விடுதலைப்புலிகளின் மாவீரருக்கான  அகவணக்க நிகழ்ச்சி கனடாவில் பல இடங்களிலும் சென்ற வாரம் இடம் பெற்றது. குறிப்பாக ‘மார்க்கம் பெயகிறவுண்ட்ஸ்’ திடலில் திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலைவரை ‘தமிழர் நினைவெவெழுச்சி நாள்’ . தமிழர்கள் பலர்  இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினர் பலர் மிக ஆர்வத்தோடு இந்த நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொண்டது, எமது வரலாற்றை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து இளந்தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களுக்கு நடனமாடியதையும், அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடிச் சபையோரைக் கண்கலங்க வைத்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் சுயநலம் கருதாத இந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும், நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற மாவீரருக்கான அகவணக்க நிகழ்வு ஒன்றிக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். மாவீரருக்கான ஒரு பாடல் வெளியிடுவதாகவும், அந்தப்பாடலைக் கேட்டு அதைப் பற்றியும் எனது மதிப்புரையை வழங்கும்படியும் கேட்டிருந்தனர். எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன்.

முதலில் மங்கள விளக்கேற்றி, கனடா தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கத்துடன் அந்த நிகழ்வு ஆரம்பமானது. வருகை தந்திருந்த சில பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இளம் தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடியிருந்தனர். புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் கடந்த 30 வருடங்களாக ஒரு ஆசிரியர் என்ற வகையில் எந்த மொழியைப், பண்பாட்டைக், கலாச்சாரத்தைக் காப்பாற்ற முன்னின்று பாடுபட்டோமோ, அதன் பிரதிபலனை இந்த இளம் தலைமுறையினரிடம் இருந்து அந்த நிகழ்வில் கணமுடிந்ததில் பெருமகிழ்ச்சியாக இருந்தது.

‘தமிழீழ உயிர் எழுத்து’ என்ற தலைப்பு வெளியிடப்பட்ட இந்தப் பாடலுக்கு இடப்பட்டிருந்தது. திரு. சிவமோகன் அவர்கள் இந்தப் பாடல் வரிகளை எழுதியிருந்தார். தமிழகப் பாடகர் வி. எம். மகாலிங்கம் இந்தப் பாடலைப்பாடியிருந்தார். எமது பாரம்பரிய நாதஸ்வர இசையும் கலந்ததாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. பின்னணியிசை கொடுத்தவர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். கனடாவில் புகழ்பெற்ற நடன ஆசிரியை கௌரிபாபு அவர்களின் மாணவிகள் இந்தப் பாடலுக்கு மிகவும் சிறப்பாக நடனமாடியிருந்தனர்.

இந்தப் பாடலில் ஓரிடத்தில் முப்படைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்த தொன்று. அரசர்கள் காலத்தில் முப்படைகள் என்றால் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை என்ற மூன்றையும் குறிக்கும். எல்லாள மன்னன், பண்டாரவன்னியன், சங்கிலிய மன்னன் போன்றவர்களின் ஆட்சிக்காலம் அப்போது நினைவுக்கு வந்தது. அதன்பின் சோழப் பேரரசு காலத்தில் தமிழர்களின் கப்பற்படை இந்துசமுத்திரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழரின் ஆளுமையை உலகறியச் செய்ததில் மிகப்பிரபலமாக இருந்தது. ஆனால் நவீன உலகில் முப்படை என்றால் காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் குறிக்கக்கூடியன. விமானப்படையே இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் போது, அந்த மூன்று நவீன படைகளையும் வைத்திருந்த சிறப்பு எமது காலத்து ஈழத் தமிழரிடம் இருந்தது.  நினைக்கப் பெருமையாக இருந்தது.

 இதுபோன்ற ஆவணங்கள்  நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதைக் காலாகலமாய்  உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்று சொன்னாலும் அது மிகையாகாது. இது போன்ற சிறந்த பல வரிகள் இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன. நேரம் இருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள். கத்தியைத் தீட்டாமல், புத்தியைத் தீட்டினால் நிறைய விடயங்களை எங்களால் சாதிக்க முடியும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.