் மாணவர்களின் பார்வையில் இச்சீர்கேடுகள் எப்படி பார்க்கப்படும் என்பது கேள்வியாகின்றது.

தற்சமயம் இடம்பெற்றுவரும் பிரத்தியேக வகுப்புகள் இந்த நான்கு மாத இடைவெளியை ஓரளவு ஈடுசெய்து கைகொடுக்க கூடும் என்றாலும் இனி வரப்போகும் 05 வருடங்களில், ஹட்டன் பிரதேச கல்வி நிலை, முக்கியமாக ‘முதுசம்’ என போற்றப்படும் ஹைலன்ஸ், பொஸ்கோ போன்ற கல்லூரிகளின் தேவைப்பாடுகள்-அவை அடையவிருக்கும் கல்வி நிலைமைகள் யாதாக இருக்க போகின்றது என்ற கேள்வி, இவ் இடமாற்றங்களால் முன்னோக்கி நகர்வதாகவே உள்ளது.

மிக அண்மையயில், பொஸ்கோ கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் இவ்இடமாற்றங்கள் பற்றி குறிப்பிடும் போது, பின்வருமாறு புலம்பியிருந்தார்: “இனி பொஸ்கோ கல்லூரியின் கணித பிரிவை மூடிவிட வேண்டியதுதான்... தற்போது எமது கல்லூரியில் உயர்தர கணித பிரிவுக்கு இரசாயனவியல், பௌதீகவியல் பாட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு பாடசாலைகளுக்கு சென்று விட்டார்கள். அதற்கு பதிலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை… இது பலிவாங்கும் ஒரு செயற்பாடாகும்…”.(வீரகேசரி:15.07.2023)

கேள்வி, இச்சீர்கேட்டை ஏற்படுத்திய அல்லது இக்கொடூர சிதைப்புகளை ஏற்படுத்திய கொடூர முகம் யாருடையது–எங்குள்ளது–அதன் அரசியல் என்ன என்பதே இன்று பிரதான கேள்வியாகின்றது.

வட மாகாண சபையின் நிதி திரும்பல்:

“வட மாகாண சபையை வினைத்திறனற்றதாக்குவோம்” என்ற கோ~ம், ஐயா விக்னேஸ்வரனின் காலப்பகுதியில் தலைவிரித்தாடிய ஒன்றாகவே இருந்திருந்தது.

வட மாகாண சபையை, இப்படி வினைத்திறனற்றதாய் ஆக்கி காட்டுவதன் மூலமே எமது சர்வதேசத்துக்கு ஒட்டு மொத்தமாக கைகொடுத்து, சர்வதேசத்தை ஊடுருவ வைத்து, தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்ற பொய்மை மிக்க வாதம் ஓங்கி ஒலித்த காலக்கட்டம் அது.

இதன் அடிப்படையிலேயே, திரு.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள், வடமாகாண சபையை ஓரங்குலமாவது நகரவிடாது முற்றாய் ஸ்தம்பிக்க செய்து வினைத்திறனற்றதாக்கி, அதன் நிதியை திருப்பி அனுப்பியதுடன், அவ்வப்போது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தது முதல், இறந்து போன விடுதலை போராளிகளுக்கு மரண ஊசி ஏற்றியது தொடர்பிலான விசாரணைகள் ஈறாக அனைத்திலும் அன்னார் ஈடுபட்டு, பின் சமயங்களில் அஸ்கிரிய-மல்வத்த மகாநாயக்கர்களையும் சந்தித்தும், பின் சிறைகைதிகளை உள்ளுக்குள்ளேயே இருத்திவிட்டு, பின் முல்லோயா கோவிந்தனை ரப்பர் தோட்டத்துள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது சம்பந்தமாக கணக்கற்ற ஆய்வுகளை செய்தும், இது போக, இந்தியாவின் மோடி, தனிப்பட்ட முறையில் அவரிடம் விஜயம் செய்து, வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வியை முன்வைத்த போது பிரேமானந்தாஜீயின் சீடர்களை உங்கள் சிறையில் இருந்து விடுவித்து விடுங்கள் என்ற ஒரு போடு போட்டதும் -இவை அனைத்தும் குறித்த அரசியல் தொடர்பிலானது என்ற விடயம் இன்று அடிப்படவே செய்கின்றது. (இத்தகைய ஒரு பின்னணியிலா செய்வதறியாது பரிதவித்து நின்ற மக்கள் அங்கஜனின் பின்னால் திரண்டார்கள் என்பது போன்றே கேள்விகளும் இன்று எழவே செய்துள்ளது).

சுருக்கமாக கூறினால், இந்த அடிப்படையில், வடமாகாண சபையை சிதைத்து வினைத்திறனற்றதாக்கும் இந்த செயல்முறையானது இன்று மலையகத்திலும் ஊடுருவி, கிளை பிரிந்து, ஹைலன்ஸ் கல்லூரி வரை ஊடுருவி விட்டதோ என்ற கேள்வியானது, மேற்படி சூழலில் எழாமல் இல்லை. இத்தகைய ஒரு பின்னணியிலேயே, ஹைலன்ஸ் அல்லது பொஸ்கோ அல்லது இது போன்ற எண்ணற்ற மலையக கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய இடமாற்றத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிதைவுகள் என்பன ஏற்கனவே திட்டமிட்டே நடந்தேறுகின்றனவா எனும் கேள்வி இன்று மேல்நோக்கி எழுவதாய் உள்ளது.

தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.