தமிழர்களின் திருநாட்களில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமும் முக்கியமானதாகும். தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் முதலாம் திகதியை (இந்த வருடம் 17-7-2022) ஆடிப்பிறப்பு என்று சொல்வார்கள். தமிழ் நாட்டில் இதை ஆடிப்பெருக்கு என்று அழைப்பார்கள். ஆடிப்பிறப்பன்று சிறுவர், சிறுமிகளுக்குப் பிடித்தமான கொழுக்கட்டையும், இனிப்பான ஆடிக்கூழும் விசேடமான உணவான இருக்கும். ஒரு காலத்தில் அதாவது 1950 களில் யாழ்பாண பாடசாலைகளில் ஆடிப்பிறப்பன்று விடுமுறை விட்டார்களாம். சில தனிப்பட்ட காரணங்களால், குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடிய இத்திருநாளைக் கொண்டாடுவதை இந்தத் தலைமுறையினர் பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரியில் பாலர் வகுப்பில் குணலட்சுமி ரீச்சர் இந்தப் பாடலை அபிநயத்துடன், கைதட்டித் தட்டி, வட்டமாகச் சுற்றி வந்து எங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததால் முதல் நாலுவரிகளையும் அப்பொழுதே பாடமாக்கி வைத்திருந்தேன். யாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடிய இந்தப் பாடலை உங்கள் வீட்டில் உள்ள பாலர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். சென்ற தலைமுறையினர் இதை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை இந்த அருமையான பாடல் எடுத்துச் சொல்கின்றது. அவர்கள் நான்கு வரிகளைப் பாடமாக்கிப் பாடினாலும், சென்ற இடமெல்லாம் எங்கள் இனிய தமிழ் ஒலிக்குமல்லவா!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே...!

ஆடி மாதத்தில் ஆடி அமாவாசையும் வரும். இது எம்மைவிட்டுப் பிரிந்த குடும்ப உறவினர்களின் நினைவாக, அதாவது தகப்பனாரின் ஆத்மா சாந்தியடையப் பிள்ளைகளால் இந்து முறைப்படி திதி கொடுக்கும் தினமுமாகும். கீரிமலை என்றதும் உங்களுக்குப் பஞ்சஈசுவரங்களில் ஒன்றான நகுலேசுவரம் நினைவில் வரும். எமது பகுதியில் வாழ்ந்தவர்கள் பொதுவாகக் கீரிமலையில் அல்லது அருகே உள்ள சடையம்மா மடத்தில் திதி கொடுப்பது வழக்கம்.

இலங்கை, தென்னிந்திய உழவர்களுக்கு ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஆடி மாதத்தில் நெல் விதைத்தால் சிறந்த பலனைத் தரும் என்று சொல்வார்கள். காரணம் ஆற்றையும், மழையையும் நம்பி அதிக இடங்களில் விவசாயம் நடைபெற்றதால், ஆறுகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிறைந்திருக்கும். எனவே ஆடிமாதம், சமய ரீதியாக மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் இதுபோன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் ஆடிப்பிறப்பைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.