I

உக்ரைன்-ரஷ்யா போர்களத்தில், அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள், உலக அளவில் ஊடகங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டன: ஒன்று, KHMELNYTSKYI எனும் இடத்தில், உக்ரைனின் ஆயுத தளபாடங்களின் சேமிப்பு நிலையத்தின் மீது ரஷ்யா, நடத்திய மாபெரும் தாக்குதல். மற்றது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாய், “எமது அரண்”, “எமது இதயம்” என்று உக்ரைனினால் கொண்டாடப்பட்ட பக்மூத் (Bakhmuth) என்னும் பாதுகாப்பு கோட்டையின் ஒட்டுமொத்த வீழ்ச்சி

II

KHMELNYTSKYI ஆயுத கிடங்கானது, உக்ரைன் தலைநகர் கிவ்விலிருந்து 322km தொலைவிலும் இதனை விட நெருக்கமாக, மேற்படி கிடங்கு, போலந்து எல்லையிலிருந்து 119km தொலைவிலும் அமைந்து கிடக்கிறது. அதாவது, உக்ரைனின் மேற்கு புறமாய் அமையப்பெற்றிருந்த இம் மாபெரும் ஆயுத கிடங்கு, போலந்து எல்லைக்கு மிக அருகாமையிலும், ரஷ்ய எல்லைக்கு மிக தொலைவிலும் அமையப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. இருந்த போதிலும், ரஷ்யா, மே 15-16இன் இரவில், 18 ஏவுகணைகளையும் ஆறு ட்ரோன்களையும் கொண்டு மேற்படி, தொலைதூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 18 ஏவுகணைகளில் ஆறு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் எனவும் ஒன்பது குரூஸ் (CRUISE) ஏவுகணைகள் எனவும் ஏனைய மூன்று ஏவுகணைகள் இனம் தெரியாதவை எனவும் கூறப்படுகின்றது. இவற்றில் பல ஏவுகணைகளைதான் சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அறிவித்த போதும், தாக்குதலின் போது இங்கிலாந்து அனுப்பி வைத்திருந்த யுரேனிய ((URANIUM) முனை கொண்ட தாங்கிகளுக்கான குண்டுகள் பலவற்றையும், கூடவே, உலகின் முதல் தர விமான-அணு எதிர்ப்பு ஏவுகணையான அமெரிக்காவின் பேட்ரியேட் ஏவுகணைகளும் அழிந்து விட்டதாக உக்ரைனினாலேயே அறிவிக்கப்பட்டது.

அடிபாதாளத்தில் (கிட்டத்தட்ட 500 அடிக்கு அதிகமான ஆழம்) கொண்ட போதிய பாதுகாப்பு அரண்களுக்கு மத்தியில், மிக மிக பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த இச் சேமிப்பு தளத்தை, எவ்வாறு, ரஷ்யா மோப்பம் பிடித்து அழித்தொழித்தது என்பது ஒரு பக்கம் இருக்க தாக்குதலின் பின் இந்நகரில் சூழ்ந்த அணுக்கதிர்வீச்சின் அளவு கிட்டத்தட்ட இருமடங்காகி விட்டது என்ற செய்தியே உலகு அடைந்த பிரதானமான அதிர்ச்சியானது. (140-160  MANO SIEVERT) தாக்குதலை அடுத்து எழுந்த நெருப்புக் கோளங்களும் வானுயர்ந்த புகை மூட்டமும் ஏனைய நாடுகளை நோக்கி நகருமா? - அவற்றில் அடங்கியுள்ள அணுக் கதிர் வீச்சுகளால் அந்நாடுகள் அடையக் கூடிய பாதிப்புகள் யாவை என்பது போன்ற கேள்விகளை பல நாட்டு ஆய்வாளர்கள், ஒன்றுசேரக் கேட்டுக் கொண்டவையாக இருந்தன. இருந்தும் இப்படியான ஒரு கதிர் வீச்சானது நடக்கும் அல்லது நடக்கலாம் என்பதனை மேற்கு முன்னதாகவே, அறிந்திருக்ககூடும் என்பதற்கான நிகழ்தகவே அதிகமானது. ஆனால், இக்கதிர்வீச்சானது, எங்கு, எப்போது நடக்கும் என்பதிலேயே புட்டினுக்கும் மேற்குக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிலவின. இது தொடர்பில் மேலும் ஆய்வது பயனுள்ளது.

மேற்கைப் பொருத்த மட்டில், இக்கதிர் வீச்சானது, யுரேனிய தாங்கி மேற்கொள்ளக்கூடிய தாக்குதலை அடுத்து, உக்ரைனின் கிழக்கு பகுதியான, முக்கியமாக ரஷ்யா இன்று கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் DONBAS போன்ற பிரதேசங்களிலேயே நிகழலாம் அல்லது பரவாலக்கப்படலாம் என நம்பப்பட்டது. காரணம், இங்கிலாந்து வழங்கிய, இத்தாங்கி குண்டுகள் ரஷ்ய தாங்கிகளை தகர்த்தெறிய பயன்படுத்தப்படும் என்ற உண்மை இரண்டாம் பட்சமாக இருக்கையில், இக் குண்டுகளின் தாக்குதலினால் இப் பிரதேசங்களில் நிலைக் கொண்டுள்ள அல்லது எதிர்காலத்தில் நிலைக் கொள்ள இருக்கும் ரஷ்ய படையினர் அல்லது ரஷ்ய சிறுபான்மையினர், இக் குண்டுகளின் கதிர் வீச்சினால் அழிப்படலாம் என்ற எண்ணப்பாடே முக்கியத்துவம் பெற்றதாகின்றது. ஏனெனில் இவ்யுரேனிய தாங்கி குண்டுகளில் இருந்து பிறப்பெடுக்கக் கூடிய கதிர் வீச்சுகளானது, 10-15 வருடகாலம் ஒரு குறித்த பிரதேசத்தில் நிலைத்து நீடிக்கலாம் என்பதை விட குறித்த அப்பிரதேசத்து நிலப்பரப்பை, 10-15 வருடங்களுக்கு, எந்த ஒரு சாகுபடிகளுக்கும் லாயக்கற்றதான நஞ்சுடையதாக மாறிவிடும் என்பதுவே இக்குண்டுகளின் முக்கியத்துவமாகின்றது.

அதாவது, உலகிலேயே 10-15 அடி ஆழம் வரை, பயிரிடலுக்கு மிக ஏற்றதான, அருமையான கருமண், (உலகில் வேறெங்கும் காணக் கிட்டாதது) நொடியில் பயிரிடலுக்கு லாயக்கற்றதாக உருவாக்கப்பட்டுவிட்டது. அதாவது இத்தாக்கத்தின் மொத்த விளைவானது நஞ்சூட்டப்பட்ட வெளியை ஒரு புறமாயும், நஞ்சு ஊட்டப்பட்ட மண்ணை மறுபுறமாயும் உருவாக்கப்பட்டு விடுவதே எனலாம். இச்சூழலில், ரஷ்ய பாதுகாப்பு படையினர் தகுந்த தற்காப்பு ஆடைகளுடன் போர்களத்தில் இறக்கிவிடக் கூடும் எனக் கொண்டாலும் தாக்குதலின் பின் ரஷ்யா இந்நிலப்பரப்பை கைப்பற்றி இருந்தாலும் கூட, மக்கள் நிலங்களில் நிலைப்பார்களா? அல்லது பயிரிடுவார்களா? என்பனவையெல்லாம் கேள்விக்கிடமாக்கப்பட்டுவிடும். (அதாவது உலக தானிய ஏற்றுமதியில் இப்பிரதேசங்கள் செலுத்தும் செல்வாக்குகள் இனியும் நீடிக்கப்போவதில்லை என்ற சாணக்கியம் இங்கு உள்ளடங்குகின்றது. இலங்கையில், வடக்கின் புலமை உலகு மட்டுப்படுத்தப்பட்டது போல்). இவை அனைத்தையும் அறிந்தே, மேற்கானது, இவ் யுரேனிய குண்டுகளை ரஷ்யாவுக்கு எதிராக பாவிக்க உக்ரேனுக்கு கொடுத்து, உள்நோக்குடன், சேமித்து வைத்திருந்தது. மேலும், இக் குண்டுகளின் சேமிப்பு தளமானது, எந்த ஒரு அதிரடி தாக்குதலுக்கும் உட்படலாம் என பொதுவில் எதிர்ப்பார்க்கப்பட்டே இருந்தது. ஆனால், 500அடி ஆழ, பாதுகாப்பு அரண்கள் போக, இன்னமும், இக்குண்டுகள், கச்சிதமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஏவுகணை எதிர்ப்பு ஏற்பாடுகள் இச்சேமிப்பு கிடங்குகளைச் சுற்றி பலமாக அமைதல் வேண்டும். என்ற அடிப்படையிலேயே மேற்கு செயற்பட ஆரம்பித்திருந்தது.

இக்காரணத்தினாலேயே உலகின் முதல் தர ஏவுகணை எதிர்ப்பமைப்பு என கூறப்படும் அமெரிக்க எதிர்ப்பு ஏவுகணையான பெட்ரியேட் ஏவுகணைகளும் இச் சேமிப்புத் தளங்களுக்கு போய் சேர்ந்திருந்தன. ஆனால், ரஷ்ய தாக்குதலில் முதலில் பலியானது இவ் பெட்ரியாட் ஏவுகணைகளே. தொடர்ந்து, ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து வானுயர்ந்து கிளம்பிய பிளம்புகளை அணைக்க உக்ரைன் தனது ஆளற்ற ரோபோக்களை உபயோகப்படுத்தியதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன. அதாவது ஆளற்ற ரொபோக்கள், பாவிக்கப்பட்டுள்ளமை கதிர் வீச்சு பயங்களின் காரணமாக எழுந்த ஒன்றாகவே இருக்கும் என்பது இன்று நிபுணர்களின் கருத்தாகின்றது.

III

தாக்குதலை அடுத்து செலன்ஸ்கி, தாம் பேச்சு வார்த்தைகளுக்கு பின் தங்கப் போவதில்லை, என்று ஓர் அதிரடியையும், உக்ரேனிய போரை தொடர்ந்து நடாத்த வெள்ளை மாளிகையில் போதிய பணமில்லை என்று மற்றுமொறு அதிரடியை வெள்ளை மாளிகையும் பரப்பின. ஆனால் இந்த சர்க்கஸ் விநோத வேடிக்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ரஷ்யா இருந்ததாக தெரிய வில்லை. ஏனெனில் வேடிக்கைகளின் காலம் (ஏமாற்றுகளின் காலம்) என்றோ முடிந்து விட்டது என்பதில் உலக வல்லுனர்கள் உறுதியாக இருப்பதாக தெரிய வருகின்றது. இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் யுரேனிய குண்டுகள் தொடர்பில் புட்டின் முதல் முறையாக அறிவித்த போது, ரஷ்யா தகுந்த பதிலடிகளை தயார் செய்து கொள்ளும் என்பதை தெளிவாக அறியத்தந்திருந்தார். ஆனால் அவரது இக் கூற்று முக்கியப்பட்டதை விட, அவர் இக் கூற்றை ஆற்றிய சந்தர்ப்பமே போதிய முக்கியத்துவப்படுத்தப்பட்டுப் போனது ஏனெனில் இக் கூற்றை புட்டின் ஆற்றியது சீன ஜனாதிபதியின் முன்னிலையிலேயே என்பது குறிக்கத்தக்கது.

யுத்தத்தில் சின்னாப்பின்னப்பட்டுப் போன உக்ரைனை மீள கட்டியெழுப்புவது என்றால் (தற்போதய நிலைமையில்) அதற்கான செலவு ஒரு 350 கோடி டாலரை தாண்டலாம் என உலக வங்கி அண்மையில் கூறியிருந்தது. இதற்கான பணத்தொகையை மேற்கு தற்போது இருக்கும் நிலையில் திரட்டக்கூடியதாக இருக்குமா என்பது விடைத்தெரிந்த வினாவாகின்றது. அதாவது 31.4 டிரில்லியன் டாலர்களை கடனாக கொண்டுள்ள ஒரு அமெரிக்கா ஜுன் ஒன்று, முதல் தனது கடன் எல்லையை உயர்த்தாவிடில், தனது கடன் பொறுப்புளைக் கையேந்த முடியாது. இதனை, கைவிரித்து, உலகுக்கு அறிவிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கும் அது தள்ளப்பட்டு விடும். இது போலவே, அமெரிக்காவுக்கு கைக் கொடுக்கும், இங்கிலாந்தும் ஐரோப்பிய நாடுகளும் தத்தமது தலைவிதியைப் பார்த்து திகைத்து போய் நிற்கும் இன்றைய நிலையில், உக்ரைனின் மீள் கட்டுமானத்திற்கான இந்தளவிலான பணத் தொகையை, செலுத்துதல் முடியாத காரியமாகவே இருக்கும்.

மறு புறத்தில், ஐரோப்பிய நாடுகளுடன் கோடிக்கணக்கான டாலர்களை உள்ளடக்கும் தனது வர்த்தகத்தை, சீனா ஸ்தாபித்து, முன்னெடுக்க முனையும் எனில், உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பண்டங்களை ஏற்றிச்செல்லும் தனது ரயில் பாதைகளுக்காக இந்நிலப்பரப்பு திறந்து விடப்பட வேண்டிய தேவையை, தன் முன்நிபந்தனையாக கொள்கின்றது. இனி, இப்படியான சீன வர்த்தக முயற்சி முளையிளையே கிள்ளி எறியப்பட வேண்டுமெனில் தொடர்ச்சியாக உக்ரைனை, தனது செல்வாக்கு மையத்தினுள் வைத்திருக்க வேண்டும், என்பதும் போர் தொடரப்பட வேண்டும் என்பதும் இதற்கு தான் தரும் ஆயுத உதவிகள் இரட்டிப்பாகுதல் வேண்டும் என்பதும் நிபந்தனையாகின்றது.

அதாவது, சீன செல்வாக்கு வலயத்தை நோக்கி உக்ரைன் பயணப்படுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் உக்ரைனுக்கு யுரேனிய குண்டுகள், பெற்றியேட் ஏவுகணைகள், F-16 விமானங்கள் போன்றவை கொடுப்பட்டே ஆக வேண்டும். அதாவது ஒரு புறம் ரஷ்யாவுக்கும், உக்ரைனின் கிழக்கு நிலப்பரப்பான DONBAS நிலப்பரப்புக்கும் பெரிய நட்டங்களை ஏற்படுத்துவது (கதிர் வீச்சு உட்பட) என்பதற்கூடு தனது முதலாவது மாங்காயை அடித்து வீழ்த்துவது. அடுத்ததாய், சீன வர்த்தக முனைப்புகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கூடு, தன் இரண்டாம் மாங்காயையும் கைப்பற்றிக் கொள்வது.

மூன்றாவதாய், தனது 31 கோடி ட்ரில்லியன் டாலர் கடன் எல்லையைக் கூட்ட, காங்கிரஸில், இரு கட்சிகளுக்குமிடையிலான ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொள்ளுதல். அதாவது கடன் எல்லையைக் கூட்டி தான் பெற வேண்டிய கடன்களை பெற்று தன்னை பதவியில் இருத்திய ஆயுத வியாபாரிகளின் காலடியில் பெற்ற-பெறவிருக்கும் டாலர்களை கொட்டுதல். இவை அனைத்தும், சாத்தியப்படக் கூடியது ஓர் உக்ரேனிய-ரஷ்ய போரின் நீடிப்பிலேயே -பின் புலத்திலேயே- என்ற புரிதல் அடிப்படையாகின்றது. இப்பின்னணியிலேயே, இம் மூன்று காரணிகளும் இணைந்து இச்சூழ்நிலையிலேயே, பக்மூத் கோட்டையும் தனது சரிவை இன்று கண்டுள்ளது.

எதிர்தாக்குதல் (COUNTER–ATTACK) குறித்து உக்ரைன் பெருமளவில் அறிவித்துக்கொண்டிருந்த பொழுதே, பக்;மூத்தின் வீழ்ச்சி, மேற்படி ஆயுத சேமிப்பு தளங்களிலான தாக்குதலை அடுத்து இடம் பெற்றுள்ளது. அதாவது மே 20 அளவில், அதாவது ஐந்தே ஐந்து தினங்களில் பக்மூத் நகரின், வீழ்ச்சியும் இடம்பெற்றது. பக்மூத் என்ற நகரை, ரஷ்யா ஒரு பொறியாக பாவித்தது என்ற வாதமும், மறுபுறத்தில், பக்மூத் நகரின் “ஓர் அரண்” (FORTRESS)எம் இதயம் என்ற வாதமும் உக்ரேனிய போராளிகளால் முன்னெடுக்கப்பட்டது. அதாவது இராணுவ சாணக்கியங்கள் பக்மூத்திலிருந்து துருப்புகளை வாபஸ் பெற்று பின்வாங்கும் கோரிக்கைகளை கோரி நின்றாலும் உக்ரேனிய தேசிய அரசியலால் போதையுற்று விவேகமற்று நின்றிருந்த உக்ரேனிய இராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதிப்பட கூறி விட்டது.

இதே வேளை, மே 10 அளவில் உக்ரேனிய அதிஉயர் இராணுவ ஜெனரல் (VALERII ZALUZHNYI) பக்மூத்தின் முன் அரண்களுக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்த போது ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமுற்றார் என்ற செய்தியும் வந்து சேர்ந்துள்ளது .(ANDRY RUDENKO). (இல்லை–“கெர்சனில்”தான் தாக்குதலுக்குள்ளானார் என்ற பிந்திய கதையும் உண்டு). எனினும், ஜெனரல் (VALERII ZALUZHNY) மே 8-10 தினங்களில் பக்மூத்தின் கட்டளை அலுவலகங்கள் ஒன்றிற்கு (COMMAND POST) விஜயம் செய்ததாகவும் இவ் அலுவலகமானது ரஷ்ய இராணுவத்தால் குறிவைத்து தகர்க்கப்பட்டது என்பது இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகின்றது. அதாவது மேற்படி நிலைமை, சம்பந்தப்பட்ட, கட்டளை அலுவலகத்தை ரஷ்யா தொடர்ச்சியாக கண்கானித்து வந்திருக்க வேண்டும் என்பதை தெளிவுற காட்டி நிற்கின்றது. அதாவது ரஷ்யாவால் “பொறி” என கணிக்கப்பட்ட பத்மூத்தாயிருக்கலாம் அல்லது அக்கட்டளை அலுவலகமாயிருக்கலாம் - இவற்றின் மீதான தாக்குதல் வெளிப்படுத்துவது யாதெனில், இப்போரானது, தந்திரங்களை மிகுதியாக, உள்ளடக்கி – கட்டவிழ்க்கப்படுவதாய் உள்ளது என்பதில் ஐயுறவு இல்லை.

உக்ரைனின் இராணுவ ஜெனரல் மீதான இத்தாக்குதல் நடந்து பத்தே பத்து தினங்களில் பக்மூத் நகர் வீழ்ச்சி அடைந்து விட்டது-முற்றாக கைவசம் வந்து விட்டதாய் ரஷ்யாவும், இல்லை பக்மூத் நகரானது இப்போதும் எமது இதயத்தில் உள்ளது என செலன்ஸ்கியும் அடுத்தடுத்து அறிவிக்க வேண்டிய கட்டாயங்களில் இருந்தனர். ஆனால், பக்மூத்தின் வீழ்ச்சியை அடுத்து லென்ஸ்கி  ARAB LEAGUE மாநாட்டிற்கும் (சவூதி அரேபியாவில்) பின் G7 மாநாட்டிற்கும் (ஜப்பானில்) அழைக்கப்பட்டு, சில வாக்குறுதிகளை அவருக்கு, ஜப்பானிய மாநாட்டில் வழங்கப்பட்ட போது, பக்மூத் தொடர்பில் மீண்டும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் பிறந்தது.

முதலாவது மாநாட்டில் பெரும்பாலும் தோல்வியை முகம் கொடுக்க நேரிட்ட செலன்ஸ்கி (சவூதி அரேபியாவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் உக்ரைன் சார்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்ததால்) இரண்டாம் மாநாட்டில் ஒரு வித்தியாசமான சூழலைக் காணநேர்ந்தது. செலன்ஸ்கி ஆரம்பத்தில் பக்மூத்தின் வீழ்ச்சியை ஏற்றுக் கொண்டது போல் பேட்டியளித்திருந்தாலும், பைடனின் 375 மில்லியன் டாலர் யுத்த உதவியையும், F-16 விமானங்களின் கையளிப்பு தொடர்பிலான வாக்குறுதிகளையும் அடுத்து, பக்மூத் நகரானது இன்னமும் ரஷ்யாவால் முற்றாக வீழ்த்தப்படவில்லை நாங்கள் ஓர் சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளோம் என வழமைப் போல் பிரண்டு பேச வைத்தது. ஆனால் பைடனின் இந்த உதவி அறிவிப்பானது அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற்ற கடன் எல்லை தீர்மானங்களை ஒட்டியும் சீன வர்த்தக முன்னெடுப்புகளை முளையிலையே கிள்ளி எறியும்; அவாவின் பின்னனியிலும் நோக்கத்தக்கது என உலக வல்லுனர்கள் அபிப்பிராயப்படுவர். இதனுடன் கூடவே நாம் மூன்றாவது மாங்காயையும் நினைவுப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது. (31 ட்ரில்லியனை தாண்டும் கடன்பளு).

சுருக்கமாகக் கூறினால், STROM SHADOW (1000KM) ஏவுகணைகளையும், யுரேனிய குண்டுகளையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களை உதாசீனப்படுத்தி, அக்குண்டுகளை வழங்க முன்வரும், ஓர் (இந்திய வம்சாவளி)  ரிஷி சுனக் RISHI SUNAK எப்படி தேவைப்படுகின்றாரோ, அது போலவே, PATRIOT ஏவுகணைகளையும், F-16 ஏவுகணைகளையும் (ஓர் 3ம் உலக போர் அபாயங்களை புறந்தள்ளி) போர் வெறிக்கான ஏற்பாடுகளை சந்தோஷமாய் முன்னெடுப்தென்றால், ஓர் அரசியல் எதிர்காலமே அற்ற, தாங்கள் சொல்லும் படி ஆடக் கூடிய, ஓர் தொண்டு கிழம் தான் தேவைப்படுகிறது என்றாகின்றது –நாளை என்பதனையே முற்றாய் மறந்து.

அதாவது, ஆயுத வியாயபாரிகளின் நலன் அல்லது அதில் இருந்து எழும் கோரிக்கை, நாளைய நலனை, உலக நலனை, அல்லது மக்கள் நலனை உதாசீனப்படுத்த கோருகின்றது. இப்புள்ளியிலேயே, ஆயுத வியாபாரிகளின் லாபம் தேடும், கோடிகளின் வேட்கைக்கும், மக்களின் நலனுக்குமான முரண் உருவெடுக்கின்றது. இந்த பின்னனியிலேயே மூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டத்தில் அரசியல் வடிவமைக்கப்படுகிறது. உலகின் தலை விதியும் நிர்ணயமாகின்றது. இந்த நெருக்கடிகளின் எதிர் விளைவுகள் அல்லது மிச்ச சொச்சங்கள் இந்துமா சமுத்திரத்தையும் தமிழ் அரசியலையும் தீண்டக் கூடியன என்பதும் ஆழ்ந்து, பார்க்கத்தக்கதே.

தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.