6

அத்தியாயம் ஒன்பதில் பின்வரும் பகுதி காணப்படுகின்றது:

“அவர்களில் இரண்டு பேர் இலங்கையில் இருந்து வந்தவர்கள். ஒரு வயதான சீமாட்டி. அவள் பெயர் திருமதி கெல்வின். அவளுடைய மருமகன் திருவாளர் கெல்வின். நுவரெலியாவில் தோட்டங்களை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றார்” (பக்கம்-268)

சம்பாசனை நடக்கும் காலப்பகுதி நாவலின் பிரகாரம் 1878.

ஆனால் இலங்கையின் நுவரெலிய வரலாற்றை எடுத்து நோக்கினால் நுவரெலிய பிரதேசத்தில் முதல் தோட்டமான யெதர்செட் (Hethersett), 150 ஏக்கரில் சிங்கோனாவால் பயிரிடப்பட்டு,  W.Floverdew என்பவரால் ‘1881’ லேயே நிர்மானத்துக்குள்ளாகின்றது. மேற்படி முரணை பிரதானமாக கொள்ளாவிட்டாலும், மேற்படி இலங்கை தோட்டங்கள் தொடர்பிலான குறிப்பு, தவிர்கமுடியாதபடி, நாவலின் தலையாய கதாப்பாத்திரமான ஏய்டன் எனும் மனிதனையும் இதே ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கை தோட்டங்களுக்கு வந்து சேர்ந்த இன்னுமொரு இளைஞனான பிரிஸ்கேட்டிலையும், இருவேறு வரலாற்றுப் பாத்திரங்களாக, எம்மை ஒரு கணம், ஒப்பு நோக்க செய்து விடுகின்றது.

ஷெல்லியை படித்ததின் தாக்கத்தினாலோ என்னவோ நீதியுணர்ச்சி உச்சத்துக்கு கிளம்பியதனாலோ என்னவோ மூக்குமுட்ட குடித்தும், ஷெல்லியைக் கனவுஜீவி எனத் தூக்கியெறிந்தும், ஆங்கிலோ இந்திய விலைமாதரிடை புகழ் பெற்றும் நகரும் வெள்ளையானையின் ஏய்டனுக்கு ஓர் பிறப்புப் பின்னணி உண்டு என்பது போல இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு அன்று வந்து சேர்ந்த பிரிஸ்கெட்டிலுக்கும் ஒரு பிறப்புப் பின்னணி உண்டு எனலாம்.

அயர்லாந்தில், நூறு மாடுகளுக்குச் சொந்தகாரரான, பிரபுத்துவ-மன்னர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு தனிமை நாடி வேட்டைக்காரனுக்குப் பிறந்த ஏய்டன் ராணுவப் பள்ளியில் கல்வியும் கற்று ஷெல்லியையும் வாசித்தறிந்து ஓர் அதிகாரியாக வந்து சேருகிறான் இந்தியாவிற்கு.
பிரிஸ்கேட்டில் கதையோ சற்று வித்தியாசமானது. அவனது தாய்-மஜோரிலிஸ்டர் ((Marjori Lister) 1885 இல் லேபர் பார்ட்டியின் வேட்பாளர்களில் ஒருவர்.

மாஜோரிலிஸ்டர், பெண்களுக்கான வாக்குரிமைக்காக முன்நின்று போராட்டம் நடத்திய பெண்மனிக்குள் முதன்மையானவள். பிரிஸ்கேட்டில் தனது தாயாருடன் ஆஸ்திரேலியாவுக்கு அகன்று, ஒரு வருடத்துக்குள்ளாக, ஆஸ்திரேலியாவின் இளைஞர்களுக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் (Young Communist League) அங்கத்தினர் ஆகின்றான். அதன் பின்னர் இலங்கை வந்து சேரும் அவ் இளைஞன் ஆங்கிலேயரின் தோட்டமொன்றில் மேலதிகாரிக்கான பயிலுனராக பதவியேற்கின்றான். ஆனால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையிலான இழுபறிகளிலும் முரண்பாடுகளிலும் இவன் தொழிலாளர் சார்பாக செயல்படுவதை அவதானித்த தோட்ட நிர்வாகமானது அவனை உடனடியாகவே பதவி நீக்கம் செய்கின்றது. அதன் பிறகு பிரிஸ்கேட்டில் அந்நாட்களில் செயலூக்கம் பெற்றிருந்த இடதுசாரி கட்சியான சமசமாஜ கட்சியில் இணைந்து காலி முகத்திடலில் ஒரு மாபெரும் கூட்டத்தினை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காளனாகின்றான். கூட்டத்தின் முக்கியத்துவம், முஸ்லிம்-சிங்கள இனக்கலவரத்தின் போது, பக்கசார்பாய், அட்டூழியம் புரிந்த Herbert Dowbiggins என்னும் ஆங்கிலேய பொலிஸ் அதிகாரி காலனித்துவ இலங்கையை விட்டகலும் நிகழ்வை வரவேற்று கொண்டாட ஒழுங்கு செய்தலே ஆகும்.

அடுத்ததாய், இவ் வெள்ளைக்கார இளைஞன், இலங்கை தோட்டங்களில் முக்கியமான அரசியல்வாதியாக திகழ்ந்த நடேச ஐயருடன் இணைந்து இலங்கையின் தோட்ட தொழிலாளருக்கான போராட்டத்தை முன்னெடுக்க செய்கின்றான்.

நாவலபிட்டியில் இடம்பெற்ற தொழிலாளர் கூட்டத்தில் பிரிஸ்கேட்டில், இந்தியாவில் இருந்து வருகை தந்த கமலாதேவி சட்டோபாத்தியாவால் தொழிலாளருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட போது தொழிலாளரின் ஆவேசம் மிக்க கோசம் வானை பிளக்கின்றது. பிரிஸ்கேட்டிலின் திக்கி திக்கி ஆற்றப்பட்ட உரையில், வார்த்தை இடைவெளிகளின் போது குழுமியிருந்த தொழிலாளர்களின் வெற்றி கோசம் நாவலபிட்டிய நகரை அதிர செய்ததாய் பதிவுகள் கூறுகின்றன. பிரஸ்கேட்டில் இலங்கையின் மலை தோட்டங்களில் நடக்கும் கொடுமைகளையும் அநீதிகளையும் அம்பலப்படுத்திய போது இதனைப் பொறுக்காத ஆங்கிலேய அரசு அவனை 48 மணி நேரத்துக்குள் நாடுகடத்த உத்தரவிடுகின்து. உத்தரவை அடுத்து தலைமறைவாகும் பிரிஸ்கேட்டிலின் சார்பாய் இலங்கையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. இலங்கையின் அதி புகழ்பூத்த சட்டத்தரணிகளில் ஒருவரான H.V Perera KC வழக்கில் ஆஜராக முன்வந்து, இலவசமாக வாதாடி, மேற்படி உத்தரவை வலுவற்றதாக்குகின்றார்.

பிரிஸ்கேட்டில், ஏய்டனை போன்று n~ல்லியைப் படித்தாரோ அறியோம். ஆனால், அவரது செயற்பாடுகளை ஊன்றி கவனிக்குமிடத்து, அவன் ஓர் கனவு ஜிவியாக இல்லாமல் மக்களுடன் அவர்களின் வேதனைகளுடன் தன்னைப் பிணிப்பதில் ஈடுபடுத்தி கொள்கின்றான். காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அவனது எதிர்ப்பும் போராட்டமும் பிறிதொரு தளத்தில் நகர்வதாய் உள்ளது.

வரலாறு உற்பத்தி செய்து உலாவவிடும் இத்தகைய மனிதர்களில் இருந்தே நாவலாசிரியர்கள் உரிய பிரஞ்ஞையுடன் தத்தமது பார்வையில் தமது பாத்திரங்களைத் தேர்வு செய்கின்றனர். கூடவே தமது பாத்திரத்திற்கான தத்துவங்களையும் அவர்கள் தெரிவு செய்து கொள்கின்றனர். ஜெயமோகனின் கருத்து நிலைகளுக்கு, ஒரு பிரிஸ்கேட்டில், அவன், உண்மையான ஒரு வரலாற்று பாத்திரமாக இருந்தாலும் கூட, இறுதிவரை ஒத்துவரமாட்டான்.

எனவேத்தான் ஏய்டன் போன்ற ஒருவனை ஜெயமோகன் கட்டியெழுப்பி முன்னகர்த்த நிர்பந்திக்க படுகின்றார். குறித்த எழுத்தாளனின் இந்தத் தேவை, குறித்த எழுத்தாளனின் அரசியலைப் பிரதிபலிப்பதாகும். வேறு வார்த்தையில் கூறினால், ‘தேர்வின் அரசியல்’ என்பது இப்படியாகத்தான் விரிகின்றது எனலாம்.

வெள்ளையானை இத்தகைய அரசியல் தேர்வுக்கூடாகவே சமுதாயத்திடை அசைந்து செல்கின்றது, ஏய்டன் எனும் தனது தலையாய பாத்திரத்தைத் தன் தலைமீது சுமந்து, தனக்கே உரிய அரசியலைக் காப்பாற்றும் பொருட்டு. இதனை வேறுபிரித்து அறிந்து கொள்வது, மானுடம் கூறும் கலைஞர்களின் கடமையும் என்றாகிறது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.